திருத்திக் கொள்ள தனுபாய் கோவில்கருக்கு வாய்ப்பில்லை. கையால் மிகவும் சிரமப்பட்டு அவர் செய்யும் நேர்த்தியான தையல்களில் ஒரு பிழை நேர்ந்தாலும் அதைச்  சரிசெய்ய ஒரே ஒரு வழிதான் உள்ளது - முழு செயல்முறையையும் மீண்டும் செய்ய வேண்டும். அதாவது, சுமார் 97,800 தையல்களை பிரித்து விட்டு மீண்டும் தொடங்க வேண்டும்.

"நீங்கள் ஒரு தவறு செய்தால், உங்களால் சேலைப் படுக்கையைச் சரிசெய்ய முடியாது," என்று 74 வயதான அவர் தனது கைவினைக் கோரும் துல்லியத்தைப் பற்றி கூறுகிறார். ஆனாலும், சேலைப் படுக்கையின் தையல்களை மீண்டும் செய்ய வேண்டிய ஒரு பெண்ணை அவரது நினைவில் இல்லை. “இந்தத் திறமையை நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள்,” என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

இந்த நுணுக்கமானக் கலையை அவர் ஒருபோதும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. வாழ்க்கை - மற்றும் உயிர்வாழும் கேள்விகள் - அவரை ஊசி எடுக்க வைத்தது. "வறுமை எனக்கு இந்தக் கலையை கற்றுக் கொடுத்தது," என்று அவர் கூறுகிறார், 1960 களின் முற்பகுதியில், 15 வயது மணமகளாக இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து.

“பள்ளிப் படிக்கும் வயதில் பேனா, பென்சிலுக்குப் பதிலாக அரிவாள், ஊசிதான் கையில் இருந்தது. நான் பள்ளிக்குச் சென்றிருந்தால், இந்தத் திறமையை நான் கற்றுக்கொண்டிருப்பேன் என்று நினைக்கிறீர்களா? என்று தனுபாய் அல்லது அன்பாக பாட்டி என அழைக்கப்படுபவர் கேட்கிறார்.

PHOTO • Sanket Jain

பாட்டி என்று அன்புடன் அழைக்கப்படும் தனுபாய் கோவில்கர், சேலைப் படுக்கை தைக்கும் வேலை செய்கிறார். சேலைப் படுக்கை மீதான ஒவ்வொரு தையலுக்கும் கைகளின் சுறுசுறுப்பான இயக்கம் தேவைப்படுகிறது

PHOTO • Sanket Jain

ஒரு சிறிய துண்டு சேலையைத் தைக்க, துல்லியம் தேவை. தனுபாய் மேல் அடுக்கை ஒவ்வொன்றாக தைத்து, இறுதியில் வண்ணமயமான, சமச்சீர் வடிவத்தை உருவாக்குகிறார். 'ஒரு நிமிடப் பிழையானது சேலைப் படுக்கையின் ஆயுட்காலம் மற்றும் தரத்தை பாதிக்கும்'

விவசாயக் கூலிகளாக, மராத்தா சமூகத்தைச் சேர்ந்த அவரும் அவரது (மறைந்த) கணவர் தானாஜியும் மிகவும் சிரமப்பட்டனர். குளிர்காலத்தில் தங்களை சூடாக வைத்துக் கொள்ள சேலைப் படுக்கைகள் வாங்குவது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு ஆடம்பரமாக இருந்தது. "அப்போது சேலைப் படுக்கைகள் கட்டுப்படியாகாதவை. எனவே பெண்கள் தங்கள் சொந்த சேலைப் படுக்கைகளை உருவாக்க பழைய புடவைகளை தைப்பார்கள்" என்று அவர் நினைவு கூர்ந்தார். நாள் முழுவதும் வயல்களில் மந்தமாக இருந்த தனுபாய், தனது மாலைப் பொழுதை ஒரு சேலைப் படுக்கையின் மீது வளைத்து - வேலை செய்து கொண்டிருப்பார்.

"இந்த வேலையை விட அரிவாளால் பண்ணையில் களையெடுப்பது சிறந்தது," என்று அவர் கூறுகிறார். காரணம்: ஒரு சேலைப் படுக்கை120 நாட்கள் மற்றும் தோராயமாக 600 மணிநேரம் வரையிலான சிக்கலான ஊசி வேலைகளை உள்ளடக்கியது. அடிக்கடி முதுகுவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்படும். ஊசியால் உழைப்பதை விட அரிவாளால் வேலை செய்வது எளிது என்று இதனால்தான் தனுபாய் நம்புகிறார்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜம்பாலி கிராமத்தில் வசிக்கும் 4,963 குடியிருப்பாளர்களில் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011) சேலைப் படுக்கை கைவினைத் தொழிலின் ஒரே பயிற்சியாளராக அவர் மட்டும் ஏன் இருக்கிறார் என்பதையும் இது விளக்குகிறது.

*****

சேலைப் படுக்கை தயாரிப்பதற்கான முதல் படி, புடவைகளை கவனமாக ஒன்று சேர்ப்பதாகும். இது உள்ளூர் மராத்தியில் லெவா என்று அழைக்கப்படுகிறது. ஒரு சேலைப் படுக்கையில் உள்ள புடவைகளின் எண்ணிக்கை கைவினைஞரைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக பெண்கள் கையில் கிடைக்கும் நேரத்தை பொறுத்து எண்ணிக்கையை முடிவு செய்வார்கள். தனுபாய் தனது சமீபத்திய சேலைப் படுக்கைக்கு ஒன்பது சுடி (பருத்தி) அல்லது நவ்வரி (ஒன்பது கெஜ நீளம்) புடவைகளைப் பயன்படுத்துகிறார்.

முதலில் ஒரு சேலையை இரண்டாக வெட்டி தரையில் விரித்தார். அதன் மீது, இரண்டு புடவைகளின் மற்றொரு அடுக்கை இரண்டாக மடித்தார். மொத்தத்தில், எட்டுப் புடவைகள் கொண்ட நான்கு அடுக்குகளை அடுக்கி வைக்கிறார். பின்னர், தளர்வான மற்றும் தற்காலிகமான ஒட்டுத் தையல்களின் உதவியுடன், அவர் ஒன்பது புடவைகளையும் இணைத்து, அடித்தளம் உறுதியாக இருப்பதை உறுதிசெய்கிறார். "நீங்கள் சேலைப் படுக்கையைத் தைக்கும்போது, ​​இந்த [தற்காலிக] தையல்கள் அகற்றப்படும்," என்று அவர் விளக்குகிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: பாட்டி பழைய புடவைகளை வெட்டும்போது அளக்கும் நாடாவைப் பயன்படுத்தியதில்லை; அவர் தன் கைகளால் துணியின் நீளத்தை தோராயமாக அளந்தார். வலது: ஒரு சேலை கத்தரிக்கோலால் பாதியாக வெட்டப்பட்டது, பின்னர் தனுபாய் ஒன்பது அடுக்கு வெட்டப்பட்ட துணியுடன் லெவா எனப்படும் ஒருங்கிணைப்பை தயார் செய்கிறார்

PHOTO • Sanket Jain

பாட்டியின்பேத்தி அஷ்வினி பிரஞ்ஜே (இடதுபுறம்) சேலைப் படுக்கைகளை தயாரிப்பதில் அவருக்கு உதவுகிறார்

பாட்டி பின்னர் சிறிய துண்டுகளாக அதிக புடவைகளை வெட்டுகிறார். அதை அவர் மேற்புற புடவையில் ஒவ்வொன்றாக தைத்து, இறுதியில் வண்ணமயமான, சமச்சீர் வடிவத்தை உருவாக்குகிறார். "இதற்கு திட்டமிடல் அல்லது வரைதல் தேவையில்லை," என்று அவர் கூறுகிறார். "நீங்கள் துண்டுச் சேலையை எடுத்து தைத்துக்கொண்டே இருங்கள்."

அவரது நேர்த்தியான தையல்கள் ஒவ்வொன்றும் 5 மிமீ அளவைக் கொண்டுள்ளன மற்றும் அவை வெளிப்புற எல்லையிலிருந்து தொடங்குகின்றன; ஒவ்வொரு தையலிலும், சேலைப் படுக்கை கனமாகிறது, அதற்கு வடிவம் கொடுக்கும் கைகளை கஷ்டப்படுத்துகிறது. அவர் 30 நூற்கண்டுகள் அல்லது 150 மீட்டர் (சுமார் 492 அடி) வெள்ளை பருத்தி நூல் மற்றும் பல ஊசிகளை சேலைப் படுக்கை தைக்க பயன்படுத்துகிறாள். அவர் நூலை, ஒரு நூற்கண்டு ரூ.10 என்கிற விலையில் ஜம்பாலியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இச்சல்கரஞ்சி நகரத்திலிருந்து வாங்குகிறார். “முன்பு, ஒரு சேலைப் படுக்கை தைக்க 10 ரூபாய் மதிப்புள்ள நூல் மட்டுமே தேவைப்படும்; இன்று இதன் விலை ரூ.300” என்று அவர் புகார் கூறும் தொனியில் சொல்கிறார்..

இறுதித் தையல்களைத் தயாரிப்பதற்குச் சற்று முன், பாட்டி அன்புடன் ஒரு ரொட்டித் துண்டை சேலைப் படுக்கையின் மையத்திலோ அல்லது அதன் வயிற்றில் வைக்கிறார் - சேலைப் படுக்கை தரும் அரவணைப்புக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார். "சேலைப் படுக்கைக்குக் கூட வயிறு இருக்கிறது, குழந்தையே!," என்று அவர் கூறுகிறார்.

நான்கு முக்கோண வடிவ வெட்டுத்துண்டுகள் அதன் மூலைகளில் இணைக்கப்பட்டவுடன் சேலைப் படுக்கை தயாராகி விடுகிறது. இந்த வடிவமைப்பு இந்த சேலைப் படுக்கைகளின் சிறப்பியல்பு மட்டுமல்ல, முக்கியமான பங்கும் அதில் வகிக்கிறது - நான்கு மூலைகளும் கனமான சேலைப் படுக்கையைத் தூக்குவதற்கு எளிதானப் பிடியை வழங்குகிறது. 9 புடவைகள், 216 துண்டுகள் மற்றும் 97,800 தையல்கள் சேர்த்து 7 கிலோவுக்கு மேல் எடையுள்ள ஒரு சேலைப் படுக்கை ஆகிறது..

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

30 நூற்கண்டுகள் (150 மீட்டர்) வெள்ளை பருத்தி நூல் மற்றும் பல ஊசிகளை தனுபாய் ஒரு சேலைப் படுக்கை செய்ய பயன்படுத்துகிறார்

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: சேலைப் படுக்கையின் வலிமையைப் பாதுகாக்கும் வெளிப்புற எல்லையில் நன்றாக தையல் போடுவதன் மூலம் அவர் தொடங்குகிறார். வலது: முடிப்பதற்கு முன் பாட்டி, அது அளிக்கும் அரவணைப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக, சேலைப் படுக்கை நடுவில் ரொட்டித் துண்டு ஒன்றை வைக்கிறார்

"இது நான்கு மாத வேலை. இரண்டு மாதங்களில் முடிவடைந்தது," என்று பாட்டி கூறுகிறார். தனது சமீபத்திய சேலைப் படுக்கையை, 6.8 x 6.5 அடி அழகான படைப்பைக் காட்டுகிறார். அவர் தன் மூத்த மகன் பிரபாகரின் வீட்டிற்கு வெளியே உள்ள சிமென்ட் தாழ்வாரத்தில் தன் வழக்கமான பணியிடத்தில் அமர்ந்திருக்கிறார். பல ஆண்டுகளாக கவனமாக சேகரிக்கப்பட்ட சம்பங்கி மற்றும் கற்பூரவல்லி போன்ற தாவரங்களால் அதை அலங்கரித்துள்ளார். பாட்டி ஒரு காலத்தில் பசுவின் சாணத்தை பூசுவதற்குப் பயன்படுத்திய தரை, எண்ணற்ற துணிகளில் இருந்து அற்புதமான படைப்புகளை ஒன்றிணைக்க ஆயிரக்கணக்கான மணிநேரங்களை செலவழித்ததற்கு சாட்சியாக உள்ளது.

“குறைந்தபட்சம் நான்கு பேர் ஒரு சேலைப் படுக்கையைக் கழுவ வேண்டும் . இது மிகவும் கனமானது, ” என்று அவர் கூறுகிறார். சேலைப் படுக்கைகள் வருடத்திற்கு மூன்று முறை - தசரா, நவ்யாச்சி பூனம் (சங்கராந்த் பண்டிகைக்குப் பிறகு முதல் முழு நிலவு) மற்றும் வருடாந்திர கிராம கண்காட்சி - கழுவப்படுகின்றன. "இந்த மூன்று நாட்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதுதான் பாரம்பரியம்."

தனுபாய் தனது வாழ்நாளில் 30 க்கும் மேற்பட்ட சேலைப் படுக்கைகளை உருவாக்கியுள்ளார். இந்தச் சிக்கலான, தீவிரமான கலைக்காக 18,000 மணிநேரங்களுக்கு மேல் அர்ப்பணித்துள்ளார். அது அவருடைய பகுதி நேர வேலை மட்டுமே. அவரது வாழ்நாளின் அறுபது வருடங்களுக்கு மேலாக, ஒரு முழுநேர விவசாயத் தொழிலாளியாகவும் இருந்தார். ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் வயல்களில் முதுகுத்தண்டு ஒடிய வேலை செய்தார்.

“அவ்வளவு வேலை செய்தாலும் அவர் சோர்வடையவில்லை. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், அவர் மற்றொரு சேலைப் படுக்கை செய்யத் தொடங்குகிறார், ”என்று கூறுகிறார், இந்த கலையை ஒருபோதும் கற்றுக்கொள்ளாத அவரது மகள் சிந்து பிரன்ஜே. “வாழ்க்கை முழுவதும் ஆனால் கூட அவரது நிலைக்கு எங்களால் பொருந்த முடியாது. இன்றும் அவருடைய வேலையைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது,” என்று தனுபாயின் மூத்த மருமகள் லதா மேலும் கூறுகிறார்.

PHOTO • Sanket Jain

உறக்கத்திலும் ஊசியில் நூல் கோர்க்க முடியும் என்கிறார் தனுபாய்

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: சிக்கலான ஊசி வேலை அவரது கைகளையும் தோள்களையும் கஷ்டப்படுத்துகிறது. "இந்தக் கைகள் எஃகு போல ஆகிவிட்டன, எனவே ஊசிகள் இப்போது என்னைத் தொந்தரவு செய்யவில்லை.” வலது: சம இடைவெளியில் ஓடும் தையல்கள் 5 மிமீ நீளம் கொண்டவை. அவை அடுக்குகளை ஒன்றாக வைத்திருக்கின்றன, மேலும் ஒவ்வொரு தையலிலும் சேலைப் படுக்கை கனமாகிறது

சிந்துவின் மருமகளான, 23 வயது அஷ்வினி பிரன்ஜே, தையல் படிப்பை முடித்துள்ளார். சேலைப் படுக்கை செய்வது எப்படி என்றும் அவருக்குத் தெரியும். “ஆனால் நான் ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி சேலைப் படுக்கை செய்கிறேன். இந்தப் பாரம்பரிய கலைக்கு நிறைய பொறுமையும் நேரமும் தேவை,” என்கிறார். அதுவும் முதுகு மற்றும் கண்களை காயப்படுத்தி விரல்களில் காயம் மற்றும் புண் போன்றவற்றை உருவாக்கும் உடல் ரீதியாக கடினமான வேலைதான் என்பதை அவர் சொல்லவில்லை.

ஆனால் தனுபாய்க்கு அதைப் பற்றிக் கவலையில்லை. “என் கைகள் இப்போது பழகிவிட்டன. இந்தக் கைகள் எஃகு போல ஆகிவிட்டன. அதனால் ஊசிகள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை,” என்று அவர் சிரிக்கிறார். ஒவ்வொரு முறையும் யாராவது தனது வேலையைத் தடுக்கும்போது தனது பின்னலில் தனது ஊசியை மெதுவாகச் செருகிக் கொள்கிறார். "ஊசி வைக்க இதுவே பாதுகாப்பான இடம்," என்று அவர் சிரித்தார்.

இளைய தலைமுறையினர் ஏன் இந்தக் கலையைக் கற்க ஆர்வமாக இல்லை என்று அவரிடம் கேட்டால், “சேலை கிழிக்க யார் வருவார்கள்? அவர்களுக்கு எவ்வளவு கொடுத்து விடுவீர்கள்?” என்கிறார்.

இளைஞர்கள் சந்தையில் இருந்து மலிவான, இயந்திரத்தால் செய்யப்பட்ட சேலைப் படுக்கைகளை வாங்க விரும்புகிறார்கள், என்று அவர் விளக்குகிறார். “துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கையால் சேலைப் படுக்கை செய்வது எப்படி என்று தெரியும். இன்னும் கலையின் மீது பிரமிப்புடன் இருப்பவர்கள் அதை இயந்திரத்தில் தைத்து விடுகிறார்கள்,” என்கிறார் தனுபாய். "இது சேலைப் படுக்கை செய்யப்பட்டதற்கான காரணத்தை முற்றிலும் மாற்றிவிட்டது, ஆனால் காலப்போக்கில் விஷயங்கள் மாறுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார். பெண்களும் பழைய புடவைகளுக்குப் பதிலாக புதிய புடவைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடதுபுறம்: தனுபாய் சேலைத்துண்டுகளை தைப்பதற்கு  முன் தன் கையால் அளக்கிறார். வலது: அவர் தனது வாழ்நாளில் 30 சேலைப் படுக்கைகளை உருவாக்கியுள்ளார். இக்கலைக்காக 18,000 மணிநேரங்களை அர்ப்பணித்துள்ளார்

லட்சக்கணக்கில் அற்புதமான தையல்களை கையால் செய்து வாழ்நாள் முழுவதும் செலவழித்த பிறகு, தையல்காரரான நாயக்கின் (பாட்டிக்கு அவரது முதல் பெயர் நினைவில் இல்லை) அறிவுரையைப் பின்பற்றாததற்காக அவர் இன்னும் வருந்துகிறார். "தையல் கற்றுக் கொள்ளும்படி அவர் என்னிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்," என்று அவர் நினைவு கூர்ந்தார். "நான் அதைக் கற்றுக்கொண்டிருந்தால், இன்று என் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டிருக்கும்." அவர் இந்தக் கைவினைக் கலையை குறைவாக விரும்புகிறார் என்பதல்ல இதன் அர்த்தம். அதற்குத் தேவைப்படும் உழைப்பின் காரணமாகதான் இப்படிச் சொல்கிறார் அவர்.

சுவாரஸ்யமாக, தனுபாய் தன் வாழ்நாளில் ஒரு சேலைப் படுக்கையையும் விற்றதில்லை. “இதை ஏன் விற்க வேண்டும் மகனே? அதற்கு ஒருவர் எவ்வளவு பணம் கொடுப்பார்?”

*****

சேலைப் படுக்கைகளை உருவாக்க வருடத்தின் குறிப்பிட்ட நேரம் என ஒன்றுமில்லை என்றாலும், அது எப்படியோ விவசாய சுழற்சியின் தாளத்தைப் பின்பற்றியது; பொதுவாக பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து ஜூன் வரை வயல்களில் வேலை குறைவாக இருக்கும் போது பெண்கள் தைக்க விரும்புவார்கள். "எங்களுக்குத் தோன்றிய போதெல்லாம் செய்தோம்," என்கிறார் தனுபாய்.

கோலாப்பூரின் காதிங்லாஜ் தாலுகாவில் உள்ள தனது பழைய கிராமமான நவுகுடில், 1960களின் பிற்பகுதி வரை, கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் மஹாராஷ்டிராவின் பிற பகுதிகளில் கோதாடி என்று அழைக்கப்படும் ஒரு சேலைப் படுக்கை செய்ததை அவர் நினைவுகூர்கிறார். "முன்னதாக, பெண்கள் அண்டை வீட்டாரை சேலைப் படுக்கை தைக்க உதவுமாறு அழைத்தனர். ஒரு நாள் வேலைக்காக மூன்று அணாக்கள் செலுத்தினர்." நான்கு பெண்கள் தொடர்ந்து வேலை செய்தால், ஒரு சேலைப் படுக்கையை முடிக்க இரண்டு மாதங்கள் ஆகும் என்கிறார்.

PHOTO • Sanket Jain

தையல்களின் கடைசித் தொகுப்பு மிகவும் கடினமானது. ஏனெனில் அப்போது சேலைப் படுக்கை மிகவும் கனமாக இருக்கும்

அப்போது புடவைகள் விலை உயர்ந்தவையாக இருந்ததாக என்று அவர் நினைவு கூர்ந்தார். ஒரு பருத்தி சேலை ரூ.8 விலை கொண்டிருந்தது. நல்லவை ரூ. 16 அளவுக்கு விலை கொண்டிருந்தன. ஒரு கிலோ மசூரி பருப்புக்கு (சிவப்பு பருப்பு) 12 அணா செலவாகும். மேலும் அவரே வயல்களில் உழைத்து ஒரு நாளைக்கு 6 அணா சம்பாதித்தார். பதினாறு அணா ஒரு ரூபாய் ஆகும்.

"நாங்கள் ஒரு வருடத்தில் இரண்டு புடவைகள் மற்றும் நான்கு ஜாக்கெட்களை மட்டுமே வாங்கினோம்." சேலைகள் எவ்வளவு அரிதாக இருந்ததால், சேலைப் படுக்கை நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. தனுபாய் தனது சேலைப் படுக்கை குறைந்தது 30 ஆண்டுகள் நீடிக்கும் என்று பெருமையுடன் கூறுகிறார். இத்தகைய நுணுக்கமான விவரங்கள் நிபுணத்துவத்தாலும் தீவிர பயிற்சியின் மூலம் அடையப்பட்டது.

1972-73 வறட்சி, 2 கோடி மக்களை (மகாராஷ்டிராவின் கிராமப்புற மக்கள் தொகையில் 57 சதவீதம்) கடுமையாகப் பாதித்தது. இது கோவிகர்களை நவுகுடில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோலாபூரின் ஷிரோல் தாலுகாவில் உள்ள ஜம்பாலி கிராமத்திற்கு இடம்பெயரச் செய்தது. “வறட்சியை நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் பல நாட்கள் வெறும் வயிற்றில் தூங்கினோம், ” என்று அவர் சொல்கிறார். அவரது கண்கள் ஈரம் கொள்கின்றன.

“நவுகுடில் வசித்தோர் ஜம்பாலியில் வேலை வாய்ப்புகளைக் கண்டார்கள். அதிகம் யோசிக்காமல், ஏறக்குறைய முழு கிராமமும் இடம்பெயர்ந்தது, ” என்று அவர் நினைவுகூர்கிறார். இடம்பெயர்வதற்கு முன்பு, அவரது கணவர், மறைந்த தானாஜி, நவுகுடில் இருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவா வரை பயணம் செய்து, சாலைகள் அமைப்பதிலும், கற்பாறைகளை உடைப்பதிலும் ஒரு தொழிலாளியாக பணியாற்றினார்.

ஜம்பாலியில், அரசாங்கத்தின் வறட்சி நிவாரணப் பணியின் ஒரு பகுதியாக சாலை அமைக்கும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பாட்டியும் ஒருவர். “எங்களுக்கு சம்பளமாக 12 மணிநேர வேலைக்கு ஒரு நாளைக்கு ரூ.1.5 கொடுக்கப்பட்டது” என்று அவர் நினைவு கூர்ந்தார். இந்த நேரத்தில், கிராமத்தின் அதிகாரம் மிக்க ஒருவர் தனது 16 ஏக்கர் தோட்டத்தில்  ஒரு நாளைக்கு 3 ரூபாய் கூலியில் வேலை பார்க்க அழைத்தார். தனுபாய் ஒரு விவசாயத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார். நிலக்கடலை, கம்பு, கோதுமை, அரிசி மற்றும் சப்போட்டா, மாம்பழம், திராட்சை, மாதுளை மற்றும் சீத்தாப்பழம் போன்ற பழங்களை பயிரிட்டார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

இடது: இந்த வெட்டுடன், பாட்டியின் சேலைப் படுக்கை தயாராகி விடும். வலதுபுறம்: வலது தோள்பட்டையில் செய்யப்பட்ட இரண்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் தொடர்ச்சியான வலிக்குப் பிறகும், அவர் சேலைப் படுக்கைகள் தயாரிப்பதை நிறுத்தவில்லை

2000மாம் வருடங்களின் முற்பகுதியில் முப்பதாண்டுகளுக்கு மேலான கடின உழைப்புக்குப் பிறகு அவர் விவசாய வேலையை விட்டு வெளியேறியபோது, அவரது மாதச் சம்பளம் 10 மணி நேர வேலைக்கு நாளுக்கு வெறும் 160 ரூபாயாகத்தான் இருந்தது. “நாங்கள் உணவுக்காக உமி சாப்பிட்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளை கஷ்டப்பட விடவில்லை,” என்று அவர் கூறுகிறார். அவருடைய போராட்டமும் தியாகமும் இறுதியில் பலனளித்தன. இன்று, அவரது மூத்த மகன் பிரபாகர், அருகிலுள்ள ஜெய்சிங்பூர் நகரில் உரக் கடை நடத்தி வருகிறார். இளைய மகன் பாபுசோ, ஜம்பாலியில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்கிறார்.

விவசாய வேலை செய்வதை நிறுத்திய பிறகு, அவர் அலுப்பாக உணர்ந்தார். மீண்டும் விவசாயத் தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விழுந்ததில் ஏற்பட்ட காயங்களால் விவசாய வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. "எனது வலது தோள்பட்டையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்த போதிலும், வலி ​​தொடர்கிறது," என்று அவர் விளக்குகிறார். இருப்பினும், அது அவரது பேரனான சம்பத் பிரன்ஜேவுக்கு மற்றொரு சேலைப் படுக்கைத் தயாரிப்பதைத் தடுக்கவில்லை.

தோள்பட்டை வலியைப் பொருட்படுத்தாமல், தனுபாய் தினமும் காலை 8 மணிக்கு தைக்கத் தொடங்கி மாலை 6 மணி வரை தொடர்கிறார். உலர்த்துவதற்காக வெளியில் வைத்திருக்கும் சோளத்தை உண்ணும் குரங்குகளை விரட்ட எப்போதாவது வேலையை நிறுத்துகிறார். "அதை குரங்குகளுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் என் பேரன் ருத்ருக்கு சோளம் பிடிக்கும்," என்று அவர் கூறுகிறார். தனது ஆர்வத்தை ஆதரித்ததற்காக தனது இரண்டு மருமகள்களுக்கு நிறைய கடன்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார். "அவர்களால் நான் வீட்டுப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டேன்."

74 வயதிலும், தனுபாய் தனது ஊசியால் மாயாஜாலத்தை தொடர்ந்து செய்கிறார். ஒரு தையலையும் தவறவிடவில்லை; அவருடைய திறமை எப்போதும் போல் கூர்மையாக இருக்கிறது. ”இதில் மறப்பதற்கு என்ன இருக்கிறது? இதற்கு என்ன பெரிதாக திறமை தேவைப்படப் போகிறது?” என்று அடக்கமாக கேட்கிறார்.

தனுபாய் அனைவருக்கும் ஒரு அறிவுரை கூறுகிறார்: "எத்தகைய சூழ்நிலையிலும், வாழ்க்கையை உண்மையாக வாழுங்கள்." ஒரு சேலைப் படுக்கையின் பல துண்டுகளை ஒன்றாக வைத்திருக்கும் மெல்லிய தையல்களைப் போல, அவர் தன் குடும்பத்தை ஒன்றாக வைத்திருப்பதற்கு வாழ்நாள் முழுவதையும் செலவிட்டிருக்கிறார். ”நான் முழு வாழ்க்கையையும் தையலிலேயே செலவழித்துவிட்டேன்."

PHOTO • Sanket Jain

தனுபாய் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து இரண்டு மாதங்களில் இந்தக் சேலைப் படுக்கையைத் தைத்தார்

PHOTO • Sanket Jain

9 புடவைகள், 216 சேலைத் துண்டுகள் மற்றும் 97,800 தையல்களுடன் தயாரிக்கப்பட்ட, அழகான 6.8 x 6.5 அடி சேலைப் படுக்கை 7 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருக்கிறது

இந்தக் கட்டுரை, சங்கேத் ஜெயினின் கிராமப்புற கைவினைஞர்கள் பற்றியத் தொடரின் ஒரு பகுதியாகும். மேலும் இது மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் ஆதரவில் வெளியாகியிருக்கும் கட்டுரை.

தமிழில் : ராஜசங்கீதன்

Reporter : Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Editor : Sangeeta Menon

Sangeeta Menon is a Mumbai-based writer, editor and communications consultant.

Other stories by Sangeeta Menon
Photo Editor : Binaifer Bharucha

Binaifer Bharucha is a freelance photographer based in Mumbai, and Photo Editor at the People's Archive of Rural India.

Other stories by Binaifer Bharucha
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan