20 வயது வரை அங்காத் சலுங்கேவுக்கு நம்பிக்கை இருந்தது. பின்னர் அது அச்சத்திற்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் கழித்து, விரக்தி மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தியது. இறுதியில், அங்காத் தோல்வியை ஏற்றுக்கொண்டார். இனி அவருக்கு வேலை கிடைக்காது என்கிற தோல்வி ஆகும்.

2003-ல் தனக்கு 18 வயதானபோது அங்காத், பீட் மாவட்டம் நாகபூர் கிராமத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீட் நகருக்கு கல்லூரி செல்வதற்காக வந்தார். “பீட்டில் எனக்கு வாடகை கொடுப்பதற்காக கூடுதல் பணத்தை எனது பெற்றோர்கள் அனுப்பினார்கள். அதற்காக கூடுதல் நேரம் வேலை செய்தார்கள். வட்டிக்காரரிடம் கடன் வாங்கினர். கல்லூரிக் கட்டணம் உள்ளிட்ட மற்றச் செலவுகளுக்கு அவர்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் வரை செலவழித்துள்ளனர் .“

இளங்கலை படித்து முடித்தவுடன் அங்காத் மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்வதற்கான தயாரிப்பு வேலைகளை மேற்கொண்டார். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் அவர், மாநிலத்தில் நிர்வாகம் மற்றும் குடிமையியல் அரசிதழ் பதிவு அதிகாரி, துணை ஆட்சியர், துணை  கண்காணிப்பாளர், விற்பனை வரி ஆய்வாளர் போன்ற பல்வேறு பணிகளுக்குச் செல்ல முடியும். ஆனால், இத்தேர்வை எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை, காலியாக இருக்கும் பணியிடங்களைவிட கூடுதலாக இருக்கும். மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் வி.என்.மோர் கூறுகையில், ”அரசுப்பணிகளில் பல்வேறு பிரிவுகளிலும் உள்ள தேர்வுகளுக்கு ஆண்டுதோறும் 12 முதல் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். ஆனால் பணியிடங்களோ 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மட்டும உள்ளது. அதில் 2 முதல் இரண்டேகால் லட்சம் பேர் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை எழுதிகிறார்கள். அதில் காலியிடங்கள் 300 முதல் 350 வரையே நிரப்ப வேண்டியிருக்கிறது. (மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையம் மட்டும் பல்வேறு பிரிகளில் 14 தேர்வுகளை நடத்துகிறது) குடிமைப்பணிகளில் 2017-18ம் ஆண்டு வெறும் 140 இடங்கள் மட்டுமே காலியாக இருந்தது.”

“நான் கடுமையாக உழைத்து நாள் முழுவதும் படித்தேன்“ என்று அங்காத் கூறுகிறார். அவருக்கு தற்போது 34 வயது. அவரது வயலில் மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கிறார். “2007ல் நான் பீட் அரசு மருத்துவமனையில் குமாஸ்தா வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், எனக்கு சிபாரிசு செய்வதற்கு யாருமில்லை“ என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இதுபோன்ற பணிகள்  அரசு நடைமுறைகளின் கீழ் செல்வதன் மூலம் நிரப்பப்படாது. சிபாரிசு மற்றும் தெரிந்தவர்களை பரிந்துரை செய்வதன் மூலம் மட்டுமே கிடைக்கக்கூடும்.

PHOTO • Parth M.N.

மஹாரஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையத்தின் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும், பல ஆண்டு வேலைக்கு முயன்றும், அங்காத் சாலுங்கே போல் வேலைகிடைக்காமல் விவசாயத்திற்கு திரும்பியவர்கள் இங்கு  ஏராளம் உள்ளனர்

“எனது பெற்றோர் நான் விவசாயம் செய்ய மாட்டேன் என்றும் அரசுப்பணி பெற்று வேறு எங்காவது செல்வேன் என்றும் நம்பினார்கள்“ என்று அங்காத் 60 வயதான தனது தாய் சுதாமதியை பார்த்துக்கொண்டே தொடர்கிறார். 2000மாவது ஆண்டின் துவக்கத்தில் இருந்து விவசாயம் நிச்சயமற்ற தொழிலாகத்தான் உள்ளது. “அது மேலும் மோசமடையும் என்றே நாங்கள் எண்ணினோம்“ என்று சுதாமதி கூறுகிறார். “எனவே நாங்கள் விவசாயக் கூலித்தொழிலையும் சேர்த்து செய்தோம். எங்களுக்குக் குறைவாக செலவழித்துக்கொண்டு அவரது படிப்பிற்காக சேமித்தோம்“ என்று அவர் மேலும் கூறுகிறார். அங்காத் அவர்களின் ஒரே மகன்.

மராத்வாடாவின் கிராமப்புற பகுதிகளில் சுற்றித்திரிந்த இந்தப் பல மாதங்களில், தங்கள் குழந்தைகள் விவசாயிகளாக வேண்டும் என்று நினைக்கும் ஒருவரைக் கூட நான் சந்திக்கவில்லை. நிறைய குடும்பங்களில், அவர்களால் திருப்பி செலுத்த முடியாது என்று தெரிந்தபோதும் கடன் வாங்கியாவது தங்கள் மகன்களை பெரிய நகரங்களில் படிப்பதற்கு செலவிடுகின்றனர். சில குடும்பங்களில் மகள்களுக்கும் இது கிடைக்கிறது. ஆனால், ஒருவர் படித்து பட்டம் பெற்றவுடன், வேலை தேடும் பணிகள் தொடங்குகிறது. வழக்கமாக நீண்ட காலம் தேடல் செல்வதால் அவர்கள் நம்பிக்கையிழக்கும் நிலை ஏற்படுகிறது.

“எங்கள் வாழ்க்கைதான் இந்த வயல்காட்டிலே சென்றது. நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையே எங்கள் மகன் கணேஷுக்கும் அமைய வேண்டாம் என்று நாங்கள் விரும்பினோம்“ என்று நாம்தேவ் கோல்ஹே கூறுகிறார். அவர் பீட் மாவட்டத்தின் தேவ்தாஹிபால் கிராமத்தில் விவசாய கூலித்தொழிலாளியாக உள்ளார். நாளொன்றுக்கு ரூ.200 முதல் 250 வரை கூலியாகப் பெறுகிறார். மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் சராசரியாக பெறுகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்னர், வட்டிக்கடைக்காரரிடம் ரூ.3 லட்சத்தை மாதமொன்றுக்கு 4 சதவீத வட்டிக்கு கடனாக வாங்கினார். அவரால் வங்கியில் கடன் வாங்க முடியவில்லை. ஏனெனில் அவர்கள் குடும்பத்தினருக்கு சொந்தமாக நிலம் இல்லை. “நாங்கள் திருடியோ அல்லது ஏதாவது கூட செய்து கொள்கிறோம். ஆனால், கணேஷ் மட்டும் கிராமத்திற்கு திரும்பிவிடக்கூடாது“ என்று 60 வயதான நாம்தேவ் கூறுகிறார். “நாங்கள் கிட்டத்தட்ட அவரது படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்காக ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளோம்“.

2017ல் கணேஷ் அறிவியலில் பட்டம் பெற்றார். அப்போது முதல் அவர் தனது கிராமத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீட் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.700 மாத வாடகைக்கு அறையை பகிர்ந்துகொண்டு தங்கி மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு தயார் செய்து வருகிறார். “எனது பெற்றோருக்கு வயதாகிறது. நான் ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர்களே எனக்கு பணம் அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது“.

அவ்வளவு செலவழித்து அவர் ஏன் அங்கு தங்க வேண்டும் என்று நான் கேட்டேன். “விவசாயத்தில் என்னக் கிடைக்கிறது? உறுதியான வருமானத்திற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா?“ என்று அவர் பதிலளிக்கிறார்

காணொளி: கணேஷ் கோல்ஹே வேலைக்கான தனது நீண்ட கால காத்திருப்பு குறித்துப் பேசுகிறார். அங்காத் சாலுங்கே தனது தோல்வி குறித்து கூறுகிறார்

அவ்வளவு செலவழித்து அவர் ஏன் அங்கு தங்க வேண்டும் என்று நான் கேட்டேன். “விவசாயத்தில் என்ன கிடைக்கிறது? உறுதியான வருமானத்திற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா?“ என்று அவர் பதிலளிக்கிறார். “வானிலையில் ஒரு ஒழுங்கற்ற தன்மை நிலவுகிறது. பெரும்பாலான நேரங்களில் நாங்கள் செலவழித்த தொகையே எங்களால் திரும்ப எடுக்க முடியவில்லை. விவசாயிகளின் வாழ்க்கை அழிந்துவிட்டது. விவசாயிகள் கஷ்டப்படும்போது, விவசாய கூலித்தொழிகளும் பாதிக்கப்படுகின்றனர்.“.

அங்காதைப் போல் கணேஷும் மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்விற்கு தயார் செய்துகொண்டிருக்கிறார். “அது மிகவும் சவாலாக உள்ளது. பகுதி நேர வேலைகள் செய்துகொண்டே படிக்கவும் முடியாது. ஆனால், இந்தாண்டு தேர்வுகள் எழுதிவிட்டு, நிரந்தர வேலை கிடைப்பதற்கு முன்னரே ஏதாவது வேலை தேடிக்கொள்வேன்.“

மஹாராஷ்ட்ரா அரசுப்பணிகள் தேர்வை ஒரு சுதந்திர அமைப்பு நடத்துகிறது. அதில் ஒரு ஒழுங்கற்ற நிலை உள்ளதால், அது தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எடுத்துக்காட்டாக 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்படவில்லை. கிராமக் கணக்கர்கள் பணிக்கும் விண்ணப்பங்களை வெளியிடவில்லை.

ஆனால், ஒரு நிலையான வேலைக்காக இளம் மாணவர்கள் அரசுப்பணிகளையே தேர்தெடுக்கின்றனர். அதற்காக தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பீட்டில் நிறைய பயிற்சி மையங்களையும் ஆசிரியர்கள் துவங்கியுள்ளனர்.

பீட்டில் உள்ள காவல்துறை மைதானத்தில், மார்ச் மாதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும், காவல்துறைப் பணிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், வேகமாக ஓடுதல், உடலை வளைக்கும் பயிற்சிகளை பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் செய்துகொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணப் பதாக்கின் யோதா என்ற ஒரே ஒரு பயிற்சி மையத்தில் மட்டும் 900 மாணவர்கள் உள்ளனர். இதுபோல், பீட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உள்ளதாக பயிற்சி மையத்தின் சொந்தக்காரர்கள் கூறுகிறார்கள்.  “காவல்துறையின் பல்வேறு பணிகளுக்கு பீட்டில் மட்டும் 2018ம் ஆண்டில் 53 காலியிடங்கள் மட்டுமே இருந்தது“ என்று வருத்தமான சிரிப்புடன் பதாக் கூறுகிறார். “இங்கு பயிற்சிக்கு வருபவர்கள் பல ஆண்டுகளாக இதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவர்கள். சில நேரங்களில் சில புள்ளிகளில் வாய்ப்பை தவறவிட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உடற்பயிற்சி தேவையாக உள்ளது. இளைஞர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதுதான் வருத்தமளிக்கிறது.“

PHOTO • Parth M.N.

பீட்டில் உள்ள காவல்துறை மைதானத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும், குறைவான காலியிடங்களே உள்ள காவல்துறை பணிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 'வருத்தமாக உள்ளது' என்று பயிற்சியாளர் கூறுகிறார்

இங்கு பயிற்சி பெறும்19 வயதான பூஜா அச்சாரே என்ற மாணவி பீட் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆஷ்தி நகரில் இருந்து வருகிறார். “நான் இங்கு ஒரு விடுதியில் மாதம் ரூ.800 வாடகைக்கு தங்கியுள்ளேன். சாப்பாட்டிற்கு ரூ.1,500 கொடுக்க வேண்டும். 3 மாதங்களுக்கு பயிற்சி. பின்னர்தான் எனக்கு காவல்துறையில் வேலை கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.“

பூஜாவின் பெற்றோரும் விவசாயிகள்தான். அவர்கள் தங்களுக்கு சொந்தமான 8 ஏக்கரில் துவரையும், சோளமும் பயிரிடுகின்றனர். அவர்கள் எனக்கு பெருந்துணையாக உள்ளனர் என்கிறார் அவர். ஆனால், பெண்களுக்கு ஒரே ஒருமுறை மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும். “எனக்கு இந்தாண்டு வேலை கிடைக்கவில்லையெனில், நான் ஊர் திரும்பி, திருமணம் செய்துகொள்ள வேண்டும். அதனால்தான், வேலையில்லாத இளைஞர்கள் பெரும்பாலானோர் ஆண்களாக இருக்கிறார்கள்.“

இந்தாண்டின் துவக்கத்தில் பீட்டில் உள்ள உள்ளூர் செயற்பாட்டாளர் வசிஸ்டா பாதே, படித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கான சுஷிக்ஷித் பெரோஜ்கர் இணைப்பை தொடங்கினார். “பீட்டில் உள்ள கல்லூரி, பயிற்சி மையங்கள் மற்றும் தனிவகுப்புகளில் கேட்டேன். அவர்களை ஒன்றிணைத்து அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டேன். இதன் மூலம் அவர்களின் சூழ்நிலை எவ்வளவுக் கொடுமையாக உள்ளது என்பதை அரசுக்கு காட்ட முடியும்.“

பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் பாதே ஒருங்கிணைத்த கூட்டத்தில் 12ம் வகுப்பு வரையும், அதற்கு மேலும் படித்துள்ள 1,000 இளைஞர்கள் கலந்துகொண்டனர். “அவர்கள் பீட் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்,“ என்று அவர் கூறுகிறார். “பீட்டின் 11 தாலுகாக்களில் இருந்து வந்திருந்த இளைஞர்களின் எண்ணிக்கையை கணக்கிட முயன்றபோது, மராத்வாடா முழுவதுமே ஒரே மாதிரியான சூழ்நிலைதான் நிலவுகிறது எனப் புரிந்தது.“

PHOTO • Parth M.N.
Portrait of girl
PHOTO • Parth M.N.

'இந்தாண்டு வேலை கிடைக்காவிட்டால், ஊருக்கு திரும்பிச் சென்று திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று பூஜா அச்சாரே கூறுகிறார் (வலது). ‘அதனால்தான், பெரும்பாலான வேலையில்லாத இளைஞர்கள் ஆண்களாக உள்ளனர்‘

இந்தியா முழுவதும் ஒரே சூழ்நிலைதான் நிலவுகிறது. மும்பையைச் சேர்ந்த இந்தியப் பொருளாதார கண்காணிப்பகத்தின் கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் 3 கோடி மக்கள் வேலை தேடி அலைகிறார்கள் என்று கூறுகிறது. வேலைகள் இல்லாமல் இருக்கிறது அல்லது குறைந்து வருகிறது. திருவனந்தபுரம் வளர்ச்சி படிப்புகளுக்கான மையத்தின் பொருளியல் நிபுணர் வினோஜ் ஆபிரஹாம், பொருளாதாரம் மற்றும் அரசியல் வார இதழில் எழுதுகையில், பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களில் இருந்து இந்தியாவில் வேலைவாய்ப்புகள் கடுமையாக சரிந்து வருகிறது அல்லது வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி கடுமையாகக் குறைந்து வருவது தெரிகிறது. இது பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உள்ள அனைத்துத் துறைகளிலும் ஏற்படுகிறது.

விவசாயத்தில் ஏற்பட்டு வரும் பிரச்னைகளாலும், விவசாயிகள் தங்கள் பிள்ளைகளை வேளாண் தொழிலில் ஈடுபடுத்தாமல் வேறு வேலைக்கு அனுப்புவதாலும், இளைஞர்களுக்கு வேலையில்லாமல் உள்ளது. “அவர்களுக்கு வேலைகள் கிடைக்காமல் போனால், அவர்கள் ஒன்று ஊர் திரும்பி விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள் அல்லது நகரங்களுக்கு இடம்பெயர்ந்து கட்டிட வேலைகள், காவலாளி மற்றும் ஓட்டுனர் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்“ என்று பாதே கூறுகிறார். இதனால் குறைந்த கூலிக்கு நகரங்களுக்கு தொழிலாளர்களை கொண்டு சேர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற காலங்களில் மோசடி பேர்வழிகள், இளைஞர்களை ஏமாற்றிவிடுகிறார்கள். 2013ம் ஆண்டில், இன்னும் தனக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிய அங்காத், பீட்டில் நந்தேடில் என்பவரைச் சந்தித்தார். கிராமக் கணக்கர் வேலை வாங்கி தருவதாக கூறி, லஞ்சமாக ரூ. 5 லட்சம் கேட்டுள்ளார் அவர். அதை நம்பி “எங்களின் 5 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரை விற்று தொகையைச் செலுத்தினோம்“ என்று அங்காத் கூறுகிறார். “பின்னர் அந்த நபரை நான் சந்திக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு பின்னர் நான், வேலை தேடும் பணியை விட்டுவிட்டு, எனக்கு அரசு வேலை கிடைக்காது என்று கூறிக்கொண்டேன்“ என்று அவர் கவலையுடன் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு மேல் அங்காத் தனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்கும் என்று நம்பினார். வாழ்க்கைக்காக கிடைத்த வேலைகளை செய்து வந்தார்.

அதற்கு பின் வந்த ஆண்டில், அவர் விவசாயத்தை தேர்ந்தெடுத்தார். பருத்தி, கம்பு, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு வருகிறார். அவரின் பெற்றோரைப்போலவே அவரும் சிரமப்பட்டு வருகிறார். “எனது தந்தைக்கு 60 வயதாகிறது. அவர் கூலித்தொழிலாளியாக வயலில் வேலை செய்ய வேண்டும். அதற்கு நான் காரணமாக இருக்கிறேன்“ என்று அவர் கூறுகிறார். “எனது படிப்பிற்கும், வேலைக்கும் எனது பெற்றோர் இவ்வளவு செலவு செய்திருக்காவிட்டால், அவர்கள் இன்னும் நல்ல நிலையில் இருந்திருப்பார்கள்.“

அங்காதுக்கு 10 மற்றும் 8 வயதுகளில் 2 மகன்களும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவரின் பெற்றோர்கள் அவரை நினைத்துக் கண்ட கனவுகளை அவரும் தற்போது தன் குழந்தைகளை வைத்து காண்கிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.