முரளிதர் ஜவாஹிர் வேலையில் அமர்ந்துவிட்டால் தவறு நடப்பதற்கோ, குறுக்கீடு செய்வதற்கோ இடமில்லை. அவரது கைகள் மட்டும் வேகமாக நகர்ந்தபடி பருத்தி நூல்களைக் கொண்டு தோரணங்களை அமைதியாக இணைக்கின்றன. 70 வயதிலும் அன்றாடம் இந்த மூங்கில் சட்டகங்களை இணைப்பதற்கு அவரது உடலின் வலிமை இடம் கொடுக்கவில்லை.

மகாராஷ்டிராவின் இச்சல்கரஞ்சி நகரில் உள்ள அவரது நீல-பச்சை வண்ண செங்கல் வீட்டிற்கு வெளியே மூங்கில் கம்புகள், வண்ண காகிதங்கள், ஜெலட்டின் காகிதம், பழைய செய்தித்தாள் என பலவும் சிதறி கிடக்கின்றன. இவை யாவும் சில மணி நேரங்களில் வீடுகள், கோயில் வாசல்களை அலங்கரிக்கும் தோரணங்களாக நுட்பமான வடிவம் பெறுகின்றன.

முரளிதரின் சுருங்கிய உள்ளங்கைகள் மூங்கில் கம்புகளை 30 சம துண்டுகளாக வேகமாக வெட்டுகின்றன. அவற்றை ஒன்பது சமபக்க முக்கோணங்களாக அவர் மாற்றுகிறார். 3 அல்லது 10 அடி நீள மூங்கில் கம்புகளுடன் முக்கோணங்கள் இணைக்கப்படுகின்றன.

அலுமினிய கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள புளியங்கொட்டைகளை இடித்து செய்யப்படும் பசையைத் தேவைப்படும்போது முரளிதர் விரல் விட்டு நனைத்துக் கொள்கிறார். 60களில் உள்ள அவரது மனைவி ஷோபா காலையில் அதைச் செய்து தந்துள்ளார்.

“அவர் வேலை செய்யும்போது ஒரு வார்த்தைகூட பேச மாட்டார், யாரும் அவரிடம் குறுக்கீடு செய்ய மாட்டோம்,” என்கிறார் அவர்.

மூங்கில் சட்டகங்களை முரளிதர் அமைதியாக செய்து கொண்டிருக்கும் போது அதற்கான அலங்கார வேலைகளைச் செய்கிறார் ஷோபா - வண்ணமயமான வட்ட ஜெலட்டின் காகிதங்களை கொண்டு குஞ்சம் செய்கிறார். “வீட்டு வேலைகளை முடித்து ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், இதைச் செய்யத் தொடங்கிவிடுவேன். ஆனால் இந்த வேலை கண்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கிறது,” என்கிறார் அவர்.

PHOTO • Sanket Jain

18 அடி நீள மூங்கில் கம்பை பல துண்டுகளாக வெட்டி முரளிதர் ஜவாஹிர் சட்டகப் பணியை தொடங்குகிறார்

புளியங்கொட்டைகளைக் கொண்டு அவர் செய்யும் பசை ஒரு பாய்லிக்கு (5 கிலோ) ரூ.40 செலவாகிறது. ஆண்டுதோறும் 2-3 பாய்லி அவருக்குச் செலவாகிறது. தோரணங்களை அலங்கரிக்க பழைய செய்தித்தாள்களைக் கொண்டு செய்யப்பட்ட100க்கும் மேற்பட்ட குட்டி குடைகள், தேங்காய்கள், பச்சைக் கிளிகளை ஜவாஹிர் தம்பதி சேர்த்து வைத்துள்ளனர். “நாங்கள் அவற்றை முன்பெல்லாம் வீட்டிலேயே செய்துவிடுவோம். இப்போது வயதாகிவிட்டதால் சந்தையிலிருந்து வாங்குகிறோம்,” என விளக்குகிறார் ஷோபா. “90 தேங்காய், கிளிகளுக்கு நாங்கள் மொத்தம் 100 ரூபாய் செலவு செய்கிறோம்.” சட்டகம் தயாரானதும் அவற்றை அலங்கரிக்கும் பணியை தொடங்குகிறார் முரளிதர்.

பல தலைமுறைகளைக் கடந்து நூற்றாண்டுகளாக இத்தோரணங்களை ஜவாஹிர் குடும்பம் செய்து வருகிறது. “எங்கள் கலை 150 ஆண்டுகள் பழமையானது என என் தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன்,” என்கிறார் முரளிதர் பெருமிதத்துடன். தம்பட் சமூகத்தைச் சேர்ந்த (மகாராஷ்டிராவில் ஓபிசி என பட்டியலிடப்பட்டுள்ளது) அவரது குடும்பம் பாரம்பரியமாக தோரணங்களைச் செய்வது, செம்பு, வெண்கல பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது, குழாய்களை சரிசெய்வது போன்ற பணிகளைச் செய்து வருகின்றன.

அவரது தந்தை குழாய் பொருத்துவது (செம்பு அல்லது வெண்கல பானைகளில் குழாய்கள்), பாரம்பரியமான நீர் கொதிப்பான்களை சரிசெய்வது, பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது (செம்பு, வெண்கல பாத்திரங்களுக்கு ஈயம் பூசுதல்) போன்றவற்றைச் செய்துள்ளார். ஆனால் ஈயம் பூசுதல் இருபது ஆண்டுகளாக மறைந்துவிட்டது என்கிறார் அவர். “இப்போதெல்லாம் யார் செம்பு பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள்? இப்போது ஸ்டீல் மற்றும் நெகிழி தான். அதற்கு ஈயம் தேவையில்லை.”

பாரம்பரியமான இக்கைவினை தோரணத்தை கோலாப்பூர் மாவட்டம் இச்சல்கரஞ்சி நகரில் இப்போதும் செய்து கொண்டிருக்கும் கடைசி குடும்பம் இவர்களுடையதுதான். “இப்போது இவற்றை நாங்கள் மட்டுமே செய்கிறோம்,” சில பத்தாண்டுகளுக்கு முன்பு குறைந்தது 10 குடும்பங்கள் செய்து வந்தன. இன்று, “இக்கலையை கற்றுக்கொள்ளக்கூட யாரும் முன்வரவில்லை, கற்பதையே மறந்துவிட்டனர்,” என்கிறார் அவர்.

இப்போதும் தரம் நிலைத்திருப்பதாக அவர் உறுதியளிக்கிறார். “இப்போதும் அதே தரம், அதே செய்முறைதான், எவ்வித மாற்றமும் இல்லை.”

முரளிதர் தனது 10 வயதிலிருந்து தந்தையிடம் கற்று இக்கலையை செய்து கொண்டிருக்கிறார். “இதை பல ஆண்டுகள் பயிற்சி செய்து கற்றுக்கொண்டேன்,” என்கிறார் அவர். எவ்வித அளவீட்டு கருவிகளும் இல்லாமல் தோரண வடிவத்தை உருவாக்குவதற்கு “சில பத்தாண்டு கால பயிற்சி தேவைப்படும்” என்கிறார் அவர். “மெய்யான கலைஞனுக்கு அளவீட்டு கருவிகள் தேவைப்படாது,” என்கிறார் அவர். “நாங்கள் யாரும் அளவீட்டு கருவிகளை பயன்படுத்துவதில்லை. எங்களுக்கு அளக்க வேண்டிய தேவையில்லை. அனைத்தும் நினைவிலிருந்து வருவது.”

PHOTO • Sanket Jain

மூங்கில் கம்புகளை வெட்டுவதற்கு முன்பு அவற்றை சில இடங்களில் முறுக்கி ஒரு வடிவத்திற்கு முரளிதர் கொண்டு வருகிறார்

இவ்வடிவத்திற்கு என எழுதி வைக்கப்பட்ட பதிவுகள் எதுவுமில்லை. “இதற்கு ஏன் மாதிரிகள் தேவை?” “இதற்கு துல்லியமும், திறமையும்தான் வேண்டும்,” என்கிறார் அவர். தொடக்கத்தில் அவர் பல தவறுகளைச் செய்துள்ளார். இப்போது 20 நிமிடங்களில் மூங்கில் வளைவுகளைச் செய்து விடுகிறார்.

சட்டகத்தை செய்துவிட்டு அதில் காகித குடை, இரண்டு மஞ்சள் நிற காகித மயில்களை அவர் கட்டுகிறார். அவற்றை அவர் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலாப்பூர் நகரிலிருந்து வாங்கி வந்துள்ளார். முக்கோண சட்டகங்களில் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்து தெய்வங்களின் படங்களை முரளிதரும், ஷோபாவும் ஒட்டுகின்றனர். கோலாப்பூர் நகரிலிருந்து அல்லது கர்நாடகாவின் நிப்பானியிலிருந்து மொத்தமாக அவை வாங்கப்பட்டுள்ளன. “எங்களுக்கு புகைப்படம் கிடைக்காவிட்டால், பழைய நாள்காட்டிகள், திருமண அட்டைகள், செய்தித்தாள்களில் இருந்து எடுத்து வடிவமாக வெட்டிக் கொள்வேன்,” என்கிறார் முரளிதர். இவ்வளவு புகைப்படங்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கணக்கில்லை. “இது கலைஞரின் முடிவுதான்,” என்கிறார் அவர். இப்புகைப்படங்கள் பின்னர் ஒளிரும் ஜெலடின் காகிதங்களால் மூடப்படுகின்றன.

அச்சிடப்பட்ட வண்ண காகிதங்களால் சட்டகத்தின் மிச்சப் பகுதிகள் அலங்கரிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ரூ.3 மதிப்புள்ள தலா 33x46 அங்குல அட்டைகள். சிறந்த தரமான தோரணங்களை தயாரிக்க முரளிதர் வெல்வெட் காகிதங்களை பயன்படுத்துகிறார். சட்டகத்தின் அடியில் இரண்டு காகித கிளிகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு முக்கோணத்திற்கு கீழும் காகிதத்தால் செய்யப்பட்ட தேங்காயில் பொன்னிற படலம், ஜெலடின் குஞ்சங்களுடன் தொங்கவிடப்படுகின்றன.

“10 அடி நீள தோரணம் செய்வதற்கு ஐந்து மணி நேரம் ஆகிறது,” என்கிறார் முரளிதர். குறிப்பிட்ட பணி நேரம் என்று அவர் எதையும் பின்பற்றுவதில்லை. “இது உங்கள் வீடு எப்போதும் வரலாம், போகலாம்,” என்ற சுதந்திரமான தனது பணி, அவரது விருப்பம் குறித்து இந்தி பழமொழியை அவர் உதாரணமாகச் சொல்கிறார்.

எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம், ஆனால் துல்லியம் தவறக்கூடாது. பல மணி நேர கடினமான இந்த வேலையை முடித்த பிறகு, இக்கலையில் எதுவும் வீணாவதில்லை என பெருமையுடன் அவர் சொல்கிறார். “இப்போதுள்ள நவீன தோரணங்களைப் பாருங்கள், நெகிழி, பிற தீங்கான பொருட்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. அவை சுற்றுச்சூழலுக்கு கேடானவை.”

மூன்று முதல் 10 அடி நீளமுள்ள தோரணங்களில் குறுகிய தோரணத்திற்கு தான் வரவேற்பு அதிகமுள்ளது. இவை ரூ.130 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகின்றன. 1990களில் ரூ.30 முதல் ரூ.300 வரை அவருக்கு கிடைத்தது.

PHOTO • Sanket Jain

முரளிதர் முற்றிலும் தனது உள்ளார்ந்த அளவீட்டு உணர்வால் 30 சம துண்டுகளாக வெட்டி ஒன்பது சமபக்க முக்கோணங்களாக மாற்றுகிறார்

திருமணச் சடங்குகளின் போது மணமகனும், மணமகளும் அணியும் கீரிடம் போன்ற பாஷிங்கா எனும் அணிகலனையும் முரளிதர் செய்கிறார். கிராம திருவிழாக்களின் போது அவை உள்ளூர் தெய்வங்களுக்கு காணிக்கையாக தரப்படுகின்றன. ரூ.150க்கும் விற்கப்படும் காகித பாஷிங்கா செய்வதற்கு அவர் 90 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். தேவை மற்றும் சீசனுக்கு ஏற்ப விற்பனை எண்ணிக்கை மாறுபடுகிறது. ஒவ்வொரு தீபாவளிக்கும் மூங்கில், அலங்கார காகிதங்களை கொண்டு கைவினை விளக்குகளையும் செய்கிறார்.

“சடங்குகளின் ஓர் அங்கம் என்பதால் பாஷிங்காவிற்கான தேவை இன்னும் குறையவில்லை,” என்கிறார் முரளிதர். “ஆனால் தீபாவளி, திருமணம், வாஸ்து போன்ற சமயங்களில்தான் மக்கள் தோரணங்களை வாங்குகின்றனர்.”

தனது திறனுக்கு நியாயம் சேர்க்காத எந்த வியாபாரியிடமும் முரளிதர் தனது கலை படைப்புகளை விற்பதில்லை. “அவர்கள் ரூ.60 அல்லது ரூ.70 [ மூன்று அடி தோரணத்திற்கு] தான் தருகின்றனர். எங்களுக்கு போதிய இலாபம் கிடைப்பதில்லை, நேரத்திற்கு பணமும் கிடைப்பதில்லை,” என்கிறார் அவர். அவர் வீட்டிற்கு வந்து நேரடியாக வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைத் தான் விரும்புகிறார்.

ஆனால் சந்தையில் கிடைக்கும் நெகிழி மாற்றுகள் அவரது கைவினைத் தொழிலை பாதிக்கின்றன. அவை செய்வதற்கு எளிதானவை, மலிவானவை. அவரது மாத வருவாய் சுமார் ரூ.5,000-6,000 வரை இருக்கும். கோவிட்19 பெருந்தொற்றும், ஊரடங்குகளும் அவரது போராட்டத்திற்கு இன்னும் வலு சேர்த்துவிட்டன. “சில மாதங்களாக எனக்கு ஒரு ஆர்டர் கூட வரவில்லை. கடந்தாண்டு ஊரடங்கின்போது ஐந்து மாதங்களுக்கு என்னிடம் தோரணம் வாங்க யாரும் வரவில்லை,” என்கிறார் அவர்.

1994 பிளேக் தொற்று ஏற்பட்டபோது ஒட்டுமொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியேறியதை முரளிதர் நினைவுகூர்கிறார். “நாங்கள் பெருந்தொற்றுக்கு பயந்து திறந்த வெளிக்குச் சென்றுவிட்டோம். இப்போது கரோனாவை காரணம் காட்டில் வீட்டில் இருக்கச் சொல்கிறார்கள். காலம் எப்படி மாறிவிட்டது,” என்கிறார் அவர்.

காலம் உண்மையில் மாறிவிட்டது. முரளிதர் தந்தையிடம் இக்கலையை கற்றுக் கொண்டது போல தோரணங்களின் நுட்பங்களை அறிவதற்கு அவரது பிள்ளைகள் ஆர்வம் காட்டவில்லை. “அவர்கள் புளி பசையைத் தொடுவதுகூட கிடையாது,” என்கிறார் அவர். “இக்கலை குறித்து அவர்களின் புரிதல் என்ன?” அவரது மகன்கள் 36 வயது யோகேஷூம், 34 வயது மகேஷூம் கடைசல் இயந்திரத்தில் வேலை செய்கின்றனர். 32 வயது மகள் யோகிதா இல்லத்தரசி.

அறுபது ஆண்டுகளாக பல வீட்டு நுழைவாயில்களை அலங்கரிக்கும் தோரணங்கள், பலரது தலைகளையும் அலங்கரித்து வரும் பாஷிங்கா போன்ற கடினமான பணியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முரளிதரால் முடியவில்லை. “இப்போது அது வேண்டாத ஒன்றாகிவிட்டது,” என்கிறார் அவர் புன்னகையுடன்.

PHOTO • Sanket Jain

கத்தரிக்கோல்களை கொண்டு அவர் வெட்டத் தொடங்குகிறார்: 'யாருக்கும் எந்த அளவீடும் தேவைப்படுவதில்லை. நாங்கள் அளப்பதில்லை. அனைத்தும் நினைவிலிருந்து வருபவை'

PHOTO • Sanket Jain

முக்கோண சட்டகங்கள் உடையாமல் இருப்பதற்கு பருத்தி நூல்களைக் கொண்டு கட்டுகிறார் முரளிதர்

PHOTO • Sanket Jain

அவ்வப்போது பழைய அலுமினிய கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள பசையில் விரல்களை நனைத்துக் கொள்கிறார் முரளிதர்

PHOTO • Sanket Jain

புளியங்கொட்டை மாவில் செய்யப்பட்ட ஒரு வகை பசையைக் கொண்டு சட்டகங்கள் உடையாமல் ஒட்ட வைக்கிறார் முரளிதர்

PHOTO • Sanket Jain

ஒரு மூங்கில் சட்டகம் செய்வதற்கு அவருக்கு 20 நிமிடங்கள் ஆகின்றன. அவற்றில் அழுத்தமான மூங்கில் குச்சிகள் கட்டப்படுகின்றன

PHOTO • Sanket Jain

முரளிதருடன் திருமணமானதிலிருந்து அவரது குடும்பத் தொழிலான இக்கைவினை தோரணத்தை ஷோபா செய்து வருகிறார்

PHOTO • Sanket Jain

வீட்டு வேலைகளை முடித்தபிறகு, ஜெலடின் அட்டைகளை காகித குஞ்சங்களாக ஷோபா மாற்றுகிறார்

PHOTO • Sanket Jain

முரளிதரும், ஷோபாவும் தோரணத்தை அலங்கரிக்க பயன்படுத்தும் காகித குடைகளை 100க்கும் அதிகமாக வாங்கி வைத்துள்ளனர்

PHOTO • Sanket Jain

மக்கள் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் முரளிதர் தனது வீட்டின் வெளிச்சுவரில் தோரணங்களை காட்சிப்படுத்த தொங்கவிட்டுள்ளார்

PHOTO • Sanket Jain

முரளிதர் தனது தந்தையிடமிருந்து இத்திறனை கற்றது போன்று அவரது பிள்ளைகள் தோரணம் செய்ய கற்பதில் ஆர்வம் காட்டவில்லை

PHOTO • Sanket Jain

திருமணச் சடங்குகளின்போது மணமகனும், மணமகளும் அணியும் கிரீடம் போன்ற ஆபரணமான பாஷிங்காவும் ஜவாஹிர்கள் செய்கின்றனர்

PHOTO • Sanket Jain

ரூ.150க்கும் விற்பனையாகும் ஒரு ஜோடி காகித பாஷிங்கா செய்ய அவருக்கு 90 நிமிடங்கள் ஆகின்றன. ஆர்டர்கள், சீசனைப் பொறுத்து அவர் விற்பனை செய்கிறார்

PHOTO • Sanket Jain

கிராம திருவிழாக்களின்போது உள்ளூர் தெய்வங்களுக்கு பாஷிங்கா காணிக்கை செய்யப்படுகிறது. இந்த நுட்பமான பொருட்களை சுமார் அறுபது ஆண்டுகளாக செய்து வரும் முரளிதரால் அடுத்த தலைமுறைக்கு இக்கலையை கடத்திச் செல்ல முடியவில்லை

தமிழில்: சவிதா

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha