பாமாபாய் அவரின் கடையில் அமர்ந்து ஒரு செருப்பை சரி செய்துக் கொண்டிருக்கிறார். செருப்புத் தைக்கும் இரும்பு அவரின் முன்னால் தரையில் இருந்தது. ஒரு செவ்வக மரக்கட்டையை ஆதரவாக வைத்துக் கொண்டு, திறந்த செருப்பை முனையில் தன் பெருவிரலால் அழுத்திப் பிடித்திருக்கிறார். பிறகு ஊசியை செருகி எடுத்து அதில் நூலை விட்டு வெளியே இழுக்கிறார். ஆறு இழுவைகளில் அறுந்திருந்த துண்டு தைக்கப்பட்டு விட்டது. வருமானம் ஐந்து ரூபாய்.

பாமாபாய் மஸ்தூத் ஒரு தோல் தொழிலாளர். செருப்பு தைப்பவர்.. வறுமையின் அருகே வாழ்கிறார். பல பத்தாண்டுகளுக்கு முன் அவரும் அவரின் கணவரும் மராத்வடா பகுதியின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் நிலமற்ற தொழிலாளர்களாக இருந்தனர். 1972ம் ஆண்டின் பெரும் பஞ்சம் மகாராஷ்டிராவை உலுக்கியபோது விவசாய வேலை இல்லாமல் போனது. வாழ்வாதாரங்களை வறட்சிக்குள் தள்ளியது. எனவே இருவரும் புனேவுக்கு இடம்பெயர்ந்தனர்.

சாலை அல்லது கட்டடக் கட்டுமானம் என எந்த வேலை வந்தாலும் அவர்கள் செய்தார்கள். ஒருநாள் வேலை அந்தக் காலக்கட்டத்தில் இரண்டிலிருந்து ஐந்து ரூபாய் வரை கூலி பெற்றுத் தரும். “நான் சம்பாதித்த எல்லாவற்றையும் கணவரிடம் கொடுத்தேன். அவர் மது குடித்து என்னை வந்து அடிப்பார்,” என்னும் பாமாபாய்க்கு தற்போது வயது 70. இறுதியில் கணவர் அவரை கைவிட்டுவிட்டு வேறொரு மனைவி மற்றும் குழந்தைகளுடன் புனே அருகில் வாழ்கிறார். “என்னைப் பொறுத்தவரை அவர் இருந்தாலும் செத்தாலும் ஒன்றுதான். அவர் என்னை விட்டுச் சென்று 35 வருடங்கள் ஆகிறது.” பாமாபாய்க்கும் இரு குழந்தைகளும் இருந்திருக்கும். ஆனால் பிறந்ததும் இறந்துவிட்டன. “என்னுடன் யாரும் இல்லை. எனக்கு எந்த ஆதரவமும் இல்லை,” என்கிறார் அவர்.

கணவர் சென்றபிறகு, ஒரு சிறு குடிசை அமைத்து செருப்பு தைக்கும் கடை உருவாக்கிக் கொண்டார் பாமாபாய். செருப்பு தைக்கும் திறனை தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டார். புனேவின் கர்வே சாலையிலுள்ள ஒரு சிறு சந்துக்குள் கடை இருக்கிறது. “நகராட்சி ஊழியர்களால் அழிக்கப்பட்டது. எனவே நான் இக்கடையை மீண்டும் கட்டினேன். அவர்கள் மீண்டும் வந்து உடைத்தார்கள்.”

நம்பிக்கையிழந்த பாமாபாய் அருகே இருக்கும் காலனிவாசிகளிடம் உதவி கேட்டார். “எனக்கு வேறெங்கும் செல்ல வழியில்லை என அவர்களிடம் கூறினேன். வேறெதையும் செய்யவும் முடியாது.” காலனிவாசிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பேசினர். அவரால் அங்கு தொடர்ந்து வேலை பார்க்க முடிந்தது.

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

இடது: ஓர் அறுந்த தோல்வாரை தைத்துக் கொண்டிருக்கிறார். வலது: வாடிக்கையாளர்களுக்காக அவரின் சிறு கடையில் காத்திருக்கிறார்

வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக சொல்கிறார் அவர். “ஒரு வாடிக்கயாளர் கிடைத்தால், ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை கிடைக்கும். யாரும் வரவில்லை என்றாலும் நான் இங்கேயே மாலை வரை அமர்ந்திருப்பேன். பிறகு வீட்டுக்குச் செல்வேன். இப்படித்தான் என் வாழ்க்கை இருக்கிறது. சில நாட்களில் 30 ரூபாயும் சில முறை ஐம்பது ரூபாயும் கிடைக்கும். பெரும்பாலும் ஒன்றும் கிடைக்காது.”

ஒரு புது காலணியை அவரால் உருவாக்க முடியுமா? “இல்லை, இல்லை. எனக்கு தெரியாது. அறுந்தவற்றை மட்டும் என்னால் சரி செய்ய முடியும். ஷூக்களுக்கு பாலிஷ் போட முடியும். காலணியின் குதிகாலை சுத்தியலால் அடிக்க முடியும்.”

சற்று தூரத்தில் இரண்டு ஆண்கள் செருப்பு தைக்கும் கடைகள் வைத்திருக்கின்றனர். அங்குக் கட்டணம் அதிகம். ஒவ்வொரு நாளும் 200லிருந்து 400 ரூபாய் வரை கிடைப்பதாக சொல்கின்றனர்.

ஒரு பழுப்பு நிற உபகரணப் பெட்டியைத் திறக்கிறார் பாமாபாய். மூடியின் உள்ளே சில பெண் கடவுள்களின் படங்களை ஒட்டியிருக்கிறார். மேலே இருக்கும் தட்டு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நூல்களும் ஆணிகளும் இருக்கின்றன. அதற்குக் கீழ் தோலுக்கான உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றை எடுத்து அவர் வெளியே வைக்கிறார்.

“உபகரணங்களின் புகைப்படங்களை நீங்கள் எடுத்தீர்கள். பெண் கடவுள்களின் புகைப்படத்தை எடுத்தீர்களா?” எனக் கேட்கிறார். அவர்களை மட்டும்தான் தனக்கானவர்கள் என அவரால் சொல்ல முடியுமெனத் தோன்றுகிறது.

PHOTO • Namita Waikar

இடது: பாமாபாயின் உபகரணப் பெட்டியும் கடவுளரும். வலது: உபகரணங்கள். மேல்வரிசையில் இடதிலிருந்து வலது: செருப்பு தைக்கு இரும்பு, தோல் மற்றும் செவ்வக மரக்கட்டை. கீழ்வரிசை, இடதிலிருந்து வலது: நூல்கள், இடுக்கி, ஊசி மற்றும் தோலையும் நூலையும் அறுப்பதற்கான கத்திகள்

அவரின் வேலை நாள் முடியும்போது, அவர் பயன்படுத்தும் தம்ளர் உள்ளிட்ட எல்லாமும் உபகரணப் பெட்டிக்குள் சென்றுவிடும். செருப்பு தைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு, மரத்துண்டு மற்றும் நொறுக்குத் தீனி, கொஞ்சம் பணம் இருக்கும் சிறு துணி யாவும் இறுக்கக் கட்டிய பைக்குச் சென்றுவிடும். பெட்டியும் பையும் எதிர்ப்புறத்தில் இருக்கும் ஒரு துரித உணவகத்துக்கு வெளியே இருக்கும் இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டு விடும். “இது போன்ற சின்னச் சின்ன வழிகளில் கடவுள் எனக்கு உதவுகிறார். என்னுடைய பொருட்களை அங்கே வைத்துக் கொள்ள அவர்கள் அனுமதிக்கிறார்கள்,” என்கிறார் அவர்.

பாமாபாய் ஷாஸ்திரி நகரில் வசிக்கிறார். அவரின் கடையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு. “ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ஒவ்வொரு மணி நேரம் நடக்கிறேன். வழியிலேயே அவ்வப்போது நின்று சாலையோரத்தில் எங்காவது அமர்ந்து வலி எடுக்கும் முதுகுக்கும் முட்டிகளுக்கும் சற்று ஓய்வு கொடுப்பேன். ஒருநாள் ஆட்டோவில் சென்றேன். 40 ரூபாய் ஆகிவிட்டது. ஒருநாளின் வருமானம் போய்விட்டது.” துரித உணவகத்திலிருந்து உணவு கொண்டு செல்லும் டெலிவரி ஆட்கள் சில நேரங்களில் அவரை பைக்கில் கொண்டு சென்று இறக்கி விடுவார்கள்.

அவருடைய வீடு கடையை விட கொஞ்சம்தான் பெரிது. எட்டுக்கு எட்டடி அறை. மாலை 7.15 மணிக்கே உள்ளே இருட்டாக இருந்தது. ஒரே ஒரு எண்ணெய் விளக்கின் வெளிச்சம் மட்டும்தான். “கனகரா கிராமத்தில் எங்கள் வீட்டில் வைத்திருந்ததைப் போன்ற விளக்கு,” என்கிறார் அவர். மின்சாரம் கிடையாது. கட்டணம் கட்டாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது.

படுக்கையில்லாத இரும்புக் கட்டில் மட்டும் இருந்தது. கழுவியப் பாத்திரங்களைக் காய வைக்கவும் அந்தக் கட்டில் பயன்படுகிறது. சுவரில் ஒரு முறம் தொங்குகிறது. சமையல் மேடையில் சில பாத்திரங்கள் இருக்கின்றன. “என்னிடம் ஒரு அடுப்பு இருக்கிறது. ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் தீரும் வரை அதை நான் உபயோகிக்க முடியும். தீர்ந்த பிறகு அடுத்த மாதத்தில்தான் குடும்ப அட்டை கொண்டு மீண்டும் மண்ணெண்ணெய் வாங்க முடியும்.”

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

இடது: இல்லாத குடும்ப உறுப்பினர்களின் நினைவுகள் பாமாபாயின் கையில் பச்சைக் குத்தப்பட்டிருக்கின்றன. வலது: கறுப்புத் தோல் காலணியை சரி செய்கிறார் பாமாபாய்

பாமாபாயின் கையில் பெரிய அளவில் பச்சைக் குத்தப்பட்டிருக்கிறது. கடவுளரின் உருவங்களும் கணவர், தந்தை, சகோதரர், தாய், சகோதரி ஆகியோரின் பெயர்களையும் குடும்பப் பெயரையும் பச்சைக் குத்தியிருக்கிறார்.

பல வருட உழைப்பில் உழன்றபோதும் அவர் யதார்த்தத்தைப் புரிந்து சுதந்திரமாக இருக்கிறார். இரண்டு சகோதரர்கள் அவருக்கு நகரத்தில் இருக்கின்றனர். ஒரு சகோதரி கிராமத்தில் இருக்கிறார். இன்னொரு சகோதரி மும்பையில் இருக்கிறார். அவருடன் பிறந்த அனைவருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. அவரின் கிராமத்திலிருந்து உறவினர்கள் புனேவுக்கு வரும்போது அவ்வப்போது கடைக்கு வருவார்கள்.

“ஆனால் நான் அவர்கள் எவரையும் சென்று பார்த்ததில்லை,” என்கிறார் அவர். “என்னுடைய துயரத்தை யாருடனும் நான் பகிர்ந்து கொள்வதில்லை. என்னிடம் கேட்டதால்தான் உங்களிடமும் இவற்றை சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகில் எல்லாரையும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.”

கடையில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது ஒரு பெண் உள்ளே எட்டிப் பார்த்து சிறு பிளாஸ்டிக் பையைக் கொடுக்கிறார். பாமாபாய் புன்னகைக்கிறார். “சில நண்பர்கள் எனக்கு உண்டு. வீட்டு வேலை செய்யும் பெண்கள். அவர்கள் வேலை பார்க்கும் வீடுகளில் மிச்சமாவதை சில நேரம் எனக்குக் கொண்டு வந்துக் கொடுப்பார்கள்.”

ஒரு வாடிக்கையாளர் அவரின் கறுப்புத் தோல் ஷூக்களையும் இரண்டு ஜோடி விளையாட்டுக் காலணிகளையும் சரி செய்ய கொடுத்துச் செல்கிறார். ஒவ்வொன்றாக தைத்து அவற்றை வடிவத்துக்கு கொண்டு வருகிறார் அவர். பாலிஷ் போடுகிறார். வெறும் 16 ரூபாய்க்கு, பல காலமாக பயன்படுத்தப்பட்டு பழையதாய் மாறிப்போன அந்த விலையுயர்ந்த காலணிகளை பாமாபாய் புதிதாய் மாற்றியிருக்கிறார். அவற்றை சரிசெய்ததன் மூலம் புதிதாக ஒரு ஜோடிக் காலணியை வாங்குவதிலிருந்து அந்த வாடிக்கையாளரை காப்பாற்றியிருக்கிறார் பாமாபாய். அவருக்கு அது தெரிந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை அறுந்து போன செருப்புகளை சரி செய்து கொடுக்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Namita Waikar is a writer, translator and Managing Editor at the People's Archive of Rural India. She is the author of the novel 'The Long March', published in 2018.

Other stories by Namita Waikar
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan