பதுல் தலாயின் வாழ்விணையர் சந்திரன் இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. புதுடெல்லி, வசந்த் கஞ்சியில் உள்ள வங்காள மொகல்லாவில் சிறிய வீடு ஒன்றில் அவர் வசித்துவருகிறார். எருமைகளும் பசுக்களும் நிறைந்த தெருக்களைக் கடந்த பின்னரே அந்த இடத்துக்குச் செல்லமுடியும். பால் வியாபாரம், பால்பொருள் தொழிலின் மையமாக இருக்கிறது, இந்தப் பகுதி. மாட்டுச்சாண வாசனை ஊரையே தூக்கிவிடுவதைப்போல இருக்கிறது. மொகல்லாவில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குடியேறிய வங்காளிகளே!

இருபத்தாறு வயதுடைய பதுலின் வீட்டுச் சுவரில், பத்ரகாளி அவதாரத்தில் உள்ள துர்காதேவி படம் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவருடைய வாழ்விணையரின் ஒளிப்படமும் மாட்டப்பட்டுள்ளது. அவருடைய அண்மையப் படம் ஒன்று, மேசையின் மீது வைக்கப்பட்டு, அதற்கு முன்பு பத்தி எரிந்துகொண்டு இருக்கிறது.

PHOTO • Bhasha Singh

புதுடெல்லி, வங்காளி மொகல்லாவில் வசிக்கும் பதுல் தலாய், அவரின் கணவர் பணியாற்றிய அங்காடி வளாகத்திலிருந்து தொலைவில் இல்லை.

சந்தன் தலாய், 30, வசந்த் ஸ்கொயர் அங்காடி வளாகத்தில் ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி இருந்தார். தூய்மைப்பணியைச் செய்துதரும் ‘வேல்டு கிளாஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டட்’ எனும் நிறுவனத்தால் அமர்த்தப்பட்ட அலுவலகப் பராமரிப்புக் குழுவில் அவரும் ஒருவர். 2016 நவம்பர் 11-ம் நாளன்று சந்தனையும் இன்னொரு பணியாளரையும் அங்காடிவளாகத்தில் ஒரு கழிவுநீர்த் தொட்டியை தூய்மைப்படுத்துமாறு மேல்பொறுப்பாளர் கூறினார். சந்தன் முதலில் குழிக்குள் இறங்கினார், எந்தவிதப் பாதுகாப்பு கவசமும் இல்லாமல். நச்சு வாயு தாக்கி அவர் மயங்கவும், சக பணியாளரான இஸ்ரைல் அவரை மீட்பதற்காக உள்ளே குதித்தார். பாவம், அவரும் நச்சுவாயுத் தாக்குதலுக்கு ஆள்பட்டார். உடனே அங்கிருந்த காவலர் ஒருவர், கயிற்றின் மூலம் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கச்செய்தார் என ஊடகங்களில் செய்தி வெளியாகின. மருத்துவமனையில் போய்ச்சேர்ந்தபோது சந்தன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இஸ்ரைல் காப்பாற்றப்பட்டார்.

”தகவலைக் கேள்விப்பட்டதும் அங்காடிவளாகத்துக்கு ஓடினேன்” என்கிற பதுல், “ ஆனால், என்னை அவர்கள் உள்ளே விடவில்லை. சந்தனை போர்ட்டிஸ் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றுவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்கள். நூற்றுக்கணக்கான வங்காளி மொகல்லாகாரர்கள் மருத்துவமனையில் திரண்டுவிட்டிருந்தோம். எங்களை வெளியே துரத்திவிட்டார்கள். அவர் என்னுடைய வாழ்விணையர்; அவரை நான் பார்த்தாகவேண்டும் என மன்றாடினேன். என் மகனைக்கூட அவர்கள் விடவில்லை. ஏதோ எங்களைக் குற்றவாளிகளைப் போல அவர்கள் துரத்தினார்கள்.” என பழைய நிகழ்வுகளை நினைவுகூர்கிறார்.

காணொலி: ‘போனது போனதுதான்; அவரே போய்விட்டார்...’

”கடைசி தருணத்தில் அவரைப் பார்க்கமுடியாமல் போன வேதனை என்னை தொடர்ந்துவந்து துன்புறுத்தியபடி இருக்கிறது.” எனச் சொல்லும்போதே கலங்குகிறார், பதுல். ”என்னுடைய வாழ்விணையர் இந்த வேலையைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்” - குமுறுகிறார். கால முறைப்படி கழிவுநீர்த் தொட்டியை சந்தன் கழுவியாக வேண்டும் என்பதை அறிந்ததும், அவரை அந்த வேலையிலிருந்து விலகிவிடுமாறு பதுல் கூறினார். ஆனால், கழிவுநீர்த் தொட்டியைக் கழுவ மறுத்தால், வேலை போய்விடலாம்; அதற்கடுத்து இன்னொரு வேலையைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என சந்தன் நினைத்தார். அதனால் பதுலின்  வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை.

” அவரை தொட்டியைக் கழுவுமாறு யார் சொன்னார்களோ அவரைக் கைதுசெய்யவேண்டும். அந்தத் தொட்டிகளுக்குள் நச்சு வாயு இருப்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் என் வாழ்விணையரை அதற்குள் இறங்குமாறு கூறியிருக்கிறார்கள். ஏன்? கழிவகற்றவும் தொட்டியைக் கழுவவும் எங்கள் சாதியினரை மட்டும் ஏன் அமர்த்துகிறார்கள்?  வளர்ச்சி எனும் பெயரால் இந்தியாவில் சும்மா பெருங்கூச்சல் போடுகிறார்கள்; ஆனாலும் அங்காடிவளாகங்களில் மனிதர்களைப் பயன்படுத்தியே கழிப்பிடங்களையும் சாக்கடைக் குழிகளையும் தூய்மைப்படுத்துவது ஏன்? கழிவுதொட்டிகளுக்குள் இன்னும் ஏன் மனிதர்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்? என்னுடைய கேள்விகளுக்கு பதில் வேண்டும்?”

PHOTO • Bhasha Singh

சந்தன் தலாய் எப்படி இறந்துபோனார் என்றதற்கு, ’அந்தத் தொட்டிகளுக்குள் நச்சு வாயு இருப்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்; ஆனாலும் என் வாழ்விணையரை அதற்குள் இறங்கச் செய்தார்கள்’ என்கிறார், பதுல்.

நல்ல வேளை, நீதிக்கான போராட்டத்தில் பதுல் மட்டும் தனியாக விடப்படவில்லை. அதனால் அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கவில்லை. பதுல் வீட்டுவேலை செய்யும் இடத்தில் வீட்டு உரிமையாளரான மென்பொருள் பணியாளர், முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்வதற்கு உதவிசெய்தார். சில அரசுசாரா நிறுவனங்களும் மொகல்லா உறவினர் ஒருவரின் வீட்டு உரிமையாளரும் பதுலுக்கு ஆதரவாக நின்றனர்.

"சடலக் கூறாய்வானது, உண்மையை - நச்சுவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுதான் இறப்பு நேர்ந்தது என்பதை உறுதிப்படுத்திவிட்டது” என்கிறார், பதுலின் உறவினரான தீபாலி தலாய். “சந்தன் வேலை செய்த நிறுவனம், மின்சாரம் தாக்கிதான் இறப்பு நேர்ந்ததாகச் சொல்லி, கூறாய்வு அறிக்கையைத் திரிக்கப்பார்த்தது. ஆனால், நடந்தது என்ன என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். வீட்டுவசதிக் குடியிருப்புகளில் உள்ள சாகிபுகள் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்குத்தொடுப்பதாகச் சொன்ன பிறகே, அவர்கள் அறிக்கையைச் சரிசெய்தார்கள். ” எனக் குமுறிய தீபாலி, ”இந்த அரசுக் கட்டமைப்பு எங்களைப் பற்றி அக்கறை இல்லாததாக இருக்கிறது; டெல்லியிலேயே இப்படி நடக்கிறது என்றால், இன்னும் தொலைவில் தள்ளியிருக்கும் கிராமங்களில் எல்லாம் நிலைமை எப்படியானதாக இருக்கும் என யோசித்துப் பார்க்கமுடியும்” என ஒரு கணம் யோசிக்கவைக்கிறார்.

பல மாதங்கள் விடாமல் கவனத்தோடு இருந்ததைத் தொடர்ந்து, சந்தனின் நிறுவனம் சார்பில் அவரின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. பதுலுக்கு ஒரு வேலை அளிக்கப்படும் என்று உறுதியும் அளிக்கப்பட்டது. (1993-ஆம் ஆண்டு முதல் கழிப்பிட/ கழிவுநீர்க் குழிகளைக் கழுவும்போது உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 இலட்சம் வழங்கப்பட வேண்டும் என 2014 மார்ச் 27 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.)

கொடுமை என்னவென்றால், எது சந்தனின் உயிரைப் பறித்ததோ அதேமாதிரியான தூய்மைப்படுத்தும் வேலையையே பதுலுக்கும் கொடுத்தார்கள்.

” இறுதியாக...”....” சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. என் இணையரை என்னால் திரும்பக் கொண்டுவந்துவிட முடியாது. நான் விரும்புவதெல்லாம், மற்ற யாரும் இப்படியொரு சோதனையை அனுபவிக்கவேகூடாது என்பதுதான். ஒரு குழிக்குள்ளே யாருடைய வாழ்க்கையும் முடிந்துவிடக்கூடாது.” என்கிறார், பதுல், தீர்க்கமாக.

பதுலும் சந்தனும் பகாடி எனும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். சுந்தரவனப் பகுதியான, மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்குனா மாவட்டத்தின் கண்டிக்பூர் கிராமத்திலிருந்து டெல்லிக்கு வந்தவர்கள். அந்த அங்காடிவளாகத்தில் சந்தனுக்கு ரூ.9,800 ஊதியமாகவும் ரூ.3,500 அறை வாடகைக்குமாக தந்தார்கள்.

அருகிலுள்ள பெருவீடுகளில் தான் பார்த்துவந்த சமையல் வேலைக்குப் போக முடியாமல் மனச்சோர்வுடன் இருக்கிறார், பதுல். மறுபடியும் சுந்தரவனப் பகுதிக்குத் திரும்பிச்செல்ல முடியாது என்பது அவருக்குத் தெரியும். அங்கே போகலாம் என்றால் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. அவருடைய மாமியார், மைத்துனர்கள் அடங்கிய மொத்த குடும்பமே 2 - 2.5 பிகா (ஏறத்தாழ 0.6 ஏக்கர்) நிலத்தை வைத்து ஏதோ சமாளித்துவருகிறது, என்பதுதான்.

பதுலின் ஒன்பது வயது மகன் அமித், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமைச் சுவைத்தபடி பள்ளியிலிருந்து வீடுதிரும்புகிறான். வசந்த் பொதுப்பள்ளியில் அவன் யு.கே.ஜி. படிக்கிறான். பீசா, பர்கர் வாங்கித்தருவதற்காக தன் தந்தை அந்த அங்காடிவளாகத்துக்கு அழைத்துச்சென்றதை அவன் நினைவுறுத்துகிறான். அதைப்போலவே, அந்த நவம்பர் மாதத்தின் ஒரு நாளில், அவனுடைய அப்பா தலைமுதல் கால்வரை தையல் போடப்பட்ட ஒரு சடலமாக வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையும் சொல்கிறான்.

PHOTO • Bhasha Singh

அமித், 9, தன் தந்தையின் ஒளிப்படத்துடன்: ‘ நான் ஒரு பொறியாளராக ஆகி, கழிவுக் குழிகளை மனிதர்கள் கழுவுவதைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பேன்’ .

”அவர்கள்தான் என் அப்பாவை அசுத்தமான குழிக்குள் இறக்கிவிட்டதால்தான், அவர் அதில் இறந்துபோனார்” என சீற்றத்தை வெளிப்படுத்திய சிறுவன் அமித், ” அதற்குப் பிறகு அவர்கள் பாதுகாப்பு கயிற்றுப்பட்டையை வைத்தார்கள்.. சும்மா மக்களை ஏமாற்றுவதற்காக. அதை முன்பே வைத்திருந்தால் அது அழுக்காகி இருக்கும்; அதன் மூலம் அப்பா குழியிலிருந்து ஏறி மேலே வந்திருப்பார். என்ன, அந்த கயிற்றுப்பட்டை அழுக்காகியிருக்கும்.” என்று கூறினான்.

அமித், முன்கூட்டியே சாதியத் தப்பெண்ணங்களை நோக்கி வளர்ந்திருக்கிறான். “பள்ளிக்கூடத்தில் அப்பாவின் இறப்பைப் பற்றி என் நண்பர்கள், முதலில், ’ஏன் அப்பா அந்த அசுத்தமான வேலையைச் செய்துகொண்டிருந்தார்’எனக் கேட்டார்கள். அது ஏன் என்பதற்கான காரணம் எனக்குத் தெரியாது; ஆகையால் அமைதியாக இருந்துவிட்டேன்.” என்கிறான், அமித்.

ஒரு செல்பேசியை எடுத்து அதிலுள்ல தன் அப்பாவின் படங்களை என்னிடம் காட்டுகிறான். ஒவ்வொரு படத்தைக் காட்டும்போதும் அதைப் பற்றிய ஒரு கதையைச் சொல்கிறான். ” அப்பா குழிக்குள் இறங்கிய பிறகு, அவருடைய சட்டைகளை அவிழ்த்துவிடுவார். செல்பேசியையும் அவற்றோடு வைத்துவிடுவார். அவர் இறந்தபிறகு அதை நான் எடுத்துக்கொண்டேன்.” என விவரித்தவன், “ ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் அப்பாவின் படங்களைப் பார்ப்பேன்; பிறகு செல்பேசியில் கொஞ்ச நேரம் விளையாடுவேன்” என்றான்.

காணொலி: ‘அப்பா, போயிருக்கக்கூடாது...’

தாவிக் குதித்து சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு சிவப்பு காலடித்தடத்தைச் சுட்டிக்காட்டுகிறான், அமித். அது, சந்தன் இறந்த பிறகு எடுக்கப்பட்ட அவருடைய காலடித்தடம். நல்ல காரியங்களில் கை, கால்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் ஆல்டாவின் சிவப்பு, அது. காலடித்தடமானது, இறந்துபோனவர்களின் ஆன்மா கூடவே இருக்கும் என்பதி உறுதிப்படுத்துவதாக அவர்களின் சமூகத்தில் ஒரு ஐதீகம் இருக்கிறது. “இதோ பாருங்கள், அப்பா இருக்கிறார்.” என்கிறான் அமித்.

ஐம்பது அறுபது பேராவது எங்கள் குடும்ப உறவுகள் டெல்லியில் இருப்போம் என்று சொல்கிறார், பதுல். மொத்த கிராமங்களும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. எல்லாரும் ஏதோ ஒரு வகையில் தூய்மைப்பணியில் பெரும்பாலும் ஒப்பந்தப் பணியாளராக இருக்கிறார்கள். கிராமத்தின் சாதியத்திலிருந்து அவர்கள் தப்பிவிட்டிருக்கிறார்கள்; ஆனால் அந்த அடையாளம் அவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மட்டுப்படுத்திதான் வைத்திருக்கிறது. ‘உள்ளகப் பராமரிப்பு’ என்பது சும்மா நைச்சியமான ஒரு பேச்சு, அவ்வளவுதான்; அவர்களின் வாழ்க்கை நிலைமையை அது மாற்றிவிடவில்லை.

பதுலின் தந்தை பிரதீப், டெல்லியின் சித்தரஞ்சன் பூங்காவில் நீண்ட காலம் குப்பை மற்றும் கழிவகற்றும் பணியில் இருந்துவருகிறார். சந்தனின் அண்ணன் நிர்மலும் சகோதரி சுமித்ராவும் அவர்களுக்கு முன்னரே டெல்லிக்கு வந்துவிட்டவர்கள். அவர் இப்போது இறைச்சி மற்றும் மீன் கடையை நடத்திவருகிறார்.

”மனிதக்கழிவகற்றல் வேலை இன்னும் எந்தத் தடையுமில்லாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.” என்கிற தீபக், “ அது நிறுத்தப்படவேண்டும். அவ்வப்போது சாவு ஏற்பட்டால் மட்டுமே அது ஒரு பிரச்னையாக செய்திகளில் அடிபடுகிறது. இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதற்கு யாராவது சிலர் செத்துப்போக வேண்டுமா?”எனக் கேட்கிறார்.

PHOTO • Bhasha Singh

’சாதிதான் எல்லாமே’..’ என் இணையரை நான் உயிரோடு திரும்பக் கொண்டுவந்துவிடமுடியாது. மற்ற யாருக்கும் இப்படியான சோதனை நேர்ந்துவிடக்கூடாது என்பதே என் விருப்பம்” என்கிறார் பதுல்.

வங்காள மொழிமூலம் 8ஆம் வகுப்பு படித்திருக்கும் பதுல், டெல்லியிலேயே வாழ்க்கையைத் தொடர்வது எனத் தீர்மானித்திருக்கிறார். தன் மகனை பெரிய மனிதன் ஆக்கவேண்டும் என்பது அவரின் அவா.

பெருக்கிக் கூட்டும் வேலையில் அவனை விட்டுவிடக்கூடாது என்பதில் பதுல் உறுதியாக இருக்கிறார். சாதியத்தின் கட்டுத்தளைகளை உடைப்பதில் என் கடைசி மூச்சுவரைக்கும் போராடுவேன் என அறிவிக்கையைப் போலச் சொல்கிறார்.

பின்குறிப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கட்டுரையாளர் சந்தித்துவிட்டு வந்த சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த அங்காடிவளாகத்தில் பதுல் தன் கணவரின் வேலையைப் பெற்றுக்கொண்டார். அவர் அந்த எண்ணத்தையே வெறுத்தாலும்கூட, தன்னையும் தன் மகனையும் காப்பாற்றுவதற்காக அதை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

தமிழில்: தமிழ்கனல்

Bhasha Singh

Bhasha Singh is an independent journalist and writer, and 2017 PARI Fellow. Her book on manual scavenging, ‘Adrishya Bharat’, (Hindi) was published in 2012 (‘Unseen’ in English, 2014) by Penguin. Her journalism has focused on agrarian distress in north India, the politics and ground realities of nuclear plants, and the Dalit, gender and minority rights.

Other stories by Bhasha Singh
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal