எண்ணற்ற வங்கிகள் 2010-ல் டிராக்டர் கடன்களை வாரி வழங்கின. அவுரங்காபாத் மாவட்ட கன்னட் தாலுகாவை சேர்ந்த ஹீராபாய் பகீரா ரதோட்டும் அந்தக் கடன் புயலில் சிக்கினார். டிராக்டர் விற்கும் சேல்ஸ்மேன் ,’இந்த டிராக்டர் கடன் வாங்குறதும், திருப்பிக் கட்டுறதும் ரொம்பச் சுலபம்’ என்றதாக ஹீராபாய் நினைவுகூர்கிறார். ஹைதராபாத் ஸ்டேட் வங்கி அவருக்கு உடனடியாகக் கடனை வழங்கியது. பஞ்சரா ஆதிவாசியான ஹீராபாயின் கணவர் ஓய்வுபெற்ற வனக்காவலர். அவர்களின் பெரிய குடும்பத்துக்கு 3.5 ஏக்கர் நிலம் இருந்தது. “எங்களின் நிலத்தில் உழுவதோடு, அருகில் உள்ள விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டும் வருமானம் ஈட்டலாம் என எண்ணினோம்.” என்கிறார் ஹீராபாய்.
அவருக்கு 5.75 லட்சம் ரூபாய் 6.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டரை கடனாக வாங்க தரப்பட்டது. வட்டி 15.9%. ஏழு வருடங்களில் கடனை அடைக்க வேண்டும் என்கிற விதியோடு கடன் அவருக்குத் தரப்பட்டது. ‘என் வாழ்க்கையின் மிக மோசமான முடிவு இது.’ எனக் கசப்புக் குறையாமல் ஒட்டுமொத்த கடன் விவரங்களைக் காட்டியபடி சொல்கிறார் ஹீராபாய். இந்த வருட மார்ச் வரை கிட்டத்தட்ட ஏழரை லட்சம் ரூபாய் கடனாகச் செலுத்திய ஹீராபாய் திவாலாகி நின்றிருக்கிறார். ஒரே தவணையில் 1.25 லட்சத்தைச் செலுத்தினால் போதும் என்றது வங்கி. தன்னுடைய உறவினர்களிடம் கடன் வாங்கி அந்த டிராக்டர் கடனை அடைத்து உள்ளார் ஹீராபாய். “என் பிள்ளைங்க தலையில இந்தச் சுமையைக் கட்ட வேணாம்ன்னு நானே அடைச்சுட்டேன்.” என்கிறார்.
பெரிய அளவில் சொத்துக்களோ, வருமானமோ இல்லாத பன்ஜாரா பழங்குடியினரான ஹீராபாய் 5.75 லட்சம் கடனுக்குக் கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாயை அடிமையைப் போலக் கட்ட நேர்ந்தது. வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் மாரத்வாடா பகுதியில் ஹீராபாயின் நிலம் அமைந்திருக்கிறது. விவசாயம் பெருமளவில் சீர்குலைந்துள்ள நிலையில், “எங்கள் வயல்வெளியை தாண்டி டிராக்டருக்கு பெரிய வேலையில்லை.” என்று ஆயாசப்படுகிறார். இப்படி எண்ணற்ற ஹீரபாய்க்கள் அவுரங்காபாத் மாவட்டத்திலும், நாடு முழுக்கவும் உள்ளார்கள். இன்னும் பலர் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தத்தளிக்கிறார்கள். அதுவும், கடனால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பெருமளவில் உள்ள மாநிலத்தில் இது முக்கியத்துவம் பெறுகிறது. 2005-06 காலத்தில் துவங்கி இன்றுவரை மாரத்வாடா பகுதியில் மட்டும் ஹைதராபாத் ஸ்டேட் வங்கி இப்படி ஆயிரம் டிராக்டர் கடன்களை வழங்கியுள்ளது.
“வங்கிகள் அப்பொழுது டிராக்டர் கடன்களை வாரி இறைத்தன.” என்கிறார் அகில இந்திய மகாராஷ்டிரா வங்கித் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தேவிதாஸ் துலிஜாபுர்கர். முன்னணி கவனம் கோரும் துறைக்கான கடனளிப்பு (‘priority sector lending’ ) இலக்கை அடைய வேண்டியிருப்பதால் இந்தக் கடன்களை விவசாயக் கடன்களாகக் காட்ட முடியும். இப்படிப்பட்ட கடன்சுமையைத் தாங்கும் திராணியற்ற பல மக்களுக்கு அநியாய வட்டியில் கடன் வழங்கினார்கள். ஹீராபாய் கடனை முழுமையாகச் செலுத்திவிட்டார். தவணைகளை ஒழுங்காகச் செலுத்த முடிந்தாலும், ஒரே தவணையில் ஒட்டுமொத்த கடனை அடைக்கப் பலரால் முடிவதில்லை. இன்னும் பலரால் தவணைகளைக் கூடத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை.” என்கிறார் தேவிதாஸ். கன்னட் தாலுகாவில் உள்ள நாற்பத்தி ஐந்து கடன் பெற்ற மக்களைப் பற்றிய விவரங்களை ஒரே ஒரு ஹைதராபாத் ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து பெற்றோம். இம்மக்கள் மட்டும் 2.7 கடன் நிலுவை வைத்துள்ளார்கள். ஒரே ஒரு சிறிய நகரின் ஒற்றை வங்கியில் இவ்வளவு கடன் என்றால் நாடு முழுக்கப் பல்லாயிரம் பேர் பல்வேறு வங்கிகளில் எவ்வளவு கடனோடு இருக்கிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளலாம்.
வாகனக் கடன்கள் நகரங்களிலும் பெருமளவில் வழங்கப்படுவதை இந்த நெடிய வரிசை புலப்படுத்துகிறது. அந்தக் கேட்பாரற்று கிடக்கும் இடைவெளி டிராக்டர் கடன் வாங்கியவர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்துகிறதோ?
ஹீராபாய் தனக்கான கடனை 15.9% வட்டியில் பெற்ற அதே சமயத்தில் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத்தில் இன்னொரு கடன் மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்நகரின் மேல்தட்டு தொழிலதிபர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பிற மேட்டுக்குடியினர் ஆகியோர் அக்டோபர் 2010-ல் ஒரே தினத்தில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்களுக்கு ‘அவுரங்காபாத் குழு’ என்கிற அமைப்பின் பெயரால் கடன் பெற்றார்கள். (இந்தக் கடன் பெற்றவர்களில் ஒருவர் அவுரங்காபாத் கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாகப் பின்னர் வென்றார்). இந்த நகர்வு அவுரங்காபாத் பொருளாதார வளர்ச்சியில் தன்னுடைய இருப்பை அறிவிக்கும் பொருட்டு நிகழ்ந்த ஒன்று என்று சிலர் சொன்னார்கள். “இந்தக் கணத்தில் இருந்து அவுரங்காபாத் ‘உலக முதலீட்டு வரைபடத்தில்’ தன் முத்திரையைப் பதித்ததாக” சிலாகித்தார்கள். அன்றைக்கு உலக வரைபடத்தில் தங்களின் வருகையைச் சமிக்ஞை செய்யும் பொருட்டு அவர்கள் பெற்ற ஒவ்வொரு காரின் மதிப்பும் 30-70 லட்சங்கள். ஊடக செய்திக்குறிப்புகள் ஒரே நாளில் 150 ஆடம்பர கார்களை வாங்குவதால் தள்ளுபடிகளைப் பென்ஸ் நிறுவனம் வழங்கியதாகத் தெரிவித்தன. மிக முக்கியமாக, அப்பொழுதைய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரின் தலையீட்டில் அவுரங்காபாத் பாரத் ஸ்டேட் வங்கி இந்த 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனையில் மூன்றில் இரண்டு பங்கை கடனாக வழங்கியது. அதற்கு அது விதித்த வட்டி விகிதம் 7% !
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்பிரெட் ஆல்பர் ஊடகங்களில் இந்தியாவின் நகர்ப்புற தொகுப்பில் இரண்டாவது., மூன்றாவது அடுக்கில் இருக்கும் நகரங்களில் அளவற்ற பொருளாதார வலிமையை மெச்சினார் எனச் செய்தி வெளியாகியது. “ஒரே நாளில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார் விற்பனையின் மூலம் இந்நகர் தீரம், உத்வேகம், மாற்றத்தின் ஒட்டுமொத்த கலவையாக எழுந்து நிற்கிறது.” என்றார்.
அவுரங்காபாத்தின் ஹீராபாய்க்களின் நிலைமையோ வேறு. இருதரப்பும் வாகன கடன்கள் பெற்றன. இருதரப்பும் பொதுத்துறை வங்கிகளில் இருந்தே கடன் பெற்றன. எனினும், ஹீராபாய் நகரின் மேட்டுக்குடியினரை விட இரு மடங்கு அதிக வட்டியை கட்டினார். ஒருவேளை அவுரங்காபாத் நகரை ‘உலக முதலீட்டு வரைபடத்தில்’ இடம்பெற வைக்க அவர் எந்தப் பங்களிப்பையும் தராதது காரணமாக இருக்கலாம். 12.5- 15.9% வட்டி விகிதத்தில் கடன் பெறுபவர்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள், பழங்குடியினராகவே உள்ளார்கள். இந்த வகைமையில் பென்ஸ் கார் வாங்கியவர்களைக் காண்பது அரிதிலும் அரிது
வசந் தல்பத் ரதோட் , எனும் தெல்வாதிதண்டா காலனியை சேர்ந்த பன்ஜாரா ஹைதராபாத் ஸ்டேட் வங்கிக்கு செலுத்திய கடன். 7.53 லட்சம் ரூபாய். (இதில் ஒரு தவணையில் செலுத்திய 1.7 லட்சம் அடக்கம்). அதே ஆதிவாசி குழுவை சேர்ந்த, அம்பாதண்டாவை சேர்ந்த அமர்சிங் முகராம் 11.14 லட்சத்தைச் செலுத்தவில்லை. அவர் இதுவரை ஒரு ரூபாயும் கட்டவில்லை, எப்பொழுதும் அவரால் கட்டமுடியும் எனத் தோன்றவில்லை. அவரின் வீட்டுக்கு நாங்கள் சென்ற பொழுது அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களோ அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்று தைரியமாகப் பொய் சொன்னார்கள். வங்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இருப்பதாகச் செய்தி கசிந்துவிட்டது. அவரின் வீட்டில் எந்த மதிப்புமிக்கச் சொத்தோ, ஏன் டிராக்டரோ காணப்படவில்லை. அதிகார பலம் பொருந்திய வேறொரு நபர் ஏழையின் பெயரில் கடன் பெறுவது சமயங்களில் நடைபெறுகிற ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக இது இருக்கக்கூடும். இந்தக் கன்னட் பகுதியின் நாற்பத்தி ஐந்து கடனாளிகளைப் போலப் பிற தாலுகாக்கள், கிளைகளில் உள்ள கடனாளிகளின் பட்டியலையும் பெற்றோம்.
“இந்தக் கடன்கள் எதுவும் வாராக்கடன்களாக அறிவிக்கப்படவில்லை” என்கிறார் துல்ஜாபுர்கர். “இந்தக் கடன்கள் ஒட்டுமொத்தமாகப் பல கோடிகளில் இருக்கும். இவற்றைச் செலுத்தப்படக்கூடிய கடன்களில் ஏட்டளவில் வங்கிகள் வைத்திருக்கும். சமயங்களில் ஒரு பைசா கூடக் கட்டப்பட்டு இருக்காது. பணம் செலுத்தவேண்டிய கெடுவும் முடிந்து போயிருக்கும். எனினும், திரும்பவரக்கூடிய சொத்தாக அதைப் பட்டியலிட்டு இருப்பார்கள். ஒரு கட்டத்தில் உண்மை வெளிப்படும்.” என்கிறார். சமயங்களில் முகவர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரிடமும் விவசாயிகள் சிக்கிக்கொள்கிறார்கள். “வங்கிக்கடன்கள் ட்ராலி, ட்ராக்டர், இதர பாகங்கள் ஆகியவற்றுக்குச் சேர்த்தே தரப்பட்டிருக்கும். தரகர்கள் சத்தமே இல்லாமல் வெறும் டிராக்டரை மட்டும் விவசாயிகள் தலையில் கட்டிவிடுவார்கள்.” என்று அதிரவைக்கிறார் துல்ஜாபுர்கர்.
பென்ஸ் பெற்றவர்கள் குழுவும் கடனை கட்டமுடியாமல் தவிக்கின்றன என்கிறார்கள் வங்கி ஊழியர்கள். “எனவே இவர்கள் மீண்டும், மீண்டும் காரை இரண்டு, மூன்று அதற்கு மேற்பட்ட முறை விற்றுக் கடனடைப்பதும் உள்ளது.” மேலும் ஓரிரு முதலாளிகள் தள்ளுபடி, குறைந்த வட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி உடனே காரை விற்று லாபம் பார்த்துவிட்டார்கள் என்றார் இன்னொரு வங்கி அதிகாரி. “
2004-14 காலத்தில் டிராக்டர் உற்பத்தி மும்மடங்கு பெருகியது.தொழிற்துறை தரவுகள் 2013-ல் ஒட்டுமொத்த உலக டிராக்டர் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக 619,000 டிராக்டர்களை உற்பத்தி செய்ததாகத் தெரிவிக்கின்றன. ஊரக வளர்ச்சியின் கண்ணாடியாக, ஊரக இந்தியா எப்படிச் செயல்படுகிறது என்பதன் முக்கிய அளவுகோலாகப் பலர் இவற்றைக் கண்டார்கள். சில பிரிவு மக்களின் வருமான வளர்ச்சி இந்த விற்பனைக்கு ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், கண்மூடித்தனமாக வழங்கப்பட்ட அதிக வட்டி கடன்களும் இதற்குக் காரணம். சமூக, பொருளாதார, ஜாதி கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுவதைப் போல வெறும் எட்டு சதவிகித கிராமப்புற வீடுகளின் அதிகபட்ச வருமானம் ஈட்டுபவர் 10,000 ரூபாய்க்கு மேலே சம்பாதிக்கிறார். டிராக்டர் வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவானதாகும். எனினும், சில பொருளாதார மேதைகள், பத்தி எழுத்தாளர்கள் ஆகியோருக்கு டிராக்டர் விற்பனை ஊரக இந்தியா எப்படிச் செயல்படுகிறது என அறிவிக்கும் நம்பத்தகுந்த அளவுகோலாகும். இப்பொழுது அவுரங்காபாத்தில் உள்ள தரகர்கள் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனையில் ஐம்பது சதவிகித வீழ்ச்சி என்று அறிவித்தால் ‘ஊரகப் பெருந்துயரத்தின்’ குறிப்பிடத்தகுந்த அளவீடு என்று இந்தக் கணினிக்குள் கள யதார்த்தத்தைக் கணிக்கும் மேதைகள் அறிவிக்கிறார்கள்
மெர்சிடஸ் பென்ஸ் எனும் ஆடம்பர பொருளை போல அல்லாமல் டிராக்டர் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் கருவி என்பது உண்மை. அதேசமயம், கடன்களால் வளர்த்தெடுக்கப்பட்ட டிராக்டர் விற்பனைக்காலமான 2004-14-ஐ ஊரக வளர்ச்சிக்காலமாக அறிவிப்பது, ஒரே நாளில் 150 பென்ஸ் விற்றதால் உலக முதலீட்டு வரைபடத்தில் அவுரங்காபாத் இடம்பெற்றதாக அறிவித்ததற்கு ஒப்பாகும். மாரத்வாடாவின் தனிநபர் வருமானம் 64,330 ரூபாய். இது மாநிலத்தின் மற்ற எந்தப் பகுதியைவிடவும் குறைவானது ஆகும். ஒட்டுமொத்த மாநில அளவை விட 40%-ம் மும்பையின் வருமானத்தைவிட 70%-ம் குறைவாகும்.
இன்னொரு புதிய வாராகடன் பிரச்சினை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆழமான குழிகளைத் தோண்டும் ஜேசிபிகளை மனித உழைப்புக்கு மாற்றாகப் பெருமளவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பயன்படுத்தி வருகின்றன.
ஒப்பந்ததாராரும், முன்னாள் அவுரங்காபாத் மாவட்ட குல்த்பாத் நகரசபை தலைவருமான ஹாஜி அக்பர் பெக் “எண்ணற்ற மக்கள் எக்கச்சக்க பணத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வரப்போகிறார்கள்.” என்கிறார். “என்னுடைய 19,000 மக்களைக்கொண்ட சிறிய நகரத்தில் முப்பது ஜேசிபிக்கள் (J.C. Bamford excavators) உள்ளன. மாநிலம் முழுக்க எவ்வளவு உள்ளனவோ? மாநிலத்தின் முன்னணி நீர் பாதுகாப்பு திட்டமான ஜல்யுக்த் ஷிவார் அபியான் முதலிய திட்டங்களில் இவையே பயன்படுத்தப்படுகின்றன. பெருமளவில் கடனை தனியார் வங்கிகள், வங்கி அல்லாத கடன் நிறுவனங்களிடம் இருந்து பெற்று 29 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள ஜேசிபிக்களை வாங்கியுள்ளார்கள். இந்த ஜேசிபியை முதன்முதலில் வாங்கிய சிலரில் நானும் ஒருவன். ஆனால், என்னுடைய கருவிகள், குடும்ப உறுப்பினர்களிடம் வாங்கிய கடன் ஆகியவற்றைக் கொண்டே அதை வாங்கினேன். வங்கியிடம் பெரிய அளவில் கடன் வாங்கவில்லை.” என்கிறார்.
“வங்கிக்கடன் தவணைகள், அதிகப் பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றைக் கட்டிய பிறகு லாபம் பெற மாதத்துக்கு ஒரு லட்சம் ஈட்டவேண்டும். இந்தப் பருவகாலத்தில் அது சாத்தியமே. பருவமழைக்காலம் முடிந்ததும் இவ்வளவு வருமானம் கிட்டாது. முப்பது என்ன, மூன்று ஜேசிபிக்களுக்குக் கூட என் ஊரில் வேலை கிடைக்காது. பிறகென்ன செய்வது? எந்த முன்அனுபவமும் இல்லாதவர்கள் ஜேசிபி போல இரு மடங்கு விலையுள்ள பொக்லைன் ஹைட்ராலிக் குழிதோண்டும் வண்டிகளை விலைக்கு வாங்குகிறார்கள். மீண்டும் கடன்கள் அவர்களை அமுக்கிவிடும். இந்தப் பகுதி முழுக்க இதுவே முகத்தில் அறையும் உண்மை. பெரிய இடது தொடர்புகள் உள்ள சில முதலாளிகள் மட்டும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நூறில் பத்து பேர் எங்களில் பிழைத்தால் அதிகம், மற்றவர்கள் எல்லாரும் திவால்தான்!” என்று முடிக்கிறார்.
மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் வாழும் ஹீராபாய் பன்ஜாரா எனும் நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
கன்னட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் நின்றபடி, “நீங்கள் ஏன் வங்கி அதிகாரிகளாக இருக்கக் கூடாது?” என்று தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். “என் கதி என்னாகும்?” என்று பயத்தோடு கேட்கிறார். இது 6.35 லட்சம் மதிப்புள்ள (இன்னமும் குறைவான மதிப்புக் கொண்டதாக இருக்கக்கூடிய) டிராக்டருக்கான 5.75 லட்சம் கடனுக்கு 9 லட்சம் ரூபாயை வட்டியோடு கட்டிய பிறகு அவருக்கு ஏற்பட்டிருக்கும் கவலை. “இன்னமும் நான் எதாச்சும் கட்டணுமா?” என்று அவர் தீராக்கவலையோடு கேட்கிறார். நாங்கள் “நீங்கள் கடனுக்கான விலைக்கும், அதற்கு மேலாகவும் கட்டிவிட்டீர்கள்.” என்று சொல்லி தேற்றுகிறோம்.
(தமிழில்: பூ.கொ.சரவணன்)
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர். அவரைத் தொடர்பு கொள்ள @PUKOSARAVANAN
பி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர். ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: @PSainath_org
(Translation: P. K. Saravanan)
P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings intoTamil. He can be reached at @PUKOSARAVANAN