முகமது ஷமீம் அஃப்லதூன் என்கிற இனிப்பை பிகாரின் சமஸ்டிப்பூர் மாவட்டத்தின் கரஜ் (தின்மன்பூர்) கிராமத்திலிருக்கும் தன் குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல நினைக்கிறார். “மும்பையிலேயே சிறந்த மிட்டாய் இது. 36 மணி நேர பயணத்தில் கெட்டுப் போகாது,” என்கிறார் அவர். கரஜ்ஜுக்கு அவர் சென்று கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிச் செல்வதற்கென சில வாரங்களாகவே தயாராகிக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவி சீமா காதுன் ‘பம்பாய் பாணி உடை’ (சல்வார் கமீஸ்) ஒன்றை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். தலைக்கு வைக்கும் எண்ணெய், ஷாம்பூ, முகப்பூச்சு க்ரீம் போன்றவற்றுடன் வெளியே சொல்வதற்கு அவர் வெட்கப்படும் பொருள் ஒன்றையும் கூட வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.

தரையில் அமர்ந்துகொண்டு ஷமீம் வேகமாக ப்ளாஸ்டிக் இலைகளையும் பூக்களையும் மரக்கட்டைகளால் பிடிக்கப்பட்டிருக்கும் துணியில் நெய்கிறார். மத்திய மும்பையில் இருக்கும் இந்த கடையில் அவர், மும்பைக்கு ஜரிகை வேலை செய்ய வந்த காலம் தொடங்கி, கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வேலை பார்க்கிறார்.

இந்த பட்டறையில், பைகளும் துணிகளும் கம்பளங்களும் சிறிய அறையின் ஒரு பக்க அலமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. 400 சதுர அடி அறையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கும் 35 தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து ஜரிகை பின்னுகிறார்கள். அவர்களில் பலர் அதே அறையில் இரவு தூங்கி விடுகிறார்கள்.  இருக்கும் ஒரு காற்றாடியும் கோடை காலத்தில் போதுவதில்லை. புன்னகையுடன் ஷமீம், ‘அறையில் இருக்கும் ஒரே மேஜை காற்றாடியின் அருகே அனைவரும் தூங்க விரும்புகிறார்கள்,” என்கிறார்.

பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலப்பு உலோக இழைகளால் ஜரிகை செய்யப்படும். இப்போது அவை தாமிரம் மற்றும் இன்னும் பல மலிவான கலப்பு உலோகங்களாலும் பளபளப்பான ப்ளாஸ்டிக் பொருட்களாலும் கூட செய்யப்படுகிறது. பெரிய கடைகள் மற்றும் வடிவமைப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் வேலைகளை பொறுத்து மஹிம் கடையில் நெசவாளர்கள் உலோக நூல்களாலும் ஜரிகைகள் நெய்கின்றனர்.

40 வயதாகு ஷமீம் இந்த சிறிய அறையை நோக்கிய பயணத்தை 15 வயதில் தொடங்கினார். ஐந்தாம் வகுப்பு வரை ஓர் உருது மொழி வழி பள்ளியில் படித்திருக்கிறார். தந்தை முகமது சஃபிக்குக்கு, பூச்சிக் கடியால் ஏற்பட்ட நோய்க்கு பிறகு ஷமீமின் தாத்தாவும் மாமாவும்தான் குடும்பத்தை பார்த்துக் கொண்டார்கள். ஜரிகை வேலைக்கு வரவில்லை எனில் அப்பாவை போலவே கறிக்கடை வைத்திருப்பாரென சொல்கிறார் ஷமீம்.

PHOTO • Urja
Zari workers
PHOTO • Urja

இடது: வேலையிடத்தில் முகமது ஷமீம். வலது: இந்த கடையில் செய்யப்படும் துணிகள் பெரிய கடைகளையும் ஆடை வடிவமைப்பாளர்களையும் சென்றடைகின்றன

“பிறகு என் அம்மா தில்லியில் தையல் வேலை செய்யும் என்னுடைய தந்தை வழி மாமாவிடம் எனக்கு வேலை தேடி தரச் சொன்னார்,” என நினைவுகூருகிறார். “அது 1994ல் நடந்தது. சமஸ்டிப்பூரிலிருந்து தில்லிக்கு வரும்போது ரயிலில் நான் அழுதேன். என் மாமா மிட்டாய் கொடுத்தார். ஆனால் அப்போது என் வீட்டை தவிர எதையும் நான் விரும்பவில்லை. இன்னொரு நகரத்துக்கு ஜரிகை வேலை கற்க செல்லும் எல்லா இளைஞர்களும் அழுது விடுகின்றனர்.”

தில்லியில் ஷமீம் குளிர்சாதன பெட்டி ஆலை ஒன்றில் உதவியாளராக வேலையைத் தொடங்கினார். அவரின் வலது கையில் இருந்த பழைய காயம் பளுவான பொருட்களை தூக்குவதை அவருக்கு கடினமாக்கியது. “காயம் ஆறிவிட்டது. ஆனால் பாரத்தை நான் தூக்கும் ஒவ்வொரு முறையும் என் கை வீங்கிவிடுகிறது,” என்கிறார் அவர் துணியில் ப்ளாஸ்டிக் முத்துகளை நெய்தபடி.

அவரின் மாமா ஒரு நண்பரிடம் அறிமுகப்படுத்தி ஜரிகை நெய்யக் கற்று கொடுக்குமாறு சொல்லியிருக்கிறார். ஒரு வருட பயற்சிகாலத்தில் ஷமீமுக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. உணவும் தூங்க கடையில் இடமும் மட்டும் கிடைத்தது. “முதல் மூன்று மாதங்களில் அவர்கள் எனக்கு சுலபமான கைவினை வேலைகளை கற்றுக் கொடுத்தனர். அதில் திறமை பெற எனக்கு ஒரு வருடம் ஆனது,” என்கிறார் அவர். சில வருடங்களாக தில்லியின் பல பகுதிகளில் அவர் ஜரிகை நெசவாளராக வேலை பார்த்தார். காலப்போக்கில் அவர் நிபுணத்துவம் பெற்ற ஜரிகை நெசவாளர்களின் வேகத்தையும் துல்லியத்தையும் அடைந்து நாளொன்றுக்கு 65 ரூபாய் சம்பாதிக்குமளவுக்கு உயர்ந்தார்.

தில்லியின் ரகுபீர் நகரில் இருக்கும் ஜரிகை பட்டறையில் வேலை பார்த்த முன்னாள் தொழிலாளர் ஒருவர் மும்பைக்கு சென்ற பிறகு, ஷமீமையும் அங்கு இடம்பெயரச் சொன்னதற்கு பிறகு ஷமீமும் அதற்கான திட்டங்களை போடத் துவங்கிவிட்டார். 2009ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். துவக்கத்தில் பெரிய நகரத்தை பார்த்து பயந்ததாக சொல்கிறார் அவர். உடன் வேலை பார்த்தவர்கள் பலர் இந்த நகரத்தில் ‘ரவுடித்தனம்’ அதிகம் என்றும் வெளியாட்களை இங்கிருப்பவர்கள் தாக்குவார்கள் என்றும் கூறியிருந்தனர். “பிகாரியையும் பெங்காலியையும் அடி’ என்றெல்லாம் கூறுவார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது.”

Close up of hand while doing zari work.
PHOTO • Urja
Low angle shot
PHOTO • Urja

’முதல் மூன்று மாதங்களில் சுலபமான கைவினை வேலைகளை கற்றுக் கொடுத்தனர். அதில் திறமை பெற ஒரு வருடம் ஆனது,” என ஜரிகைப் பணியை நினைவு கூருகிறார் ஷமீம்

அனுபவம் பெற்ற தொழிலாளராக ஷமீம் தற்போது நாளொன்றுக்கு 550 ரூபாய் சம்பாதிக்கிறார். ஜரிகை பின்னும் வேலையில் முதல் ஆறுமணி நேர வேலைக்கு தொழிலாளர் 225 ரூபாய் பெறுவார். அடுத்த நான்கு மணி நேரத்துக்கு இன்னொரு 2250 ரூபாய்யும் அடுத்த இரண்டு மணி நேரங்கலுக்கு 100 ரூபாயும் பெறுவார்கள். 12 மணி நேர வேலைக்கு 550 ரூபாய் கிடைக்கும்.

மாதவருமானமாக ஷமீம் 12000 ரூபாயிலிருந்து 13000 ரூபாய் வரை பெறுகிறார். இதில் 4000 ரூபாய் அவருக்கு மட்டும் செலவாகிறது. 8000 ரூபாயை சீமா காதுன்னுக்கும் அவர்களின் குழந்தைகளுக்குமென அனுப்பி வைக்கிறார். அவர் அதில் 1000 ரூபாயை வீட்டுக்கு அருகே வசிக்கும் ஷமீமின் பெற்றொருக்கு தந்து விடுகிறார்.

2018ம் ஆண்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஷமீம் மற்றும் சீமாவுக்கு ஒரு அறை மற்றும் சிறிய சமையலறை கொண்டு ஒரு வீடு கிடைத்தது. திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய 120000 ரூபாயில் தரகு வேலை செய்வதவர் 20000 ரூபாய் எடுத்துக் கொண்டதாக சொல்கிறார் ஷமீம். “என் மைத்துனரிடமிருந்து 20000 ரூபாய் நான் கடன் வாங்க வேண்டியிருந்தது.” பாதிக் கடனை அவர் அடைத்துவிட்டார். மீத 10000 ரூபாயை அடைக்க மாதந்தோறும் 1000 ரூபாய் சேமிக்க முயற்சிக்கிறார்.

ஷமீமுக்கு 20 வயதாக இருக்கும்போது 15 வயது சீமாவை மணந்தார். அவர்களின் 10 வயது முகமது இர்ஃபானும் 8 வயது மந்தசா பர்வீனும் கராஜ் கிராமத்திலிருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.  மூத்த மகனான 16 வயது முகமது இம்ரான் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதி கொண்டிருக்கிறார். மேலே படிக்க அவருக்கு விருப்பமில்லை. தாத்தாவுடன் சேர்ந்து கறிக்கடையில் வேலை பார்க்கும் திட்டத்தில் இருக்கிறார்.

அவர் மும்பைக்கு ஜரிகை வேலை பார்க்க வர வேண்டாமென ஷமீம் நினைக்கிறார். ஏனெனில் குறைந்த ஊதியத்துக்கு பெரிய உழைப்பை போட வேண்டியிருக்கும் என்கிறார். “என்னுடைய தம்பியை ஜரிகை வேலைக்கு அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவன் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவன் மட்டுமல்ல என் சகோதரனின் மகனும் விரும்பவில்லை.” அவரின் சகோதரர் தற்போது குருக்ராமில் உள்ள ஒரு கடையில், மூட்டைகள் ஏற்றும் வேலை செய்கிறார். சகோதரரின் மகன் தையல் வேலைக்கு மாறிவிட்டார். “என்னுடைய மகன் என்னைப் போல குறைவான சம்பளத்துக்கு அதிக வேலை பார்க்கக் கூடாதென விரும்புகிறேன்,” என்னும் ஷமீம் மேலும், “இந்த கலை என்னோடு அழிந்துவிட வேண்டும் என விரும்புகிறேன்,” என்றும் சொல்கிறார்.

Weavers working
PHOTO • Urja
workers stay in factory.
PHOTO • Urja

மகிம் கடையில் தனிப்பொருட்கள் அறையின் பக்கவாட்டு அலமாரியில் வைக்கப்படும். 35 நெசவாளர்களும் இதே 400 சதுர அடிக்குள் இரவு தூங்குகிறார்கள்

30 வயதானபோது ஊசியில் நூல் கோர்க்க ஷமீம் சிரமப்பட்டார். மகிம் கடையில் 14 சுழல் விளக்குகள் இருந்தபோதும் அவருடைய பார்வை மங்கியிருந்தது. ஜரிகை தொழிலாளர்களில் பார்வைத்திறன் எப்போதும் சில வருடங்களிலேயே மங்கி விடும். ஊசியை சகதொழிலாளர் அப்துல் பக்கம் காட்டி, விளையாட்டாக ஷமீம் சொல்கிறார், “இவர் ஒரு வருடத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கண்ணாடி அணிய விரும்புவதில்லை. என்னை போலவொரு வயதானவராக தோற்றமளிக்க இவர் விரும்பவில்லை.”

ஷமீமும் பிற தொழிலாளர்கலும் அப்பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து உணவு பெறுகிறார்கள். “ஆனால் எனக்கு தில்லி அதிகமாக பிடித்தது. கரஜ் அருகிலேயே இருந்தது. உணவு சுவையாகவும் மலிவாகவும் கிடைத்தது,” என்கிறார். 6 நாட்களுக்கு இரு வேளை சாப்பாட்டுக்கு இங்கு 450 ரூபாய் ஆகிறது. வாரத்துக்கு இருமுறை அசைவ உணவு கிடைக்கும். சிக்கன் அல்லது எருமைக் கறி கிடைக்கும். மனைவி சமைக்கும் மாட்டுக்கறி இங்கு கிடைக்கும் கறியை விட சுவையாக இருக்கும் என்கிறார் ஷமீம்.

விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்கள் வெளியே சாப்பிடுகின்றனர். சில சமயங்களில் கடலோரத்துக்கு காற்று வாங்க செல்வார் ஷமீம். அல்லது அருகே இருக்கும் தர்காவுக்கு செல்வார். சில வாரங்களில் அவர் பவன் விரைவு ரயிலின் பொதுப்பெட்டியில் கராஜ்ஜுக்கு பயணிக்க இருக்கிறார். வீட்டின் தகரக் கூரையை தளமாக மாற்ற வேண்டும். அதற்கு ஒரு மாதமேனும் ஷமீம் ஊரிலேயே தங்க வேண்டும். “அப்பாவின் கறிக்கடை வேலைக்கு உதவுவதே என் விடுமுறை நாட்களில் சரியாக இருக்கும். 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை நாளொன்றுக்கு பணமும் வந்து கொண்டிருக்கும்,” என்கிறார் அவர்.

“இனி நான் புதுவேலைக்கு செல்ல முடியாது. புது வேலையை பழகவே ஒரு வருடமேனும் ஆகிவிடும். அதுவரை என் குடும்பம் எப்படி பிழைக்க முடியும்?” எனக் கேட்கிறார். அருகே இருக்கும் தர்காவின் தொழுகை அறிவிப்பு அவரின் குரலை தாண்டி கேட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Urja

اورجا، پیپلز آرکائیو آف رورل انڈیا (پاری) کی سینئر اسسٹنٹ ایڈیٹر - ویڈیوہیں۔ بطور دستاویزی فلم ساز، وہ کاریگری، معاش اور ماحولیات کو کور کرنے میں دلچسپی لیتی ہیں۔ اورجا، پاری کی سوشل میڈیا ٹیم کے ساتھ بھی کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Urja
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan