“அவற்றுக்கு மிக அருகில் சென்று விடாதீர்கள். அவை பயந்து ஓடிவிடக் கூடும். பிறகு அவற்றை இந்த பெரிய பரப்பில் தேடிக் கண்டுபிடிப்பது எனக்கு கஷ்டமாகிவிடும். அவற்றின் நடமாட்டத்தை ஒழுங்கமைக்க வாய்ப்பே இல்லை,” என்கிறார் ஜெதாபாய் ரபாரி.

மேய்ச்சல் சமூகத்தவரான அவர் குறிப்பிடும் ‘அவை’ என்பது ஒட்டகங்கள். அவை உணவு தேடி நீந்திக் கொண்டிருக்கின்றன.

ஒட்டகங்கள் நீந்துகின்றனவா? உண்மையாகவா?

ஆமாம். ஜெதாபாய் சொல்லும் ’பெரிய பரப்பு’ என்பது கச் வளைகுடாவின் தெற்கு கடற்கரையோரத்தில் இருக்கும் மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயம் ஆகும். மேய்ச்சல் நாடோடிக் குழுக்களால் இங்கு பார்த்துக் கொள்ளப்படும் ஒட்டக மந்தைகள், அவற்றின் உணவுக்கு அவசியமான அலையாத்திகளை தேடி தீவிலிருந்து தீவுக்கு நீந்திச் செல்ல வல்லவை.

”நீண்ட நாட்களுக்கு இவை அலையாத்திகளை சாப்பிடவில்லையெனில் நோய்வாய்ப்பட்டு விடும். பலவீனமாகி இறந்து கூட போகும்,” என்கிறார் கரு மெரு ஜாட். “எனவே பூங்காவுக்குள்ளே எங்களின் ஒட்டக மந்தைகள் அலையாத்திகளை தேடிச் செல்லும்.”

Jethabhai Rabari looking for his herd of camels at the Marine National Park area in Khambaliya taluka of Devbhumi Dwarka district
PHOTO • Ritayan Mukherjee

ஜெதாபாய் ரபாரி, அவரது ஒட்டக மந்தையை மரைன் தேசியப் பூங்காவில் தேடுகிறார்

மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்தில் 42 தீவுகள் இருக்கின்றன. அவற்றில் 37, பூங்காவுக்குள் வரும். மிச்ச 5 சரணாலயப்பகுதிக்குள் வரும். மொத்தப் பகுதியும் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியின் ஜாம்நகர் , தேவ்பூமி துவாரகா (2013ம் ஆண்டில் ஜாம்நகரிலிருந்து பிரிக்கப்பட்டது) மற்றும் மார்பி மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது.

“பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு வாழ்கிறோம்,” என்கிறார் முசா ஜாட். கரு மேருவைப் போல, இவரும் தேசியப் பூங்காவுக்குள் வாழும் ஃபகிரானி ஜாட் குழுவின் உறுப்பினர்தான். அவருடையக் குழுவைப் போல இன்னொரு குழுவும் பூங்காவுக்குள் வசிக்கிறது. ஜெதாபாயின் குழு, போபா ரபாரிக் குழு. இரு குழுக்களும் ‘மல்தாரி’ எனப்படும் பாரம்பரிய மேய்ப்பர்கள் ஆவர். குஜராத்தி மொழியில் ’மல்’ என்றால் விலங்குகள் என அர்த்தம். ‘தாரி’ என்றால் உரிமையாளர் என அர்த்தம். குஜராத் முழுவதும் மல்தாரிகள் பசு, எருமை, ஒட்டகம், குதிரை, செம்மறி மற்றும் ஆடு ஆகிய விலங்குகளை வளர்க்கின்றனர்.

பூங்காவின் சுற்றுப்புறத்தில் அமைந்திருக்கும், 1,200 பேர் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்த இந்த இரு குழுக்களின் உறுப்பினர்களையும் நான் சந்திக்கிறேன்.

“இந்த நிலத்தை நாங்கள் மதிக்கிறோம்,” என்கிறார் முசா ஜாட். “ஜாம்நகரின் ராஜா எங்களை வரவேற்று இங்கு வசிக்கும்படி பல்லாண்டுகளுக்கு முன் கூறினார். இவ்விடம் தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்ட 1982-ம் ஆண்டுக்கும் வெகு காலத்துக்கு முன்.”

Jethabhai Rabari driving his herd out to graze in the creeks of the Gulf of Kachchh
PHOTO • Ritayan Mukherjee

கச் வளைகுடாவின் ஓடைகளில் மேய தன் மந்தையை விரட்டி விடுகிறார் ஜெதாபாய் ரபாரி

மேய்ச்சல் மையத்தை புஜ்ஜில் நடத்திக் கொண்டிருக்கும் சஹ்ஜீவன் தொண்டு நிறுவனத்தின் ரிதுஜா மித்ராவும் இந்த வாதத்தை ஆதரிக்கிறார். “பின்னாளில் ஜாம்நகர் என அறியப்பட்ட பகுதியில் நவநகர் ராஜ்ஜியத்தை உருவாக்கிய இளவரசர் ஒருவர் இரு குழுக்களையும் இப்பகுதிக்கு வரவழைத்ததாக சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்து அந்த மேய்ச்சல் குழுக்களின் வழித்தோன்றல்கள் இந்த நிலத்தில் வசிக்கின்றனர்.

”இப்பகுதிகளில் இருக்கும் சில கிராமங்களின் பெயர்கள் கூட, அவர்கள் நெடுங்காலமாக இங்கு வசித்து வருவதை உணர்த்தும் வகையில் இருக்கின்றன,” என்கிறார் சஹ்ஜீவனில் வன உரிமைச் சட்டத்துக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ரிதுஜா. “ஒரு கிராமத்தின் பெயர் உத்பெட் ஷம்பர். அதன் அர்த்தம் ‘ஒட்டகங்களின் தீவு’ ஆகும்.”

மேலும் நீந்தும் தன்மை பெறுமளவுக்கு பல காலமாக இங்கு ஒட்டகங்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். சச்செக்ஸின் வளர்ச்சிக்கான கல்வி நிறுவனத்தின் ஆய்வாளரான லைல மேத்தா சொல்கையில் , “அலையாத்திகளுடன் பாரம்பரியமாக வாழ்ந்திருக்கவில்லை எனில் எப்படி ஒட்டகங்களால் நீந்த முடிந்திருக்கும்?” எனக் கேட்கிறார்.

பூங்கா மற்றும் சரணாலயப் பகுதிகளில் மட்டும் சுமாராக 1,184 ஒட்டகங்கள் மேயலாம் எனக் கூறுகிறார் ரிதுஜா. இவையாவும் 74 மல்தாரி குடும்பங்களுக்கு சொந்தமானவை.

ஜாம்நகர் 1540-ம் ஆண்டில் நவநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கப்பட்டது. 17ம் நூற்றாண்டின் ஒரு காலக்கட்டத்தில் மல்தாரிகள் இங்கு முதன்முறையாக வந்திருக்கின்றனர். அப்போதிருந்து இங்கு வசித்து வருவதாக அவர்கள் சொல்கின்றனர்.

The Kharai camels swim to the mangroves as the water rises with high tide
PHOTO • Ritayan Mukherjee

நீர் மட்டம் உயர்ந்து அலை பெருகும்போது கராய் ஒட்டகங்கள் அலையாத்திகளுக்கு நீந்திச் செல்கின்றன

“இந்த நிலத்தை மதிப்பதற்கான” காரணத்தை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்க முடியாது. குறிப்பாக நீங்கள் இங்கிருக்கும் நீர்வாழ் உயிரினங்களின் பல வகைகளை  பார்த்துப் புரிந்த ஒரு மேய்ச்சல் நாடோடி என்றால் புரிந்து கொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்காது. பூங்காவில் பவளப்பாறைகளும் அலையாத்திக் காடுகளும், மண்பாங்கான கடற்கரைகளும் துண்டு சதுப்பு நிலங்களும் ஓடைகளும் பாறைகள் கொண்ட கடலோரங்களும் கடல்புற்களும் இன்னும் பலவும் இருக்கின்றன.

இந்த பல்லுயிர் பகுதியின் தனித்துவம், இந்தோ ஜெர்மன் உயிரியல் பல்லுயிர் திட்டத்தால் பிரசுரிக்கப்பட்ட 2016ம் ஆண்டின் ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் 100 வகைப் பாசிகளும் 70 வகை பஞ்சுரிகளும் 70 வகை கடின மற்றும் மென்மையான பவளங்களும் இருக்கின்றன. இவையன்றி 200 வகையான மீன்களும் 27 வித இறால்களும் 30 வகைகளிலான நண்டுகளும் நான்கு வகை கடல்புற்களும் கூட இருக்கின்றன.

அதோடு முடிந்துவிட வில்லை. ஆய்வு பதிவு செய்தபடி, ஒவ்வொரு கடல் ஆமை, கடல் பாலூட்டிக்கும் மூன்று வகைகளை இங்கு காண முடியும். 200 வகை மெல்லுடலிகளும் 90 வகை இரு வாலுயிர் வகைகளும் 55 வகை வயிற்றுக்காலிகளும் 78 வகை பறவைகளும் கூட இருக்கின்றன.

இங்கு ஃபகிரானி ஜாட்களும் ரபாரிகளும் பல தலைமுறைகளாக கராய் ஒட்டகங்களை மேய்த்திருக்கின்றனர். குஜராத்தி மொழியில் கராய் என்றால் ‘உப்புத்தன்மை’ என அர்த்தம். வழக்கமாக ஒட்டகங்களை நாம் தொடர்புபடுத்தக் கூடிய சூழலிலிருந்து வேறுபட்ட ஒரு சூழலில் வெற்றிகரமாக பழக்கப்படுத்தப்பட்ட தனித்துவ வகைதான் கராய் ஒட்டகங்கள். அவற்றின் உணவு பலவகை செடிகள், மூலிகைகள் ஆகியவை. முக்கியமாக அலையாத்திகள் என்கிறார் கரு மெரு ஜாட்.

நீச்சல் தெரிந்த வகையான இந்த விலங்குகளுடன், அவற்றின் உரிமை கொண்ட மல்தாரிக் குழு மேய்ப்பர்களும் செல்வார்கள். அதில் வழக்கமாக இரண்டு மைதாரி ஆண்கள் இருப்பார்கள். ஒட்டகத்துடன் சேர்ந்து அவர்கள் நீந்துவார்கள். சில நேரங்களில் அவர்களில் ஒருவர் படகில் உணவும் குடிநீரும் கொண்டு சென்று கிராமத்துக்கு திரும்புவார்கள். இன்னொரு மேய்ப்பர் விலங்குகளுடன் தீவில் தங்கி விடுவார். அங்கு அவர் ஒட்டகப் பாலைக் குடித்துக் கொள்வார்.

Jethabhai Rabari (left) and Dudabhai Rabari making tea after grazing their camels in Khambaliya
PHOTO • Ritayan Mukherjee

கம்பாலியாவில் ஒட்டகங்களை மேய்த்து முடித்த பிறகு ஜெதாபாய் ரபாரியும் (இடது) துதாபாய் ரபாரியும் தேநீர் சமைக்கின்றனர்

ஆனால் பல விஷயங்கள் மல்தாரிகளைப் பொறுத்தவரை மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. “நாங்களும் எங்களின் தொழிலும் நீடிப்பது கஷ்டமாகிக் கொண்டே வருகிறது,” என்கிறார் ஜெதாபாய் ரபாரி. “எங்களின் மேய்ச்சல் நிலம் வனத்துறைக்கு கீழ் கொண்டு வரப்படுவதால் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் அலையாத்திகளுக்கு செல்ல எந்த அனுமதியும் தேவைப்படவில்லை. 1995ம் ஆண்டிலிருந்து மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டது. உப்பளங்களும் எங்களுக்கு பிரச்சினையை கொடுக்கின்றன. மேலும் இடப்பெயர்ச்சிக்கான சாத்தியுமும் இல்லை. எல்லாவற்றையும் விட இப்போது அதிகமாக மேய்க்கிறோமென்கிற குற்றச்சாட்டையும் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம்?”

இப்பகுதியின் வன உரிமைகளுக்காக நெடுங்காலமாக பணியாற்றி வரும் ரிதுஜா மித்ராவும் பழங்குடிகளின் வாதத்தை ஆதரிக்கிறார். “ஒட்டகங்களின் மேய்ச்சல் பாணியை ஆராய்ந்தால், செடிகளை அவை மேலிருந்து உண்ணுவதை புரிந்து கொள்ள முடியும். இது செடிகள் மீண்டும் முளைக்க உதவும். தேசியப் பூங்காவின் தீவுகள்தான் அருகி வரும் கராய் ஒட்டகங்களுக்கு விருப்பமான இடம். அங்குதான் அவை அலையாத்திகளையும் பிறவற்றையும் உண்கின்றன.

வனத்துறை, வேறாக பிரச்சினையைப் பார்க்கிறது. அது நடத்திய சில ஆய்வுகளும் சரி, சில கல்வியாளர்களும் சரி வெளிப்படுத்துவது ஒரு விஷயத்தைதான். ஒட்டகங்கள் அளவுக்கதிகமாக மேய்கின்றன என்றே நிறுவப்படுகிறது.

2016ம் ஆண்டின் ஆய்வு சுட்டிக் காட்டுவது போல், அலையாத்திகள் அழிவதற்கு பல காரணங்கள் உண்டு. அழிவுக்கான காரணத்தை அந்த ஆய்வு தொழில்மயமாக்கல் மற்றும் பிற காரணங்களுடன் இணைக்கிறது. அந்த அழிவுக்கான காரணமாக மல்தாரிகளையும் ஒட்டகங்களையும் அது எங்கும் பழி சொல்லவில்லை.

அந்தப் பல காரணங்களும் முக்கியமானவை.

நீச்சல் தெரிந்த ஒரே வகையான கராய் ஒட்டகங்களுடன் மல்தாரிக் குழு மேய்ப்பர்களும் செல்வார்கள்

காணொளி: குஜராத்தின் பசி கொண்டு நீந்தும் ஒட்டகங்கள்

1980களிலிருந்து ஜாம்நகரும் சுற்றுப்புறங்களும் தொழில்மயமாக்கலைச் சந்தித்து வருகின்றன. “உப்பள ஆலைகள், எண்ணெய் படகுத்துறைகள் மற்றும் இப்பகுதியில் இருக்கும் பிற தொழில்மயமாக்கலால் விளைவு இருக்கிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ரிதுஜா. “அவர்களின் பயன்பாட்டுக்காக நிலம் கொடுக்கப்பட்டதால் ஏற்படும் சிரமங்களை இவர்கள் சந்திக்கிறார்கள். ஆனால், மேய்ப்பர்களின் வாழ்வாதாரத் தொழில் என்று வரும்போது இத்துறை பாதுகாவலராக மாறி விடுகிறது. சட்டத்தின் 19 (g) பிரிவுக்கு இது எதிரானதாகும். ‘எந்தத் தொழிலையும் செய்வதற்கான உரிமை’யை அச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.”

பூங்காவுக்குள் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதிலிருந்து வனத்துறையினரால் தொடர்ந்து ஒட்டக மேய்ப்பர்கள் அவமதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஆடாம் ஜாட். “சில வருடங்களுக்கு முன், ஒட்டகங்களை இங்கே மேய்த்ததற்காக என்னை கைது செய்தனர். 20,000 ரூபாய் அபராதம் கட்டினேன்,” என்கிறார் அவர். இங்கிருக்கும் பிற மேய்ப்பர்களும் இத்தகைய அனுபவங்களை பகிர்கின்றனர்.

“ஒன்றிய அரசின் 2006ம் ஆண்டுச் சட்டத்தாலும் உதவியில்லை,” என்கிறார் ரிதுஜா மித்ரா. 2006ம் ஆண்டு வனஉரிமைச் சட்டத்தின் 3 (1) (d) பிரிவு, மேய்ச்சலுக்கும் பயன்பாட்டுக்குமான சமூக உரிமைகளையும் மேய்ச்சல் நாடோடி சமூகங்களின் குறிப்பிட்ட காலத்தைய பயன்பாட்டையும் அனுமதிக்கிறது.

”ஆனால் இந்த மல்தாரிகள், வன அலுவலர்களால் மேய்ச்சலுக்காக தொடர்ந்து தண்டனை அளிக்கப்படுகிறார்கள். 20,000லிருந்து 60,000 ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி வருகிறது,” என்கிறார் ரிதுஜா. வன உரிமைச் சட்டம் முன் வைக்கும் பிற பாதுகாப்புகள் யாவும் அமலாக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

இங்குள்ள சதுப்புப் பகுதியை தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து, வேறு யாரையும் விட நன்கு அறிந்த, மேய்ப்பர்களை ஈடுபடுத்தாமல்  விரிவுபடுத்த முயற்சிப்பது பயனற்றதாகத் தெரிகிறது. "நாங்கள் இந்த நிலத்தைப் புரிந்து கொள்கிறோம். சூழலியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். மேலும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் கொள்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல" என்று ஜகபாய் ரபாரி கூறுகிறார். “நாங்கள் கேட்பதெல்லாம்: கொள்கைகளை உருவாக்கும் முன் தயவுசெய்து எங்களைக் கேளுங்கள் என்றுதான். இல்லையெனில், இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 1,200 பேரின் உயிரும், ஒட்டகங்களின் உயிரும் ஆபத்தைச் சந்திக்கும்.”.

The thick mangrove cover of the Marine National Park and Sanctuary located in northwest Saurashtra region of Gujarat
PHOTO • Ritayan Mukherjee

குஜராத்தின் வடகிழக்கு சவுராஷ்டிரா பகுதியிலுள்ள மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்தின் அடர்ந்த அலையாத்திக் காடுகள்


Bhikabhai Rabari accompanies his grazing camels by swimming alongside them
PHOTO • Ritayan Mukherjee

நீந்திச் செல்லும் ஒட்டகங்களுடன் செல்லும் பிகாபாய் ரபாரி


Aadam Jat holding his homemade polystyrene float, which helps him when swims with his animals
PHOTO • Ritayan Mukherjee

விலங்குகளுடன் நீந்துவதற்கென வீட்டில் செய்யப்பட்ட தெர்மாக்கோலுடன் ஆடாம் ஜாட்


Magnificent Kharai camels about to get into the water to swim to the bets (mangrove islands)
PHOTO • Ritayan Mukherjee

தீவுகளை நோக்கி நீந்திச் செல்லத் தயாராக அற்புத கராய் ஒட்டகங்கள்


Kharai camels can swim a distance of 3 to 5 kilometres in a day
PHOTO • Ritayan Mukherjee

கராய் ஒட்டகங்கள் மட்டும்தான் நீச்சல் தெரிந்த வகை. ஒரு நாளில் 3லிருந்து 5 கிலோமீட்டர் வரை அவை நீச்சல் அடிக்கும்


The swimming camels float through the creeks in the Marine National Park in search of food
PHOTO • Ritayan Mukherjee

தேசியப் பூங்காவின் ஓடைகளின் வழியாக உணவு தேடிச் செல்லும் ஒட்டகங்கள்


Hari, Jethabhai Rabari's son, swimming near his camels. ‘I love to swim with the camels. It’s so much fun!’
PHOTO • Ritayan Mukherjee

ஜெதாபாய் ரபாரியின் மகனான ஹரி ஒட்டகங்களுடன் நீந்துகிறார். ‘ஓட்டகங்களுடன் நீந்த எனக்கு பிடிக்கும். வேடிக்கை நிறைந்த விஷயம் அது!’


The camels’ movement in the area and their feeding on plants help the mangroves regenerate
PHOTO • Ritayan Mukherjee

இப்பகுதியில் ஒட்டகங்களின் நடமாட்டமும் செடிகளை அவை உண்ணுவதும் அலையாத்திகள் மீண்டும் வளர உதவுகின்றன


A full-grown Kharai camel looking for mangrove plants
PHOTO • Ritayan Mukherjee

முழுதாய் வளர்ந்த ஒரு கராய் ஒட்டகம் அலையாத்தி செடிகளை தேடுகிறது


Aadam Jat (left) and a fellow herder getting on the boat to return to their village after the camels have left the shore with another herder
PHOTO • Ritayan Mukherjee

ஆடாம் ஜாட் (இடது) மற்றும் ஒரு சக மேய்ப்பர் ஆகியோர், ஒட்டகங்கள் இன்னொரு மேய்ப்பருடன் சென்றுவிட்ட பிறகு, கிராமம் திரும்ப படகு ஏறுகின்றனர்


Aadam Jat, from the Fakirani Jat community, owns 70 Kharai camels and lives on the periphery of the Marine National Park in Jamnagar district
PHOTO • Ritayan Mukherjee

ஃபகிரானி ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஆடாம் ஜாட், 70 கராய் ஒட்டகங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். ஜாம்நகர் மாவட்ட மரைன் தேசியப் பூங்காவின் சுற்றுப்புறத்தில் வசிக்கீறார்


Aadam Jat in front of his house in Balambha village of Jodiya taluka. ‘We have been here for generations. Why must we face harassment for camel grazing?’
PHOTO • Ritayan Mukherjee

ஜோதியா தாலுகாவிலுள்ள பலம்பா கிராமத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு முன் ஆடாம் ஜாட். ‘பல தலைமுறைகளாக இங்கிருக்கிறோம். ஒட்டகம் மேய்ப்பதால் ஏன் நாங்கள் அவமதிப்பை சந்திக்க வேண்டும்?’


Jethabhai's family used to own 300 Kharai camels once. ‘Many died; I am left with only 40 now. This occupation is not sustainable anymore’
PHOTO • Ritayan Mukherjee

ஜெதாபாயின் குடும்பத்திடம் 300 கராய் ஒட்டகங்கள் முன்பு இருந்தன. ‘பல இறந்துவிட்டன. இப்போது என்னிடம் 40 மட்டுமே இருக்கின்றன. இந்தத் தொழிலில் இனி நீடிக்க முடியாது’’


Dudabhai Rabari (left) and Jethabhai Rabari in conversation. ‘We both are in trouble because of the rules imposed by the Marine National Park. But we are trying to survive through it,’ says Duda Rabari
PHOTO • Ritayan Mukherjee

துதாபாய் ரபாரியும் (இடது) ஜெதாபாய் ரபாரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ‘தேசியப் பூங்காவின் விதிகளால் நாங்கள் இருவரும் பிரச்சினையில் இருக்கிறோம். இருந்தாலும் நாங்கள் பிழைக்க முயற்சிக்கிறோம்,’ என்கிறார் துதா ரபாரி

As the low tide settles in the Gulf of Kachchh, Jethabhai gets ready to head back home
PHOTO • Ritayan Mukherjee

கச் வளைகுடாவில் அலையடங்கியதும் ஜெதாபாய் வீடு திரும்பச் செல்கிறார்


Jagabhai Rabari and his wife Jiviben Khambhala own 60 camels in Beh village of Khambaliya taluka, Devbhumi Dwarka district. ‘My livelihood depends on them. If they are happy and healthy, so am I,’ Jagabhai says
PHOTO • Ritayan Mukherjee

ஜகாபாய் ரபாரிக்கும் அவரது மனைவி ஜிவிபென் கம்பாலாவுக்கும் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தின் கம்பாலியா தாலுகாவின் பெ கிராமத்தில் 60 ஒட்டகங்கள் சொந்தமாக இருக்கின்றன. ‘என் வாழ்வாதாரம் அவற்றை நம்பிதான் இருக்கிறது. சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் அவை இருந்தால், நானும் அவ்வாறு இருப்பேன்,’ என்கிறார் ஜகாபாய்


A maldhari child holds up a smartphone to take photos; the back is decorated with his doodles
PHOTO • Ritayan Mukherjee

ஒரு மல்தாரி குழந்தை புகைப்படம் எடுக்க ஸ்மார்ட்ஃபோனை எடுக்கிறார். ஃபோனின் பின்பக்கத்தில் அவர் வரைந்த ஓவியங்கள்


A temple in Beh village. The deity is worshipped by Bhopa Rabaris, who believe she looks after the camels and their herders
PHOTO • Ritayan Mukherjee

பெ கிராமத்திலுள்ள ஒரு கோவில். தெய்வத்தை போபா ரபாரிகள் வணங்குகின்றனர். அந்த தெய்வம்தான் ஒட்டகங்களையும் மேய்ப்பர்களையும் பார்த்துக் கொள்வதாக அவர்கள் நம்புகின்றனர்


There are about 1,180 camels that graze within the Marine National Park and Sanctuary
PHOTO • Ritayan Mukherjee

மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 1,180 ஒட்டகங்கள் மேய்கின்றன


இக்கட்டுரையாளர், சஹ்ஜீவன் ஒட்டகப் பணியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான மகேந்திர பனானி அளித்த நிபுணத்துவம் மற்றும் உதவி ஆகியவற்றுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.

ரிதாயன் முகர்ஜி, மேய்ச்சல் நாடோடி சமூகங்கள் பற்றியக் கட்டுரைகளை மேய்ச்சல் மையத்தின் சுயாதீன மானியத்தில் பயணித்து எழுதுகிறார். இக்கட்டுரையின் உள்ளடக்கத்தில் எந்த அதிகாரத்தையும் அம்மையம் வெளிப்படுத்தவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Photos and Text : Ritayan Mukherjee

رِتائن مکھرجی کولکاتا میں مقیم ایک فوٹوگرافر اور پاری کے سینئر فیلو ہیں۔ وہ ایک لمبے پروجیکٹ پر کام کر رہے ہیں جو ہندوستان کے گلہ بانوں اور خانہ بدوش برادریوں کی زندگی کا احاطہ کرنے پر مبنی ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Ritayan Mukherjee
Video : Urja

اورجا، پیپلز آرکائیو آف رورل انڈیا (پاری) کی سینئر اسسٹنٹ ایڈیٹر - ویڈیوہیں۔ بطور دستاویزی فلم ساز، وہ کاریگری، معاش اور ماحولیات کو کور کرنے میں دلچسپی لیتی ہیں۔ اورجا، پاری کی سوشل میڈیا ٹیم کے ساتھ بھی کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Urja

پی سائی ناتھ ’پیپلز آرکائیو آف رورل انڈیا‘ کے بانی ایڈیٹر ہیں۔ وہ کئی دہائیوں تک دیہی ہندوستان کے رپورٹر رہے اور Everybody Loves a Good Drought اور The Last Heroes: Foot Soldiers of Indian Freedom کے مصنف ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز پی۔ سائی ناتھ
Photo Editor : Binaifer Bharucha

بنائیفر بھروچا، ممبئی کی ایک فری لانس فوٹوگرافر ہیں، اور پیپلز آرکائیو آف رورل انڈیا میں بطور فوٹو ایڈیٹر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز بنیفر بھروچا
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan