கோதுமை பயிர்களுக்கு நீர்பாய்ச்சும் நேரம் வந்துவிட்டது. தனது நிலத்தின் முக்கியமான இத்தருணத்தை சபரன் சிங் தவறவிட விரும்பவில்லை. எனவே அவர் ஹரியானா - டெல்லி எல்லையில் உள்ள சிங்குவிலிருந்து டிசம்பர் முதல் வாரம் பஞ்சாபில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பினார்.

நவம்பர் 26 தொடங்கி அங்கேயே பிடிவாதமாக தங்கியிருந்தவர், போராட்ட களத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற தயாராக இல்லை. 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்த் கிராமத்தில் 12 ஏக்கர் விளைநிலத்திலிருந்து சில நாட்களில் மீண்டும் அவர் சிங்குவிற்குத் திரும்பினார். “நான் மட்டும் இப்படி செய்யவில்லை,” என்கிறார் இந்த 70 வயது விவசாயி. “இங்கு பலரும் சுழற்சி முறையில் போராட்டக் களத்திற்கும், தங்கள் கிராமத்திற்கும் சென்று வருகின்றனர்.”

சிங்குவில் தங்களின் வலுவான எண்ணிக்கையை காட்டுவதற்காகவே இந்த சுழற்சி முறையை விவசாயிகள் வகுத்துள்ளனர், அதேசமயம் தங்கள் நிலத்தின் வெள்ளாமை வீடு வந்து சேர்வதிலும் மெத்தனம் காட்டவில்லை.

“கோதுமைப் பயிர்களை பயிரிடுவதற்கு இதுவே உகந்த நேரம்,” என்று நவம்பர்-டிசம்பர் மாதங்களை குறிப்பிட்டு சொல்கிறார் சபரன். “நான் கிளம்பிச் சென்றபோது எங்கள் கிராமத்தின் சில நண்பர்கள் எனக்குப் பதிலாக சிங்குவில் இருந்தனர்.”

போராளிகள் பலரும் இந்த சுழற்சி முறையைப் பின்பற்றி வருகின்றனர். “பலரிடமும் நான்கு சக்கர வண்டிகள் உள்ளன,” என்று சொல்லும் சபரன் முன்னாள் இராணுவ வீரர். “இங்கிருந்து எங்கள் கிராமத்திற்குச் செல்வதும், வருவதுமாக இருக்கிறோம். ஆனால் கார்கள் காலியாக இருப்பதில்லை. கிராமத்திற்கு நான்கு பேர் திரும்பினால் அங்கிருந்து அதே காரில் வேறு நான்கு பேர் வருகின்றனர்.”

'The cars keep going back and forth from here to our villages. If four people are dropped there, four others come back in the same car', says Sabaran Singh
PHOTO • Parth M.N.
'The cars keep going back and forth from here to our villages. If four people are dropped there, four others come back in the same car', says Sabaran Singh
PHOTO • Parth M.N.

'இங்கிருந்து எங்கள் கிராமங்களுக்கு கார்கள் தொடர்ந்து சென்று வருகின்றன. நான்கு பேர் இறங்கினால், அங்கிருந்து அதே காரில் வேறு நான்கு பேர் வருகின்றனர்', என்கிறார் சபரன் சிங்

2020 செப்டம்பர் மாதம் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26ஆம் தேதி முதல் போராடி வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய தலைநகரைச் சுற்றியுள்ள போராட்டக் களங்களில் ஒன்றான சிங்குவிற்குத் திரும்பினர்.

வடக்கு டெல்லியின் புறநகரிலும், ஹரியானா எல்லையிலும் அமைந்துள்ள சிங்குவில் நடைபெறும் போராட்டம் மிகப்பெரியது. அங்கு 30,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டங்களைத் தொடர அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஃபதேஹார் சாஹிப் மாவட்டம் கமோனான் தாலுக்காவில் உள்ள தனது கிராமத்திற்கு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் திரும்பிய சபரன், ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சில வங்கி வேலைகளையும் முடித்துவிட்டு, புதிதாக துணிகளையும் எடுத்துக் கொண்டார் “இங்கு அனைத்து வசதிகளும் உள்ளன,” எனும் அவர் தனது லாரியில் வைக்கப்பட்டுள்ள மெத்தைகளை காட்டுகிறார். “இது எங்களை கதகதப்பாக வைக்கிறது. மின்சாரம், குடிநீர், போர்வைகளும் உள்ளன. குளியலறைக்கும் பிரச்னை இல்லை. ஆறு மாதங்களுக்கு தேவையான அளவிற்கு எங்களிடம் ரேஷன் பொருட்கள் உள்ளன.”

கோதுமை, நெல் பயிரிடும் விவசாயி சபரன் குறிப்பாக இச்சட்டத்தை எதிர்க்கிறார். இந்த சட்டங்கள், அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும்  மாநில ஒழுங்குமுறை மண்டிகளை  ஓரங்கட்டுகின்றன. நாட்டின் பிற பகுதிகளைவிட பஞ்சாப், ஹரியானாவில் கோதுமை, நெல் கொள்முதல் அதிகமாக நடைபெறுகிறது. எனவேதான் இம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இச்சட்டங்களுக்கு எதிராக அதிகளவில் போராடுகின்றனர். “தனியார் நிறுவனங்கள் உள்ளே வந்துவிட்டால் சர்வாதிகாரம் ஆகிவிடும்,” என்கிறார் சபரன். “விவசாயிகள் பேச முடியாது, பெருமுதலாளிகள்தான் இச்சட்டங்களை நிர்ணயிப்பார்கள்.”
Left: Hardeep Kaur (second from left) says, 'We will go back  for a while when he [an employee looking after their farmland] needs us there. We will be replaced by someone here for that duration'. Right: Entire families at Singhu are engaged in this rotation
PHOTO • Parth M.N.
Left: Hardeep Kaur (second from left) says, 'We will go back  for a while when he [an employee looking after their farmland] needs us there. We will be replaced by someone here for that duration'. Right: Entire families at Singhu are engaged in this rotation
PHOTO • Parth M.N.

இடது: ஹர்தீப் கவுர் (வலதிலிருந்து இரண்டாவது) சொல்கிறார், 'நாங்கள்  விவசாய வேலைக்கான தேவை ஏற்படும்போது சிறிது காலம் அங்கு செல்வோம்.  எங்களுக்குப் பதிலாக வேறு சிலர் இங்கு இருப்பார்கள்.' வலது: இந்த சுழற்சியில் சிங்குவில் உள்ள அனைத்து குடும்பங்களும் பங்கேற்கின்றன

2020 ஜூன் 5ஆம் தேதி முதலில் அவசர சட்டமாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, அதே மாதம் 20ஆம் தேதி அவசர அவசரமாக சட்டங்களாக இயற்றப்பட்டன. பெருமுதலாளிகளுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதாலும், விவசாயிகள், விவசாயத்தின் மீது அதிகளவு அதிகாரத்தை அவர்கள் செலுத்த வழிவகுக்கும் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் கருதுகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி), வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்கள் (ஏபிஎம்சிஸ்), மாநில கொள்முதல் போன்ற பல விவசாய ஆதரவு அம்சங்களையும் கேள்விக்குட்படுத்துகின்றனர்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 ; அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 .  இந்திய சட்டப்பிரிவு 32ன்கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சட்டரீதியான உதவிக் கோரும் உரிமை யை முடக்குவதால் இச்சட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன

“இது கொள்ளையடிப்பவர்களின் அரசு,” என்கிறார் சபரன். “வரும் நாட்களில் இன்னும் பல விவசாயிகள் இணைவார்கள். இப்போராட்டங்கள் இன்னும் பெரிதாகும்.”

சமீபகாலங்களில் போராட்டத்தில் பங்கேற்க சிங்கு வந்தவர்களில் 62 வயதாகும் ஹர்தீப் கவுரும் ஒருவர். டிசம்பர் மூன்றாவது வாரத்திலிருந்து அவர் சிங்குவில் இருக்கிறார். “போராட்டங்களில் பங்கேற்குமாறு என் குழந்தைகள் சொன்னார்கள்,” என்று தீவிர வடமாநில குளிரில் சால்வைகளை போர்த்தியபடி தனது மூன்று தோழிகளுடன் பாயில் அமர்ந்தபடி சொல்கிறார்.

சிங்குவிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூதியானாவின் ஜாக்ரன் தாலுகா சக்கர் கிராமத்திலிருந்து கவுர் இங்கு வந்துள்ளார். அவரது பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர், அவரது மகள் செவிலியராகவும், மகன் தொழிற்சாலையிலும் பணியாற்றுகின்றனர். “அவர்கள் செய்திகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர்,” என்கிறார். “இதில் பங்கேற்குமாறு என்னிடம் அவர்கள் சொன்னார்கள். இங்கு வருவது என முடிவு செய்த பிறகு கரோனா பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.”

கோவிட்-19ஐவிட பெரிய வைரஸ் பிரதமர் நரேந்திர மோடி என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

PHOTO • Parth M.N.

ஷம்ஷெர் சிங் (மேல் வலது, நடுவில்) கிராமங்களில் வேலை செய்தபடி விவசாயிகளை ஆதரித்து வருபவர்களை சிங்குவில் காண முடியாவிட்டாலும், அவர்களும் போராளிகளே என்கிறார்

கவுரும், அவரது கணவர் ஜோரா சிங்கும் போராட்டக் களத்தில் இருப்பதால் அவர்களின் பணியாளர் நெல், கோதுமை பயிரிடப்பட்டுள்ள 12 ஏக்கர் நிலத்தை கவனித்து வருகிறார். “அவருக்குத் தேவைப்படும்போது நாங்கள் கிராமத்திற்குச் செல்வோம்,” என்கிறார் அவர். “அச்சமயத்தில் எங்கள் இடத்தை வேறு யாரேனும் நிரப்புவார்கள். வீடு திரும்ப நாங்கள் காரை வாடகைக்கு எடுப்போம். அதே காரில் கிராமத்திலிருந்து வேறு சிலரை அனுப்பிவிடுவோம்.”

காரில் செல்ல வசதி இல்லாதவர்கள் பேருந்து மூலம் சுழற்சி முறையைப் பின்பற்றுகின்றனர். விவசாயிகள் டிராக்டர் டிராலியையும் களத்திற்கு கொண்டு வந்துள்ளனர், ஆனால் அவை எங்கும் செல்வதில்லை என்கிறார் உத்தரபிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டம், ஷிவ்புரி கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்யும் 36 வயது விவசாயியான ஷாம்ஷேர். “இப்போர்க்களத்தை விட்டு நாங்கள் சென்றுவிடவில்லை என்பதைக் குறிக்கவே இந்த டிராக்டர்கள்,” என்கிறார் அவர். “அவை சிங்குவிலேயே நிற்கின்றன.”

ஷாம்ஷெர் சிங்குவில் இருக்கும்போது அவரது கிராமத்தில் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. “அடுத்த சில நாட்களில் நான் அங்கு செல்வேன்,” என்கிறார் அவர். “நான் சென்றவுடன் என் இடத்திற்கு என் சகோதரர் வருவார். அவர்தான் இப்போது கரும்பு அறுவடை செய்கிறார். விவசாயம் யாருக்காகவும் காத்திருக்காது. வேலை நடந்துக் கொண்டே இருக்கும்.”

சிங்குவிற்கு வராவிட்டாலும் கிராமங்களில் எங்களுக்காக வேலை செய்யும் அனைவருமே போராளிகள்தான் என்று குறிப்பிடுகிறார் ஷாம்ஷெர். “போராட்டத்தில் பங்கேற்க பெருந்திரளான மக்கள் வீடுகளை விட்டு வந்துள்ளனர்,” என்கிறார். “எல்லோருக்கும் தங்களின் விவசாயத்தைப் பார்த்துக்கொள்ள குடும்பம் அல்லது உதவியாளர்கள் இருக்க மாட்டார்கள். எனவே வீடு திரும்பும் கிராமத்தினர் அப்பணிகளையும் பார்க்கின்றனர். சிங்கு போன்ற போராட்டக் களங்களில் உள்ளவர்களுக்கும் [தங்கள் நிலத்துடன்] சேர்த்து அவர்கள் பயிரிடுகின்றனர். அவர்களும் இவ்வகையில் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் உடலால் போராட்டக் களத்தில் இல்லை.”

தமிழில்: சவிதா

Parth M.N.

पार्थ एम एन हे पारीचे २०१७ चे फेलो आहेत. ते अनेक ऑनलाइन वृत्तवाहिन्या व वेबसाइट्ससाठी वार्तांकन करणारे मुक्त पत्रकार आहेत. क्रिकेट आणि प्रवास या दोन्हींची त्यांना आवड आहे.

यांचे इतर लिखाण Parth M.N.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha