10 வயது நிறைவடையாத இஜாஸ், இம்ரான், யாசிர், ஷமிமா ஆகியோர் சில ஆண்டுகள்தான் பள்ளியில் படித்துள்ளனர். தங்கள் பெற்றோர் இடம் பெயர்ந்து செல்லும் காலங்களில் இவர்களும் உடன் செல்வதால், ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் நான்கு மாதங்கள் வரை பள்ளிக்கூடம் செல்வதில்லை. இதனால், அடிப்படைக் கணிதம், அறிவியல், சமூகவியல், சொற்கள், எழுதும் திறன் ஆகியவற்றைக் கற்பதில் பின் தங்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு 10 வயது ஆகும்போது, அவர்கள் பள்ளி செல்லாத காலம் மொத்தமாக ஓராண்டு ஆகிறது. முன்வரிசையில் அமரும் மிகச் சிறந்த மாணவர்களுக்குக்கூட இது பேரிழப்பு, ஈடு செய்யக் கடினமானது.

ஆனால், இனி அவர்கள் அப்படி பாடங்களை தவறவிடமாட்டார்கள். அந்தக் குடும்பங்கள் பள்ளியில் இருந்து வெகுதூரம் இடம் பெயரும்போது அவர்களோடு தானும் இடம் பெயர்ந்து சென்று பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார் ‘பயணிக்கும் ஆசிரியர்’ அலி முகமது. மூன்றாவது ஆண்டாக, மலையேறி காஷ்மீரின் லிட்டர் பள்ளத்தாக்கில் உள்ள கலன் என்ற குஜ்ஜர் குடியேற்றத்துக்கு வந்துள்ள அலி முகமதுவுக்கு இப்போது 25 வயது. குஜ்ஜர் சமூகத்தினர், கோடை காலத்தில் மேய்ச்சல் நிலம் தேடி தங்கள் கால்நடைகளோடு இங்கே இடம் பெயர்ந்து வருகிறார்கள். அவர்களோடு இங்கே வரும் அலி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலம் அவர்களோடு தங்கியிருந்து குஜ்ஜர் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார்.

“நானும் ஓர் ஆசிரியர் ஆவேன் என்று நினைக்கிறேன்,” என்று வெட்கத்தோடு கூறிக் கொண்டே அரசாங்கம் தந்த பயிற்சி ஏட்டுக்குள் செல்கிறார் ஷமிமா ஜான். சில நேரம் குழந்தைகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் எழுது பொருள்களை அலி சொந்த செலவில் வாங்கித் தருகிறார்.

Left: Shamima Jaan wants to be a teacher when she grows up.
PHOTO • Priti David
Right: Ali Mohammed explaining the lesson to Ejaz. Both students have migrated with their parents to Khalan, a hamlet in Lidder valley
PHOTO • Priti David

இடது: பெரியவளாகும்போது தானும் ஓர் ஆசிரியை ஆக விரும்புகிறார் ஷமீமா ஜான். வலது: இஜாசுக்குப் பாடத்தை விளக்குகிறார் அலி முகமது.  இரண்டு குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் இடம் பெயர்ந்து, லிட்டர் பள்ளத்தாக்கில் உள்ள கலன் என்ற இடத்துக்கு வந்துள்ளார்கள்

The Gujjar children (from left) Ejaz, Imran, Yasir, Shamima and Arif (behind) will rejoin their classmates back in school in Anantnag district when they descend with their parents and animals
PHOTO • Priti David
The Gujjar children (from left) Ejaz, Imran, Yasir, Shamima and Arif (behind) will rejoin their classmates back in school in Anantnag district when they descend with their parents and animals
PHOTO • Priti David

(இடதிலிருந்து) இஜாஸ், இம்ரான், யாசிர், ஷமிமா மற்றும் ஆரிப் (பின்னால்) ஆகிய குஜ்ஜார் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு மலையிலிருந்து இறங்கும்போது செல்வார்கள்

மேய்ச்சல் சமூகமான குஜ்ஜர்கள் வழக்கமாக மாடு வளர்ப்பார்கள். சில நேரங்களில் ஆடுகளும் வளர்ப்பார்கள். ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் தங்கள் கால் நடைகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலம் தேடி இவர்கள் இமய மலையில் ஏறுகிறார்கள். இதுவரை இந்த வருடாந்திர இடப்பெயர்வுக் காலத்தில் அவர்களது குழந்தைகள் பள்ளி செல்லமாட்டார்கள். இதனால், அவர்களது கல்வி அடித்தளம் பலவீனமாகும்.

அவர்களோடு இடம் பெயர்ந்து செல்லும் அலி போன்ற ஆசிரியர்கள், பள்ளி செல்லாத காலங்களில் குஜ்ஜர் மாணவர்கள் அப்படி பாடங்களைத் தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். “சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் சமுதாயத்தின் எழுத்தறிவு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும். அதிக உயரமுள்ள மலைப் பகுதிகளுக்கு நாங்கள் இப்படி வரும்போது, அங்கே பிள்ளைகளின் பள்ளிப் படிப்பைத் தொடர வழியிருக்காது. அந்த நாட்களில் வெகு சிலரே பள்ளி செல்வார்கள்,” என்கிறார் குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்தவரான அந்த இளம் ஆசிரியர்.  அவரும் குழந்தையாக இருந்தபோது இப்படி, தன் பெற்றோருடன் இடம் பெயர்ந்துசென்று அதனால் வகுப்புகளை தவறவிட்டவர்தான்.

“ஆனால், இப்போது இந்த திட்டத்தின் மூலம், புலம் பெயரும் காலத்தில் சிறுவர்களுக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கிறார். பிள்ளைகளும் தங்கள் பள்ளிப் படிப்பை தொடர்கிறார்கள். இதனால், எங்கள் சமுதாயம் வளம் பெறும்,” என்கிறார் அவர். “இது இல்லாவிட்டால், 4 மாத காலம் புலம்பெயரும் பிள்ளைகள், கீழே, எங்கள் கிராமத்தில் [அனந்தநாக் மாவட்டம்] பள்ளி சென்று கொண்டிருக்கும் தங்கள் வகுப்புத் தோழர்களைவிட படிப்பில் பின்தங்கிவிடுவார்கள்.” என்கிறார்

2018-19-ல் ஒன்றிய அரசாங்கம் கொண்டு வந்த சமக்ரா ஷிக்‌ஷா திட்டத்தை குறிப்பிடுகிறார் அலி. “அத்திட்டத்தில்தான் சர்வ ஷிக்‌ஷா அபியான் (SSA), ராஷ்டிரிய மத்யமிக் ஷிக்‌ஷா அபியான் (RMSA) மற்றும் ஆசிரியர் கல்வி (TE) ஆகிய திட்டங்கள் வருகின்றன.” பள்ளிகள் “சமவாய்ப்புகள் கொடுப்பதையும் நியாயமான கற்றல் விளைவுகளை உருவாக்குவதையும்” உறுதிபடுத்தவே அத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

ஆக, அனந்தநாக் மாவட்டம், பால்கம் வட்டத்தில் பாய்ந்துகொண்டிருக்கும் லிட்டர் (Lidder) ஆற்றின் கரையில் ஒரு பச்சைக் கூடாரத்தில் இயங்குகிறது இந்தப் பள்ளி. ஆனால், இதமான ஒரு வெயில் நாளில், ஆசிரியர் அலிக்கு, திறந்த புல்வெளியே வகுப்பறையாக செயல்படுகிறது. உயிரியலில் பட்டம் பெற்றுள்ள அலிக்கு இந்த வேலைக்காக மூன்று மாதப் பயிற்சி தரப்பட்டுள்ளது. “என்னவிதமான கற்றல் விளைவுகளை எதிர்பார்க்கிறோம், எப்படி கற்பிக்கவேண்டும், படிப்பவற்றை மாணவர்கள் எப்படி நிஜ வாழ்க்கையில் செயல்படுத்தவேண்டும் என்பவை தொடர்பில் எங்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்,” என்று தெரிவித்தார் அலி.

Ali Mohammed (left) is a travelling teacher who will stay for four months up in the mountains, making sure his students are up to date with academic requirements. The wide open meadows of Lidder valley are much sought after by pastoralists in their annual migration
PHOTO • Priti David
Ali Mohammed (left) is a travelling teacher who will stay for four months up in the mountains, making sure his students are up to date with academic requirements. The wide open meadows of Lidder valley are much sought after by pastoralists in their annual migration
PHOTO • Priti David

அலி முகமது(இடது) ஒரு பயணிக்கும் ஆசிரியர். இவர், மலையில் நான்கு மாதம் தங்கி, புலம்பெயர் மாணவர்களின் கல்வித் தேவையை உரிய முறையில் மேம்படுத்துகிறார். மேய்ச்சல்கார்காரர்கள் தங்கள் வருடாந்திர இடப்பெயர்வுக் காலத்தில் மிகவும் விரும்புகிற இடம் லிட்டர் பள்ளத்தாக்கின் இந்த பரந்துவிரிந்த புல்வெளி

மூன்று இடம் பெயரும் குஜ்ஜர் குடும்பங்கள் தங்கியிருக்கிற சிற்றூர் கலன். இங்கே, வெதுவெதுப்பான ஜூன் மாதக் காலைப் பொழுதில் வகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. புல்லில் அமர்ந்திருக்கிறார் ஆசிரியர் அலி. 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் அவரை சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில், நண்பகல் 12 ஆகும்போது வகுப்புகளை முடித்துவிடுவார் அவர். ஆற்றில் இருந்து சிறிது தொலைவில், ஒரு சின்ன மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது மண் பூசிய அவர்கள் வீடுகள். இங்கு குடியிருக்கும் கொஞ்சம் மக்களில் பெரும்பாலோர் வீட்டுக்கு வெளியே இதமான வானிலையை அனுபவித்துக் கொண்டும், வருவோர் போவரிடம் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். இங்குள்ள குடும்பங்களுக்கு மொத்தம் 20 பசுக்களும், எருமைகளும் 50 ஆடுகளும் உள்ளன என்று ‘பாரி’ தளத்திடம் தெரிவித்தார்கள் சிறுவர்கள்.

“இந்த இடத்தை வெண்பனி சூழ்ந்திருப்பதால் தாமதமாகவே பள்ளி தொடங்கும். நான் 10 நாள்கள் முன்பு [2023 ஜூன் 12] வந்தேன்,” என்கிறார் அலி.

சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில், இங்கிருந்து மேலே 15 கிமீ தொலைவில் இருக்கிறது லிட்டர் பனிப்பாறை. அந்தப் பாறைக்குச் செல்லும் பாதையில்தான் இருக்கிறது கலன். இந்தக் குடியிருப்பில் உள்ள இளைஞர்கள் சிலரோடு அங்கு சென்று வந்திருக்கிறார் அலி. இந்த இடத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும், பசுமையும் செழுமையும்தான், மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகளும்தான் தென்படுகின்றன. குஜ்ஜர், பகர்வால் குடும்பங்கள் ஏற்கெனவே ஆற்றை ஒட்டிக் குடியேறிவிட்டன.

“அங்குள்ள குழந்தைகளுக்கு பிற்பகலில் பாடம் நடத்துவேன்,” என்று அலி கைகாட்டும் இடம், ஆற்றுக்கு அந்தப் பக்கம் உள்ள சாலார் குக்கிராமம். அங்கேயும் சில குஜ்ஜர் குடும்பங்களே வசிக்கின்றன. ஆவேசமாகப் பாய்ந்துகொண்டிருக்கும் ஆற்றுக்குக் குறுக்கே செல்லும் ஒரு மரப் பாலத்தின் வழியாக அலி அக்கரைக்குச் செல்வார்.

Left: Ali with the mud homes of the Gujjars in Khalan settlement behind him.
PHOTO • Priti David
Right: Ajeeba Aman, the 50-year-old father of student Ejaz is happy his sons and other children are not missing school
PHOTO • Priti David

இடது: அலியின் பின்னணியில் இருப்பது கலன் கிராமத்தில் உள்ள குஜ்ஜர்களின் மண் வீடுகள். வலது: தங்கள் மகன்களும், பிற பிள்ளைகளும் பள்ளியைத் தவறவிடவில்லை என்பதால் 50 வயது தந்தை அஜீபா அமன் மகிழ்ச்சி அடைகிறார். இவர் இஜாசின் தந்தை

Left: The Lidder river with the Salar settlement on the other side.
PHOTO • Priti David
The green tent is the school tent. Right: Ali and two students crossing the Lidder river on the wooden bridge. He will teach here in the afternoon
PHOTO • Priti David

இடது: ஆற்றின் கரையில் நிற்கிறார் அலி. அவருக்குப் பின்னணியில் உள்ளது சாலார் குடியிருப்பு. அந்தப் பச்சைக் கூடாரம்தான் பள்ளி. வலது: அலியும் இரண்டு மாணவர்களும் மரப் பாலத்தின் வழியாக லிட்டர் ஆற்றைக் கடக்கிறார்கள். பிற்பகலில் இவர் இங்கே பிள்ளைகளுக்கு சொல்லித் தருவார்

தொடக்கத்தில் இரண்டு கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே பள்ளிதான் இருந்தது; சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் பாலத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்து இறந்துபோனார். அதன் பிறகு, தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆற்றைக் கடக்கக்கூடாது; ஆசிரியர்கள்தான் கடந்து செல்லவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. “எனவே, கடந்த இரண்டு கோடைக் காலத்துக்கு முன்பிருந்து இரண்டு ஷிஃப்டாக பாடம் நடத்துகிறேன்,” என்கிறார் அவர்.

ஏற்கெனவே அங்கிருந்த பழைய பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால், அலி அங்கிருந்து ஆற்றோரமாக ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று வேறொரு பாலத்தின் வழியாக ஆற்றைக் கடக்கிறார். இன்று அக்கரையில் உள்ள அவரது மாணவர்கள், அவரை அழைத்துச் செல்வதற்காக காத்திருக்கிறார்கள்!

அலியைப் போன்ற ஒவ்வொரு பயணிக்கும் ஆசிரியரும் நான்கு மாத  ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த ஒட்டுமொத்த காலத்துக்கும் அவர்களுக்கு தோராயமாக ரூ.50,000 வருவாய் வருகிறது. வாரம் முழுவதும் அவர் சாலாரில் வசிக்கிறார். “என் தங்குமிடத்துக்கும், உணவுக்கும் நானேதான் ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும். எனவே, இங்குள்ள உறவினர்களோடு தங்குகிறேன்,” என்று விளக்குகிறார் அவர். “நான் ஒரு குஜ்ஜர். இவர்கள் எல்லாம் என்னுடைய உறவினர்கள். என்னுடைய நெருங்கிய உறவினர்  இங்கே வசிக்கிறார். அவரது குடும்பத்தோடு நான் வசிக்கிறேன்.” என்கிறார் அவர்.

“அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஹிலன் கிராமத்தைச் சேர்ந்தவர்  அலி. அது இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. தனது மனைவி நூர்ஜஹான் மற்றும் தங்கள் குழந்தையை வார இறுதியில் மலையில் இருந்து கீழே போய் சந்திக்கிறார். இவரது மனைவியும் ஓர் ஆசிரியை. அவர் தனது வீட்டிலும், சுற்றுப் பகுதியிலும் டியூஷன் எடுக்கிறார். “என் சிறு வயதில் இருந்தே எனக்கு கற்பிப்பதில் ஆர்வம்.”

“அரசாங்கம் ஒரு நல்ல விஷயத்தைச் செய்துள்ளது. என் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும் இத்திட்டத்தில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறிக் கொண்டே ஆற்றின் குறுக்கே உள்ள மரப் பாலத்தை நோக்கிச் செல்கிறார் அலி.

மாணவன் இஜாசின் 50 வயது தந்தை தந்தை அஜீபா அமன் மகிழ்ச்சியாக இருக்கிறார். “என் மகன், என் சகோதரனின் மகன்கள் எல்லோரும் இப்போது படிக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம்.”

மொழிபெயர்ப்பு: அ.தா.பாலசுப்ரமணியன்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Editor : Vishaka George

Vishaka George is Senior Editor at PARI. She reports on livelihoods and environmental issues. Vishaka heads PARI's Social Media functions and works in the Education team to take PARI's stories into the classroom and get students to document issues around them.

Other stories by Vishaka George
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

Other stories by A.D.Balasubramaniyan