“வாக்குச்சீட்டு சரியாக இருந்தது. எந்திரத்தில் பொத்தானை அழுத்தியதும் யாருக்கு வாக்கு விழுகிறது என்பது தெரிவதில்லை!”

வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டுகளைதான் விரும்புவதாக கல்முதீன் அன்சாரி கூறுகிறார். உள்ளுர் கால்நடைச் சந்தையில் ஜார்க்கண்டின் கொளுத்தும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ள ஒரு துண்டை தலையில் சுற்றி அணிந்திருக்கும் பலாமுவின் கும்னி கிராமத்தை சேர்ந்த 52 வயதுக்காரர் அவர். மேல்துண்டு அல்லது தலைப்பாகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பருத்தி துணி. கம்சா என்பது தேவைக்கேற்ப தைத்துக் கொள்ளக் கூடிய துணி. 13 கிலோமீட்டர் நடந்து அவர் பதாரில் நடக்கும் இந்த வாரச்சந்தைக்கு தன் காளையை விற்க அவர் வந்திருக்கிறார். “எங்களுக்கு பணம் தேவை,” என்கிறார் அவர்.

கடந்த வருடம் (2023), அவரின் நெற்பயிர் முழுமையாக அழிந்தது. குறுவை பயிராக கடுகு விதைத்திருந்தார். ஆனால் மூன்றில் ஒரு பகுதி, பூச்சிகளால் அழிந்தது. “கிட்டத்தட்ட 2.5 குவிண்டால் அறுவடை செய்தோம். அது மொத்தமாக கடனை அடைக்க போய்விட்டது,” என்கிறார் கல்முதீன்.

விவசாயியான கல்முதீன் நான்கு பிகா (கிட்டத்தட்ட மூன்று ஏக்கர்) நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். உள்ளூர் வட்டிக்காரர்களிடம் பெற்ற கடன்களில் உழலுகிறார். “நிறைய பணம் வாங்கி விட்டார்கள்,” என்னும் அவர், 100 ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி என்பதால் பெருஞ்சிரமமாக இருப்பதாக கூறுகிறார். “16,000 ரூபாய் கடன் வாங்கினேன். 20,000 ரூபாயாகி விட்டது. அதில் 5,000 ரூபாய்தான் அடைத்திருக்கிறேன்.”

காளையை விற்பதுதான் அவருக்கிருக்கும் ஒரே வழி. “இதனால்தான் விவசாயிகள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். விவசாயம் செய்யும் நான் காளையை விற்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் 2023ம் ஆண்டில் மழை வரும் என நம்பி காத்திருந்த கல்முதீன்.

PHOTO • Ashwini Kumar Shukla

பலாமுவின் கும்னி கிராமத்தை சேர்ந்த விவசாயியான கல்முதீன் அன்சாரி, பதாரில் நடக்கும் வாரக் கால்நடை சந்தையில் தன் காளையை விற்க 13 கிலோமீட்டர் நடந்து வந்திருக்கிறார். மழையின்மையும் பூச்சி தாக்குதலும் அவரின் நெற்பயிரை கடந்த வருடம் அழித்த பிறகு, பல்வேறு கடன்களில் அவர் உழலுகிறார்

ஜார்க்கண்டில் 70 சதவிகித விவசாயிகள், ஒரு ஹெக்டேருக்கும் குறைந்த அளவு நிலம்தான் வைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட எல்லா ( 92 சதவிகிதம் ) விவசாய நிலமும் வானம் பார்த்த பூமிதான். 33 சதவிகித நிலத்தில்தான் கிணறு நீர்ப்பாசன வசதி இருக்கிறது. கல்முதீன் போன்ற சிறு விவசாயிகள் அறுவடையில் பலன் கிடைத்துவிட வேண்டுமென்பதற்காக கடன் வாங்கி விதைகளையும் உரங்களையும் வாங்குகின்றனர்.

எனவே, வருகிற பொது தேர்தலில், தன்னுடைய கிராமத்துக்கு நீர்ப்பாசனம் செய்து தருபவருக்கே தன் வாக்கு என்கிறார் அவர். புது தில்லியிலிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் அவரிடம் தொலைக்காட்சியோ ஸ்மார்ட்ஃபோனோ இல்லை. தேர்தல் பத்திரங்கள் பற்றிய செய்தியை அவர் அறிந்திருக்கவில்லை.

பல்வேறு வாடிக்கையாளர்களுடன் மூன்று மணி நேரம் பேரம் பேசிய பிறகு, கண்காட்சியில் ஒருவழியாக கல்முதீன் தன் காளையை 5,000 ரூபாய்க்கு விற்றார். 7,000 ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

காளையை விற்ற பிறகு, கல்முதீனிடம் இரண்டு பசுக்களும் ஒரு கன்றும் இருக்கிறது. ஏழு பேர் கொண்ட குடும்பத்தை பார்த்துக் கொண்டு அவற்றையும் பார்த்துக் கொள்ள முடியுமென நம்புகிறார். “விவசாயிகளுக்கு நல்லது செய்பவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போம்,” என்கிறார் அவர் உறுதியாக.

தொடர்ந்து ஏற்பட்ட வறட்சிகளாக மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 2022ம் ஆண்டில் மொத்த மாநிலமும் - 226 ஒன்றியங்களும் - வறட்சி பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. அடுத்த வருடம் (2023) 158 ஒன்றியங்கள் வறட்சியை எதிர்கொண்டன.

PHOTO • Ashwini Kumar Shukla

வானம் பார்த்த பூமியான ஜார்க்கண்டின் பெரும்பாலான விவசாய நிலங்கள் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் தொடர்ந்து வறட்சிகளை எதிர்கொண்டது. நீர்ப்பாசனத் தேவைகளின் மூன்றில் ஒரு பங்கை கிணறுகள் பூர்த்தி செய்கிறது. எனவே நீர்ப்பாசனம் ஏற்பாடு செய்து தருபவருக்கே தன் வாக்கு என்கிறார் கல்முதீன்

பலாமு மாவட்டத்தின் 20 ஒன்றியங்களில் கடந்த வருடம் மழை பற்றாக்குறை இருந்தது. இந்த வருடம், ஒரு விவசாயக் குடும்பத்துக்கு ரூ.3,500 என மாநில அரசு அறிவித்திருந்த நிவாரணம்தான் தேர்தல் விவாதமாக இருக்கிறது. இன்னும் பலர் நிவாரணம் பெறவில்லை. “வறட்சி நிவாரணப் படிவம் நிரப்ப நான் பணம் கொடுத்தேன். ஒரு வருடம் (2022) நான் 300 ரூபாய் கொடுத்தேன். அடுத்த வருடம் (2023) 500 ரூபாய் கொடுத்தேன். ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை,” என்கிறார் சோனா தேவி.

மதியவேளை. ஜார்க்கண்டின் பரான் கிராமத்தில் 37 டிகிரி வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. 50 வயது சோனா தேவி, சுத்தியல் மற்றும் உளி கொண்டு கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தார். சமைப்பதற்கான விறகுக் கட்டை அது. அவரது கணவர், காமேஷ் புயாவுக்கு கடந்த வருடம் பக்கவாதம் வந்ததிலிருந்து, இந்த வேலையை சோனா தேவி செய்யத் தொடங்கினார். இருவரும் புயா தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். விவசாயம்தான் வாழ்வாதாரம்.

தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான அலோக் செளராசியாவுக்கு 2014ம் ஆண்டில் பிரசாரம் செய்து, 6,000 வரை நன்கொடை வசூல் செய்து அளித்ததாக காமேஷ் சொல்கிறார். “ஆனால் அவர் கடந்த 10 வருடங்களில் ஒருமுறை கூட எங்கள் பகுதிக்கு வரவில்லை.”

அவர்களின் இரண்டறை மண் வீடு, அவர்களின் 15 கதா (கிட்டத்தட்ட அரை ஏக்கர்) நிலத்தில் அமைந்திருக்கிறது. “இரண்டு வருடங்களாக விவசாயம் ஒன்றுமில்லை. கடந்த வருடம் (2022) நீர் இல்லை. இந்த வருடம் (2023) மழை குறைவு. நெல்லும் சரியாக விளையவில்லை,” என்கிறார் சோனா.

தேர்தல் பற்றிய கேள்வியை கேட்டதும் அவர் உடனே, “நாங்கள் சொல்வதை யார் கேட்கிறார்? வாக்கெடுப்பு சமயத்தில்தான் அவர்கள் (அரசியல்வாதிகள்) அக்கா, அண்ணா, மாமா என எங்களை தேடி வருவார்கள். ஜெயித்த பிறகு, எங்களை கண்டுகொள்ள கூட மாட்டார்கள்,” என்கிறார். 50 வயதாகும் அவர் இரு வறட்சிகளின்போதும் கணவருக்கு நேர்ந்த பக்கவாதத்தின்போதும் பெற்ற 30,000 கடனில் தவித்துக் கொண்டிருக்கிறார். ”எங்களுக்கு உதவுகிற கட்சிக்கு நாங்கள் வாக்களிப்போம்.”

தொடர்ந்து அவர், “நீங்கள் (அரசியல்வாதிகளை) சந்திக்கப் போனால், உங்களை நாற்காலியில் அமரச் சொல்வார்கள். எங்களை வெளியே காத்திருக்க சொல்வார்கள்.”

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

பலாமுவின் சியாங்கி கிராம (இடது) விவசாய நிலங்கள் நீரின்மையால் நடவின்றி இருக்கின்றன. குறுவை பருவத்தில் வழக்கமாக விவசாயிகள் கோதுமை விளைவிப்பார்கள். ஆனால் தற்போது கிணறுகள் வறண்டு போவதால், அவர்களுக்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட கால்வாய் (வலது) அப்போதிருந்து காய்ந்து போய்தான் இருக்கிறது

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: பலாமுவின் பரான் கிராமத்தில் சோனா தேவி 2023ம் ஆண்டில் வறட்சி நிவாரணப் படிவத்தை காசு கொடுத்து நிரப்பினார். ஆனால் இன்னும் பணம் வரவில்லை. ‘கடந்த வருடம் (2022) நீர் இல்லை,’ என்கிறார் அவர். வலது: அவரது பக்கத்து வீட்டுக்காரரான மால்தி தேவி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு பெற்றார். ‘கிராமத்தின் பிற பெண்களுடன் பிரச்சினைகளை நாங்கள் பேசி பிறகு யாருக்கு வாக்களிப்பது என (கூட்டாக) தீர்மானிப்போம்,’ என்கிறார் அவர்

45 வயதாகும் மால்தி தேவி, சோனாவின் பக்கத்து வீட்டுக்காரரும் விவசாயியும் ஆவார். ஒரு பிகா (ஒரு ஏக்கருக்கும் குறைவு) நிலத்தில் விளைவிக்கும் அவர், விவசாயத் தொழிலாளராகவும் இருக்கிறார். “எங்களின் நிலம் தவிர்த்து பொடாயா (குத்தகை விவசாயம்) நிலத்தின் வழியாக 15 குவிண்டால் அரிசி கிடைக்கும். இந்த வருடம் உருளைக்கிழங்கு விதைத்தோம். ஆனால் சந்தையில் விற்குமளவுக்கு விளைச்சல் கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் வீடு பெறும் வாய்ப்பு கொண்டவரான அவர், வீடு ஒதுக்கப்பட்ட பிறகு மோடிக்கு பதிலாக காங்கிரஸுக்கு வாக்களிப்பதென முடிவெடுத்ததாக சொல்கிறார். “கிராமத்தின் பிற பெண்களுடன் நாங்கள் கலந்து பேசி, பிறகு யாருக்கு வாக்களிப்பதென (கூட்டாக) முடிவெடுப்போம். சிலருக்கு அடிகுழாய் தேவை. சிலருக்கு கிணறு தேவை. சிலருக்கு காலனி தேவை. இவற்றை நிறைவேற்றுபவர் யாரோ அவருக்குதான் நாங்கள் வாக்களிப்போம்,” என்கிறார் அவர்.

*****

“பருப்பு, கோதுமை, அரிசி எல்லாமும் விலை உயர்ந்து விட்டது,” என்கிறார் பலாமுவின் சியாங்கி கிராமத்தை சேர்ந்த ஆஷா தேவி. முப்பது வயதுகளில் இருக்கும் இருவருக்கும் ஆறு குழந்தைகள் இருக்கின்றன. 35 வயது கணவரான சஞ்சய் சிங் தொழிலாளராக வேலை பார்க்கிறார். ஜார்க்கண்டின் 32 பட்டியல் பழங்குடிகளில் ஒன்றான செரோ பழங்குடி யை சேர்ந்த குடும்பம் அது. “நன்றாக விவசாயம் நடக்கும் காலத்தில், இரண்டு வருடங்களுக்கு போதிய உணவு எங்களுக்கு இருக்கும். அதையே இப்போது நாங்கள் வாங்கும் நிலையில் இருக்கிறோம்,” என்கிறார் அவர்.

விலைவாசி, வறட்சி போன்ற விஷயங்களை முன் வைத்து வாக்கு போடுவாரா எனக் கேட்டால், “விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் மோடிஜி ஒன்றும் செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் அவரைத்தான் தேர்ந்தெடுக்கிறோம்,” என அவர் உறுதியாகக் கூறுகிறார். மேலும் அவர், ரூ.1,600 கொடுத்து தனியார் பள்ளிக்கு ஒரு குழந்தையை மட்டும்தான் அனுப்ப முடிகிறது என்கிறார்.

2019 தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் விஷ்ணு தயாள் ராம், 62 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் குரான் ராமை அவர் வென்றிருந்தார். இந்த வருடமும் விஷ்ணு தயாள் ராம்தான் வேட்பாளர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தொகுதியில் மொத்தம் 18 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

விலைவாசி உயர்வை தாண்டி, வறட்சியும் முக்கியமான பிரச்சினை. “இங்குள்ள மக்களுக்கு குடிநீர் கிடைப்பது கூட சிரமமாக இருக்கிறது. கிராமத்தின் பெரும்பாலான கிணறுகள் காய்ந்து கிடக்கின்றன. அடிகுழாய் மிக தாமதமாக தண்ணீரை கொடுக்கிறது,” என்கிறார் ஆஷா தேவை. “கால்வாய் கட்டப்பட்டும் அதில் நீர் இல்லை.”

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: சியாங்கியில் வசிக்கும் ஆஷா தேவி ஊருக்குள் ஒரு கடையை நடத்துகிறார். அவரின் கணவர் தினக்கூலியாக வேலை பார்க்கிறார். ‘பருப்பு, கோதுமை, அரிசி எல்லாமும் விலை அதிகமாக இருக்கிறது,’ என்கிறார் அவர். வலது: பரானை சேர்ந்த சுரேந்திர சவுதரி, மாட்டை விற்க கால்நடை சந்தைக்கு வந்தார்

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

சியாங்கி கிராமத்தை சேர்ந்த அம்ரிகா சிங் கடந்த இரு வருடங்களில் மூன்று லட்சம் ரூபாய் நஷ்டத்தை அடைந்திருக்கிறார். அவரின் கிணறு (வலது) இந்த வருடம் காய்ந்து விட்டது. ‘விவசாயியை யார் பொருட்படுத்துகிறார்? எத்தனை விவசாயிகள் நல்ல விலை கேட்டு போராடினார்கள், ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை,’ என்கிறார் அவர்

அவரின் பக்கத்து வீட்டுக்காரரான அம்ரிகா சிங், கடந்த இரு வருடங்களில் மூன்று லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறார். “முன்பு, எதுவுமில்லை என்றாலும் காய்கறிகளேனும் நாங்கள் வளர்ப்போம். ஆனால் இந்த வருடம், கிணறும் காய்ந்து விட்டது.”

பலாமுவின் பிற விவசாயிகளை போல, அம்ரிகாவும் அப்பகுதியில் நிலவும் நீர் பஞ்சத்தை சுட்டிக் காட்டினார். “நீரின்றி, விவசாயம் செய்ய முடியாது. கிணற்று நீர் வைத்து எவ்வளவு விவசாயம் செய்ய முடியும்.”

வடக்கு கோயல் ஆற்றிலுள்ள மண்டல் அணை உதவியிருக்க வேண்டும். “தலைவர்கள் வெற்று வாக்குறுதிகள் கொடுக்கின்றனர். மண்டல் அணையில் ஒரு கதவு பொருத்தப்படுமென 2019 ம் ஆண்டில் மோடி கூறினார். அது பொருத்தப்பட்டிருந்தால், நீர் வரத்து இருந்திருக்கும்,” என்கிறார் அம்ரிகா சிங். “விவசாயி பற்றி யார் கவலைப்படுகிறார்? எத்தனை விவசாயிகள் நல்ல விலை கேட்டு போராடினார்கள், ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அரசாங்கம் அதானிக்கும் அம்பானிக்கும்தான் கடன்களை ரத்து செய்து உதவுகிறது. விவசாயி என்ன செய்வது?” என்கிறார் அவர்.

“இப்போது இருப்பது பாஜக அரசாங்கம். எங்களுக்கு கிடைக்கும் கொஞ்சமும் அவர்களால்தான் கிடைக்கிறது. அவர்கள் ஏதும் செய்யவில்லை எனில், மற்ற கட்சி ஒன்றுமே செய்யவில்லை என அர்த்தம்,” என்கிறார் விவசாயியான சுரேந்தர். தேர்தல் பத்திரம் மற்றும் வேலையின்மை பிரச்சினைகளை பொருட்படுத்தாமல், “அதெல்லாம் பெரிய மனிதர்களின் பிரச்சினை. நாங்கள் அந்தளவு கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. பலாமு மாவட்டத்தின் பெரும் பிரச்சினை நீர்ப்பாசனம்தான். விவசாயிகளுக்கு நீர் தேவை,” என்கிறார்.

சுரேந்தரிடம் ஐந்து பிகா (3.5 ஏக்கர்) நிலம், பலாமுவின் பரான் கிராமத்தில் இருக்கிறது. வானம் பார்த்த பூமி. “மக்கள் அமர்ந்து சூதாடுவார்கள். நாங்கள் விவசாயத்தில் சூதாடுகிறோம்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Ashwini Kumar Shukla

Ashwini Kumar Shukla is a freelance journalist based in Jharkhand and a graduate of the Indian Institute of Mass Communication (2018-2019), New Delhi. He is a PARI-MMF fellow for 2023.

Other stories by Ashwini Kumar Shukla
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan