“எனக்கு சிக்ஸ் பேக் உடற்கட்டு சுலபமாக கிடைத்தது. நான் உடற்பயிற்சி செய்ததே இல்லை. ஷபாசின் கை தசைகளை பாருங்கள்,” என்கிறார் சக தொழிலாளரை சிரித்தபடி சுட்டிக் காட்டி.

முகமது அலியும் ஷபாச் அன்சாரியும் மீரட்டின் உடற்பயிற்சிக் கூடத்திலும் உடற்பயிற்சி உபகரணத் துறையிலும் வேலை பார்க்கிறார்கள். உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்பவர்கள் தூக்கும் பளுவை விட அதிகமாக ஒரு வாரத்தில் இவர்கள் தூக்கி விடுவார்கள். உடற்பயிற்சி இலக்காக ஒன்றும் இந்த கடுமையான பளுவை தூக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் வாழும் இஸ்லாமிய குடும்பங்களின் இளைஞர்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக இதுதான் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் இந்த மொத்த மாவட்டமும் விளையாட்டு பொருட்கள் உற்பத்திக்கான மையமாக விளங்குகிறது.

“சில நாட்களுக்கு முன், இளைஞர்கள் தங்களின் உடற்கட்டுகளை காட்டி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்,” என்கிறார் முகமது சாகிப். தொழில்முனைவரான 30 வயது சாகிப், அவரது குடும்பம் வாடகை எடுத்து அமைத்திருக்கும் உடற்பயிற்சி உபகரண கடையின் கல்லாவில் அமர்ந்திருக்கிறார். மீரட் நகரில் விளையாட்டு பொருட்கள் விற்கும் சந்தையாக இயங்கும் ஒரு கிலோமீட்டர் நீள சூரஜ் குண்ட் சாலையில் அக்கடை இருக்கிறது.

“வீட்டில் உள்ளவர்கள் கூட பயன்படுத்தும் சாதாரண உபகரணம் முதல், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் பெரும் உடற்பயிற்சி அமைப்பு வரை, ஏதோவொரு வகை உடற்பயிற்சி உபகரணத்தை அனைவரும் விரும்புகீறார்கள்,” என்கிறார் அவர்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே பல மின்சார மூன்று சக்கர வாகனங்கள் (மினி மெட்ரோ என அழைக்கப்படுகிறது) குழாய்கள், இரும்புத் தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் பிசியாக இருக்கும் சாலைக்குள் நுழைந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. “உடற்பயிற்சிக் கூட இயந்திரங்கள் சிறு உபகரணங்களாக செய்யப்பட்டு பின்பு ஒன்றிணைக்கப்படுகின்றன,” என உபகரணங்களை சுமந்து செல்லும் வாகனங்களை கடைக்குள்ளிருந்து பார்த்தபடி சொல்கிறார் சாகிப்.

Left: Mohammad Saqib at their rented gym equipment showroom on Suraj Kund Road in Meerut city .
PHOTO • Shruti Sharma
Right: Uzaif Rajput, a helper in the showroom, demonstrating how a row machine is used
PHOTO • Shruti Sharma

இடது: மீரட் நகரின் சூரஜ் குந்த் சாலையின் உடற்பயிற்சி உபகரண கடையில் முகமது சாகிப். வலது: கடையில் உதவியாளராக இருக்கும் உஜாய்ஃப் ராஜ்புத் ஓர் உபகரணத்தை எப்படி பயன்படுத்துவதென செய்து காட்டுகிறார்

இரும்புப் பணிகளுக்கு மீரட் முக்கியமான இடமாக விளங்குவது புதிதல்ல. “கத்தரிக்கோல் துறைக்கு ஏற்கனவே இந்த நகரம் புகழ் பெற்றது,” என்கிறார் சாகிப். 2013ம் ஆண்டில் மூன்று நூற்றாண்டு பழமையான மீரட் கத்திரிக்கோல் துறை, புவிசார் குறியீடு பெற்றது.

மீரட்டின் உடற்பயிற்சி உபகரண உற்பத்தியின் வரலாறு சமீபத்தியதுதான். 199களின் தொடக்கத்திலிருந்துதான் அது இயங்கி வருகிறது. “மாவட்டத்தின் விளையாட்டுப் பொருட்கள் துறையில் முன்னணி வகிக்கும் பஞ்சாபி தொழில்முனைவோரும் சில உள்ளூர் நிறுவனங்களும்தான் முதன்முதலில் இத்துறைக்குள் நுழைந்தவர்கள்,” என்கிறார் சாகிப். “திறன் வாய்ந்த இரும்புப் பணியாளர்கள் ஏற்கனவே இங்கு இருந்தனர். உடற்பயிற்சிக் கூட உபகரணங்களுக்கு தேவையான மூலப்பொருட்களான மறுபயன்பாட்டு இரும்பு தடிகள், குழாய்கள் மற்றும் தகரங்கள் போன்றவையும் எளிதாக இந்த நகரத்தில் கிடைக்கின்றன.”

பெரும்பாலான இரும்புக் கொல்லர்களும் இரும்பு வார்க்கும் பணியாளர்களும் இஸ்லாமியர்கள்தான். ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்தவர்கள். “குடுபத்தின் மூத்த ஆண் குழந்தைக்கு இளம் வயதிலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு விடும்,” என்கிறார் சாகிப். “சைஃபி மற்றும் லோஹார் (பிற பிற்படுத்தப்பட்ட சமூக) சமூகப்பிரிவினர் இத்தொழிலில் திறன் வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றன, “என்கிறார் அவர். சாகிபின் குடும்பம் அன்சாரி சமூகத்தை சேர்ந்த குடும்பம். நெசவாளர்களில் இஸ்லாமிய சமூக உட்பிரிவு அது.  மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக அவர்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

“பல ஆலைகள் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இஸ்லாமாபாத், ஜாகீர் உசேன் காலனி, லிசாதி கேட் மற்றும் சைதி ஃபார்ம் முதலிய பகுதிகளில் இருக்கின்றன,” என்கிறார் சாகிப். மீரட் மாவட்ட மக்கள்தொகையில் இஸ்லாமியர்கள் 34 சதவிகிதம் இருக்கின்றனர். மாநிலத்திலேயே அதிக இஸ்லாமியர்களை கொண்டிருக்கும் இடங்களில் ஏழாவது இடத்தில் அந்த மாவட்டம் (சென்சஸ் 2011) இருக்கிறது.

இங்கிருக்கும் இரும்பு பணியாளர்களில் அதிகம் இஸ்லாமியர் இருப்பது மீரட்டுக்கும் புதிதல்ல. இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களின் கல்வி மற்றும் சமூகப் பொருளாதார நிலை பற்றிய 2006ம் ஆண்டின் அறிக்கையின்படி ( Sachar Committee Report ), பெருமளவில் இஸ்லாமியர்கள் பணிபுரியும் மூன்று உற்பத்தி தொழில்களில் ஒன்று இரும்பு பொருள் தயாரிப்பு ஆகும்.

Asim and Saqib in their factory at Tatina Sani. Not just Meerut city, but this entire district in western UP is a hub for sports goods’ production
PHOTO • Shruti Sharma
Asim and Saqib in their factory at Tatina Sani. Not just Meerut city, but this entire district in western UP is a hub for sports goods’ production
PHOTO • Shruti Sharma

தாதினா சானியின் தொழிற்சாலையில் அசிமும் சாகிபும்.  மீரட் நகரம் மட்டுமின்றி, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மொத்த மாவட்டமும் விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு மையமாக விளங்குகிறது

சாகிபும் முப்பது வயதுகளில் இருக்கும் சகோதரர்கள் நசிம் மற்றும் முகமது அசிமும் நகரத்தின் இரும்பு தொழிற்சாலைகளில் பணியாளர்களாக வேலை பார்க்கத் தொடங்கினர். தந்தையின் மொத்த துணி வியாபாரம் 2000ங்களின் தொடக்கத்தில் நஷ்டத்தை சந்தித்தபோது அவர்கள் பதின்வயதுகளில் இருந்தனர். அப்போதிருந்து வேலை பார்க்கத் தொடங்கி விட்டனர்.

அகமதுநகர் வீட்டிலேயே டம்பல் தட்டுகளை அசிம் செய்யத் தொடங்கினார். வாகன உபகரண உற்பத்தி வியாபாரத்தில் நசிம் வேலை செய்தார். இரும்பு உபகரண உற்பத்தி ஆலையில் ஃபக்ருத்தின் அலி சைஃபிக்கு உதவியாளராக சாகிப் பணிபுரிந்தார். “வெவ்வேறு வடிவங்களில் உடற்பயிற்சி உபகரணங்களையும் ஊஞ்சல்களையும் ஜாலி கதவுகளையும் செய்யவும் உலோகங்களை வெட்ட, வளைக்க, ஒட்ட, இணைக்கவும் அவர் கற்றுக் கொடுத்தார்,” என்கிறார் சாகிப்.

நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் இருக்கும்  தாதினா சானி கிராமத்தில் அந்த சகோதரர்கள் சொந்தமாக உடற்பயிற்சிக் கூட பொருட்கள் உற்பத்தி ஆலை நடத்தி வருகின்றனர். உபகரணங்கள், கத்திரிக்கோல்கள், இரும்பு நாற்காலிகள் போன்றவற்றை தயாரிக்கும் மையமாகவும் மீரட் (சென்சஸ் 2011) இருந்து வருகிறது.

“என்னை விட அதிகம் தெரிந்த திறன் வாய்ந்த இரும்புப் பணியாளர்கள் மீரட்டில் இருக்கின்றனர். ஒரே வித்தியாசம், தொழிலாளராக இருந்து முதலாளியானவன் நான். பிறர் கிடையாது,” என்கிறார் சாகிப்.

சகோதரர்கள் சேமித்து வைத்த பணத்தை கொண்டு MCA படிக்க முடிந்ததால்தான் அவருக்கு இத்தகைய வாழ்க்கை சாத்தியப்பட்டது. “முதலில் என் சகோதரர்கள் தயங்கினர். ஆனால் MCA-வில் கிட்டும் அறிவு இத்துறையில் சொந்த வியாபாரம் தொடங்க உதவும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது,” என்கிறார் சாகிப்.

*****

Left: Metal pieces are cut, welded, buffed, finished, painted, powder-coated and packed in smaller parts which are later assembled and fitted together.
PHOTO • Shruti Sharma
Right : A band saw cutting machine used to slice solid iron cylindrical lengths into smaller weight plates
PHOTO • Shruti Sharma

இடது: உலோக துண்டுகள் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, முடிக்கப்பட்டு வண்ணம் பூசப்படுகின்றன. பிறகு இணைத்துக் கொள்ளும் வகையில் தனித்தனியாக பேக் செய்யப்படுகின்றன. வலது: நீளமான இரும்பு உருளைகளை சிறு எடை தட்டுகளாக வெட்ட ஓர் அறுவை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது

The factory workers dressed in colourful t-shirts operate electric machines that radiate sparks when brought in contact with metal
PHOTO • Shruti Sharma

வண்ண சட்டைகள் அணிந்திருக்கும் ஆலைத் தொழிலாளர்கள் இயக்கும் மின் சாதங்களிலிருந்து பொறிகள் பறக்கின்றன

“உடற்பயிற்சி கருவிக்கு, உலோகங்கள் வெட்டப்பட வேண்டும். ஒட்டப்பட்டு, முடிக்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு, பேக் செய்யப்பட வேண்டும். சிறு பகுதிகள் பிற்பாடு ஒன்றாக இணைக்கப்படு,” என்கிறார் சாகிப் நாம் ஆலையை சுற்றிப் பார்க்கும்போது. “எந்த பகுதி செய்யப்படுகிறது என்பது சாமனியானுக்கு புரியாது. ஏனெனில் அவர்கள், பொருத்தப்பட்ட அழகான மொத்தக் கருவியைத்தான் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டு பார்த்திருப்பார்கள்.”

அவர் விவரிக்கும் உடற்பயிற்சிக் கூடங்கள் நாம் இருக்கும் ஆலையிலிருந்து கற்பனை செய்து பார்க்க முடியாது. மூன்று சுவர்களுக்கு நடுவேயும் தகரக்கூரைக்கு கீழாகவும் தாதினா சானியில் அமைந்திருக்கும் தொழிற்சாலை, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.  கருவிகளை உருவாக்கும் பகுதி, வண்ணம் பூசும் பகுதி, பேக் செய்யப்படும் பகுதி. காற்றோட்டத்துக்காக ஒரு பக்கம் திறந்துவிடப் பட்டிருக்கிறது. 40-லிருந்து 45 டிகிரி வரை வெப்பம் செல்லும் கோடைக்காலத்தின் நீண்ட மாதங்களில் இது மிகவும் முக்கியம்.

கடையில் நடக்கும்போது, காலடிகளை பார்த்து வைக்க வேண்டியிருக்கிறது.

15 அடி நீள இரும்புத் தடிகளும் குழாய்களும், 400 கிலோ வரை எடையுள்ள இரும்பு உருளைகளும் எடைத்தட்டுகளை செய்ய தேவைப்படும் அடர்ந்த தட்டையான உலோகத் தாள்களும் மின்சாரத்தில் இயக்கப்படும் பெரும் இயந்திரங்களும் வெவ்வேறு உற்பத்திக் கட்டங்களில் இருக்கும் உடற்பயிற்சிக் கூட உபகரணங்களும் தரை முழுக்கக் கிடக்கின்றன. குறுகலாக குறிக்கப்படாத ஒரு பாதை இருக்கிறது. அதை விட்டுவிட்டால், ஆழமான வெட்டுக்காயமோ கனமான பொருள் விழுந்து எழும்பு முறிவோ கூட ஏற்படலாம்.

பழுப்பு நிறம், சாம்பல் நிறம், கறுப்பு நிறம் கொண்ட இந்த அசைவற்ற கனமான பொருட்களுக்கு மத்தியில் இருக்கும் ஒரே அசைவு நிறைந்த விஷயம் தொழிலாளர்களிடமிருந்து வெளிப்படும் பிரகாசம்தான். வண்ணமயமான சட்டைகளுடன் அவர்கள் இயக்கும் மின்சார இயந்திரங்கள், உலோகங்களுடன் உராய்கையில் பொறி பறக்கிறது.

Asif pushes the iron pipe along the empty floor on his left to place it on the cutting machine; he cuts (right) the 15 feet long iron pipe that will go into making the 8 station multi-gym
PHOTO • Shruti Sharma
Asif pushes the iron pipe along the empty floor on his left to place it on the cutting machine; he cuts (right) the 15 feet long iron pipe that will go into making the 8 station multi-gym
PHOTO • Shruti Sharma

தரையில் இடப்பக்கம் கிடக்கும் இரும்புக் குழாயை ஆசிஃப் அறுவை இயந்திரத்துக்கு தள்ளுகிறார். எட்டு பயிற்சிக்கூடங்களை அமைக்க உதவும் 15 அடி நீள குழாயை அவர் வெட்டுகிறார் (வலது)

Left: Mohammad Naushad, the lathe machine technician at the factory, is in-charge of cutting and shaping the cut cylindrical iron and circular metal sheet pieces into varying weights.
PHOTO • Shruti Sharma
Right: At Naushad's station, several disc-shaped iron pieces stacked on top of one another based on their weight
PHOTO • Shruti Sharma

இடது: ஆலையின் லேத் இயந்திர நிபுணரான முகமது நவுஷத்தான், இரும்பு உருளையையும் வட்ட உலோக தாள் துண்டுகளை பல எடைகளில் வெட்டும் வேலை செய்பவர். வலது; நவுஷத் பணிபுரியும் இடத்தில், எடைக்கேற்ப பல வட்ட இரும்புத் துண்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்படுகின்றன

இங்குள்ள பணியாளர்களில் முகமது ஆசிஃப் மட்டும்தான் தாதினா சானியை சேர்ந்தவர். மற்றவர்கள் மீரட்டின் பிற பகுதிகளிலிருந்து வருகிறார்கள். “இரண்டரை மாதங்களாக நான் இங்கு வேலை பார்க்கிறேன். இது என் முதல் வேலை இல்லை. இதற்கு முன்பு இன்னொரு உடற்பயிற்சிக் கூட ஆலையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்,” என்கிறார் 18 வயது இரும்பு குழாய் வெட்டும் வல்லுநரான ஆசிஃப். குவியலிலிலிருந்து 15 அடி நீள குழாய்களை எடுத்து, அவரின் இடப்பக்கம் வைத்து அவற்றை தள்ளி, குழாய் வெட்டும் இயந்திரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கிறார். செய்யப்படும் கருவியின் நீளத்துக்கும் வடிவத்துக்கும் தேவைப்படும் வெட்டுகளுக்கேற்ப, அங்குல டேப் கொண்டு குறிக்கிறார்.

“என் தந்தை ஒரு வாடகை ஆட்டோ ஓட்டுகிறார்,” என்னும் ஆசிஃப், “அவரின் வருமானம் போதாததால் நானும் வேலைக்கு போக வேண்டி வந்தது,” என்கிறார். மாதத்துக்கு ரூ. 6,500 சம்பாதிக்கிறார்.

ஆலையின் இன்னொரு பகுதியில் முகமது நவுஷத், இரும்பு உருளையை அறுவை இயந்திரம் கொண்டு வெட்டிக் கொண்டிருக்கிறார். 32 வயதாகும் அவர், லேத் இயந்திர நிபுணராகவும் இங்கு இருக்கிறார். 2006ம் ஆண்டிலிருந்து அசிமுடன் பணிபுரிந்து வருகிறார். “இவை எல்லாமும் வெவ்வேறு வகையான உடற்பயிற்சி உபகரணத்துடன் பொருத்தப்படும்,” என்கிறார் நவுஷத் எடைக்கேற்ப அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வட்ட வடிவிலான இரும்புத் துண்டுகளை சுட்டிக் காட்டி. மாதந்தோறும் நவுஷத் 16,000 ரூபாய் ஈட்டுகிறார்.

நவுஷத்தின் பணியிடத்துக்கு இடப்பக்கத்தில் 42 வயது அசிஃப் சைஃபியும் 27 வயது அமிர் அன்சாரியும் இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாராவிலுள்ள ஒரு ராணுவ முகாமுக்கு கொடுக்கப்பட வேண்டிய பல உடற்பயிற்சிக் கூட அமைப்பை ஒன்றிணைக்கும் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ஸ்ரீநகர் மற்றும் கத்ரா (ஜம்மு காஷ்மீர்), அம்பாலா (ஹரியானா), பிகேனர் (ராஜஸ்தான்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இடங்களின் இந்திய ராணுவ மையங்கள் இருக்கின்றன. “தனியார் உடற்பயிற்சிக் கூட வாடிக்கையாளர்கள் மணிப்பூர் தொடங்கி கேரளா வரை இருக்கிறார்கள். நேபாளுக்கும் பூடானுக்கும் கூட நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம்,” என்கிறார் சாகிப்.

Left: Asif Saifi finalising the distance between two ends of the multi-gym based on the cable crossover exercise.
PHOTO • Shruti Sharma
Right: He uses an arc welder to work on the base of the multi-gym
PHOTO • Shruti Sharma

இடது: ஆசிஃப் சைஃபி இரு முனைகளின் தூரத்தை உறுதிப்படுத்துகிறார். வளைவான வெல்டரை கொண்டு அதை அவர் செய்கிறார்

Amir uses a hand operated drilling machine (left) to make a hole into a plate that will be welded onto the multi-gym. Using an arc welder (right), he joins two metal pieces
PHOTO • Shruti Sharma
Amir uses a hand operated drilling machine (left) to make a hole into a plate that will be welded onto the multi-gym. Using an arc welder (right), he joins two metal pieces
PHOTO • Shruti Sharma

உடற்பயிற்சி அமைப்புக்குள் பொருத்தப்படும் தட்டில், துளையிடும் கருவி (இடது) கொண்டு துளையிடுகிறார் அமிர். வளைவான வெல்டரை (வலது) கொண்டு இரு உலோக துண்டுகளையும் இணைக்கிறார்

இருவரும் வெல்டிங் வல்லுநர்கள் ஆவர். சிறு பகுதிகள் செய்யும் வேலையையும் பெரிய கருவியை இணைக்கும் வேலையையும் அவர்கள் செய்கின்றனர். இயந்திரங்களை செய்வதற்கான ஆர்டர்கள் கிடைப்பதை பொறுத்து அவர்கள் மாதத்துக்கு 50-60,000 ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர்.

“வெல்டிங் இயந்திரத்தில் மெல்லிய மின்முனை ஒன்று முன்னால் இருக்கும். அது அடர்த்தி நிறைந்த இரும்புக்குள் குத்தி நுழைந்து அதை உருக்கும்,” என விவரிக்கும் அமிர், “இரு உலோக துண்டுகளை இணைக்கும்போது மின் முனையை உறுதியான கை கொண்டு கையாள வேண்டும். அதை செய்ய அனுபவம் வாய்ந்த திறமை வேண்டும்.”

“அமிர் மற்றும் ஆசிஃப் ஒப்பந்தத்தில் பணிபுரிகின்றனர்,” என்கிறார் சாகிப் ஊதிய முறையை குறித்து. “பெரும் திறன் தேவைப்படுகிற பணிகள் யாவும் ஒப்பந்த முறையில் செய்யப்படுகின்றன. வல்லுநர்கள் கிடைப்பது கஷ்டம். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்க வேண்டும்,” என்கிறார்.

திடீரென கடையின் தரையை சுற்றியிருக்கும் ஒளி மங்குகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. சில கணங்களுக்கு, ஜெனரேட்டர் போடப்படும் வரை வேலை நின்றது. ஜெனரேட்டர் மற்றும் மின் சாதனங்களின் சத்தத்தை தாண்டி கேட்க வேண்டுமென்பதால் பணியாளர்கள் உரத்து சத்தம் போட்டு பேசுகின்றனர்.

அடுத்த பணியிடத்தில் 21 வயது இபாத் சல்மானி, உடற்பயிற்சி கூடத்தின் முனைகளை வெல்டர் கொண்டு வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். “எந்தெந்த வெப்பநிலையில் மெல்லிய வலுவான துண்டுகள் இணைக்கப்படுமென தெரியாமல் செய்தால், இரும்பு உருகிப் போய்விடும்,” என்கிறார் இபாத். மாதந்தோறும் 10,000 ரூபாய் ஈட்டுகிறார்.

உலோகத் துண்டில் வேலை பார்க்க குனியும் இபாத், கண்களையும் கைகளையும் தீப்பொறியிலிருந்து காத்துக் கொள்ள ஒரு முகமூடியை பிடித்துக் கொள்கிறார். “எங்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கின்றன.  பாதுகாப்பு, வசதி ஆகியவற்றை சார்ந்து பணியாளர்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்கின்றனர்,” என்கிறார் சாகிப்.

Left: Ibad Salmani  uses a hand shield while strengthening the joints of gym equipment parts with a Metal Inert Gas (MIG) welder.
PHOTO • Shruti Sharma
Right: Babu Khan, 60, is the oldest karigar at the factory and performs the task of buffing, the final technical process
PHOTO • Shruti Sharma

இடது: இபாத் சல்மானி, உடற்பயிற்சிக் கூட கருவியின் முனைகளை கைக்கவசம் கொண்டு ஒரு வெல்டரால் வலுப்படுத்துகிறார். வலது: 60 வயது பாபு கான், இறுதி தொழில்நுட்பப் பணியை செய்கிறார்

“எங்கள் விரல்கள் எரிந்துவிடும்; இரும்புக் குழாய்கள் கால்களில் விழும். வெட்டுகள் சாதாரணமாக நேரும்,” என்கிறார் அசிஃப் சைஃபி. “சிறுவயதிலிருந்தே அவற்றுக்கு நாங்கள் பழகி விட்டோம். இந்த வேலையை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை.”

முதியப் பணியாளரான 60 வயது பாபு கான், முன்னங்கைகளை பருத்தி துணி துண்டுகளால் போர்த்திக் கொண்டு, பெரிய துணியை இடுப்பை சுற்றியும் கால்களை சுற்றியும் கட்டிக் கொண்டு தீப்பொறிகளை தவிர்க்கிறார். “இரும்புத் தடி வெல்டிங் பணியை இன்னொரு உடற்பயிற்சிக் கூட உபகரண ஆலையில் நான் செய்திருக்கிறேன். ஆனால் இப்போது இந்த மெருகேற்றும் வேலை செய்கிறேன்,” என்கிறார் அவர்.

”வெட்டுவதாலும் வெல்டிங் செய்வதாலும் இருக்கும் சிறு செதில்களை நீக்கும் நுட்பத்துக்கு மெருகேற்றுதல் எனப் பெயர்,” என விவரிக்கிறார் சாகிப். மாதத்துக்கு பாபு 10,000 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

மேற்பகுதிக்கு செழுமை கொடுக்கப்பட்ட பிறகு 45 வயது ஷாகிர் அன்சாரி, உபகரணத்தின் பகுதிகளின் இடைவெளிகளில் பட்டி தடவி, அரத்தாள் கொண்டு தேய்க்கிறார். சாகிபின் மைத்துனரான ஷாகிர் இங்கு ஆறு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். மாதத்துக்கு 50,000 ரூபாய் வருமானம் பெறுகிறார். ”எனக்கென சொந்தமாக உற்பத்தி வியாபாரம் இருக்கிறது. டீசலில் ஓடும் ஆட்டோக்களுக்கான இரும்பு கூம்பு வியாபாரம். ஆனால் CNG (இயற்கை வாயு) ஆட்டோக்கள் வந்த பிறகு என்னுடைய வேலை குலைந்து போனது,” என்கிறார் அவர்.

ப்ரைமர் மற்றும் பூச்சை கருவியில் ஷகீர் பூசி முடித்த பிறகு, மேலே துகள் பூசப்படும். “துரு பிடிக்காமல் இருக்கவும் நீண்ட காலம் உழைக்கவும் அது உதவுவதாக,” சாகிப் விளக்குகிறார்.

Left: Shakir Ansari applies body filler putty to cover gaps on the surface at the joints.
PHOTO • Shruti Sharma
Right: Sameer Abbasi (pink t-shirt) and Mohsin Qureshi pack individual parts of gym equipment
PHOTO • Shruti Sharma

இடது: ஷாகிர் அஞ்சாரி, இடைவெளிகளில் பட்டி தடவி நிரப்புகிறார். வலது: சமீர் அப்பாஸி (பிங்க் சட்டை) மற்றும் மொசின் குரேஷி கருவிகளின் தனித் தனி பகுதிகளை பேக் செய்கின்றனர்

எல்லா புதிய உபகரணங்களும் தனித்தனியாக பேக் செய்யப்பட்டு வாசல் கேட்டுக்கு அருகே வைக்கப்படுகின்றன. அங்கிருந்து அவை ட்ரக்குகளில் ஏற்றப்படும். பேக்கிங் வேலை செய்யும் முகமது அதில், சமீர் அப்பாஸி, மொசின் குரேஷி, ஷபாஸ் அன்சாரி ஆகியோர் 17-18 வயதுகளில் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் மாதத்துக்கு ரூ.6500 சம்பாதிக்கின்றனர்.

குப்வாராவின் ராணுவ உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதற்கான ட்ரக் வந்துவிட்டது. அதில் எல்லாவற்றையும் ஏற்ற வேண்டும்.

“ஆர்டர் ட்ரக்கில் போகும் இடங்களுக்கெல்லாம் நாங்கள் ரயிலில் சென்று அவற்றை இணைத்து கொடுப்போம்,” என்கிறார் சமீர். “இந்த வேலையின் காரணமாகதான் எங்களால் மலைகளையும் கடல்களையும் பாலைவனத்தையும் பார்க்க முடிந்தது.”

தமிழில் : ராஜசங்கீதன்

Shruti Sharma

Shruti Sharma is a MMF-PARI fellow (2022-23). She is working towards a PhD on the social history of sports goods manufacturing in India, at the Centre for Studies in Social Sciences, Calcutta.

Other stories by Shruti Sharma
Editor : Sarbajaya Bhattacharya

Sarbajaya Bhattacharya is a Senior Assistant Editor at PARI. She is an experienced Bangla translator. Based in Kolkata, she is interested in the history of the city and travel literature.

Other stories by Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan