அறுபது அடி உயர மரத்தில் ஏறி தேன் சேகரிப்பதற்கும், அடர்ந்த முதுமலை காட்டில் காட்டு யானைகளுக்கு மத்தியில் வேலை செய்வதற்கும், வனப்பகுதியில் சுமார் 65 புலிகளுடன் வேட்டையாடுவதற்கும், எது தேவைப்படும் என்று எம்.மதனுக்குத் தெரியும்.

இவை எதுவுமே அவரை பயமுறுத்தியது கிடையாது. நாங்கள் அவரிடம் நீங்கள் எத்தனை புலிகளை மிக அருகில் சென்று பார்த்து இருக்கிறீர்கள் என்று கேட்டால்: அவர் சிரித்துக்கொண்டே "நான் எண்ணுவதையே நிறுத்திவிட்டேன்!" என்று கூறுகிறார்.

ஆனால் வேறொரு வகையான மறைந்திருக்கும் ஆபத்து ஒன்று அவரை இப்போது கலக்கமடையச் செய்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தின் இடை மண்டலத்தில் இருக்கும் ஏழு குக்கிராமங்களில் சுமார் 90 குடும்பங்களில் ஒன்றான மதன் மற்றும் பென்னியைச் சேர்ந்த பிற குடியிருப்பாளர்களும் விரைவில் தங்களது பரம்பரை வீடுகளையும் நிலத்தையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

மதன் காட்டில் இருக்கும் தனது வீட்டை காண்பிக்கிறார். அவரது குடும்பத்தின் குடிசை வீட்டின் அருகிலேயே மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகில் அதிகமாக மரங்கள் செரிந்து இருக்கும் இடத்தின் அடியில் தான் பல தலைமுறைகளாக வாழ்ந்து மடிந்த அவர்களின் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்கில் உள்ள நீரோடை மற்றும் அதன் அருகில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான காய்கறிகள் விளைவிக்கப்படும் இடம் முள் புதரால் விலங்குகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதுவே எங்கள் வீடு", என்று அவர் கூறுகிறார்.

M. Madhan and other residents of Benne may soon have to leave behind their ancestral homes and land
PHOTO • Priti David
M. Madhan and other residents of Benne may soon have to leave behind their ancestral homes and land
PHOTO • Priti David

எம்.மதன் மற்றும் பென்னியைச் சேர்ந்த பிற குடியிருப்பாளர்களும் விரைவில் தங்களது பரம்பரை வீடுகளையும் நிலத்தையும் விட்டு வெளியேற வேண்டியிருக்கும்

முதுமலை புலிகள் காப்பகத்தில் இடை மண்டலத்தில் உள்ள ஏழு குக்கிராமங்களில் (வனத்துறை ஆவணங்களின் குறிப்புகளின் படி) பென்னியும் ஒரு கிராமமாகும். இந்தக் குக்கிராமங்களில் வசிப்பவர்கள் அனைவரும் காட்டுநாயக்கன் மற்றும் பனியன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் காடுகளில் உள்ள 688 சதுர கிலோ மீட்டர் இந்த புலிகள் காப்பகம் 2007 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான புலிகள் வாழ்விடமாக அறிவிக்கப்பட்டது. மேலும் 2013 ஆம் ஆண்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) கொண்டு வந்த, காட்டுக்கு வெளியே இடம்பெயற விரும்புவோருக்கு பத்து லட்சம் ரூபாய் என்ற இடம் பெயர்தலுக்கான சலுகையை வனத்துறை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. 2006 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட NTCA வின் இடம் பெயர்க்கும் திட்டம் புலிகள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், இழப்பீட்டை வழங்குவதாகவும் உத்தரவாதம் அளிக்கிறது.

பென்னி குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பை பற்றி யோசித்துவிட்டு, தங்கள் கோயில்கள் மற்றும் கல்லறைகளுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 2016 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அன்று 50 நபர்களை உறுப்பினராகக் கொண்ட பென்னி கிராமசபை கூட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களில் கையெழுத்திட்டது அவை: 'பென்னி ஆதிவாசி கிராமம் வேறு எந்த பகுதிக்கும் இடம் பெயராது. எங்களுக்கு வேறு எந்த இடமும் தேவையில்லை மேலும் எந்த பணமும் தேவையில்லை'.

அவர்களுக்கு ஆதரவாக இருப்பது 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் மட்டுமே, இது பரம்பரை வனவாசிகளுக்கு தங்களது வன நிலத்தை வைத்துக் கொள்ளவும், வாழவும் உரிமை உண்டு' என்று கூறுகிறது. மேலும் இந்தச் சட்டம் வனத்தில் வசிக்கும் மக்களை தங்கள் குக்கிராமங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வெளியேற்றுவதற்கும் முன், கிராம சபையில் சுதந்திரமாக அறிவிக்கப்பட்டு முன்மொழியப்பட்ட மீள்குடியேற்றத்திற்கான இடம் மற்றும் இழப்பீடு ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் கிராம சபையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஒரு வருடத்திற்குளாகவே, மதனின் குடும்பத்தினர் மற்றும் பென்னியைச் சேர்ந்த இதர 44 காட்டுநாயக்கன் ஆதிவாசி குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது மனதை மாற்றிக் கொண்டனர் இடம்பெயர்தலுக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் இழப்பீட்டையும் ஏற்றுக்கொண்டனர். எங்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை, என்று 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதன் என்னிடம் கூறினார். "வனச்சரகர் எங்களை தனித்தனியாக தேடி எங்களது முடிவினை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொள்வார். நாங்கள் இப்போது வெளியேறவில்லை என்றால் பின்னர் பலவந்தமாக வெளியேற்றப்படுவோம், பணமும் கிடைக்காது", என்று அவர் கூறினார்.

Madhan's family shrine
PHOTO • Priti David
"Now I am stopped and not allowed to enter [the forest]' says  G. Appu
PHOTO • Priti David

இடது: மதனின் குடும்ப ஆலயம் 'இதுவே எனது வீடு', என்கிறார் அவர்

வலது: 'இப்போது நான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன், (காட்டில் நுழைவதற்கு) அனுமதிக்கப்படவில்லை', என்கிறார் G. அப்பு

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதனின் குடும்பத்திற்கு இடம்பெயர்தலுக்கான தொகையான ரூபாய் ஏழு லட்சத்தில் இருந்து முதல் தவணையாக ரூபாய் 5.50 லட்சம் வழங்கப்பட்டது. (NTCAவின் வழிகாட்டுதல், நிலம் வாங்குவதற்கு ஆரம்பத்தில் 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 3 லட்சம் ரூபாய் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்படும் என்றும் கூறுகிறது.) அதே நாளில் வனச்சரகர் அறிமுகப்படுத்திய நில உரிமையாளருக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது அவர்களுக்கு அந்த நில உரிமையாளர் பென்னியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் 50 சென்ட் (அரை ஏக்கர்) நிலத்தை அக்குடும்பத்திற்கு வழங்கினார். "இப்போது ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் பட்டா எனது பெயரில் மாற்றப்படவில்லை, அதனால் நான் வெளியேறவில்லை. எனக்கு பத்திரமும் இல்லை பணமும் இல்லை", என்று அவர் கூறுகிறார்.

வனச்சரகர், இடைத்தரகர்களை கொண்டு வருவார் நல்ல இடம் மற்றும் வீட்டுவசதிக்கு உறுதியளித்து எங்களை ஒரு இடத்தை தேர்வு செய்வதற்கு எங்களை ஊக்கப்படுத்துவர் என்று 40 வயதாகும், பென்னியின் கிராமசபை தலைவரான G. அப்பு கூறுகிறார். அப்பு தனக்கு இடம்பெயர்தலுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுப் பணத்தை மற்ற நான்கு குடும்பங்களுடன் சேர்ந்து 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக  சேர்த்துள்ளார். "அவர்கள் (நில உரிமையாளர், வழக்கறிஞர் மற்றும் சரகர்) நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள அலுவலகத்தில் பணத்தை மாற்றுவதற்கான ரசீதை நிரப்பினர்", என்று அவர் கூறுகிறார். "இப்போது அவர்கள் நீங்கள் அடுத்த தவணையில் பெறும் பணத்தில் இருந்து 70,000 ரூபாயை எங்களுக்குத் தாருங்கள் அப்போது தான் நாங்கள் உங்களுக்கு பத்திரத்தை வழங்குவோம் என்று கூறுகின்றனர்", என்கிறார்.

நிலுவைத் தொகை வழங்கப்படும் போது எப்போது வேண்டுமானாலும் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் மதன் மற்றும் அப்பு ஆகியோர் இருக்கின்றனர் பாரம்பரிய வருமான ஆதாரங்களுக்காக காட்டினை அணுகும் உரிமையையும் இதனால் இழக்கின்றனர். "நான் மருத்துவ குணம் கொண்ட இலைகள், தேன், நெல்லிக்காய், கற்பூரம் மற்றும் இதர வன பொருட்களை சேகரிப்பேன். இப்போது நான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளேன், காட்டில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை", என்கிறார் அப்பு. மீறி நாங்கள் சென்றால் எங்களை அடிப்பார்கள், நாங்கள் எந்த விதியையும் மீறவில்லை என்றபோதிலும் கூட", என்று கூறுகிறார் மதன்.

மதன் மற்றும் அப்புவைப் போலல்லாமல், 2018 ஆம் ஆண்டு, அவர்களது அண்டை வீட்டுக்காரரான கே. ஒனாதி  புதிய பென்னி கிராமத்திற்கு சென்றுவிட்டார், (அதனை அவர்கள் 'நம்பர் ஒன்' என்று குறிப்பிடுகின்றனர்), அது அவர்களுடைய பழைய கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குளாகவே உள்ளது.

M. Chennan, Madhan's neighbour
PHOTO • Priti David
Within a year after the gram sabha resolution, 45 Kattunayakan Adivasi families of Benne changed their mind and accepted the Rs. 10 lakhs relocation package
PHOTO • Priti David

எம். சென்னன், மதனின் அண்டை வீட்டுக்காரர்; கிராம சபையில் தீர்மானம் இயற்றப்பட்டு ஒரு வருடத்திற்குளாகவே, பென்னியைச் சேர்ந்த 45 காட்டுநாயக்கன் ஆதிவாசி குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது மனதை மாற்றிக் கொண்டனர் மேலும் இடம்பெயர்தலுக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் இழப்பீடையும் ஏற்றுக்கொண்டனர்

நான் அவர்களை சந்திக்க சென்றபோது, ஒனாதி தனது புதிய வீட்டிற்கு வெளியே அமைத்திருந்த தற்காலிக சமையலறையில் தனது குடும்பத்திற்கான காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தார்- இரண்டு அறைகள் கொண்ட சிமெண்ட் கட்டிடத்தில் அதற்குள்ளாக வண்ணப் பூச்சுகள் உரிந்து கதவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு இருந்தது. ஒனாதி சில நேரங்களில் குறைவான வேலை கொண்ட தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதித்து வருகிறார் அல்லது ஜனவரி-பிப்ரவரி போன்ற பறிக்கும் பருவத்தில் காபி மற்றும் மிளகு தோட்டங்களில் வேலைக்குச் செல்கிறார்.

ஒனாதி போன்ற காட்டுநாயக்கன் ஆதிவாசிகள் (தமிழ்நாட்டில் சுமார் 2,500 பேர் உள்ளனர் என்று நீலகிரியில் உள்ள அரசு நடத்தும் பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனரான பேராசிரியர் C. R. சத்யநாராயணன் கூறுகிறார்), புலிகள் காப்பக இடை மண்டலத்தில் உள்ள சிறு காபி மற்றும் மிளகு தோட்டங்களில் நீண்ட காலமாக தினசரி கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பல எஸ்டேட் உரிமையாளர்களும் இடம்பெயர்வதற்கான இழப்பீட்டை ஏற்றுக் கொண்ட பின், 2018 ஆம் ஆண்டையொட்டி அவர்களும் வெளியேறி விட்டதால், கூலித் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

"நாங்கள் கொஞ்சமாவது பணம் (பத்து லட்சம் ரூபாய்) பெறுவோம் என்று நினைத்து இங்கு வந்தேன், ஆனால் கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்துவிட்டது", என்று ஒனாதி கூறுகிறார். "ஆறு லட்சம் ரூபாயை தரகர் மற்றும் விற்பனையாளரிடம் 50 சென்ட் நிலத்தை எனக்கு உறுதி அளித்ததற்காக கொடுத்தேன். இந்த வீடு 5 சென்ட் நிலத்தில் உள்ளது, மீதமுள்ள 45 சென்ட் நிலம் எங்கே என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை", என்று கூறுகிறார். சரகர் அவருக்கு அறிமுகப்படுத்திய ஒரு வழக்கறிஞர் தன்னுடைய கட்டணமாக 50,000 ரூபாயை எடுத்துக் கொண்டார், வீட்டிற்கான செலவு ரூபாய் 80,000 மற்றும் மின் இணைப்புக்காக ரூபாய் 40,000 செலுத்தும் படியும் கூறினார்", என்று கூறுகிறார்.

பென்னிக்கு கிழக்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் நாகம்பள்ளி என்ற குக்கிராமம் உள்ளது. இது புலிகள் காப்பகத்திற்குள் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 32 வயதான கமலாட்சி, இங்கிருந்து காப்பகத்திற்கு வெளியே உள்ள மச்சிகோலிக்கு அவரது 35 வயதாகும் கணவர் மாதவன் அவர் ஒரு தினக்கூலி, அவர்களது குழந்தைகள், பெற்றோர்கள், ஒரு விதவை தங்கை மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோர் இடம் பெயர்ந்தார்.

'I moved here thinking we will get some money [the Rs. 10 lakhs compensation] but almost all is gone', Onathi says
PHOTO • Priti David
'I moved here thinking we will get some money [the Rs. 10 lakhs compensation] but almost all is gone', Onathi says
PHOTO • Priti David

நாங்கள் கொஞ்சமாவது பணம் (பத்து லட்சம் ரூபாய்) பெறுவோம் என்று நினைத்து நான் இங்கு வந்தேன், ஆனால் கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்துவிட்டது", என்று ஒனாதி கூறுகிறார்

கமலாட்சி இடம்பெயர்ந்த போது அவருக்கு உறுதியளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் அவர்கள் வளர்க்கும் சில ஆடுகள் ஆகியவற்றால் ஆறுதல் கண்டனர். ஆடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் இடம் பெயர்ந்ததற்கு வழங்கப்பட்ட இழப்பீடு அவரது கணக்கில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே எடுக்கப்பட்டுவிட்டது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி அன்று அவரது கணக்கில் 5.73 லட்சம் ரூபாய் வரவு வந்துள்ளது, அதே நாளில் 4.73 லட்சம் ரூபாய் அரை ஏக்கர் நிலத்திற்கான கட்டணமாக ரோசம்மாவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவரது வங்கிகணக்கு புத்தகம் கூறுகிறது. இருப்பினும் உரிமையை நிரூபிக்க பதிவு செய்யப்பட்ட எந்த ஆவணமும் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை.

தனது சமூகத்தில் படித்தவர்களில் கமலாட்சியும் ஒருவர் - காட்டுநாயக்கன் ஆதிவாசி சமூகத்திடையே கல்வியறிவு விகிதம் 48 சதவீதம். அவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழு,ம் ஆசிரியராகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் (ஆனாலும் அவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்). இருப்பினும் அவரால் கூட இக்கொடுமைகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. "அவர் (வனச்சரகர்) நீங்கள் வெளியேற வேண்டும் என்று எல்லோரிடமும் கூறிவருகிறார், நீங்கள் இப்போது வெளியேறினால் தான் உங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் பிறகு வெளியேறினால் கிடைக்காது என்று கூறுகிறார். நாங்கள் ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக நாகம்பள்ளியில் வசித்து வருகிறோம். நாங்கள் வெளியேறியபோது ஒரு பேரழிவு நிகழ்ந்ததை போலவும் எல்லாவற்றையும் இழந்துவிட்டது போலவும் உணர்ந்தோம்", என்று கூறினார்.

நாகம்பள்ளியைச் சேர்ந்த மற்ற இரண்டு காட்டுநாயக்கன் மற்றும் 15 பனியின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் பத்திரங்கள் இல்லாமலும், வசதிகள் இல்லாத வீடுகளுக்கும் குடி பெயர்ந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு அக்டோபர்  தேதி 2 ஆம் தேதி அன்று நாகம்பள்ளி கிராம சபையில் இவர்களில் சிலருக்கு நில பாத்திரங்கள் எதுவும் இல்லாமல் அதிக விலைக்கு நிலம் விற்கப்பட்டுள்ளதாகவும், இதில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தண்ணீர், மின்சாரம், சாலை மற்றும் இடுகாடு வசதிகளுடன்கூடிய வீடுகளை வழங்கவும் தீர்மானம் இயற்றியுள்ளனர்.

சில மாதங்களுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின், ஸ்ரீமதுரை அலுவலகத்தில் மதன், ஒனாதி மற்றும் கமலாட்சியின் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. கூடலூரை மையமாகக்கொண்ட இந்த ஆதிவாசி அமைப்பு 1986 ஆம் ஆண்டு நில மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டது. இதில் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை சேர்ந்த 20,000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இன மற்றும் பட்டியல் பழங்குடி ஆணையத்தின் தலைவருக்கு அவர்கள் அனுப்பிய 2019 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தேதியிட்ட கடிதத்தை அவர்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

கமலாட்சி இடம்பெயர்ந்த போது அவருக்கு உறுதியளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பணம் மற்றும் அவர்கள் வளர்க்கும் சில ஆடுகள் ஆகியவற்றில் ஆறுதல் கண்டனர். ஆடுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் இடம் பெயர்ந்ததற்கு வழங்கப்பட்ட இழப்பீடு அவரது கணக்கில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே எடுக்கப்பட்டுவிட்டது

ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் K.T. சுப்பிரமணி அவர் முள்ளு குறும்பா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி அன்று உதகமண்டலத்தில் மாவட்ட ஆட்சியர் (இன்னசென்ட் திவ்யாவிடம்) இரண்டு பக்க மனு ஒன்றை அவர்கள் அளித்ததாகக் கூறுகிறார். அந்த மனுவில் அவர்கள் ஏமாற்றப்பட்டதை பற்றியும் மேலும் அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கும் படியும் வேண்டியுள்ளனர். அது நாகம்பள்ளி கிராம சபையின் கடிதத் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது மேலும் அதில் 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி அன்று கூடலூர் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் 9 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன (கூடலூர் நகரம், நாகம்பள்ளியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது). பெயரிடப்பட்டவர்கள் சுரேஷ்குமார் (வனச்சரகர்) மற்றும் சுகுமாரன் (வழக்கறிஞர்) இடைத்தரகர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் ஆகியோராவர். இந்திய குற்றவியல் சட்டத்தின் பல பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது, இதில் 'குற்றவியல் சதி' மற்றும் 'மோசடிக்கான தண்டனை' ஆகியவையும் அடங்கும். மேலும் இந்த ஒன்பது பேர் மீதும் பட்டியல் இனம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான (வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989ன்) கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலருக்கு வாசிக்கத் தெரியாது, அதனால் அவர்களை வங்கி ரசீதுகளில் கையெழுத்து மட்டும் போடச் செய்திருக்கின்றனர் மேலும் அவர்களின் கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் அவர்களது பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்திருக்கிறோம் என்கிறார் ஆதிவாசிகள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் G. மல்லிசாமி.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வனச்சரகர் சுரேஷ்குமாரின் பெயர் சேர்க்கப்பட்டது, அவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார் மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்: "நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை அவர்களே செல்ல விரும்பினர். நான் NTCAவின் வழிகாட்டுதலை பின்பற்றி உள்ளேன். விசாரணை நடந்து வருகிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் ஒரு அரசு ஊழியர்", என்று கூறினார்.

முதல் தகவல் அறிக்கையில் பெயரிடப்பட்ட வழக்கறிஞரான சுகுமாரன் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்: "இது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தவறான முதல் தகவல் அறிக்கை, மேலும் நான் சமூக விரோத சக்திகளால் ஓரங்கட்டப்படுவதால் முன்ஜாமீன் (நவம்பரில்) எடுத்துள்ளேன்", என்று கூறினார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: சிலருக்கு வாசிக்கத் தெரியாது, அதனால் அவர்களை வங்கி ரசீதுகளில் கையெழுத்து மட்டும் போடச் செய்திருக்கின்றனர் மேலும் அவர்களின் கணக்கிலிருந்து பணமும் எடுக்கப்பட்டுவிட்டது என்று வழக்கறிஞர் G. மல்லிசாமி கூறுகிறார்.

வலது: ஆதிவாசிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் K.T. சுப்பிரமணி அவர் முள்ளு குறும்பா ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்று மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு பக்க மனு ஒன்றை அவர்கள் அளித்ததாகக் கூறுகிறார்

புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆவணத்தில் 701 குடும்பங்கள் இடம் பெயர்தலுக்கான இழப்பீட்டைப் பெற தகுதியானவர்கள் என்று கூறுகிறது. முதல் மற்றும் 2 ஆம் கட்டங்களில் 490 குடும்பங்கள் 7 குக்கிராமங்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள 211 குடும்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது கட்டத்தில் வெளியேற்றப்படுவார். மீதி 263 குடும்பங்கள் , அவர்கள் புலிகள் காப்பகத்திற்கு வெளியே இருப்பதால் மற்றும் ஆவணங்களில் பெயர்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் இடம்பெயர்தலுக்கான இழப்பீட்டிற்கு தகுதியற்றவர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கள இயக்குனராக பொறுப்பேற்ற K. K. கௌசல் அவர்கள் கூறுகையில், "NTCAவின் வழிகாட்டுதல் படி  இது ஒரு தன்னார்வ இடம்பெயர்தல் ஆகும். எங்களிடம் இருக்கும் ஆவணங்களின்படி ஏற்கனவே 48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது மேலும் மூன்றாம் கட்டத்திற்கு, 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட இருக்கிறது".

இதற்கிடையில் கூடலூர் வருவாய் பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்ற K. V. ராஜ்குமார், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (இதுவே இவரது முதல் பதவி) இடம்பெயர்தல் தொடர்பான பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ளார். இந்த வழக்கை படிக்க பல மாதங்கள் செலவிட்டதாக அவர் கூறுகிறார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் முதுமலை புலிகள் காப்பகத்தில் துணை இயக்குனருக்கு இது குறித்து கடிதம் எழுதினேன். NTCAவின் வழிகாட்டுதல் படி 10 லட்சம் ரூபாய் மட்டும் ஒப்படைக்காமல் சொத்து உருவாக்கத்தை உறுதிப்படுத்தும் படியும் கேட்டுக் கொண்டேன். நாங்கள் மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்தைப் புனரமைப்பு பற்றியும் கவனிக்க வேண்டும் வெறும் இடம்பெயர்தல் மட்டுமல்ல", என்று கூறினார்.

பென்னியில், ஒருகாலத்தில் உறுதியான மற்றும் நம்பிக்கை உள்ள கிராம சபை உறுப்பினர்களாக இருந்த அப்பு மற்றும் மதன் போன்றவர்கள் இப்போது பதட்டத்துடன் வாழ்கின்றனர். "நாங்கள் புலிகளுக்கும், யானைகளுக்கும் அஞ்சமாட்டோம். சில மனிதர்களுக்கு மட்டுமே அஞ்சுகிறோம்", என்கிறார் அப்பு. மதன் அவர்களது கோயிலையும், கல்லறையையும் விட்டு வெளியேறுவதை பற்றிக் கவலைப்படுகிறார்: "அவர்களே எப்போதும் எங்களை பாதுகாத்து வந்தனர். நான் எங்களது எதிர்காலத்தைப் பற்றி கவலை கொள்கிறேன்", என்று கூறினார்.

PHOTO • Priti David

நிச்சயமற்ற நிலையில் இடம்பெயர்ந்துள்ள 'புதிய' பென்னி குக்கிராமத்தில் உள்ள குடும்பங்கள்

இந்தக் கதையை ஒருங்கிணைக்க கூடலுரைச் சேர்ந்த A.M கருணாகரன் என்பவர் தாராளமாக உதவியதற்கு நிருபர் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose