சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் உள்ள சில ஆதிவாசி ஆண்கள் இப்போது மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். ஆனால், இந்த முறை அவர்கள் கல்வி கற்பதற்காக வரவில்லை, மாறாக துளிர் பள்ளிக்கு புதிய வளாகத்தை கட்டுவதற்காக வந்திருக்கின்றனர்.

அவர்களில் 29 வயதாகும் எலக்ட்ரீசியனான A. பெருமாள், ஒரு காலை வேளையில் வயர்கள் மற்றும் அதற்கான வழித்தடங்களை அமைத்துக் கொண்டு இருந்தார். "தரை மட்டத்தில் இருக்கும் அந்த சிறிய காற்றோட்டத்திற்கான வசதியை பார்க்கிறீர்களா? இதன் மூலம், சிறிய குழந்தைகள் கூட நல்ல காற்றைப் பெற முடியும்", என்று அவர் கூறுகிறார். இந்தக் கட்டிட தளத்தில் வேலை செய்வதற்காக பெருமாள் தனது தேவை அதிகமுள்ள தொலைக்காட்சி மற்றும் மின்விசிறி சரி செய்யும் பணியை ஒதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார்.

அருகில் இருந்த 24 வயதாகும் M. ஜெயபால் நேர்த்தியான செங்கற்களைப் பயன்படுத்தி கட்டுமானங்களைக் கட்டுவதில் வல்லமை கொண்ட கொத்தனார், ஆனால் அவர் களிமண் சாந்தைக் கொண்டு தூண்களில் உள்ள வடிவமைப்புகளுக்கு வடிவங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். பள்ளத்தாக்கில் அவர் பயின்ற அரசுப் பள்ளியில் காகிதங்களையோ, க்ரையான்களையோ உபயோகித்ததே கிடையாது. அவர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முதல் அடிக்கல் நாட்டப்பட்டதில் இருந்து இங்கு வேலை செய்து வருகிறார். புதிய பள்ளி வளாகத்தில் தச்சராகவும் பணி செய்கிறார். அவரும் மற்றவர்களும் அங்கு தேவை ஏற்படும் போதெல்லாம் வந்து வேலை செய்து கொடுக்கின்றனர், அவர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு, 500 ரூபாய் வழங்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு துளிரின் பள்ளிக்குப் பிறகான பயிற்சி திட்டங்கள் துவங்கப்பட்ட பிறகு, அதில் அவர்களுக்கு முதல் பாடமாக கட்டுமான கலையே பயிற்றுவிக்கப்பட்டது. சிட்டிலிங்கி  உள்ளூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த  துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெயபால் மற்றும் பிற மாணவர்களும், அறிவியலை கையால் செய்யக்கூடிய பரிசோதனைகளின் மூலமும், வரைகலையை வரைவதன் மூலமும் மற்றும் மொழியினை புத்தகங்களின் வாயிலாகவும் ஆராய்ந்து கற்றனர்.

Children at the Thulir primary school
PHOTO • Priti David
Teachers and students working at an after-school training centre
PHOTO • Priti David

துளிர் துவக்கப் பள்ளி மற்றும் பள்ளிக்குப் பிறகான பயிற்சிக் கூடம் ஆகியவை தரம் உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதிய பள்ளி வளாகத்தில் செயல்பட இருக்கின்றது.

2015 ஆம் ஆண்டில் 'துளிர் கற்றல் மையம்' என்ற 5 ஆம் வகுப்பு வரை கொண்ட துவக்கப் பள்ளி ஒன்று சிட்டிலிங்கியில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் தொலைதூர மூலையில் உள்ள இந்த பள்ளத்தாக்கில் உள்ள 21 ஊர்களில், மொத்தம் சுமார் 10,000 மக்கள் வசித்து வருகின்றனர், அதில் 18 மலையாளி கிராமங்களும், 2 லம்பாடி தண்டா கிராமங்களும் மற்றும் 1 தலித் கிராமமும் அடங்கும்.

இந்த கட்டிடத்தில் பணிபுரியும் ஆண்கள் அனைவரும் மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இச்சமூகத்தினரே இம்மாநிலத்தில் மிகவும் மோசமான படிப்பறிவு கொண்டவர்கள், (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி) இவர்களின் கல்வியறிவு வெறும் 51.3 சதவிகிதம் மட்டுமே. தமிழ்நாட்டின் மொத்த பட்டியல் பழங்குடியினர் எண்ணிக்கையான 794,697 இல், இந்த மலையாளி சமூகத்தினரே 357,980 என்ற எண்ணிக்கையுடன் தனித்த பெரும் பட்டியல் பழங்குடியினர் சமூகமாக இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தர்மபுரி, வட ஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், தென் ஆற்காடு மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

"(பள்ளிக்குப் பிறகான பயிற்சி வழங்கும் திட்டத்தில்) நான் கற்றுக் கொண்ட முதல் விஷயம், செடிகளுக்கு தண்ணீர் விடும் குழாய்களை 'முழங்கை மூட்டு போன்ற குழாய்களைக்' கொண்டு சரி செய்வது எப்படி என்பதைத் தான்", என்று 27 வயதாகும் M. சக்திவேல் நினைவு கூர்கிறார், இப்போது துளிர் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவர், ஒரு மலையாளி ஆதிவாசிக் கிராமமான முல்லா சிட்டிலிங்கியில் வளர்ந்தவர்.

பள்ளத்தாக்கில் தற்போது ஒரு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பள்ளியின் வளாகத்தில் சக்திவேல் ஒரு ஏணியில் ஏறி, மேலே இருக்கும் சோலார் பேனல் மற்றும் பேட்டரியை அகற்றி, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் புதிய பள்ளி வளாகத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறார். புதிய பள்ளியில் ஏராளமான விலை உயர்ந்த உபகரணங்கள் இருக்கின்றன, மேலும் இந்த சோலார் இரவு நேர விளக்குகள் திருடர்களை விரட்டுவதற்கு உதவும், என்று சக்திவேல் கூறுகிறார்.

M. Sakthivel repairing electronics
PHOTO • Priti David
M. Sakthivel teaching children at the Thulir school
PHOTO • Priti David

துளிர் மையத்தில் பயிற்சி பெற்ற ஆரம்பகால பட்டதாரியான எம் சக்திவேல் இப்போது அங்கு ஆசிரியராக பாடம் நடத்துகிறார், தவிர அவர் பழுதான மின்சார உபகரணங்களை பழுது நீக்கம் செய்கிறார் மற்றும் தனது நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.

அவரிடமிருந்து வெகு தொலைவில் இல்லாத, 28 வயதாகும் குமார், ஜன்னல் கம்பிகளுக்கு தேவையான தட்டையான மற்றும் பட்டியல் போன்ற இரும்பினை அளந்து, வெட்டி, வளைத்துக் கொண்டும் இருகிறார். அவரும், அவருடன் பணியாற்றும் ஊழியர்களும், ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் எப்படி ஒரு ஏழு வயது சிறுவன் தான் வெளியே சென்று ஆராய விரும்பும் நேரத்தில் வெளியே செல்வதற்கு போதுமான இடைவெளி இருக்கின்றது என்பதை பற்றித் துடுக்காகப் பேசிக் கொண்டிருந்தனர்.

குமார், பெருமாள், ஜெயபால் மற்றும் சக்திவேல் ஆகியோர் படித்த சிட்டிலிங்கி அரசு துவக்கப் பள்ளியில்,தேடல் என்பது ஒரு விருப்பத் தேர்வாக இல்லை. பள்ளி வகுப்பறைகள் கூட்டமாக இருந்தன, ஆசிரியர்கள் பெரும்பாலும் பள்ளிக்கு வராமலே இருந்தனர், பள்ளி என்பது ஒரு துன்பகரமான அனுபவமாகவே இருந்தது. மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்த போது அவர்கள் பள்ளியிலிருந்து இடை நிற்க முடிவு செய்தனர். "எனக்கு வகுப்பறையில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை நான் தேர்வுகளை வெறுத்தேன்", என்று சக்திவேல் கூறுகிறார். "எனது பெற்றோர்கள் படித்தவர்கள் இல்லை, அதனால் வீட்டிலேயே படித்துக் கொள்வதற்கான வழியும் இல்லை", என்று பெருமாள் கூறுகிறார்.

நாடு முழுவதிலும் துவக்கப் பள்ளியில் இருந்து இடை நிற்கும் பட்டியல் பழங்குடியின மாணவர்களின் விகிதம் 6.93 சதவீதமாக இருக்கிறது. அதுவே மேல்நிலைப் பள்ளிக்கான நிலையில் 24.68 சதவிகிதமாக உயர்கிறது (அதுவே மொத்த இந்தியாவில் உள்ள மாணவர்களுக்கும், 4.13 சதவிகிதம் மற்றும் 17.06 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது) என்று கல்வி புள்ளிவிவரங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 'மேலும் அதில் அதிக அளவில் மாணவர்கள் இடை நிற்பதற்கான காரணங்களாக, அம்மாணவர்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது', என்று தெரிவிக்கிறது.

"நாங்கள் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தோம், பெருசாக வேறு எதுவும் எங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை", என்று ஜெயபால் கூறுகிறார். சிட்டிலிங்கியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான பி தேன்மொழி  "8 ஆம் வகுப்பின் இறுதியில், எனக்கு எனது பெயரை ஆங்கிலத்தில் கூட எழுதத் தெரியவில்லை", என்று கூறுகிறார்.

Village elder R. Dhanalakshmi smiling
PHOTO • Priti David

வேலைக்கு செல்வதற்காக பள்ளியிலிருந்து எனது 7 குழந்தைகளும் இடை நின்று விட்டனர் என்று  ஆர் தனலட்சுமி கூறுகிறார்; மழை பொய்த்துப் போகின்ற காலங்களில், அதிகமான மக்கள் இங்கிருந்து புலம்பெயர்ந்து செல்வர்...', என்று அவர் கூறுகிறார்.

ஒரு வேளை மாணவர்களால் தொடர்ந்து படிக்க முடிந்தால், அவர்கள் பத்து கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் நடந்து சென்று கோட்டபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பஸ்ஸில் சென்றால் அது அவர்களை மிக சீக்கிரமாகவோ அல்லது மிகத் தாமதமாகவோ தான் கொண்டு சேர்க்கிறது. (2010 ஆம் ஆண்டு ஜெயபால் மற்றும் மற்றவர்கள் பயின்ற அரசுப் பள்ளி 10 ஆம் வகுப்பு வரை கொண்ட பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.) சிட்டிலிங்கி பள்ளத்தாக்கு அடர்ந்த காடுகள் கொண்ட கல்வராயன் மற்றும் சித்தேரி மலைகளுக்கு இடையில் இருக்கிறது. கடந்த காலத்தில் இந்த பள்ளத்தாக்கிற்கு வடக்கிலிருந்து மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது - கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45 A வாயிலாகத் தான் அணுக முடிந்திருக்கிறது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சாலை திறக்கப்பட்டு, மாநில நெடுஞ்சாலை எண் 79 உடன் இணைக்கப்பட்டது, இதன் வாயிலாக சேலம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது மற்றும் தொழில்துறை ஜவுளி நிறுவனங்களை கொண்ட திருப்பூர், ஈரோடு மற்றும் அவினாசி ஆகிய ஊர்களுடனும் இணைக்கிறது.

இந்தப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கான தேவை அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறது. இந்த புதிய சாலை வேலைக்காக மக்கள் புலம் பெயர்வதை மிகவும் எளிதாக்கியது, என்று கிராமத்தைச் சேர்ந்த மூத்தவரான 65 வயதாகும் R. தனலட்சுமி கூறுகிறார். அவரது மூன்று மகன்களும் 7 ஆம் வகுப்பிற்கு பிறகு பள்ளியிலிருந்து இடை நின்று லாரியில் உதவியாளராக வேலை செய்கின்றனர், நான்கு மகள்களும் பள்ளியிலிருந்து இடை நின்று மேலும் எங்களது குடும்ப நிலத்தில் அரிசி, கரும்பு, பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விளைவிக்க உதவுகின்றனர். "மழை பொய்த்துப் போகின்ற காலங்களில், இங்கிருந்து பல மக்கள் புலம் பெயர்ந்து செல்கின்றனர்...", என்று தனலட்சுமி கூறுகிறார்.

மாநில திட்ட ஆணையத்தால் நிதி அளிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு புலம்பெயர் கணக்கெடுப்பு, 32.6 சதவிகிதம் புலம் பெயர்ந்தோர் 8 ஆம் வகுப்பு மட்டுமே முடித்திருந்தனர் என்று குறிப்பிடுகிறது. அவர்களின் சராசரி வயது 14 ஆக இருக்கிறது - இது இந்தியாவில் பல துறைகளில் வேலை செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட வயதாகும். வேலைக்கான திறன் எதுவும் இல்லாததால் பலரும் கட்டிடத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர், தனித்திறன் இல்லாத தொழிலாளர்களை அதிகமாக வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வேலையாக இது திகழ்கிறது, மேலும் மாநிலத்திலிருந்து புலம் பெயரும் பத்தில் ஒருவரை இவ்வேலை,  வேலைக்கு எடுத்துக் கொள்கிறது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஜெயபால் 8 ஆம் வகுப்பிற்கு பிறகு பள்ளியிலிருந்து இடை நின்று கேரளாவிற்கு சென்றார், அங்கு அவருக்கு கட்டுமான தளங்களில் உதவியாளராக மட்டுமே வேலை கிடைத்தது, அதன் மூலம் அவர் வாரத்திற்கு 1,500 ரூபாய் சம்பாதித்தார். வேலை மற்றும் வாழ்க்கை முறையில் அதிருப்தி ஏற்பட்டு 6 மாதத்தில் தனது குடும்பத்தின் 5 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதற்காகத் திரும்பி வந்துவிட்டார். பெருமாளும் தனது 17 வயதில் கேரளாவிற்கு சென்றார். "நான் தினக் கூலியாக வேலை செய்தேன், நிலத்தை சுத்தப்படுத்துவது, மரங்களை வெட்டுவது ஆகியவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதித்தேன். ஆனால் அது எனக்கு மிகவும் சோர்வை கொடுத்தது மேலும் ஒரு மாதத்திற்கு பிறகு நான் பொங்கலுக்காக (அறுவடைத் திருநாள்) ஊருக்கு வந்தேன், அப்படியே இங்கேயே தங்கிவிட்டேன் (என் குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக)", என்று கூறுகிறார்.

Perumal, Sriram and Kumar (left to right) building a new school campus
PHOTO • Priti David

பெருமாள், ஸ்ரீ ராம் மற்றும் குமார் (இடமிருந்து வலமாக) ஆகிய அனைவரும் பள்ளியிலிருந்து இடை நின்றவர்கள் மற்றும் சிட்டிலிங்கியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், ஆனால் இப்போது அவர்கள் பள்ளத்தாக்கில் வேலை செய்து, தங்களது வாழ்க்கைக்குத் தேவையானதை சம்பாதித்துக் கொள்கின்றனர்.

ஆர் ஸ்ரீராம் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை, எனவே அவர் பள்ளியை விட்டு வெளியேறி 200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருப்பூருக்கு வேலைக்குச் சென்றார். நான் அங்கு ஒரு ஜவுளி தொழிற்சாலையில் இயந்திரம் தயாரிக்கும் பணியில் ஆறு மாதங்கள் வேலை செய்தேன், மேலும் ஒரு வாரத்திற்கு 1,500 ரூபாய் சம்பாதித்தேன்", என்று கூறுகிறார். "பருத்தி எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதால் நான் வீடு திரும்ப வேண்டியதாகி விட்டது", என்று கூறுகிறார்.

பள்ளியை விட்டு வெளியேறி சிறிய வெற்றியைப் பெற முயன்ற இந்த சிறுவர்களுக்காக, அடிப்படை தொழில்நுட்பம் (BT) என்ற பாடத்தை உறுவாக்கிக் கற்பித்த, கட்டிடக்கலை ஜோடியான 53 வயதாகும் கிருஷ்ணா மற்றும் 52 வயதாகும் அனுராதா ஆகியோர் துளிர் பள்ளியை நிறுவி அதில் சிட்டிலிங்கியைச் சேர்ந்த 500 இளைஞர்கள் பள்ளிக்குப் பிறகான திட்டத்தில் பயன் பெறுவதைக் கண்டனர். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களில் ஒரு ஆண்டிற்கு செயல்முறைப் பயிற்சியை அது உள்ளடக்கி இருக்கிறது. "அவர்களால் இங்கேயே வேலை செய்து சம்பாதிப்பதற்கு ஒரு திறமையை கற்றுக் கொடுக்க முடியுமா என்று நாங்கள் யோசித்தோம், அப்படிக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் இங்கிருந்து புலம்பெயரத் தேவை இல்லையே என்று நாங்கள் சிந்தித்தோம்", என்று கிருஷ்ணா கூறுகிறார்.

முதல் BT பாட வகுப்பு, 12 மாணவர்களுடன், 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது (இன்று வரை 65 மாணவர்களும் மற்றும் 20 மாணவிகளும் பட்டம் பெற்றுள்ளனர்). மாணவர்கள் சைக்கிள்களை சரி செய்வதில் துவங்கி, களிமண், சிமெண்ட் மற்றும் குப்பைகள் (உள்ளூர் கிணறுகள் தோண்டுவதில் இருந்து கிடைக்கும்) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையான கட்டிடக்கலை வரை கற்றுக் கொள்கின்றனர். அடிப்படை பொறியியலுக்கான வரையும் திறன், ஒரு கட்டிடத்தின் திட்ட வரைபடத்தை காணும் முறை அல்லது கட்டிடக்கலைக்கான வரைதலை படிக்கும் முறை, சுவிட்சுகள் மற்றும் சாக்கெட்டுகளில் இருக்கும் மின்சாரத்தின் திறனை அறிதல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பலவற்றை, பள்ளத்தாக்கில் உள்ள பழங்குடியினர் சுகாதார முன்னெடுப்பு, சிட்டிலிங்கி கரிம வேளாண்மை சங்கம் மற்றும் பொற்கை கைவினைஞர்கள் சங்கம் ஆகிய கட்டிடத் திட்டங்களில் நேரடியாக பயின்றனர்.

பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் மாதம் ஒன்றுக்கு தலா 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகையாகப் பெற்றனர். இது அவர்கள் பள்ளத்தாக்கிற்கு வெளியே சம்பாதித்த பணத்திற்கு ஈடாகாது, கட்டுமான தளத்தில் ஒரு நாளுக்கு 1,000 ரூபாய் வரை சம்பாதித்தனர் - ஆனால் அது அவர்களை வேலை தேடி புலம் பெயராமல் இந்தப் பயிற்சி வகுப்பை முடிப்பதற்கு உதவியது. "நான் ஒரு திறனை கற்றுக் கொண்டு, இங்கு வீட்டிலேயே தங்கி சம்பாதிக்கலாம் என்று யோசித்தேன்", என்று பெருமாள் கூறுகிறார்.

Kumar installing window grilles at the new campus.
PHOTO • Priti David
Perumal working at the new campus.
PHOTO • Priti David

இடது குமார் பள்ளியின் புதிய வளாகத்தில் ஜன்னல் கம்பிகளை நிறுவுகிறார். வலது: பெருமாள் ஒரு மாதத்திற்கு தினசரி கூலியாக வேலை செய்து விட்டு ஊர் திரும்பி இருக்கிறார்.

இந்த பயிற்சிக்கு பிறகு பலர் நம்பிக்கையுடன் கற்பவர்களாக மாறி இருக்கின்றனர், மேலும் முறையான கல்விக்கு திரும்பி, பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியையும் முடித்திருக்கின்றனர். அதில் இருவர் இப்போது துளிரின் துவக்க பள்ளி ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்களுள் ஒருவரான 28 வயதாகும் A. லட்சுமி, "நான் எனது BT பயிற்சியை முடித்தேன், பின்னர் எனது பள்ளிக் கல்வியை முடித்தேன். நான் அறிவியலை ரசிக்கிறேன் மேலும் அதை கற்பிப்பதை விரும்புகிறேன்", என்று அவர் கூறுகிறார்.

பெருமாள் ஒரு திறமையான மற்றும் பரபரப்பான எலக்ட்ரீசியன் ஆவார்  தவிர அவர் டிராக்டரை வாடகைக்கு கொடுக்கிறார் மொத்தமாக ஒரு மாதத்திற்கு சுமார் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். "எனது BT பயிற்சிக்குப் (2007 ஆம் ஆண்டில்) பிறகு, நான் எனது 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பரீட்சைகளை எழுதி தேர்ச்சி பெற்றேன் மேலும் இளங்கலை இயற்பியல் பட்டப் படிப்பு படிப்பதற்காக சேலத்தில் ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்", என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார் (ஆனால் அவர் பட்டப் படிப்பை இன்னும் முடிக்கவில்லை என்பது தனிக்கதை).

சக்திவேல் துளிரில் வேலை செய்வதன் மூலம் மாதத்திற்கு 8,000 ரூபாய் சம்பாதிக்கிறார், மேலும் அவர் வீட்டிலேயே தங்கி அவரது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்கும் உதவுகிறார். "நான் கூடுதலாக சம்பாதிக்க முடியும், சில நேரங்களில் ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் வரை கூட, மொபைல் போன்கள் மற்றும் மின் சாதனங்களை சரி செய்து கொடுத்து சம்பாதிப்பேன்", என்று அவர் கூறுகிறார்.

2016 ஆம் ஆண்டில், துளிரின் புதிய கட்டுமான பணி துவங்கப்பட்ட போது BT பயிற்சியில் இருந்த மாணவர்கள், நேரடி செயல்முறை கற்றலுக்காக இந்த தளத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களது உதவித் தொகைக்கு பதிலாக தினசரி கூலியாக 300 ரூபாய் வழங்கப்பட்டது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தச்சர் A. சாமிகண்ணுவைத் (அவரது மகன் S. செந்திலும் BT பயிற்சி மாணவர்) தவிர மற்ற அனைவரும் BT பயிற்சி முடித்த முன்னாள் மாணவர்கள்.

துளிரின் புதிய பள்ளிக் கட்டிடத்தின் முதல் கட்டமாக: ஆறு வகுப்பறைகள், ஒரு அலுவலகம், ஒரு கடை மற்றும் ஒரு கூடல் மன்றம் ஆகியவை அனைத்தும் முடியும் தருவாயில் இருக்கின்றன. ஒரு நூலகம், ஒரு சமையலறை, மற்றும் கைவினை அறைகள் ஆகியவை இத்துடன் சேர்க்கப்பட உள்ளன. துளிர் அறக்கட்டளைக்கு நன்கொடையாளர்களிடம் இருந்து இதுவரை 50 லட்சம் ரூபாய் நன்கொடையாக வந்துள்ளது.

"சில நேரங்களில் பெற்றோர்கள் இருவருமே புலம் பெயர்வதால் குழந்தைகளால் படிக்க முடிவதில்லை", என்று தேன்மொழி கூறுகிறார். "எங்களது உள்ளூர் சிறுவர்கள் புதிய திறன்களைக் கற்றுக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அவர்கள் குடும்பத்தினருடன் இருக்க முடிகிறது மேலும் இங்கிருந்தே அவர்களால் சம்பாதிக்கவும் முடிகிறது",என்று கூறினார்.

இந்தக் கட்டுரையை  எழுத உதவியதற்காக துளிரில் ஆசிரியராகப் பணியாற்றும் ராம் குமார் மற்றும் கட்டிடக்கலை மாணவர்களான மீனாட்சி சந்திரா மற்றும் தினேஷ் ராஜா ஆகியோருக்கு நிருபர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose