தினமும் காலையில் ஒரு ஜோடி கால் சட்டையையும், ஒரு டீ-ஷட்டையும் எடுத்துக் கொள்ளும் ஹிமான்ஷி குபால், கணவருடன் சேர்ந்து படகில் ஏறி, கடல் நீரில் துடுப்பு செலுத்துகிறார். மாலை நேரங்களில் தலையில் கனகாம்பரப்பூ மணக்க, வண்ணச்சேலை உடுத்தியபடி,  மீன்களை வெட்டி, சுத்தம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார்.

இப்போது 30களில் உள்ள ஹிமான்ஷி, மல்வான் தாலுக்காவில் தனது குடும்பத்துடன் இளம் வயது முதலே ஆறுகளிலும் பண்ணைக் குட்டைகளிலும் மீன் பிடித்து வந்தார். மூன்றாண்டுகளுக்கு முன் படகு வாங்கியது முதல் அரபிக் கடலில் கணவருடன் சேர்ந்து மீன்பிடித்து வருகிறார். மல்வானின் தண்டி கடற்கரையில் வேகமாக வலை வீசும் மீனவப் பெண்களில் இவரும் ஒருவர். மல்வான் தாலுக்காவின் 1,11,807 பேர் கொண்ட மொத்த மக்கள் தொகையில் 10,635 பேர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

“மற்றவர்களின் படகுகளில் என் கணவருடன் சென்று மீன்களை அடுக்கி வைப்பேன்,” என்று சொல்லும் அவர், “மூன்றாண்டுகளுக்கு முன்பு, எங்களுக்கென சிறிய நாட்டுப்படகு [மோட்டார் பொறுத்தாத] ஒன்றை வாங்கினோம். அப்போது முதல் நாங்கள் சேர்ந்து மீன்பிடித்து வருகிறோம்.”

அருகில் ஏலதாரரின் சத்தம் கேட்கிறது, “300, 310, 320 ரூபாய்!” மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை படகுகளில் இருந்து எடுத்து கடற்கரையோரம் பார்வைக்காக வைக்கின்றனர். மீன் வியாபாரிகளும், இடைத்தரகர்களும் நல்ல விலையில் வாங்குவதற்காக கூட்டத்தைப் பார்த்து நின்று கொண்டிருகின்றனர். தெருநாய்களும் பூனைகளும் பறவைகளும் இடையில் புகுந்து தங்களுக்கான பங்குகளை கவ்விச் செல்கின்றன.

“நாங்கள் தினமும் காலையில் மீன் பிடிக்கச் செல்வோம்,” என்கிறார் ஹிமான்ஷி. மோசமான பருவநிலை அல்லது பிற காரணங்களால் கடலுக்குச் செல்ல முடியாதபோது, காலையில் சந்தைக்குச் சென்று மீன்களை வெட்டி சுத்தம் செய்வோம். தினமும் மாலையில் ஏலத்தில் பங்கேற்போம்.

”இந்தியா முழுவதும் மீன் பிடிப்பதில் ஆண்கள் முதன்மை பங்கு வகித்தாலும், ஹிமான்ஷி போன்ற பெண்கள் பதப்படுத்துதல், விற்பனை செய்தல் என்று மீன் வணிகத்தில் முக்கியப் பங்காற்றுகின்றனர். நாடெங்கும் மீன்பிடித் தொழிலில், மீன்பிடித்தலுக்கு பிறகான செயல்பாடுகளில் சுமார் 66.7 சதவீத பெண்கள் ஈடுபடுகின்றனர். கடல் மீன்வள கணக்கெடுப்பு (2010) பதிவேட்டின்படி சுமார் 4 லட்சம் பெண்கள் மீன்பிடித்தலுக்கு பிறகான பல்வேறு பணிகளில் (மீன்பிடித்தலை தவிர பிற செயல்பாடுகள்) ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதுதவிர சுமார் 40,000 பெண்கள் ‘மீன் முட்டைகளை’ சேகரித்து மீன் வளர்ப்புப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

“கொள்முதல் செய்தல், ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அனுப்புதல், கெட்டுப் போகாமல் ஐஸ் பெட்டிகளில் பாதுகாத்து வைத்தல், வெட்டி விற்பனை செய்தல் போன்றவை கடுமையான, சோர்வடையச் செய்யும் பணிகள். இவை அனைத்தையும் நாங்களே செய்கிறோம்,” என்று தண்டி கடற்கரையில் ஒற்றை அறை கொண்ட, அஸ்பெஸ்டாஸ் போட்ட செங்கல் வீட்டில் அமர்ந்தபடி சொல்கிறார் ஜூனைதா (முழுப் பெயரும் பதிவு செய்யப்படவில்லை). கணவரை இழந்தவரான அவர், மீன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏலத்தில் மீன்களை எடுத்த ரசீதுகளை அவர் கம்பியில் குத்தி சுவற்றில் தொங்க விட்டுள்ளார்.

PHOTO • Manini Bansal

‘மூன்றாண்டுகளுக்கு முன்பு சிறிய படகு ஒன்றை சொந்தமாக வாங்கும் அளவுக்கு பணம் இருந்தது,’ என்கிறார் ஹிமான்ஷி குபால், ‘அது முதல் நாங்கள் சேர்ந்து மீன்பிடிக்கிறோம்’

ஜூனைதா போன்ற வணிகர்கள் இல்லாமல் மீன் ஏலம் என்பது முழுமை அடைவதில்லை. அதிக வகையிலான மீன்களை வாங்கும் அவர்கள், உள்ளூர் சந்தை அல்லது அருகில் உள்ள சிறிய நகரங்களுக்குக் கொண்டு சென்று விற்கின்றனர். ஏலம் எடுத்தலும், உகந்த விலைக்கு அவற்றைப் பெறுவதும் அவர்களின் அன்றாட பணிகளின் ஓர் அங்கம். ஏலத்தின் முடிவில் இறுதி விலையைக் கொடுக்க சிலர் ஒப்புக் கொள்கின்றனர். ஏலம்விடுபவரிடம் கெஞ்சி, கொஞ்சம் கூடுதல் மீன்களை வாங்குகின்றனர். ஏலம் முடிந்த பிறகு சிலர் சிறிய தள்ளுபடியும் (குறைந்தது ரூ.5 வரை) பெறுகின்றனர்.

மீன்களின் வரத்து குறைந்து வருவது குறித்தும், எந்த மீனை இரவுக்கு சமைக்கலாம் என்பது குறித்துமான அரட்டைகளுக்கு மத்தியில் நாள் முழுவதும் மீன்களை விற்பனை செய்கிறார்கள். இங்குள்ள பெண்கள் மீன்களை சுத்தப்படுத்தித் தரும் கடைகளையும் நடத்துகின்றனர். மீன்களை கழுவி செதில் நீக்கி, சுத்தம் செய்கின்றனர். ஒவ்வொரு வகை மீனையும் வெவ்வேறு வகைகளில் கையாண்டு சுத்தம் செய்கின்றனர்.

“நான் ஒன்பதாம் வகுப்பிற்கு பிறகு படிப்பை நிறுத்திவிட்டேன், அதிலிருந்து மீன்களை உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஏதாவது செய்து வயிற்றை நிரப்ப வேண்டுமே,” என்கிறார் மல்வான் தாலுக்கா தேவ்பாக் கிராமத்தைச் சேர்ந்த 42 வயதாகும் பென்னி ஃபெர்னாண்டஸ். மீனவத் தொழிலாளியான இவர் மாதம் சுமார் ரூ.4,000 வரை வருமானம் ஈட்டுகிறார். ஒரு கையில் கருவாட்டு கூடையையும், மறு கையில் தனது கைக்குழந்தையையும் சுமந்தபடி செல்கிறார். இந்தியா முழுவதும் கருவாட்டிற்கான மீன் உலர்த்தலை பெண்கள் தான் அதிகம் செய்கின்றனர். இதற்காக சுட்டெரிக்கும் வெயிலில் அதிக நேரம் வேலை செய்கின்றனர். “மழைக்காலத்தில் எங்களுக்கு கருவாட்டை உலர்த்தும் வேலை இருக்காது என்பதால் வேறு வேலைகள் செய்து பிழைப்பை ஓட்டுகிறோம்,” என்கிறார் பென்னி.

ஹிமான்ஷி, ஜூனைதா, பென்னி போன்ற பெண்கள் மீனவ சமூகத்தில் ஆதரவற்றவர்கள் என்கின்றன ஆய்வுகள் . தற்போதைய மீன்வளம், அதிகளவு மீன்பிடித்தல், இயந்திர மீன்பிடிப்பின் ஆதிக்கம், குறைவாக மீன் சிக்குதல், பருவநிலை மாற்றம் போன்ற பல பிரச்சனைகளையும் இதுபோன்ற சிறிய அளவில் மீன்பிடித் தொழில் செய்யும் தொழிலாளர்களையே அதிகமாக பாதிக்கிறது.

மீன்பிடித் தொழிலில் உள்ள ஆண்களுக்கு இணையான பலன்கள், மானியங்கள் இத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு அளிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு மழைக்காலத்தில் மீன்பிடி தடையின்போது மீனவர் குடும்பங்களுக்கு மாத இழப்பீட்டுத் தொகை சில மாநிலங்களில் வழங்கப்படுகிறது. ஆனால் மீனவ பெண்கள் கொண்ட (மீனவர் இல்லாத) குடும்பங்களுக்கு அதே தொகை கொடுக்கப்படுவதில்லை.

இப்போது, தண்டி கடற்கரையில் மாலை நேரத்தில் பெண்கள் மற்றொரு பணியை தொடங்கியிருந்தனர். குழந்தைகளை பராமரிப்பது, வீட்டுவேலைகளை முடிப்பது போன்ற கூடுதல் வேலைகளையும் செய்கின்றனர். அந்தி சாயும்போது அவர்களின் பணியிடம் கடற்கரையிலிருந்து வீட்டிற்கு மாறிவிடுகிறது.

PHOTO • Manini Bansal

‘மீன்களை கொள்முதல் செய்தல், போக்குவரத்து, ஐஸ் பெட்டிகளில் வைத்தல், பாதுகாத்தல், வெட்டுதல், விற்பனை செய்தல் போன்றவை மிகவும் சோர்வடையச் செய்யும் வேலைகள். இவை அனைத்தையும் நாங்களே செய்கிறோம்’, என்கிறார் வியாபாரியான ஜூனைதா

Left: 'We need to do something to fill our stomachs', says an elderly fisherwoman, as she walks a kilometre across Dandi beach in Malwan to the auction site to sell her family’s catch of tarli (sardine). Right: Women wash the fish to be to be salted and sun-dried
PHOTO • Manini Bansal
Left: 'We need to do something to fill our stomachs', says an elderly fisherwoman, as she walks a kilometre across Dandi beach in Malwan to the auction site to sell her family’s catch of tarli (sardine). Right: Women wash the fish to be to be salted and sun-dried
PHOTO • Manini Bansal

இடது: 'வயிற்றை நிரப்ப நாங்கள் ஏதாவது செய்தாக வேண்டும்,' என்கிறார் மூத்த மீனவப் பெண் ஒருவர். அவர் தனது குடும்பம் பிடித்து வந்த மத்தி மீன்களை ஏலத்தில் விடுவதற்காக மல்வானின் தண்டி கடற்கரையோரம் சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏலச் சாவடிக்கு நடந்து செல்கிறார். வலது: உப்பு தடவி, வெயிலில் காய வைப்பதற்கு மீன்களை அலசும் பெண்கள்

PHOTO • Manini Bansal

மல்வான் தாலுக்கா தண்டி கடற்கரையில் இந்த மீன் சந்தை இருக்கிறது. இந்தியா முழுவதும் மீன்பிடித்தலுக்குப் பிறகான பணிகளை சுமார் 66.7 சதவீதம் பெண்கள் செய்கின்றனர். இத்துறையின் பல பணிகளையும் இணைக்கும் பாலமாக பெண்களே இருக்கின்றனர்

PHOTO • Manini Bansal

வஞ்சிர மீனை வெட்டுதல். கழுவுதல், செதில் நீக்குதல், தேய்த்தல், வெட்டுதல் என மீன்களுக்கு துல்லியமான அறுவை சிகிச்சை நடைபெறுகிறது

PHOTO • Manini Bansal

கானாங்கெலுத்தி மீன்கள் சந்தையில் விற்பதற்காக அழகாக கட்டப்பட்டுள்ளன

PHOTO • Manini Bansal

உள்ளூர் பெண்கள் மீன்களை விற்கும் பணியில் ஈடுபடுவதால் அவர்களுக்கு இத்தொழிலை விட்டுச் செல்லும் தேவையோ, வாய்ப்போ அமைவதில்லை. எனக்கு வேறு வாய்ப்பில்லை, எனக்கு உதவ யாரும் கிடையாது, அங்கு தான் செல்ல வேண்டும், என்கிறார் நாள் முழுவதும் மீன்பிடித்துவிட்டு திரும்பிய ஹிமான்ஷி. மீனவர்கள் பலரும் உதவியாளர்களை (பொதுவாக ஆண்களை) நியமித்து தங்களது மீன்களை வகைப்படுத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு முறையும் தினக்கூலியாக சுமார் ரூ.500 வரை தருகின்றனர்

PHOTO • Manini Bansal

ஹிமான்ஷியும், அவரது கணவரும் ஒன்றாக மீன்பிடிப்பது மட்டுமின்றி தண்டி கடற்கரையில் உள்ள சந்தையில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யும் பணிகளையும் செய்கின்றனர்

Selling her fish in the evening auction (left) and everyday banter at the evening auction (right). The last Marine Fisheries Census (2010) records about 4 lakh women in the post-harvest workforce in marine fisheries (involved in all activities except the actual fishing process)
PHOTO • Manini Bansal
Selling her fish in the evening auction (left) and everyday banter at the evening auction (right). The last Marine Fisheries Census (2010) records about 4 lakh women in the post-harvest workforce in marine fisheries (involved in all activities except the actual fishing process)
PHOTO • Manini Bansal

மாலை நடைபெறும் ஏலத்தில் மீன்களை விற்பது (இடது) ஏலத்தின் போது தினமும் அரட்டை அடிப்பது (வலது). கடைசியாக 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கடல்வாழ் மீன்வள கணக்கெடுப்பு பதிவேட்டின்படி சுமார் 4 லட்சம் பெண்கள் மீன் பிடித்தலுக்கு பிந்தைய பணிகளில் ஈடுபடுகின்றனர் (மீன்பிடித்தல் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்)

Left: Manisha Jadhav, head of the local fisherwomen’s association, Sindhusagar Macchi Vikri Mahila Sanghatna, Malwan, exudes confidence as she sits with her fish in the market. Right: Women of the community
PHOTO • Manini Bansal
Left: Manisha Jadhav, head of the local fisherwomen’s association, Sindhusagar Macchi Vikri Mahila Sanghatna, Malwan, exudes confidence as she sits with her fish in the market. Right: Women of the community
PHOTO • Manini Bansal

இடது: மல்வானின் சிந்துசாகர் மச்சி விக்ரி மகிளா சங்கடனா எனும் உள்ளூர் மீனவ பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் மணிஷா ஜாதவ் நம்பிக்கையுடன் தனது மீன்களை காட்சிப்படுத்தி அமர்ந்துள்ளார். வலது: அச்சமூக பெண்கள்

PHOTO • Manini Bansal

மல்வானின் சிந்துசாகர் மச்சி விக்ரி மகிளா சங்கடனா உறுப்பினர்களின் புகைப்படங்கள் தண்டி மீன் சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

PHOTO • Manini Bansal

காலையின் கடை மீனை விற்றபிறகு கூடைகளை கழுவுகிறார்

தக்ஷின் அறக்கட்டளை திட்டத்தின் ஒரு பகுதியாக இக்கட்டுரையாளர்கள் இப்பணியை செய்துள்ளனர் .

தமிழில்: சவிதா

Trisha Gupta

Trisha Gupta is a Bengaluru-based marine conservationist studying shark and ray fisheries along the Indian coastline.

Other stories by Trisha Gupta
Manini Bansal

Manini Bansal is a Bengaluru-based visual communication designer and photographer working in the field of conservation.

Other stories by Manini Bansal
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha