“நாங்கள் குதிரைகளை எங்கள் குடும்ப உறுப்பினர்போலவே நடத்துவோம். நான் அதன் மருத்துவராகிவிடுவேன். தேவைப்படும்போது, அவற்றுக்கு மும்பையில் இருந்தும் மருந்துகள் வாங்கி வருவேன். அவை உடல் நலம் குன்றும்போது, நான் அவற்றுக்கு ஊசி போடுவேன். நான் அவற்றை குளிப்பாட்டி, சுத்தமாக வைத்திருப்பேன்“ என்று மனோஜ் கசுண்டே கூறுகிறார். அவர் தனது குதிரைகளை மிகவும் நேசிக்கிறார். உரிமம் பெற்ற குதிரையின் சொந்தக்காரர்களுள் மனோஜும் ஒருவர். குதிரையில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு, அவற்றுடன் அதை பாராமரிப்பவர் அல்லது அதன் சொந்தக்காரர்கள் மத்தேரனின் மலைச்சரிவுகளில் மேலும் கீழும் அழைத்துச்செல்வார்கள். அதில் கிடைக்கும் வருமானமே அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

கசுண்டேக்களின் உலகம் நமக்கு புலப்படாத ஒன்று. அரிதாகவே நாம் அது குறித்து நாம் விவரமாக தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களின் கதைகளை நாம் கேட்பதில்லை. மஹாராஷ்ட்ராவின் இந்த புகழ்பெற்ற ராய்காட் மலைப்பகுதி மும்பைக்கு தெற்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 460 குதிரைகள் வேலை செய்கின்றன. அவற்றை பராமரிப்பவர்கள் (அனைவரும் அவற்றுக்கு சொந்தக்காரர்கள் கிடையாது) “அவர்கள் ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் வரை மலையேற வேண்டும்“ என்று நம்மிடம் கூறினார்கள். இது உங்களுக்கு ஆச்சர்யமூட்டுவதாக இருக்கலாம். இது குதிரை மற்றும் அதை பராமரிப்பவர்கள் அல்லது இருவருக்குமே பெருஞ்சுமைதான்.

PHOTO • Sinchita Maji

‘நாங்கள் குதிரைகளை எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்போல் நடத்துகிறோம்‘ என்று மனோஜ் கசுண்டே கூறுகிறார்

இந்த மலைப்பகுதியின் இதயப்பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இது தாஸ்துரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மத்தேரனின் முக்கியச் சந்தையில் இருந்து தாஸ்துரி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. குறுகிய ரயில் பாதையில் செல்லும் சிறிய ரயில், நேரலுக்கும், மத்தேரன் சந்தைக்கும் இடையே இயக்கப்பட்டது. இது அருகில் உள்ள 11 கிலோ மீட்டரில் உள்ள ஒரு ரயில் நிலையம். ஆனால், இரண்டு ரயில்கள் தடம் புரண்டதையடுத்து, 2016ம் ஆண்டு மே மாதம் இந்த சேவையும் நிறுத்தப்பட்டது. எனவே நீங்கள் மலையேறிச் செல்ல வேண்டும் அல்லது கையிழுவை ரிக்ஷாக்களில் அல்லது குதிரையேறி தாஸ்துரியில் இருந்து செல்லவேண்டும். அதற்குக் குதிரைகளும், அதைப் பராமரிப்பவர்களும், ரிக்ஷா ஓட்டுபவர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் உதவுகிறார்கள்.

சிவாஜி கொக்கரேவின் குதிரைகள் ராஜா, ஜெய்பால் மற்றும் சீடாக் ஆகியவற்றிற்கு தனித்தனியாக அடையாள அட்டைகள் உள்ளன. அவற்றின் புகைப்படங்கள் அதன் சொந்தக்காரரின் உரிமத்தில் உள்ளது. உள்ளூர் காவல்துறையினர் இந்த உரிமங்களை குதிரையின் சொந்தக்காரர்களுக்கு வழங்குகிறார்கள். அடையாள அட்டையின் பின்புறத்தில் பதிவுசெய்யப்பட்ட குதிரைகளின் புகைப்படங்கள் உள்ளன. மூன்று குதிரைகள் வைத்துள்ள குதிரையின் சொந்தக்காரரின் உரிமத்தின் பின்புறம் மூன்று குதிரைகளின் படங்களும் உள்ளன.

“இது எங்கள் குடும்பத்தொழில், ராஜா, ஜெய்பால் மற்றும் சீட்டா ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் எனது சகோதர் கணேஷ். அவர் மத்தேரனில் வசிக்கிறார்“ என்று கொக்கரே கூறுகிறார்.

ராஜா, ஜெய்பால் மற்றும் சீட்டாவுடன் சிவாஜி கொக்கரே

கொக்கரே 20 வயதுகளில் உள்ளார். அவர் தினமும் நேரலின் தங்கர்வாடாவில் இருந்து தாஸ்துரி வாகன நிறுத்தத்திற்கு, குதிரையில் சுற்றுலா வருபவர்களை அழைச்செல்வதற்காக பயணிக்கிறார். அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக இந்த வேலையை செய்வதாக கூறுகிறார். ஒன்று அல்லது பல வாடிக்கையாளர்களை,  எண்ணிக்கைப் பொறுத்து, சகோதரரின் குதிரையில் ஏற்றி மேலேயும், கீழேயும் மலைச்சரிவுகளிலும் அழைத்துச் செல்கிறார். பயணிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லும்போது சில நேரங்களில் அவர் குதிரையுடன் ஓடுகிறார். அவரது நாட்களை புழுதி படிந்த அந்த மலைச்சாலையில் செலவிடுகிறார். மழைக்காலங்களில் அவை சேறும், சகதியுமாகின்றன.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் விடுமுறை காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் கொக்கரே ஒரு நாளில் 3 முதல் 4 முறை வரை சென்று வருகிறார். வார நாட்களில் சில பயணங்களே செல்ல கிடைக்கிறது. தாஸ்துரியில் விலைப்பட்டியல் உள்ளது. தூரம், நேரம் மற்றும் செல்ல வேண்டிய இடங்களைப்பொறுத்து, குதிரை சவாரிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சுற்றுலா சிறப்பாக நடைபெறும் நாட்களில், ஒரு குதிரை ரூ.1,500 வரை சம்பாதிக்கிறது. அது குதிரையின் சொந்தக்காரர், அதை பராமரிப்பவர் மற்றும் குதிரை பராமரிப்பு ஆகியவற்றிற்கு பிரித்துக்கொள்ளப்படுகிறது.

காணொளி: கசுண்டே, கொக்கரே மற்றும் காவ்லே ஆகியோர் மத்ரேனில் குதிரை பராமரிப்பது குறித்து பேசுகிறார்கள்

46 வயதில் இருக்கும் மனோஜ் 30 வருடங்களை குதிரைகளுடன் கழித்துள்ளார். அவர் இரண்டு குதிரைகளுக்கு சொந்க்காரர். ஸ்னோ பாய் என்பது வெள்ளை நிறத்திலும், பிளப்பி என்பது அரக்கு நிறத்திலும் உள்ளது. முழு வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் உள்ள குதிரைகள் விலையுர்ந்தவை. “ஒரு குதிரை ரூ.1 முதல் 1.2 லட்சம் வரை விற்கப்படுகிறது“ என்று அவர் கூறுகிறார். கசுண்டே ஒவ்வொரு குதிரையிலிருந்தும் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இரு குதிரைகளில் ஒன்று நோய்வாய்ப்பட்டாலும், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அவற்றின் சிகிச்சைக்காக செலவு செய்ய நேரிடும். குதிரையை பராமரிப்பதற்கு மாதமொன்றுக்கு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது.

மத்தேரனின் பன்ச்வாதி நகரில் இருந்து கசுண்டேவின் நாள் தொடங்குகிறது. அந்த குடியிருப்பில் 40 முதல் 50 வீடுகள் உள்ளது. அங்கு அவர் தனது மனைவி மனிஷா, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது மகளுக்கு 21 வயதாகிறது. பள்ளி வகுப்புகளை முடித்துள்ளார். அவரது 19 வயது மகன் 12ம் வகுப்பு படிக்கிறார். கோதுமை நார்  அல்லது கம்பு ரொட்டி மற்றும் புற்களை கொடுத்து காலை 7 மணிக்கு தனது இரு குதிரைகளையும் அழைத்து வருகிறார். இரவு 7 மணிக்கு குதிரைகளை அவற்றின் லாயத்திற்கு அழைத்துச் செல்கிறார். மாலையில் அவை ரொட்டிகள் அல்லது கேரட்களை உண்டுவிட்டு உறங்கச் செல்லும்.

குதிரைகளுக்குத் தேவையானவற்றை மத்தேரனின் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வாங்கிக்கொள்கிறார்கள். அங்குதான் உள்ளூர் ஆதிவாசி மக்கள் அருகில் உள்ள மலைப்குதியில் இருந்து எடுத்துவரப்படும் புற்கள் முதல் பல்வேறு உணவுப்பொருட்களை விற்பனை செய்வார்கள். நேரல் கடைக்காரர்களும் குதிரைக்கான உணவு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

“மத்ரேன் 15 ஆண்டுகளுக்கு முன் மிக அழகாக இருந்தது“ என்று கசுண்டே கூறுகிறார். “அந்த காலங்களில் ஒருமுறை சென்று வருவதற்கு ரூ.100  கிடைத்தது. ஆனால், அது நன்றாக இருந்தது.“

மத்தேரன் ஓட்டல்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேறும் நேரம் 9 மணியிலிருந்து மதியம் வரை வெவ்வேறு நேரங்களில் நடக்கிறது. இது குதிரை வைத்திருப்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்கள் ஆகியோரின் அட்டவணையை தீர்மானிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் வெளியே வருவதற்கு முன்னரே ஓட்டலின் நுழைவாயில் அருகே அவர்கள் குழுமி தாஸ்துரிக்கு திரும்பும் வாடிக்கையாளர்களை பிடிக்கிறார்கள்.

ராஜாவுடன் சாந்தாராம் காவ்லே : ‘வீட்டிலே சிலைபோல் அமர்ந்திருந்தால் நம்மால் பணம் சம்பாதிக்க முடியாது‘ என்று அவர் கூறுகிறார். கீழே : அவரது அடையாள அட்டை, பின்புறத்தில் ராஜாவுடையது

இவர்களுக்கு மத்தியில் சாந்தாராம் காவ்லே (38). புனே மாவட்டத்தின் கலாகரை கிராமத்தைச் சேர்ந்த குதிரை உரிமையாளர். அவரது குதிரையின் பெயர் ராஜா. காவ்லே காலை மூன்றரை மணிக்கு எழுந்து ராஜாவுக்கு உணவு கொடுக்கிறார். அவருக்கு அதிகாலையிலே ஏதேனும் அழைப்புகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், ஓட்டலை 5 மணிக்கு அடைகிறார். இல்லாவிட்டால், அவரும் ராஜாவும் சந்தைக்கு காலை 7 மணிக்கு வந்துவிடுவார்கள். பின்னர் அது இருவருக்கும் 12 மணி நேர வேலை நாள். “வீட்டிலே சிலைபோல் அமர்ந்திருந்தால் நம்மால் பணம் சம்பாதிக்க முடியாது. நீங்கள் வெளியே சென்றால் உங்களுக்கு வேலை கிடைக்கும்“ என்று அவர் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Suman Parbat

Suman Parbat is an onshore pipeline engineer from Kolkata, presently based in Mumbai. He has a B-Tech degree in civil engineering from the National Institute of Technology, Durgapur, West Bengal. He is also a freelance photographer.

Other stories by Suman Parbat
Sinchita Maji

Sinchita Maji is a Senior Video Editor at the People’s Archive of Rural India, and a freelance photographer and documentary filmmaker.

Other stories by Sinchita Maji
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.