"நூல் தீர்ந்துவிட்டது. பணமும் செலவாகிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் தயார் செய்த புடவைகளை வியாபாரியிடமும் கொண்டு சேர்க்கவும் முடியாது" என்கிறார் புர்வாரி கிராமத்திலிருந்து சந்தேரி துணி நெய்யும் சுரேஷ் கோலி.

ஊரடங்கு ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள்ளேயே கைவசமிருந்த நூற்கண்டுகள் நெய்யப்பட்டு தீர்ந்து போய்விட்டன. சந்தேரி துணிகளை விற்கும் ப்ரான்பூர் கிராமத்தின் வியாபாரி ஆனந்தி லாலுக்காக நெய்யப்பட்ட மூன்று சேலைகள் காத்திருக்கின்றன.

துணி நெய்தவரின் ஊர், உத்தரப்பிரதேசத்தின் பெத்வா ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் ராஜ்காட் அணைக்கு அருகே இருக்கும் லலித்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. ஆற்றுக்கு அந்தப் பக்கம், மத்தியப் பிரதேச அஷோக் நகர் மாவட்டத்தில் சந்தேரி டவுன் இருக்கிறது. அதே பேரில் நெய்யப்படும் துணிகளுக்கான மையம் அது. வியாபாரியின் ப்ரான்பூர் கிராமம் இந்த டவுனுக்கு அருகே இருக்கிறது.

உத்தரப்பிரதேச - மத்தியப்பிரதேச எல்லையில் இருக்கும் புர்வாரையும் சந்தேரியையும் காவல்துறையின் தடுப்புகள் மறித்திருக்கின்றன. இரு ஊர்களில் இருக்கும் ஆனந்தி லாலையும் சுரேஷ்ஷையும் 32 கிலோமீட்டர் சாலை பிரித்திருக்கிறது. ”என்ன நடக்கிறது என எனக்கு புரியவில்லை. தில்லியிலிருந்து வீட்டுக்கு வருபவர்களை காவல்துறை பிடித்துச் செல்கிறது” என்கிறார் சுரேஷ். “எங்கள் கிராமத்துக்கெல்லாம் எப்படி நோய் வரும்? அரசாங்கம் எங்களின் மாவட்டத்தை முடக்கி வைத்திருக்கிறது. எங்களின் வாழ்க்கைகள் புரட்டிப் போடப்பட்டிருக்கின்றன”

முடித்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று புடவைகளுக்கு 5000 ரூபாயை அனுப்பி வைக்குமாறு ஆனந்திலாலை சுரேஷ் கேட்டிருக்கிறார். “சந்தை திறக்கும்வரை முழுப்பணம் கொடுக்க முடியாது என சொல்லி வெறும் 500 ரூபாய் மட்டும்தான் அனுப்பினார்.” என்கிறார்.

ஊரடங்குக்கு முன்பெல்லாம் வியாபாரி, சுரேஷ்ஷுக்கு நெய்யத் தேவையான பஞ்சு, பட்டு நூற்கண்டுகள், ஜரிகை நூலெல்லாம் கொடுத்து  புடவைகள், துப்பட்டாக்கள், துணிகள், திரைச்சீலைகள் போன்றவற்றை நெய்யும் வேலைகள் கொடுப்பார். அதற்கான வடிவமைப்புகளையும் கொடுப்பார். வேலை கொடுக்கப்படும்போதே விலைகள் நிர்ணயிக்கப்படும். வேலை முடிந்து துணி எடுக்கும்போது பணம் கொடுக்கப்படும். எப்போதுமே ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டது.
Suresh and Shyambai Koli had steady work before the lockdown. 'I enjoy weaving. Without this, I don’t know what to do,' says Suresh
PHOTO • Astha Choudhary
Suresh and Shyambai Koli had steady work before the lockdown. 'I enjoy weaving. Without this, I don’t know what to do,' says Suresh
PHOTO • Mohit M. Rao

சுரேஷ் மற்றும் ஷ்யாம்பாய் கோலி ஆகியோருக்கு ஊரடங்குக்கு முன் வரை வேலைகள் இருந்தன. “நெய்வது எனக்கு மிகவும் பிடித்த வேலை. இது இல்லாமல் என்ன செய்வதென தெரியவில்லை” என்கிறார் சுரேஷ்

வியாபாரிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இடையே இருந்த இந்த வழக்கத்தை ஊரடங்கு குலைத்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் சுரேஷ் வேலையைத் தொடர நூற்கண்டுகளும் ஜரிகை நூலும் தேவைப்பட்டது. குடும்பச்செலவுக்கும் பணம் தேவைப்பட்டது. தினசரி ஆனந்திலாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஒரு வழியாக வியாபாரி, சுரேஷ்ஷை ஏப்ரல் 27ம் தேதி காவல்துறை தடுப்பருகே சந்திக்க ஒப்புக் கொண்டார். நூற்கண்டுகளையும் மே மாத இறுதிக்குள்  நான்கு புடவைகளை நெய்வதற்கான முன்பணமாக 4000 ரூபாயையும் அவர் கொடுத்தார். மிச்சப் பணத்தைப் பிறகு கொடுப்பதாகவும் சொல்லியிருந்தார்.

சுரேஷ்ஷும் அவரது குடும்பமும் பட்டியல் சாதியை சேர்ந்த நெசவுத் தொழில் செய்யும் கோலி சமூகத்தை சேர்ந்தவர்கள். சுரேஷ் அவரின் அப்பாவிடமிருந்து நெசவு வேலையை பதினான்கு வருடங்களுக்கு முன் கற்றுக் கொண்டார். கோலிகளும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்களான அன்சாரிகளும் சந்தேரி டவுனின் பெரும்பான்மை நெசவாளர்கள்.

2019ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சந்தித்தபோது சுரேஷ்ஷின் நெசவு அசைவுகள் பியோனா வாசிப்பவரை போலிருந்தது. ஒத்திசைவுடன் நெம்புகோல்களை இழுத்து தறியை மேலும் கீழும் வலப்புறமும் இடப்புறமும் ஒரே வேகத்தில் இழுத்து அவை ஏற்படுத்திய சத்தம் அறை முழுவதும் எதிரொலித்தது. இழை சரியாக ஓடி பட்டுத்துணியாக வெளிவந்தது. ஊரடங்குக்கு முன் தினசரி பத்து மணி நேரம் தறியில் அவர் வேலை பார்த்தார். நிறைய வேலைகள் வந்தால் 14 மணி நேரங்கள் கூட வேலை பார்த்திருக்கிறார்.

சந்தேரி துணியின் மெலிதான சல்லடைத்தன்மை பசை போடாத நெசவு நூல் பயன்படுத்துவதால் கிடைக்கிறது. நெசவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலேயே சந்தேரி புடவைக்குதான் கிராக்கி அதிகம். அதன் நிறங்களும் பளபளப்பும் தங்க ஜரிகையும் அதிலுள்ள படங்களும் மதிப்பை கூட்ட வல்லவை. சந்தேரிப் பகுதியில் 500 வருடங்களாக நெய்யப்படும் புடவைக்கு புவிசார் குறியீட்டு தர சான்றிதழ் 2005ம் ஆண்டு கிடைத்தது.

காணொளி: கொரோனா ஊரடங்கால் தவிக்கும் சந்தேரி நெசவாளர்கள்

சந்தேரி டவுனில் வணிகம் சிதைந்திருக்கிறது. சில்லறை வணிகம் குறைந்ததில் நெசவாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்

சாதாரண ஒரு புடவை நெய்ய நான்கு நாட்கள் ஆகும் என்கிறார் சுரேஷ். ஜரிகை படம் போட்ட புடவையெனில் வடிவமைப்பை பொறுத்து எட்டிலிருந்து முப்பது நாட்கள் வரை ஆகும். தறிக்கட்டையின் ஆட்டமும் பல மணி நேர முழு கவனமும் ஒவ்வொரு சந்தேரி புடவையையும் சிறப்பானதாக உருவாக்குகிறது.

ஊரடங்குக்கு முன் வரை, வருடத்தின் இரண்டு மாதங்களை தவிர்த்து எல்லா நாட்களிலும் சுரேஷ்ஷுக்கு வேலை இருந்திருக்கிறது. ஜூன் மாத இறுதியிலிருந்து ஆகஸ்டு மாத இறுதி வரை மட்டும் பருவ மாதங்கள் என்பதால் ஈரப்பதம் இன்றி நூல் தடித்துவிடும். நெசவுக்கு பயன்படுத்த முடியாது.  “பல மணி நேரம் தொடர்ந்து செய்ய வேண்டிய வேலை. ஆனால் எனக்கு நெசவு செய்யப் பிடிக்கும். எனக்கு உணவையும் வாழ்க்கையையும் கொடுப்பது நெசவுதான். இது இல்லாமல் என்ன செய்யவென தெரியவில்லை. எங்களை காப்பாற்ற நிலமும் ஒன்றுமில்லை. இக்கட்டான நேரங்களில் செலவு செய்து கொள்ள சேமிப்பும் ஒன்றுமில்லை” என்கிறார் சுரேஷ்.

விற்பனைப் பொருளின் விலையில் 20லிருந்து 30 சதவிகிதம் வரை சந்தேரி நெசவாளர்கள் சம்பாதித்து விடுவார்கள். ஒரு சாதாரண புடவையை வியாபாரி 2000 ரூபாய்க்கு விற்றால், சுரேஷ்ஷுக்கு 600 ரூபாய் கிடைக்கும். நான்கு நாள் வேலை. அவர் நெய்யும் சேலைகளில் பெரும்பான்மை எட்டு நாட்கள் உழைப்பில் உருவாகி 5000 ரூபாய்க்கு விற்கப்படுபவை. ஜரிகை வேலைப்பாடுகளுடன் இருக்கும் புடவைகள் 20000 ரூபாய் வரை விற்கும். நெய்வதற்கு ஒரு மாதம் ஆகும். நிறைய வேலைப்பாடுகளுடன் இருக்கும் புடவைகள் நெசவாளர்களுக்கே 12000 ரூபாய் வரை கூட பெற்றுத் தரும்.

புர்வாரில் சுரேஷ்ஷும் அவர் மனைவி ஷ்யாம்பாய், அவரது தாய் சமுபாய் மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை ஆகியோர் வாழும் மூன்று அறை வீட்டில் ஒரு அறை முழுவதையும் இரண்டு தறிகள் ஆக்கிரமித்திருக்கின்றன.

ஆர்டர்கள் தொடர்ந்து வரும் காலத்தில், தறிகள் ஒரு சிம்பனி இசை போல சத்தம் கொடுத்து தொடர்ந்து செயல்பட்டு தினமும் புடவைகளை உருவாக்கும். அப்பா வாங்கிய தறியை சுரேஷ் இயக்குகிறார். ஷ்யாம்பாய் இரண்டாம் தறியை இயக்குவார். இருவரும் சேர்ந்து மாதத்துக்கு பத்திலிருந்து பதினைந்தாயிரம் வரை சம்பாதித்தார்கள்.
Left: A design card for a  zari butti, given to Suresh by the seth to weave. Right: The two looms in Suresh and Shyambai's home face each other
PHOTO • Astha Choudhary
Left: A design card for a  zari butti, given to Suresh by the seth to weave. Right: The two looms in Suresh and Shyambai's home face each other
PHOTO • Astha Choudhary

இடது: சுரேஷ் நெய்வதற்காக வியாபாரி கொடுத்த ஜரிகைப் படம். வலது: சுரேஷ் மற்றும் ஷ்யாம்பாயின் வீட்டில் எதிரெதிராக அமைந்திருக்கும் இரண்டு தறிகள்

ஷ்யாம்பாய் சந்தேரியை சேர்ந்த ஒரு நெசவுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தறி வேலையின் நுணுக்கங்களை சகோதரனிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் கற்றுக் கொண்டார். “சுரேஷ்ஷை மணம் முடித்தபோது அறைக்குள் ஒரே ஒரு தறிதான் இருந்தது. ஓரளவுக்கு நான் உதவி செய்தேன். ஆனாலும் வருமானத்தை பெருக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் எனக்கு தறி வாங்க 50000 ரூபாய் கடன் வாங்கினோம். அதை வைத்துக் கொண்டு புடவை மற்றும் துணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிந்தது” என்கிறார் ஷ்யாம்பாய்.  நெசவாளர்களுக்கென கொடுக்கப்படும் சிறப்பு வங்கிக் கடன் வாங்கியிருக்கும் அவர்கள் 1100 ரூபாய் மாதத் தவணை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

வியாபாரியிடம் வேலைகள் குறைவாக வரும் நேரங்களில் சமுபாய்யுடன் சேர்ந்து பீடி இலை சேகரிக்க சென்று விடுவார் ஷ்யாம்பாய். சமுபாய் பீடி சுருட்டும் வேலை பார்க்கிறார். 1000 பீடி சுருட்டினால் 110 ரூபாய் அவருக்கு கிடைக்கும். அவருடைய வருமானமும் ஊரடங்கினால் தடைபட்டுப் போனது.

சந்தேரி டவுனில் வணிகம் குலைவுக்குள்ளாகி இருக்கிறது. சொற்ப பணத்துக்கும் வியாபாரிகளிடம் கெஞ்சும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சில்லறை வணிகம் குறைந்ததில் அவர்கள்தாம் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான நெசவாளர்கள் வியாபாரிகளுக்கும் பெரு நெசவாளர்களுக்கும் (அனுபவம் வாய்ந்த நெசவாளர்கள் வியாபாரிகளாகவும் இருப்பார்கள்) வேலை பார்க்கிறார்கள்.

சந்தேரியில் வாழும் 33 வயதான ப்ரதீப் கோலியிடம் வியாபாரி, விலையெல்லாம் குறைந்து விட்டதெனவும் ஒருவாரத்துக்கான கூலி 1500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய்க்கு குறைந்துள்ளதாகவும் சொல்லி ‘சூழல் மாறும் வரை இதுதான் நிலவரம்’ எனவும் ஏப்ரல் மாதத்தில் சொல்லியிருக்கிறார். “நாங்கள் வாதம் செய்ததில் புது விலைகளுக்கு அவர் ஒப்புக் கொண்டார். அதுவும் இனி வரும் வேலைகளுக்குத்தானே ஒழிய ஏற்கனவே செய்து முடித்த வேலைகளுக்கு இல்லை. சூழல் மாறவில்லை எனில், மிகப்பெரும் சிக்கலில் நாங்கள் மாட்டிக் கொள்வோம்”, என்கிறார் ப்ரதீப்.

சந்தேரியின் நெசவாளர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் கிடைக்குமென உறுதி தரப்பட்டது. ஆனால் 10 கிலோ அரிசி மட்டும்தான் ஏப்ரல் மாதம் கிடைத்தது. “நகராட்சி அலுவலர்கள் எங்கள் தெருவுக்கு வந்து ஆய்வு செய்தார்கள். பருப்பு, அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை கொடுப்பதாக உறுதியளித்தார்கள். ஆனால் வெறும் அரிசி மட்டும்தான் கொடுத்தார்கள்,” என்கிறார் 24 வருடங்களாக நெசவு வேலை செய்யும் 42 வயதான தீப் குமார். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் மிகவும் சிக்கனமாக உணவை எடுத்துக் கொள்கிறார்கள். “என்னுடைய தேநீரில் சர்க்கரை போட்டுக் கொள்ள நான் யோசித்ததே இல்லை. அதே போல் கோதுமை ரொட்டிதான் அன்றாட உணவாக இருக்குமெனவும் யோசித்ததில்லை” என்கிறார் தீப் குமார்.
A weaver (left) who works for Aminuddin Ansari. Chanderi weavers are finding it difficult to get raw materials and to earn money now
PHOTO • Aminuddin Ansari
A weaver (left) who works for Aminuddin Ansari. Chanderi weavers are finding it difficult to get raw materials and to earn money now
PHOTO • Aminuddin Ansari

இடது: அன்சாரிக்கு நெசவு வேலை செய்யும் முகமது ரயீஸ் முசாவர். சந்தேரி நெசவாளர்கள் மூலப்பொருட்கள் பெறுவதற்கும் வருமானம் ஈட்டவும் சிரமப்படுகிறார்கள்

தீப் குமார் வீட்டில் இருக்கும் தறிகளில் அவரின் சகோதரன் இயக்கும் தறி நூல் தீர்ந்ததால் கூடிய விரைவில் நிற்கப் போகிறது. ஊரடங்குக்கு முன் வரை குடும்பத்தின் சராசரி வருமானமாக இருந்த 4500 ரூபாய் தற்போது 500 ரூபாய்யாக குறைந்திருக்கிறது. “ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பணம் வாங்க வியாபாரியிடம் செல்வேன். புதன்கிழமையே பணம் தீர்ந்து போய்விட்டது,” என்கிறார் குமார்.

“மின்சாரத்தறிகள் பிரபலமாகி சந்தேரி புடவைகளின் தேவை சரிந்த காலத்தில் கூட எங்களால் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆனால் இப்போது இருக்கற சிக்கலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வரத்தும் இல்லை. தேவையும் இல்லை. பணமும் இல்லை” என்கிறார் 50 வருடங்களாக நெசவு வேலை செய்து 1985ம் ஆண்டு தேசிய விருது வாங்கிய 73 வயதான துள்சிராம் கோலி. அவருடைய வீட்டில் ஆறு தறிகள் இருக்கின்றன. அவரும் அவர் மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மருமகள்களும் அவற்றை இயக்குகின்றனர்.

அஷோக்நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லையென்ற போதிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மீண்டு வர அதிக காலம் பிடிக்கும்.

”அடுத்த ஆறேழு மாதங்களுக்கு புது வேலைகள் கிடைக்காது என நினைக்கிறேன். அதற்குப் பிறகும் கைத்தறி புடவைகளை வாங்கும் அளவுக்கு மக்களிடம் பணமில்லாமல் மந்த நிலையே நீடிக்கும். மின்சாரத்தறியில் தயாரிக்கப்படும் மலிவான புடவைகளையே அவர்கள் வாங்குவார்கள்,” என்கிறார் 100 கைத்தறி நெசவாளர்களுடன் வணிகம் செய்யும் வியாபாரியான அமினுத்தின் அன்சாரி.

ஊரடங்குக்கு முன் வரை, எட்டிலிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் வரையிலுமான ஆர்டர்களை ஒவ்வொரு மாதமும் அமினுத்தின் பெற்று வந்தார். தில்லியின் பெரிய துணிக்கடைகளும் நிறுவனங்களும் அவருக்கு வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. மூலப்பொருட்கள் வாங்கவென முன் பணமும் அவை கொடுப்பதுண்டு. பல நெசவாளர்கள் நல்ல வருமானம் வரக் கூடிய அன்றாடக் கூலி வேலைக்கு வரும் மாதங்களில் சென்று விடுவார்களென நினைக்கிறார் அமினுத்தின்.
PHOTO • Aminuddin Ansari

பளபளப்பாலும் வண்ண வேலைப்பாடாலும் சந்தேரி புடவைகள் ஈர்க்க வல்லவை. ஆனால் ஊரடங்கு நேரத்தில் அவற்றை யாரும் வாங்கவில்லை

நிறுவனங்களும் துணிக்கடைகளும் கொடுத்த வேலைகளை ரத்து செய்யத் தொடங்கியிருக்கின்றன. பல பெரிய துணி நிறுவனங்கள் ஆர்டர்களை கொடுக்கவென அவர்களின் ஊழியர்களையே சந்தேரிக்கு அனுப்புவார்கள் என்கிறார் சுரேஷ்ஷை  போன்ற 120 நெசவாளர்களுடன் வணிகம் செய்யும் ஆனந்தி லால். “இந்த வருட ஜனவரி மாதத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு (ஒரு முன்னணி நிறுவனத்திடமிருந்து) எங்களுக்கு கிடைத்தது. நெசவாளர்களுக்கு கொடுக்கவென பத்து பதினைந்து லட்சம் ரூபாய்க்கு நான் மூலப்பொருட்கள் வாங்கினேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஐந்து நாட்களில், அவர்கள் எங்களை தொலைபேசியில் அழைத்து எந்தளவுக்கு வேலை நடந்திருக்கிறது என கணக்கு பார்க்க சொன்னார்கள்,” என்கிறார். பத்து நாட்கள் கழித்து தறிகளில் இருந்த வேலைகளை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளும் ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்குக்கு முன் வரை, புடவை வியாபாரத்தில் பெருமளவு லாபத்தை மொத்த விலையின் 40 சதவிகிதத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வியாபாரிகள் அடைவதை பற்றி நெசவாளர்கள் பேசியிருக்கிறார்கள். 34 வயதான முகம்மது தில்ஷத் அன்சாரி மற்றும் 12, 13 குடும்பத்தினரும் நண்பர்களும் சேர்ந்து தரகர்களை அகற்றவென நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆரம்பித்தார்கள். கைத்தறி சங்கத்தில் சுயாதீன நெசவாளர்கள் என பதிவு செய்து கூட்டாக வேலைகள் எடுத்து செய்யத் தொடங்கினர். “வாட்சப் மற்றும் முகநூல் போன்ற சமூகதளங்களில் ஆர்டர்களை எடுக்கக் கற்றுக்கொண்டோம்,” என்கிறார் அவர். சங்கத்தில் தற்போது 74 நெசவாளர்கள் இருக்கின்றனர்.

பிறகுதான் கொரோனா வந்தது. தில்லியில் தஸ்தகர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட கைவினை பொருட்களுக்கான கண்காட்சியில் மார்ச் மாதத்தின்போது தில்ஷத் இருந்தார். 12லிருந்து 15 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான பொருட்களை அங்கு விற்கலாமென நம்பியிருந்தார். ஆனால் தில்லி அரசு கூட்டமாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மார்ச் 13ம் தேதியிலிருந்து தடை விதித்தது. “75000 ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலான பொருட்களை விற்றதோடு நாங்கள் வீடு திரும்ப நேர்ந்தது” என்கிறார்.

மொத்த வருடத்துக்கென ஆர்டர்கள் கொடுத்திருந்த வாடிக்கையாளர்கள் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அவற்றை ரத்து செய்யத் தொடங்கினார்கள். தில்ஷத்தின் நம்பிக்கை நீர்த்துப் போய்விட்டது. “என்னால் இரவு தூங்க முடியவில்லை. புடவைகள் மீண்டும் எப்போது விற்குமென தெரியவில்லை. அதுவரை நாங்கள் என்ன செய்வது?” என கேட்கிறார்.

சந்தைகள் மீண்டும் திறந்த பிறகு, பெருவியாபாரிகள் மூலப்பொருட்கள் வாங்கவும் பெரிய ஆர்டர்கள் பெறவும் வழிகள் கொண்டிருப்பார்கள் என சொல்லும் தில்ஷத், “நாங்கள் திரும்பவும் வியாபாரிகளை தேடித்தான் செல்ல வேண்டியிருக்கும். அல்லது எங்களை போன்ற பல நெசவாளர்கள் சந்தேரிக்கு வெளியே அன்றாடக்கூலிகளாக வேலைக்கு செல்லும் நிலை வரலாம்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Mohit M. Rao

Mohit M. Rao is an independent reporter based in Bengaluru. He writes primarily on environment, with interests in labour and migration.

Other stories by Mohit M. Rao
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan