கிருஷ்ணா மாவட்டம் வட்லமானு கிராமத்தில் 2.5 ஏக்கர் குத்தகை நிலத்தில் ராமகிருஷ்ண ரெட்டி சோளம் பயிரிட்டுள்ளார். அவரும் மற்ற எட்டு விவசாயிகளும் ஹைதராபாத்தின் IML விதை நிறுவனத்திற்கு விற்பதற்காக ஆந்திராவில் உள்ள அகிரிபள்ளே மண்டலத்தில் உள்ள கிராமத்தில் 30 ஏக்கரில் சோளம் பயிரிட்டனர். “நாங்கள் செப்டம்பர் 2016-ல் பயிரிட்டு, விதைகளை [சுமார் 80 டன்கள்] மார்ச் 2017-ல் விற்றோம். ஒரு வருடத்திற்கு மேலாகியும், எங்கள் ஒன்பது பேருக்கும் கொடுக்க வேண்டிய 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்டத் தொகையை நிறுவனம் கொடுக்கவில்லை,” என்கிறார் 45 வயதான ராமகிருஷ்ணா.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அந்த நிறுவனம், விவசாயிகளுக்குக் கலப்பின விதைகளை வழங்குகிறது. விதை விவசாயிகள் அவற்றை வளர்த்து, பெருக்கப்பட்ட விதைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்கிறார்கள். நிறுவனம் அவற்றை, லாபத்துக்கு நடவு விவசாயிகளிடம் சந்தையில் விற்பனை செய்கிறது. விதை விவசாயிகள் நிறுவனத்திடமிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டியப் பணத்தைப் பூச்சிக்கொல்லிகளாகவும் 24 முதல் 36 சதவிகிதம் வருடாந்திர வட்டி விகிதக் கடனாகவும் பெறுகிறார்கள். கடனும் வட்டியும் விவசாயிகள் பெறும் இறுதித் தொகையிலிருந்து கழிக்கப்படும்.

நிறுவனம் மார்ச் இறுதிக்குள் பணம் செலுத்த வேண்டும், ஆனால் பணம் வழக்கமாக 2-3 மாதங்களுக்குப் பிறகு வரும். 2017-ம் ஆண்டுக்கானப் பணத்தை விவசாயிகளுக்கு நிறுவனம் கொடுக்கவில்லை. கொடுக்கப்படாத நிலுவைத் தொகை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகளுடன் பொருந்தாத விலைகள், பல மக்காச்சோள விதை விவசாயிகளை கடனில் தள்ளியது. சிலர் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் நேர்ந்தது.

வட்லமானு கிராமத்தின் ஒன்பது விவசாயிகளில் ஒருவரான 40 வயது பில்லி ஸ்ரீனிவாஸ், 15 ஆண்டுகளாக மக்காச்சோள விதைகளை பயிரிட்டவர். “எனக்கு [தனியார் வட்டிக்காரர்களிடம்] மொத்தம் 15 லட்ச ரூபாய் கடன் உள்ளது. எனக்கு சொந்தமாக அதிக நிலம் இல்லாததால் ஆண்டுக்கு 15,000 ரூபாய் குத்தகையாக செலுத்துகிறேன். அதனால் விவசாயத்தை விட்டுவிட்டு விவசாயக் கூலி வேலை செய்ய முடிவு செய்தேன். ஸ்ரீனிவாஸ் இப்போது தினசரி ஊதியமாக ரூ. 250-300 ஈட்டுகிறார். தனக்குச் சொந்தமான அரை ஏக்கரை விற்று கடனைச் அடைக்க முடியும் என்று நம்புகிறார்.

Pilli Srinivas
PHOTO • Rahul Maganti
PHOTO • Rahul Maganti

பில்லி ஸ்ரீனிவாஸ் (இடது) மற்றும் ராமகிருஷ்ண ரெட்டி (வலது) ஆகியோர் வட்லமானு கிராமத்தில் விதை நிறுவனத்திடமிருந்து தங்கள் நிலுவைத் தொகைக்காக காத்திருக்கும் விதை விவசாயிகளில் அடக்கம்

ஐஎம்எல் விதைகள் நிறுவனம், பணம் தரப்படுவதில் பிரச்சினை இருக்கும் தகவலை மறுக்கிறது. "[விவசாயிகளால் பயிரிடப்பட்ட] இந்த விதைகளுக்கு 'முளைக்கும் பிரச்சனை' உள்ளது, ஆனாலும் 10 நாட்களில் அவர்களுக்கு பணம் கொடுத்து விடுவோம்," என்று 2018ம் ஆண்டின் மே மாதம் பேசியபோது, ​​கிருஷ்ணா மாவட்டத்திற்கான நிறுவனச் செயல்பாடுகளைக் கையாளும் செருகூரி வெங்கட சுப்பா ராவ் கூறினார். விவசாயிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. ஜூலை நடுப்பகுதியில் நான் அ மீண்டும் தொடர்புகொண்ட போது, விவசாயிகளுக்கு 10 முதல் 15 நாட்களில் பணம் வழங்கப்படும் என அவர் மீண்டும் சொன்னார்..

"ஒரு வருடத்திற்கும் மேலாக எங்களுக்கு பணம் தருவதாக நிறுவனம் கூறி வருகிறது" என்கிறார் ராமகிருஷ்ணா. “நிறுவனம் கொடுத்த அதே விதைகளைத்தான் நாங்கள் பயிரிட்டோம். அவர்களின் சொந்த விதைகளில் முளைக்கும் பிரச்சனைகள் இருந்தால் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

விவசாயிகளுக்கு விதை நிறுவனங்கள் வழங்கும் ஒரு டன் விலை மக்காச்சோள விதையின் தரத்தைப் பொறுத்து அமைகிறது. எனினும் சோளம் முதன்முதலில் 2002-2004-ல் மேற்கு கிருஷ்ணா பகுதியான நுஸ்விட், அகிரிபள்ளே, சத்திராய் மற்றும் முசுனூரு மண்டலங்களில் பயிரிடப்பட்டதிலிருந்து விதைகளுக்கான விலை உயரவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

கிருஷ்ணா மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மோகன் ராவ் கூறும்போது, ​​“2017-18 விவசாயப் பருவத்தில் 20 நிறுவனங்களுக்காக 15,887 ஏக்கர் பரப்பளவில் 4,000 விவசாயிகள் விதைகளுக்காக சோளம் பயிரிட்டனர். மக்காச்சோளம் அதன் விதைகளுக்காக மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி மற்றும் பிரகாசம் போன்ற மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது.

முசுனூர் மண்டலம் சிந்தலவல்லி கிராமத்தில் மக்காச்சோள விதைகளை பயிரிட முதன்முதலில் விற்பனைக்கு வந்தவர்களில் ஒருவர் பெத்திநேனி வெங்கட ஸ்ரீனிவாச ராவ். 11 ஏக்கர் நிலத்தை அவர் கொண்டுள்ளார். பெங்களூருவை தளமாகக் கொண்ட சிபி சீட்ஸ் இந்தியா நிறுவனத்திற்காக 10 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுகிறார். நிறுவனத்துக்கென நுஸ்விட் நகரில் ஒரு தொழிற்சாலை உள்ளது. "எட்டு ஆண்டுகளுக்கு முன்பு [2010 இல்], ஒரு டன் விலை சுமார் 12,000-14000 ரூபாயாக இருந்தது, இந்த ஆண்டு விலை 16,000-18,000 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் நடவுச் செலவுகள் இரண்டு மற்றும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது" என்று 54 வயது ராவ் கூறுகிறார்.

‘நிறுவனங்களையோ அவற்றின் உரிமையாளர்களையோ நாங்கள் பார்த்ததில்லை. நிறுவனங்கள் தங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் செயல்படுகின்றன, அதனால்தான் விலை உயர்வுக்கான எங்கள் கூக்குரலை அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை’

"மேலும் குத்தகை விகிதம் ஏக்கருக்கு 2,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரித்துள்ளது" என 45 வயது தலகொண்டா ஸ்ரீனு கூறுகிறார். அவர் பெங்களூரைச் சேர்ந்த சிபி சீட்ஸ் இந்தியா நிறுவனத்திற்காக மூன்று ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிடுகிறார். “எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 75,000 ரூபாய் முதலீடு ஆகிறது. இந்த நிறுவனம் ஒரு டன்னுக்கு 16,000 ரூபாய் செலுத்துகிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக 3 டன் மகசூல் கிடைக்கும் என வைத்துக் கொண்டாலும், 48,000 ரூபாய் மட்டுமே ஈட்டுகிறோம்,” என்கிற ஸ்ரீனுவுக்கு 2 லட்ச ரூபாய் கடன் தனியார் வட்டி நிறுவனங்களில்  இருக்கிறது. 36 சதவிகித வட்டி. அதே வட்டி விகிதத்தில் நிறுவனத்திடமும் அவருக்குக் ஒரு கடன் இருக்கிறது.

ஆனால், "எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், வேறு வழியில்லாததால் நிறுவனங்களுக்காக விதைகளைப் பயிரிடுகிறோம். வணிக மக்காச்சோளம் இன்னும் குறைவாக [சந்தையில்] விற்கப்படுகிறது. மேலும் பல பயிர்கள் இந்தப் பகுதியில் வளர்க்கப்படுவதில்லை. மட்டுமின்றி இதுவரை விவசாயியாக இருந்த நான் எப்படி [விவசாயத்] தொழிலாளியாக வேலை செய்ய முடியும்?" எனக் கேட்கிறார் ஸ்ரீனு.

2011-ம் ஆண்டின் ஆந்திரப் பிரதேச உரிமம் பெற்ற விவசாயிகள் சட்டம், குத்தகைதாரர்களுக்கு கடன் தகுதி அட்டை மற்றும் வட்டியில்லா வங்கிக் கடனுக்கு உரிமை அளித்தாலும், பெரும்பாலான மக்காச்சோள விதை பயிரிடுபவர்கள் குத்தகை விவசாயிகளாகவே உள்ளனர். பெரும்பாலான விதை விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் தொழிலாளர்களாக உள்ளனர்.

விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், விதை நிறுவனங்கள் அமோக லாபம் ஈட்டுகின்றன. “நிறுவனங்கள் [பல்வேறு தோட்டங்கள் மூலம்] ஒரு கிலோ விதைகளை  நடவு விவசாயிகளுக்கு ரூ. 320 என்கிற விலையில் விற்கிறது. ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 லட்சம் வரை லாபம் அவர்களுக்குக் கிடைக்கும்,” என்று மதிப்பிடுகிறார் ஸ்ரீனு.

செப்டம்பர் 2017-ல், வட்லமானு கிராமத்தில் உள்ள ஒன்பது பேர் கொண்ட குழுவில் சிலரும், மற்ற விவசாயிகளும், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனமான மெட்டாஹெலிக்ஸ் லைஃப் சயின்சஸ் வழங்கிய விதைகளை வாங்கிப், பெருக்கப்பட்ட விதைகளாக மார்ச் 2018-ல் நிறுவனத்திடம் திரும்பக் கொடுத்தனர். அதே மாதம் மெட்டாஹெலிக்ஸ் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 19,700 ரூபாய் கொடுத்தது.. IML-ன் விலை (பணம் செலுத்தும் போது) டன் ஒன்றுக்கு ரூ.17,500.

ஆனால் அத்தகைய மாற்றுகளுக்கு வரையறைகள் இருக்கின்றன. அவை 'ஒழுங்கமைப்பாளர்களால்' தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் விதை வளரும் பகுதிகளில், நிறுவனத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் அமைப்பாளர்களாகவோ அல்லது இடைத்தரகர்களாகவோ ஒன்று அல்லது இரண்டு பேர் பணியாற்றுகின்றனர். கிராமத்தில் விதைகளை அவர்கள் சேகரித்து நிறுவனத்திடம் (தற்போது) டன் ஒன்றுக்கு ரூ.200 என்கிற தரகுத் தொகைக்கு அனுப்புகின்றனர்.

PHOTO • Rahul Maganti

விவசாயிகள் அறுவடை செய்த விதைகளை நிறுவனத்திடம் கொடுத்த பிறகு, பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவது வழக்கம்

"நாங்கள் நிறுவனங்களையோ அவற்றின் உரிமையாளர்களையோ பார்த்ததில்லை. நிறுவனங்கள் தங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் செயல்படுகின்றன, அதனால்தான் விலை உயர்வுக்கான எங்கள் கூக்குரலை அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை, ”என்கிறார் ஸ்ரீனு. "மேலும், நாங்கள் உற்பத்தியை அமைப்பாளருக்கு விற்றால், எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதனால்தான் [மார்ச் 2018-ல்] விற்று சில மாதங்களாகியும், CP விதை நிறுவனத்திடமிருந்து எனது பணத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன்."

சில விவசாயிகளுக்கு எந்த நிறுவனத்துக்காக விதைகள் பயிரிடுகின்றனர் எனத் தெரிவதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களின் கிராமத்தின் ‘ஒருங்கிணைப்பாளர்’ மட்டுமே. CP Seeds-ன் நுஸ்விட் கிளையில், செய்தித் தொடர்பாளர் குமார், “எல்லாப் பணப்பட்டுவாடாவும் ஒருங்கிணைப்பாளருடன் நடந்ததாக எங்கள் பதிவுகள் காட்டுகின்றன. விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில் தாமதம் நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல. ஒருங்கிணைப்பாளருடன் எங்களுக்கு சட்டரீதியான ஒப்பந்தம் உள்ளது. எனவே அவரிடம் கேளுங்கள்.”

சிந்தலவல்லி கிராமத்தில் உள்ள சி.பி.சீட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வல்லபனேனி முரளியை தொடர்பு கொண்டபோது, ​​“நிறுவனத்திடம் இருந்து பணம் பட்டுவாடா செய்ய காத்திருக்கிறேன். விவசாயிகளுக்கு எனது சொந்த பாக்கெட்டில் இருந்து எப்படி பணம் கொடுக்க முடியும்?.” ஒருங்கிணைப்பாளர் மீது பழியைப் போட்டுவிட்டு, தங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிறுவனங்களின் தந்திரம் இது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

“விவசாயிகள் மற்றும் விதை நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை APSSCA [ஆந்திரப் பிரதேச மாநில விதைச் சான்றிதழ் ஆணையம்] மேற்பார்வையிட வேண்டும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை,” என்கிறார் அகில இந்திய விவசாயச் சங்கத்தின் கிருஷ்ணா மாவட்டச் செயலர் நிம்மகத்தா நரசிம்மா. "APSSCA விதைகளுக்குச் சான்றளிக்க வேண்டும். ஆனால் அது அரிதாகவே அதைச் செய்கிறது. வட்லமானுவில் நடந்தது போன்ற போலி விதைகளுக்கு இத்தகைய செயல் வழிவகுக்கிறது."

"நாங்கள் நிறுவனத்திற்கு அடிமைகள்," என சீனிவாச ராவ் (மேலே அட்டைப் படத்தில் இருப்பவர்) கோபமடைந்தார். "விதை நிறுவனங்கள் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை ஒத்திருக்கின்றன." வணிக ரீதியில் மக்காச்சோளத்தை பயிரிட்டு சந்தையில் விற்பதிலிருந்து விவசாயிகளைத் தடுப்பது எது? “இன்றுச் சந்தையில் மக்காச்சோளத்தின் மதிப்பு, டன் ஒன்றுக்கு 11,000 ரூபாய். நிலையற்ற சந்தை விலைகளைக் கையாளுவதை விட, மக்காச்சோளத்தை நிறுவனங்களுக்கு 16,000 ரூபாய்க்கு விற்பது நல்லது, ”என்று ராவ் பதிலளிக்கிறார்.

மாற்று வழிகளைத் தேடி, சிந்தலவல்லி கிராமத்தைச் சேர்ந்த 44 வயது சுகசானி வெங்கட நாகேந்திரபாபு, தனது 13 ஏக்கரில் மக்காச்சோளத்தை பெரிய நிறுவனங்களுக்காக பயிரிடுவதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தினார். “சோளத்துக்கு நியாயமான விலை இல்லை. பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டால் நிலத்தின் வளம் குறைந்து வருகிறது, ”என்று அவர் கூறுகிறார். “இயற்கை விவசாய முறைகளால் ஈர்க்கப்பட்டு வாழை மற்றும் கரும்பு பயிரிட்டு வருகிறேன். எனவே தற்போது நிலைமை கொஞ்சம் சிறப்பாக உள்ளது” என்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Rahul Maganti

Rahul Maganti is an independent journalist and 2017 PARI Fellow based in Vijayawada, Andhra Pradesh.

Other stories by Rahul Maganti
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan