“நட்சத்திரங்களுக்கு ரபாரிகளான நாங்கள் வைத்திருக்கும் பெயர்கள் நீங்கள் வைத்திருக்கும் பெயர்களிலிருந்து வேறுபட்டவை,” என்று மஷ்ருபாய் சொல்கிறார். "தும்ஹாரா துருவ் தாரா, ஹமாரா பரோடியா [உங்கள் துருவ நட்சத்திரம் தான் எங்கள் பரோடியா]."

வர்தா மாவட்டம் தேனோடா கிராமத்தில் தற்காலிக குடியிருப்பான டேராவில் அவரை நாங்கள் சந்தித்தோம். அவர் தனது சொந்த நிலம் என்று கூறும் கச்ச்சிலிருந்து 1,300 கிலோமீட்டர் தொலைவில், நாக்பூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.

ரபாரிகளின் குடியிருப்பில் மாலை வெயில் மங்கத் தொடங்கியது. குளிர் காலம் விடைபெற்று கோடை காலம் தொடங்கும் மார்ச் மாத காலத்தில் மாலை நேர வானில் ஆரஞ்சு நிற மேகங்கள் அதிக நேரம் காணப்படுகின்றன. காட்டுத் தீயில் உமிழும் நெருப்பைப் போல பலாசு பூக்கள் குங்குமப்பூவின் நிழலில் பூமியை அலங்கரிக்கின்றன. அச்சமயத்தில் தான் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி கொண்டாடப்படுகிறது.

மக்களால் அன்போடு அழைக்கப்படும் மஷ்ரு மாமாவும், நானும் சேர்ந்து விதர்பா பகுதியின் மாலை நேர தெளிந்த வானை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பருத்தி வயலுக்கு நடுவே போடப்பட்ட அவரது கட்டிலில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். சூரியன், நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டம், மாறும் பருவநிலை, சூழலியல்,  தனது கால்நடைகள் மற்றும் மக்களின் மனநிலைகள், எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிகளின் கடினமான வாழ்க்கை குறித்த நாட்டுப்புற கதைகள் என இன்னும் பலவற்றை நாங்கள் பேசினோம்.

இரவு நேரங்களில் வழிகாட்டுவதற்கு நட்சத்திரங்களை ரபாரிகள் அதிகம் சார்ந்துள்ளதால் அதற்கு முக்கிய இடமுண்டு. “ ஏழு நட்சத்திரங்களின் தொகுப்பான சப்தரிஷி மண்டலத்தை நாங்கள் ஹரன் [மான்] என்போம்,” என்று அவர் விளக்குகிறார்.  “பகல் பொழுதில் ஏழு நட்சத்திரங்களும் மறைந்துவிடுகின்றன. இரவில் அவை புதிய உதயத்தை, சவால்களை, பற்பல சாத்தியங்களின் வருகையை அறிவிக்கிறது,” என்கிறார் அவர் தத்துவார்த்தமாக.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

மஷ்ரு ரபாரி (இடது) மற்றும் ரபாரி சமூகத்தின் பிற உறுப்பினர்கள் வர்தா மாவட்டம் தேனோடா கிராமத்தில் அமைத்துள்ள தங்களின் டேராவில். ஆண்டுதோறும் புலம் பெயரும் நாக்பூர், வர்தா, சந்திரபூர், யவத்மால் மாவட்டங்கள் மற்றும் அண்டை பகுதிகளின் பாதைகளில் அவர்களின் டேராவும் நகர்கிறது

முறுக்கு மீசை, நரைத்த முடி, பல பெருமைகளும், பெரிய மனமும் கொண்ட மஷ்ரு மாமா உயரமான திடகாத்திரமான உடலமைப்புக் கொண்ட 60 வயதுகாரர். அவரும், டேரா அமைத்த இன்னும் ஐந்து குடும்பங்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அங்கு வந்திருந்தனர். “இன்று நாங்கள் இங்கு இருக்கிறோம், இன்றிலிருந்து 15 நாட்களில் நாங்கள் நாக்பூர் மவட்டத்திற்கு செல்வோம். மழைக்காலம் தொடங்கும்போது நீங்கள் எங்களை யவத்மாலில் உள்ள பந்தர்காவாடாவில் பார்க்கலாம். நாங்கள் ஆண்டு முழுவதும் தெரிந்த இடங்களில் சுற்றுவதோடு, விளை நிலங்களில் தங்குகிறோம்,” என்று அவர் என்னிடம் சொல்கிறார்.

ஆண்டு முழுவதும் திறந்த வானமே அவரது வீடாக இருக்கிறது.

*****

குஜராத்தின் கச்ச் பகுதியை பூர்வீகமாக கொண்ட ரபாரிகள் அரை மேய்ச்சல் சமூகத்தினர். மஷ்ரு மாமாவைப் போன்ற பலருக்கும் பல தலைமுறைகளாக மத்திய இந்தியாவின் விதர்பா புகலிடமாக திகழுகிறது. அவர்கள் ஆடு, செம்மறியாடு, ஒட்டகங்களை அங்கு மேய்க்கின்றனர். ரபாரிகளில் பெரும்பாலானோர் கச்ச்சில் தங்கள் சொந்த நிலத்தில் தங்குகின்றனர். மஷ்ரு மாமா போன்றோர் எப்போதும் புலம் பெயர்ந்தபடி, முகாம்களில் வாழுகின்றனர்.

விதர்பாவிலும் அண்டை மாநிலமான சத்திஸ்கரிலும் இதுபோன்று 3000க்கும் அதிகமான டேராக்கள் இருக்கலாம் என மஷ்ரு மாமா மதிப்பீடு செய்கிறார். ஒவ்வொரு குழுவிற்கும் என பிரத்யேகமான நிலையான புலம் பெயர் வடிவம் இருக்கும். ஆனால் அவர்களின் தங்குமிடம் மட்டும் ஒருபோதும் தீர்மானிக்கப்படுவதில்லை.

அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் புலம்பெயரும் பாதைகளில் இருக்கும் வெவ்வேறு பகுதிகளில் சில நாட்களுக்கு முகாம்கள் அமைக்கின்றனர். பயணத்தின் போது அவர்களின் முகாம் எங்கு அமைக்கப்படும் என்று முன்கூட்டியே சொல்வது கடினம். ஒரு பருவகாலத்திற்குள் அவர்கள் தோராயமாக 50-75 என வெவ்வேறு இடங்களுக்கு செல்வதை காணலாம். ஒருநாள் அவர்களை வர்தா மாவட்டத்திலும், அடுத்த நாள் யவத்மால் மாவட்டத்தில் உ ள்ள வாணியிலும் பார்க்கலாம். இரண்டு நாட்கள் முதல் ஓர் இரவு என அவர்கள் ஓரிடத்தில் தங்கும் காலம் வேறுபடும். உள்ளூர் விவசாயிகளுடனான அவர்களின் உறவு, பருவகாலத்தை அது சார்ந்துள்ளது.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: விலங்குகளை கவனித்துக்கொள்ள உதவும் இளைஞரான ராமா அடுத்த முகாமிற்கான இடத்தையும் தேட உதவுகிறார். ஆடுகள் , செம்மறியாடுகள் , ஒட்டகங்கள் எனப் பெரிய மந்தைகளை மஷ்ரு மாமா மேய்க்கிறார்

விவசாயிகளுக்கும், ரபாரிகளுக்கும் இடையே சுமூக  உறவு உள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் மந்தையை சுதந்திரமாக மேய்க்க அனுமதிக்கிறார்கள், களைகள் அல்லது அதிக மதிப்பில்லாத பயிர்களை விருந்துண்டு, அதற்கு பதிலாக, ரபாரிகளின் கால்நடைகள் விட்டுச் செல்லும் கழிவுகள் மூலம்  நிலத்தை மிகவும் வளமானதாக்க விட்டுவிடுகிறார்கள்.

ஏப்ரல் முதல் ஜூலை வரை தங்கள் நிலங்களில் ஆடுகள், செம்மறியாடுகள் தங்கி மேய்வதற்கு ரபாரிகளுக்கு விவசாயிகள் சில சயமங்களில் நல்ல தொகைக் கூட கொடுப்பார்கள். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் பெறும் பணம் தீர்மானிக்கப்படுகிறது. நாக்பூரைச் சேர்ந்த சென்டர் ஃபார் பீப்பிள்ஸ் கலெக்டிவ், இன்னும் வெளியிடாத ஓர் ஆய்வில், ஒரு வருடத்திற்கு ரூ. 2-3 லட்சம் வரை தொகை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் பண்ணை உற்பத்தித்திறன் கணிசமான அளவு உயர்கிறது.

மாமா தனது துருப்புச் சீட்டாக ஆயிரம் கால்நடைகளை கொண்டுள்ளார்.

நீந்தும் கராய் ஒட்டகங்களில் இருந்து வேறுபட்ட கச்ச்சி இனத்தைச் சேர்ந்த அவரது மூன்று ஒட்டகங்கள் அருகில் உள்ள புதர் காடுகளில் இருந்து திரும்பியிருந்தன. மாமாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ராமா அவற்றை மேய்த்திருந்தார். கால்நடைகளை மேய்ப்பதோடு, அடுத்த முகாம் அமைப்பதற்கும் அவர் உதவுகிறார். நாங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்திலிருந்து பார்த்தபோது கண்ணில் படும்படி ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவை கணைக்கும் சத்தம் அருகிலிருந்த மரத்திலிருந்து கேட்க முடிந்தது. அங்கு மாலை வெயில் மங்கிக் கொண்டிருந்தது.

டேராக்கு எதிராக இருக்கும் பருத்தி வயலில் கல் எறியும் தூரத்தில் ஆடுகள், செம்மறியாடுகள் பச்சை பசுமையை விருந்தாக்கிக் கொண்டிருந்தன. டேரா இருக்கும் இடங்களில் நீங்கள் எப்போதும் நாயை காணலாம். ரபாரி பெண்கள் செய்த கம்பளி போர்வை போர்த்திய படுக்கை விரிப்பின் அருகே மாமாவின் நாய் முரட்டுத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தது.

PHOTO • Jaideep Hardikar

மஷ்ரு மாமா தனக்கு சொந்தமான ஆயிரம் கால்நடைகளுடன் பயணம் செய்கிறார். ’அவர்கள் குளிரிலும், மழையிலும் மென்மையாகின்றனர். கோடை கால வெப்ப அலைகளில் கடினமாகின்றனர்'

*****

மானாவாரி, ஒற்றை பயிர் நிலங்கள் என மகாராஷ்டிராவின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறு விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள் பலவும் இப்போது தரிசாக கிடக்கின்றன. பருத்தி முழுமையாக அறுவடை செய்யப்பட்டுள்ளன. குளிர் கால பயிர்களான பாசிப் பயிறு, ஆங்காங்கே விளைந்துள்ள கோதுமை , சோளம் ஆகியவை அறுவடைக்கு தயாராக இருந்தன. மஷ்ரு மாமா இரண்டு நாட்களில்  புதிய பண்ணைக்கு செல்ல உள்ளார். அவரது ஆடுகளும், செம்மறியாடுகளும் அந்த வயலின் பசுமையை இறுதியாக மேய்ந்துக் கொண்டிருந்தன.

“எனக்கு இங்கு முகவரி கிடையாது,” என்கிறார் மஷ்ரு மாமா. மழை பெய்தால், டேராவைச் சேர்ந்த 15 முதல் 20 நெருங்கிய உறவுக்கார ஆண்களும், பெண்களும் தார்ப்பாய் போர்த்தப்பட்ட விரிப்பின் கீழ் தங்கிக் கொள்கின்றனர். அவரது ஒட்டகங்கள், ஆடு, செம்மறியாடு மந்தைகள் மழையில் நனைகின்றன. “ ரபாரிகள் குளிரிலும், மழையிலும் மென்மையாகின்றனர், கோடைக் கால வெப்ப அலைகளில் கடினமாகின்றனர்,” என்றார். "அவர்கள்தான்  மெய்யான வானிலை காப்பாளர்கள்.

“நிச்சயமின்மையே எங்கள் வாழ்வில் நிலையானது. அதை நிச்சயமாக சொல்ல முடியும்,” என்றார் அவர் சிரித்தபடி. அவரது டேரா நாக்பூர், வர்தா, சந்திரபூர், யவத்மால் மாவட்டங்களுக்கும், அண்டை பகுதிகளுக்கும் நகர்கிறது. “மழைக்காலம் மாறி வருகிறது. காடுகள் மறைந்துவிட்டன. பண்ணைகளில் முன்பு இருந்த மரங்கள் இறந்துவிட்டன.” விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிகளையும், இன்னல்களையும்  மஷ்ரு மாமா நன்கு அறிவார். பெரும் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டாலும், இதற்கு சிக்கலான சூழலியல் மற்றும் காலநிலை காரணிகளும்  பங்காற்றுகின்றன என்று அவர் கூறுகிறார்.

மஷ்ரு மாமாவின் கூற்றுப்படி, விளை நிலங்கள், நீர், காடுகள் மற்றும் விலங்குகளை பாதிப்பதால் மாறிவரும் பருவநிலை ஒரு கெட்ட சகுனம். அவர்களின் பழைய இடங்களில் சில இப்போது தரிசாகி கிடக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு  முன்பு இருந்தது போல இப்போது பசுமையை, புற்களை காண முடிவதில்லை என அவர் விளக்குகிறார். இது அவரது மந்தைகளையும் பாதிக்கிறது. “தேக்கியே பிரக்ருதி மேன் ஹூவா, தோ ஆத்மி கோ பதா பி நஹி சலேகா கி அப் கியா கர்னா ஹை [இயற்கையில் ஒரு பிரச்சினை வந்தால், மனிதர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது, சரி செய்யவும் முடியாது],” என்கிறார் அந்த மூத்த நாடோடி.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: மஷ்ரு மாமா. வலது: ‘மாலை மங்கும் நேரத்தில், ஒட்டகங்கள் அருகில் இருக்கும் புதர் காடுகளில் மேய்ந்துவிட்டு டேராவிற்கு திரும்புகின்றன

ஹைதராபாத்தில் உள்ள இறைச்சிக் கூடங்களுக்கு ஒட்டகங்கள் கடத்தப்படுவதாக அண்மையில் சில ரபாரி மேய்ப்பர்கள் தவறாக குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவத்தை குறித்து வருத்தம் தெரிவித்து பேசிய அவர், “எங்களை புரிந்து கொள்ள முடியாதவர்களால் ஒட்டகங்களுடனான எங்களின் உறவை எப்படி புரிந்துகொள்ள முடியும்” என்றார். (படிக்க: சிறைப்படுத்தப்பட்ட கச்ச் ஒட்டகங்கள் ).

“ஒட்டகங்கள் எங்களின் கப்பல்கள், எங்கள் கடவுள்,” என்கிறார் அவர். “ஒவ்வொரு டேராவிற்கும் தேவையான பொருட்களை, குழந்தைகளை பயணத்தின்போது மூன்று அல்லது நான்கு ஒட்டகங்கள் சுமக்கின்றன.”

மத்திய இந்தியாவில் ரபாரிகள் மிகவும் அறியப்படாதவர்கள். அரசிடம் கூட இப்பிராந்தியத்தில் அவர்கள் வசிப்பதற்கான அங்கீகாரம் எதுவும் கிடையாது. வர்தா மாவட்டத்தில் ஒரு பண்ணையில் மஷ்ரு மாமா பிறந்தார். விதர்பா பண்ணைகளில் அவர் திருமணம் முடித்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இருந்தும் அவர்களின் இருப்பை யாரும் இன்னும் அறியவில்லை.

தாய் மொழியான குஜராத்தியைப் போன்று, விதர்பாவின் மேற்கு பகுதியின் மராத்திய வட்டார மொழியான வர்ஹாதியிலும் அவர் நன்றாக பேசுகிறார். “அப்படி என்றால் நான் வர்ஹாதிகாரன்,” என்கிறார் மஷ்ரு மாமா. அவர் சராசரி ரபாரி உடையான வெள்ளை நிற வேட்டி சட்டை, தலைப்பாகை அணிவதால் மக்கள் அவரை வெளி ஆளாக கருதுகின்றனர். உள்ளூர் கலாச்சாரத்தில் ஊறிப்போன அவர் அப்பிராந்தியத்தின் சடங்கு, சம்பிரதாயங்களையும் அறிந்துள்ளார். தேவைப்படும்போது உள்ளூர் வட்டார மொழியிலும் அவர் நன்றாக பேசுகிறார்!

கச்ச்சிலிருந்து வெகு தொலைவில் வசித்தாலும் ரபாரிகள் தங்கள் பழங்குடியின மரபுகளையும், கலாச்சாரத்தையும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர். கச்ச்சில் வசிக்கும் உறவினர்களுடன் உறவையும் அவர்கள் பேணி காக்கின்றனர். மஷ்ருவின் மனைவி இப்போது கச்ச் மாவட்டம் அஞ்சார் வட்டாரத்தில் உள்ள பட்ரோய் கிராமத்தில் இருக்கிறார். அவரது  மூத்த மகள்கள் இருவரும் அங்குள்ள தங்கள் பழங்குடியின ஆண்களை  திருமணம் செய்துள்ளனர்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

ஆண்டு முழுவதும் வானம் பார்த்த திறந்தவெளிகள் தான் மஷ்ரு மாமாவின் வீடு. விருந்தினர் வரும்போது, டேராவில் உள்ள பெண்கள் ஒன்றாக சமைத்து குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுகின்றனர்

“ நயி பிதியஹா நஹி ரெஹ்னா சாஹ்தி [பண்ணைகளில் தங்குவதற்கு அடுத்த தலைமுறை விரும்பவில்லை],” என்கிறார் அவர். டேராவிலிருந்து வெளியேறி பிள்ளைகள் குடும்பத்தின் பிற உறுப்பினர்களுடன் சொந்த ஊரில் தங்கி பள்ளிக்குச் சென்று படித்து, வேலைகள் தேட அனுமதிக்கப்படுகின்றனர்.  “லோக் மெஹ்னத் பீ நஹி கராஹி ; தௌட் லகி ஹை [இப்போதுள்ள மக்கள் கடின உழைப்பை விரும்புவதில்லை. அவர்கள் மூடத்தனமான பந்தயத்தில் இருக்கின்றனர்],” என்கிறார் மஷ்ரு மாமா. அவரது மகன் பரத் மும்பையில் இருக்கிறார். பொறியியல் பட்டயம் முடித்துள்ள அவர் நிலையான வேலைக்கு முயற்சித்து வருகிறார்.

இளைய மகள் மட்டும் அவருடன் இருக்கிறாள். அவளும் டேராவின் பெண்களும் சேர்ந்து இரவு உணவு தயாரிக்கின்றனர். அவர்களின் பேச்சு சலசலப்பு, விலங்குகள், பறவைகளின் சத்தங்களுடன் கலந்து விடுகிறது. விளக்கு ஏற்றியதும் அங்குள்ள பெண்களின் முகங்களில் தீயின் பொன்னொளி வீசுகிறது. அவர்கள் அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்திருக்கின்றனர்.

ஏன் ஆண்களுக்கு வெள்ளை, பெண்களுக்கு கருப்பு நிறம்?

அவர்களின் சமூக தெய்வமான அன்னை சதியின் கதையை மஷ்ரு மாமா இதற்கு பதிலாக அளிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அழகான ரபாரி இளவரசிக்கும், ஒரு அக்கிரமக்கார மன்னனுக்கும் இடையே போர் நடந்துள்ளது. மன்னன் அவள் மீது ஆசை கொண்டு திருமணம் செய்ய விரும்பினான். பழங்குடியினர் இதற்கு மறுத்த காரணத்தால் ஜெய்சால்மரில் போர் தொடங்கியது. இதனால் நிறைய உயிரிழப்பும் ஏற்பட்டது. அமைதியை நிலைநாட்ட இளவரசி அன்னை பூமியின் மடியில் தன்னையே புதைத்துக் கொள்கிறாள். “அவளுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்,” என்றார். “இப்போதும் அதை தொடர்கிறோம்.”

அந்த கும்மிருட்டில் இரவு உணவு தயாராகிறது. டேராவில் பொதுவாக ஐந்து-ஆறு குடும்பங்கள் தனித்தனியே சமைப்பார்கள். ஆனால் மாலையில் விருந்தினர்கள் வருகையால், அவர்கள் ஒன்று சேர்ந்து விருந்து சமைத்து உண்கின்றனர். இன்றைய சிறப்பு உணவு செம்மறியாட்டுப் பாலில் செய்த அரிசி பாயாசம், ஆட்டுப் பால் மோரில் செய்த நெய்யுடன் வெல்லமும் சேர்க்கப்பட்டுள்ளது. சப்பாத்தி, காரமான பருப்பு குழம்பு, சாதம் மற்றும் மோர்.

செல்பேசியின் டார்ச் ஒளியில் இரவு நேர உணவிற்காக நாங்கள் அமர்ந்திருந்தோம்.

தமிழில்: சவிதா

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha