"நான் எல்லா வகையான புயல்களையும் பார்த்திருக்கிறேன், ஆனால் இது வேறுவிதமானது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்தது. மதிய வேளையில் ஒரு முரட்டுக்காளை எங்களை துரத்துவது போல வயலுக்குள் நீர் புகுந்தது. நான் எனது சகோதரரின் மாற்றுத்திறனாளி மகனை தூக்கிக் கொண்டு விரைந்து ஓடினேன்", என்று மேற்கு வங்கத்தின் சுந்தரவனத்தில் உள்ள தக்ஷின் காசியாபாத் கிராமத்தைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியரான சுவபன் நாயக் விவரித்தார்.

மே 20 ஆம் தேதி அன்று காற்றின் வேகம் 185 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வீசியது, அம்பான் புயல் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கக்தீப் வட்டத்திலுள்ள ராம்கோபால்பூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு அருகில் தான் கரையை கடந்தது.

இந்த கிராமவாசிகள் சந்தித்த புயல்களிலேயே இது சற்று வித்தியாசமானதாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு வீசிய ஐலா புயலோ அல்லது 2019 ஆம் ஆண்டு வீசிய புல்புல் புயலோ, அம்பான் புயல் செய்த சேதாரத்தை சுந்தரவனத்திற்கு செய்யவில்லை என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

"எங்களது பள்ளியும் பேரழிவுக்கு உட்பட்டது. மேற்கூரை பறந்துவிட்டது மேலும் நான்கு வகுப்பறைகளும் நாசமாகிவிட்டன. நூறு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது", என்று தனியாரால் நடத்தப்படும் தக்ஷின் காசியாபாத்தில் உள்ள மனப் தீர்த்த தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நாயக் கூறுகிறார்.

மே 20 ஆம் தேதி அன்று சுந்தரவனத்தை நோக்கி "அதிதீவிர சூறாவளிப் புயலான" அம்பான் நகரத் துவங்கியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மாலை 4.30 மணி அளவில் அம்பான் புயல் கக்தீபிற்கு தென்மேற்கே உள்ள சாகர் தீவிற்கு அருகில் கரையைக் கடந்தது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள கக்தீப், குல்டலி, நம்கானா, பதர்பிரதிமா மற்றும் சாகர் ஆகிய வட்டங்கள் புயல் கரையை கடந்த பகுதிக்கு மிக அருகில் இருந்தன மேலும் இவைதான் தெற்கு வங்காளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள், அங்கு இந்த புயல் மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மே 29 ஆம் தேதியன்று கக்தீப் பேருந்து நிலையத்திலிருந்து தக்ஷின் காசியாபாத் செல்லும்போது சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. சாலையின் இருபுறமும்  சிதைந்து கிடந்ததை நாங்கள் கண்டோம். மரங்கள் வேரோடு சரிந்து கிடந்தன மேலும் வீடுகள் மற்றும் கடைகளும் நாசமாகி இருந்தன.

ரஞ்சன் கயன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தக்ஷின் காசியாபாத் செல்லும் வழியில் உள்ள நேதாஜி பஞ்சாயத்தில் இருக்கும் மாதப் நகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள நன்னீர் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். புயலால் கடல் நீர் உட்புகுந்து குளத்தை மாசுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டு நன்னீர் மீன்களை வளர்ப்பதற்காக நாங்கள் சுமார் 70,000 ரூபாய் முதலீடு செய்துள்ளோம். அவை அனைத்தும் இப்போது இறந்துவிட்டன. சந்தையில் விற்பதற்கு மீன்கள் ஏதும் மீதம் இருக்கிறதா என்று நாங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் போட்டிருந்த வெற்றிலை கொடிகளும் அழிந்துவிட்டது அதனால் இப்போது எங்களது ஒட்டுமொத்த குடும்பமே கடனில் மூழ்கியுள்ளது என்று கூறிய அவர் இழப்பீட்டின் மதிப்பீடு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார். "எங்களுக்கு மகிழ்ச்சியான நாட்கள் எப்போதும் திரும்பப் போவதில்லை", என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Ritayan Mukherjee

கக்தீப் வட்டத்திலுள்ள மாதப் நகரில் வசித்து வரும் ரஞ்சன் கயன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நன்னீர் குளத்தில் கடல்நீர் கலந்ததால் நன்னீர் மீன்களை இழந்துவிட்டனர். ஏதேனும் மீன் உயிருடன் இருந்தால் சந்தையில் விற்பதற்காக மண்ணில் மீன்கள் ஏதும் புதைந்து இருக்கிறதா என்று அழியில் மீன்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்

ப்ரீத்திலதா ராயையும் மாதப் நகரில் நாங்கள் சந்தித்தோம். கக்தீப்பில் உள்ள மற்ற பெண்களைப் போலவே இவரும் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பகுதியில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றி சம்பாதித்து வருகிறார். கோவிட்-19 பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அதாவது மார்ச் மாதம் கடைசி வாரம் வரை அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் வரை அது மட்டுமே அவரது முக்கியமான வருமான ஆதாரமாக இருந்தது. அம்பான் புயலின் கோரதாண்டவத்தால் இவரது வெற்றிலைக் கொடிகளும் நாசமாகிவிட்டது. இவரது இழப்பீட்டின் மதிப்பு சுமார் 30,000 ரூபாய் இருக்கும் என்று அவர் மதிப்பிடுகிறார்.

நாங்கள் தக்ஷின் காசியாபாத் கிராமத்தை அடைந்த போது அங்கு ஏற்பட்டிருந்த அழிவின் அளவு எங்களை திகைக்க வைத்தது. அங்கு உள்ள விவசாயிகளின் முக்கிய வருமான ஆதாரமாக இருந்து வந்த வெற்றிலைக் கொடிகள் அனைத்தும் அழிந்து நாசமாகி இருந்தன. கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சந்தையில் மீன், நெல் மற்றும் வெற்றிலைகளை விற்பதன் மூலம் வருமானம் ஈட்டி வந்த  இங்குள்ள மக்கள் அம்பானால் மேலும்  சேதத்தை சந்தித்தனர் - அவர்கள்  ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டதால் ஏற்கனவே சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"நாங்கள் பல தலைமுறைகளாக வெற்றிலை விவசாயிகளாகவே இருந்து வருகிறோம்", என்று ஒருவர் கூறினார், அவர் தனது பெயரை கூற விரும்பவில்லை. "இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் வந்தது. ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த எங்களை அம்பான் புயல் முற்றிலுமாக அழித்துவிட்டது". தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையினர் புயலால் கிட்டத்தட்ட 2,775 கோடி ரூபாய் அளவிற்கு வெற்றிலை விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருப்பதாக சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மே மாதம் அடித்த புயலுக்குப் பின்னர் தக்ஷின் காசியாபாத்தில் விவசாய நிலங்களை கடல் நீர் ஆக்கிரமித்துள்ளது. "சாதாரணமாகவே கடல் நீர் வரும், ஆனால் இந்த அளவிற்கு அல்ல. இனி இந்த நிலம் எதற்கும் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதாகத்தான் தோன்றுகிறது", என்று மற்றொரு விவசாயி கூறினார். ஊரடங்கால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையால் அவரது போரோ அரிசி அறுவடை ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தது மேலும் அம்பான் புயல் வருவதற்கு முன்பே கோடையில் பெய்த பருவம் தவறிய மழை இந்த வருடம் அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.

அதே கிராமத்தில், நியோகி குடும்பம் வண்ணமயமான காதல்கிளிகளை வளர்த்து வந்தது. இந்தப் பகுதியில் இக்கிளிகளை வளர்க்கும் ஒரு சில குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. இந்த சிறிய கிளிகள் கொல்கத்தாவில் பிரபலமான செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. நியோகி இக்கிளிகளை எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாராயண்கஞ் சந்தையில் விற்பனை செய்கிறார். புயலடித்த அன்றிரவு பல கூண்டுகள் உடைந்ததால் அக்கிளிகள் பறந்துவிட்டன. பெரும்பாலான கிளிகள் பறந்துவிட்ட நிலையில் அடுத்த நாள் காலை அவர்களால் ஒரு சில கிளிகளைப் பிடிக்க முடிந்திருக்கிறது. இதன் மூலம் இவர்கள் இக்கிளிகளை வளர்ப்பதற்காக ஆரம்ப முதலீடாக போட்ட 20,000 ரூபாய் தொகை நாசமாகிவிட்டது.

மற்ற இழப்புகள் லட்சங்களில் செல்லும். புயலால் பாதிக்கப்பட்ட மனப் தீர்த்த தொடக்கப் பள்ளியின் நிர்வாக குழுவில் உறுப்பினராக இருக்கும் மாதப் தாஸ் அவர்களது பள்ளியை மீண்டும் புதுப்பித்துக் கட்டுவதற்கு 2,50,000 ரூபாய் தேவைப்படும் என்று கூறுகிறார். "எங்களிடம் ஏற்கனவே நிதி பற்றாக்குறையாக இருக்கிறது இதில் விரைவாகவே பருவமழையும் ஆரம்பித்துவிடும். ஆனால் அதற்காக குழந்தைகளின் கல்வியை சமரசம் செய்ய முடியாது. எனவே எங்களது பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் மீண்டும் பள்ளியை புனரமைக்க வேண்டும்", என்று தாஸ் கூறினார்.

தொடர்ச்சியான புயல்கள், உப்புத்தன்மை அதிகரிப்பு மற்றும் மற்ற பேரழிவுகளால் நீண்ட காலமாக தொடர்ந்து சந்தித்து வரும் ஒரு பகுதியான சுந்தரவனத்தில் பலர் பல முறை செய்திருப்பதைப் போல - இம்மக்கள் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.

PHOTO • Ritayan Mukherjee

மே 20 ஆம் தேதி அன்று சுந்தரவனம் முழுவதையும் அம்பான் புயல் தாக்கியது. வங்காள விரிகுடாவில் தோன்றிய இந்த அதிதீவிர  புயலானது கங்கை டெல்டாவில் மரங்களை வேரோடு சாய்த்தும்,  வீடுகளை அழித்தும்,  விவசாய நிலங்கள் மற்றும்  மீன்பிடி தொழிலாளர்களுக்கு நாசத்தை ஏற்படுத்தியும் பேரழிவை ஏற்படுத்தியது

PHOTO • Ritayan Mukherjee

கோவிட் 19 பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளால் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை இழந்தனர். அதன் பின்னர் வந்த இந்த புயல் மீனவர்களுக்கு சொந்தமான இழுவை மற்றும் மீன்பிடி படகுகளை நாசமாகியுள்ளது இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது

PHOTO • Ritayan Mukherjee

கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக குளங்கள் கருமையாகிவிட்டன. கக்தீப் வட்டத்திலுள்ள தக்ஷின் காசியாபாத் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இப்புயல் கடுமையான கடல்நீரை காற்றோடு கொண்டுவந்து பயிர்களில் நீர் இழப்பை ஏற்படுத்தி நாசம் செய்துவிட்டது என்று கூறினார். "இலைகள் பழுத்து தண்ணீருக்குள் விழுந்து குளமே நாசமாகிவிட்டது", என்றார்

PHOTO • Ritayan Mukherjee

பதர்பிரதிமா வட்டத்திலுள்ள பஜ்னா கிராமத்தைச் சேர்ந்த சாஹிப் முல்லா தனது நெற்பயிர் மற்றும் வெற்றிலை கொடிகளை இழந்திருக்கிறார். அவரது வீடும் புயலால் சேதம் அடைந்துவிட்டது. "அதை மீண்டும் புனரமைப்பு செய்வதற்கு போதுமான பணம் என்னிடம் இல்லை, அதனால் அதை பற்றி பேசவே நான் விரும்பவில்லை", என்று அவர் கூறுகிறார்

PHOTO • Ritayan Mukherjee

கக்தீப் வட்டத்தின் மாதப் நகரைச் சேர்ந்த ப்ரீத்திலதா ராய் ஊரடங்கினால் கொல்கத்தாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த தனது வேலையை இழந்தார். அவருடைய முக்கிய வருமான ஆதாரமும் இல்லாமல் போய்விட்டதால் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக தன்னிடம் இருந்த சிறிய பயிரான வெற்றிலை கொடிகளை விற்க நினைத்தார். புயலால் வீசிய பலத்த காற்று மென்மையான அக்கொடிகளை நாசம் செய்துவிட்டது

PHOTO • Ritayan Mukherjee

தக்ஷின் காசியாபாத்தில் உள்ள மனப் தீர்த்த தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சுவபன் நாயக் சேதமடைந்த கூரையின் கீழே அமர்ந்திருக்கிறார். அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளை மாணவர்களாக கொண்டிருக்கும் அத்தனியார்  பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியர்களும் அவரும் ஒருவர். மேற்கூரையை மட்டுமல்லாது தரைதளத்தில் இருந்த வகுப்பறைகளையும் அம்பான் புயல் நாசம் செய்துவிட்டது

PHOTO • Ritayan Mukherjee

கக்தீப் வட்டத்திலுள்ள பாபூஜி கிரம பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது சிதைந்த வெற்றிலை கொடிகளை பாதுகாக்கும் மூங்கில் பந்தலை பார்வையிடுகிறார். "எனது முதலீடு அனைத்தும் போய்விட்டது. புனரமைப்பு செய்வது என்பது ஒரு பெரிய பணி. மீண்டும்  இதனை உருவாக எனக்கு ஏழு முதல் எட்டு தொழிலாளர்கள் தேவைப்படுவர். ஊரடங்கு என்பதால் பணமோ தொழிலாளர்களோ என்னிடம் இல்லை", என்று அவர் கூறுகிறார்

PHOTO • Ritayan Mukherjee

தக்ஷின் காசியாபாத் கிராமத்தில் உள்ள  வயல்களில் கடல் நீர் உட்புகுந்ததால் ஏரியை போல காட்சியளிக்கிறது. பயிர்கள் அழிந்து மண்ணின் வளமும் நாசமாகிவிட்டது. இப்போது இங்கு இனி விவசாயம் செய்ய முடியாது என்று கிராம மக்கள் எண்ணுகின்றனர்

PHOTO • Ritayan Mukherjee

இந்த இடிந்து கிடக்கும் முடிதிருத்தும் கடையைப் போல அம்பான் ஏற்படுத்திய அழிவு கக்தீப்பின் எல்லா பகுதிகளிலும் தெரிகிறது

PHOTO • Ritayan Mukherjee

கக்தீப் வட்டத்தைச் சேர்ந்த நேதாஜி பஞ்சாயத்தில் உள்ள இடிந்து கிடக்கும் வீட்டின் முன் ஒரு சிறிய பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறாள்

PHOTO • Ritayan Mukherjee

தக்ஷின் காசியாபாத்தில் உள்ள ஒரு சில குடும்பங்கள் புயலால் பாதிக்கப்பட்ட தங்களது உடைமைகளை மீண்டும் புனரமைக்கத் துவங்கிவிட்டனர். "அரசாங்கத்தின் உதவி வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது. சொந்தமாக துவங்குவது தான் எப்போதும் நல்லது", என்று கிராமத்தில் உள்ள ஒரு தொழிலாளி கூறுகிறார்

PHOTO • Ritayan Mukherjee

"இந்த வீட்டின் மேற்கூரையை நான் சிறிது காலத்திற்கு முன்பு தான் கட்டி முடித்தேன். அதுவும் இப்போது இல்லாமல் போய்விட்டது. மறுபடியும் இதை நான் கட்ட வேண்டும். ஆனால் அதற்கு பல காலம் ஆகும்", என்று பஜ்னா கிராமத்தைச் சேர்ந்த முகமது காசிம் கூறுகிறார்

PHOTO • Ritayan Mukherjee

தக்ஷின் காசியாபாத்தைச் சேர்ந்த முனியா புயல் அடித்த அன்று இரவு கூண்டுகள் உடைந்து பறந்த கிளிகளை மீண்டும் கைப்பற்றி வைத்திருக்கிறார். அருகிலுள்ள சந்தைகளில் செல்லப்பிராணிகளாக விற்பதற்காக இக்கிளிகள் இக்குடும்பத்தால் வளர்க்கப்படுகிறது. புயலால் பல கூண்டுகள் சேதமடைந்து கிளிகள் பறந்துவிட்டன

PHOTO • Ritayan Mukherjee

மாதப் நகரில் புயலால் பெய்த மழையில் சோட்டு கயனின் புத்தகங்கள் நனைந்துவிட்டன. ஆனால் அவரது ஆர்வம் மேலோங்கி தான் இருக்கிறது. "விபத்துகள் நடக்கத்தான் செய்யும். அதைப்பற்றி நான் அதிகம் கவலை கொள்வதில்லை", என்று அவர் கூறுகிறார்

PHOTO • Ritayan Mukherjee

தக்ஷின் காசியாபாத்தில் பெண்ணொருவர் சேற்று வரப்பில் நடந்து செல்கிறார். அதற்கு அடுத்ததாக உள்ள அவரது வயலில் பாதிக்கும் மேற்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டது மிஞ்சிய பாதி புயலிலிருந்து தப்பிவிட்டது.

PHOTO • Ritayan Mukherjee

தக்ஷின் காசியாபாத் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மரங்களின் இலைகள் புயலில் அடித்துக் கொண்டு போய்விட்டது.

தமிழில்: சோனியா போஸ்

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Other stories by Ritayan Mukherjee