நுட்பமாக நெய்யப்படும் கமால்கோஷ் பாய் கலையை கொண்டாடுபவர் சிலர் உண்டு.

அதை நெய்பவர்களும் சிலர் உண்டு.

மேற்கு வங்கத்தின் கூச் பெகார் மாவட்டத்தில், உரிக்கப்பட்ட பிரம்பின் தோல் துண்டுகளை கொண்டு செய்யப்படும் இந்த நுட்பமான பிரம்பு பாய்கள், அவை கொண்டிருக்கும் பண்பாட்டு வடிவங்களுக்காக பிரபலமானவை.

“பாரம்பரிய கமால்கோஷ் பாய், மங்களகரமான கோலா காச் (வாழை மரம்), மயூர் (மயில்), மங்கல் காட் (தேங்காய் ஜாடி), ஸ்வஸ்திக் (ஆரோக்கியத்துக்கான குறியீடு) போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் பிரபாதி தார்.

இந்த வடிவங்களை நெய்யும் வெகுசில கமால்கோஷ் நெசவாளர்களில் பிரபாதியும் ஒருவர். 10 வயதிலேயே அவர் இந்த வேலையைத் தொடங்கி விட்டார். “இந்த கிராமத்தில் இருக்கும் (கெகிர்காட் கிராமம்) அனைவரும் இளம் வயதில் இருந்தே பாய் நெய்யத் தொடங்கி விடுவார்கள்,” என்கிறார் 36 வயதாகும் அவர். “என் தாய் கமால்கோஷை பகுதிப் பகுதியாகதான் நெய்வார். ஆனால் என் தந்தை வடிவம் நெய்வதில் திறன் கொண்டவர். நன்றாக விளக்கவும் செய்பவர். ‘இந்த வடிவத்தை இப்படி நெய்,’ என நன்றாக விளக்கக் கூடியவர். அவர் நெசவாளர் இல்லையென்றாலும், அந்த விளக்கங்களிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாக பிரபாதி நினைக்கிறார்.

கெகிர்காட்டிலுள்ள அவரது வீட்டின் வராண்டாவில் நாம் அமர்ந்திருக்கிறோம். தாழ்வாரத்தில்தான் நெசவாளர்கள் வேலை செய்ய விரும்புவார்கள். சுற்றியிருக்கும் அவரின் குடும்பத்தினர் வேலை சார்ந்த பல பணிகளை செய்து உதவுகின்றனர். பாயின் இழைகளுக்குள் வடிவங்கள் நெய்வதை அவராக சிந்தித்து நெய்வார். “எங்களின் நினைவிலிருந்து இவற்றை செய்ய பழகி விட்டோம்,” என்கிறார் அவர்.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

மேற்கு வங்கத்தின் கூச் பெகார் மாவட்டத்டில் கமால்கோஷ் நெய்யக்கூடிய சில கலைஞர்களில் பிரபாதி தாரும் ஒருவர். கெகிர்காட் கிராமத்து வீட்டின் வராண்டா மற்றும் தாழ்வாரத்தில் அவரும் குடும்பத்தினரும் பாய் நெய்யும் வேலை பார்க்கிறார்கள்

PHOTO • Shreya Kanoi

பிரபாதியும் அவரது கணவர் மனோரஞ்சனும் நெய்து முடித்த பாயை காட்டுகின்றனர்

பக்கத்து டவுனான் தாலியாபாரியை சேர்ந்த வணிகரான கிருஷ்ணா சந்திரா பாவ்மிக் அடிக்கடி பிரபாதியிடமிருந்து கமால்கோஷ் பாய் ஆர்டர் கொடுக்கிறார். “பெரிய மனிதர்கள் கமால்கோஷைதான் விரும்புகிறார்கள். பட்டியின் அருமையை வங்காளியால்தான் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் பாய் வாங்குபவர்களில் அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்,” என்கிறார்.

தார் குடும்பம், கூச் பெகார் - 1 ஒன்றியத்திலேயே அதிகமாக நெசவாளர்கள் வாழும் கெகிர்காட் கிராமத்தில் வசிக்கின்றனர். இவர்கள் பட்டி நெசவாளர்கள். வங்கதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். ஒவ்வொருவரும் வந்த பின்னணி சார்ந்த தனித்துவமான பாணியும் திறனும் கொண்டிருப்பார்கள். ஆனால் அது இன்னொரு கதை, விரைவில் வரும்.

பாய்கள் பரவலாக பட்டி (இழை) நெசவாக அறியப்படுகிறது. அவற்றில் மொட்ட பட்டி (முரடான பாய்கள்) தொடங்கி நுட்பமான அரிய வகையான கமால்கோஷ் வரை உண்டு. பிரம்பு வகை (Schumannianthus dichotomus) மேற்கு வங்கத்தின் கூச் பெகாரில் கண்டறியப்படும் வகை ஆகும்.

கமால்கோஷ் பாய்களை செய்ய, பிரம்புத் தண்டின் வெளிப்புறம் நுட்பமாக பெட் எனப்படும் சிறு இழைகளாக வெட்டப்பட்டு பிறகு மெருகூட்டவும் வெண்மையை அதிகரிக்கவும் கஞ்சியில் காய்ச்சப்படுகிறது. நிறப்பூச்சுக்கு இந்த முறை உதவும்.

முக்கியமான முன் தயாரிப்பு வேலையை கணவர் மனோரஞ்சன் தார் பார்க்கிறார். மணம் முடித்த பிறகு நெய்வதற்கு தேவையான பொருட்கள் தேவை என புது மணப்பெண் கணவரை கேட்டதும், “என் கணவர் கமால்கோஷ் நெய்ய நுட்பமான இழைகளை வெட்ட கற்றுக் கொண்டார்,” என்கிறார் அவர்.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

இடது: புதிதாக செய்யப்பட்ட சிடால்பட்டி, பிரபாதியின் நிறமூட்டும் பகுதியின் விளிம்பில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது. அருகே பாய் நெய்வதற்கான ‘பட்டிபெட்’ எனப்படும் புதிய பிரம்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வலது: பிரம்பு தண்டுகள் காய்ச்சவும் நிறம்பூசவும் இது போல கட்டி வைக்கப்படுகின்றன

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

பிரபாதி கஞ்சி பூசப்பட்ட பிரம்புகளுக்கு கமால்கோஷுக்கான நிறங்களை பூசி (இடது) காய (வலது) வைக்கிறார்

நம்முடன் பேசும் பிரபாதியின் கைகளை பார்க்கிறோம். வேகமாக வேலை பார்க்கும் விரல்களுக்கிடையில் கேட்கும் ஒரே சத்தம் பிரம்பு இழைகளின் சத்தமாகத்தான் இருக்கிறது. அருகருகே அமைந்திருக்கும் வீடுகளின் நெருக்கத்தில் அந்தப் பகுதி அமைதியாக இருக்கிறது. அவ்வப்போது வாகனச் சத்தம் கேட்கிறது. வாழை மற்றும் வெற்றிலை மரங்கள்; ஏழடி உயரம் கொண்ட அடர்ந்த பிரம்பு புதர்கள் வீட்டிலிருந்து தெரிகின்றன.

திறமையான இந்த கைவினைஞர் பாரம்பரிய முறையான கையால் அளக்கும் முறையையே பயன்படுத்துகிறார். ‘ஏக் ஹாத்’ என்னும் 18 அங்குலம், ஒரு கை நீளம் கொண்டு அளக்கப்படுகிறது. இரண்டரை கை அகலமும் நான்கு கை நீளமும் கொண்ட பாய் கிட்டத்தட்ட நான்குக்கு ஆறு அடி அளவு வரும்.

சற்று நேரம் வேலையை நிறுத்திவிட்டு, செல்பேசியில் புகைப்படங்களை பார்க்கும் பிரபாதி, வாடிக்கையாளர்களுக்கு செய்த சில கமால்கோஷ் பாய்களை நமக்கு காட்டுகிறார். “கமால்கோஷ் பாய்கள், ஆர்டர்களின் பெயரில் செய்யப்படும். உள்ளூர் வணிகர்கள் ஆர்டர் செய்யும்போது அவற்றை நாங்கள் செய்வோம். இத்தகைய பிரத்யேக பாய்கள் வாரச்சந்தையில் விற்கப்படுவதில்லை.”

சமீப ட்ரெண்டாக கமால்கோஷ் பாய்களில் பெயர்களும் தேதிகளும் நெய்யப்படுகிறது. “திருமணங்களுக்கு, மணம் முடிக்கும் ஜோடியின் பெயர்களை பாயில் தைக்க வாடிக்கையாளர்கள் சொல்வார்கள். ‘ஷுபோ பிஜோயா’ போன்ற விஜயதசமி வாழ்த்துச் செய்திகளும் வரும்,” என்கிறார் அவர். இத்தகைய பிரத்யேக பாய்கள் திருமணம் மற்றும் விழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது கொண்ட வருப்படுவதாகவும் அவர் சொல்கிறார். “வங்காள எழுத்தில் நெய்வதை விட ஆங்கில எழுத்துகளில் நெய்வது சுலபம்,” என வங்காள மொழியில் வளைந்த எழுத்துகளை சுட்டிக்காட்டி சொல்கிறார் பிரபாதி.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

மணமக்களின் பெயர்களுடன் மயில்கள் நெய்யப்பட்ட பாய்

PHOTO • Shreya Kanoi

கூச் பெகாரின் குகுமாரியிலுள்ள பட்டி அருங்காட்சியகத்தில் கமால்கோஷ்

கூச் பெகார் - 1 ஒன்றியத்தின் பட்டி ஷில்பா சமாபே சமிதியின் செயலாளர் பிரதிப் குமார் ராயும் இந்த அரிய திறனை குறித்து சொல்கிறார். நெசவாளரான அவர் சொல்கையில், “கூச் பெகார் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 பாய் நெசவாளர்கள் இருக்கின்றனர். ஆனாலும் 10-12 பேர்தான் கமால்கோஷ் பின்னுவார்கள்,” என்கிறார்.

1992ம் ஆண்டிலிருந்து இருக்கும் சமிதியில் 300 நெசவாளர்கள் இருக்கின்றனர். பாய் நெய்வதற்கு அப்பகுதியில் முதன்முதலாக தொடங்கப்பட்ட கூட்டுறவு சொசைட்டி அதுதான். பட்டி ஹாட்  என்கிற சந்தையை குகுமாரியில் நடத்துகிறது. பாய்களுக்கு மட்டுமே நடத்தப்படும் அச்சந்தையில் சுமாராக ஆயிரம் நெசவாளர்களும் 100 வணிகர்களும் நாளொன்றில் வருவார்கள்.

கமால்கோஷ் நெசவு செய்யும் கடைசி நெசவாளர்களில் பிரபாதியும் ஒருவர். அவர் அந்த வேலையை கடமையாக எடுத்து செய்கிறார். “என் தாய் தினமும் நெய்கிறார். ஒருநாள் கூட அவர் விடுப்பு எடுத்ததில்லை. வெளியில் ஏதேனும் வேலைக்கு செல்ல வேண்டியிருந்தாலும் தாத்தாவின் இடத்துக்கு சென்றாலும்தான் அவர் விடுப்பு எடுப்பார்,” என்கிறார் அவரது மகள் மந்திரா. அவரும் தாயை பார்த்து ஐந்து வயதிலிருந்தே அக்கலையை செய்து வருகிறார்.

பிரபாதி மற்றும் மனோரஞ்சன் ஆகியோருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். 15 வயது மந்திரா, 7 வயது பியுஷ் (செல்லமாக டோஜோ என அழைக்கப்படுகிறார்). இருவரும் பள்ளி முடிந்த நேரத்தில் இக்கலையை ஆர்வமாக பயின்று வருகின்றனர். பிரபாதியின் பெற்றோருடன் வசிக்கும் மந்திரா, வாரத்துக்கு இருமுறை, தாயின் நெசவில் உதவ வீட்டுக்கு வருகிறார். இளவயது டோஜோவும் தீவிரமாக கற்கிறார். நெசவுக்கான பிரம்பு இழைகளை தயாரிக்கிறார். நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும்போது அவர் வேலை பார்க்கிறார்.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

இடது: தாய் பிரபாதியும் மகள் மந்திராவும் காலை கடமை போல ஒன்றாக நெய்கின்றனர். மகன் பியுஷ் பிரம்பு இழைகளை வெட்டுகிறார். அவரது நண்பர் கிரிக்கெட் விளையாட, அவர் முடிக்கும் வரை காத்திருக்கிறார்

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

இடது: அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் கதை சொல்லும் பாய்களை நெய்ய கற்பதற்கு பிரபாதியின் வீட்டில் நிறைந்திருக்கின்றனர். கீதாஞ்சலி பாவ்மிக், அங்கிதா தாஸ் மற்றும் மந்திரா தார் (இடதிலிருந்து வலது) ஆகியோர், பாயின் பக்கவாட்டை நெய்ய பிரபாதிக்கு உதவுகின்றனர். வலது: பிரபாதியின் பட்டி நெய்யும் குடும்பம்: கணவர் மனோரஞ்சன் தார், மகன் பியுஷ் தார், மகள் மந்திரா தார், பிரபாதி தார் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் அங்கிதா தாஸ்

அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் பிரபாதியின் திறனை கற்றுக் கொள்ளவென அவரை தொந்தரவு செய்கின்றனர். “என் பக்கத்து வீட்டுக்காரரின் மகள் என்னிடம், ‘அத்தை எனக்கு சொல்லித் தா’ எனக் கேட்கிறாள்!’ என்கிறார். அவரின் வீடு, விடுமுறை நாட்களிலும் வார இறுதிகளிலும் படைப்புவெளியாகி விடுகிறது. “மயில்களயும் மரங்களையும் நெய்யும் முறையை கற்க ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் உடனே அது சாத்தியப்படாது. எனவே, பாயின் முனைகளை முடிக்கும்படி சொல்வேன். பிறகு நான் நெய்யும் விதத்தை கவனிக்க சொல்வேன். மெல்ல அவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்,” என்கிறார் அவர்.

கமால்கோஷ் நெய்ய மந்திரா கற்றுக் கொள்கிறார். அதிக வருமானம் ஈட்டக்கூடிய, விடுப்பும் கிடைக்கக் கூடிய வேலை கிடைக்க வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். “செவிலியர் பயிற்சி பெறலாம்,” என்கிறார் அவர். “பாய் நெய்வதில் நிறைய வேலை இருக்கிறது. ஒருவர் ஒரு வேலை செய்தால், பிறகு ஒருவர் அமர்ந்து இளைப்பாறி, வருமானம் ஈட்ட முடியும். எல்லா நேரமும் உழைக்க வேண்டியிருக்காது. அதனால்தான் யாரும் (என் தலைமுறையில்) பாய் நெசவு வேலைக்கு வருவதில்லை.”

தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்ய அவருடைய தாயின் அன்றாடத்தை விவரிக்கிறார்: “என் தாய் அதிகாலை 5.30 மணிக்கு தினசரி எழுந்து விடுவார். வீட்டை கூட்டி சுத்தப்படுத்துவார். பிறகு ஒரு மணி நேரத்துக்கு பாய் நெசவு செய்வார். காலை உணவு சமைப்பார். உண்டு விட்டு மதியம் வரை நெய்வார். குளிக்க மட்டும் இடைவேளை எடுத்துக் கொள்வார். பிறகு மீண்டும் வீட்டை கூட்டுவார். பிற்பகலில் அமர்ந்து நெய்வார். இரவு 9 மணி வரை நெசவு வேலையைத் தொடர்வார். பிறகு மீண்டும், சமைப்பார். நாங்கள் உண்ணுவோம். தூங்கச் செல்வோம்.”

“என் பெற்றோர் விழாக்களுக்கு செல்வதில்லை. ஏனெனில் வீட்டிலேயே நிறைய வேலை இருக்கும். தினசரி நாங்கள் பட்டி தயாரித்தால்தான் மாத வருமானமாக ஒரு 15,000 ரூபாயாவது ஈட்டு மாதச் செலவை சமாளிக்க முடியும்,” என்கிறார் மந்திரா.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

நெசவை தாண்டி, வீட்டையும் குடும்பத்தையும் பிரபாதி பார்த்துக் கொள்கிறார்

*****

பட்டி தயாரிக்கும் வேலைக்கு உள்ளூரில் சமஸ்திகா காஜ் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். குடும்பம் மற்றும் சமூகத்தின் கூட்டுழைப்பு என அர்த்தம். “எங்களின் பாய் நெசவுத் தொழிலை தனியாக செய்ய முடியாது. அனைவரும் மாதக் கடைசியில் ஒரு நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும்,” என்கிறார் குடும்பத்தை சார்ந்திருக்கும் பிரபாதி.

”வேலை “மாதேர் காஜ் (வெளிவேலை) மற்றும் பரிர் காஜ் (வீட்டு வேலை) எனவும் பிரிக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் நெசவு குடும்பத்தை சேர்ந்தவரும் கலையில் திறன் வாய்ந்தவருமான கஞ்சன் டேய். பிரம்புச் செடியை அறுவடை செய்து, வெட்டி நெசவுக்கான இழைகளாக எப்படி நறுக்கிறார்கள் என்பதையும் கஞ்சியில் அவற்றை பெண்கள் காய்ச்சி, காய வைத்து, பாய் நெய்வதையும் அவர் விளக்குகிறார். குழந்தைகள் கூட வேலைகளில் பாலினப் பிரிவினை பார்க்கிறார்கள். சிறுமியர் நெசவை வேடிக்கை பார்க்கிறார்கள். சிறுவர்கள் பிரம்பு உடைக்கும் வேலையை முயலுகின்றனர். டேய், பக்கத்து ஊரான கங்காலேர் குத்தி கிராமத்து பள்ளி தலைமை ஆசிரியராவார்.

வழக்கமான 6 X 7 அடி பாய் செய்வதற்கு தேவைப்படும் பட்டிக்கான பட்டிபெட்களின் (பிரம்பு தண்டுகள்) எண்ணிக்கை 160. இந்த தண்டுகளை இழைகளாக்க இரு நாட்கள் பிடிக்கும். ஆண்கள்தான் செய்வார்கள். இரண்டு கட்ட வேலையான இது பெட் ஷோலாய் மற்றும் பெட் டோலா என்கிற முறைகளை உள்ளடக்கியது. தண்டை பல இழைகளாக்குவது முதல் கட்டம். உள்ளே இருக்கும் மரத்தண்டை அகற்றுவது இரண்டாம் கட்டம். பிறகு ஒவ்வொரு இழையையும் 2 மிமீலிருந்து 0.5 மிமீ தடிமனுக்கு கவனமாக பிரிக்க வேண்டும். கஷ்டமான இந்த வேலையை செய்ய திறன் வாய்ந்தவரின் கைகள் வேண்டும்.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

மனோரஞ்சன் தார் பிரம்பை நிலத்திலிருந்து (இடது) அறுவடை செய்கிறார். மகன் பியுஷுடன் (வலது) பிரம்பு இழைகளை தயார் செய்கிறார். பிரம்பு தண்டை பல துண்டுகளாக வெட்டும் வேலையின் முதல் பணியான பெட் ஷோலாயை பியுஷ் செய்கிறார். பெட், புகா, சோட்டு ஆகிய படிமங்களை கொண்ட இறுதிக்கட்ட பிரம்பு இழையை எடுக்கும் பெட் டுலா வேலையை மனோரஞ்சன் செய்கிறார். இறுதிக்கட்ட பிரம்பு இழை, மேல் படிமமான பெட்டாக பயன்படுகிறது

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

கடைசியாக பாயை பரிசோதிக்கிறார் மனோரஞ்சன். குடும்பமும் சமூகமும் சேர்ந்து பட்டியை செய்கிறது. ‘அனைவருக்கும் மாதக் கடைசியில் ஓரளவுக்கு நல்ல வருமானம் தேவை,’ என்கிறார் பிரபாதி

”நெய்து முடிக்கப்பட்ட பிறகு பாய் காய வைக்கப்படும். வழக்கமான பாய்கள் பிரம்பு துண்டி இயற்கையான நிறத்தில் நெய்யப்பட்டாலும் கமால்கோஷ் இரு வண்ணங்களில் தயாரிக்கப்படும்,” என்கிறார் அவர். பல மணி நேரங்களுக்கு குத்த வைத்து வேலை செய்வார் அவர். சமயங்களில் ஒரு முக்காலியை பயன்படுத்துவார். நெய்த பகுதிகளின் முனைகளை கால்களால் பிடித்துக் கொள்வார். இரு கைகள் கொண்டு பிரம்பு துண்டுகளை நெய்வதற்கேற்ப தூக்குவார்.

ஒரு நேரத்தில் கிட்டத்தட்ட 70 பிரம்பு துண்டுகளை கையாளுகிறார். ஒவ்வொரு பிரமு பாயின் வரிசையையும் நெய்து முடித்ததும், ஒரு இழையை மேலும் கீழுமாக 600 பிரம்பு துண்டுகளினூடாக பிரபாதி நெய்ய வேண்டும். தூக்குவதற்கான முறை ஏதுமில்லை. வெறும் கைகள்தான். இதை சுமாராக அவர் 700 முறை, ஆறுக்கு ஏழடி பாய்க்கு செய்ய வேண்டும்.

ஒரு கமால்கோஷை நெய்து தயாரிக்க தேவைப்படும் நேரத்தில் 10 சாமானிய பாய்களை செய்து விட முடியும். விலையும் அதற்கேற்ப இருக்கும், என்கிறார் பிரபாதி. “கமால்கோஷ் செய்வது கடினமான வேலை. ஆனால் பணம் அதிகம் கிடைக்கும்.” கமால்கோஷ் ஆர்டர்கள் குறைவாக இருந்தால், சாதாரண பாய்களையும் பிரபாதி செய்கிறார். சொல்லப்போனால் ஒரு வருடத்தில் இத்தகைய பாய்கலைதான் அவர் அதிகமாக நெய்வதாக சொல்கிறார்.

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

வடிவங்களும் முத்திரைகளும் எப்படி ஒன்றோடொன்று பிரம்பு இழைகளால் இணைந்திருக்கின்றன என்பதை காட்டும் நெருக்கமான காட்சி. பிரம்பு இழைகள் ஒன்றுக்கொன்று குறுக்காக சென்று பாயை நிறைக்கின்றன. இந்த நெசவின் பாணி அதுதான். நேராக இன்றி பகுதிப் பகுதியாக தைக்க வேண்டும். மனோரஞ்சன் (வலது) பாயை முதலில் ஒரு பக்கமாகவும் அடுத்து இன்னொரு பக்கமாகவும் சுருட்டி நேராக்குகிறார்

PHOTO • Shreya Kanoi
PHOTO • Shreya Kanoi

சிடால்பட்டி நெசவு (இடதிலிருந்து வலது) செய்ய ஒரு மரமுக்காலியில் அமர்ந்து நெய்ய வேண்டும். டாவோ அல்லது போட்டி என்கிற கருவி கொண்டு வெட்டி, பிரம்பு இழை பிரிக்கப்படும்; பெட்காடா பயன்படுத்தி பிரம்பு அறுவடை செய்யப்படுகிறது. சுர்ரி, பாயின் முனைகளை சரியாக்கி, சமமாக்கும். வணிகருக்கு கொடுப்பதற்காக, செய்து முடித்து சுருட்டப்பட்ட கமால்கோஷ் பட்டியுடன் பிரபாதி

தாயாகவும் கமால்கோஷ் நெசவாளராகவும் இருக்கும் தன் வாழ்க்கை பிடித்திருப்பதாக சொல்கிறார் பிரபாதி. “கமால்கோஷ் நெய்யும் திறன் என்னிடம் இருக்கிறது. அதனால்தான் அவற்றை செய்கிறேன். பெருமையாக உணர்கிறேன்.”

சற்று தயக்கத்துக்கு பிறகு அவர் சொல்கிறார், “பலரால் நெய்ய முடியாது. இந்த அரிய பாயை நான் நெய்வதால்தானே என்னை நீங்கள் பார்க்க வந்தீர்கள்? வேறு யாரிடம் நீங்கள் செல்லவில்லை அல்லவா!”

இக்கட்டுரை, மிருணாளினி முகெர்ஜி அறக்கட்டளை (MMF) ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில்: ராஜசங்கீதன்

Shreya Kanoi

شریا کنوئی ایک ڈیزائنر ریسرچر ہیں، جو دستکاری سے جڑے معاش کے سوالوں پر کام کرتی ہیں۔ وہ سال ۲۰۲۳ کی پاری-ایم ایم ایف فیلو ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Shreya Kanoi
Editor : Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan