குஜ்ஜார் மேய்ப்பரான அப்துல் ரஷீது ஷேக், பொது விநியோகம் தொடங்கி அரசு நிதி பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது வரை எல்லா பிரச்சினைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை மனுக்கள் அனுப்பி வருகிறார். வருடந்தோறும் 50 செம்மறி மற்றும் 20 ஆடுகள் கொண்ட மந்தையை காஷ்மீரின் இமயமலைக்கு சென்று மேய்த்து விட்டு வரும் 50 வயது மேய்ப்பரான அவர், கடந்த பத்தாண்டுகளில் இரு டஜன் மனுக்களை அனுப்பியிருக்கிறார்.

“தொடக்கத்தில் என்ன திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என அதிகாரிகளுக்கு தெரியவில்லை. நாங்களும் எங்களின் உரிமைகளை உணராமல் இருந்தோம்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அப்துல் கொத்தாவுக்கு (மண், கல் மற்றும் மரக்கட்டை கொண்டு கட்டப்பட்ட பாரம்பரிய வீடு) வெளியே நின்று கொண்டு. அவரும் அவரின் குடும்பமும் ஒவ்வொரு கோடைக்காலமும் இங்குதான் இடம்பெயர்ந்து வருவார்கள். பட்காம் மாவட்ட கான்சாகிப் ஒன்றியத்தின் முஜ்பத்ரி கிராமத்திலிருந்து இடம்பெயருவார்கள்.

“தகவல் அறியும் உரிமை மனுக்களை அனுப்புவதால், சட்டங்கள் மற்றும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும். அதிகாரிகளை கையாளுவது எப்படி என்றும் கற்றுக் கொள்ள முடியும்,” என்கிறார் அப்துல். தொடக்கத்தில் அதிகாரிகளுக்கே தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரியவில்லை. ”திட்டங்கள் மற்றும் நிதி விநியோகம் குறித்து தகவல் அளிக்கக் கேட்கும்போது அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.”

அமைப்புக்கு சவால் விடும் இத்தகைய நடவடிக்கைகளால் கிராம மக்கள் அச்சுறுத்தப்படும் போக்கு உருவானது. போலியான வழக்குகளை காவல்துறையினர் ஒன்றிய அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு போடுவார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்ட இயக்கத்தில் இப்பகுதியில் முக்கிய பங்காற்றும் விழிப்புணர்வு கொண்ட அப்துல் போன்ற குடிமக்கள் இலக்காக்கப்படுவார்கள்.

“ஊழல் அதிகாரிகள்தான் காரணம். அவர்களின் சொத்துகளை பாருங்கள்,” என்கிறார் அவர், தான் சொல்லும் விஷயத்தை வலியுறுத்த. தகவல் அறியும் உரிமை மனுக்கள் மட்டுமின்றி, முஜ்பத்ரியில் வசிக்கும் ஐம்பது பேருக்கு உணவு வழங்கல் துறை குடும்ப அட்டைகள் அளிக்க வேண்டுமென்ற பிரச்சினையையும் எழுப்பினார்.

Traditional Kashmiri mud houses in Doodhpathri. Popularly known as kotha or doko , these houses are built using wood, mud, stones, tarpaulin and leaves. This is one of the bigger kothas that takes around 10–15 days to build.
PHOTO • Rudrath Avinashi
A chopan whistles and moves the herd of sheep towards the higher mountains for fresh pastures
PHOTO • Rudrath Avinashi

இடது: தூத்பத்ரியில் இருக்கும் பாரம்பரிய காஷ்மீரி மண் வீடுகள். கொத்தா அல்லது டொக்கோ என அழைக்கப்படும் இந்த வீடுகள் மண், கற்கள், மரக்கட்டை, தாய்ப்பாய் மற்றும் இலைகள் கொண்டு கட்டப்படுபவை. கட்டுவதற்கு 10-15 நாட்கள் பிடிக்கும் பெரிய கொத்தாக்களில் ஒன்று இது. வலது: புதிய மேய்ச்சல் நிலங்களை நோக்கி செம்மறி மந்தையை விசில் அடித்து கொண்டு செல்லும் சொப்பன்

Abdul Rashid Sheikh outside his house in Doodhpathri: 'To build our kotha , we don't cut trees. We only use those that have fallen down during storms'
PHOTO • Rudrath Avinashi

தூத்பத்ரியிலுள்ள வீட்டுக்கு வெளியே அப்துல் ரஷீது: ‘கொத்தாவை கட்ட நாங்கள் மரங்கள் வெட்டுவதில்லை. புயல்களின்போது விழுந்த கட்டைகளைதான் பயன்படுத்துவோம்’

மேய்ச்சல் நிலங்கள் கிடைப்பதை சார்ந்திருக்கும் மேய்ப்பரான அப்துல், குறிப்பாக பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம் மீது கவனம் செலுத்துகிறார். “காடுகளை நாம் வனத்துறைக்கு விட்டுவிட்டால், காடுகளே இல்லாமல் போய்விடும்,” என்கிறார் அவர். குஜ்ஜார் மற்றும் பகர்வால் மேய்ச்சல் சமூகங்களுக்கு வன நிலங்களில் மீது இருக்கும் உரிமை குறித்த தகவல் அறியும் மனுக்களை ஜம்மு காஷ்மீர் வன உரிமை கூட்டமைப்புடன் சேர்ந்து அனுப்பியிருக்கிறார். வன உரிமைகள் சட்டத்தின்படி உரிமைகளை பெறுவதற்கு இயங்கும் உள்ளூர் குழு அது.

அவரவர் நிலங்களை வரையறுத்தல் மேய்ச்சல் நிலங்களை கண்டறிவதற்கான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை உருவாக்கி பராமரித்தல் போன்ற பணிகளை செய்வதற்கென வனப்பாதுகாப்பு கமிட்டி, முஜ்பத்ரியில் கிராமசபையை (FRC) உருவாக்கியது. ஏப்ரல் 28, 2023 அன்று கிராம சபை, காட்டின் 1,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை மக்களுக்கான வன வளம் (CFR) என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

“காடு அனைவருக்குமானது. நான், என் குழந்தைகள் மற்றும் நீங்கள் என அனைவருக்கும் அது சொந்தம். வாழ்வாதாரத்தை இயற்கை பாதுகாப்புடன் இணைக்கும்போது புதிய தலைமுறைக்கு பலன் கிடைக்கும். காடுகளை நாம் அழித்தால் வேறு எதை நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம்!” முஜ்பத்ரியின் தற்போதைய CFR உரிமத்தில் அவருக்கு திருப்தி இல்லை.

FRA சட்டத்தை ஒன்றிய அரசு 2020ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கும் நீட்டித்தது.

“FRA பற்றி அதுவரை யாருக்கும் தெரியாது,” என்கிறார் அப்துல். இணைய பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதும், பல சட்டத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பள்ளத்தாக்கு மக்களுக்கு ஏற்பட்டது. அப்துல் விளக்குகையில், “தில்லியில் தீட்டப்படும் பல திட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள, இணையம் முக்கிய பங்காற்றியது. அதற்கு முன், எங்களுக்கு எதுவும் தெரியாது,” என்கிறார்.

Nazir Ahmed Dinda is the current sarpanch of Mujpathri. He has filed several RTIs to learn about the distribution of funds for health, water, construction of houses and more.
PHOTO • Rudrath Avinashi
Dr. Shaikh Ghulam Rasool (left) and a resident of Mujpathri (right) discussing their claim submitted by the Forest Rights Committee (FRC) of the village
PHOTO • Rudrath Avinashi

இடது: நசீர் அகமது திண்டாதான் முஜ்பத்ரியின் தற்போதைய ஊர்த் தலைவர். சுகாதாரம், நீர், வீடுக் கட்டுமானம் ஆகியவற்றுக்கான நிதி விநியோகம் போன்ற பல விஷயங்கள் குறித்து அவர் பல தகவல் அறியும் உரிமை மனுக்களை அனுப்பியிருக்கிறார். வலது: டாக்டர் ஷைக் குலாம் ரசூல் (இடது) மற்றும் முஜ்பத்ரி (வலது) ஆகியோர் வன உரிமை கமிட்டி சமர்ப்பித்திருக்கும் கோரிக்கை குறித்து விவாதிக்கிறார்கள்

2006ம் ஆண்டில் அப்துல்லும் தற்போதைய ஊர்த் தலைவரான நசீர் அகமது திண்டாவும் முஜ்பத்ரியை சேர்ந்த பிறரும் ஜம்மு காஷ்மீர் வன உரிமை கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் ஷைக் குலாம் ரசூலை சந்தித்தனர். அவர் பட்காமின் வட்டார மருத்துவ அதிகாரியாக அப்போது இருந்தார். அடிக்கடி அவர் கிராமத்துக்கு பணி நிமித்தமாக வருவார். தகவல் அறியும் உரிமை இயக்கம் கிராமத்தில் தொடங்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். “சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி டாக்டர் ஷைக் எங்களிடம் பேசி, அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்,” என்கிறார் அப்துல்.

விளைவாக பல திட்டங்கள் குறித்து கிராமவாசிகள் விசாரிக்கத் தொடங்கினர். “மெல்ல தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் மனு எழுதுவது குறித்து நாங்கள் தெரிந்து கொள்ளத் தொடங்கினோம். எங்கள் ஊரின் பல பேர் மனுக்களை அனுப்பத் தொடங்கி அது ஒரு இயக்கமாக உருப்பெற்றது,” என விளக்குகிறார் அப்துல்.

முஜ்பத்ரியில் டாக்டர் ஷைக்குடன் உரையாடியபோது, கிராமவாசிகளை சந்தித்து கூட்டங்கள் நடத்திய தொடக்க நாட்களை நினைவுகூருகிறார். “அதிகாரத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஓர் ஊழல்வாதி. திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை,” என்கிறார். “காவலர்களால் அடிக்கடி கிராமவாசிகள் அச்சுறுத்தப்படுவார்கள். உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்கவில்லை.”

முதல் தகவல் அறியும் உரிமை மனுவை 2006ம் ஆண்டில் பீர் ஜி.ஹெச்.மொகிதின் அனுப்பினார். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் வீடுகள் கட்ட நிதி உதவி அளிக்கும் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து மனு அனுப்பினார் அவர். பிறகு 2013ம் ஆண்டில் இந்திரா அவாஸ் யோஜனாவின் பயனாளிகள் குறித்த தகவல்களை கேட்டு ஊர்த் தலைவர் நசீர் மனு அனுப்பினார்.

Nazir and Salima Sheikh light up the chulha (stove) and prepare for dinner inside their kotha
PHOTO • Rudrath Avinashi
Salima Sheikh preparing noon chai (a traditional Kashmiri drink of green tea leaves, baking soda and salt) and rotis
PHOTO • Rudrath Avinashi

இடது: நசீர் மற்றும் சலிமா ஷேக் அடுப்பை பற்ற வைத்து இரவுணவு தயார் செய்கின்றனர். வலது: சலிமா ஷேக் மதிய வேளை (தேயிலைகள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு போட்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய) தேநீர் தயாரிக்கிறார்

கிராமத்தினருடன் உரையாடல் மற்றும் விவாதங்களுக்கு பிறகு, காடுகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிய அவசியத்தை நசீர் புரிந்து கொண்டு தகவல் அறியும் உரிமை மனுக்கள் அனுப்பத் தொடங்கினார். “எங்களுக்கான அரசு திட்டங்களை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றை பெறுவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்கிறார் அவர். “2006ம் ஆண்டு வரை, நாங்கள் மரக்கட்டைகளையும் மூலிகைகள், வேர்கள் போன்ற பிற காட்டு பொருட்களையும் காடுகளிலிருந்து திருடுவோம். ஏனெனில் வேறு வாழ்வாதாரம் கிடையாது,” என்கிறார் 45 வயது குஜ்ஜார். “2009ம் ஆண்டுவாக்கில், தூத்பத்ரியில் ஒரு கடை தொடங்கி தேநீர் விற்கத் தொடங்கினேன். காட்டை சார்ந்திருப்பதை குறைக்க விரும்பினேன்,” என்கிறார் அவர். உயரமான இடங்களில் இருக்கும் மேய்ச்சல் நிலங்களை தேடி ஷாலிகங்கா ஆற்றின் ஓரமாக அவருடன் நாங்கள் சென்றபோது, இத்தனை ஆண்டுகளில் அவர் அனுப்பிய பல்வேறு தகவல் அறியும் உரிமை மனுக்களை பட்டியலிட்டார்.

2013ம் ஆண்டில் நசீர், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் எவ்வளவு அரிசி ஒதுக்கப்பட்டிருக்கிறதென கேட்டு FCSCA துறைக்கு மனு அனுப்பினார். கூடுதலாக, 2018ம் ஆண்டில் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்ட சமக்ரா ஷிக்‌ஷா திட்டத்தின் கீழ் உபகார சம்பளம் பெறும் மாணவர்கள் பற்றிய தகவல்களை அறியவும் அவர் மனு அனுப்பினார்.

ஷாலிகங்கா ஆற்றின் ஓரமாக நசீருடன் நாம் சென்று கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் சில கூடாரங்களை கண்டோம். தேநீர் அருந்த அழைக்கப்பட்டோம். அங்கு, பகர்வால் மேய்ப்பரான முகமது யூனுஸை சந்தித்தோம். அவர் ஜம்மு பிரிவின் ரஜோரி மாவட்டத்திலிருந்து தூத்பத்ரிக்கு ஏப்ரலில் வந்திருக்கிறார். அவரின் 40 செம்மறிகளும் 30 ஆடுகளும் மேய்ந்து முடிக்கும் அக்டோபர் மாதம் வரை இங்கிருப்பார்.

“இன்று இங்கு நாங்கள் இருக்கிறோம்,” என்கிறார் அவர். “ஆனால் 10 நாட்களுக்கு பிறகு, நாங்கள் மேலே மேய்ச்சல் நிலங்கள் இருக்கும் இடம் நோக்கி செல்வோம்.” 50 வயதான அவர், பகர்வால் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். பால்ய காலத்திலிருந்து தொடர்ந்து காஷ்மீருக்கு இடம்பெயர்ந்து வருகிறார்.

Mohammed Younus (left) on the banks of the Shaliganga river in Doodhpathri where he and his family have come with their livestock. They will continue to move upstream till the source of the river in search of fresh pastures. Inside their tent, (in the front) his spouse Zubeda Begam and his brother (with the hookah)
PHOTO • Rudrath Avinashi
Mohammed Younus (left) on the banks of the Shaliganga river in Doodhpathri where he and his family have come with their livestock. They will continue to move upstream till the source of the river in search of fresh pastures. Inside their tent, (in the front) his spouse Zubeda Begam and his brother (with the hookah)
PHOTO • Rudrath Avinashi

ஷாலிகங்கா ஆற்றின் கரைகளுக்கு குடும்பம் மற்றும் மந்தையுடன் வந்திருக்கும் முகமது யூனுஸ் (இடது). ஆறு தொடங்கும் இடம் நோக்கி மேய்ச்சல் நிலங்களை தேடி அவர்கள் தொடர்ந்து மேலே செல்வார்கள். கூடாரத்துக்குள் (முன்னால்) அவரின் மனைவி சுபெய்தா பேகம் மற்றும் சகோதரர் (ஹுக்காவுடன்)

“சராசரியாக, ஆட்டையோ செம்மறியையோ விற்பதில் எங்களுக்கு 8,000லிருந்து 10,000 ரூபாய் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு ஒரு மாதத்தை நாங்கள் எப்படி ஓட்டுவது?,” எனக் கேட்கும் யூனுஸ், ஜம்மு காஷ்மீரில் தேயிலை ஒரு கிலோ 600-700 ரூபாய் மற்றும் எண்ணெய் விலை ஒரு லிட்டர் ரூ.125 என்றும் கூறுகிறார்.

பொது விநியோகத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படாததால், யூனுஸ் மற்றும் அவரின் சமூகத்தினர் முறையாக உணவு தானியங்களை பெற முடியாமல் போயிருக்கிறது. “அரசாங்கம் எங்களுக்கு அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை கொடுக்க வேண்டும். ஆனால் எதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை,” என்கிறார் யூனுஸ்.

”முதன்முறையாக இந்த வருடம் எங்களுக்கு டாக்சி சேவை யுஸ்மார்க் வரை கிடைத்தது. எங்களின் குழந்தைகள் கால்நடைகளுடன் வந்தார்கள்,” என்கிறார் யூனுஸ். 2019ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கும் இத்திட்டம், ரஜோரியின் பகர்வால்களை வந்தடைய நான்கு வருடங்களாகியிருக்கிறது என்கிறார் அவர். நடமாடும் பள்ளிகளுக்கான திட்டமும் இருக்கிறது. ஆனால் இயங்கவில்லை. “நடமாடும் பள்ளிகள் கொடுத்தனர், ஆனால் 10-15 குடும்பங்களேனும் குறைந்தபட்சம் இருக்க வேண்டும். அப்போதுதான் பள்ளிக்கூட வாத்தியார் வருவார்,” என்கிறார் யூனுஸ்.

“காகிதத்தில் எல்லா திட்டங்களும் இருக்கின்றன, ஆனால் எங்களை அவை அடைவதில்லை,” என்கிறார் அவர் அதிருப்தியுடன்.

தமிழில்: ராஜசங்கீதன்

Rudrath Avinashi

رودرتھ اویناشی تحقیق اور دستاویز سازی کے ذریعہ کمیونٹی کے محفوظ کردہ علاقوں سے جڑے مسائل پر کام کرتے ہیں۔ وہ ’کلپ ورکش‘ تنظیم کے رکن ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rudrath Avinashi
Editor : Sarbajaya Bhattacharya

سربجیہ بھٹاچاریہ، پاری کی سینئر اسسٹنٹ ایڈیٹر ہیں۔ وہ ایک تجربہ کار بنگالی مترجم ہیں۔ وہ کولکاتا میں رہتی ہیں اور شہر کی تاریخ اور سیاحتی ادب میں دلچسپی رکھتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sarbajaya Bhattacharya
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan