ரூபேஷ் மொஹர்கர் 20-களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் குழுவை சிறிய கலந்துரையாடலுக்கு அழைக்கிறார்.

"கவனமாக இருங்கள்," என்று 31 வயதான அவர் முழங்குகிறார். அவருடைய சுருக்கமான உரையை இளைஞர்கள் கவனமாகக் கேட்கிறார்கள். "சோம்பலுக்கு இடமில்லை!" தற்போதைய வாய்ப்பை விடக் கூடாது என அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.

ஆமோதிப்பது போல் தலையசைத்து, கவனமாக முகத்தை வைத்துக் கொண்டு, கூட்டத்தினர் வெற்றி முழக்கமிடுகின்றனர். அனைவரும் உற்சாகமடைந்து, ஒரு மாதமாக செய்து வரும் ஓடுதல் போன்ற உடற்பயிற்சிக்கு திரும்புகின்றனர்.

ஏப்ரல் மாத அதிகாலை 6 மணி. நகரின் ஒரே பொது மைதானமான பந்தாராவில் உள்ள சிவாஜி ஸ்டேடியம், உற்சாகமான இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. வியர்வை சிந்தியபடி 100 மீட்டர், 1,600 மீட்டர் என அவர்கள் ஓட்டப்பயிற்சியில் உள்ளனர். உடல் வலிமையை மேம்படுத்த குண்டு எறிதல் மற்றும் பிற பயிற்சிகளை செய்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், பொதுத் தேர்தல் நெருங்கி வருவது அவர்களின் கவனத்தில் இல்லை. பண்டாரா-கோண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19, 2024 அன்று நீண்ட, கடினமான மற்றும் வியர்வை நிறைந்த தேர்தல் பருவத்தின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் மோதல்களுக்கு அப்பால், இந்த இளைஞர்களும், இளம்பெண்களும் வரவிருக்கும் மாநில காவல்துறை தேர்வுக்கு தயாராவதில் கவனம் செலுத்துகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15 வரை பெறப்படுகின்றன. போலீஸ் கான்ஸ்டபிள்கள், கான்ஸ்டபிள் டிரைவர்கள், மாநில ரிசர்வ் போலீஸ் படை, போலீஸ் பேண்ட்மேன்கள் மற்றும் சிறை கான்ஸ்டபிள்களுக்கான காலியிடங்களை நிரப்ப உடல் மற்றும் எழுத்துத் தேர்வுடன் இணைந்த தேர்வு ஓரிரு மாதங்களில் நடத்தப்படும்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

கிழக்கு மகாராஷ்டிராவின் பந்தாராவைச் சேர்ந்த விவசாயி மகனான ரூபேஷ் மோஹர்கர் (இடது) மாநில காவல்துறையில் சேருவதற்கான கடைசி வாய்ப்புக்காக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார். பந்தாரா மற்றும் கோண்டியா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அவர் பயிற்சி அளிக்கிறார் – இவர்கள்  மாநில அரசின் நிரந்தர வேலையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட சிறு விவசாயிகளின் பிள்ளைகள்

இந்திய இளைஞர்களில் கிட்டத்தட்ட 83 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி  உள்ளனர். அதே நேரத்தில் வேலையற்றவர்களில் மேல் நிலை அல்லது உயர் கல்வி பெற்றவர்களின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 54.2 சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டில் 65.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) அண்மையில் வெளியிட்ட இந்திய வேலையின்மை அறிக்கையில் (2024) தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிராமப்புற இளைஞர்களின் வேலையின்மை மற்றும் பதற்றத்துக்கு ஒரு முகம் இருந்தால், அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தின் சிவாஜி ஸ்டேடியம் போல் இருக்கும். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும். வெற்றி கடினமானது. ஒரு சில காலியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் போட்டியிடுவார்கள்.

பந்தாரா மற்றும் கோண்டியா ஆகியவை காடுகள் நிறைந்த, நெல் பயிரிடப்படும், அதிக மழை பெய்யும் மாவட்டங்கள். ஆனால் அங்குள்ள கணிசமான பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கு வாய்ப்பளிக்க கூடிய  குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இந்த மாவட்டங்களிலிருந்து சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகள் பிற மாநிலங்களுக்கு பெருமளவில் இடம்பெயர்ந்துள்ளனர்.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் 17 , 130 பணியிடங்களை மாவட்ட வாரியான ஒதுக்கீட்டுடன் நிரப்புவதற்கான தேர்வை அறிவித்துள்ளது . பண்டாரா காவல்துறையில் 60 காலியிடங்கள் உள்ளன, அவற்றில் 24 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோண்டியாவில் சுமார் 110 காலியிடங்கள் உள்ளன.

அப்பணியிடங்களில் ஒன்றுக்கு ரூபேஷ் தயாராகி வருகிறார். குழந்தையாக இருந்தபோது தந்தை இறந்ததால், தாயால் வளர்க்கப்பட்ட ரூபேஷிற்கு  பந்தாராவுக்கு அருகிலுள்ள சோனுலியில் ஒரு ஏக்கர் குடும்ப நிலம் உள்ளது. தேர்வை வென்று வர்தி (சீருடை) அணிவதற்கு அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.

"எனக்கு மாற்று திட்டமே கிடையாது."

PHOTO • Jaideep Hardikar

பந்தாரா சிவாஜி ஸ்டேடியத்தில் அண்மையில் நடந்த பயிற்சியின் போது ரூபேஷ் மொஹர்கரின் குழுவில் சுமார் 50 ஆண்கள் மற்றும் பெண்கள் இருந்தனர்

அவர் தனது கனவைத் தொடரும் அதே வேளையில், கிழக்கு மகாராஷ்டிராவின் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த மாவட்டப் பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 50 இளைஞர்களுக்கு வழிகாட்ட முன்வருகிறார்.

முறைசாரா முறையில், ரூபேஷ் அவர்களின் சொந்தப் போராட்டத்தின் பெயரில் 'சங்கர்ஷ்' என்று பெயரிடப்பட்ட ஒரு அகாடமியை நடத்தி வருகிறார். அவரது குழுவில் உள்ள ஒவ்வொருவரும் பந்தாரா மற்றும் கோண்டியா மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு ஒரு நிரந்தர வேலை கிடைக்கும்,  சீருடை கிடைக்கும், குடும்பங்களின் சுமைகளை குறைக்கும் என்ற நம்பிக்கையில் சிறு விவசாயிகளின் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள். மிகச் சிலரே பட்டம் பெற்றவர்கள்.

அவர்களில் எத்தனை பேர் பண்ணைகளில் வேலை செய்திருக்கிறார்கள்? அனைவரும் கைகளை உயர்த்தினார்கள்.

அவர்களில் எத்தனை பேர் வேலைக்காக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்? அவர்களில் சிலர் கடந்த காலத்தில் குடிபெயர்ந்திருக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்) தளங்களில் வேலை செய்தவர்கள்.

இது ஒரு குழுவினர் மட்டுமே. இந்த அரங்கம் பல முறைசாரா பயிற்சி குழுக்களால் நிரம்பியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற இதற்கு முன்பு தோல்வியுற்ற முயற்சிகளை மேற்கொண்ட ரூபேஷ் போன்ற தனிநபர்களால் பெரும்பாலும் வழிநடத்தப்படுகிறது.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

பந்தாரா நகரில் உள்ள ஒரே திறந்தவெளி பொது மைதானத்தில் , 2024 மாநில காவல்துறை தேர்வுக்கு இருபதுகளில் உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் வியர்வை சிந்துகிறார்கள். அவர்களில் பெரும்பா லானோ ர் முதல் அல்லது இரண்டாவது முறை வாக்காளர்கள் . தங்கள் எதிர்காலம் குறித்த கவலை கொண்டவர்கள்

இங்கு உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களில் பலர் முதல் அல்லது இரண்டாவது முறை வாக்காளர்கள். அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். ஆனால் அமைதியாக தங்கள் தொழில் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். மற்ற துறைகளிலும் பாதுகாப்பான வேலைகள், தரமான உயர்கல்வி, கிராமங்களில் சிறந்த வாழ்க்கை,  சம வாய்ப்புகள் ஆகியவற்றை விரும்புவதாக பாரியிடம் தெரிவித்தனர். மாவட்டக் காவல் பணியிடங்களில் உள்ளூர்வாசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இந்தத் தேர்வு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது," என்று 32 வயதாகும் குருதீப்சிங் பச்சில் கூறுகிறார். ஓய்வு பெற்ற காவலரின் மகனான ரூபேஷ், காவல்துறையில் வேலை பெற கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார். "நான் உடல் சோதனைகளில் தேர்ச்சி பெறுகிறேன். ஆனால் எழுத்துத் தேர்வில் சிக்கிக் கொள்கிறேன்," என்று அவர் ஆர்வலர்களால் நிரம்பிய அரங்கத்தின் குறுக்கே நடந்து செல்லும்போது கூறுகிறார்.

மற்றொரு காரணம் உள்ளது: மகாராஷ்டிராவின் வளர்ச்சியுற்ற பகுதிகளில், வசதியும் வாய்ப்பு கொண்டு நல்ல பயிற்சி பெற்றவர்கள்,  பந்தாரா மற்றும் கோண்டியா போன்ற பின்தங்கிய பிராந்தியங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கின்றனர். உள்ளூர் மக்களை விட அவர்களே அதிகம் வருகின்றனர் என்று பெரும்பாலான ஆர்வலர்கள் புலம்புகின்றனர். இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான கட்சிரோலியில், உள்ளூர்வாசிகள் மட்டுமே விண்ணப்பித்து போலீஸ் வேலைகளைப் பெற முடியும் நிலை உண்டு. ரூபேஷ் மற்றும் பிறருக்கு, இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கடினமானது.

எனவே, அவர்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தபடி இருக்கிறார்கள்,.

நூறு கால் பாய்ச்சலால் அரங்கமே செம்மண் புழுதியில் நிரம்பியுள்ளது. ஆர்வலர்கள், சுமாரான டிராக்-சூட் அல்லது பேண்ட் அணிந்துள்ளனர்; அவர்களில் சிலர் காலணிகளுடனும், மற்றவர்கள் வெறுங்காலுடனும், தங்கள் பயிற்சியை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். எதுவுமே அவர்களை திசை திருப்ப முடியாது. தேர்தல்கள் அவர்களுக்கு இங்கிருந்து நெடுந்தொலைவு.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: ரூபேஷ் மொஹர்கர், பந்தாராவில் உள்ள தனது அத்தையின் சிக்கன் கடையில் வேலை செய்கிறார். அவர் குழந்தையாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டதால் தாயால் வளர்க்கப்பட்டவர். அவருக்கு பந்தாரா அருகே சோனுலி கிராமத்தில் ஒரு ஏக்கர் குடும்ப நிலம் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு. அவர் பயிற்றுவிக்கும் இளைஞர்கள் அண்மையில் நடைபெற்ற காலை அமர்வில் யுக்திகள் பற்றி விவாதிக்கவும் அவர்களின் குறைபாடுகளைப் பற்றி பேசவும் வந்துள்ளனர்

பந்தாராவில் உள்ள அவரது அத்தை கடையில், ரூபேஷ் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்றாலும் கசாப்புக் கடைக்காரராக வேலை செய்கிறார். அதுதான் அத்தை பிரபா ஷென்டிரி குடும்பத்திற்கான அவரது பங்களிப்பு. சமையல் அங்கி அணிந்து, அவர் ஒரு நிபுணரைப் போல கோழிகளை வெட்டியபடி,  வாடிக்கையாளர்களைக் கையாளுகிறார். என்றாவது ஒரு நாள் காக்கி சீருடை கிடைக்கும் என்று கனவு கண்டபடி ஏழு வருடங்களாக இதைச் செய்து வருகிறார்.

பெரும்பாலான ஆர்வலர்களுக்கு இது மிகவும் கடினமானது என்பதை அவர்களின் வறுமை காட்டுகிறது.

கடினமான உடற்பயிற்சிகளைத் தாங்கிக்கொள்ள, நல்ல உணவு தேவை என்று ரூபேஷ் கூறுகிறார் - கோழி, முட்டை, ஆட்டிறைச்சி, பால், பழங்கள்... "எங்களில் பலரால் ஒருவேளை நல்ல உணவை கூட வாங்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.

*****

ஒவ்வொரு முறை காவல்துறை தேர்வுக்கான விளம்பரம் வரும் போதும் பந்தாராதான் ஏழை கிராமப்புற இளைஞர்களுக்கான மையமாக உள்ளது.

சிவாஜி ஸ்டேடியத்தில் கோடிக்கணக்கான கனவுகள் ஒன்றோடொன்று முட்டி மோதுகின்றன. நாட்கள் செல்லச் செல்ல மாவட்டத்திலிருந்து அதிகமான இளைஞர்கள் களத்திற்கு வருவார்கள். கட்சிரோலியின் எல்லையில் உள்ள கோண்டியாவின் அர்ஜுனி மோர்கான் தாலுகாவில் உள்ள அரக்டோண்டி கிராமத்தில் உள்ள MGNREGA பணியிடத்தில் நாம் சந்திப்பதைப் போலவே: பட்டதாரியான 24 வயதாகும் மேகா மேஷ்ராம், தனது தாய் சரிதா மற்றும் சுமார் 300 கிராமவாசிகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுடன் சாலை அமைக்கும் இடத்தில் மணல் மற்றும் கற்பாறைகளை ஏற்றிச் செல்கிறார். 23 வயதான மேகா ஆடேவும் அப்படித்தான். முந்தையவர் ஒரு தலித் (பட்டியல் சாதி), பிந்தையவர் ஆதிவாசி (பட்டியல் பழங்குடியினர்).

"நாங்கள் காலையிலும், மாலையிலும் கிராமத்தில் ஓடி ஓடி எங்கள் பயிற்சிகளை மேற்கொள்கிறோம்," என்று உறுதியான குரலில் கூறுகிறார் மேகா மேஷ்ராம். அடர்ந்த காடுகள் நிறைந்த நிலப்பரப்பில் வசிக்கும் இவர், தனது பெற்றோருக்கு உதவியாக நாள் முழுவதும் தினக்கூலி வேலை செய்கிறார். மேகாக்கள் இருவரும் பந்தாரா பயிற்சி மையங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். மேலும் காவல்துறையில் சேர விரும்பும் நூற்றுக்கணக்கானவர்களுடன் சேர மே மாதத்தில் அங்கு செல்ல யோசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் செலவுகளுக்கு ஊதியத்தை சேமித்து வருகின்றனர்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

இடது: மேகா மேஷ்ராம், காவல்துறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்; இளம் தலித் சிறுமி தற்போது கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட தளத்தில் தனது தாய் சரிதாவுக்கு உதவியாக வேலை செய்கிறார். வலது: மேகா ஆடேவும்,  மேகா மேஷ்ராமும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தோழிகள். இருவரும் பட்டதாரிகள், மாநில காவல்துறை தேர்வு 2024-ல் தேர்ச்சிப் பெற்று காவல்துறையில் சேர விரும்புகிறார்கள்

அங்கு சென்றதும், அவர்கள் அறைகளை வாடகைக்கு எடுத்து குழுக்களாக வசிப்பார்கள், ஒன்றாக சமைப்பார்கள் மற்றும் தேர்வுகளுக்கு தயார் செய்வார்கள். யாராவது தேர்வில் தேர்ச்சி பெற்றால், அனைவரும் கொண்டாடுகிறார்கள். மற்றவர்கள் அடுத்த நாள் காலையில் இருந்து அடுத்த தேர்வு அறிவிப்பிற்கு காத்திருக்கிறார்கள்.

இளம் பெண்கள் தங்கள் ஆண் சகாக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. கஷ்டங்களை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை.

"உயரம் குறைவால் என் வாய்ப்பை இழக்கிறேன்," என்று 21 வயதான வைஷாலி மேஷ்ராம் வெட்கப் புன்னகையுடன் கூறுகிறார். அது தன் கையில் இல்லை என்கிறார் அவர். எனவே, அவர் 'பேண்ட்ஸ்மேன்' பிரிவில் விண்ணப்பித்தார். அங்கு உயரம் ஒரு தடையாக இருக்காது.

வைஷாலி தனது தங்கை காயத்ரி, மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மயூரி கராடேவுடன் நகரத்தில் ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர்களின் சுத்தமான, நேர்த்தியான அறையில், உணவை மாறி மாறி சமைத்து கொள்கிறார்கள். அவர்களின் மாத செலவு: குறைந்தது 3,000 ரூபாய். அவற்றில் புரத உணவு: முக்கியமாக கடலை மற்றும் பருப்பு வகைகள்.

விண்ணை முட்டும் விலைவாசி அவர்களின் பட்ஜெட்டை பாதிக்கிறது என்று வைஷாலி கூறுகிறார். "எல்லாம் விலை ஏறிவிட்டது."

அவர்களின் தினசரி வேலைகள் நெருக்கடியானது: அதிகாலை 5 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சிக்காக மைதானத்தில் மிதிவண்டி  மிதிக்கிறார்கள். காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அருகிலுள்ள நூலகத்தில் படிக்கின்றனர். ரூபேஷ், இறைச்சி கடையில் தனது வேலைகளுக்கு இடையில், எழுத்துப் பயிற்சி குறித்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார். மாலையில், அவர்கள் உடற்பயிற்சிகளுக்காக மீண்டும் மைதானத்தில் உள்ளனர்; அவர்கள் பயிற்சியுடன் அன்றைய நாளை முடிக்கிறார்கள்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

புகைப்படத்தில் உள்ள மற்ற இளம் பெண்களைப் போலவே, வைஷாலி துல்ஷிராம் மேஷ்ராம் (இடது) மாநில காவல்துறை வேலைக்கு முயற்சிக்கிறார். மகாராஷ்டிரா காவல்துறை தேர்வு 2024-ஐ நோக்கமாகக் கொண்ட அவரது அறைத்தோழி மயூரி கராடேவுடன் (வலது)

ரூபேஷ், வைஷாலி போன்றவர்கள் உண்மையில் விவசாயத்திலிருந்து வெளியேற முயற்சிக்கின்றனர். அதில் அவர்கள் எதிர்காலம் இருப்பதாக கருதவில்லை - லாபம் ஏதுமின்றி தங்கள் பெற்றோர்கள் வயல்களில் கடின உழைப்பு செலுத்துவதை அவர்களில் பெரும்பாலானோர் பார்க்கின்றனர். அவர்கள் கால் தளரும் வரை உழைப்பதற்கு நீண்ட தூரம் இடம்பெயர விரும்பவில்லை.

வயது ஏற ஏற பாதுகாப்பான வேலைகளை தேடி அலைகிறார்கள். அந்த வாழ்வாதாரம் கௌரவமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தனியார் துறையிலும், அரசிலும் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவு. 2024 தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய ஆட்சி தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பேசவில்லை என்று அவர்கள் விரக்தியடைந்துள்ளனர். இந்த காவல்துறை தேர்வு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதற்கு மேல் படிக்காதவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

வரும் தேர்தலில் அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?

அந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஒரு நீண்ட மௌனம். இது பாடத்திட்டத்திற்கு வெளியே உள்ள கேள்வி!

தமிழில்: சவிதா

Jaideep Hardikar

جے دیپ ہرڈیکر ناگپور میں مقیم صحافی اور قلم کار، اور پاری کے کور ٹیم ممبر ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز جے دیپ ہرڈیکر
Editor : Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha