அதிகாலை மூன்று மணி. வெளியே ஆரஞ்சு நிற தார்ப்பாய் கூடாரத்தில் அமர்ந்திருக்கும் நந்தினி, தோழி பிடித்திருக்கும் செல்பேசி வெளிச்சத்தில் ஒப்பனை போட்டுக் கொண்டிருக்கிறார்.
18 வயதான அவர், ஒரு எளிய காட்டன் புடவை கட்டியிருக்கிறார். இன்னும் சில மணி நேரங்களில் மணம் முடிக்கவிருக்கிறார்.
முதல் நாள் மாலை, அவரும் மணமகனான 21 வயது ஜெயராமும் பங்களாமேடிலிருந்து (செருக்கனூர் இருளர் காலனி எனவும் சொல்லப்படுகிறது) நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்துக்கு வந்து சேர்ந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இக்குழு, சென்னையின் தெற்கே உள்ள கடற்கரையில் கூடாரம் போட்டு தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான இருளர் குடும்பங்களில் ஒன்று ஆகும்.
கடலோரத் தமிழ்நாட்டின் குளிர்காலம் முடிந்து ஒவ்வொரு மார்ச் மாதமும் கோடை காலம் தொடங்கும்போது, மாமல்லபுரத்தின் (முன்பு மகாபலிபுரம் என அழைக்கப்பட்டது) பொன்னிற மண், வண்ணங்களை சூடுகிறது. புடவைகளாலும் தார்ப்பாய்களாலும் புதிதாக வெட்டப்பட்ட மரத் தண்டுகளைக் கொண்டு எழுப்பப்படும் கூடாரங்களாலும் வசிப்பிடங்களாலும் கடற்கரை நிரம்பியிருக்கும்.
வழக்கமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளால் நிறைந்திருக்கும் இந்த பிரபல கடற்கரை, மாசிமகம் கொண்டாட மாநிலம் முழுக்க வந்திருக்கும் இருளர் சமூகத்தினரால் நிறைந்திருக்கிறது. 2 லட்சம் மக்கள்தொகை ( இந்தியாவின் பட்டியல் பழங்குடிகள் புள்ளிவிவரம் , 2013) கொண்டிருக்கும் இருளர்கள், அதிகமாக பாதிக்கப்படும் பழங்குடிகளாக (PVTG) வரையறுக்கப்பட்டிருக்கின்றனர்.
இருளர்களின் குழுக்கள் தமிழ் மாதமான மாசி மாதத்தில் (பிப்ரவரி - மார்ச்) கன்னியம்மா தெய்வத்தை வணங்க மாமல்லபுரத்துக்கு வருகிறார்கள். இருளர்கள் வணங்கும் ஏழு கன்னி தெய்வங்களில் கன்னியம்மாவும் ஒன்று. மகம், இந்து மத வானியலில் ஒரு நட்சத்திரத்தின் பெயர் ஆகும்.
“அம்மாவுக்கு கோபம் வந்தா, கடலுக்கு போயிடுவான்னு முன்னோருங்க சொல்வாங்க,” என்கிறார் ஜெயராமின் தாய் வழிப் பாட்டி வி.சரோஜா. “பிறகு அவ திரும்பி வரணும்னா, நாங்க கும்பிடணும். அவளும் கோபம் போய், வீட்டுக்கு வருவா,” என அவர் விளக்குகிறார்.
நான்கைந்து நாட்கள் தங்கும் நிகழ்வின்போது, இருளர்கள் முகத்துவாரத்தில் மீன் பிடிப்பார்கள். எலிகள், புதர்களின் பறவைகள் போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணுவார்கள்.
வேட்டை, உண்ணத்தகு செடிகளை தேடுவது, அருகாமை காடுகளிலிருந்து விறகுகள், மூலிகைகள் சேகரிப்பது போன்றவை பாரம்பரிய இருளர் வாழ்க்கையின் அங்கம். (வாசிக்க: பங்களாமேட்டின் புதையல்கள் )
விவசாய நிலங்களாலும் கட்டுமானங்களாலும் காடுகளும் ஏரிகளும் குறைந்து வருவதால், இருளர்கள் தினக் கூலி வேலையை சார்ந்திருக்கின்றனர். விவசாய நிலங்களிலும் செங்கல் சூளைகளிலும் MRNEGA (ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) தளங்களிலும் வேலை பார்க்கின்றனர். அவர்களில் சிலர், விஷத்தயாரிப்புக்காக பாம்பு பிடிக்கும் உரிமத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைகள் எப்போதாவதுதான் கிடைக்கும்.
அலமேலு, மணப்பாக்கத்திலிருந்து வரும் யாத்ரீகர். சென்னையின் வளர்ந்து வரும் பகுதியான மணப்பாக்கத்திலுள்ள குப்பை மேட்டுக்கு அருகே வசிக்கிறார். 45 வயது தினக்கூலியான அவர், வருடந்தோறும் 55 கிலோமீட்டர் பயணித்து கடற்கரைக்கு சென்று அம்மனை வணங்குவதாகக் கூறுகிறார். “சுத்திப் பாருங்க,” என அங்கிருக்கும் வசிப்பிடங்களை சுட்டிக் காட்டுகிறார். “இப்படித்தான் எப்பவும் நாங்க வாழ்ந்திருக்கிறோம். தரையிலதான் வாழ்க்கை… பாம்பு இருந்தாலும் சரி, பல்லி இருந்தாலும் சரி. அதனாலதான் நாங்க அம்மாவுக்கு தரைல காணிக்கையை கொடுக்கறோம்.”
சூரியன் உதிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னதாக பிரார்த்தனை தொடங்குகிறது. சீக்கிரம் விழிப்பவர்கள், கூடாரங்களையும் படுத்திருப்பவர்களையும் தாண்டி, நிலா வெளிச்சத்தில் கடற்கரைக்கு செல்கின்றனர். காணிக்கை வழங்கவென ஒவ்வொரு குடும்பமும் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொள்கிறது.
”மண்ணில் ஏழு படிகள் கட்டுவோம்,” என்கிறார் அலமேலு. ஒவ்வொரு படியிலும் தெய்வத்துக்கு பூக்கள், தேங்காய்கள், வெற்றிலைகள், பொறி, வெல்ல மாவு போன்றவற்றை வைக்கிறார்கள். அலைகள் வந்து காணிக்கைகளை அடித்து செல்கையில், அம்மன் ஆசிர்வதித்ததாக இருளர்கள் கருதுகின்றனர்.
”அதட்டிக் குடுத்தா, ஏத்துக்குவா,” என்கிறார் அலமேலு. தெய்வத்துக்கு கட்டளை இடுவது வித்தியாசமாக தெரியலாம். ஆனால் இத்தகைய தனித்துவமான உறவைத்தான் தங்களின் தெய்வத்துடன் இருளர்கள் பேணுகின்றனர். “அம்மாவை கூப்புடற மாதிரிதான். உங்க விருப்பத்துக்கு பேசிக்கலாம்,” என விளக்குகிறார் இருளர் செயற்பாட்டாளரான மணிகண்டன்.
பிரார்த்தனையின்போது சிலர் மீது அம்மன் இறங்கி ஆடுவதாக இருளர்கள் நம்புகின்றனர். பல பக்தர்கள் பாரம்பரியமாக மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற உடைகள் உடுத்தியிருக்கின்றனர். கன்னியம்மா பிடித்து ஆடுபவர்களும் அதே நிற உடைகளைத்தான் அணிந்திருக்கின்றனர். சில ஆண்கள் புடவைகள் கட்டி, தலைக்கு பூ வைத்திருக்கின்றனர்.
திருத்தணியை சேர்ந்த மணிகண்டன், ஒரு இருளர் செயற்பாட்டாளர். “எங்களுக்கு புரோகிதர்கள் கிடையாது. அம்மன் இறங்கி ஆட அனுமதிக்கும் எவரும் பூசாரி ஆகி விடுவார்கள்,” என 2023 நவம்பரில் மறைந்த செயற்பாட்டாளர், பாரியிடம் கூறினார்.
நந்தினியும் ஜெயராமும் மணம் முடித்த அன்று (மார்ச் 7, 2023), அந்த நிகழ்வு விரைவாக நடந்து விட்டது. தெய்வம் இறங்கியதாக கருதப்பட்ட இரு பெண்கள் அந்த எளிய நிகழ்வை ஆசிர்வதித்தனர். கடற்கரை முழுக்க பூசாரிகள் மணம் முடித்து வைக்கின்றனர், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகின்றனர், ஆசிர்வதிக்கின்றனர், அருள்வாக்கு தருகின்றனர்.
நீரை அம்மனாக கருதும் இருளர்கள் அவளை பிரார்த்திக்க வீட்டுக்குக் கொண்டு செல்கின்றனர். கடல் நீரை பிளாஸ்டிக் குடுவைகளில் கொண்டு சென்று, வீட்டை சுற்றி தெளிக்கின்றனர். பயணிக்க முடியாதவர்களுக்கும் கொடுக்கின்றனர்.
கடல் காற்றில்,தெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்ற பிறகு இருளர்கள் கூடாரத்தை கழற்றிக் கட்டுகின்றனர். புதுத் தம்பதியரான நந்தினியும் ஜெயராமும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். திருமண நினைவை மீட்டுருவாக்க இந்த வருடமும் (2024) திரும்பி வர திட்டமிட்டிருக்கின்றனர். “பீச்சுல சமைப்பாங்க, கடல்ல குளிப்பாங்க. சந்தோஷமா கொஞ்ச நாள் மகாபலிபுரத்தில் இருப்பாங்க,” என்கிறார் சரோஜா.
தமிழில்: ராஜசங்கீதன்.