இன்னமும் பிரான்சின் வாசனையை தாங்கியிருக்கிறது வைட் டவுன். சுற்றுலா பயணிகள் மிக விரும்பும் புதுச்சேரியின் சிறுநகரம். பிரெஞ்ச் மக்கள் தங்கியிருந்த பல விலாசமான வீடுகள் இப்போது ஹோட்டல்களாகவும், உணவகங்களாகவும் கலைக்கூடங்களாகவும் மாறியிருக்கின்றன. இன்னமும் கூட இங்கு சில பிரெஞ்ச் குடும்பங்கள் வசிப்பதை பார்க்க முடியும். வைட் டவுன் இப்போதும் பழைய அழகுடன் மிளிர்கிறது. புதுச்சேரியின் பிற பகுதிகளை விட சுத்தமாகவும் இருக்கிறது. வைட் டவுன் எப்படி அசுத்தமாக இருக்க முடியும்?
ஆனால் இந்த தூய்மைக்குப் பின்னால், இதன் அழகுக்கு பின்னால் பல துப்புரவு பணியாளர்களின் மிக கடின உழைப்பு இருக்கிறது. அவர்களுடன் துணை நிலை ஆளுனர் கிரண் பேடி மகளிர் தினத்தை கொண்டாடியிருக்கிறார். ஆனால் அந்த கொண்டாட்டங்கள் அவர்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்ததில்லை. அந்த பெண்கள் இரவு முழுவதும் அமைதியாக தெருக்களை பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுநாள் வரப்போகும் சுற்றுலாப்பயணிகளுக்காக வைட் டவுனை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரவு வாழ்க்கை என்பதற்கு இவர்களைப் பொருத்தவரையில் வேறு பொருள். வீதிகளில் வேலை பார்ப்பதும், குப்பைகளை அள்ளுவதும், நகரை சுத்தமாக வைத்திருப்பதும்தான் அது.
அவர்கள் புதுச்சேரி நகராட்சியின் நேரடிப் பணியாளர்கள் இல்லை. இது போன்ற வேலைகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இந்த புகைப்படங்களில் இருக்கும் பெண்கள் ஒப்பந்த பணியாளர்கள். அவர்களைப் போல கிட்டத்தட்ட ஆயிரம் பேர் புதுச்சேரி முழுவதும் வேலை செய்கிறார்கள். மாத சம்பளம் சுமார் 6200. மூன்று ஷிஃப்ட்களில் வேலை செய்கிறார்கள் இந்த பெண்கள். ஆனால் புகைப்படங்களில் இருக்கும் இந்த பெண்களுக்கு பெரும்பாலும் இரவுப்பணிதான்.
புதுச்சேரியில் ஒரு படப்பிடிப்புக்காக சென்ற போதுதான் அவர்களை பார்த்தேன். தூக்கமில்லாத ஒரு பின்னிரவில் அவர்கள் என் கவனத்தை கவர்ந்தார்கள். நான் அங்கு தங்கியிருந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் அவர்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அத்தனை பெரிய நகரத்தை சுத்தம் செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பிரமிக்க வைத்தன. ஆனால் அந்த வேலையை அவர்கள் செய்ய நிர்பந்திக்கும் சமூக வாழ்நிலை சிந்திக்க வைத்தது. அந்த இரவுகளில் அவர்களை தொந்திரவு செய்யாமல் பின் தொடர்ந்து அவர்களது வாழ்க்கையை ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்தியாவில் பொதுவாக பெண்களுக்கு இரவுகள் இப்போதெல்லாம் பாதுகாப்பாக இருப்பதில்லை. ஆனால் எந்தவொரு துளி பாதுகாப்பும் இல்லாமல் இந்த துப்புரவு பணியாளர்கள் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் அவர்களது பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.