தீபா மருத்துவமனையிலிருந்து கிளம்பியபோது காப்பர் டி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்திருக்கவில்லை.
சமீபத்தில்தான் அவர் இரண்டாவது குழந்தை பெற்றிருந்தார். ஆண் குழந்தை. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினார். ஆனால் சிசேரியன் அறுவை சிகிச்சையில்தான் பிரசவம் நடந்திருந்தது. “ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சைகளை செய்ய முடியாதென மருத்துவர் கூறினார்,” என்கிறார் தீபா.
மருத்துவர் காப்பர் டி பரிந்துரைத்தார். தீபாவும் அவரின் கணவர் நவீனும் (உண்மையான பெயர்கள் இல்லை) அது வெறும் யோசனை என மட்டுமே நினைத்தனர்.
மே 2018-ல் நடந்த பிரசவத்துக்கு பிறகு நான்கு நாட்கள் கழித்து தில்லியின் அரசு மருத்துவமனையிலிருந்து கிளம்பினார் 21 வயது தீபா. “மருத்துவர் காப்பர் டி பொருத்தியது எங்கள் இருவருக்கும் தெரியாது,” என்கிறார் நவீன்.
ஒரு வாரம் கழித்து, சமூக சுகாதார ஊழியர் ஒருவர் தீபாவின் மருத்துவமனை அறிக்கையை படித்தபோதுதான் உண்மை தெரிய வந்தது. தீபாவும் நவீனும் அதுவரை அந்த அறிக்கையை படித்திருக்கவில்லை.
காப்பர் டி சாதனம், கர்ப்பம் தரிப்பதை தடுப்பதற்கென கருப்பைக்குள் பொருத்தப்படும் சாதனம் ஆகும். “சரியாக பொருந்த மூன்று மாதங்கள் ஆகலாம். சிலருக்கு அசவுகரியும் கொடுக்கவும் கூடும். இதனால்தான் நாங்கள் தொடர் பரிசோதனைகளுக்கு (ஆறு மாதங்களுக்கு) நோயாளிகளை வரச் சொல்கிறோம்,” என்கிறார் 36 வயது சமூக சுகாதார ஊழியரான சுஷிலா தேவி. தீபா வசிக்கும் பகுதியில் 2013ம் ஆண்டிலிருந்து அவர் பணிபுரிந்து வருகிறார்.
ஆனால் முதல் மூன்று மாதங்களுக்கு எந்தவித அசவுகரியத்தையும் தீபா உணரவில்லை. நோயுற்றிருந்த மூத்த மகனை கவனித்துக் கொண்டதால் மருத்துவ பரிசோதனைகளுக்கும் அவர் செல்லவில்லை. கருத்தடை சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்துவதென முடிவெடுத்துக் கொண்டார்.
சரியாக இரண்டு வருடங்கள் கழித்து மே 2020-ல் தீபாவின் மாதவிடாய் நேரத்தில் பிரச்சினைகள் தொடங்கின. கடுமையான வலி ஆரம்பித்தது.
நாட்கணக்கில் வலி தொடர்ந்ததால் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தில்லியின் பக்கர்வாலா பகுதியில் இருக்கும் மருத்துவ மையத்துக்கு அவர் நடந்து சென்றார். “அங்கிருந்த மருத்துவர், வலி நிவாரணிக்கு சில மருந்துகள் கொடுத்தார்,” என்கிறார் தீபா. ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மையத்தில் அவர் மருத்துவ ஆலோசனை பெற்றார். “என்னுடைய நிலை முன்னேறாததால், இன்னொரு மையத்திலிருந்து ஒரு பெண் மருத்துவரை சந்திக்குமாறு என்னிடம் சொன்னார்,” என்கிறார் அவர்.
தீபா சென்ற முதல் மையத்தில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் அஷோக் ஹன்ஸ்ஸிடம் பேசிய போது அவருக்கு சம்பவம் நினைவிலில்லை. ஒருநாளுக்கு 200 நோயாளிகளை சந்திப்பவர் அவர். “அத்தகைய ஒருவர் வந்தால் நாங்கள் சிகிச்சை கொடுப்போம்,” என்கிறார் அவர். “(காலம் தவறும்) மாதவிடாய் பிரச்சினையாக இருந்தால் மட்டுமே சரிபடுத்த முயற்சிப்போம். மற்ற விஷயங்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் அரசு மருத்துவமனைகளை பரிந்துரைப்போம்.”
“அவர் இங்கு வந்தபோது மாதவிடாய் தவறுவதாக மட்டும்தான் சொன்னார். அதை வைத்து அவருக்கு இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை நான் கொடுத்தேன்,” என்கிறார் இரண்டாம் மருத்துவ மையத்தின் மருத்துவர் அம்ருதா நாடார். “காப்பர் டி பயன்படுத்துவதை பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை. அவர் சொல்லியிருந்தால் அல்ட்ராசவுண்ட் மூலம் அதை கண்டுபிடிக்க முயன்றிருப்போம். முந்தைய அல்ட்ராசவுண்ட் அறிக்கையை மட்டும் அவர் காட்டினார். அதில் எல்லாமும் சரியாக இருந்தது.” ஆனால் தீபாவோ காப்பர் டி பொருத்தப்பட்டிருக்கும் விஷயத்தை மருத்துவரிடம் சொன்னதாக கூறுகிறார்.
மே 2020ல் முதல் முறை வலி வந்த பிறகு அவரின் பிரச்சினைகள் அதிகரித்தன. “அந்த மாதவிடாய் ஐந்து நாட்களில் முடிந்தது. வழக்கமானதாக இருந்தது,” என்கிறார் அவர். “ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் இயல்பை காட்டிலும் அதிகமாக ரத்தம் கசியத் தொடங்கியது. ஜூன் மாதத்தில் நான் 10 நாட்கள் மாதவிடாயில் இருந்தேன். அடுத்த மாதம் அது 15 நாட்களானது. ஆகஸ்ட் 12-லிருந்து ஒரு மாதத்துக்கு அதிகரித்து விட்டது.”
மேற்கு தில்லியின் நங்க்லோய் நஜஃப்கர் சாலை இருக்கும் இரு அறை கொண்ட சிமெண்ட் வீட்டில் ஒரு மரக்கட்டிலில் அமர்ந்திருக்கும் தீபா சொல்கையில், “அந்த நாட்களில் என்னால் நகரவே முடியாது. நடக்கக் கூட சிரமப்படுவேன். தலைசுற்றியது. படுத்தே கிடப்பேன். எந்த வேலையும் செய்ய முடியவில்லை. சில சமயம் அடிவயிற்றில் தீவிர வலி ஏற்படும். பல நேரங்களில் ஒரு நாளிலேயே நான்கு தடவை துணி மாற்ற வேண்டியிருக்கும். ஏனெனில் உதிரப்போக்கால் அது முழுமையாக நனைந்திருக்கும். படுக்கைகள் கூட பாதிப்படைந்திருக்கின்றன.”
2020ம் ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிறு பக்கர்வாலா மையத்துக்கு இருமுறை தீபா சென்றார். இருமுறையும் அங்கிருந்த மருத்துவர்கள் மாத்திரைகளே கொடுத்தனர். “மாதவிடாய் தவறும் நோயாளிகளிடம் மாத்திரைகளை கொடுத்துவிட்டு ஒரு மாதத்துக்கு அவர்களின் மாதவிடாயை கண்காணிக்கச் சொல்வோம். இந்த மையங்களில் எங்களால் அடிப்படையான சிகிச்சையை மட்டுமே வழங்க முடியும். மேலதிக பரிசோதனைக்கு அரசு மருத்துமனையில் இருக்கும் மகளிர் நோய்ப் பிரிவுக்கு செல்ல பரிந்துரைத்தேன்,” என்கிறார் மருத்துவர் அம்ருதா.
பிறகு தீபா, 12 கிலோமீட்டர் தொலைவில் இருந்த குரு கோபிந்த் சிங் மருத்துவமனைக்கு 2020 ஆகஸ்டு மாதத்தின் நடுவே சென்றார். அங்கிருந்த மருத்துவர் பரிசோதித்ததில் ‘மிகை மாதவிடாய்’ நோய் அவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நோயில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். அதிக நாட்களுக்கு நீடிக்கும்.
“அந்த மருத்துவமனையில் இருந்த மகளிர் பிரிவுக்கு இருமுறை நான் சென்றேன்,” என்கிறார் தீபா. “ஒவ்வொரு முறையும் அவர்கள் இரு வாரங்களுக்கு மாத்திரைகள் கொடுத்தனர். ஆனாலும் வலி நிற்கவில்லை.”
தற்போது 24 வயதாகியிருக்கும் தீபா தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் இளங்கலை படிப்பு முடித்தவர். பிகாரின் முசாபர்பூரிலிருந்து வேலை தேடி தில்லிக்கு பெற்றோர் இடம்பெயர்ந்தபோது அவருக்கு மூன்று வயது கூட ஆகியிருக்கவில்லை. அவரின் தந்தை ஓர் அச்சகத்தில் பணிபுரிந்தார். தற்போது சிறு ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார்.
29 வயது கணவர் நவீன் இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தை சேர்ந்தவர். ஊரடங்கு தொடங்குவதற்கு முன் வரை தில்லியில் பள்ளிப் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார்.
அக்டோபர் 2015-ல் இருவருக்கும் திருமணம் முடிந்தது. விரைவிலேயே தீபா கர்ப்பம் தரித்து முதல் மகனை பெற்றெடுத்தார். குடும்பத்தின் பொருளாதாரத்தை கருதி ஒரு குழந்தையுடன் நிறுத்த அவர் விரும்பினார். அவரின் மகனோ இரண்டு மாதங்களிலிருந்தே நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.
“அவனுக்கு தொடர் இரட்டை நிமோனியா இருக்கிறது. அவனுடைய சிகிச்சைக்காக மருத்துவர் கேட்ட தொகை என்னவாக இருந்தாலும் நாங்கள் யோசிக்காமல் கொடுத்த நாட்கள் இருக்கின்றன,” என்கிறார் அவர். “ஒரு மருத்துவர், அவனுடைய நிலைக்கு, அவன் உயிர் வாழ்வது கஷ்டம் என்றார். அதற்கு பிறகுதான் எங்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்னொரு குழந்தையை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தத் தொடங்கினார்கள்.”
திருமணத்துக்கு முன் சில மாதங்களுக்கு தீபா ஒரு தனியார் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து மாதத்துக்கு 5000 ரூபாய் வருமானம் ஈட்டினார். ஆசிரியப் பணியை தொடரும் அவரின் திட்டம் அவரின் மகனுக்கு இருந்த நோயால் தடைபட்டது.
அவரின் மகனுக்கு தற்போது ஐந்து வயது. மத்திய தில்லியின் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் இலவச சிகிச்சை அவருக்கு அளிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவரை தீபா பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். சில நேரங்களில் அவரின் சகோதரர் இரு சக்கர வாகனத்தில் அவர்களை அழைத்துச் செல்வார்.
அது போல் செப்டம்பர் 3, 2020ல் மருத்துவமனைக்கு செல்லும்போதுதான் அங்கிருக்கும் மகளிர் பிரிவுக்கு சென்று பார்க்க முடிவெடுத்தார் அவர். பல மருத்துவமனைகளுக்கும் சென்று தீர்க்கப்படாத பிரச்சினைக்கு அங்கு என்ன சொல்கிறார்கள் என பார்க்க நினைத்தார்.
“தொடர் வலிக்கு காரணம் கண்டுபிடிக்க அல்ட்ராசவுண்ட் எடுக்கப்பட்டது. ஆனால் ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்கிறார் தீபா. “காப்பர் டி கண்டுபிடிக்கவும் மருத்துவர் முயன்றார். அதற்கான நூலை அவரால் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரும் பிறகு மருந்துகள் எழுதிக் கொடுத்து, 2-3 மாதங்களில் மீண்டும் வரச் சொன்னார்.”
அளவுக்கதிகமான உதிரப்போக்குக்கான காரணம் தெரியாததால் செப்டம்பர் 4ம் தேதி மீண்டும் தீபா ஒரு மருத்துவரிடம் சென்றார். அவர் வசித்த பகுதியில் இருந்த சிறு தனியார் மருத்துவ மையத்துக்கு சென்றார். “அதிகமான உதிரப்போக்கை எப்படி சமாளிக்கிறேனென மருத்துவர் கேட்டார். அவரும் காப்பர் டி கண்டுபிடிக்க முயன்று தோற்றார்,” என்கிறார் தீபா. 250 ரூபாய் கட்டணம் செலுத்தினார். அதே நாளில் ஒரு குடும்ப உறுப்பினரின் யோசனையின்படி 300 ரூபாய் கட்டணத்தில் அடிவயிற்று எலும்புப் பகுதி எக்ஸ்ரே எடுத்தார்.
‘காப்பர் டி அடிவயிற்று எலும்புப் பகுதியின் பாதியில் இருக்கிறது’ என அறிக்கை குறிப்பிட்டது.
“பிரசவம் செய்தவுடனே காப்பர் டி பொருத்தப்பட்டிருந்தால் அது அசைவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருந்திருக்கும்,” என விளக்குகிறார் மேற்கு தில்லியை சேர்ந்த மகளிர் மருத்துவர் ஜோத்ஸ்னா குப்தா. “ஏனெனில் அச்சமயத்தில் கருப்பையின் துளை அகலமாகி விடும். மீண்டும் இயல்பான அளவை அடைய காலம் எடுக்கும். இயல்பு அளவை அடையும் காலகட்டத்தில் பொருத்தப்பட்ட காப்பர் டி, அதனுடைய கோணத்தை மாற்றியிருக்கும். மேலும் அசையத் தொடங்கியிருக்கும். பெண்ணுக்கு மாதவிடாய் நேரத்தில் கடும் வலி ஏற்பட்டால், அது இடம் மாறியிருக்கும் வாய்ப்பு கூட உண்டு.”
இத்தகைய புகார்கள் வழக்கமானவைதான் என்கிறார் சுகாதார ஊழியர் சுஷிலா தேவி. “காப்பர் டி பற்றி பல பெண்கள் புகார் செய்திருக்கின்றனர்,” என்கிறார் அவர். “பல நேரங்களில், ‘வயிற்றுக்கு அது சென்றுவிட்டதாக’ சொல்லி அதை அகற்ற விரும்புவதாக சொல்வார்கள்.”
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 4 (2015-16)-ன்படி வெறும் 1.5 சதவிகித பெண்கள்தான் கருப்பைக்குள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்களை விரும்புகின்றனர். 15-49 வயதுகளில் இருக்கும் பெண்களில் 36 சதவிகிதம் பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையையே விரும்புகிறார்கள்.
“காப்பர் டி எல்லா பெண்களுக்குமானதல்ல என்றும் அது பிரச்சினைகளை உருவாக்கலாம் என்றும் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறென்,” என்கிறார் தீபா. “ஆனால் இரு வருடங்களுக்கு எனக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.”
பல மாதங்களாக வலியிலும் அதிக உதிரப்போக்கிலும் போராடிக் கொண்டிருந்த தீபா, கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் வட மேற்கு தில்லியில் இருக்கும் பீதாம்புரத்தின் பகவான் மகாவீர் மருத்துவமனைக்கு செல்வதென முடிவெடுத்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஓர் உறவினர் அங்கிருக்கும் மருத்துவரை, கோவிட் பரிசோதனை செய்துவிட்டு, சந்திக்குமாறு யோசனை கூறியிருந்தார். எனவே செப்டம்பர் 7, 2020-ல் வீட்டருகே இருந்த மருந்தகத்தில் அவர் பரிசோதனை செய்து கொண்டார்.
தொற்று உறுதியானது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தனிமை சிகிச்சையில் இருந்தார். தொற்று சரியாகும் வரை, காப்பர் டி அப்புறப்படுத்த மருத்துவமனைக்கு அவரால் செல்ல முடியவில்லை.
தேசிய ஊரடங்கு மார்ச் 2020-ல் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் அடைக்கப்பட்டதும் அவரின் கணவர் நவீனின் பள்ளி பேருந்து நடத்துனர் பணி நின்றது. 7000 ரூபாய் சம்பளமும் நின்றது. ஐந்து மாதங்கள் வரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. பிறகு உணவு சமைப்போருக்கு உதவியாக அவ்வப்போது பணிபுரிந்து நாட்கூலியாக 500 ரூபாய் பெற்றார். (ஆகஸ்ட் 2021-ல்தான் பக்கர்வாலா பகுதியிலிருக்கும் சிலை செய்யும் ஆலை ஒன்றில் 5000 ரூபாய் ஊதியப் பணி அவருக்குக் கிடைத்தது.)
செப்டம்பர் 25ம் தேதி தீபாவுக்கு தொற்று இல்லை என உறுதியானதும் பகவான் மகாவீர் மருத்துவமனைக்கு சென்றார். ஓர் உறவினர், அவரது எக்ஸ்ரேவை அங்கிருக்கும் மருத்துவரிடம் சென்று காட்டினார். அதற்கு அந்த மருத்துவமனையில் காப்பர் டி எடுக்கமுடியாதென கூறப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மே 2018-ல் காப்பர் டி பொருத்திய தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கே திரும்பச் செல்லுமாறு கூறினார்கள்.
அக்டோபர் 2020-ன் முதல் வாரத்தை, அந்த மருத்துவமனையின் மகளிர் நோய் பிரிவுக்கு செல்வதில் கழித்தார் தீபா. “காப்பர் டி-யை வெளியே எடுக்கும்படி மருத்துவரிடம் கேட்டேன். அதற்கு பதிலாக அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டோர். கோவிட் தொற்றால் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்வதில்லை எனக் கூறிவிட்டார்,” என அவர் நினைவுகூர்கிறார்.
மீண்டும் அத்தகைய சிகிச்சைகள் தொடங்கப்பட்ட பிறகு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும்போது காப்பர் டி எடுத்துவிடலாம் என அவரிடம் சொல்லி இருக்கின்றனர்.
அதிக மருந்துகள் கொடுக்கப்பட்டன. “ஏதேனும் பிரச்சினை இருந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனாலும் அப்பிரச்சினையை மாத்திரைகள் கொண்டுதான் சரி செய்வோம் என்றார் மருத்துவர்,” என்கிறார் கடந்த அக்டோபரில் தீபா என்னிடம் பேசும்போது.
(இச்செய்தியாளர், தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மகளிர் நோய்க்கான புறநோயாளிகள் பிரிவின் தலைவரிடம் பேச நவம்பர் 2020-ல் சென்றார். அன்று அந்த மருத்துவர் பணியில் இல்லை. பணியிலிருந்த இன்னொரு மருத்துவர் மருத்துவமனையின் இயக்குநரிடம் அனுமதி பெறச் சொல்லி ஆலோசனை கூறினார். நானும் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் பலனில்லை.)
‘காப்பர் டி-யை எடுக்க ஏதேனும் உபகரணங்களை பயன்படுத்தினாரா என தெரியவில்லை… ‘ஒருவேளை காப்பர் டி எடுக்காமல் விட்டிருந்தால் என் உயிர் போயிருக்கும் என்றார் மருத்துவச்சி’
“எல்லா அரசு மருத்துவமனைகளின் கவனமும் தொற்று சமாளிப்பதில் திரும்பியதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது,” என்கிறார் குடும்ப நலவாழ்வு இயக்குநரகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி. “சில மருத்துவமனைகள் கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டதால், குடும்பக் கட்டுப்பாடு போன்ற வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை போன்றவை பெருமளவில் பாதிப்படைந்தன. அதே நேரத்தில், தற்காலிக முறைகளின் பயன்பாடும் அதிகரித்தன. எங்களால் முடிந்தவரை இந்த சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.”
”குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகள் கடந்த வருடத்தில் அதிக நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் பலருக்கு சேவைகள் மறுக்கப்பட்டன,” என்கிறார் இந்தியாவின் இனவிருத்தி சுகாதார சேவைகள் அறக்கட்டளையின் இயக்குநரான ரஷ்மி ஆர்டே. “தற்போது இத்தகைய சேவைகளை பெறுவதற்கென அரசு விதிமுறைகள் வகுத்திருக்கும் நிலையில் மொத்த சூழலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கிறது. எனினும் தொற்றுக்கு முன்பிருந்த அளவுக்கு இச்சேவைகளின் செயல்பாடு முழுமையடையவில்லை. பெண்களின் ஆரோக்கியத்தில் இது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.”
தன்னுடைய பிரச்சினைக்கு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கடந்த வருடத்தின் அக்டோபர் 10ம் தேதி வீட்டருகே இருக்கும் ஒரு மருத்துவச்சியிடம் சென்றார் தீபா. அவர் 300 ரூபாய் வாங்கிக் கொண்டு காப்பர் டி-யை அகற்றினார்.
“அவர் ஏதேனும் உபகரணம் பயன்படுத்தினாரா என தெரியவில்லை. பயன்படுத்தியிருக்கலாம். நான் படுத்திருந்தேன். மருத்துவம் படிக்கும் அவரது மகளின் உதவியை அவர் எடுத்துக் கொண்டார். மொத்தமாக அவர்களுக்கு 45 நிமிடங்கள் பிடித்தன,” என்கிறார் அவர். “அடுத்த சில மாதங்களுக்கு நான் தாமதித்திருந்தாலும் என் உயிர் போயிருக்கும் எனக் கூறினார் மருத்துவச்சி,” என்கிறார் அவர்.
காப்பர் டி அகற்றப்பட்ட பிறகு தீபாவின் காலம் தவறிய மாதவிடாயும் வலியும் நின்றுவிட்டது.
வெவ்வேறு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவற்றின் ரசீதுகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை அடுக்கி வைத்துக் கொண்டே செப்டம்பர் 2020ல் என்னிடம் சொன்னார்: “இந்த ஐந்து மாதங்களில் நான் ஏழுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் சென்று விட்டேன்.” அவருக்கும் நவீனுக்கும் வேலையில்லாத நிலையில் அதிகமாக பணம் செலவாகியிருக்கிறது.
இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என உறுதியாக இருக்கிறார் தீபா. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறார். குடியியல் பணிகளுக்கான தேர்வு எழுத விரும்புகிறார். “விண்ணப்ப படிவம் வாங்கி விட்டேன்,” என்னும் அவர் குடும்பத்துக்கு பக்கபலமாக நிற்கும் அவரின் திட்டங்களை செயல்படுத்தும் நம்பிக்கையில் இருக்கிறார். தொற்றினாலும் காப்பர் டி-யாலும் அவை தடைபட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.
கிராமப்புற பதின்வயது பெண்கள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய PARI மற்றும் CounterMedia அறக்கட்டளையின் தேசிய அளவில் செய்தியளிக்கும் திட்டம், விளிம்புநிலையில் வாழும் முக்கியமான குழுக்களின் வாழ்க்கைகளை அவர்களின் அனுபவங்கள் கொண்டே ஆராயும் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய [email protected] மற்றும் [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.
தமிழில் : ராஜசங்கீதன்