“எங்கள் முன்னோர்களின் ஆன்மாக்கள் இங்கு வசிக்கின்றன,” என்கிறார் மோஞ்சித் ரிசாங், சமையலறையின் நடுவே ஒரு கனமான மண் தளத்தை சுட்டிக் காட்டி. கூரையும் சுவர்களும் தரையும் அங்கு மூங்கிலால் செய்யப்பட்டிருந்தன.

வெளிறிய செவ்வக வடிவம் ஒரு அடி உயரம் இருந்தது. அதன் மேல் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குதான் உணவு சமைக்கப்படும். ”மேரோம் என அதற்கு பெயர். எங்களின் வழிபாட்டு அரங்கம் அதுதான். மைசிங் சமூகத்தில் முக்கியமான விஷயம் அது,” என்கிறார் அவர்.

மோஞ்சித் மற்றும் அவரது மனைவி நாயன்மோனி ரிசாங் ஆகியோர் மைசிங் வகை உணவுகள் கொண்ட விருந்தை இன்று இரவு அளிக்கின்றனர். இருவரும் மைசிங் (அசாமின் பட்டியல் பழங்குடி) சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் சேர்ந்து அசாமின் மஜுலி ஆற்றுத்தீவின் டவுனான கராமுரிலுள்ள வீட்டில் ரிசாங் கிச்சன் உணவகத்தை நடத்துகின்றனர்.

பிரம்மபுத்திராவின் 352 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் மஜுலி, இந்தியாவின் பெரும் ஆற்றுத் தீவாகும். முடிவிலா பசுமையான நெல்வயல்களும் சிறு ஏரிகளும் காட்டு மூங்கில் மற்றும் புதர்களும் நிறைந்த பரப்பை கொண்ட தீவு அது. கடும் மழைகளையும் வெள்ளத்தையும் தாங்கிக் கொள்ள வீடுகள் கழிகள் மீது அமைக்கப்பட்ட தளத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. நாரை, மீன்கொத்தி மற்றும் தாழைக் கோழி போன்ற புலம்பெயர் பறவைகளுக்கும் அத்தீவு பெயர் பெற்றது. வருடந்தோறும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாவாசிகளை இந்த அழகான தீவு ஈர்ப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.

Monjit and his wife, Nayanmoni Risong, sitting next to the marom . The parap is the scaffolding on top of the marom that is used to store wood and dried fish during the monsoons
PHOTO • Vishaka George

மோஞ்சித்தும் அவரது மனைவி நாயன்மோனி ரிசாங்கும் மேரோமுக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கின்றனர். மேரோமுக்கு மேலே இருக்கும் பாரப் என்கிற சாரம், மழைக்காலங்களில் விறகுகளையும் கருவாடுகளையும் சேமிக்க பயன்படுகிறது

Majuli's paddy fields rely on the waters of the Brahmaputra
PHOTO • Vishaka George

மஜுலியின் நெல்வயல்கள் பிரம்மபுத்திராவின் நீரை சார்ந்து இருக்கின்றன

43 வயது மோஞ்சித் மற்றும் 35 வயது நாயன்மோனி ஆகியோரின் வாழ்க்கைகள் சுற்றுலா வணிகத்தை சார்ந்து இருக்கிறது. ரைசிங், லா மைசன் டெ அனந்தா மற்றும் எஞ்சாண்டட் மஜுலி ஆகிய வசிப்பிடங்களை நடத்த அவர்கள் உதவுகின்றனர். ரிசாங் கிச்சனின் மூங்கில் சுவரில், உலகின் பல்வேறு நாட்டு கரன்சிகள் ஃப்ரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கிறது.

ரிசாங்கில் சாப்பிடுவது அற்புதமான அனுபவம். அங்கு சமையலறைக்கும் உணவு உண்ணும் பகுதிக்கும் இடையே உள்ள தடை கிடையாது. பெரும்பாலான உணவு சமைக்கப்படும் மேரோமை சுற்றி உரையாடல்கள் நடக்கும். விறகடுப்பு புகை இருந்தாலும், காற்றோட்டம் உள்ள வகையில் உணவகம் வடிவமைக்கப்பட்டிருப்பதால் புழுக்கம் ஏற்படுவதில்லை.

மீனின் சதையை சேர்த்து, சிக்கன் வெட்டி, விலாங்கு மீன், கீரை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் அரிசி ஆகியவற்றை தயார் செய்தபடியே நாயன்மோனி, “இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்ற பல மசாலா பொருட்களை மைசிங் மக்கள் சமையலில் பயன்படுத்துவார்கள். நாங்கள் அதிக மசாலா சாப்பிடுவதில்லை. எங்களின் உணவை அவித்து சாப்பிடுவோம்,” என்கிறார்.

சில நிமிடங்களில் அவர் சில பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்தபடி, விறகடுப்பில் உள்ள பாத்திரத்தில் உள்ளவற்றை கலக்கத் தொடங்குகிறார். மூலிகை மற்றும் மசாலா ஆகியவற்றின் நறுமணம் மெல்ல சமையலறையில் பரவத் தொடங்குகிறது.

உணவு சமைக்கப்படும்போது, அபோங் மது பித்தளை தம்ளர்களில் கொண்டு வரப்படுகிறது. பாரம்பரிய மைசிங் பானமான அபோங் சற்று இனிப்பாகவும் மசாலாவின் லேசான ருசியும் கொண்டது. ஒவ்வொரு மைசிங் வீட்டுக்கும் தனித்துவமான ஒரு அபோங் தயாரிப்பு முறை உண்டு. இந்த பானம் மோஞ்சித்தின் மனைவியின் சகோதரி ஜுனாலி ரிசாங்கிடமிருந்து வருகிறது. பக்கத்து வீட்டில் வாழ்கிறார் அவர். இந்த பானத்தின் தனித்துவம் குறித்தும் அது தயாரிக்கப்படும் முறை குறித்தும் தெரிந்து கொள்ள: மஜுலியில் சாராயம் தயாரித்தல்

Left: Chopped eel that will be steamed.
PHOTO • Riya Behl
Fish cut and cleaned for a ghetiya curry
PHOTO • Vishaka George

இடது: அவிக்கப்படுவதற்காக வெட்டப்பட்ட விலாங்கு. வலது: கெட்டியா குழம்பு தயாரிக்க மீன் வெட்டப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது

Apong beer
PHOTO • Vishaka George
Nayanmoni cutting and cleaning
PHOTO • Vishaka George

இடது: அபோங் மது. வலது: வெட்டி சுத்தப்படுத்தும் நாயன்மோனி

உரித்தல், வெட்டுதல் மற்றும் கலக்குதல் ஆகியவற்றுக்கு இடையே நாயன்மோனி விறகடுப்பையும் பார்த்துக் கொள்கிறார். அவ்வப்போது அதன் சூடு தணியாமல் இருக்கும் வகையில் கிளறி விடுகிறார். சிக்கன் துண்டுகள் கம்பியில் செருகப்பட்டு வாட்டப்பட தயாராக இருக்கின்றன.

நாயன்மோனி பார்க்கும் திசைக்கு நம் கவனமும் செல்கிறது. மேரோமுக்கு மேலே பராப் என்ற சாரம் அங்கு இருக்கிறது. விறகு மற்றும் மீன் சேமித்து வைப்பதற்கான இடம் அது.

“ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அச்சமயத்தில் மீன் இனப்பெருக்கம் செய்யும். நாங்கள் அதிகம் மீன் பிடிக்க விரும்புவதில்லை,” என்கிறார் மோஞ்சித்.

சமையலறையும் உணவு உண்ணும் அறையும் ஒன்றாக இருக்கும் வடிவமைப்பு, சங் கர் என்னும் மைசிங் பாரம்பரிய வடிவம் ஆகும். தரையிலிருந்து இரண்டடிக்கு சிமெண்ட் மற்றும் மூங்கில் தூண்களால் அது உயர்த்தப்பட்டிருக்கும். தரையில் இடைவெளிகள் இருக்கும். வெள்ளம் வந்தால் வெளியேற்றுவதற்கான வழிமுறை அது.

வெள்ளக்காலங்களில் உணவுமுறை மாறும் என்கிறார் மோஞ்சித். “வெள்ளங்களால் குறைவான காய்கறிகளே அறுவடை செய்யப்படும். குளிர்காலம் அதிக காய்கறிகளுக்கு ஏதுவான காலம். அச்சமயத்தில் நாங்கள் நிறைய காய்கறிகள் சாப்பிடுவோம்.”

விறகடுப்பு தணிவடையும்போது மோஞ்சித் அதை சரிசெய்துவிட்டு, “என் தலையில் ஒரு சுமையை சுமந்து கொண்டு மலையில் கூட ஏற முடியும், ஆனால் சமைக்க முடியாது,” என்கிறார். காரணம் கேட்டபோது சிரித்துவிட்டு சொல்கிறார், “எனக்கு பிடிப்பதில்லை. மைசிங் சமூகத்தில் 99 சதவிகித உணவு பெண்களால்தான் சமைக்கப்படுகின்றன,” என்கிறார்.

சமூகக்குழுக்களின் வாய்மொழி மற்றும் எழுத்து வழியாக அச்சமூகங்களை ஆய்வு செய்யும் டாக்டர் ஜவஹரின் ஜோதி குலியின் Folk Literature of the Mising Community என்ற புத்தகத்தின்படி, பொதுவாக சமையல் வேலையை அங்கு பெண்களே எடுத்துக் கொள்கின்றனர். பிற வேலைகளை தாண்டி, மைசிங் பெண்கள் நெசவு மற்றும் சமையல் வேலைகளில் திறன் பெற்றவர்கள். சமையல் செய்ய பிடிக்காது என்றும் கட்டாயமென்றால் மட்டுமே சமைப்போம் எனவும் ஆண்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

At Risong’s Kitchen, a frame on a bamboo wall holds currencies from across the world.
PHOTO • Vishaka George
I can carry a load on my head up a mountain, but I simply cannot cook!' says Monjit
PHOTO • Vishaka George

இடது: உலகின் பல்வேறு கரன்சிகள் ஃப்ரேம் போட்டு படமாக ரிசாங் கிச்சன் உணவக மூங்கில் சுவரில். வலது: ‘ஒரு சுமையை என் தலையில் சுமந்து மலையேறிட கூட முடியும், ஆனால் என்னால் சமைக்க மட்டும் முடியாது’ என்கிறார் மோஞ்சித்

Smoked chicken skewers called kukura khorika
PHOTO • Vishaka George
Mising women like Nayanmoni are skilled in cooking and weaving
PHOTO • Vishaka George

இடது: தீயில் வாட்டப்பட்டு குச்சியில் செருகப்பட்டிருக்கும் குகுரா கோரிகா என்னும் சிக்கன் துண்டுகள். வலது: நாயன்மோனி போன்ற மைசிங் பெண்கள் சமையலிலும் நெசவிலும் திறன் பெற்றவர்கள்

எனினும் மோஞ்சித்தும் நாயன்மோனியும் தங்களுக்கு உவப்பான ஒரு முறையை கண்டறிந்திருக்கின்றனர். நாயன்மோனிதான் ரிசாங் கிச்சனின் ‘பாஸ்’ என்கிறார் மோஞ்சித். அவரோ வசிப்பிடத்துக்கு வரும் விருந்தாளிகளை பார்த்துக் கொள்கிறார். மாலை நெருங்குகையில் மோஞ்சித் வசிப்பிட விருந்தாளிகளை கவனிக்க அடிக்கடி வெளியே சென்று வருகிறார்.

*****

வகைவகையான உணவுகள் தயாரிப்பது கடினமான வேலை. அடுப்பிலும் விறகடுப்பிலும் பாத்திரம் விளக்கும் இடத்திலும் நாயன்மோனி இரண்டரை மணி நேரங்களுக்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கிறார். மேரோம் மீது சமைப்பது மிகவும் நேரம் எடுக்கும்.  ஆனால் விறகடுப்பின் மென்மையான வெளிச்சத்திலிருந்து புகை கிளம்ப உணவுகள் சமைக்கப்படுவதை பார்ப்பது ரசனைக்குரிய காட்சியாக வாடிக்கையாளர்களுக்கு இருக்கும்.

எத்தனை முறை இப்படி அவர் செய்கிறார்? “சில நேரங்களில் இந்த உணவை மாதமொரு முறை செய்வேன். சில நேரங்களில் செய்யவே மாட்டேன்.” கோவிட் தொற்றுக்கு முன் இதை அவர் அடிக்கடி செய்ததாக கூறுகிறார். 2007ம் ஆண்டு மணம் முடித்ததிலிருந்து 15 வருடங்களாக செய்து வருகிறார்.

“எனக்கு இது கண்டதும் காதல்,” என்கிறார் மோஞ்சித் விறகடுப்பை பார்த்து.

“சரி வேண்டாம். ஒரு 30 நிமிடங்கள் பிடித்திருக்கலாம்,” என மாற்றி சொல்கிறார் சிரித்தபடி.

அவருக்கு பக்கத்தில் மீன் வெட்டிக் கொண்டிருக்கும் நாயன்மோனி சிரித்தபடி அவரை செல்லமாக அடித்து, “30 நிமிடங்களாம்!,” என்கிறார்.

“அவர் சொல்வது சரிதான்!,” என்னும் மோஞ்சித் மேலும், “இரண்டு நாட்கள்தான் ஆனது. அதற்குப் பிறகு, ஆற்றுக்கருகே நாங்கள் ரகசியமாக சந்தித்தோம். அதெல்லாம் அற்புதமான நாட்கள்,” என்கிறார். இருவரும் முதன்முதலாக 20 வருடங்களுக்கு முன் சந்தித்தனர். இன்று அவர்களுக்கு ஒரு பதின்வயது மகள், பப்லியும் கைக்குழந்தை பார்பியும் இருக்கின்றனர்.

நாயன்மோனி சமைக்கும் கடைசி உணவான விலாங்கு மீன், இந்த பகுதியின் சிறப்பாகும். “பச்சை மூங்கிலில் விலாங்கு மீன் சமைப்பதுதான் எங்கள் வழக்கம். அப்போதுதான் அது அதிக ருசி கொண்டிருக்கும். இன்று பச்சை மூங்கில் இல்லாததால் வாழை இலையில் அதை வாட்டினோம்.”

Nayamoni smoking the eel in a banana leaf
PHOTO • Riya Behl
Fish curry, or ghetiya
PHOTO • Vishaka George

இடது: நாயன்மோனி வாழை இலையில் விலாங்கு மீனை வாட்டுகிறார். வலது: மீன் குழம்பு அல்லது கெட்டியா

Left: Nayanmoni prepping the thali that's almost ready to be served
PHOTO • Vishaka George
Right: A Mising thali being prepared
PHOTO • Vishaka George

இடது: நாயன்மோனி சமைத்த உணவு பரிமாறுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. வலது: ஒரு மைசிங் உணவு தயாரிக்கப்படுகிறது

எப்படி அவர் கற்றுக் கொண்டார்? “மோஞ்சித்தின் தாய் எனக்கு சமைக்கக் கற்றுக் கொடுத்தார்,” என்கிறார் அவர். தீப்தி ரிசான் வெளியூர் சென்றிருக்கிறார். பக்கத்து கிராமத்திலுள்ள அவரது மகளை பார்க்க சென்றிருக்கிறார்.

இறுதியில் இவ்வளவு நேரமும் காத்திருந்த நேரம் வந்துவிட்டது. அனைவரும் தங்களின் இருக்கைகளை எடுத்துக் கொண்டு நீண்ட மூங்கில் மேஜைக்கு வருகின்றனர்.

உணவுப் பட்டியலில் கெட்டியாவும் மீனும் உருளைக்கிழங்கு பொறியலும் வாழை இலையில் சுடப்பட்ட விலாங்கு மீனும், வறுக்கப்பட்ட கீரைகளும் சுடப்பட்ட சிக்கனும் கத்தரிக்காயும் வாழை இலைகள் போர்த்தப்பட்ட சாதமும் இருக்கின்றன. சுவையான குழம்புகளும் நுட்பமாக சுடப்பட்ட கறியும் சோறும்தான் இந்த உணவை ருசிகரமாக ஆக்குகிறது.

விலை ரூ.500

”இவ்வகை உணவை செய்வது மிகவும் கடினம்,” என்கிறார் சோர்வுற்ற நாயன்மோனி. மேலும் சொல்கையில், “சில நாட்களில் மதிய உணவுக்கு வரவிருக்கும் 35 பேருக்கு நான் சமைக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார்.

ஒரு முழுநாள் உழைப்புக்கு பிறகு அவர், ஜோர்ஹாட்டுக்கு செல்ல விரும்புகிறார். படகு பிடித்து ஆற்றை கடந்து அடைய வேண்டிய பெரிய நகரம் அது. அங்கு அவர் சென்று மூன்று வருடங்கள் ஆகிறது. காரணம் கோவிட் தோற்று. “ஜோர்ஹாட்டில் நான் பொருட்கள் வாங்குவேன். உணவகத்தில் வேறு யாரோ சமைத்த உணவை உண்ணுவேன்,” என்கிறார் புன்னகையோடு.

தமிழில் : ராஜசங்கீதன்

Vishaka George

وشاکھا جارج، پاری کی سینئر ایڈیٹر ہیں۔ وہ معاش اور ماحولیات سے متعلق امور پر رپورٹنگ کرتی ہیں۔ وشاکھا، پاری کے سوشل میڈیا سے جڑے کاموں کی سربراہ ہیں اور پاری ایجوکیشن ٹیم کی بھی رکن ہیں، جو دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب کا حصہ بنانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز وشاکا جارج
Editor : Priti David

پریتی ڈیوڈ، پاری کی ایگزیکٹو ایڈیٹر ہیں۔ وہ جنگلات، آدیواسیوں اور معاش جیسے موضوعات پر لکھتی ہیں۔ پریتی، پاری کے ’ایجوکیشن‘ والے حصہ کی سربراہ بھی ہیں اور دیہی علاقوں کے مسائل کو کلاس روم اور نصاب تک پہنچانے کے لیے اسکولوں اور کالجوں کے ساتھ مل کر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Priti David
Photo Editor : Binaifer Bharucha

بنائیفر بھروچا، ممبئی کی ایک فری لانس فوٹوگرافر ہیں، اور پیپلز آرکائیو آف رورل انڈیا میں بطور فوٹو ایڈیٹر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز بنیفر بھروچا
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan