நெட்டிச் [ Aeschynomene aspera L. ] செடியின் தக்கையைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கிறேன். மென்மையான, இலகுவான இந்த தக்கையில் இருந்து பலவிதமான வடிவங்களை, உருவங்களை வெட்டியெடுக்க முடியும். இதை ஒடிஷாவில் ‘ஷோலாபித் காமா’ (தக்கை வேலைப்பாடு) என்று குறிப்பிடுகிறோம்.
ஒடிசி நடனக் கலைஞர்கள் மேடையில் ஆடும்போது தலையில் அணியும் தஹியா என்ற அணிகலனை இந்த தக்கையில் இருந்து செய்வேன். நெட்டி தக்கையில் இருந்து நெக்லேஸ், தசராவுக்கான பூவேலைப்பாடுகள் உள்ளிட்டவற்றை நான் செய்தபோதிலும், நான் செய்யும் தஹியா அணிகலன் மிகவும் பிரபலம்.
பிளாஸ்டிக்கில் கூட தஹியாக்கள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றை அணிந்து ஆடும்போது நடனக் கலைஞர்களின் தலையில் உறுத்தும். இதனால், அவற்றை நீண்ட நேரம் அணிவது சிரமம். அதைப் போல பிளாஸ்டிக்கில் பலவிதமான வடிவங்களில் தஹியாக்களை செய்ய முடியாது.
தஹியா செய்யும் வேலையில் இருந்த பல கைவினைஞர்கள் அந்த வேலையை விட்டுவிட்டார்கள். ஆனால், எனக்கு நான் செய்யும் வேலை பிடித்திருக்கிறது.
செவ்வியல் ஒடிசி நடனக் கலைஞர்கள் தலையில் அணியும் பூக்களுக்குப் பதிலாக இந்த தக்கையில் இருந்து தஹியா செய்யும் யோசனையை முன்வைத்தவர் சிறப்பு மிக்க ஒடிசி நடனக் கலைஞர் கேலுசரண் மொகாபத்ராவின் நண்பர் காசி மொகாபத்ராதான். இதற்கான வடிவமைப்பை நான் உருவாக்கினேன்.
தஹியா செய்வதற்கு நெட்டி தக்கைகளைத் தவிர, உறுதியான பருத்தித் துணி, அளவைக் கம்பி, ஃபெவிகால், கறுப்பு நூல், சுண்ணாம்புக் கல், கறுப்பு மற்றும் பச்சை வண்ணக் காகிதங்கள் ஆகியவையும் தேவை.
பாரம்பரியமான தஹியா அணிகலன்களில் நாகப்பூவும் சாமந்தியும் அதிக அளவில் பயன்படுத்தப்படும். காரணம், மற்ற பூக்களை விட இவை நீண்ட காலம் வாடாமல் இருக்கும். சாமந்தி சுமார் 8 நாட்களும், நாகப்பூ 15 நாட்களும் பெரும்பாலும் வாடாமல் இருக்கும். இப்போது தக்கைகளில் இந்தப் பூக்களைப் போலவே செய்கிறோம்.
தஹியாவில் உள்ள மகுடம் போன்ற பகுதியில் கம்பி இழை போன்ற வடிவங்களை உருவாக்க மல்லிகை மொட்டுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். பூப்பதற்கு முன்பு மொட்டுகள் வெள்ளையாக இருக்கும் என்பதால், தஹியாக்களை உருவாக்கும்போது இவற்றை நாங்கள் வெள்ளையாக வடிவமைக்கிறோம்.
இந்த வடிவமைப்பை உருவாக்க முனையில் மொட்டுகள் பொருத்தப்படும். நளினமான இந்த வேலைகளை பொதுவாக பெண்களே செய்கிறார்கள்.
ஜகந்நாதரை வழிபடும் நோக்கில் இந்த நெட்டி தக்கை
வேலைப்பாடு புரி நகரில் தோன்றியதாக கூறப்படுவது உண்டு. இப்போது உள்ளூர் வேலைப்பாடுகளை
பயன்படுத்த விரும்பும் விடுதிகள், நிகழ்வுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
எங்கள் வேலைக்கு ஷிப்ட் முறையோ, வேலையைத் தொடங்க வழக்கமான நேரமோ இல்லை. காலை 6 மணிக்கோ, 7 மணிக்கோ, சில நேரங்களில் அதிகாலை 4 மணிக்கோ வேலையைத் தொடங்கி சில நேரம் மறுநாள் அதிகாலை 1 மணி, 2 மணி வரையில்கூட வேலை நீடிக்கும். ஒரு தஹியா செய்வதன் மூலம் ஒரு தொழிலாளி 1,500 முதல் 2,000 ரூபாய் வரையில் சம்பாதிக்க முடியும்.
ஒடிசாவின் சம்பல்பூரில் சரத் மொகந்தி என்பவரிடம் பயிற்சி பெற்றபோது 1996ம் ஆண்டு எனக்கு ஒரு விருது கிடைத்தது.
“கைவினைஞர் செல்வமல்ல. கலையே செல்வமாகவும், கலையே செல்வத்தின் தோற்றுவாயாகவும் உள்ளது. கலையே தமக்காகப் பேசவும் செய்கிறது,” என்கிறார் உபேந்திர குமார்,
“எனது செல்வம், என்னுடைய 37 ஆண்டுகால கலைப்பணிதான். என் குடும்பம் பசியோடு உறங்கச் செல்லாமல் இருப்பதும் இந்தக் கலையால்தான்,” என்கிறார்.
தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்