லடாக்கின் சுரு பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்கள் கோடை மாதங்களில் உயிர் கொள்கின்றன. பசுமையான நிலங்களில் ஓடைகள் கலகலத்து ஓடுகின்றன. பனி போர்த்திய மலைகளுக்கு நடுவே இருக்கும் அப்பகுதியை காட்டுப் பூக்கள் நிறைத்திருக்கிறது. பகல் வானம் அழகிய நீல நிறம் கொண்டிருக்கிறது. இரவு வானத்தில் பால்வெளியை நாம் காண முடியும்.

கார்கில் மாவட்டத்தின் இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் குழந்தைகள் சுற்றுச்சூழலுடன் உணர்வுப்பூர்வமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். 2021ம் ஆண்டில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட டாய் சுரு கிராமத்தில் பெண் குழந்தைகள் பாறைகளில் ஏறுவார்கள். கோடையில் பூக்கள் சேகரிப்பார்கள். குளிர்காலத்தில் பனியை சேகரிப்பார்கள். ஓடைகளில் குதித்து விளையாடுவார்கள். வாற் கோதுமை வயல்களில் விளையாடுவதுதான் அவர்களுக்கு பிடித்த கோடைகாலப் பொழுதுபோக்கு.

லடாக் யூனியன் பிரதேசத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமான லெவிலிருந்து கார்கில் தூரத்தில் இருக்கிறது. லடாக்கின் இரு மாவட்டங்களில் அதுவும் ஒன்று.

கார்கிலை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியாக பிற இடத்து மக்கள்  குழப்பிக் கொள்கிறார்கள். அது அப்படி இல்லை. சுன்னி இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் பகுதி போலன்றி, கார்கிலில் பெரும்பான்மையாக வசிப்பது ஷியா இஸ்லாமியர்தான்.

சுரு பள்ளத்தாக்கில் இருக்கும் ஷியா இஸ்லாமியர்கள், 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கார்கில் டவுனை முக்கியமான புனிதத் தளமாகக் கருதுகின்றனர். அங்கிருக்கும் மக்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான முகர்ரம் முக்கியமான காலக்கட்டம் ஆகும். நபிகள் நாயகத்தின் பேரரான இமாம் ஹுசைனுக்கு தீவிரமாக துக்கம் அனுசரிக்கப்படும். கிபி 680ம் ஆண்டின் அக்டோபர் 10ம் தேதி கர்பாலாவில் (தற்போதைய ஈராக்) நடந்தப் போரில் 72 பேருடன் அவர் கொல்லப்பட்டார்.

அந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் முகர்ரமில்  நடக்கும் சடங்குகளில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வர். ஜுலூஸ் அல்லது தஸ்தா என அழைக்கப்படும் ஊர்வலங்கள் பல நாட்களில் நடக்கும். இதில் பெரிய அளவுக்கான ஊர்வலம் முகர்ரத்தின் பத்தாம் நாளான அஷுரா அன்று நடக்கும். ஹுசைனும் பிறரும் கர்பாலாவில் கொல்லப்பட்ட நாள் அது. சில ஆண்கள் தங்களைத் தாங்களே சங்கிலிகள் கொண்டும் கத்திகள் கொண்டும் அடித்துக் கொள்ளும் (காமா ஜாணி) சடங்கைச் செய்வார்கள். அனைவரும் தங்களின் நெஞ்சில் அடித்துக் கொள்வார்கள் (சீனா ஜாணி).

PHOTO • Shubhra Dixit

கார்கில் டவுனிலிருந்து தெற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுரு பள்ளத்தாக்கில் இருக்கும் டாய் சுரு கிராமத்தில் 600 பேர் வசிக்கின்றனர். கார்கில் மாவட்டத்தின் டைஃப்சுரு தாலுகாவுக்கு தலைமையிடமாக அது செயல்பட்டு வருகிறது

அஷுரா தினத்துக்கு முந்தைய இரவில், பெண்கள் மசூதியிலிருந்து இமாம்பராவுக்கு (தொழுகை மண்டபம்) ஊர்வலமாக செல்வார்கள். செல்லும் வழியில் மர்சியா மற்றும் நோகா (புலம்பல் மற்றும் ஒப்பாரி) ஆகியவற்றைப் சொல்லிக் கொண்டு செல்வார்கள். (அஷுரா இந்த வருடத்தின் ஆகஸ்ட் 8-9ல் வருகிறது.)

அனைவரும் மஜ்லிக்கு (தொழுகைக் கூட்டம்) கூடுவார்கள். ஹுசைன் மற்றும் பிறரின் தியாகம் மற்றும் எதிர்ப்புணர்வை நினைவுகூறும் வகையில் முகர்ரம் நிகழ்வுகளின்போது ஒரு நாளுக்கு இருமுறை இமாம்பராவில் கூட்டம் நடக்கும். மண்டபத்தின் தனித்தனி இடங்களில் அமர்ந்து கொண்டு ஆண்களும் (மற்றும் சிறுவர்கள்) பெண்களும் கர்பாலா போர் குறித்த நிகழ்வுகளை அகா (மதத் தலைவர்) விவரிப்பதைக் கேட்பார்கள்.

மண்டபத்துக்கு மேலே பெண்களுக்கென ஒரு பால்கனி உண்டு. கீழே நடப்பவற்றை அவர்கள் அங்கிருந்து பார்க்க முடியும். ‘பிஞ்ச்ரா’ அல்லது கூண்டு என்ற வார்த்தையால் அப்பகுதி குறிக்கப்படுகிறது. சிறைப்படுத்தப்படுதல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற உணர்வை உருவாக்கும் வார்த்தை அது. ஆனால் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி சுதந்திரத்தையும்  விளையாடுவதற்கான வெளியையும் கொடுக்கும் இடமாக இருக்கிறது.

துக்கம் அனுசரிக்கப்படுதல் வேகம் பெற்று இமாம்பராவில் உச்சம் பெறும் தருணத்தில் சட்டென நிலை மாறுகிறது. பெண் குழந்தைகள் தங்களின் தலைகளைக் கவிழ்த்து உடன் சேர்ந்து அழுகிறார்கள். ஆனால் அதுவும் அதிக நேரத்துக்கு நீடிக்கவில்லை..

துக்கம் அனுசரிப்பதற்கான  மாதமாக முகர்ரம் கருதப்பட்டாலும் குழந்தைகளின் உலகில் அது பிற நண்பர்களை சந்தித்து இரவுப் பொழுதிலும் அளவளாவக் கூடிய வாய்ப்பை வழங்கும் காலம். சில சிறுவர்கள் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதுண்டு. ஆனால் பெண் குழந்தைகளுக்கு அச்சடங்கு தடுக்கப்பட்டிருக்கிறது. பிறர் செய்யும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பது மட்டுமே பெண் குழந்தைகளின் வேலை.

முகர்ர மாதச் சடங்குகள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே வதைத்துக் கொண்டு ரத்தம் சிந்தும் ஆண்களைப் பற்றியதாகவே விவரிக்கப்படுகிறது. ஆனால் இன்னொரு வகை துக்கம் அனுசரித்தலும் இருக்கிறது. பெண்கள் துக்கம் அனுசரிக்கும் வழி அது. அமைதியாக முழுமையாக துக்கம் அனுசரிக்கும் வழி.

PHOTO • Shubhra Dixit

வாற் கோதுமை வயல்களில் விளையாடும் ஜன்னத். டாய் சுரு குழந்தைகளின் விருப்பமான கோடை கால பொழுதுபோக்கு இது


PHOTO • Shubhra Dixit

கோடையில் வயல்களில் பூக்கும் காட்டுப் பூக்களின் படுக்கையில் அமர்ந்திருக்கும் அர்ச்சோ பாத்திமா மற்றும் ஜன்னத் (இடது)


PHOTO • Shubhra Dixit

காலைப் பொழுதுகள் பள்ளியிலும் மாலைப்பொழுதுகள் விளையாட்டு மற்றும் வீட்டுபாடத்திலும் கழிகின்றன. வார இறுதியில் சுற்றுலாக்கள் உண்டு. இங்கு 11 வயது மொகதிஸ்ஸா சுற்றுலா சென்றிருக்கையில் ஒரு ஓடையில்  விளையாடுகிறார்


PHOTO • Shubhra Dixit

லடாக்கின் சுரு பள்ளத்தாக்கிலுள்ள டாய் சுருவின் பாறை ஒன்றில் இரு பெண் குழந்தைகள் ஏறுகின்றனர். பள்ளத்தாக்கில் வசிக்கும் பெண் குழந்தைகள் உணர்வுப்பூர்வமான உறவை சுற்றுச் சூழலுடன் கொண்டிருக்கின்றனர்


PHOTO • Shubhra Dixit

10 வயது ஹஜிரா மற்றும் 11 வயது சஹ்ரா பதுல் ஆகியோர் ஆகஸ்டு 2021-ல் இமாம்பராவுக்கு கிளம்பும்முன் ஹஜிராவின் வீட்டில் ஒன்றாக படித்துக் கொண்டிருக்கின்றனர்


PHOTO • Shubhra Dixit

ஆண்கள் ஆகஸ்ட் 16, 2021 அன்று சீனா ஜாணி (நெஞ்சில் அடித்துக் கொள்ளும்) சடங்கை ஒரு கிராமத்தின் கூட்டம் ஒன்றில் செய்கின்றனர். மண்டபத்தில் ஒரு கறுப்புத் திரை ஆண்கள் மற்றும் பெண்கள் வசிக்கும் பகுதிகளை பிரிக்கிறது


PHOTO • Shubhra Dixit

பெண்குழந்தைகள் மேலே உள்ள பால்கனியான பிஞ்ச்ராவிலிருந்து மண்டபத்துக்குள் எட்டிப் பார்க்கின்றனர். மண்டபத்தின் சடங்குகளிலிருந்து தள்ளியிருக்கும் அப்பகுதி அவர்களின் சுதந்திரத்துக்கும் விளையாட்டுக்கும் வாய்ப்பு கொடுக்கும் இடமாக இருக்கிறது


PHOTO • Shubhra Dixit

ஆகஸ்ட் 2021 அன்றின் இரவு நடந்த முகர்ரம் கூட்டத்தில் தோழிகள் பிஞ்ச்ராவில் நேரம் கழிக்கின்றனர்


PHOTO • Shubhra Dixit

தோழிகள் முட்டை விட ஊதுகின்றனர்


PHOTO • Shubhra Dixit

12 வயது பெண் குழந்தையும் 10 வயது பெண் குழந்தையும் வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கியிருக்கின்றனர். கிராமத்தின் சில பகுதிகளில்தான் இணையம் செயல்படுகிறது என்றாலும் டாய் சுருவின் குழந்தைகள் பிற இடங்களில் இருக்கும் குழந்தைகள் போலவே சமூகதளம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில்அதிகம் நேரம் கழிக்கின்றனர்


PHOTO • Shubhra Dixit

இமாம்பராவில் சுவர்களில் ஏறுதல். அகப்பட்டால் திட்டு விழும்


PHOTO • Shubhra Dixit

இமாம்பராவுக்கு வெளியே பெரியவர்களின் கண்களில் படாமல் விளையாடும் ஒரு பெண்குழந்தை வெற்றிக்கான சைகையைக் காட்டுகிறார்


PHOTO • Shubhra Dixit

பெண்கள் ஆண்களிடமிருந்து பிரிந்து அஷுரா தின இரவில் ஊர்வலம் செல்கையில் நோகா சொல்வதை குழந்தைகள் பார்க்கின்றனர். இஸ்லாமிய மாதமான முகர்ரத்தின் 10ம் நாளில் நடத்தப்படும் இச்சடங்கு, கர்பாலா போரில் கொல்லப்பட்ட இமாம் ஹுசைனுக்கு துக்கம் அனுசரிக்கச் செய்யப்படுகிறது


PHOTO • Shubhra Dixit

அஷுரா தினமான ஆகஸ்ட் 19, 2021 அன்று ப்ராந்தி கிராமத்திலிருந்து டாய் சுருவுக்கு செல்லும் பெண்களின் ஊர்வலம் ஒன்று


PHOTO • Shubhra Dixit

ஆகஸ்டு 2021-ன் அஷுரா தினத்தன்று ஆண்களின் ஜுலூஸ்


PHOTO • Shubhra Dixit

பெண்குழந்தைகள் ஆண்களின் ஊர்வலத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முயலுகின்றனர்


PHOTO • Shubhra Dixit

டாய் சுருவின் குழந்தைகளின் குழு ஒன்று அஷுரா தினத்தன்று மார்சியா (புலம்பல்) சொல்லி சீனா ஜாணி (நெஞ்சில் அடித்துக் கொள்ளும் சடங்கு) செய்கின்றனர்


PHOTO • Shubhra Dixit

அஷுரா தினம் கிராமத்தின் மைதானத்துக்கு பல்லக்கு சுமந்து செல்லும் நிகழ்வோடு முடிகிறது. இமாம் ஹுசைனின் சகோதரி ஜைனப் கர்பாலாவுக்கு பயணித்த நிகழ்வைக் குறிக்கும் சடங்கு அது. ஹுசைனும் அவரது நண்பர்களும் யாஜித்தின் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக கொல்லப்பட்ட கத்ல் இ கஹ் எனப்படும் போர்க்களத்தை மைதானம் குறிக்கிறது


PHOTO • Shubhra Dixit

பெண்குழந்தைகள் கத்ல் இ கஹில் தொழுகின்றனர்


PHOTO • Shubhra Dixit

கர்பலா போரை கத்ல் இ கஹில் மீட்டுருவாக்கம் செய்ய மொத்த கிராமமும் அஷுரா தினத்தில் மைதானத்தில் திரளுகிறது


PHOTO • Shubhra Dixit

ஆகஸ்டு 2021-ன் அஷுராவுக்கு சில தினங்களுக்கு பிறகு நடக்கும் ஒரு ஜுலூஸ்


PHOTO • Shubhra Dixit

அஷுராவுக்குப் பிறகு தபூத் எனப்படும் இமாம் ஹுசைனின் சவப்பெட்டி, கிராமத்தில் தூக்கிச் செல்லப்படும் சில தினங்களுக்கு டாய் சுருவின் பெண்கள் துக்கம் அனுசரிப்பார்கள்


PHOTO • Shubhra Dixit

டாய் சுரு மக்கள் ஜுலூசுக்குப் பிறகு செப்டம்பர் 2021-ல் ஒன்றாக பிரார்த்திக்கின்றனர். முகர்ரத்துக்கு பிறகான சஃபார் மாதம் வரை கர்பாலா தியாகிகளுக்கான துக்க அனுசரிப்பு நிகழ்வு தொடரும்


தமிழில் : ராஜசங்கீதன்

Photos and Text : Shubhra Dixit

شبھرا دیکشت ایک آزاد صحافی، فوٹوگرافر اور فلم ساز ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Shubhra Dixit
Photo Editor : Binaifer Bharucha

بنائیفر بھروچا، ممبئی کی ایک فری لانس فوٹوگرافر ہیں، اور پیپلز آرکائیو آف رورل انڈیا میں بطور فوٹو ایڈیٹر کام کرتی ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز بنیفر بھروچا
Translator : Rajasangeethan

چنئی کے رہنے والے راجا سنگیتن ایک قلم کار ہیں۔ وہ ایک مشہور تمل نیوز چینل میں بطور صحافی کام کرتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Rajasangeethan