அன்று பிப்பரவரி 26ஆம் தேதி, ஷைலாவின் பதினெட்டாவது பிறந்தநாள். அவள் புத்தாடை அணிந்திருந்தாள். தலையில் மல்லிகைப் பூ. அவளது அம்மா அவளுக்கு பிடித்தமான கோழி பிரியாணி சமைத்திருந்தார்கள். அவள் தன் கல்லூரி நண்பர்களுக்காக சிறு விருந்து தயார் செய்திருந்தாள்.

ஷைலா, சென்னையில் உள்ள பிரபலமான ஸ்ரீ சாஸ்தா செவிலியார் கல்லூரியில் பயிற்சி பெறுகிறாள். ஆங்கில வழிக் கல்லூரியில் அனுமதி பெறுவதே பெரும் போராட்டம். அங்கு இவர்களை ஏற்றுக்கொள்வது இன்னமும் கடினமான ஒன்று.

ஷைலாவின் அப்பா, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இறந்து போனார் என்று தெரிந்ததும், உடன் படித்த மாணவர்களிடம் இருந்து வந்த அடுத்தக் கேள்வி அவள் சாதி பற்றியாதாக இருந்தது.

“திடீரென்று எங்களுக்கு இடையே கண்ணுக்கு புலப்படாத சுவர் ஒன்று இருப்பதை உணர்ந்தேன்.” என்கிறார் ஷைலா.

செப்டெம்பர் 27, 2007, கண்ணன் இறந்ததில் இருந்து ஷைலாவும் அவளது அம்மாவும், அந்தக் கண்ணுக்குத் தெரியாத சுவரை உடைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆதி திராவிட மடிகா இனத்தைச் சேர்ந்த கண்ணன், கட்டிட வேலையும் கூலி வேலையும் செய்பவர். . பிற்படுத்தப்பட்ட சாதியான  மடிகா இனத்தவர்களைதான் முதன்மையாக துப்புரவு தொழிலாளர்களாக நியமிப்பார்கள். கூப்பிடும் பொழுது சாக்கடைகளையும் கழிவுநீர்த் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.

PHOTO • Bhasha Singh

நாகம்மாவின் மூத்த மகள் ஷைலா ”அது ஒரு நீண்ட போராட்டாமாக இருந்தது” என்கிறார்.

“அது ஒரு நீண்ட போராட்டமாக இருந்தது. ஆங்கில மொழியை கற்றுத் தேர்வதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறேன். என் அப்பா என்னை  மருத்துவராக்க நினைத்தார். ஆனால், அவர் இல்லாமல் அது ஒரு  கடினமான கனவு ஆனது. அதனால் நான் செவிலியர் கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் பகுதியில் யாரும் இந்தப் படிப்பை படித்ததில்லை. ஒருவேளை நான் செவிலியராக தேர்ச்சி பெற்றால், அப்பா நினைத்ததைச் செய்வேன். நான் ஜாதிகளை நம்புபவள் இல்லை. ஜாதி,மத அடிப்படியில் எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது. நான் இந்த உலகத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என் தந்தையைப் போல் யாரும் இறந்து விடக்கூடாது.” என்கிறார் ஷைலா.

மேலும் “மெதுவாக, நண்பர்களிடையே சமமாக என்னால் உரையாட முடிந்தது. இப்பொழுது சிலர் நான் படிப்பதற்கு உதவியும் செய்கிறார்கள். நான் தமிழ் வழிக் கல்வியில் தான் படித்தேன். அதனால் என் ஆங்கிலம் மோசமாக இருக்கும். அனைவரும் ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் செர்ந்துவிடச் சொன்னார்கள். எங்களால் அவ்வளவு செலவு செய்ய முடியாது என்பதால் சிரமப்பட்டு நானே கற்றுக்கொண்டேன். எப்போதும் தோற்பது எனக்கு தீர்வாகவே இருந்ததில்லை.”

அவர்கள் பகுதியிலேயே பன்னிரெண்டாவது வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தது ஷைலாவிற்கு பெருமையாக இருந்தது. ஊடகங்கள் அவளது வெற்றிக் கதையை செய்தியாக வெளியிட்டன. அவை செவிலியர் படிப்பிற்கான நிதி உதவி பெறுவதற்கு உதவின.

கே.ஷைலா: ‘என் அப்பா செய்தது போல வேறு யாருமே செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்‘

ஷைலா கூச்ச சுபாவம் கொண்ட பெண். நாற்பது வயதான நாகம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.  தன் மகள் இவ்வளவு வெளிப்படையாக பேசுவதை இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கிறார்.

தன் இரண்டு மகள்களும் சந்தோஷமான எதிர்கால கனவுகளைக் காண, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் நாகம்மா. அவரது இளைய மகள் ஆனந்தி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.

தன் கணவரின் இறப்புச் செய்தியை கேட்ட அன்று நாகம்மா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அவரது பெற்றோர்தான் அந்த நிலையில் எல்லாவற்றையும்  கவனித்துக்கொண்டார்கள். அப்போது ஷைலாவிற்கு எட்டு வயது. பள்ளக்குக் கூட செல்லாத ஆனந்திக்கு ஆறு வயது.

PHOTO • Bhasha Singh

இந்திரா நகரில் இருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள தன் கடையில்: ‘என் வலிகளை எல்லாம் என் பலமாக மாற்றிக்கொண்டேன்’

“எங்கள் கிராமம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாஷம் மாவட்டத்தில் உள்ளது. என் கணவரின் இறந்த உடலோடு எப்படி எங்கள் கிராமம் பாமருவிற்குச் சென்றேன் என்பதோ எப்படி இறுதிச் சடங்கு நடைபெற்றது என்பதோ எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. என் மாமனார் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மின்னதிர்வுச் சிகிச்சையும், வேறு சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டன. அதன் பிறகுதான் என்னால் சுயநினைவிற்கு வர முடிந்தது. என் கணவர் நிஜமாகவே இறந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வதற்கே எனக்கு இரண்டு வருடங்கள் எடுத்தன.”

பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் தன் கணவரின் இறப்பு பற்றி நினைக்கும் பொழுது உடைந்து அழுகிறார். “என் உறவினர்கள் என்னை என் இரண்டு மகள்களுக்காக வாழ வேண்டும் என்றார்கள். அப்போதுதான் நான் என் போராட்டத்ததைத் துவங்கினேன். அருகில் உள்ள தொழிற்சாலையில் தூய்மைப்படுத்தும் வேலை கிடைத்தது. அந்த வேலையை வெறுத்தேன். என் பெற்றோரும் துப்புரவு பணியாளர்கள்தான். அப்பா, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதும் குப்பை அள்ளுவதும் அவரது வேலைகள். அம்மா, குப்பை பெருக்குபவர்.”

தமிழத்தில் பெரும்பான்மையான துப்புரவு தொழிலாளர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் தெலுங்கு பொழி பேசுபவர்கள். தமிழத்தின் நிறைய பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் படிப்பதற்காக சிறப்பு தெலுங்கு வழி பள்ளிகள் உள்ளன. நாகம்மாவும் அவரது கணவரும் பாமுரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். “1995ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. அப்போது எனக்கு வயது பதினெட்டு. நான் பிறப்பதற்கு முன்பாகவே என் பெற்றோர் சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். என் கணவர் கட்டிட வேலை செய்யத் துவங்கினார். எப்பொழுது எல்லாம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய அழைக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் செல்வார். அவர் சாக்கடைகளில் வேலை செய்வது தெரிந்ததும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தேன். அதற்குப்பின் அந்த வேலைக்குச் செல்லும்போது என்னிடம் சொல்வதையே நிறுத்திவிட்டார். கழிவுநீர் தொட்டியில் அவருடன் சேர்ந்து இரண்டு பேர் இறந்துபோன போது யாரும் கைது செய்யப்படவில்லை. அந்தக் கொலைக்கு யார் மீதும் பொறுப்பு சுமத்தப்படவில்லை. பாருங்கள், இந்த நாடு எங்களை எப்படி நடத்துகிறதென்று. எங்கள் வாழ்வு ஒரு பொருட்டே கிடையாது. அரசாங்கம் , அரசு அதிகாரிகள் என எங்களுக்கு யாரும் உதவ வரவில்லை.2013ஆம் ஆண்டுதான் எனக்கு ஆந்தோலன் அமைப்போடு தொடர்பு கிடைத்தது.  இறுதியாக, என் உரிமைகளை பெறுவதற்காக எப்படிப் போராட வேண்டும் என்று  சஃபாய் கர்மச்சாரி ஆந்தோலன் அமைப்பு  கற்றுக்கொடுத்தது.”

தன் உரிமைகளை அறிந்து கொண்ட நாகம்மா உறுதியாக குரல் எழுப்ப ஆரம்பித்தார். தன்னைப் போலவே தன் கணவரை, அன்புக்குரியவர்களை கழிவுநீர்த் தொட்டிக்குள் இழந்த மற்ற பெண்களை சந்தித்தார்., “நான் மட்டும் இல்லை, என்னைப் போல் கணவனை இழந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பது தெரிந்ததும், என் சோகங்கள் அனைத்தையும் பலமாக மாற்றிக்கொண்டேன்.” என்கிறார்.

கே.நாகம்மா: “மறுபடியும் அந்தத் தொழிலுக்கு போக மாட்டேன் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்”

அந்த உறுதி நாகம்மாவை தன் துப்புரவுத் தொழிலை விட்டுவிடச் செய்தது. தன் அப்பா மற்றும் சஃபாய் கர்மச்சாரி ஆந்தோலன் அமைப்பின் உதவியோடு 20,000 ரூபாய் கடன் பெற்றார். அதன்பின் இந்திராநகரில் இருக்கும் தன் வீட்டின் முன் அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார்.

21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் சாதியின் இறுக்கம் பற்றிய புரிதலை அவரது கணவருக்கான இறப்புக்கான இழப்பீடு பெறும் போராட்டம் அவருக்கு ஏற்படுத்தியது. 2014ஆம் ஆண்டு, உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்திரவில், சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது இறந்துபோன துப்புரவு தொழிலாளர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் தரவேண்டும் என்றது. அதன்படி நவம்பர் 2016ஆம் ஆண்டு மாநகராட்சி நாகம்மாவிற்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது. பிறகு தன் கடனை அவர் அடைத்துவிட்டார். கடைக்கான முதலீடு செய்திருக்கிறார். தன் இரு  மகள்களின் பெயரிலும் வங்கியில் வைப்பு நிதி கணக்கு துவங்கியிருக்கிறார்.

PHOTO • Bhasha Singh

இளைய மகள் ஆனந்தி(16) தன் தாயின் தன்னம்பிக்கையையும் விடாபிடியான குணத்தைப் பார்த்து பெருமையாக உணர்கிறார்.

“என் கணவர் 2007ஆம் ஆண்டு இறந்துவிட்டார். ஆந்தோலன் அமைப்பின் உதவியோடு பெரும் போராட்டத்திற்குப் பிறகே, நவம்பர் 2016-ல்தான் இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. 2014ஆம் ஆண்டு  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அந்த வருடமே இழப்பீடு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு நீதி கிடைப்பதற்கான அமைப்பே இல்லை. யாரும் கவலைப்படுவதில்லை. இந்த அமைப்பு என்னை வலுக்கட்டாயமாக தோட்டியாக்கியது. ஏன்? என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கும் என் மகள்களுக்கும் சாதிகளற்ற வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள்?” என்கிறார் நாகம்மா.

புகைப்படங்கள் : பாஷா சிங்

மொழிபெயர்ப்பு : சபா முத்துகுமார்

Bhasha Singh

بھاشا سنگھ ایک آزاد صحافی اور قلم کار ہیں۔ ہاتھ سے میلا ڈھونے کے موضوع پر ان کی کتاب ’ادرِشیہ بھارت‘، (ہندی) پینگوئن کے ذریعے ۲۰۱۲ میں شائع کی گئی (انگریزی میں یہ کتاب ’اَن سین‘ کے نام سے ۲۰۱۴ میں چھپی)۔ ان کی صحافت کا محور ہیں شمالی ہندوستان میں زرعی پریشانیاں، جوہری تنصیبات کی سیاست اور زمینی حقائق، اور دلت، صنف اور اقلیتی حقوق۔

کے ذریعہ دیگر اسٹوریز Bhasha Singh