“லேசான கோபத்தை வெளிப்படுத்த புருவங்கள் சற்று உயர்த்தப்பட வேண்டும். கடும்கோபம் எனில் கண்கள் பெரிதாகவும் மேலே சென்ற புருவங்களும் வேண்டும். சந்தோஷத்துக்கு கன்னங்கள் புன்னகையால் உப்ப வேண்டும்.”
இத்தகைய நுட்பங்கள் மீது கவனம் செலுத்துவதால்தான், ஜார்க்கண்டின் சராய்கெலா சாவ் நடனங்களில் பயன்படும் முகமூடிகளை செய்வதில் வல்லுநராக திகழ்கிறார் திலீப் பட்நாயக். “முகமூடி கதாபாத்திரத்தின் தன்மையை பிரதிபலிக்க வேண்டும்,” என்கிறார் அவர். “சராய்கெலா முகமூடிகள் தனித்துவமானவை. ஏனெனில் அவை நவரசங்களை கொண்டிருக்கும். பிற சாவ் பாணியில் இது இருக்காது.”
வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் முகமூடிகள் அவரின் பட்டறையில் கிடக்கிறது. விரிந்த கண்கள், மெல்லிய புருவங்கள், வெளிர் தோல் நிறங்கள் போன்றவை பல உணர்வுநிலைகளை வெளிப்படுத்துகின்றன.
இக்கலைவடிவம் நடனத்தையும் தற்காப்பு கலையையும் கலக்கிறது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் உள்ளூர் கதைகளை நடிக்கும் நடனக்கலைஞர்கள் இந்த முகமூடிகளை அணிகின்றனர். திலீப் எல்லா முகமூடிகளையும் செய்கிறார். ஆனால் அவருக்கு பிடித்தது கிருஷ்ணனின் முகமூடிதான். ஏனெனில், “பெரிய கண்களையும் உயர்த்திய புருவங்களையும் கொண்டு கோபத்தை காட்டுவது எளிது. ஆனால் குறுமை அத்தனை எளிதாக காட்டிட முடியாது.”
திலீப்பும் நிகழ்த்துக் கலைஞராக இருப்பதும் உதவியாக இருக்கிறது. ஒரு குழந்தையாக அவர் சாவ் நடனக்குழுவில் இருந்தார். உள்ளூர் சிவன் கோவிலில் சாவ் விழாவில் நிகழ்ச்சியை பார்த்தே பெரும்பாலும் கற்றுக் கொண்டார். அவருக்கு பிடித்த பகுதி, கிருஷ்ண நடனம்தான். இன்று அவர் மேளம் வாசிக்கிறார். சராய்கெலா சாவ் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார்.
மனைவி, நான்கு மகள்கள் மற்றுமொரு மகன் ஆகியோருடன் தெண்டோபோசியில் திலீப் வாழ்ந்து வருகிறார். ஜார்க்கண்டின் சராய்கெலா மாவட்டத்திலுள்ள அந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழ்கின்றனர். விளைநிலத்துக்கு நடுவே உள்ள அவர்களின் ஈரறை செங்கல் வீடு பட்டறையாகவும் பயன்படுகிறது. நுழைவாசலருகே களிமண் குவியல் கிடக்கிறது. வீட்டுக்கு எதிரே ஒரு விரிந்த வேப்ப மரம் இருக்கிறது. நல்ல காலநிலைகளின்போது அங்கு அவர் அமர்ந்திருப்பார்.
”என் தந்தை (கேஷவ் ஆச்சார்யா) முகமூடிகள் செய்வதை சிறுவயதில் நான் பார்த்திருக்கிறேன்,” என்கிறார் மூன்றாம் தலைமுறை கலைஞரான திலீப். “அவர் எந்த கதாபாத்திரத்தையும் களிமண்ணில் செய்து விடுவார்.” அந்த காலக்கட்டத்தில் சராய்கெலாவில் இருந்த அரச குடும்பம் கலையை ஆதரித்ததால், ஒவ்வொரு கிராமத்திலும் முகமூடி செய்ய கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையங்கள் இருந்தன. அவரின் தந்தையும் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
“இத்தகைய முகமூடிகளை நான் 40 வருடங்களாக செய்து வருகிறேன்,” என்கிறார் 65 வயது திலீப். பல்லாண்டு கால பாரம்பரியத்தை தக்க வைத்திருக்கும் சில கலைஞர்களில் அவரும் ஒருவர். “வெகுதூரத்திலிருந்து இக்கலையை கற்றுக் கொள்ள வருகின்றனர். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வருகிறார்கள்…” என்கிறார் அவர்.
ஒடிசா மாநில எல்லையில் அமைந்திருக்கும் சராய்கெலா பகுதியில் இசைக் கலைஞர்களும் நடனக் கலைஞர்களும் அதிகம். “எல்லா சாவ் நடனங்களுக்கும் தாயாக சராய்கெலா இருக்கிறது. இங்கிருந்து இக்கலை மயூர்பஞ்ச் (ஒரிசா) மற்றும் மன்பும் (புருலியா) போன்ற இடங்களுக்கு பரவியிருக்கிறது,” என்கிறார் 62 வயது குரு தபன் பட்நாயக். சராய்கெலா சாவ் மையத்தின் முன்னாள் இயக்குநராக இருந்தவர். சராய்கெலா ராயல் சாவ் குழுதான் இந்தியாவுக்கு வெளியே இக்கலையை ஐரோப்பா வரை 1938-ல் கொண்டு சென்றது என விளக்குகிறார். அப்போதிருந்து இந்த பாணி உலகின் பல மூலைகளுக்கு பயணித்திருக்கிறது.
உலகளவில் சாவ் பிரபலமாக இருந்தும், அதற்கான முகமூடிகள் தயாரிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை சரிந்திருக்கிறது. “உள்ளூர் மக்கள் இக்கலையை கற்றுக் கொள்ள விரும்பவில்லை,” என்கிறார் திலீப். அவரது குரலில் அழிந்து கொண்டிருக்கும் கலை மீதான கவலை தோய்ந்திருக்கிறது.
*****
முற்றத்தில் அமர்ந்திருக்கும் திலீப் தன் கருவிகளை கவனமாக அடுக்கி, களிமண்ணை ஒரு மரச் சட்டகத்தில் வைக்கிறார். “எங்களின் விரல்கள் கொண்டு அளந்து முகமூடியை மூன்று பகுதிகளாக பிரிப்போம். கண்கள், மூக்கு மற்றும் வாய் என,” என விளக்குகிறார் அவர்.
'எல்லா சாவ் நடனங்களுக்கும் தாயாக சராய்கெலா இருக்கிறது. [...] இது என் பாரம்பரியம். என் உயிருள்ளவரை இதை தொடர்வேன்'
நீரில் கைகளை நனைத்துவிட்டு, அவன் நவரச முகமூடிகளை தயாரிக்கத் தொடங்குகிறார். சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரெளத்திரம், வீரம், பயானகம் (தவறு/அச்சம்), பிபாட்சா (அருவருப்பு), அப்தூதா (ஆச்சரியம்) மற்றும் சாந்தம் ஆகியவை.
சாவ் கலையில் இருக்கும் பல பாணிகளில் சராய்கெலா மற்றும் புருலியா பகுதிகளின் சாவ் கலை மட்டும்தான் முகமூடிகள் பயன்படுத்துகின்றன. “சராய்கெலா சாவின் ஆன்மா அதன் முகமூடிகள். அவையின்றி, சாவ் கிடையாது,” என்னும் திலீப்பின் கைகள் வேகமாக களிமண்ணை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.
களிமண் முகமூடி தயாரானதும் திலீப் மாட்டுச்சாண சாம்பலை அதன்மீது தூவுகிறார். முகமூடியிலிருந்து வார்ப்பை பிரித்தெடுக்க அது உதவும். பிறகு அவர் ஆறு மட்ட பேப்பர்களை கோந்து வைத்து ஒட்டுகிறார். பிறகு முகமூடி வெயிலில் இரண்டு மூன்று நாட்களுக்கு காய வைக்கப்படுகிறது. அதற்கு பிறகு, ஒரு ப்ளேடை கொண்டு கவனமாக பிரித்தெடுக்கப்பட்டு துல்லியமாக பெயிண்ட் பூசப்படுகிறது. “சராய்கெலா முகமூடிகள் பார்ப்பதற்கு அழகானவை,” என்கிறார் திலீப் பெருமையாக. அப்பகுதியிலுள்ள 50 கிராமங்களுக்கு அவர்தான் முகமூடிகளை விநியோகிக்கிறார்.
கடந்த காலத்தில் பூக்கள், செடிகள் மற்றும் ஆற்றங்கரை கற்களிலிருந்து இயற்கையாக நிறங்கள் எடுக்கப்பட்டு, முகமூடிகளுக்கு பூச்சு செய்யப்பட்டது. இப்போது செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது.
*****
“கலைஞர் முகமூடியை அணிந்ததும் கதாபாத்திரம் ஆகி விடுவார்கள்,” என்கிறார் 50 வருடங்களாக சாவ் நிகழ்ச்சி செய்யும் தபான். “ராதாவாக நடித்தால், ராதாவின் வயதையும் தோற்றத்தையும் யோசித்துக் கொள்ள வேண்டும். புராணங்களின்படி அவள் மிகவும் அழகானவள். எனவே நாங்கள் ராதாவுக்கான வார்ப்பை தனித்துவமான உதடுகள் மற்றும் கன்னங்களுடன் உருவாக்குகிறோம். அவளைப் போன்ற தோற்றத்தை கொண்டு வருகிறோம்.”
மேலும், “முகமூடியை மாட்டி விட்டால், கழுத்து மற்றும் உடலசைவுகள் கொண்டுதான் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்,” என்கிறார். நடனமாடுபவரின் உடல் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்: ‘ அங்க ’ (கழுத்துக்கு கீழே) மற்றும் ‘உபாங்’ (தலை). உபாங் கில் கண்கள், மூக்கு மற்றும் வாய் இருக்கும். ஆனால் எல்லாம் முகமூடியால் மூடப்பட்டிருக்கும். நடிப்பவர் நடிப்பை உடலின் மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி கொண்டு வெளிப்படுத்துவார்.
எனவே ஒரு நடனக் கலைஞர் முகமூடி அணிந்தபின் அழ விரும்பினால், முக பாவனைகள் தெரியாது. என்ன சொல்கிறார் என்பதை புரிய வைப்பதற்காக, தபான் தன் கழுத்தை இடப்பக்கம் திருப்பி, இரு முஷ்டிகளையும் முகத்தை நோக்கிக் கொண்டு சென்று, தலையையும் உடலின் மேற்பகுதியையும் மேலும் இடப்பக்கம் நகர்த்தி, மனம் வருந்தி வேறு பக்கம் திரும்புவது போன்ற பாவனையை செய்து காட்டுகிறார்.
தொடக்கத்தில் நடிகர்கள் மக்களின் முன் ஆட வெட்கப்பட்டுக் கொண்டு இந்த முகமூடிகளை அணியத் தொடங்கியதாக ஒரு உள்ளூர் கதை சொல்லப்படுவதுண்டு. “இப்படித்தான் முகமூடி தற்காப்புக்கு உதவியது,” என விளக்குகிறார் தபான். கண்களுக்கென இரு துளைகளிடப்பட்ட மூங்கில் கூடைகள்தான் முதல் முகமூடிகள். பிறகு பாரம்பரியம் உருவானதும், குழந்தைகளாக இருக்கும்போது பூசணிக்காய்களை கொண்டு முகமூடிகள் செய்ததாக சொல்கிறார் திலீப்.
இன்னொரு கதை, சாவ் கலையை சாவன்னி எனப்படும் ராணுவ முகாம்களுடன் தொடர்புறுத்துகிறது. அதனால்தான் அக்கலையில் தற்காப்பு கலை போன்ற அசைவுகள் இடம்பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தபான் அதை ஏற்கவில்லை. “சாவ் உண்மையில் சயா விலிருந்து (நிழல்கள்) தொடங்கியது,” என்கிறார் அவர், நடிகர்கள் தங்களின் கதாபாத்திரங்களின் நிழகள் என விளக்கி.
வழக்கமாக ஆண்கள்தான் நடனமாடுவார்கள். சமீப வருடங்களில் சில பெண்கள் சாவ் குழுக்களில் இணைந்திருந்தாலும் இன்னும் ஆண்களின் கட்டுப்பாட்டில்தான் கலை இருக்கிறது.
முகமூடிகள் செய்வதற்கும் இது பொருந்தும். ”சாவ் கலையில் பெண்கள் ஈடுபடுவதில்லை. பாரம்பரியமாக இதுதான் வழக்கம். முகமூடி செய்யும் வேலைகளை நாங்கள்தான் செய்கிறோம்,” என்னும் திலீப், “என் மகன் இங்கிருக்கும்போது எனக்கு உதவுவான்,” என்கிறார்.
அவரது மகன் தீபக், தந்தையிடமிருந்து முகமூடிகள் தயாரிக்கும் விதத்தை கற்றுக் கொண்டார். 25 வயதாகும் அவர் தன்பாத்துக்கு புலம்பெயர்ந்து ஓர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். முகமூடி தயாரித்து ஈட்டுவதை காட்டிலும் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறார்.
ஆனால் சிலைகள் செய்வதெனில் மொத்த குடும்பம் உள்ளே வரும். திலீப்பின் மனைவி சம்யுக்தா, சிலைகள் செய்வதிலுள்ள வேலைகள் எல்லாவற்றையும் அவர்தான் செய்வதாக சொல்கிறார். “நாங்கள் வார்ப்புகள் செய்கிறோம். களிமண் தயார் செய்கிறோம். பூச்சும் செய்கிறோம். ஆனால் முகமூடிகள் என வந்தால் பெண்கள் ஏதும் செய்ய முடியாது.”
2023ம் ஆண்டில் திலீப், 500-700 முகமூடிகள் தயாரித்தார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் அவர் ஈட்டினார். பெயிண்ட், ப்ரஷ், மற்றும் துணி போன்றவற்றை வாங்க 3,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை செலவழித்தார். அதை “பகுதி நேர வேலை” என அழைக்கிறார். அவரின் பிரதான தொழில் சிலைகள் செய்வதுதான். அதிலிருந்து மூன்று அல்லது நான்கு லட்சம் ரூபாய் வரை வருடந்தோறும் ஈட்டுகிறார்.
பல சாவ் நடன மையங்களுக்கு அவர் கமிஷன் பெற்று முகமூடிகள் செய்து தருகிறார். வருடந்தோறும் ஏப்ரல் மாதம் நடக்கும் வசந்த விழாவான சைத்ர மேளாவிலும் அவற்றை விற்கிறார். உலகளவில் சுற்றுலா பயணிகள் வந்து கலந்து கொள்ளும் நிகழ்வு அது. பெரிய முகமூடிகள் 250-லிருந்து 300 ரூபாய் வரையும் சிறியவை நூறு ரூபாய்க்கும் விற்கப்படும்.
இன்னும் செயல்பட வைப்பது பணம் மட்டுமல்ல என்பதில் தெளிவாக இருக்கிறார் திலீப். “இது என் பாரம்பரியம். இதை என் உயிருள்ள வரை செய்வேன்.”
இக்கட்டுரை மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளை ஆதரவில் எழுதப்பட்டது.
தமிழில் : ராஜசங்கீதன்