துர்கா துர்கா போலே அமர்,
தோக்தோ ஹோலோ கயா
ஏக்பார் டே கோ மா
கோரோனேரி சயா

என் உடல் எரிகிறது
‘துர்கா துர்கா’ என உச்சரிக்கிறேன்
உன் அருளின் ஆறுதலுக்காக
இறைஞ்சுகிறேன் தாயே…

துர்காவை புகழ்ந்து பாடுகையில் கலைஞர் விஜய் சித்ரகாரின் குரல் உயர்கிறது. அவரைப் போன்ற பைத்கார் கலைஞர்கள் பாடலை முதலில் எழுதுவார்கள். 14 அடி நீளம் வரையிலான ஓவியத்தை பிறகு வரைவநர்கள். பிறகு அவற்றை பார்வையாளருக்கு இசையோடு ஒரு கதை சொல்லி வழங்குவார்கள்.

41 வயது விஜய், ஜார்கண்டின் புர்பி சிங்பும் மாவட்டத்தின் அமடோபி கிராமத்தில் வசிக்கிறார். உள்ளூர் சந்தாலி கதைகள், கிராமப்புற வாழ்க்கை, இயற்கை மற்றும் புராணம் ஆகியவற்றை சார்ந்து பைத்கார் ஓவியங்கள் அமையும் என்கிறார். “கிராமப்புறக் கலைதான் எங்களின் பிரதான பண்பாடு. எங்களை சுற்றி நாங்கள் பார்ப்பதைதான் கலையில் பிரதிபலிக்கிறோம்,” என்கிறார் 10 வயதிலிருந்து பைத்கார் ஓவியங்களை உருவாக்கும் விஜய். “கர்மா நடனம், பகா நடனம் அல்லது ராமாயணா, மகாபாரதா ஓவியம், ஒரு கிராமப்புறக் காட்சி…” சந்தாலி ஓவியத்தின் பல விஷயங்களை அவர் சொல்கிறார். “வீட்டுவேலைகள் செய்யும் பெண்கள், வயலில் மாடுகளுடன் வேலை செய்யும் ஆண்கள், வானில் பறக்கும் பறவைகள் ஆகியவற்றைக் காட்டும்.”

“என் தாத்தாவிடமிருந்து இந்தக் கலையை நான் கற்றுக் கொண்டேன். அவர் பிரபலமான கலைஞர். கொல்கத்தாவிலிருந்து மக்கள் அப்போது தேடி வருவார்கள். வந்து அவர் (ஓவியத்தை) பாடுவதைக் கேட்பார்கள்.”  விஜயின் குடும்பம் பல தலைமுறைகளாக பைத்கார் ஓவியர்களாக இருந்திருக்கிறார்கள். ”வடிவம் சுழல் போல் இருக்கும். எனவேதான் பைத்யகார் ஓவியமென்ற பெயர் வந்தது.”

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: புர்பி சிங்பும் மாவட்டத்தின் அமடோபி கிராமத்திலிருக்கும் மண் வீட்டுக்கு வெளியே பைத்கார் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார் விஜய் சித்ரகார். வலது: அவரைப் போன்ற பைத்கார் கலைஞர்கள் பாடல் எழுதி அவற்றை ஓவியமாக வரைவார்கள்

PHOTO • Ashwini Kumar Shukla

விதியின் கடவுளான கரம் தேவாவை வழிபடும் நாட்டுப்புற நடனமான கரம் நடனத்தை பிரதிபலிக்கும் பைத்கார் ஓவியம்

பைத்கார் ஓவியம் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உருவானது. கதை சொல்லலை நுட்பமான படங்களுடன் கலக்கும் அக்கலை, பண்டுலிபி என அழைக்கப்படும் புராதன அரச சுழல்களின் பாதிப்புகளை கொண்டது. “இக்கலை எத்தனை பழமையானது என கண்டறிவது கடினம். ஏனெனில் பல தலைமுறைகள் தாண்டி கையளிக்கப்பட்ட இக்கலைக்கு எழுத்துப்பூர்வ ஆவணம் ஏதுமில்லை,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ராஞ்சி மத்தியப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராகவும் பழங்குடி பாடல் திறனாளருமான பேராசிரியர் புருஷோத்தம் சர்மா.

அமடோபியில் பல பைத்கார் கலைஞர்கள் இருக்கின்றனர். 71 வயது அனில் சித்ரகார்தான் கிராமத்தில் முதிய ஓவியர். “என் ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பாடல் இருக்கும். நாங்கள் அப்பாடலை பாடுவோம்,” என விளக்குகிறார் அனில். ஒரு பெரிய சாந்தாலி விழாவில் கர்மா நடனம் பற்றிய சுழல் ஓவியத்தை பாரிக்கு காட்டி அவர், “கதை மனதில் தோன்றினால், நாங்கள் அதை வரைவோம். முக்கியமான விஷயம் பாடல் எழுதுவதுதான், பிறகு ஓவியம் வரைவது, இறுதியில் அதை மக்களுக்கு பாடுவது.”

அனிலும் விஜயும் பைத்யகார் கலைஞராக இருப்பதற்கு தேவையான இசை அறிவைக் கொண்டிருக்கும் சில ஒவியர்களை சேர்ந்தவர்கள். சந்தோஷம், துயரம், உற்சாகம் என ஒவ்வொரு உணர்வுக்கும் பாடல் இருப்பதாக அனில் சொல்கிறார். “கிராமப்புறங்களில், கடவுளர் மற்றும் புராணங்களை சார்ந்த விழாக்களில் பாடல்கள் பாடுவோம். துர்கா, காளி, ததா கர்னா, நவுகா விலாஷ், மனசா மங்கல் போன்றவை,” என்கிறார் அவர்.

தந்தையிடமிருந்து அனில் இசை கற்றுக் கொண்டார். ஓவியங்கள் பற்றிய பாடல்கள் நிறைந்த பெரிய தொகுப்பைக் கொண்டிருப்பதாக சொல்கிறார். “சாந்தாலி மற்றும் இந்து விழாக்களின்போது நாங்கள் கிராமந்தோறூம் பயணித்து எங்களின் ஓவியங்களைக் காட்டுவோம். ஏக்தாரா மற்றும் ஹார்மோனியம் (ஒரு நரம்பு இசைக்கருவி) கொண்டு பாடுவோம். பதிலுக்கு மக்கள் ஓவியங்களை வாங்கி, கொஞ்சம் பணம் அல்லது தானியம் கொடுப்பார்கள்,” என்கிறார் அவர்.

காணொளி: இசை, ஓவியத்தை சந்திக்கையில்

பைத்கார் கலை, கதைசொல்லலை நுட்பமான காட்சிகளுடன் இணைக்கும். பண்டுலிபி எனப்படும் புராதன அரச சுழல்களை செல்வாக்கைக் கொண்டிருக்கும்

சமீபத்திய வருடங்களில், 12-14 அடி நீளத்திலிருந்து பைத்யகார ஓவியங்கள் சுருங்கி ஓரடி நீளத்துக்கு A4 அளவுக்கு வந்திருக்கிறது. 200லிருந்து 2,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. “பெரிய ஓவியங்களை விற்க முடியாது. எனவே சிறு ஓவியங்களை உருவாக்குகிறோம். வாடிக்கையாளர் எவரேனும் கிராமத்துக்கு வந்தால், அவர்களுக்கு 400-500 ரூபாய்க்கு விற்று விடுவோம்,” என்கிறார் அனில்.

பல தேசிய, சர்வதேசிய கண்காட்சிகளிலும் பட்டறைகளிலும் அனில் பங்கெடுத்திருக்கிறார். சர்வதேச அளவில் கலை தெரிந்தாலும், நிலைத்து நீடிக்கும் வாழ்வாதாரத்தை அது தருவதில்லை என்கிறார் அவர். “செல்பேசிகளால் பாரம்பரிய நேரடி இசை கேட்கும் பழக்கம் சரிந்து விட்டது. நிறைய செல்பேசிகள் தற்போது இருப்பதால் பாடி இசைக்கும் பாரம்பரியம் நின்றுவிட்டது. பழம்பாரம்பரியமாக கருதப்பட்ட விஷயம் மறைந்துவிட்டது. இப்போது என்ன பாட்டு இருக்கிறது, ஃபுல்கா ஃபுல்கா சுல், உட்டி உட்டி ஜெய் போன்றவைதான்,” என்கிறார் அனில், பிரபல பாடலின் வரிகளை நடித்துக் காட்டியபடி.

மூத்தக் கலைஞரான அவர், ஒரு காலத்தில் அமடோபியில் 40 குடும்பங்கள் வரை பைத்கார் ஓவியம் இருந்ததாக சொல்கிறார். தற்போது சில குடும்பங்கள்தான் அக்கலையை செய்வதாக சொல்கிறார். “பல மாணவர்களுக்கு ஓவியம் கற்றுக் கொடுத்தேன். ஆனால் அதில் பணம் ஈட்ட முடியாததால் அவர்கள் அதை விட்டு நின்றுவிட்டார்கள்.” அவரின் மூத்த மகன், ஜம்ஷெத்பூரில் மேஸ்திரியாக பணிபுரிகிறார். தம்பி தொழிலாளராக இருக்கிறார். அனிலும் அவரின் மனைவியும் கிராமத்தில் சிறு குடிசையில் வாழ்கின்றனர். சில ஆடுகளும் கோழிகளும் கொண்டிருக்கின்றனர். வீட்டுக்கு வெளியே ஒரு கூண்டில் ஒரு கிளி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

2013ம் ஆண்டில் ஜார்கண்ட் அரசாங்கம் அமடோபி கிராமத்தை சுற்றுலா மையமாக ஆக்கியது. ஆனாலும் சிலர் மட்டும்தான் சுற்றுலா வந்தனர். “ஒரு சுற்றுலா பயணி அல்லது அரசதிகாரி வந்தால், அவருக்கு நாங்கள் பாடிக் காட்டுவோம். பிறகு அவர்கள் கொஞ்சம் பணம் கொடுப்பரகள். கடந்த வருடம், நான் இரண்டு ஓவியங்களை மட்டும்தான் விற்றேன்,” என்கிறார் அவர்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

அமடோபி கிராமத்தின் முதிய பைத்கார் ஓவியரான அனில் சித்ரகார் தன் ஓவியங்களுடன்

PHOTO • Ashwini Kumar Shukla

ஜார்கண்டின் பழங்குடி சமூகங்கள் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பந்த்னா பர்வ் விழா போன்றவற்றை விளக்கும் பைத்கார் ஓவியங்கள்

கலைஞர்கள் தம் ஓவியங்களை அருகாமை கிராமங்களில் கர்மா பூஜை, பந்தன் பர்வ் போன்ற சந்தால் விழாக்களிலும் உள்ளூர் இந்து விழாக்கள் மற்றும் கண்காட்சிகளிலும் விற்கின்றனர். “முதலில் கிராமம் கிராமமாக சென்று ஓவியங்கள் விற்போம். தூரமாக வங்கம், ஒரிசா, சட்டீஸ்கர் போன்ற இடங்களுக்கும் செல்வோம்,” என்கிறார் அனில் சித்ரகார்.

*****

பைத்கார் ஓவியத்தில் இருக்கும் செயல்பாட்டை நமக்கு விஜய் காட்டுகிறார். முதலில் கொஞ்சம் நீரை அவர் சிறு கல் தளத்தில் ஊற்றி அதன் மேல் இன்னொரு கல்லை தேய்த்து செம்மண் நிறத்தை உருவாக்குகிறார். பிறகு சிறு ப்ரஷ்ஷைக் கொண்டு ஓவியம் வரையத் தொடங்குகிறார்.

பைத்கார் ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்கள் ஆற்றங்கரை கற்களிலும் பூக்களிலும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படுபவை. கற்களை கண்டுபிடிப்பது சவாலான காரியம். “மலைகளுக்கோ ஆற்றங்கரைக்கோ நாங்கள் செல்ல வேண்டும். சமயங்களில் மூன்று நான்கு நாட்கள் கூட சுண்ணாம்புக்கல் கண்டுபிடிக்க ஆகும்,” என்கிறார் விஜய்.

மஞ்சள் கிழங்கை மஞ்சள் நிறத்துக்கும் பீன்ஸ் அல்லது பச்சை மிளகாயை பச்சை நிறத்துக்கும் லந்தானா கமாரா பழத்தை ஊதா நிறத்துக்கும் கலைஞர்கள் பயன்படுத்துகின்றனர். கறுப்பு நிறம், மண்ணெண்ணை விளக்குகளிலிருந்தும் சிவப்பு, வெள்ளை மற்றும் செங்கல் நிறங்கள் கற்களிலிருந்தும் எடுக்கப்படுகிறது.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: பைத்கார் ஓவியங்களின் நிறங்கள் இயற்கையாக ஆற்றங்கரை கற்களிலிருந்தும் பூக்கள் மற்றும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது. வலது: விஜய் சித்ரகார் ஓவியம் வீட்டுக்கு வெளியே

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

இடது: விஜய் சித்ரகார் வீட்டுக்குள் தேநீர் தயாரிக்கிறார். வலது: பாரம்பரிய சந்தாலி மண் வீடு

துணி அல்லது காகிதத்தில் ஓவியங்கள் வரைய முடியுமென்றாலும் பெரும்பாலான தற்கால கலைஞர்கள் காகிதத்தைதான் பயன்படுத்துகின்றனர். 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜம்ஷெட்பூரிலிருந்து காகிதம் வாங்குகின்றனர். “ஒரு தாளின் விலை 70லிருந்து 120 ரூபாய் வரை ஆகும். சுலபமாக நான்கு ஓவியங்களை அதில் செய்ய முடியும்,” என்கிறார் விஜய்.

இந்த இயற்கையான நிறங்கள் வேம்பு அல்லது கருவேல பிசின் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. “இந்த வகையில், காகிதத்தை பூச்சிகள் தாக்காது. பூச்சு அப்படியே இருக்கும்,” என்கிறார் இயற்கை நிறங்களின் பலத்தை விவரித்து.

*****

எட்டு வருடங்களுக்கு முன், இரு கண்களிலும் அனிலுக்கு புரை ஏற்பட்டது. பார்வை மங்கியதால், வரைவதை நிறுத்திவிட்டார். “சரியாக என்னால் பார்க்க முடியவில்லை. கோடு வரைவேன். பாடல்களை விவரிக்க முடியும். நிறங்கள் பூச முடியாது,” என்கிறார் அவர், ஒரு ஓவியத்தை பிடித்துக் கொண்டு. இந்த ஓவியங்களில் இரு பெயர்கள் இடப்படுகிறது. கோடு வரையும் அனிலின் பெயரும் நிறங்களை பூசும் அவரின் மாணவர் பெயரும்.

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

திறன் வாய்ந்த பைத்கார் ஓவியரான அஞ்சனா பட்கர், அமடோபியில் இருக்கும் சில பெண் ஓவியர்களில் ஒருவர். தற்போது வரைவதை நிறுத்தி விட்டார்

PHOTO • Ashwini Kumar Shukla
PHOTO • Ashwini Kumar Shukla

பைத்கார் ஓவியங்கள் சந்தாலி வாழ்க்கையை பிரதிபலிப்பவை. ‘எங்களின் பிரதான கருப்பொருள் கிராமப் பண்பாடுதான். எங்களைச் சுற்றி பார்ப்பவற்றைதான் கலையில் பிரதிபலிக்கிறோம்,’ என்கிறார் விஜய்

36 வயது அஞ்சனா படேகர் திறன் வாய்ந்த பைத்கார் ஓவியர் ஆவார். “இதை செய்வதை நிறுத்திவிட்டேன். என் கணவருக்கு பிடிக்கவில்லை. வீட்டுவேலைகளையும் பார்த்துக் கொண்டு ஏன் படமும் வரைந்து களைப்பு கொள்ள வேண்டுமென கேட்கிறார். சோர்வை தரும் வேலை. பலனில்லை என்றால் அதை ஏன் செய்ய வேண்டும்?” அஞ்சனாவிடம் 50 ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் விற்க முடியவில்லை. அவரின் குழந்தைகளுக்கு இக்கலையை கற்பதில் விருப்பமில்லை என்கிறார் அவர்.

அஞ்சனாவைப் போல 24 வயது கணேஷ் கயான், ஒரு காலத்தில் பைத்கார் ஓவியத்தில் பிரபலமாக இருந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது உடலுழைப்பும் செய்கிறார். அவர் சொல்கையில், “கடந்த வருடம் மூன்று ஓவியங்கள்தான் விற்றேன். இதை வருமானத்துக்கு சார்ந்திருந்தால், குடும்பத்தை எப்படி நடத்துவது?” எனக் கேட்கிறார்.

”புதிய தலைமுறைக்கு பாடல் எழுதத் தெரியவில்லை. பாடவும் கதைசொல்லவும் யாரேனும் கற்றுக் கொண்டால்தான் பைத்கார் ஓவியம் நீடிக்க முடியும். இல்லையெனில் மறைந்து விடும்,” என்கிறார் அனில்.

இக்கட்டுரையின் பைத்கார் ஓவியங்களை ஜோஷுவா போதிநெத்ரா , சீதாராம் பாஸ்கி மற்றும் ரோனித் ஹெம்ப்ரோம் உதவியுடன் மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்தக் கட்டுரை, மிருணாளினி முகர்ஜி அறக்கட்டளையின் (எம்.எம்.எஃப்) மானிய ஆதரவில் எழுதப்பட்டது.

தமிழில் : ராஜசங்கீதன்

Ashwini Kumar Shukla

अश्विनी कुमार शुक्ला झारखंड स्थित मुक्त पत्रकार असून नवी दिल्लीच्या इंडियन इन्स्टिट्यूट ऑफ मास कम्युनिकेशन इथून त्यांनी पदवी घेतली आहे. ते २०२३ सालासाठीचे पारी-एमएमएफ फेलो आहेत.

यांचे इतर लिखाण Ashwini Kumar Shukla
Editor : Sreya Urs

Sreya Urs is an independent writer and editor based in Bangalore. She has over 30 years of experience in print and television media.

यांचे इतर लिखाण Sreya Urs
Editor : PARI Desk

PARI Desk is the nerve centre of our editorial work. The team works with reporters, researchers, photographers, filmmakers and translators located across the country. The Desk supports and manages the production and publication of text, video, audio and research reports published by PARI.

यांचे इतर लिखाण PARI Desk
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan