“பழங்குடியினர் மும்பையிலும் வசிக்கின்றனர்,” என்கிறார் லட்கியா தாவ்டி. குறைந்த எண்ணிக்கையில் அல்ல, பழங்குடியின படாஸ்களில் (குக்கிராமங்கள்) இருந்து சுமார் 3000 பேர் மும்பை துணை நகரில் நடைபெற்ற உலக பூர்வகுடிகள் தினத்தில் பங்கேற்க வந்தனர்.
அந்த இதமான காலையில், காற்றெங்கும் கொண்டாட்டமும், நம்பிக்கையும் நிறைந்திருந்தது. ஆரே வனம், சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, முலுந்த், பந்துப், காண்டிவாலி, கோரை, மத் தீவு ஆகியவற்றிலிருந்து வந்த பழங்குடியினர் மும்பையின் ஆரே வனத்தின் நுழைவாயிலான கோரேகான் செக் நாகா அருகே திரண்டனர். ஆரே வனத்தில் 27 கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 10,000 பழங்குடியின சமூகங்கள் வசிக்கின்றனர்.
“இன்று எங்கள் திருவிழா,” என்கிறார் வடக்கு மும்பையின் மத்திய நகராட்சி வார்டின் கொராயில் உள்ள போர்கிபடாவைச் சேர்ந்த லட்கியா. பெண்கள் பல வண்ணங்களில் புடவைகளை அணிந்திருந்தனர். சில ஆண்கள் மட்டும் இலை, தழைகளை ஆடையாகவும், பாக்கு கொட்டையில் மாலையும் அணிந்திருந்தனர்.
சர்வதேச திருவிழாவை தங்களுக்கான தினமாக கருதி பழங்குடியினர் ஒன்றுக் கூடி மும்பையில் தங்கள் உரிமைகளை கோரினர். “நாங்கள் குன்றுகளையும், வனங்களையும் பாதுகாத்து வருகிறோம். இப்போது அரசிடம் நிலமில்லை, எனவே கிராமங்களைவிட்டு எங்களை வெளியேற்ற நினைக்கின்றனர்,” என்கிறார் வார்லி பழங்குடியின சமூசத்தைச் சேர்ந்த லட்கியா. உரிமைகளை நிரூபிக்க அவர்களிடம் நில ஆவணங்கள் ஏதுமில்லை என்பதால், முன்னோர்களின் நிலங்கள், வீடுகள், வாடிகள், வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்து உள்ளது. படிக்கவும்: ஆரே பழங்குடிகள்: ‘ பிறகு எங்கள் நிலத்தை இழந்தோம் ‘
“அரசு எங்களை வெளியிலிருந்து வந்த குடியேறியவர்கள் என்கிறது,” என்கிறார் மத் தீவின் கண்பதி படாவைச் சேர்ந்த வார்லி பழங்குடியினரான பார்வதி ஹட்டால். 32 வயதாகும் பார்வதி டியூஷன் ஆசிரியராக வேலை செய்கிறார். இவர் பேரணியை ஒருங்கிணைக்கும் அமைப்புகளில் ஒன்றான கஷ்டகாரி ஷேத்காரி சங்கடனா(KSS) அமைப்பைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரா ஆதிவாசி மஞ்ச், ஷ்ரமிக் முக்தி அந்தோலன் அமைப்புகளும் பேரணியில் பங்கேற்றுள்ளன.
KSS தலைவரும், நிறுவனருமான வித்தல் லாட், “அவர்கள் [அரசு] 1950ஆம் ஆண்டிற்கு முந்தைய பதிவுகளை கேட்கின்றனர். எழுத, படிக்க தெரிந்த நபரிடம் கூட அரசியலமைப்பு [இந்திய] நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய சான்றிதழ்கள் இருக்காது. பழங்குடியினரிடம் எப்படி இருக்கும்?” பட்டியலின பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டத்தில் ( வன உரிமைகள் சட்டம் என்றும் குறிப்பிடப்படுகிறது) எந்த ஏற்பாடும் இதற்கென இடம்பெறவில்லை.
பிற சான்றிதழ்களையும் அரசு வழங்க மறுப்பதாக அவர்கள் சொல்கின்றனர். “சாதி சான்றிதழ் அல்லது எங்கள் சாட்பாரா எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை,” என்கிறார் நாராயண் கதலி. அவர் தாக்கர் பழங்குடியின விவசாயி. அவர் ஆரேவின் பங்குடா படாவில் பீர்க்கங்காய், பரங்கிக்காய், பான், அம்பாடி(புளித்தக் கீரை) போன்ற காய்கறிகளை 3.5 குந்தாஸ் (ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவு) நிலத்தில் விளைவிக்கிறார். மகாராஷ்டிராவில் நில உரிமைச் சான்றாக சாட்பாரா இருக்கிறது.
“அவர்கள் [அரசு அலுவலர்கள்] மும்பையில் பழங்குடியினரே கிடையாது என்கின்றனர். நாங்கள் பழங்குடியினர் கிடையாது என்னும் அவர்கள், எங்கள் சாதி நிலை குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர்,” என்கிறார் அந்த தோட்டக்காரரும் பாடகருமான அந்த 39 வயதுக்காரர்.
பேரணியில் பங்கேற்றவர்களில் பலரிடம் தங்கள் நிலத்திற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லை. அதை பெறுவதற்கான நடைமுறை நீண்டதாகவும், கடினமானதாகவும் இருப்பதாக அவர்கள் சொல்கின்றனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “222 மும்பை பழங்குடியின படாஸ்களை காவோதன்ஸ் (பூர்வகுடி கிராமங்கள்) என அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும், தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும், இந்திய அரசியலமைப்பில் கூறியபடி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்,” எனக் கோருகிறது. சாதி சான்றிதழ்களுடன் பழங்குடியினரை மல் நிவாசிஸ் (பூர்வகுடிகள்) என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும், காடுகள் அழிக்கப்படுவதையும், பூர்வகுடி நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். படாஸ்களில் வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் பேசினர்.
“இது வெறும் மெட்ரோ கார் ஷெட் அமைப்பது மட்டுமல்ல, பற்பல வளர்ச்சித் திட்டங்கள் உள்ளன- குடியிருப்புத் திட்டங்கள், கோழிப்பண்ணை, பேக்கரி, ஆராய்ச்சி நிறுவனம், திரைப்பட நகரம், இன்னும் பல,” என்கிறார் வித்தல், வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும் முன்பு உள்ளூர் மக்களை அணுக வேண்டியதன் அவசியத்தையும் பட்டியலிட்டார்.
லட்கியா தாவ்தி மேலும் பேசுகையில் மும்பையில் காடுகள் மிச்சமிருப்பது,“பழங்குடியினரான எங்களால் தான். நாங்கள் அவற்றை பராமரிக்கிறோம்.” இச்செய்தியாளர் பேசிய போது, ஒவ்வொரு பழங்குடினரிடமும் இதே குரல் ஒலித்தது. “இதுபோன்ற தொடர் வளர்ச்சித் திட்டங்கள் ஆரே வனப்பகுதியை அழிக்கப் போகிறது. ஆரேவில் இந்த வளர்ச்சித் திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு நாங்கள் கோருகிறோம்,” என்கிறார் வித்தல்.
*****
2023 ஆகஸ்ட் 9ஆம் தேதி கோரேகானின் செக் நாகாவிலிருந்து ஆரே பால் பண்ணை வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள், “ ஹே ஜங்கல் ஆம்ச்சா, நஹி கொஞ்சாயா மால்கிச்சா[இந்த வனங்கள் எங்களுடையது, வேறு யாரும் உரிமை கோர முடியாது]” எனக் கோஷமிடுகின்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் அரசு அலுவலர்களுக்கு எதிராக பேசினர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பழங்குடியினரின் கூற்றுபடி, வாடிகளை பராமரிக்கவோ, வீடுகளை சரிசெய்யவோ அவர்கள் அனுமதிப்பதில்லை. “யாரும் எங்களுக்கு எதுவும் தரவில்லை. நாங்களே வாடி வளர்த்தோம், வயல்களை உருவாக்கினோம். எங்கள் வாடிகளை அவர்கள் [வனத்துறை, ஆரே பால்பண்ணை அலுவலர்கள்] அழிக்கின்றனர். எங்கள் வீடுகளை அவர்கள் உடைக்கின்றனர்,” என்கிறார் ஆரேவில் உள்ள மொராச்சா படாவைச் சேர்ந்த பேபிதை மாலி.
நகரில் வசித்தாலும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. “பல போராட்டங்களுக்குப் பிறகு, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து, இப்போது ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் பெறுகிறோம்,” என்கிறார் கோராயில் உள்ள சோட்டா டோங்கிரியின் பழங்குடியின சமூகப் பணியாளரான வனிதா ஷங்கர் கொட்டால். கோரையில் உள்ள படாஸ்களில் கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டாலும், ஆரேவின் பெரும்பாலான படாஸ்கள் அப்படி இல்லை. கம்பச்சா படா போன்ற கிராமங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் பெறுகின்றனர்.
கடக்படாவில், நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. “உங்களால் தண்ணீரை பார்க்கக் கூட முடியாது, அவ்வளவு அசுத்தமாக உள்ளது. பூச்சிகள் உள்ளன. குழாய்கள் உடைந்துள்ளன. நீங்களே வந்து பாருங்கள்,” என்கிறார் அங்கு குடியிருக்கும் 29 வயது வனிதா (இப்பெயரையே அவர் பயன்படுத்துகிறார்).
கொராயிலிருக்கும் KSS அமைப்பின் பழங்குடியினரான குணால் பாபர் சொன்னார், “சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பழங்குடியினரான நாங்கள் விடுதலைப் பெறவில்லை. எங்களை சுதந்திரம் வந்தடையவில்லை. அது எங்களை எங்களின் நிலத்திலிருந்து வெளியேற்றியது, மும்பையில் பழங்குடிகள் இல்லை என்கிறது அரசு. இது உண்மையென்றால், நாங்களெல்லாம் எங்கிருந்து வந்தோம்?”
*****
பழங்குடியினரின் வாழ்க்கை முறையை கொண்டாடும் வகையில், மும்பையைச் சுற்றியுள்ள இச்சமூகத்தினர் வழிபடும் இயற்கை தெய்வங்களான ஹிர்வதேவ், வாக்தேவோ ஆகியோரை போற்றி நாராயண் கதலி எழுதிய பாடல் இசைக்கப்பட்டு ஒரு நாள் நிகழ்வு முடிவுற்றது.
தோட்டக்கலை தொழிலாளரான 39 வயது நாராயண் சொல்கிறார், “அடுத்து வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நான் பாடல்களை எழுதுகிறேன்,” என. மும்பையின் பல்வேறு படாஸ்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் சிறப்பாக உடையணிந்து பதாகைகளை ஏந்தி ஆர்வத்துடன் முழக்கமிடுகின்ற்னார்: “ஆதிவாசி ஏக்சுட்டிச்சா விஜய் அசோ[பழங்குடியினர் ஒற்றுமைக்கு வெற்றி].”
“நாங்கள் மும்பையின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கிறோம். ஆனால் பழங்குடி மக்களின் பிரச்சனைகளும், கேள்விகளும் ஒன்று தான். இந்த பிரச்சனைகளை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டும்,” என்கிறார் பார்வதி.
தமிழில்: சவிதா