வலையொலியை இங்கே கேட்கலாம்

पर्यावरणाचा रं सत्यानाश केला,
वाघदेवा, जंगल वाचवाया तू धाव रं
आपल्या घराचा रं सत्यानाश केला,

वाघदेवा, जंगल वाचवाया तू धाव रं

அவர்கள் சுற்றுச்சூழலை அழித்துவிட்டனர்

ஓ புலி தேவனே, வந்து எங்களது வனங்களை காப்பாற்றும்

அவர்கள் எங்களது வீடுகளை சேதப்படுத்தி விட்டனர்

ஓ புலி தேவனே, வந்து எங்களது வனங்களை காப்பாற்றும்

மொழியாக்கம்

இவர் பிரகாஷ் போயிர், அவர் புலி தேவனிடம் தனது சமூகத்தையும் மற்றும் வனத்தின் பிற உயிரினங்களையும் தங்களது நிலத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றும் படி வேண்டிக் கொள்கிறார்.

பிரகாஷ், மல்ஹார் கோலி ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் வடக்கு மும்பையில் கோரேகவுனில் உள்ள பசுமையான ஆரே வனத் தொகுப்பில் உள்ள குக்கிராமமான கேல்டிபதாவில் வசித்து வருகிறார். இங்கு தான் பிறந்தார் அவர். அவரது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு தான் வசித்து வருகிறது என்றும் கூறுகிறார். 47 வயதாகும் பிரகாஷ், பெஸ்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பேருந்தில் பராமரிப்புத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

பிரகாஷ் போயிர்: வனங்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்கள் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கின்றனர். எனவே நீங்கள் தான் வந்து அவற்றைப் பாதுகாக்க எங்களுக்கு உதவ வேண்டும்.

சுமார் 3200 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆரே வனப்பகுதியில் (பலர் இதனை வனம் என்றே அழைக்கின்றனர்) 27 குக்கிராமங்கள் இருந்தன. அது ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் வசிக்கும் இடமாகவும் இருந்து வந்தது.

ஆனால் ஆரே மெதுவாக சுருங்கி வருகிறது. இது பல திட்டங்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. ஒரு பால் பண்ணை அல்லது பால் பதப்படுத்தும் நிறுவனத்துடன் துவங்கி, பின்னர் ஒரு திரைப்பட நகரம் (அல்லது திரைப்பட படப்பிடிப்புக்கான வளாகம்), ஒரு திரைப்பட பள்ளி மற்றும் மாநில ரிசர்வ் போலீசாருக்கான நிலம் ஆகியவையும் கையகப் படுத்தப்பட்ட இந்நிலத்தில் அடங்கும்.

அருகிலுள்ள நவ்சச்சபதாவில் மாநகராட்சியிடம் இருந்து மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளைப் பெறுவதற்காக பழைய மும்பை கால்நடை மருத்துவ கல்லூரியில் இருந்து தடையில்லா சான்றிதழை பெற பல தசாப்தங்களாக இம்மக்கள் போராடி வருகின்றனர். நீர் இணைப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. நவ்சச்சபதாவில் வசிக்கும் ராகேஷ் சிங்வான் இந்தப் போராட்டம் குறித்துப் பேசுகிறார்.

ராகேஷ் சிங்வான்: எங்களது வீட்டு வாசலுக்கு மிக அருகிலேயே (மின்சாரக்) கம்பி செல்கிறது. அங்கே ஒரு பழைய சிவப்பு மின்சாரப் (சந்தி) பெட்டி உள்ளது, நீங்கள் மேலே ஏறிய உடனேயே அது இருக்கும். எங்களது வாசல் வழியாக மின்கம்பிகள் அவர்களின் முதலாளிகளின் குடியிருப்புகளுக்குச் செல்கிறது. (மின்சார) விளக்குகள் அவர்களுக்கானவை எங்களுக்கானவை அல்ல. அவர்கள் நாங்கள் இங்கே இருப்பதை விரும்பவில்லை, அவர்கள் எங்களுக்கு மின்சாரத்தை வழங்கவும் விரும்பவில்லை...

Prakash Bhoir (left) of Keltipada questions the 'development' on his community's land.
PHOTO • Aakanksha
Rakesh Singhvan (right) of Navsachapada points to how the 'development has bypassed the Adivasi communities
PHOTO • Aakanksha

கேல்டிபதாவைச் சேர்ந்த பிரகாஷ் போயிர் (இடது) தனது சமூகத்தின் நிலத்தில் நடைபெறும் 'வளர்ச்சி' குறித்து கேள்வி எழுப்புகிறார். நவ்சச்சபதாவைச் சேர்ந்த ராகேஷ் சிங்வான் (வலது) எவ்வாறு 'வளர்ச்சி' ஆதிவாசி சமூகங்களை மட்டும் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.

இத்தகைய திட்டங்களில் சமீபத்தியது மற்றும் மிகவும் சர்ச்சைக்குள்ளானது மும்பை மெட்ரோவினால் முன்மொழியப்பட்ட அதன் மூன்றாம் வழித்தடத்திற்கான வாகன நிறுத்தும் இடம். இது மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெடால் (MMRCL) கட்டப்பட உள்ளது.

இந்த வாகன நிறுத்துமிடம் 30 ஹெக்டேர் அல்லது 75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் படி முன்மொழிகிறது. திறந்த வெளிகள் மற்றும் மர நிழலுக்காக  ஏங்கும் இந்தப் பெரு நகரத்தில் கட்டுமானத்திற்காக 2,600 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. இது பொதுமக்களை போராடவும் மற்றும் பொது நல வழக்குகளைத் தொடுக்கவும் தூண்டியுள்ளது.

இந்த மாதம், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, மரங்களை வெட்டுவதற்கான மாநகராட்சியின் மர ஆணையத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மரங்கள் வெட்டப்படுவதை எதிர்ப்பவர்களில் பதாக்களைச் சேர்ந்த ஆதிவாசிகளும் அடங்குவர். ஆரேயில் 'வளர்ச்சியின்' பாதிப்பை எதிர்கொண்ட கேல்டிபதாவைச் சேர்ந்த பிரகாஷ் போயிர் மற்றும் பிரமிளா போயிர், ப்ரஜபுர்பதாவைச் சேர்ந்த ஆஷா போயி மற்றும் நவ்சச்சபதாவைச் சேர்ந்த ராகேஷ் சிங்வான் ஆகியோரிடம் பேசினோம். மெட்ரோ திட்டம் துவங்கும் போது தனது சமூகத்தினர் அதைப் பற்றி அறிந்து இருக்கவில்லை என்று பிரகாஷ் கூறுகிறார்.

பிரகாஷ்: ஆரம்பத்தில் மெட்ரோ திட்டம் இங்கு வரப்போகிறது என்பதை கூட நாங்கள் உணரவில்லை. இங்கே பாருங்கள், இது நேரடியாக எங்களது கிராமத்தில் இருந்து துவங்கவில்லை. அவர்கள் ஒரு மூலையில் இருந்து துவங்கி இருக்கின்றனர், எடுத்துக்காட்டாக எண் 19 ப்ரஜபுர்பதாவில் இருந்து துவங்கி இருக்கின்றனர். எங்களது ப்ரஜபுர்பதாவில் ஆஷா போயி மற்றும் பிற ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர் - முதலில் அவர்கள் சில சிரமங்களைச் சந்தித்தனர். மற்றொரு விஷயம் என்னவென்றால் எங்களில் வெகு சிலரே தங்களது விவசாய நிலங்களை இழந்துள்ளோம். விவசாய நிலம் இல்லை என்றால் கூட பரவாயில்லை, நாங்கள் எங்களது வனத்தை இழந்து வருகிறோம். ஆகவே விவசாய நிலங்கள் இல்லை என்றால் கூடப் பரவாயில்லை, வனம் எங்களுக்கானதே. இங்கு 27 குக்கிராமங்கள் இருக்கின்றன இங்குள்ள மக்கள் பல்வேறு பொருட்களை காடுகளில் இருந்து பெற்று அதனை நம்பியே உயிர் வாழ்கின்றனர். எனவே மெட்ரோவிற்கான வேலை துவங்கிய போது, அதனை முதலில் எதிர்த்தவர்கள் நாங்களே. ஏனெனில் அவர்கள் வந்தால் மரங்கள் வெட்டப்படும், பல மக்கள் தங்களது விவசாய நிலங்களை இழப்பர் மற்றும் ஆதிவாசிகள் தங்களது வீடுகளையும் இழப்பர் என்பதால், அவர்கள் இங்கு வந்து வேலையைத் துவங்கக் கூடாது என்று நாங்கள்  அவர்களிடம் கூறினோம். அதனால் அவர்கள் (மெட்ரோ) இங்கு வரக்கூடாது என்று கூறினோம்.

இது 2017 ஆம் ஆண்டு ப்ரஜபுர்பதாவுடன் துவங்கியது. மெட்ரோ திட்டத்தால் 70 ஆதிவாசி குடும்பங்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக உள்ளூர்க்காரர்கள் மதிப்பிட்டுள்ளனர். 27 பதாவிலிருந்து இப்போது வெறும் 15 பதாவாகக் குறைந்து உள்ளது. ஆஷா போயி ஒரு அங்கன்வாடி பணியாளர் மற்றும் ஆதிவாசி தலைவர். முன்பு அவர் தனது வீட்டின் வெளி முற்றத்தில் அமர்ந்து தனது அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் தனது நிலத்தை பார்த்த இடத்தில் இப்போது அவர் மெட்ரோ கட்டுமான பணிகளுக்கான சுற்றுச் சுவரை மட்டுமே பார்க்க முடிகிறது. தங்களது மக்களிடம் இருந்து நிலம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மெட்ரோகாரர்கள் சத்தமாக துளையிட்டுக் கொண்டிருந்தனர்.

The Mumbai Metro car shed proposes to take over 75 acres of Aarey. This has triggered citizens’ protests and litigation
PHOTO • Aakanksha

மும்பை மெட்ரோவின் வாகன நிறுத்துமிடம் ஆரேவின் 75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் படி முன்மொழிகிறது. இது பொது மக்களை போராடவும் மற்றும் பொது நல வழக்குகளைத் தொடுக்கவும் தூண்டியுள்ளது.

ஆஷா போயி: முதலில் அவர்கள் ஆய்வு நடத்திய போது எங்களது குக்கிராமத்தைப் ப்ரஜபுர்பதா என்று எழுதி இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் தவறுதலாக, ப்ரஜபுர்பதாவிற்கு அருகிலுள்ள சரிபுத் நகரின் பெயரை மாற்றி எழுதிவிட்டனர்.

சரிபுத் நகர் ப்ரஜபுர்பதாவிற்கு அருகில் இருக்கும் சேரித் தொகுப்பு ஆகும்.

ஆஷா: ஆதிவாசிகள் வசிக்கும் இடமே பதா (குக்கிராமம்) என்று அழைக்கப்படுகிறது. அது ஒரு நகரமாகவோ அல்லது பெருநகரமாகவோ இருக்க முடியாது. அவர்கள் முதலில் இந்த இடத்தை ஆய்வு செய்தனர் பின்னர் இந்த இடத்தில் மெட்ரோ வரப்போவதாகவும், அதற்கு இழப்பீடாக மற்றொரு வீட்டை எங்களுக்கு வழங்குவதாகவும் கூறினார். ஆதிவாசிகள் வீட்டிற்கான இழப்பீடு பற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பினர் மேலும் அவர்களிடம் விவசாய நிலங்களைப் பற்றியும், இந்த மரங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்பது பற்றியும் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் அவர்கள் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எங்களுக்கு சொந்தமானவற்றிற்கு இழப்பீடு தருவார்கள் என்றும் கூறினர்.

அவர்கள் 2017 ஆம் ஆண்டு மே மாதம் சில வீடுகளை இடித்தனர். மக்கள் அவர்களது வீடுகளை விட்டு செல்ல மறுத்தனர், ஆனால் புல்டோசர்கள், அவர்களுக்கு வெளியேறுவதைத் தவிர வேறு வழியைத் தரவில்லை.

ஆஷா: 'அதன் பின்னர் தான் நாங்கள் எங்களது இந்த நிலத்தை இழந்தோம்'. அவர்கள் எங்களிடம் வந்து எதுவும் கேட்கக் கூட இல்லை. அவர்கள் வந்து இந்த சுற்றுச் சுவரை அமைத்து விட்டு சென்றனர். அதன் பிறகு அவர்கள் எங்களது நிலத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டனர், அதன் பிறகே நாங்கள் இது எங்களது நிலம் என்று வழக்குத் தொடர்ந்தோம். ஆனால் அவர்கள் முற்றிலும் மறுத்துவிட்டனர். பின்னர் அவர்கள் கையகப்படுத்திய இந்த இடத்தில் ஒரு ஆதிவாசி கூட வசிக்கவில்லை  என்றும், மேலும் இங்கு மரங்கள் எதுவும் இல்லை என்றும், மற்றும் இது முழுமையான ஒரு சேரித் தொகுப்பு என்றும் கூறிவிட்டனர். இதை அவர்கள் நீதிமன்றத்தில் கூறினார்கள். அவர்கள் எங்களிடம் வெறுமனே வாய் பேச்சாகத்தான் (எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை) கூறியிருந்தனர். எழுத்துப்பூர்வமாக எதையும் தரவில்லை. அவர்கள் கூறியதை எழுத்துப்பூர்வமாக கொடுக்கும்படி நாங்கள் அவர்களிடம் கேட்டு இருக்க வேண்டும் என்பது பற்றி அப்போது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவரிடம் அதைக் கேட்டுப் பெறவில்லை.

இடம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் வேலைகள் கூட தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தனர், ஆனால் அவர்கள் அதையும் செய்யவில்லை, என்று ஆஷா கூறுகிறார். அதற்கு மாறாக இடம்பெயர்ந்த ஆதிவாசிகளிடம் பலமுறை அடையாள அட்டைகள் கேட்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அவர்கள் 'திட்டத்தினால் பாதிப்புக்குள்ளான நபர்' என்ற சான்றிதழை பெறவில்லை, அதுவே அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பிற சலுகைகளுக்கான உரிமைகளை கோருவதற்கான சான்று.

ஆஷா: 7/12 பதிவு என்பது ஒரு நிலப்பதிவு இது சொத்தின் உரிமையாளர் பெயர், அதன் அளவு, ஆகிய அனைத்தும் (ஆவணத்தில்) அதில் எழுதப்பட்டிருக்கும். அவர்கள் இது அரசினுடைய நிலம் என்று கூறுகின்றனர். நீங்கள் இப்போது பார்த்தீர்களானால், இங்குள்ள ஆதிவாசிகள் அதிகம் படித்தவர்கள் இல்லை. அதனால் அவர்களுக்கு இந்த நடைமுறைகளைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. மேலும் அரசாங்கம் இப்போது எங்களிடம், இது எங்களுடைய நிலம் என்றால் 7/12 பதிவை காண்பிக்கும்படி கூறுகிறது. அவர்கள் எங்களை ஆதிவாசிகள் என்று நிரூபிக்கச் சொல்கிறார்கள். நாங்கள் ஆதிவாசிகள் தான், நாங்கள் அவர்களிடம் எங்களது ஜாதிச் சான்றிதழ்களை காண்பித்தோம். பின்னர் அவர்கள், 'நீங்கள் எப்படி உடுத்தி இருக்கிறீர்கள் என்று பாருங்கள். நீங்கள் ஆதிவாசிகளாக இருக்க முடியாது...' என்று  கூற ஆரம்பித்துவிட்டனர்.

Left: Asha Bhoye: 'But who is counting the trees that were cut earlier?'
PHOTO • Aakanksha
Right: Pramila Bhoir: 'I believe that trees should not be felled…'
PHOTO • Aakanksha

இடது: ஆஷா போயி: 'ஆனால், ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்களை யார் எண்ணுவது?' வலது: பிரமிளா போயிர்: 'மரங்களை வெட்டக்கூடாது என்று நான் நம்புகிறேன்...'

பிரகாஷும் தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.

பிரகாஷ்: ஆதாரங்களை வழங்குவது அரசாங்கத்தின் வேலை. ஆதாரத்தை (ஆவணங்கள் மற்றும் பதிவுகளை) எங்களால் உருவாக்க முடியாது.

மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்திற்கான மாற்று இடங்களை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

பிரகாஷ்: வாகன நிறுத்தும் இடத்திற்காக நாங்கள் வேறு இடங்களை கூட பரிந்துரைத்தோம். ஆனால் எங்களை யாரும் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை. ஆதிவாசிகளாகிய நாங்களும் ஒரு முன்னணியினை அமைத்தோம், அங்கு மக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். மெட்ரோ வேண்டும் என்று கூறி ஒரு முன்னணி கூற ஒருங்கிணைக்கப் படவில்லை. ஒன்றே ஒன்று கூட இல்லை.

ஆதிவாசிகள் மற்றும் ஆரேவை ஆதரிக்க பலர் முன் வந்துள்ளனர். பிரஹான் மும்பை மாநகராட்சியின் மர ஆணையம், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று, மெட்ரோ வாகன நிறுத்தும் இடத்திற்காக ஆரே பகுதியில் 2,600 க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு அல்லது இடப்பெயர்வு செய்து நடுவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பின்னர், பொதுமக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், 44 வயதாகும் ஆஷா ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறார்.

ஆஷா: 'ஆனால், ஏற்கனவே வெட்டப்பட்ட மரங்களை யார் எண்ணுவது?'

ஆஷாவினுடையது சிறிய நிலம், ஒரு ஏக்கருக்கும் குறைவானது, அதுவும் மெட்ரோ திட்டத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், எலுமிச்சை, துதி போன்ற பருவகால காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிட்டு, அவற்றை விற்று ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதித்து வந்தார். தங்களது நிலத்திற்காக தனது குடும்பத்தினருக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

ஆஷா: என் கணவரும், எனது மகளும் வீட்டில் இருந்தனர். இப்போது நாம் கேட்கும் சத்தத்தைப் போன்ற ஒரு சத்தத்தை அவர்களால் கேட்க முடிந்திருக்கிறது. அது மரங்களை வெட்டுவதற்கான இயந்திரம். அது ஒரு வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் நடந்தது. பத்துப் பதினைந்து பேர் இந்த இயந்திரங்களுடன் வந்தனர். எனது கணவரும், எனது மகளும் வெளியே சென்று அவர்களிடம் என்ன செய்யப் போகின்றனர் என்று விசாரித்து இருக்கின்றனர். அவர்கள் மரங்களை வெட்டுவதற்கு தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றனர். நான் அப்போது ஆரேவில் இருந்தேன், ஆனால் வீட்டிற்குச் செல்ல எனக்கு சுமார் 10 நிமிடங்கள் ஆனது. அதற்குள் அவர்கள் மரங்களை வெட்டி முடித்து விட்டனர். அவர்கள் மரங்களை வெட்டினர், அதுவே பெரிய மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

அவரது கணவர் கிஷான் போயியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது சிறிய பெட்டிக் கடையை இழந்தார். அதன் மூலம் அவர் ஒரு நாளைக்கு 1000 முதல் 3000 ரூபாய் வரை சம்பாதித்து வந்தார். அவர்களது வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆஷா: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதான சாலையில் எங்களுக்கு ஒரு கடை இருந்தது. அதை அவர்கள் இடித்து விட்டனர், மேலும் அதிலிருந்து அவர் (எனது கணவர்)  வீட்டிலேயே இருக்கிறார். நாங்கள் இந்த கடையில் இருந்தும், அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளில் இருந்தும் சம்பாதித்த பணத்தை வைத்து எங்களது குடும்பத்தை சமாளித்து வந்தோம். அவர்கள் எங்களது கடையையும் எடுத்துக் கொண்டனர், எங்களது நிலத்தையும் எடுத்துக் கொண்டனர். கஞ்சூரில் (வடக்கு மும்பையிலுள்ள கஞ்சூர்மார்க் பகுதியில்) எங்களுக்கு மாற்று கடையைத் தருவதாக அவர்கள் சொல்லியிருந்தனர். அவர்கள் தரவும் செய்தனர், ஆனால் நாங்கள் பார்க்கச் சென்ற போது, அது எவ்வளவு அழுக்கான இடம் என்பதை நாங்கள் கண்டோம். கடையின் கதவு முற்றிலும் உடைந்து இருந்தது மேலும் அது உண்மையில் (தனிமையில் ஊருக்கு  வெளியில் இருந்தது. நாங்கள் அங்கு எப்படி வியாபாரம் செய்வது? இப்போது குடும்பத்தை சமாளிப்பது மிகவும் கடினமானதாக  மாறிவிட்டது. சில காய்கறிகளை விற்பதன் மூலம் நாங்கள் உயிர் வாழ்ந்து வருகிறோம். இப்போது சொல்லுங்கள், நாங்கள் எப்படி எங்களது வீடுகளை நடத்துவது என்று?

Left: The Adivasis of Aarey have for long cultivated their shrinking famlands right next to a growing city.
PHOTO • Aakanksha
Right: Trees marked for chopping
PHOTO • Aakanksha

இடது: ஆரேயின் ஆதிவாசிகள் வளர்ந்து வரும் நகரத்திற்கு அடுத்தபடியாக உள்ள தங்களின் சுருங்கிக் கொண்டு வரும் விவசாய நிலங்களில், நீண்ட காலமாக பயிரிட்டு வருகின்றனர். வலது: வெட்டுவதற்காக குறியிடப்பட்ட மரங்கள்.

இன்று, ப்ரஜபுர்பதாவில் ஒரு அங்கன்வாடி ஊழியர் என்ற முறையில் ஆஷா மாதம் 3,000 ரூபாய்  சம்பாதித்து வருகிறார்.

ஆஷா போதுமான அளவிற்கு கஷ்டப்பட்டு விட்டார் மேலும் இப்போது அவர் ஒரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் உறுதியுடன் இருக்கிறார், அவர் நிறுத்த மாட்டார்.

ஆஷா: நீங்கள் 'வளர்ச்சியடைய' விரும்பினால், அதைச் செய்யுங்கள். ஆனால் ஆதிவாசிகளின் வாழ்க்கையின் மீது சவாரி செய்து அதை நீங்கள் செய்கிறீர்கள் என்றால் அது சரியானதல்ல, அப்படித் தானே? நீங்கள் ஆதிவாசிகளின் விவசாய நிலத்தை எடுத்துக் கொள்கிறீர்கள், அவர்களை மிரட்டுகிறீர்கள், அவர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள் - பின்னர் அவர்கள் நிலத்தில் நீங்கள் வளர்ச்சியை கொண்டு வரப் போகிறீர்களா?  நீங்கள் அவர்களுக்கு ஒரு வீட்டை கொடுத்து இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வீர்கள், ஆனால் நீங்கள் அவர்களின் விவசாய நிலத்தை எடுத்துக் கொள்ளும் போது நாங்கள் எப்படி வெளியேறுவோம்? இவை எங்களுக்கான வளர்ச்சி என்று  உங்களால் கூற முடியுமா? அது எங்களுக்கானதா? நீங்கள் எங்களது வாழ்வையே எடுத்துக் கொண்டு எங்களுக்கு வளர்ச்சி கொடுக்கிறேன் என்று கூறுவீர்களா? எங்களுக்கு எங்களது கிராமமும் இல்லை வேறு வீடும் இல்லை. இதுவே எங்களது உலகம். நாங்கள் வைத்திருக்கும் அனைத்தும் இங்கே தான் இருக்கிறது. இங்கிருந்து நாங்கள் வேறு எங்கு செல்வோம்?

பிரகாஷ் நாம் சிந்திக்கும் படியாக ஒன்றைக் கூறி விட்டுச் செல்கிறார்:

பிரகாஷ்: மனிதர்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கின்றனர். நான் அதை உண்மையிலேயே கேள்விக்கு உட்படுத்துகிறேன். அவர்கள் பல கண்டுபிடிப்புகளை செய்ததாக உணர்கின்றனர், பாலங்கள், மால்கள், பெருநகரங்கள் ஆகியவற்றை கட்டியுள்ளனர் மேலும் செவ்வாய் கிரகத்தை அடைந்து கொண்டிருப்பதாகவும் உணர்கின்றனர். அதனால் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் நான், நாம் அழிவை நோக்கி ஓடுகிறோம் என்று நினைக்கிறேன். மேலும் இது ஒரு ஜனநாயக நாடு என்றால் அவர்கள் மக்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். இது பேரிழப்பு மற்றும் அழிவை ஏற்படுத்தும் என்று மக்கள் பேசி வருகின்றனர். பின்னர் ஏன் அவர்கள் அதைக் கேட்கவில்லை? நான் அதை மிகவும் வித்தியாசமானதாகக் காண்கிறேன்.

அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் ஆரேயில் MMRCL மரம் வெட்டுவதை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்திருந்தது. 2,600 மரங்களில், பல மரங்கள் ஏற்கனவே வெட்டப்பட்டு இருந்தன.

விவசாயி, குடும்பத் தலைவி மற்றும் பிரகாஷின் மனைவியான, பிரமிளா போயிர், அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, இரண்டு நாட்களுக்கு பைக்குலா காவல் நிலையத்தில்  சிறை வைக்கப்பட்டார். அவர் மற்ற பொது மக்களுடன் சேர்ந்து மரங்கள் வெட்டுவதை எதிர்த்துப் போராடினார்.

பிரமிளா: அவர்கள் மரங்களை வெட்டினார்கள், எனவே மரங்களைப் பாதுகாக்க நாங்கள் அங்கு சென்றோம். நாங்கள் அங்கு காவலர்களை தாக்குவதற்காக செல்லவில்லை, நாங்கள் அங்கு சண்டையிடுவதற்கும் செல்லவில்லை. நீங்கள் படித்தவர்கள், நான் எழுத்தறிவில்லாதவள். இருந்தாலும் மரங்கள் வெட்டப் படக்கூடாது என்று நான் நம்புகிறேன்.

பின் குறிப்பு: ஆரே பகுதியில் மெட்ரோ வாகன நிறுத்தும் இடம் கட்டுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம், அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று, தெளிவுபடுத்தியதுடன், மரம் வெட்டுவதற்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

நன்மதிப்புகள் மற்றும் சிறப்பு நன்றிகள்:

கூடுதல் குரல் கொடுத்தவர்கள்: சாரா லத்தீப், ஊர்ணா ராவத்

மொழி பெயர்ப்பு: மேத்தா காலே, ஜோதி சினோலி, உர்ஜா

ஒலி சமன் செய்தல் /ஒலி உள்ளீடுகள்: ஹோபன் சக்கியா, ஹிமான்சு சக்கியா

தமிழில்: சோனியா போஸ்

Aakanksha

Aakanksha is a reporter and photographer with the People’s Archive of Rural India. A Content Editor with the Education Team, she trains students in rural areas to document things around them.

Other stories by Aakanksha
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose