இந்த வருட ஜுன் மாதத்தின் மூன்றாவது வெள்ளி அன்று தொழிலாளர் உதவி எண் அடித்தது.
“எங்களுக்கு ஊதியம் கொடுக்கவில்லை. நீங்கள் உதவி செய்ய முடியுமா?”
ராஜஸ்தானில் குஷால்கரிலிருந்து பக்கத்து தாலுகாக்களில் வேலை பார்க்க சென்ற 80 தொழிலாளர்கள் கொண்ட குழு அது. இரண்டு மாதங்களாக அவர்கள் இரண்டடி அகலமும் ஆறடி ஆழமும் கொண்ட குழிகளை தொலைத்தொடர்பு ஃபைபர் கம்பித் தடங்கள் பதிக்க அவர்கள் தோண்டியிருந்தார்கள். அவர்கள் தோண்டும் குழியின் ஒவ்வொரு மீட்டருக்கென ஊதியம் வழங்கப்படும்.
இரண்டு மாதங்கள் கழித்து, மொத்த ஊதியத்தை அவர்கள் கேட்டபோது, வேலை சரியாக இல்லையென சொன்ன ஒப்பந்ததாரர் எண்களில் குளறுபடி செய்து, இறுதியில், “கொடுக்கிறேன், கொடுக்கிறேன்,” எனக் கூறி ஆசுவாசப்படுத்த முயன்றார். ஆனால் கொடுக்கவில்லை. இன்னொரு வார காத்திருப்புக்கு பிறகு, அவர்கள் கொடுக்க வேண்டிய 7-8 லட்ச ரூபாய் ஊதியம் கொடுக்கப்படாததால், காவல்துறைக்கு தொழிலாளர்கள் செல்ல, அவர்கள் தொழிலாளர் உதவி எண்ணை அழைக்கக் கூறினர்.
தொழிலாளர்கள் தொடர்பு கொண்ட போது, “ஏதேனும் ஆவணம் இருக்கிறதா எனக் கேட்டோம். பெயர்களையும் ஒப்பந்ததாரர்களின் எண்களையும் பதிவேட்டின் புகைப்படங்களையும் கொடுக்க முடியுமா எனக் கேட்டோம்,” என்கிறார் மாவட்டத் தலைநகரான பன்ஸ்வாராவை சேர்ந்த சமூகப் பணியாளரான கமலேஷ் ஷர்மா.
அதிர்ஷ்டவசமாக செல்பேசியில் பரிச்சயம் கொண்ட சில இளம் தொழிலாளர்கள் கேட்ட எல்லா ஆவணங்களையும் கொடுக்க முடிந்தது. கூடுதலாக பணியிடங்களின் புகைப்படங்களையும் கொடுத்தார்கள்.
துயரம் என்னவென்றால், அவர்கள் தோண்டிய குழிகள், மக்களை ‘கனெக்ட்’ செய்யும் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்துக்கு என்பதுதான்.
தொழிலாளர் பிரச்சினைகளை கையாளும் ஆஜீவிகா என்கிற தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளரான கமலேஷ், அவர்களின் வழக்குக்கு உதவினார். அவர்களின் எல்லா தரவுகளிலும் 1800 1800 999 என்ற ஆஜீவிகா உதவி எண்ணும் பிற அதிகாரிகளின் எண்களும் இருக்கும்.
*****
வேலை தேடி புலம்பெயரும் லட்சக்கணக்கான மக்களில் பன்ஸ்வாராவின் தொழிலாளர்களும் அடக்கம். “குஷால்கரில் நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றனர்,” என்கிறார் சுராடா கிராமத் தலைவர் ஜோகா பிட்டா. “விவசாயத்தை மட்டும் நம்பி எங்களால் வாழ முடியவில்லை.”
சிறு நிலங்கள், நீர்ப்பாசனமின்மை, வேலையின்மை, வறுமை ஆகியவை, அந்த மாவட்டத்தை புலம்பெயருபவர்களை கொண்ட மையமாக்கி இருக்கிறது. இங்குள்ள மக்கள்தொகையில் 90 சதவிகிதம் பேர் பில் பழங்குடிகள்தாம். சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடுக்கான ஒரு சர்வதேச நிறுவனத்தின் ஆய்வின் படி, காலநிலை தீவிரமாகும் பஞ்சம், வெள்ளம், வெப்ப அலை போன்ற நேரங்களில் புலப்பெயர்வு அதிகரிக்கிறது.
குஷால்கரின் மும்முரமான பேருந்து நிலையங்களில் 50 மாநிலப் பேருந்துகள் அன்றாடம் 50-100 பேரை ஏற்றிக் கொண்டு பயணிக்கின்றன. அதே எண்ணிக்கையில் தனியார் பேருந்துகளும் செல்கின்றன. சூரத்துக்கான ஒரு பயணச் சீடிட்ன் விலை ரூ.500. குழந்தைகளுக்கு சீட்டு வாங்குவதில்லை என்கிறார் நடத்துநர்.
சூரத் செல்லும் பேருந்தில் விரைவாக ஏறி இடம் தேடி அடையும் சுரேஷ் மைடா, தன் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் சீட்டில் அமர வைக்கிறார். பேருந்துக்கு பின்னால் லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஐந்து கிலோ மாவு, பாத்திரங்கள் மற்றும் துணிகள் கொண்ட பெரிய சாக்குப் பையை வைத்து விட்டு, மீண்டும் பேருந்துக்குள் ஏறுகிறார்.
”நாளொன்றுக்கு நான் 350 ரூபாய் சம்பாதிப்பேன்,” என்கிறார் தினக்கூலி தொழிலாளரும் பில் பழங்குடியுமான அவர். அவரது மனைவில் 200-300 ரூபாய் ஈட்டுகிறார். திரும்ப வருவதற்கு முன் ஒன்றிரண்டு மாதங்களுக்கு அவர்கள் தங்கியிருப்பார்களென நினைக்கும் சுரேஷ், 10 நாட்கள் மட்டும் வீட்டில் இருந்துவிட்டு கிளம்ப நினைக்கிறார். “10 வருடங்களாக இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்,” என்கிறார் 28 வயதாகும் அவர். சுரேஷ் போன்ற புலம்பெயர் தொழிலாளர்கள், ஹோலி, தீபாவளி, ரக்ஷா பந்தன் போன்ற விழாக்களுக்கு வழக்கமாக ஊருக்கு வருவார்கள்.
ராஜஸ்தான் முழுமையான புலம்பெயர் மாநிலமாக இருக்கிறது. வேலைகளுக்காக அந்த மாநிலத்துக்குள் புலம்பெயர்ந்து வருபவர்களை விட, அங்கிருந்து புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். உத்தரப்பிரதேசத்திலும் பிகாரிலும் கூட பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து செல்கின்றனர். “ஒரே வாழ்வாதாரமாக இருக்கும் விவசாயமும் கூட, மழை பெய்த பிறகு ஒரே முறை மட்டும்தான் உதவுகிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் குஷால்கர் தாலுகா அதிகாரியான வி.எஸ்.ராதோட்.
எல்லா தொழிலாளர்களும் ஒரு ஒப்பந்ததாரரை சார்ந்திருக்கும் கயாம் வேலை முறையை நம்பியிருக்கின்றனர். தினசரி காலை தொழிலாளர் சந்தையில் காத்திருக்கும் ரோக்டி அல்லது டெகாடி ஆகிய முறைகளை விட இம்முறையில் வேலைக்கு உறுதி இருக்கும்.
ஜோகாஜி, அவரின் குழந்தைகள் அனைவரையும் படிக்க வைத்து விட்டார். எனினும் “வேலையின்மை இங்கு அதிகம். படித்தவர்களுக்கும் வேலை இல்லை,” என்கிறார் அவர்.
புலப்பெயர்வு மட்டும்தான் வேலைக்கான ஒரே சாத்தியம்.
ராஜஸ்தாக்குள் வேலைக்காக புலம்பெயர்ந்து வருபவர்களை விட, அங்கிருந்து புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். உத்தரப்பிரதேசத்திலும் பிகாரிலும் கூட பெரும் எண்ணிக்கைதான்
*****
மரியா பாரு வீட்டை விட்டு கிளம்பும்போது ஒரு மண் சட்டியை எடுத்து செல்கிறார். அது அவருக்கு முக்கியம். சோள ரொட்டிகளை அதில் நன்றாக செய்யலாம். சூட்டை தாங்கும் அந்த சட்டியில்தான் கருகாமல் ரொட்டி செய்ய முடியும் என சொல்லி அதை செய்யும் விதத்தையும் காட்டுகிறார்.
மரியாவும் அவரது கணவர் பாரு டாமோரும் பன்ஸ்வாராவிலிருந்து சூரத், அகமதாபாத், வாபி மற்றும் குஜராத் நகரங்களுக்கு வேலை தேடிச் செல்லும் லட்சக்கணக்கான பில் பழங்குடிகளில் அடக்கம். “ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அதிக நாட்கள் பிடிக்கும். போதுமானதாக இருக்காது,” என்கிறார் 100 நாள் வேலை திட்டத்தை பற்றி பாரு.
30 வயதாகும் மரியா 10-15 கிலோ சோள மாவும் எடுத்துக் கொள்கிறார். “எங்களுக்கு பிடித்தவை இவை,” என்கிறார் அவர் வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கு புலம்பெயரும் குடும்பத்தின் உணவுப் பழக்கத்தை விவரித்து. புலம்பெயரும்போது பரிச்சயமான உணவு இருப்பது ஒரு வசதி.
இருவருக்கு 3-12 வயதுகளில் இருக்கும் ஆறு குழந்தைகள் இருக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் இரு ஏக்கர் நிலத்தில் கோதுமை, சன்னா, சோளம் ஆகியவற்றை சொந்த பயன்பாட்டுக்காக விளைவிக்கிறார்கள். “புலம்பெயராமல் சமாளிக்க முடியாது. பெற்றோருக்கு நான் பணம் அனுப்ப வேண்டும். நீர்ப்பாசனத்துக்கும் கால்நடை தீவனத்துக்கும் குடும்பத்தின் உணவுக்கும் காசு கொடுக்க வேண்டும்,” என செலவுகளை பட்டியலிடுகிறார் பாரு. “எனவே நாங்கள் புலம்பெயருகிறோம்.”
எட்டு வயதில் முதன்முதலாக புலம்பெயர்ந்தார் அவர். மருத்துவ செலவுக்காக குடும்பம் பட்ட 80,000 கடனுக்காக அண்ணன்மற்றும் அக்காவுடன் புலம்பெயர்ந்தார். “அது ஒரு குளிர்காலம்,” என நினைவுகூருகிறார். “அகமதாபாத்துக்கு சென்றேன். நாளொன்றுக்கு 60 ரூபாய் கிடைக்கும்.” கடனை அடைப்பதற்காக நான்கு மாதங்கள் வசித்தார்கள். “என்னால் உதவ முடிந்ததற்கு சந்தோஷமாக இருந்தது,” என்கிறார் அவர். இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அவர் சென்றார். 25 வருடங்களாக புலம்பெயரும் வாழ்க்கையில் இருக்கும் பாரு, தற்போது முப்பது வயதுகளின் தொடக்கத்தில் இருக்கிறார்.
*****
கடன்களை தீர்க்கவும் குழந்தைகளின் படிப்பை தொடரவும் பட்டினி போக்கவும் ஏதோவொரு வகை அதிர்ஷ்டம் வாய்க்காதா என புலம்பெயர் தொழிலாளர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் சாத்தியமில்லை. ஆஜீவிகா நடத்தும் மாநிலத் தொழிலாளர் உதவி எண்ணுக்கு மாதந்தோறும் 5,000 அழைப்புகள், ஊதியம் கொடுக்கப்படவில்லை என புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வருகிறது.
“கூலி உழைப்புக்கு, முறையான ஒப்பந்தங்கள் கிடையாது. வார்த்தை அளவில்தான் ஒப்பந்தங்கள். தொழிலாளர்கள் ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து அடுத்த ஒப்பந்ததாரருக்கு மாற்றப்படுவார்கள்,” என்னும் கமலேஷ், பன்ஸ்வாரா மாவட்டத்தில் மட்டும் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படு ஊதியமே கோடிக்கணக்கில் பெறும் என்கிறார்.
“முதன்மை ஒப்பந்ததாரர் யாரென்றோ யாருக்கு வேலை பார்க்கிறார்கள் என்றோ அவர்களுக்கு தெரிந்திருக்காது. எனவே ஊதிய பாக்கி பெறுவது என்பது மிக கடினமான வேலை,” என்கிறார். அவரின் வேலை, புலம்பெயர் தொழிலாளர்கள் சுரண்டப்படும் விதத்தை அவருக்கு வெளிப்படுத்துகிறது.
ஜூன் 20, 2024 அன்று 45 வயது பில் பழங்குடியான ராஜேஷ் தாமோரும் பிற இரு ஊழியர்களும் பன்ஸ்வாராவிலுள்ள அவரது அலுவலகத்துக்கு வந்து உதவி கேட்டனர். தொழிலாளர்களுக்குள் தகிக்கும் வெப்பத்துக்கு மாநிலத்தில் எப்போதும் இருக்கும் தகிக்கும் தட்பவெப்பம் மட்டும் காரணமல்ல. அவர்களை பணிக்கமர்த்திய ஒப்பந்ததாரரிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.226,000 தொகை குறித்து புகாரளிக்க அவர்கள், குஷால்கரின் படான் காவல் நிலையத்துக்கு சென்றார்கள். காவலர்கள்தான் அவர்களை ஆஜீவிகா ஷ்ரமிக் சஹாயதா எவம் சந்தார்ப் கேந்திராவுக்கு அனுப்பினார்கள். அப்பகுதியிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மையம் அது.
ஏப்ரல் மாதத்தில் ராஜேஷும் 55 பணியாளர்களூம் 600 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குஜராத்தின் மோர்பிக்கு சென்றார்கள். அங்குள்ள ஓடுகள் ஆலையில் கட்டுமானப் பணி செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். தினக்கூலியாக ரூ.700, 10 திறன் தொழிலாளருக்கும் மற்றவர்களுக்கு ரூ.400-ம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஒரு மாதம் வேலை பார்த்த பிறகு, “ஊதிய பாக்கியை கொடுக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டோம். அவர் தாமதித்துக் கொண்டே இருந்தார்,” என்கிறார் ராஜேஷ் தொலைபேசியில் பாரியிடம். பிலி, வாக்தி, மெவாரி, இந்தி மற்றும் குஜராத்தி என ஐந்து மொழிகளை பேசுவதால் பேச்சுவாரத்தையில் ஈடுபட ராஜேஷுக்கு ஏதுவாக இருந்தது. அவர்களுக்கு ஊதியம் தர வேண்டிய ஒப்பந்ததாரர் மத்தியப்பிரதேசத்டின் ஜபுவாவில் இருந்தார். இந்தி பேசினார். முதன்மை ஒப்பந்ததாரருடன் தொழிலாளர்கள் பேச முடியாமல் போக பெரும்பாலும் தடையாக இருப்பது மொழிதான். விளைவாக, அவருக்கு கீழ் இருக்கும் பிற ஒப்பந்ததாரர்களின் வழியாகவே அவரை அடைய வேண்டியிருக்கும். சில நேரங்களில் ஒப்பந்ததாரர் உடல்ரீதியான வன்முறையைக் கூட, ஊதிய பாக்கி கேட்கும் தொழிலாளர்கள் மீது காட்டுவார்கள்.
56 தொழிலாளர்களும் பல வாரங்கள் காத்திருந்தனர். வீட்டில் உணவு தீர்ந்து கொண்டிருந்தது. சந்தையில் உணவு வாங்குவதால் வருமானமும் கரைந்து கொண்டிருந்தது.
“அவர் தாமதித்துக் கொண்டே இருந்தார். 20ம் தேதி என்றார், பிறகு 24 மே, அதற்கு பிறகு ஜூன் 4 என ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தார்,” என நினைவுகூருகிறார் ராஜேஷ். “அவரிடம் நாங்கள் ‘எப்படி நாங்கள் சாப்பிடுவது? வீட்டிலிருந்து தூரத்தில் இருக்கிறோம்’ என்றோம். இறுதியில் 10 நாட்களுக்கு நாங்கள் வேலை செய்வதை நிறுத்தினோம். அவர் ஊதியம் கொடுக்கும் கட்டாயத்தை அது உருவாக்குமென நினைத்தோம்.” ஜூன் 20ம் தேதி தந்து விடுவதாக உறுதி அளித்தனர்.
தங்குவதற்கு வழியின்றி ஜூன் 9ம் தேதி, 56 பேரும் குஷால்கருக்கு கிளம்பினர். ஜூன் 20ம் தேதில் ராஜேஷ் தொடர்பு கொண்ட போது, “அவர் காட்டமாக பேசி எங்களை திட்டினார்.” அப்போதுதான் ராஜேஷும் பிறரும் காவல் நிலையத்துக்கு சென்றனர்.
ராஜேஷுக்கு 10 பிகா நிலம் இருக்கிறது. சோயாபீன், பருத்தி, கோதுமை ஆகியவற்றை வளர்த்து சொந்த பயன்பாட்டுக்கு கோதுமையை பயன்படுத்துகின்றனர். அவரின் நான்கு குழந்தைகளும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கல்வி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். எனினும் இந்த கோடையில், அவர்கள் பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலைக்கு சென்றனர். “இது விடுமுறை நாட்கள்தான். எனவே எங்களுடன் சேர்ந்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கும்படி கூறினேன்,” என்கிறார் ராஜேஷ். ஒப்பந்ததாரர் மீது தொழிலாளர் மன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுமென மிரட்டப்பட்டிருப்பதால் வருமானம் கிடைக்குமென அவர் நம்புகிறார்.
தொழிலாளர் நீதிமன்றம் என்கிற வார்த்தைகளெல்லாம் ஒப்பந்ததாரர்களை பயமுறுத்திவிடவில்லை. ஆனால் அங்கு செல்ல வேண்டுமெனில், தொழிலாளர்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இங்கிருந்து மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூரில் சாலைக் கட்டுமானத்துக்கு வேலை பார்க்க சென்றிருந்த 12 தொழிலாளர்கள், மூன்று மாதங்கள் பார்த்த வேலைக்கான முழு ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது. வேலை மோசமாக இருந்ததாக சொல்லி, தர வேண்டிய 4-5 லட்சம் ரூபாயை மறுத்திருக்கிறார்.
“ஊதியம் கொடுக்கப்படாமல் மத்தியப்பிரதேசத்தில் சிக்கிக் கொண்டோம் என ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது,” என நினைவுகூருகிறார் டீனா கராசியா. இது போல செல்பேசி அழைப்புகள் அவருக்கு வருவது வழக்கம். “எங்களின் எண்கள் தொழிலாளர்கள் மத்தியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன,” என விளக்குகிறார் பன்ஸ்வாராவிலுள்ள ஆஜீவிகா வாழ்வாதார அமைப்பின் தலைவர்.
இம்முறை, தாங்கள் வேலை பார்த்த இடம் பற்றிய விவரங்களையும் பதிவேடு புகைப்படங்களையும் ஒப்பந்ததாரரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களையும் வழக்குக்காக கொடுக்க முடிந்தது.
ஆறு மாதங்கள் கழித்து ஒப்பந்ததாரர் இரண்டு தவணையாக ஊதியத்தை கொடுத்தார். “அவர் இங்கு வந்து பணத்தை கொடுத்தார்,” என்கிறார் ஊதியம் பெற்ற தொழிலாளர்கள். தாமதமானதற்கான வட்டியை கொடுக்கவில்லை.
“முதலில் பேச்சுவார்த்தைக்கு முயலுவோம்,” என்கிறார் கமலேஷ் ஷர்மா. “ஆனால் அதுவும் ஒப்பந்ததாரர் விவரங்கள் இருந்தால்தான் சாத்தியம்.”
சூரத் ஜவுளி ஆலையில் வேலை பார்க்க சென்ற 25 தொழிலாளர்களிடம் எந்த ஆவணமும் இல்லை. “அவர்கள் ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து இன்னொரு ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டார்கள். முதன்மை ஒப்பந்ததாரரின் பெயரோ தொலைபேசி எண்ணோ அவர்களிடம் இல்லை,” என்கிறார் டீனா. “ஆலையையும் அவர்களால் அடையாளம் காட்டம் முடியவில்லை.”
துன்புறுத்தப்பட்டு, சேர வேண்டிய 6 லட்சம் ரூபாயும் நிராகரிக்கப்பட்ட அவர்கள், பன்ஸ்வாராவின் குஷால்கர் மற்றும் சஜ்ஜன்கரிலுள்ள கிராமங்களுக்கு திரும்பினர்.
இத்தகைய சிக்கல்களால்தான் சமூகப்பணியாளரான கமலேஷ் சட்டறிவின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். மாநில எல்லையில் அமைந்திருக்கும் பன்ஸ்வாரா மாவட்டம் அதிகபட்சமான புலப்பெயர்வை கொண்டிருக்கிறது. குஷால்கர், சஜ்ஜன்கர், அம்பாபாரா, காடோல் மற்றும் கங்கார் தலாய் போன்ற இடங்களின் எண்பது சதவிகித குடும்பங்களிலிருந்து ஒரு நபரேனும் புலம்பெயர்கிறார் என்கிறது ஆஜீவிகாவின் ஆய்வுத் தரவு.
“இளைஞர்களிடம் செல்பேசிகள் இருப்பதாலும் எண்கள் சேமிக்க முடிவதாலும், புகைப்படங்கள் எடுக்கும் சாத்தியம் இருப்பதாலும் எதிர்காலத்தில் ஒப்பந்ததாரரை பிடிப்பது சுலபமாகி விடும்,” என நம்பிக்கை தெரிவிக்கிறார் கமலேஷ்.
ஒன்றிய அரசின் சமாதான் இணையதளம் நாடு முழுவதும் செப்டம்பர் 17, 2020 அன்று செயலுக்கு வந்தது. தொழிற்துறை பிரச்சினைகளுக்காக உருவாக்கப்பட்ட அந்த இணையதளம், 2022ம் ஆண்டில் தொழிலாளர்கள் தங்களின் பிரச்சினைகளை பதிவு செய்யவும் அனுமதித்தது ஆனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பன்ஸ்வாராவில் அதற்கு அலுவலகம் இல்லை.
*****
ஊதிய உரையாடல்களில் புலம்பெயர் பெண் தொழிலாளர்களுக்கு பேச்சு இல்லை. சொந்தமாக செல்பேசி அவர்களிடம் இருப்பதில்லை. அவர்களை சுற்றியிருக்கும் ஆண்களுக்குதான் ஊதியங்கள் சென்றடையும். பெண்கள் செல்பேசிகள் வாங்க கடும் எதிர்ப்பு இருக்கிறது. அஷோக் கெலாட்டின் தலைமையிலான கடந்த மாநில அரசு, 13 கோடி இலவச செல்பேசிகள் பெண்களுக்கு விநியோகிக்கும் திட்டத்தை அறிவித்தது. கெலாட் ஆட்சி இருக்கும் வரை, 25 லட்சம் செல்பேசிகள் வரை விநியோகிக்கப்பட்டன. முதல் கட்டத்தில் கைம்பெண்களுக்கும் புலம்பெயர் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த 12ம் வகுப்பு இளம்பெண்களுக்கும் செல்பேசிகள் கொடுக்கப்பட்டன.
அடுத்து வந்த பாரதீய ஜனதா கட்சியின் பஜன் லால் சர்மா தலைமையிலான அரசாங்கம் ”பலன்கள் பரிசீலிக்கப்படும் வரை” அத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. பதவிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்ளேயே அவர் எடுத்த முடிவுகளில் இதுவும் ஒன்று. மீண்டும் திட்டம் உயிர்ப்பெறாது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.
வருமானம் மீது அதிகாரம் கொள்ள முடியாத நிலை, பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பாலின ஒடுக்குமுறை, பாலியல் அச்சுறுத்தல் மற்றும் கையறுநிலை ஆகியவற்றுடன் ஒன்றாக மாறியிருக்கிறது. வாசிக்க: முடக்கி வாயடைக்கும் குடும்பத் தளைகள் .
“கோதுமையை நான் சுத்தம் செய்தேன். அவர் அதை 5-6 கிலோ சோள மாவுடன் சேர்த்து எடுத்து சென்றுவிட்டார்,” என நினைவுகூருகிறார் பெற்றோருடன் குஷால்கரின் சுராடாவில் வசிக்கும் பில் பழங்குடியான சங்கீதா. மணம் முடித்த பிறகு சூரத்துக்கு புலம்பெயர்ந்த கணவருடன் சேர்ந்து அவரும் சென்றார்.
“கட்டுமான வேலையில் நான் உதவினேன்,” என நினைவுகூரும் அவர் தன் ஊதியத்தை கணவரிடம் கொடுத்து விடுகிறார். “அங்கு எனக்கு பிடிக்கவில்லை.” இருவருக்கும் குழந்தைகள் பிறந்த பிறகு, அவர் பணிக்கு செல்வதை நிறுத்தி விட்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் ஏழு, ஐந்து மற்றும் நான்கு வயதுகளில் இருக்கின்றன. “வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டேன்.”
ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் கணவரை பார்க்காமல் இருக்கிறார். பணமும் கணவரிடமிருந்து வந்து சேரவில்லை. “குழந்தைகளுக்கு உணவளிக்க முடியவில்லை என்பதால் பெற்றோர் வீட்டுக்கு நான் வந்து விட்டேன்.”
இறுதியில், இந்த வருடம் (2024) ஜனவரி மாதம், குஷால்கர் காவல் நிலையத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்தார். தேசிய குற்ற ஆவண அமைப்பின் (NCRP) 2020ம் ஆண்டு அறிக்கைபடி, நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான (கணவர் அல்லது உறவினரால்) தொடுக்கப்படும் வன்முறை வழக்குகளில் ராஜஸ்தான் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
குஜால்கர் காவல்நிலையத்தில் தீர்வு கேட்டு வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவலர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் எல்லா வழக்குகளும் அவர்களுக்கு வருவதில்லை என்றும் பஞ்சாதியாவில் - தீர்வுகள் வழங்கும் கிராமத்தின் ஆண்கள் குழு - காவலர்களின் தலையீடு இன்றி தீர்த்துக் கொள்வதாகவும் காவலர்கள் சொல்கின்றனர். “ பஞ்சாதியா இரு பக்கங்களிடம் இருந்தும் பணம் பெற்றுக் கொள்கின்றனர்,” என்கிறார் அந்த ஊரை சேர்ந்தவர். “நீதி என்பது கண் துடைப்புதான். பெண்களுக்கான நீதி கிடைப்பதில்லை.”
கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக உறவினர்கள் சொல்லும்போது சங்கீதாவின் துயரம் மோசமடைகிறது. “ஒரு வருடமாகியும் குழந்தைகளை கூட பார்க்க வராமல் நோகடித்திருக்கிறார் அவர். இறந்து விட்டாரா என என்னை கேட்கின்றனர். அவரை திட்டும் என் மூத்த மகன், “போலீஸ் அவரை பிடித்ததும் நீங்களும் அவரை அடியங்கள் அம்மா!” என்கிறான்,” என்கிறார் அவர் சிறு புன்னகையுடன்.
*****
சனிக்கிழமை பிற்பகலில் யாருமில்லாத கேர்பூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் 27 வயது சமூகப் பணியாளர் மென்கா டாமோர், குஷால்கரின் ஐந்து பஞ்சாயத்துகளை சேர்ந்த இளம்பெண்களுடன் பேசுகிறார்.
“உங்களின் கனவு என்ன?” என அவர் சுற்றி அமர்ந்திருக்கும் 20 பெண்களை கேட்கிறார். அவர்கள் அனைவரும் புலம்பெயர் தொழிலாளர்களின் மகள்கள். பெற்றோருடன் பயணிப்பவர்கள், பயணிக்கவிருப்பவர்கள். “பள்ளிக்கு நாங்கள் சென்றாலும் இறுதியில் நாங்களும் புலம்பெயர்ந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்கின்றனர்,” என சொல்கிறார் இளம்பெண்களுக்கான கிஷோரி ஷ்ராமிக் பணியை செய்து வரும் மென்கா.
புலப்பெயர்வை தாண்டியும் எதிர்காலம் இருக்குமென்பதை அவர்கள் உணர அவர் விரும்புகிறார். வாக்தி மற்றும் இந்தி மொழிகளில் மாற்றி மாற்றி, அவர் பல வேலைகள் செய்யும் மக்களின் புகைப்படங்களை காட்டுகிறார். புகைப்படக் கலைஞர், பளு தூக்குபவர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்கேட் செய்பவர், ஆசிரியர் மற்றும் பொறியாளர் என பல வேலைகளை காட்டி, “நீங்கள் விரும்பினால் என்னவாகவும் ஆகலாம். ஆனால் அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்,” என்கிறார் மலர்ந்த முகங்களை பார்த்து.
”புலப்பெயர்வு மட்டுமே வாழ்வதற்கு இருக்கும் வழி அல்ல.”
தமிழில்: ராஜசங்கீதன்