37 வயது கானி சாமா, இயற்கையியலாளரும் நால் சரோவர் ஏரி மற்றும் குஜராத் பறவைகள் சரணாலயத்தின் படகுக்காரரும் ஆவார். அகமதாபாத் மாவட்டத்தின் விராம்கம் தாலுகாவிலிருக்கும் 120 சதுர கிலோமீட்டர் ஏரி, ஆர்டிக் பெருங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு மத்திய ஆசிய பறக்கும்பாதையின் வழியாக வரும் வலசைப் பறவைகளை ஈர்க்கும் இடமாகும்.
“பறவைகளில் 350 வகைகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்,” என்கிறார் அவர் நால் சரோவருக்கு வரும் வலசைப் பறவைகளிலுள்ள பலவற்றையும் சேர்த்து. தொடக்கத்தில் இங்கு 240 பறவை இனங்கள் வந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 315 ஆக உயர்ந்திருக்கிறது.”
கானி தன் பால்யத்தை ஏரியை சுற்றிதான் கழித்திருக்கிறார். “என் தந்தையும் தாத்தாவும் இந்தப் பறவைகளை காக்க வனத்துறைக்கு உதவியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் வனத்துறைக்கு படகுக்காரர்களாக பணிபுரிந்தனர். இப்போது நானும் அதைதான் செய்கிறேன்,” என்கிறார் அவர். “1997ம் ஆண்டில் இந்த வேலையை தொடங்கும்போது, அவ்வப்போது வேலை கிடைக்கும். பிற நேரங்களில் இருக்காது,” என அவர் நினைவுகூருகிறார்.
2004ம் ஆண்டில் நிலவரம் மாறியது. பறவைகளை காக்கவும் ரோந்து பார்க்கவும் வனத்துறை அவரை படகுக்காரராக பணிக்கமர்த்தியது. “மாதத்துக்கு ரூ.19,000 வருமானம் ஈட்டுகிறேன்.”
மூன்றாம் தலைமுறை படகுக்காரரும் பறவைக்காரருமான அவர், நால் சரோவரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெகாரியா கிராமத்தில் வளர்ந்தார். இந்த ஏரியை சார்ந்த சுற்றுலாப் பணிகள்தாம், கிராமத்தின் மக்களுக்கு இருக்கும் ஒரே வருமானம்.
கிராமத்தின் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்த கானி, குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் பொருட்டு 7ம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்தினார். இரு சகோதரர்களும் இரு சகோதரிகளும் அவருக்கு இருக்கின்றனர். 14 வயதாக இருக்கும்போது, தனியார் படகுக்காரராக நால் சரோவரில் படகோட்ட தொடங்கினார்.
முறையான கல்வியை நிறுத்தியிருந்தாலும், முதல் பார்வையிலேயே எந்த பறவையையும் கானியால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். தொடக்கத்தில் அவரிடம் தொழில்முறை கேமரா இல்லையென்றாலும், வன உயிரை புகைப்படம் எடுக்காமல் அவர் இருந்ததில்லை. ”என்னிடம் கேமரா இல்லாதபோது, டெலஸ்கோப்பில் என் செல்பேசியை வைத்து, பறவைகளை புகைப்படம் எடுத்தேன்.” இறுதியில் அவர் Nikon COOLPIX P950 கேமராவும் பைனாகுலர்களும் 2023-ல் வாங்கினார். “ஆர்.ஜே.பிரஜாபதி (துணை வனப் பாதுகாவலர்) மற்றும் டி.எம். சொலாங்கி (வன அலுவலர்) ஆகியோரின் உதவியில் கேமராவையும் பைனாகுலர்களையும் நான் வாங்கினேன்.”
கானி, ஆய்வாளர்களுக்கும் உதவியாக இருந்தார். விளைவாக அவர் எடுத்த நால் சரோவரின் வலசைப் பறவை புகைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. U3 என்றும் U4 என்றும் குறிப்பிடப்பட்ட இரு பறவைகளை ரஷியாவில் ஒரே கூட்டில் படம் பிடித்தேன். 2022ம் ஆண்டில் U3 இங்கு வந்தபோது அடையாளம் கண்டேன். இந்த வருடம் (2023) U4-ஐயும் கண்டுபிடித்தேன். இவற்றை இந்திய வனஉயிர் கூட்டமைப்பின் வழியாக ரஷிய அறிவியலாளருக்கு அனுப்பப்பட்டபோது, அதே கூட்டிலிருந்து வந்த பறவைகள்தான் அவை என்றார் அவர். இரு பறவைகளும் நால் சரோவருக்கு வருகை தந்திருந்தன,” என்கிறார் அவர் உற்சாகமாக.
அவர் பார்த்த பறவைகளை ரஷிய அறிவியலாளர்களும் கவனித்ததாகக் கூறுகிறார். “டெமொய்செல் கொக்கு (Demoiselle Crane) எனப்படும் எட்டு வளையம் கொண்ட பறவைகளை நான் கண்டறிந்தேன். இப்பறவைகளையும் படம்பிடித்து அனுப்பி வைத்தேன். குறித்துக் கொண்டார்கள்.”
காலநிலை மாற்றத்தால் நால் சரோவரில் நேரும் மாற்றங்களை கானி கவனித்திருக்கிறார். “ஜூன் மாதத்தில் குஜராத்தை தாக்கிய பிபோர்ஜாய் புயலால், முதன்முறையாக இப்பகுதியில் சில கடற்பறவைகள் தட்டுப்பட்டன. பழுப்பு நிற தலையாட்டி (Brown noddy), புகை பழுப்பு நிற ஆலா (Sooty tern), ஆர்டிக் ஸ்குவா (Arctic Skua) மற்றும் பழுப்பு இறக்கை ஆலா (Bridled tern) போன்றவை.”
நால் சரோவரின் முக்கிய ஈர்ப்பான செம்மார்பு வாத்து (Red-breasted goose) மத்திய ஆசிய பறக்கும் பாதையின் வழியாக வந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக அப்பறவை இங்கு வந்து கொண்டிருக்கிறது. மங்கோலியா, கஜகஸ்தான் போன்ற இடங்களிலிருந்து அவை வருகின்றன. “கடந்த மூன்று வருடங்களாக அப்பறவை இங்கு வந்து கொண்டிருக்கிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் கானி. அருகி வரும் Sociable Lapwing பறவையும் சரணாலயத்துக்கு வருவதாகக் கூறுகிறார்.
“ஒரு பறவைக்கு என் பெயர் சூட்டப்பட்டது,” என்கிறார் ஒரு கொக்கை குறிப்பிட்டு கானி. “அந்தக் கொக்கு தற்போது ரஷியாவில் இருக்கிறது. ரஷியாவுக்கு அது சென்று பிறகு குஜராத்துக்கு திரும்பி மீண்டும் ரஷியாவுக்கு சென்றுள்ளது,” என நினைவுகூருகிறார் அவர்.
“செய்தித்தாள்களுக்கு அடிக்கடி நான் நிறைய புகைப்படங்கள் கொடுப்பேன். என் பெயரை அவர்கள் பிரசுரிக்க மாட்டார்கள். ஆனால் இந்த புகைப்படங்கள் வெளியாவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்கிறார் கானி.
தமிழில் : ராஜசங்கீதன்