“இடம் நாற்றமடிப்பதாகவும் அசுத்தமாக இருப்பதாகவும் குப்பைகள் கிடப்பதாகவும் சொல்கிறார்கள்,” என்கிறார் கோபத்துடன் என்.கீதா, சாலையின் இரு பக்கமும் இருக்கும் மீன் பெட்டிகள் மற்றும் வியாபாரிகளை காட்டி. “இந்த குப்பைதான் எங்களின் சொத்து; இந்த நாற்றம்தான் எங்களுக்கு வாழ்க்கை. இவற்றை விட்டுவிட்டு நாங்கள் எங்கே செல்வது?” எனக் கேட்கிறார் 42 வயதாகும் அவர்.

நாம் நொச்சிக்குப்பத்தின் லூப் சாலையின் மெரினா கடற்கரையில் இருக்கும் 2.5 கிலோமீட்டர் நீள மீன் சந்தையில் நின்று கொண்டிருக்கிறோம். நகரை அழகாக்குவதாக சொல்லிக் கொண்டு வியாபாரிகளை விரட்டும் ‘அவர்கள்’, மாநகராட்சி அதிகாரிகளும் மேட்டுக்குடி அரசியல்வாதிகளும்தான். கீதா போன்ற மீனவர்களுக்கு நொச்சிக்குப்பம்தான் ஊர். சுனாமி வந்தபோதும் புயல் வந்தபோதும் அவர்கள் இருந்த இடம் அதுதான்.

சந்தை இயங்கத் தொடங்குவதற்கு முன்னதாக அதிகாலையிலேயே கீதா, கடையை திறந்து தயார் செய்கிறார். சில பெட்டிகள் கவிழ்த்து வைக்கப்பட்டு மேஜை போல அமைக்கப்பட்டு ஒரு பிளாஸ்டிக் பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தண்ணீர் தெளிக்கிறார். பிற்பகல் 2 மணி வரை அவர் கடையில் இருப்பார். இருபது வருடங்களுக்கு முன் மணம் முடித்ததிலிருந்து அவர் இங்கு மீன் விற்று வருகிறார்.

ஆனால் ஒரு வருடத்துக்கு முன் ஏப்ரல் 11, 2023 அன்று, அவருக்கும் லூப் சாலையில் இருக்கும் வியாபாரிகளுக்கும் மாநகராட்சியிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான நோட்டீஸ் வந்தது. ஒரு வாரத்துக்குள் சாலையை சுத்தப்படுத்த வேண்டுமென்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அது.

“சென்னை மாநகராட்சி, லூப் சாலையில் இருக்கும் எல்லா ஆக்கிரமிப்புகளையும் (மீன் வியாபாரிகள், கடைகள், வாகனங்கள்) சட்டப்படி அகற்ற வேண்டும். மொத்த சாலைப்பகுதியிலும் நடைபாதையிலும் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்க மாநகராட்சிக்கு காவல்துறை உதவ வேண்டு. பாதசாரிகளும் வாகனங்களும் அங்கு தடையின்றி செல்வதற்கு வேண்டியவற்றை செய்ய வேண்டும்” என நீதிமன்ற உத்தரவு குறிப்பிட்டது.

PHOTO • Abhishek Gerald
PHOTO • Manini Bansal

இடது: நொச்சிக்குப்பம் சந்தையில் ஜிலேபி கெண்டைமீன், கானாங்கெளுத்தி மீன் மற்றும் காலா மீன் ஆகியவற்றுடன் கீதா. வலது: பிடித்து வந்த மீன்களை நொச்சிக்குப்பம் சந்தையில் அடுக்கும் மீனவர்கள்

PHOTO • Abhishek Gerald
PHOTO • Manini Bansal

இடது: கார் பார்க்கிங் நடுவே இருக்கும் சந்தைக் கூடத்தின் ஒரு பகுதி. வலது: நொச்சிக்குப்பம் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் 200 படகுகள்

ஆனால் மீனவ சமூகத்தை பொறுத்தவரை, அவர்கள்தான் இப்பகுதியின் பூர்வகுடியினர். மேலும், வரலாற்றுரீதியாக அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிலத்தை தொடர்ந்து எந்தத் தடையுமின்றி ஆக்கிரமித்து வருவது நகரம்தான்.

சென்னை (அல்லது மெட்ராஸ் கூட) உருவாக்கப்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே, இந்த கடலோரத்தை கட்டுமரங்கள் நிரப்பியிருந்தன. அரை இருட்டில், காற்றை கணித்துக் கொண்டும் காற்றை சுவாசித்துக் கொண்டுல் வண்டத் தண்ணீர் வருவதற்கு பொறுமையாக மீனவர்கள் காத்திருப்பார்கள். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் சென்னை கடலோரத்தை அடையும்போது வரும் வண்டல் நீரோட்டம்தான் அது. அந்த நீரோட்டம் பெருமளவு மீன்களை ஒரு காலத்தில் கொண்டு வந்தது. இன்று அந்தளவுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. ஆனால் சென்னையின் மீனவர்கள் கடற்கரையில்தான் மீன் விற்கின்றனர்.

“இன்று கூட, மீனவர்கள் வண்டத் தண்ணீருக்காக காத்திருப்பார்கள். ஆனால் மண்ணும் நகரத்தின் கான்க்ரீட்டும், மீனவர் குப்பமாக இருந்த சென்னையின் நினைவை அழித்துவிட்டது,” என பெருமூச்செறிகிறார் நொச்சிக்குப்பம் சந்தையிலிருந்து தொடங்கும் ஆற்றின் மறுபக்கத்தில் இருக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த மீனவரான எஸ்.பாளையம். “மக்களுக்கு அது நினைவிருக்கிறதா?”

கடற்கரையோர சந்தைதான் மீன்வர்களுக்கு வாழ்வாதாரம். மீன் சந்தையை இடம் மாற்றும் மாநகராட்சியின் நடவடிக்கை, நகரவாசிகளுக்கு சிறு சிரமத்தை கொடுக்கலாம். ஆனால் நொச்சிக்குப்பத்தில் மீன் விற்கும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரம் மற்றும் அடையாளம் சார்ந்த பிரச்சினை.

*****

மெரினா கடற்கரைக்கான போராட்டம் பழமையானது.

பிரிட்டிஷுக்கு பிறகு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக சொல்லி முயற்சிகளை எடுத்தபடிதான் வந்திருக்கின்றன. பெரும் நடைபாதை கொண்ட சாலை, புல்வெளி, முறையாக பராமரிக்கப்படும் மரங்கள், சுத்தமான நடைபாதைகள், க்யோஸ்க் இயந்திரங்கள், எனப் பல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

PHOTO • Manini Bansal
PHOTO • Manini Bansal

இடது:  நொச்சிக்குப்பம் லூப் சாலையில் ரோந்து செல்லும் காவல்துறை. வலது: கடலில் பிடித்து வரப்பட்ட இறால் விற்பனைக்கு

PHOTO • Manini Bansal
PHOTO • Sriganesh Raman

இடது: மீன் வலைகளை வைக்கவும் பொழுதுபோக்கவும் மீன்வர்கள் உருவாக்கியிருக்கும் தற்காலிக இடங்கள். வலது: பிடித்து வந்த மீன்களை வலையிலிருந்து பிரிக்கும் மீனவர்கள்

லூப் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இம்முறை சுவோ மோட்டா விசாரணையாக நீதிமன்றம் நடத்தியதில்தான், மீனவ சமூகத்துக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அந்த சாலையைத்தான் தினசரி அவர்களது போக்குவரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்து அதிகம் இருக்கும் நேரத்தில் சாலையோர மீன் கடைகளால்தான் நெரிசல் அதிகமாகிறது எனச் சொல்லி அக்கடைகளை அகற்றுவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஏப்ரல் 12ம் தேதி, லூப் சாலையின் மேற்கு பக்கத்திலிருந்த கடைகளை மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிக்கத் தொடங்கியதும், அப்பகுதியின் மீனவ சமூகத்தினர் கொதித்தெழுந்து போராட்டங்களில் குதித்தனர். சந்தைக்கூடத்தை கட்டி முடிக்கும் வரை, லூப் சாலையிலுள்ள மீனவர்களை ஒழுங்குப்படுத்துவதாக நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதியளித்த பிறகு, போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. அப்பகுதியில் இப்போது காவலர்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கிறது.

“நீதிபதியோ சென்னை மாநகராட்சியோ எல்லாமே அரசாங்கத்தின் ஒரு பகுதிதான், இல்லையா? ஏன் அரசாங்கம் இப்படி செய்கிறது? ஒரு பக்கத்தில் கடற்கரையின் அடையாளமாக எங்களை முன் வைக்கிறார்கள், மறுபக்கத்தில் எங்களின் வாழ்வாதாரத்தை முடக்குகிறார்கள்,” எனக் கேட்கிறார் 52 வயது மீன் வியாபாரி.

கடற்கரைக்கு எதிர்ப்புறத்தில் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நொச்சிக்குப்பம் குடியிருப்பில் (2009-2015) வரையப்பட்டிருக்கும் ஓவியங்களைதான் அவர் குறிப்பிடுகிறார். மார்ச் 2023-ல் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக, St-+Art என்ற தொண்டு நிறுவனம் மற்றும் ஆசியன் பெயிண்ட்ஸ் கூட்டு முன்னெடுப்பில், குடியிருப்புகளுக்கு அழகூட்டுவதாக ஓவியங்கள் வரையப்பட்டன. நேபாளம், ஒடிசா, கேரளா, ரஷியா மற்றும் மெக்சிகோ நாடுகளிலிருந்து ஓவியர்களை வர வைத்து நொச்சிக்குப்பத்தின் 24 குடியிருப்புகளின் சுவர்களில் ஓவியங்களை உருவாக்கினார்கள்.

“எங்களின் வாழ்க்கைகளை சுவர்களில் வரைந்துவிட்டு, எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்துகிறார்கள்,” என்கிறார் கட்டடங்களை பார்த்தபடி கீதா. இந்தக் குடியிருப்புகளின் ‘இலவச வீட்டு வசதி’ என்கிற கூற்றிலும் உண்மை இல்லை. “ஒரு ஏஜண்ட் வந்து ஒரு வீட்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கேட்டார்,” என்கிறார் நொச்சிக்குப்பத்தின் 47 வயது மீனவரான பி.கண்ணதாசன். “நாங்கள் கட்டியிருக்காவிட்டால், வீடு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்,” என்கிறார் அவரின் நண்பரான 47 வயது அரசு.

சென்னையை நகரமாக்கும் தொடர் முயற்சிகளாலும் மீனவர்களையும் கடலையும் பிரிக்கும் லூப் சாலையின் கட்டுமானத்தாலும் மீனவர்கள் தொடர்ச்சியாக மாநகராட்சியுடன் மோதும் நிலை இருக்கிறது.

PHOTO • Manini Bansal
PHOTO • Manini Bansal

இடது: நொச்சிக்குப்பத்தில் கண்ணதாசன். வலது: அரசு (வெள்ளை தாடி) மற்றும் அவரது மகன் நிதிஷ் (பழுப்பு டிஷர்ட்) ஆகியோர் சந்தையில் குடையின் கீழ் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கின்றனர்

PHOTO • Sriganesh Raman
PHOTO • Sriganesh Raman

இடது: நொச்சிக்குப்பம் சந்தையில் மீன் விற்கும் ரஞ்சித். வலது: மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் ஓவியங்கள்

குப்பத்தை சேர்ந்தவர்களாகதான் மீனவர்கள் தங்களை கருதுகிறார்கள். “ஆண்கள் கடலிலும் கடற்கரையிலும் வேலை பார்க்க செல்லும்போது, பெண்கள் வீட்டிலிருந்து தூரத்தில் வேலை பார்த்தால், குப்பம் எப்படி இருக்கும்?” எனக் கேட்கிறார் 60 வயது பாலயம். “ஒருவரோடு ஒருவருக்கு இருக்கும் தொடர்பையும் கடலுடன் இருக்கும் தொடர்பையும் நாங்கள் இழந்து விடுவோம்.” பல குடும்பங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதே ஆண்கள் மீன்களை பெண்களின் கடைகளுக்கு கொண்டு செல்லும்போதுதான். காரணம், ஆண்கள் இரவில் மீன் பிடிக்க செல்வார்கள். பகலில் தூங்குவார்கள். அவர்கள் பிடித்த மீன்களை வெளியே சென்று பெண்கள் விற்பார்கள்.

பாதசாரிகளும் காலையில் உடற்பயிற்சி செய்ய வருபவர்களும் கூட இப்பகுதி பாரம்பரியமாக மீனவர்களுக்குதான் சொந்தம் என்பதை சொல்கிறார்கள். “நிறைய பேர் இங்கு காலையில் வருவார்கள்,” என்னும் 52 வயது சிட்டிபாபு நடைபயிற்சிக்காக மெரினாவுக்கு வழக்கமாக வருபவர். “அவர்கள் மீன் வாங்கதான் முக்கியமாக வருவார்கள்… இது, அவர்களின் பாரம்பரிய வணிகம். இங்கு அவர்கள் பல காலமாக இருக்கிறார்கள். அவர்களை இடம்பெயரச் சொல்வதில் நியாயமில்லை,” என்கிறார் அவர்.

நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 29 வயது மீனவர் ரஞ்சித் குமாரும் ஒப்புக் கொள்கிறார். “பல வகையான மக்கள் ஒரே இடத்தை பயன்படுத்தலாம். உதாரணமாக காலை 6-8 மணிக்கு நடைபயிற்சிக்கு மக்கள் வருவார்கள். அச்சமயத்தில் நாங்கள் கடலில் இருப்போம். நாங்கள் திரும்ப வரும்போது, பெண்கள் கடைகளை அமைப்பார்கள். நடைபயிற்சிக்கு வந்தவர்கள் அச்சமயத்தில் சென்றிருப்பார்கள். எங்களுக்கும் நடைபயிற்சி செய்பவர்களுக்கும் இடையே ஒரு பிரச்சினையும் இல்லை. அதிகாரிகள்தான் பிரச்சினை செய்கிறார்கள்,” என்கிறார் அவர்.

*****

பல வகை மீன்கள் விற்கப்படுகின்றன.  நீரின் மேற்பகுதியில் வாழும் சிறிய ரக கிச்சான் (terapon jarbua) மற்றும் காரப்பொடி (deveximentum insidiator) மீன்களை நொச்சிக்குப்பம் சந்தையில் ஒரு கிலோ 200-300 ரூபாய் விலைக்கு வாங்கலாம். இவை, கிராமத்தின் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலேயே கிடைக்கும். சந்தையின் ஒரு பக்கத்தில் இந்த மீன்கள் விற்கப்படுகின்றன. கிலோ 900-1000 ரூபாய்க்கு விற்கப்படும் விலை அதிகமான வஞ்சிரம் (scomberomorus commerson) மீன்கள் சந்தையின் மறுபக்கத்தில் விற்கப்படுகின்றன. பாரை மீன்கள் (pseudocaranx dentex) கிலோ 500-700 ரூபாய் விலைக்குக் கிடைக்கும்.

வெயில் உச்சம் பெறுவதற்கு முன், மீன்களை விற்க வேண்டும். அனுபவம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் புதிதாக கொண்டு வரப்பட்ட மீன்களை சரியாக கண்டுபிடித்து விடுவார்கள்.

PHOTO • Manini Bansal
PHOTO • Sriganesh Raman

இடது: பிடித்த மத்தி மீன்களை வைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு வியாபாரி. வலது: மீனவப் பெண்கள் சந்தையின் சாலையில் மீன்களை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்

PHOTO • Abhishek Gerald
PHOTO • Manini Bansal

இடது: கானாங்கெளுத்தி மீன் காய வைக்கப்பட்டிருக்கிறது. வலது: அடல், நவரை மற்றும் ஓடானி மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன

“போதுமான அளவுக்கு மீன் விற்கவில்லை எனில், யார் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணத்தை கட்டுவது?” எனக் கேட்கிறார் கீதா. அவருக்கு இரு குழந்தைகள் இருக்கின்றன. ஒருவர் பள்ளிக்கு செல்கிறார், இன்னொருவர் கல்லூரிக்கு செல்கிறார். “தினசரி என் கணவர் மீன் பிடிக்க செல்ல வேண்டுமென நான் எதிர்பார்க்க முடியாது. அதிகாலை 2 மணிக்கு நான் விழித்தெழுந்து காசிமேடுக்கு (நொச்சிக்குப்பம் வடக்கே 10 கிலோமீட்டர்) செல்ல வேண்டும். அங்கு மீன் வாங்கி, இங்கு வந்து கடையை தயார் செய்ய வேண்டும். இல்லையென்றால் கல்விக் கட்டணம் கட்ட முடியாது. சாப்பிட கூட எங்களால் முடியாது,” என்கிறார் அவர்.

608 கிராமங்களை சேர்ந்த 10.48 லட்சம் மீனவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பெண்கள். பெண்கள்தான் கடைகளை நடத்துகிறார்கள். வருமானத்தை சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அரசு அங்கீகரித்த காசிமேடு படகுத்துறை மற்றும் பிற சந்தைக் கூடங்களுடன் ஒப்பிடுகையில் நொச்சிக்குப்பத்தில் இருக்கும் மீனவர்களும் வியாபாரிகளும் வசதியான வாழ்க்கைதான் வாழ்ந்து வருவதாக பெண்கள் கூறுகின்றனர்.

”வார இறுதிநாட்கள்தான் பிஸியாக இருக்கும்,” என்கிறார் கீதா. ”நான் விற்கும் ஒவ்வொரு விற்பனையிலும் 300-லிருந்து 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறேன். காலையில் (8.30-9 மணி) கடை திறந்ததிலிருந்து தொடர்ச்சியாக பகல் ஒரு மணி வரை வியாபாரம் செய்கிறேன். ஆனால் எவ்வளவு வருமானம் வருகிறது என சொல்ல முடியவில்லை. ஏனெனில் காலையில் சென்று மீன் வாங்கி வரவும் நான் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மீன் வகை சார்ந்து என் செலவும் மீன் விலையும் ஒவ்வொரு நாளும் மாறும்.”

சந்தைக்கூடம் அறிவிக்கப்பட்டதிலிருந்து வருமானம் போய்விடுமோ என்கிற அச்சம் அவர்கள் அனைவருக்கும் இருக்கிறது. “எங்களின் வருமானம் இங்கிருப்பதால்தான் வீட்டையும் குழந்தைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்ள முடிகிறது,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு மீனவப் பெண். “என் மகனும் கல்லூரிக்கு செல்கிறான்! மீன் வாங்க எவரும் வராத சந்தைக்கூடத்துக்குள் சென்று நாங்கள் விற்கத் தொடங்கினால் என் மகனையும் மற்ற குழந்தைகளையும் நான் எப்படி கல்லூரிக்கு அனுப்புவது? அதையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளுமா?” அதிருப்தியில் இருக்கும் அவர், அரசாங்கத்தை குறித்து புகார் சொல்வதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி அச்சம் கொண்டிருக்கிறார்.

பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தருகே இருக்கும் இன்னொரு சந்தைக் கூடத்துக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படும் பெண்களில் ஒருவரான 45 வயது ஆர்.உமா சொல்கையில், “நொச்சிக்குப்பத்தில் ஒரு புல்லி இலத்தி மீனை [scatophagus argus] 300 ரூபாய்க்கு விற்போம். பெசண்ட் நகர் சந்தையில் 150 ரூபாய்க்கு கூட அது விற்காது. விkலையை உயர்த்தினால் யாரும் வாங்க மாட்டார்கள். சுற்றி பாருங்கள். கசகசவென, பிடிக்கப்பட்ட மீன்கள் அழுகிக் கொண்டிருக்கின்றன. யார் இங்கு வந்து மீன் வாங்குவார்? பிடித்தவுடன் மீன்களை கடற்கரைக்கு வந்து விற்க விரும்புகிறோம். அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை இந்த சந்தைக் கூடத்துக்கு அவர்கள் அனுப்பி விட்டார்கள். எனவே விலையை குறைத்து, நாறும் மீனை விற்று, குறைந்த வருமானத்தை நாங்கள் ஈட்ட வேண்டியிருக்கிறது. நொச்சிக்குப்பம் பெண்கள் கடற்கரையில் மீன் விற்க ஏன் போராடுகிறார்களென எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. நாங்களும் அதை செய்திருக்க வேண்டும்,” என்கிறார்.

PHOTO • Manini Bansal
PHOTO • Manini Bansal

இடது: மெரினா கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதியில் நடைபயிற்சிக்காக வழக்கமாக வரும் சிட்டிபாபு சந்தைக்கும் வருவார். வலது: மூத்த மீனவரான கிருஷ்ணராஜ், நொச்சிக்குப்பம் சந்தையிலிருந்து இடம் மாற்றப்பட்டதால் ஏற்பட்ட சிரமங்களை பகிர்ந்து கொள்கிறார்

கடற்கரையில் மீன் வாங்கும் வாடிக்கையாளரான சிட்டிபாபு சொல்கையில், “புதிதாக பிடிக்கப்பட்ட மீன்களை வாங்க அதிக விலை கொடுக்கிறேனென தெரியும். ஆனால் அது பயனுள்ளதுதான். மீன்கள் தரமானவையாக இருக்கின்றன,” என்கிறார். நொச்சிக்குப்பத்தில் இருக்கும் குப்பை மற்றும் நாற்றம் பற்றி சொல்கையில், “கோயம்பேடு சந்தை எப்போதும் சுத்தமாக இருக்கிறதா? எல்லா சந்தைகளும் அழுக்காகத்தான் இருக்கின்றன. குறைந்தபட்சம், திறந்தவெளி நன்றாக இருக்கும்,” என்கிறார்.

“கடற்கரை சந்தை நாற்றமடிக்கலாம்,” என சொல்லும் சரோஜா, “ஆனால் வெயில் எல்லாவற்றையும் காய வைத்து போக்கி விடும். சூரியன் அழுக்கை போக்கி விடும்,” என்கிறார்.

“குப்பை சேகரிக்கும் வேன்கள் வந்து, கட்டங்களில் இருக்கும் வீட்டு குப்பைகளை சேகரிக்கின்றன. ஆனால் சந்தையிலிருக்கும் குப்பைகளை சேகரிப்பதில்லை,” என்கிறார் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த 75 வயது மீனவர் கிருஷ்ணராஜ் ஆர். “அவர்கள் (அரசாங்கம்) இந்தப் பகுதியையும் (லூப் சாலையை) சுத்தமாக வைக்க வேண்டும்.”

“குடிமக்களுக்கென பல பணிகளை அரசாங்கம் செய்கிறது. ஆனால் இந்த லூப் சாலையை சுற்றியிருக்கும் பகுதிகள் ஏன் சுத்தப்படுத்தப்படுவதில்லை? அவர்கள் (அரசாங்கம்) இப்பகுதியை சுத்தம் செய்வதுதான் எங்களுடைய வேலை, வேறு எதற்கும் இப்பகுதியை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என சொல்ல விரும்புகிறார்களா?” எனக் கேட்கிறார் பாலையம்.

கண்ணதாசன் சொல்கையில், “பணமுள்ளவர்களுக்குதான் அரசாங்கம் ஆதரவாக இருக்கிறது. நடைபாதை கட்டுகிறது. ரோப் கார் மற்றும் பிற திட்டங்களை கொண்டு வருகிறது. இவற்றை செய்ய அவர்கள் அரசாங்கத்துக்கு பணம் கொடுக்கலாம். ஆனால் அரசாங்கம் தரகர்களை கொண்டு இந்த வேலையைச் செய்கிறது,” என்கிறார்.

PHOTO • Manini Bansal
PHOTO • Manini Bansal

இடது: மத்தி மீன்களை  வலையிலிருந்து ஒரு மீனவர் எடுத்துக் கொண்டிருக்கிறார். வலது: வலையிலிருந்து நெத்திலி மீன்களை எடுக்கும் கண்ணதாசன்

“கடற்கரைக்கருகே இருப்பதுதான் மீனவன் பிழைக்க வசதி. அவனை நிலத்துக்குள் தள்ளிவிட்டால், எப்படி அவன் பிழைப்பான்? மீனவர்கள் போராடினால், சிறையிலடைக்கப்படுகிறார்கள். மத்திய தர வர்க்க மக்கள் போராடினால், சில நேரம் அரசாங்கம் செவி சாய்க்கிறது. நாங்கள் சிறை சென்றுவிட்டால், எங்கள் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வது?” எனக் கேட்கிறார் கண்ணதாசன். “ஆனால் இவை யாவும் குடிமக்களாக பார்க்கப்படாத மீனவர்களின் பிரச்சினைகள்,” என்கிறார் அவர்.

“இந்த பகுதி நாற்றமடித்தால், அவர்கள் கிளம்பிப் போகட்டும்,” என்கிறார் கீதா. “எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும். எங்களுக்கு பணமோ மீன் சேமிக்கும் பெட்டிகளோ கடனோ எதுவும் தேவையில்லை. எங்களை இதே இடத்தில் வாழ விடுங்கள். அது போதும்,” என்கிறார் அவர்.

“நொச்சிக்குப்பத்தில் விற்கப்படும் மீன்களில் பெரும்பாலானவை இங்கிருந்து வருபவைதாம். ஆனால் சில நேரங்களில் காசிமேட்டிலிருந்தும் கொண்டு வருவோம்,” என்கிறார் கீதா. “எங்கிருந்து மீன் வருகிறது என்பது முக்கியமல்ல,” என சொல்கிறார் அரசு. “நாங்கள் அனைவரும் இங்கு மீன் விற்கிறோம். எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நாங்கள் சத்தம் போட்டு சண்டை போட்டுக் கொள்வது போல தெரியலாம். ஆனால் அவை சிறு சச்சரவுகள்தான். பிரச்சினை வரும்போதெல்லாம் போராட நாங்கள் ஒன்றிணைந்து விடுவோம். எங்களின் போராட்டங்களுக்கு மட்டுமின்றி, பிற மீனவ கிராமங்களின் போராட்டங்களுக்கும் நாங்கள் வேலையை விட்டு சென்று முன் நிற்போம்.

லூப் சாலையில் இருக்கும் மூன்று மீனவக் குப்பங்களின் மக்கள், புது சந்தையில் தங்களுக்கு கடை கிடைக்குமா என்பது கூட உறுதியாக தெரியாத நிலையில் இருக்கிறார்கள். “352 கடைகள் புது சந்தையில் இருக்கும்,” என்கிறார் நொச்சிக்குப்ப மீனவ சங்கத்தின் தலைவரான ரஞ்சித். “நொச்சிக்குப்பம் வியாபாரிகளுக்கு மட்டும் தருவது எனில் அந்த கடை எண்ணிக்கை அதிகம். ஆனால் எல்லா வியாபாரிகளுக்கும் சந்தையில் இடம் ஒதுக்கப்படாது. நொச்சிக்குப்பத்திலிருந்து பட்டினப்பாக்கத்துக்கு செல்லும் லூப் சாலையில் இருக்கும் மூன்று குப்பங்களின் மீன் வியாபாரிகளுக்கும் சந்தையில் இடம் கொடுக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட 500 வியாபாரிகள் இருக்கின்றனர். 352 கடைகள் ஒதுக்கப்பட்டுவிட்டால், மிச்சமுள்ள வியாபாரிகள் என்ன செய்வார்கள்? யாருக்கு இடம் ஒதுக்கப்படும் என்பதை பற்றி எந்த தெளிவான தகவலும் இல்லை,” என்கிறார் அவர்.

“என் மீன்களை விற்க கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) செல்வேன். மொத்த கிராமமும் செல்லும். அங்கு நாங்கள் போராடுவோம்,” என்கிறார் அரசு.

கட்டுரையில் இடம்பெற்றுள்ள பெண்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழில்: ராஜசங்கீதன்

Divya Karnad

Divya Karnad is an international award-winning marine geographer and conservationist. She is the co-founder of InSeason Fish. She also loves to write and report.

यांचे इतर लिखाण Divya Karnad
Photographs : Manini Bansal

Manini Bansal is a Bengaluru-based visual communication designer and photographer working in the field of conservation. She also does documentary photography.

यांचे इतर लिखाण Manini Bansal
Photographs : Abhishek Gerald

Abhishek Gerald is a marine biologist based in Chennai. He works on conservation and sustainable seafood with the Foundation for Ecological Research Advocacy and Learning and InSeason Fish.

यांचे इतर लिखाण Abhishek Gerald
Photographs : Sriganesh Raman

Sriganesh Raman is a marketing professional, who loves photography. He is a tennis player, who also writes blogs on a wide variety of topics. His association with Inseason Fish means learning a lot about the environment.

यांचे इतर लिखाण Sriganesh Raman
Editor : Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या पारीमध्ये वरिष्ठ संपादक असून त्या पारीवरील सर्जक लेखन विभागाचं काम पाहतात. त्या पारीभाषासोबत गुजराती भाषेत अनुवाद आणि संपादनाचं कामही करतात. त्या गुजराती आणि इंग्रजी कवयीत्री असून त्यांचं बरंच साहित्य प्रकाशित झालं आहे.

यांचे इतर लिखाण Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan