ஹரியானா தில்லி எல்லையில் சிங்குவில் போராடிக் கொண்டிருக்கும் விஷ்வஜோத் க்ரூவால், "இந்தச் சட்டங்களை நாங்கள் மாற்றியமைக்க விரும்புகிறோம்", என்று கூறுகிறார். "நாங்கள் எங்கள் நிலத்துடன் மிகவும் ஒன்றியிருக்கிறோம் யாரும் எங்களிடமிருந்து அதைப் பிரிப்பதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது", என்று 23 வயதாகும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண் கூறுகிறார், மேலும் லூதியானா மாவட்டத்திலுள்ள அவரது கிராமமான பமலில்  கடந்த செப்டம்பர் மாதம் 3 வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதிலிருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அவர் வழி நடத்தி வந்துள்ளார்.

அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள், கிராமப்புற இந்தியாவில் இருக்கும் குறைந்தது 65 சதவீத பெண்களைப் போலவே (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோருக்கு சொந்த நிலம் கிடையாது, ஆனால் அவர்கள் விவசாயத்தின் மையமாக இருக்கின்றனர், அவர்களே பெரும்பாலான வேலைகளை செய்கின்றனர் - விதைப்பது, நடவு செய்வது, அறுவடை செய்வது, கதிர் பிரிப்பது, பிரிக்கப்பட்ட கதிரை வயலில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்வது, உணவை பதப்படுத்துவது மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்வது மற்றும் பல ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

இருப்பினும், ஜனவரி 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் தலைமை நீதிபதி பெண்கள் மற்றும் முதியவர்கள் போராட்டக் களத்தில் இருந்து திரும்பிச் செல்வதற்கு 'வலியுறுத்தப்பட' வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இச்சட்டங்களின் விளைவு பெண்களையும் மற்றும் வயதானவர்களையும் பாதிக்கும்.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள்.

2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் மீது பெரு நிறுவனங்களுக்கான அதிகார பரப்பை மேலும் இச்சட்டங்கள் அதிகப்படுத்தும், அது விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் அனைவரும் பார்க்கின்றனர். மேலும் இச்சட்டங்கள் விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு, மாநில கொள்முதல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முக்கியமான ஆதரவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

"புதிய வேளாண் சட்டங்களால் பெண்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். விவசாயத்தில் அதிகமாக ஈடுபட்டு கொண்டு இருந்தாலும், அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை. (எடுத்துக்காட்டாக) அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் உணவு பற்றாக்குறையை உருவாக்கும் மேலும் அதன் பாதிப்பை பெண்கள் தான் எதிர்கொள்ள நேரிடும்", என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளரான மரியம் தவாலே கூறுகிறார்.

இந்தப் பெண்களில் பலர் இளையவர்கள் மற்றும் முதியவர்கள் தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய போராட்ட களங்களில் கலந்துகொண்டு உறுதியுடன் போராடி வருகின்றனர். அதே வேளையில் விவசாயிகள் அல்லாத பலர் தங்கள் ஆதரவை பதிவு செய்ய அங்கு வருகிறார்கள் மேலும் சிலர் பொருட்களை விற்று அன்றாடம் சம்பாதிக்கவும், அல்லது லங்கர்களில் வழங்கப்படும் தாராளமான உணவை சாப்பிடவும் வந்துள்ளனர்.

PHOTO • Shraddha Agarwal

62 வயதான பிம்லா தேவி (சிவப்பு சால்வையில் இருப்பவர்), டிசம்பர் 20 ஆம் தேதி அன்று சிங்கு எல்லையை அடைந்து, செய்தியாளர்களிடம் இங்கு போராடிக்கொண்டிருக்கும் தனது சகோதரர்கள் மற்றும் மகன்கள் தீவிரவாதிகள் அல்ல என்று கூறினார். ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் கார்கோடா வட்டத்தில் இருக்கும் செஹ்ரி கிராமத்தில் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கோதுமை, சோளம், மற்றும் கரும்பு பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். "எங்கள் மகன்களை தொலைக்காட்சியில் குண்டர்கள் என்று அழைத்ததாக கேள்விப்பட்டோம். அவர்கள் விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல. எனது மகன்களைப் பற்றி ஊடகங்கள் இவ்வாறு பேசுவதைப் பார்த்த நான் அழ ஆரம்பித்தேன். நீங்கள் விவசாயிகளை விட பெரிய மனது உடையவர்களை பார்க்க முடியாது", என்று பிம்லா தேவி கூறுகிறார், அவருடன் அவரது 60 வயதான சகோதரி சாவித்திரியும் (நீல நிறம்) சிங்குவில் இருக்கிறார்

PHOTO • Shraddha Agarwal

14 வயதாகும் 9ஆம் வகுப்பு மாணவியான ஆலம்ஜீத் கவூர், "எனது உரிமைகளுக்காகவும் எனது எதிர்காலத்துக்கும் போராட நான் இங்கு வந்துள்ளேன்", என்று கூறுகிறார். அவர் தனது தங்கை, பாட்டி மற்றும் பெற்றோருடன் சிங்கு போராட்ட களத்தில் இருக்கிறார். அவர்கள் அனைவரும் பஞ்சாபின் ஃபரித்கோட் வட்டத்திலுள்ள பிப்லி கிராமத்தில் இருந்து வந்திருக்கின்றனர், அங்கு அவரது தாய் செவிலியராகவும் தந்தை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களது குடும்பம் தங்களது 7 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் நெல்லை விளைவித்து வருகின்றது. நான் சிறுவயதிலிருந்தே எனது பெற்றோருக்கு விவசாயத்தில் உதவி வருகிறேன் என்று ஆலம்ஜீத் கூறுகிறார். எங்கள் விவசாய உரிமை குறித்து அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள், எங்களது உரிமைகளை திரும்பப் பெறும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். இந்த முறை விவசாயிகளாகிய நாங்கள் வெல்வோம்", என்று கூறினார்

PHOTO • Shraddha Agarwal

லூதியானா மாவட்டத்தின் பமல் கிராமத்தில் விஷ்வஜோத் க்ரூவல் குடும்பத்திற்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது, பெரும்பாலும் அவர்கள் கோதுமை, நெல் மற்றும் உருளைக்கிழங்கு விளைவிக்கின்றனர். டிசம்பர் 22ஆம் தேதி அன்று மினி வேனில் சிங்குவிற்கு தனது உறவினர்களுடன் வந்த 23 வயதாகும் அவர் இந்த வேளாண் சட்டங்களை மாற்றி அமைக்க விரும்புகிறோம்."நாங்கள் எங்கள் நிலத்துடன் மிகவும் ஒன்றியிருக்கிறோம், யாரும் எங்களிடமிருந்து அதைப் பிரிப்பதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது" என்று கூறுகிறார். நமது அரசியலமைப்பிலேயே போராடுவதற்கு உரிமை உண்டு என்று எழுதப்பட்டுள்ளது. இது மிகவும் அமைதியான போராட்டம். லங்கர் முதல் மருத்துவ உதவி வரை அனைத்தும் இங்கு கிடைக்கின்றது", என்கிறார்

PHOTO • Shraddha Agarwal

எங்களது விவசாயிகளுக்கு ஆதரவாக நான் இங்கு வந்துள்ளேன். இந்த சட்டங்கள் ஒவ்வொருவருக்கும் தீங்கு விளைவிக்கும் ஆனால் இச்சட்டங்கள் விவசாயிகளை மட்டுமே பாதிக்கும் என்று மக்கள் நம்புகின்றனர், என்று பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்திலுள்ள ஃபரித்கோட் தாலுகாவினைச் சேர்ந்த கோட் கப்பூரா கிராமத்தினைச் சேர்ந்த 28 வயதாகும் மணி கில் கூறுகிறார். எம்பிஏ பட்டதாரியான மணி கார்ப்பரேட் துறையில் பணிபுரிகிறார். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறுகிறார். "தில்லியிலேயே ஒரு சிறிய பஞ்சாப் உருவாக்கப்பட்டிருப்பது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இங்கு பஞ்சாபின் அனைத்து கிராமங்களில் இருந்து வந்து இருக்கும் மக்களை நீங்கள் காணலாம்", என்று அவர் கூறுகிறார். மணி இளைஞர்களால் நடத்தப்படும் விவசாயிகளை பற்றிய விழிப்புணர்வை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தும் ஒரு அமைப்பில் தன்னார்வலராக இருக்கிறார். "இந்த மூன்று வேளாண் சட்டங்களை தவிர விவசாயிகளின் பிற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை பற்றியும் பேச முயற்சிக்கிறோம். விவசாயிகள் ஒவ்வொருநாளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்க முயற்சிக்கிறோம்", என்று அவர் கூறுகிறார். மணியின் பெற்றோரால் சிங்குவிற்கு வர முடியவில்லை ஆனால் "அவர்களும் முக்கியமான பணிகளைச் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இங்கே இருப்பதால் அவர்கள் எங்களது விலங்குகளையும், விளைநிலங்களையும் கவனித்துக் கொண்டு இரட்டை வேலை செய்து வருகின்றனர்", என்று கூறுகிறார்

PHOTO • Shraddha Agarwal

டிசம்பர் 15 முதல் சஜாமீத் (வலது) மற்றும் குர்லீன் (முழு பெயர் வழங்கப்படவில்லை) வெவ்வேறு விவசாயிகளின் போராட்டக் களங்களில் பங்கேற்று வருகின்றனர். போராட்டங்களுக்கு மக்கள் அதிகமாக தேவைப்படுகின்றனர் என்பதை அறிந்தும் வீட்டிலேயே இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது", என்று பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் இருந்து பல்வேறு கார்கள் மற்றும் டெம்போக்களில் ஏறி இங்கு வந்திருக்கும் 28 வயதாகும் சஜாமீத் கூறுகிறார். சிறிது நாட்கள் மேற்கு தில்லியிலுள்ள திக்ரி போராட்டக்களத்தில் இருந்து சமூக சமையலறைகளில் தன்னார்வலராக ஈடுபட்டார். "எங்கு உதவி தேவைப்படுகிறதோ அங்கு நாங்கள் செல்கிறோம்", என்று தெரிவித்தார்.

போராட்டக் களத்தில் இருக்கும் பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கு கழிவறை ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார். தற்காலிக கழிவறைகள் மற்றும் பெட்ரோல் பங்கில் இருக்கும் கழிவறைகள் ஆகியவை அசுத்தமாக இருக்கின்றன. மேலும் அவை பெண்கள் தங்கி இருக்கும் கூடாரம் மற்றும் டிராக்டர்களில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. நாங்கள் ஒப்பீட்டளவில் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் குளியலறைகள் பயன்படுத்துவதே பாதுகாப்பானதாக் இருக்கும் என்று பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவியான சஜாமீத் கூறுகிறார். "குளியலறையை பயன்படுத்த முயற்சிக்கையில் ஒரு வயதான பெரியவர் என்னிடம் பெண்கள் ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்? இந்த போராட்டக்களம் ஆண்களுக்கானது என்று கூறினார். சில நேரங்களில் (இரவில்) பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும் ஆனால் இங்கே உள்ள மற்ற பெண்களைப் பார்த்து எங்களது வலிமை கூடுகிறது", என்று தெரிவித்தார்.

அவரது தோழியான 22 வயதாகும் குர்லீன், குர்தாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பட்டாலா தாலுகாவிலுள்ள மீக்கி கிராமத்திருந்து வந்திருக்கிறார், அங்கு அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் நெல்லை விளைவித்து வருகின்றனர், எனது படிப்புக்கான முழு செலவும் விவசாயத்தில் மூலம் செய்யப்பட்டது. எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் விவசாயத்தையே சார்ந்துள்ளது. எனது எதிர்காலமும் நம்பிக்கையும் விவசாயத்தையே சார்ந்துள்ளது. எனக்கு உணவு மற்றும் பாதுகாப்பு இரண்டையும் விவசாயத்தால் வழங்க முடியும் என்பது எனக்கு தெரியும். இந்த பலவிதமான அரசாங்கக் கொள்கைகள் எங்களை குறிப்பாக பெண்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை கல்வி எனக்கு உணர்த்தியுள்ளது, எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியமாகிறது", என்று கூறினார்.

PHOTO • Shraddha Agarwal

ஹர்ஷ் கவூர் (வலது கடைசி) பஞ்சாபின் லூதியானா நகரத்திலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிங்கு எல்லைக்கு வந்துள்ளார். 20 வயதான அவர் தனது சகோதரியுடன் போராட்டக்களத்தில் உள்ள இலவச மருத்துவ முகாமில் தன்னார்வ தொண்டு செய்ய ஒரு இளைஞர் அமைப்பை தொடர்பு கொண்டார். மருத்துவ உதவி கூடாரத்தில் பயிற்சி பெற்ற செவிலியர்கள் தன்னார்வலர்களுக்கு மருந்துகளை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதழியல் இளங்கலை மாணவியான ஹர்ஷ், "இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்று அரசாங்கம் பாசாங்கு செய்கிறது, ஆனால் அவை அவ்வாறு இல்லை. விதைப்பவர்கள் விவசாயிகள் தான், அவர்களுக்கு எது நல்லது என்று அவர்களுக்குத் தான் தெரியும். சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு தான் சாதகமாக இருக்கிறது. அரசாங்கம் எங்களை சுரண்டி கொண்டிருக்கிறது, இல்லையென்றால் அவர்கள் எங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து இருப்பார்கள். எங்களால் அரசாங்கத்தை நம்ப முடியாது", என்று தெரிவித்தார்

PHOTO • Shraddha Agarwal

லைலா (முழு பெயர் கிடைக்கவில்லை) உபகரணங்களை சிங்குவில் விற்பனை செய்கிறார் அதில் ப்ளையர், லைட்டர், 2 விதமான ஸ்க்குரு டிரைவர்கள் ஆகியவை அடங்கும். ஒரு செட்டின் விலை நூறு ரூபாய். அவர் மூன்று ஜோடி சாக்ஸ்களையும் அதை விலைக்கு விற்கிறார். லைலா வாரம் ஒருமுறை இந்த பொருட்களை வடக்கு தில்லியில் உள்ள சர்தார் பஜாரில் இருந்து வாங்கி வருகிறார்; அவரது கணவரும் ஒரு வியாபாரி தான். இங்கு அவர் அவரது மகன்கள் ஒன்பது வயதாகும் மைக்கேல் மற்றும் ஐந்து வயதாகும் விஜய் ஆகியோருடன் வந்திருக்கிறார், "இந்த பொருட்களை விற்கவே நாங்கள் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளோம். இந்த போராட்டம் தொடங்கியதிலிருந்து நாங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இங்கு வந்து ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 செட்டுகள் வரை விற்பனை செய்கிறோம்", என்று கூறினார்

PHOTO • Shraddha Agarwal

"எனது குடும்பத்தில் யாரும் விவசாயிகள் இல்லை. இந்த பொருட்களை விற்பதன் மூலம் நான் எனது வயிற்றை நிரப்பிக் கொள்கிறேன்", என்று சிங்குவில் வசிக்கும் ஒரு தெருவோர விற்பனையாளரான 35 வயதாகும் குலாபியா கூறுகிறார். குலாபியா (முழு பெயர் கிடைக்கவில்லை) சிறிய கொட்டுகளை விற்பனை செய்கிறார் தலா 100 ரூபாய்க்கு. அவரது இரண்டு மகன்களும் தொழிலாளர்களாக இருக்கின்றனர். "நான் நாளொன்றுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன் என்று அவர் கூறுகிறார். இந்தக் கொட்டுகளை யாரும் நூறு ரூபாய்க்கு வாங்குவதில்லை. அனைவரும் பேரம் பேசுகின்றனர். எனவே இவற்றை 50 ரூபாய்க்கும் சில நேரங்களில் 40 ரூபாய்க்கும் கூட விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது" என்று கூறுகிறார்

PHOTO • Shraddha Agarwal

"நான் இங்கு ரொட்டி சாப்பிட வந்துள்ளேன்", என்கிறார் வடக்கு தில்லியின் நரேலா பகுதியைச் சேர்ந்த துப்புறவு தொழிலாளியான கவிதா (முழு பெயர் கிடைக்கவில்லை). தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொருக்குவதற்கு அவர் சிங்கு எல்லைக்கு வந்திருக்கிறார். நாளின் முடிவில் 60 வயதாகும் கவிதா இந்த கழிவு பொருட்களை பழைய பொருட்கள் வியாபாரியிடம் ஐம்பது முதல் நூறு ரூபாய்க்கு விற்று விடுகிறார். "ஆனால் இங்கே சிலர் என்னை திட்டுகிறார்கள். நான் ஏன் இங்கு வந்தேன்? என்று என்னிடம் கேட்கிறார்கள்", என்று கூறினார்

PHOTO • Shraddha Agarwal

நான் இங்கு வருவதற்கு எனது பெற்றோர் ஆதரவாக இல்லாததால் போராட்டத்தில் பங்கேற்பது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் விவசாயிகளுக்கு இளைஞர்களின் ஆதரவு தேவை என்பதால் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று பஞ்சாபின் ஃபரித்கோட் மாவட்டத்திலுள்ள ஃபரித்கோட் தாலுகாவிலிருக்கும் கோட் கப்பூரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதாகும் கோமல்ப்ரீத் கூறுகிறார். அவர் டிசம்பர் 24-ஆம் தேதி சிங்கு எல்லைக்கு வந்தார், மேலும் சமூக ஊடகங்களில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இளைஞர்களால் நடத்தப்படும் தளத்தில் தன்னார்வளராக இருக்கிறார். "நாங்கள் இங்கே வரலாற்றை மீளுருவாக்கம் செய்கிறோம்", என்று கூறினார். "மக்கள் தங்களது சாதி, வர்க்கம், கலாச்சாரம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் இங்கே கூடியிருக்கிறார்கள். எங்களது குருமார்கள் சரியானவற்றிக்காக போராடவும், சுரண்டப்படுபவர்களுடன் சேர்ந்து நிற்கவும் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்", என்று கூறினார்

தமிழில்: சோனியா போஸ்

Shraddha Agarwal

Shraddha Agarwal is a Reporter and Content Editor at the People’s Archive of Rural India.

Other stories by Shraddha Agarwal
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose