(வெறும் வயிற்றோடு வீட்டைவிட்டு போராட்டத்துக்குக் கிளம்பினால், உங்களின் இலட்சியத்தை யாரும் திருப்பிவிட்டுவிடக் கூடாது)

இதுதான், போராட்டக்காரர்களுக்காக பிலாவல்சிங் லாங்கர் எனப்படும் இந்த உணவகத்தை நடத்துவதன் பின்னால் உள்ள தாத்பரியம். “பசியோடு எப்படிப் போராடுவார்கள் என அரசாங்கம் ஆட்டம் காட்டுகிறது. பசியாற சாப்பிடும் போராட்டக்காரர்களை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் எனப் பார்ப்போம்.” என்கிறார் அவர்.

பிலாவலுக்கு வயது 32; அவரின் மைத்துனர் இரஷ்விந்தர் சிங்குக்கு வயது 30. இருவரும் ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் உள்ள 41 ஆர்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இராஜஸ்தான் - அரியானா எல்லையில் சாஜகான்பூரில் முகாமிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளில் இவர்களும் அங்கம்.

டெல்லிக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான விவசாயிகள் தர்ணா செய்துவரும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த விவசாயிகள் குறிப்பாக அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்யக்கோரி  கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் போராடிவருகின்றனர்.

இந்த சட்டங்கள் முதலில் 2020 ஜூன் 5 அன்று அவசரச் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டன. பின்னர், அவை செப்டம்பர் 14 அன்று நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டவரைவுகளாக அறிமுகம் செய்யப்பட்டு, அவசரஅவசரமாக அதே மாதம் 20ஆம் தேதியே சட்டங்களாக ஆக்கப்பட்டன. இந்த சட்டங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காலிசெய்துவிடும் என்று விவசாயிகள் அச்சமடைந்தனர். விவசாயிகள் மீதும் விவசாயத்தின் மீதும் பகாசுர நிறுவனங்களின் பெருமளவில் ஆதிக்கம் ஏற்படுவதற்கு இந்த சட்டங்கள் வழிவகை செய்துவிடும் என்பதே அவர்களின் அச்சத்துக்குக் காரணம். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்விளைபொருள் விற்பனைக் குழுக்கள், அரசுக் கொள்முதல் போன்றவற்றில் பயிரிடும் விவசாயிக்கு இருந்துவருகின்ற ஆதரவுச் சூழலை இந்த சட்டங்கள் வலுவிழக்கச் செய்துவிடும் என்பதும் முக்கியமானது.

Bilawal Singh (left) and his cousin Rashwinder run a langar at the Shajahanpur site: 'We have enough supplies coming in. We can stay here till the 2024 elections'
PHOTO • Parth M.N.
Bilawal Singh (left) and his cousin Rashwinder run a langar at the Shajahanpur site: 'We have enough supplies coming in. We can stay here till the 2024 elections'
PHOTO • Parth M.N.

(இடது) சாஜகான்பூர் போராட்டக்களத்தில் உணவகம் நடத்தும் பிலாவல்சிங்கும் அவரின் மைத்துணர் இரஷ்விந்தர் சிங்கும் : 'போதுமான உணவுப்பொருள்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து 2024 தேர்தல்வரை ஓட்டிவிடுவோம்'

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 , விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு  எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக  அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.

”திசம்பர் மூன்றாவது வாரத்திலிருந்துதான் நாங்கள் இங்கே உணவகத்தை நடத்தத் தொடங்கினோம். அதற்கு முன்னர் மேற்கு டெல்லி பகுதியில் உள்ள திக்ரி எல்லையில் இருந்தோம்.” என்கிறார், பிலாவல். அன்றைய நாளுக்காகச் செய்யப்பட்ட பூரி, ரொட்டிகள் நிறைந்த பெரிய பாத்திரம் அவருக்கு அருகில் தயாராக இருந்தது.

திக்ரியும் சிங்குவும் பெரிய போராட்டக் களங்கள் மட்டுமல்ல, அங்கு திரண்டிருப்பவர்களுக்கான உணவு முதலிய ஏற்பாடுகள் ஓரளவுக்கு நன்றாக இருந்தன. எனவே, சாஜகான்பூரில் அதற்கான தேவை கூடுதலாக இருப்பதை உணர்ந்த பிலாவலும் இரஷ்விந்தர் சிங்கும் இங்கு இடம்பெயர்ந்தனர்.

சாஜகான்பூரில் தற்போது 5 உணவகங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மற்ற இடங்களிலிருந்து இடம்மாற்றப்பட்டவை. “விவசாயம் என்பது எங்கள் மதம். மக்களுக்கு உணவு அளிப்பதை நேசித்துச்செய்கிறோம். சமையலுக்கான பொருள்களை விவசாயிகள், குருத்வாராக்கள் தரப்பில்  நன்கொடையாகத் தருகின்றனர். போதுமான பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. 2024 தேர்தல்வரை எங்களால் இங்கு இருக்கமுடியும்.” என்கிறார், பிலாவல்.

மைத்துனர்கள் இருவரும் 40 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள். கோதுமை, நெல், கடுகு, பருத்தி ஆகியவை அவர்களின் முக்கிய பயிர்கள். புதிய வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்க்கும் இவர்கள், சட்ட ஆவணங்களை உள்ளார்ந்து படித்திருக்கிறார்கள். அத்துடன் நடைமுறை அனுபவத்திலிருந்தும் அவர்கள் பேசுகின்றனர். விவசாயிகளும் பகாசுர நிறுவனங்களும் விவசாய ஒப்பந்தம் செய்துகொள்ளும்போது , விவசாயிகளுக்கு குறை ஏற்பட்டால் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பே இல்லாமல் ஆக்குகிறது, மூன்றில் ஒரு சட்டம். இப்படி இன்னும் சிலவற்றைச் சொல்கிறார், பிலாவல்.

One of the new laws covers contract farming and protects large corporations, leaving no redressal for farmers. Bilawal has already had this experience
PHOTO • Parth M.N.
One of the new laws covers contract farming and protects large corporations, leaving no redressal for farmers. Bilawal has already had this experience
PHOTO • Parth M.N.

ஒப்பந்த விவசாயத்தில் விவசாயிகளின் குறைகளை முறையிடுவதற்கான வழியே இல்லாதபடி செய்துவிடுகிறது, ஒரு விவசாய சட்டம். பிலாவலுக்கு ஏற்கெனவே இப்படியொரு அனுபவம் நேர்ந்திருக்கிறது

2019 நவம்பரில் பார்லி பயிர்செய்வதற்காக பெப்சிகோ நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களிடமிருந்து விதைகளை வாங்கினார். “  விளையும் பார்லியை குவிண்டால் 1,525ரூபாய்க்கு கொள்முதல் செய்துகொள்வதாக உறுதியளித்தார்கள். ஆனால் 2020 ஏப்ரலில் அறுவடையை முடித்தபோது, பயிரின் தரம் சரியில்லை எனக் கூறி, இரண்டு மாதங்கள் அலையவிட்டார்கள். மேற்கொண்டு விளைச்சலைப் பார்த்தால்தான் ஆயிற்று என்றும் சொன்னார்கள்.”- நடந்ததை விவரித்தார், பிலாவல்.

கொரோனா பொதுமுடக்கத்தால் மது விற்பனை குறைந்ததன் காரணமாக, வைத்திருக்கும் பார்லியை நிறுவனம் குறைத்துவிடும் என பிலாவல் நம்பினார். ”ஆகையால் நிறுவனத் தரப்பில் சொன்ன சொல்லிலிருந்து பின்வாங்கினார்கள்.”என்றார். ஒருவழியாக 2020 ஜூனில் அவரின் கிராமம் அமைந்திருக்கும் பதாம்பூர் மண்டி பொதுச்சந்தையில் குவிண்டால் 1,100 ரூபாய் விலைக்கு பார்லியை விற்றுவிட்டார்.

விளைந்த 250 குவிண்டால் பார்லியையும் குவிண்டாலுக்கு 415 ரூபாய்க்குதான் விற்கமுடிந்தது; இதனால் அவர் கணக்குப்போட்டு வைத்திருந்ததைவிடக் குறைவாகத்தான் கிடைத்தது. பிலாவலுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதில் எந்த இழப்பீடு முறையீட்டுக்கும் வழி இல்லை; புதிய சட்டம் இதை இன்னும் மிக மோசமாக ஆக்கும் என்கிறார் அவர்.

வரலாற்றிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளும்வகையில், 1917இல் பீகார் மாநிலம் சம்பரானில் அவுரி விவசாயிகளுக்காக காந்தியடிகளும் வல்லபாய் பட்டேலும் நடத்திய போராட்டத்தை நினைவுகூர்ந்தார், இரஷ்விந்தர்சிங். அப்போதே அவர்கள் ஒப்பந்த விவசாயத்தை எதிர்த்து போராடினார்கள்; பிரதமர் மோடி அவர்களின் வாசகங்களை அடிக்கடி தன் பேச்சில் குறிப்பிட்டுக்கொள்கிறார் என்கிறார் இரஷ்விந்தர் சிங்.

ரஷ்வீந்தர் பிற பாடங்களை பற்றியும் சொல்கிறார். "தனியார்மயமான பிறகு கல்வி மற்றும் உடல்நலம் போன்ற துறைகளின் நிலை என்ன ?" என்று கேட்கிறார். "அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நிலை மிக மோசம். உள்துறை அமைச்சருக்கு உடல் நலமில்லை என்றால் கூட அவர் தனியார் மருத்துவமனைக்குதான் போகிறார். விவசாயத்தை தனியார்மயமாக்குவதன் மூலம் அரசு தனது பொறுப்புகளை துறக்கிறது".

Gurudeep Singh (in white turban), says, 'MSP [minimum support price] is very important for us. Without it, we are finished'
PHOTO • Parth M.N.
Gurudeep Singh (in white turban), says, 'MSP [minimum support price] is very important for us. Without it, we are finished'
PHOTO • Parth M.N.

குறைந்தபட்ச ஆதார விலை என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது, அது இல்லை என்றால், எங்கள் கதை அவ்வளவுதான் என்கிறார், குருதீப்சிங்( வெள்ளை தலைப்பாகையுடன்)

அவர் சொல்வதை பொலிவியன் தண்ணீர்ப் பிரச்னையை உதாரணமாகக் குறிப்பிட்டு விவரிக்கிறார், இரஷ்விந்தர் சிங். குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயம் ஆக்கியதால் 1999-2000 காலகட்டத்தில் அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை எடுத்துக்கூறுகிறார். ”தனியார்மயமாக்கம் என்பது ஒரு தீர்வு அல்ல. விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக இந்த அரசாங்கம் திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நடப்பது என்ன என்பதை அறிந்துதான் இருக்கிறோம். அப்படி இல்லாவிட்டால் உலகம் எங்களை விழுங்கிவிடும்.” என்கிறார் இரஷ்விந்தர்.

புதிய சட்டங்களால் விவசாயிகள் கோபத்துடனும் பதற்றத்துடனும் இருந்தாலும், இவர்கள் இருக்கின்ற சாஜகான்பூர் போராட்டக்களத்தில், கிட்டத்தட்ட ஒரு கொண்டாட்ட சூழலே நிலவுகிறது. அந்த அளவுக்கு அவர்களிடையே ஓர் இணக்கப்பாடு காணப்படுகிறது. கொஞ்சம் பேர் டிராக்டர்களை இயக்கி, அதிலுள்ள கருவிகள் மூலம் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருக்கின்றனர். வேறு பலரோ பிரதமர் மோடியைப் பற்றிய நையாண்டிப் பாடல்களைப் பாடிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால், “எங்கள் பிரச்னைகளை மனதில் தங்காமல்செய்யவே பாடியபடியும் ஆடியபடியும் இருக்கிறோம். இங்கே உள்ள விவசாயிகள் சண்டைக்களத்தில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.” என்கிறார் பிலாவல். இங்கிருக்கும் ஒவ்வொரு நாளிலும் போராடும் விவசாயிகள் முன்னைவிடத் தீர்மானகரமானவர்களாக மாறுகிறார்கள் என்கிறார், இரஷ்விந்தர்.

இந்த மைத்துனர்களின் உணவகத்திலிருந்து அரை கிமீ தொலைவில், 54 வயது குருதீப்சிங் ஒரு பெரிய பாத்திரத்தில் ரொட்டிகளைத் தயார்செய்துகொண்டு இருக்கிறார். அவரும் இங்கு வரும் முன்னர் திக்ரியில் உணவகம் நடத்தியவர்தான். பஞ்சாப்பின் பிரோஸ்பர் மாவட்டத்தில் மம்தாத் வட்டத்தில் அல்ஃபூக் கிராமத்தில் 40 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். மூன்று புதிய வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் சாவுக்கான அழைப்பு ஓலை என்கிறார். நெல்லும் கோதுமையும் பயிரிடுகிறேன். குறைந்தபட்ச ஆதார விலை என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அது இல்லாவிட்டால் நாங்கள் அவ்வளவுதான் என்கிறார் குருதீப் சிங்.

போராட்டம் தொடங்கியதிலிருந்து குருதீப் வீட்டுக்குப் போகவே இல்லை. கடந்த நவம்பர் 26 அன்று வீட்டைவிட்டுக் கிளம்பினேன். மனைவி, குழந்தைகளைப் பார்த்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. காணொலி அழைப்பில் என்னை வீட்டுக்கு வரும்படி அழைக்கிறார்கள். ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன். மூன்று சட்டங்களையும் திரும்பப்பெறும்வரை ஊர் திரும்பப்போவதில்லை.” என்கிறார் உறுதிபட.

“என் வீட்டாரிடம் ஒரு மலர்மாலையை வாங்கிவைக்கச் சொல்லியிருக்கிறேன். சட்டங்களை ரத்துசெய்துவிட்டால் ஊர்திரும்புகையில் என்னை மாலைபோட்டு வரவேற்பு தாருங்கள். ஒருவேளை நான் இங்கு இறந்துவிட்டால் என்னுடைய படத்துக்கு அதைச் சார்த்துங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.” எனும் குருதீப் சிங்கின் குரல், உறுதியானதாகவும் தீர்மானகரமானதாகவும் இருக்கிறது.

தமிழில்: தமிழ்கனல்

Parth M.N.

Parth M.N. is a 2017 PARI Fellow and an independent journalist reporting for various news websites. He loves cricket and travelling.

Other stories by Parth M.N.
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal