"அது சரியாக ஒரு அறுவடைக்காலம். மாவட்ட ஆட்சியர் எங்களது அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகளையும் அவரது அலுவலகத்திற்கு வரவழைத்து எங்களுக்கு 3 மாதக் கெடு விதித்தார். 'டிசம்பருக்குள் இடத்தை காலி செய்யுங்கள் இல்லையென்றால் நாங்கள் போலீசாரை அழைத்து உங்களை விரட்டுவோம்' என்று அவர் கூறினார்", என்று 68 வயதாகும் விட்டல் கணு விதே நினைவுகூர்கிறார்.

Portrait of a man (Vitthal Ganu Vide)
PHOTO • Jyoti Shinoli

46 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்த விட்டல் கணு விதேயின் குடும்பத்திற்கு இன்னமும் 'மறுவாழ்வு' கிடைக்கவில்லை

அது 1970 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திலுள்ள சகாபூர் தாலுகாவில் உள்ள தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடமான, மும்பை நகரிலிருந்து 84 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சரங்கபுரி கிராமத்திலிருந்து விதே எங்களிடம் பேசினார். 46 ஆண்டுகளுக்கு முன்பு இம்மாவட்டத்தின் ஐந்து கிராமங்கள் மற்றும் பழங்குடியின பதாக்களிலிருந்து 127 குடும்பங்கள் பாட்சா நீர்ப்பாசன திட்டத்திற்காக இடம்பெயர்ந்தன. நிவாரணம் மற்றும் மறுவாழ்வு - போன்ற கருத்துக்கள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் தான் வந்தது. அணையால் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டியிருந்தது இந்த வனப்பகுதியில் பிற இடங்களைத் தேடி வாழ வேண்டியிருந்தது. ஒரு சிலருக்கு கொஞ்சம் பணம்- ஏக்கருக்கு 230 ரூபாய் - ஆவணப்படுத்தப்படாமல் வழங்கப்பட்டது. பெரும்பாலோனோருக்கு எதுவும் கிடைக்கவில்லை - அவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் என்ற மாவட்ட ஆட்சியரின் சான்றிதழை தவிர வேறு எதுவும் இல்லை. அதுவும் ஒரு போராட்டத்திற்கு பிறகே கிடைத்தது.

"15 நாட்கள் நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். வாகனம் இல்லாமல் ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களையும் இடமாற்றுவது சாத்தியமில்லை. ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகளை தூக்கி செல்லும் பெண்கள், பிற குழந்தைகள், பாத்திரங்கள், விவசாயக் கருவிகள், தானியங்கள், சோளம், கால்நடைகள், கோழிகள் ஆகியவற்றை சுமந்துகொண்டு  நீண்ட வரிசையில் மக்கள் நடந்தனர். மக்கள் தங்கள் கோழிகளும், மாடுகளும் இறப்பதை விரும்பவில்லை. கதவுகள், பெரிய கொக்கிகள், பானை ஓடுகள்- அவர்கள் வேறு எங்காவது தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தங்கள் பழைய வீடுகளிலிருந்து தேவையான அனைத்து பொருட்களையும் காப்பாற்றினர்", என்கிறார் விதே.

அழிந்த ஐந்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களைச் சேர்ந்த 127 குடும்பங்களில் இவரும் ஒருவர். வகிசபதா, பலசபதா, கோதேபதுல் ஆகியவை ஆதிவாசிகளின் குக்கிராமங்கள். பல்கேரி, பச்சிவாரி ஆகியவை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள் ஆகும். இவை அனைத்தும் 1970 - 72 பாட்சா அணைத் திட்டத்தால் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டது.

"எனது கிராமம் பல்கேரி. மேலும் பல பழங்குடியினர் குடியிருப்புகள் அருகிலேயே அமைந்திருந்தது. அது இருண்ட காடு மற்றும் நதியால் சூழப்பட்டிருந்தது", என்று கூறுகிறார் விதே.

Bhatsa dam
PHOTO • Jyoti Shinoli

1970 - 72 பாட்சா அணைத் திட்டம் ஐந்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களை மூழ்கடித்து 127 குடும்பங்களை இடம்பெயர்த்தது

'மாவட்ட ஆட்சியர் எங்களது அனைத்து கிராமங்களின் பிரதிநிதிகளையும் அவரது அலுவலகத்திற்கு வரவழைத்து எங்களுக்கு 3 மாதக் கெடு விதித்தார்: டிசம்பருக்குள் இடத்தை காலி செய்யுங்கள் இல்லையென்றால் நாங்கள் போலீசாரை அழைத்து உங்களை விரட்டுவோம்' என்று அவர் கூறினார்", என்று விதே நினைவுகூர்கிறார்

பாட்சா திட்டத்திற்காக 3278 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதில் 653 ஹெக்டேர் தனியார் நிலமாகவும் மீதமுள்ளவை அரசுக்கு சொந்தமான காடுகளாகவும் இருந்தன. வீடுகளை இழந்த 127 குடும்பங்களில் 97 மா தாக்கூர் பழங்குடியின குடும்பங்களும் 30 ஓபிசி குடும்பங்களும் அடங்கும். வீழ்ச்சி: கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு 578 மனிதர்கள் இன்னமும் 'மறுவாழ்வுக்காக' காத்திருக்கின்றனர்.

"1970 இல் நடைபெற்ற எங்களது கடைசி அறுவடை காலத்தில் பாரம்பரிய கொண்டாட்டம் எதுவுமில்லை. அந்த மூன்று மாதங்கள் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் எங்களது தாய் மண்ணிற்கு நன்றி சொல்ல முடியவில்லை. அந்த ஆண்டு தசராவும் இல்லை, தீபாவளியும் இல்லை", என்று விதே நினைவுகூர்ந்தார்.

அவரது கிராமத்தில் இருந்து வெறும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முர்பிசபதாவில் உள்ள 35 பழங்குடியின குடும்பங்கள் 1971 - 72ல் அணைக்கட்டினால் கோதேபதுலிலிருந்து இடம்பெயர்ந்தனர். அப்போது ஜெய்து பாவ் கேவாரிக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. அவர் தனது பெற்றோர் மற்றும் நான்கு உடன்பிறப்புகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறினார்.

"முதன்முறையாக எங்களது பாரம்பரிய மேளம் மற்றும் நடனத்துடன் அறுவடையை நாங்கள் வரவேற்கவில்லை. எல்லோரும் பயந்து யோசித்தனர்: அவர்களின் 'இழப்பீடை' வைத்து எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும்", என்கிறார் கேவாரி.

Tribal families self-settled in Murbicha Pada, during 1971-72
PHOTO • Paresh Bhujbal
Tribal families self-settled in Murbicha Pada
PHOTO • Paresh Bhujbal

கோதேபதுலைச் சேர்ந்த 35 பழங்குடியின குடும்பங்கள் முர்பிசபதாவில் மீள்குடியேறினர் ஆனால் அவர்கள் அந்த ஆண்டு வழக்கமான மேளம் மற்றும் நடனத்துடன் அறுவடையைக் கொண்டாடவில்லை

"சிலர் தங்கள் உறவினர்களின் கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர். மற்றவர்கள் சாரங்காபுரி, பீர்வாடி, அட்டாகாவுன், கூட்டுகர், கைரே, முர்பிசபதா ஆகிய அருகில் இருக்கும் கிராமம் மற்றும் பதாவிற்குச் சென்றனர். பல குடும்பங்கள் காணாமல் போயின. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று எங்களுக்கு தெரியாது", என்று அவர் மேலும் கூறினார்.

"அதற்கு முன் எங்களது வாழ்க்கை அமைதியாகவும் தன்னிறைவாகவும் இருந்தது. நாங்கள் மிகவும் வளமான நிலத்தில் நெல் மற்றும் சில நேரங்களில் தானியங்களை அறுவடை செய்வோம். எரிபொருளுக்கான மரம், பழங்கள் மற்றும் மருத்துவ மூலிகைகள், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தாவரங்கள் - அனைத்தும் காட்டிலிருந்து வரும். எங்களிடம் 6 பசுக்கள் இருந்தன எப்போதுமே எங்களிடம் பால் இருக்கும். இப்போது அதைப் பார்ப்பது கூடிய கடினமாக இருக்கிறது", என்கிறார் கேவாரி.

வேடபதாவைச் சேர்ந்த ராமி கேவாரிக்கு பாபு பாவ் கேவாரியை திருமணம் செய்தபோது 15 வயது தான் ஆகியிருந்தது. "எங்களது உலகத்தை இயக்க எங்களுக்கு தேவையான அனைத்தும், எங்களைச் சுற்றிலும் இருந்தது. எங்களிடம் ஒரு நெல் வயலும் சில பசுக்களும் இருந்தன. சிலர் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளான உளுந்து, துவரை, பாசிப்பயறு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை பயிரிடுவார்கள், ஒரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த அனைத்தும் இப்போது எங்களுக்கு கிடைப்பதே இல்லை. நாங்கள் சாப்பிடுவதற்கு ஒருபோதும் செலவழித்ததில்லை, ஆனால் இப்போது செய்ய வேண்டி இருக்கிறது", என்று அவர் கூறுகிறார்.

Portrait of a woman (Rami Kevari)
PHOTO • Paresh Bhujbal
Group of men in a room. Gopal Dattu Kevari – one in a white vest
PHOTO • Paresh Bhujbal

ராமி கேவாரி (இடது) மற்றும் கோபால் கேவாரி (வலதிலிருந்து மூன்றாவது)

இன்று வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப அட்டை வைத்திருப்பவரான ராமி கேவாரி 15 கிலோ மீட்டர் பயணம் செய்து சகாபூருக்குச் சென்று பருப்பு வகைகளை கிலோ ஒன்றை 80 ரூபாய்க்கு வாங்க வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் அவரைப்போலவே செய்கின்றனர்.

இடம்பெயர்ந்த பிறகு பிறந்த தலைமுறையினர் இருண்ட சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். இப்பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் வேலை இல்லை. பண்ணை வேலை, கொத்தனார், மீன் பிடித்தல் அல்லது வனப் பொருட்களை விற்பது மட்டுமே இங்கிருக்கும் வருமான ஆதாரங்களாகும்.

35 வயதாகும் கோபால் தத்து கேவாரி, அவரது வயதினர் பிறரைப் போலவே விவசாயத் தொழிலாளியாக வேலை செய்கிறார். அவரது குடும்பம் 16 நபர்களை உடையது. "நான் நாளொன்றுக்கு 200 - 250 ரூபாய் சம்பாதிப்பேன். ஆனால் வருடத்தில் 150 நாட்களுக்கு மேல் எனக்கு வேலை கிடைப்பதில்லை", என்கிறார்.

கோபாலுக்கு 6 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு நிரந்தர வேலை இல்லாத ஐந்து இளைய சகோதரர்களும் உள்ளனர். "நாங்கள் அனைவரும் சேர்ந்து சம்பாதிப்பது மாதமொன்றுக்கு 5000 முதல் 6000 ரூபாய்க்கு மேல் இருக்காது".

முர்பிசபதாவில் ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது ஆனால் அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோதாரேவில் இருக்கிறது. "பத்தாம் வகுப்புக்கு பிறகு அனைத்து பதாக்களிலும் உள்ள மாணவர்கள் சகாப்பூருக்கு செல்ல வேண்டியிருக்கிறது, அங்குதான் கல்லூரி மற்றும் விடுதி வசதிகள் இருக்கின்றது. சிலரால் இதை சமாளிக்க முடியும் ஆனால் இடை நிற்பவர்களின் விகிதம் தான் அதிகமாக இருக்கிறது", என்று பெயர் கூற விரும்பாத ஒரு உள்ளூர் ஆசிரியர் கூறுகிறார்.

Children in a classroom in a primary school in Murbichapada
PHOTO • Paresh Bhujbal
Group of boys (Sachin Kevari with his friends)
PHOTO • Paresh Bhujbal

முர்பிசபதாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சச்சின் கேவாரியை (வலமிருந்து நான்காவது) போன்ற பல மாணவர்கள் இடப்பெயர்வுக்கு பின்பு படித்தனர் ஆனால் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டனர்

முர்பிசபதாவைச் சேர்ந்த 25 வயதாகும் சச்சின் கேவாரி எட்டு வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார் அப்போது அவர் பண்ணை தொழிலாளராகவும் இருந்தார். "என்னால் தங்கும் விடுதி அல்லது பயணத்திற்கான பணத்தை கொடுக்க முடியவில்லை. என் குடும்பத்தை ஆதரிக்க பணம் சம்பாதிப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது", என்று அவர் விரக்தியில் கூறுகிறார்.

88 மீட்டர் உயரம் கொண்ட பாட்சா அணையில் 976 கன மீட்டர் நீர் தேக்கத்திறன் மற்றும் 15 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் உள்ளது. இதன் மூலம் 23,000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மும்பை மற்றும் தானே நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை வழங்குகிறது.

Women in Murbichapada going to fetch water towards Mumari river which is 2 KM far
PHOTO • Paresh Bhujbal

அணை மும்பைக்கு தண்ணீரை வழங்கும் போது முர்பிசபதாவிலுள்ள பெண்கள் தண்ணீருக்காக பல கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர்

"இது விளக்கிற்கு கீழ் உள்ள இருளைப் போன்றது. இந்தத் திட்டத்திற்காக இந்த மக்கள் தங்களது பூர்வீக நிலத்தை தியாகம் செய்தனர். மேலும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை... வசதிகள் இல்லை, வேலை இல்லை, கல்வி இல்லை", என்று சமூக ஆர்வலரும் 1986 இல் நிறுவப்பட்ட (இடம்பெயர்ந்த மக்களின் போராட்டம் அதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது) பாட்சா நீர்ப்பாசனத் திட்ட மறுவாழ்வு குழுவின் (BIPRC) ஒருங்கிணைப்பாளருமான பாபன் ஹரானே கூறுகிறார்.

BIPRC யின் தலைவரான 63 வயதாகும் பாவ் பாபு மகாலுங்கே இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர். அவர் மஹாராஷ்டிர திட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் மறுவாழ்வு சட்டம் 1999 இன் கீழ் வெளியேற்றப்பட்ட மக்களுக்காக நீதி கோரி வருகிறார்.

அவர்களுடைய சாகுபடி நிலங்கள் அபத்தமான வகையில் மிகக் குறைந்த விலையில் 1970 - 71ல் ஏக்கருக்கு 230 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. தேசிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கை 2007-இல் தேவைப்படும் 'சமூகத் தாக்க மதிப்பீடு' இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை", என்கிறார் மகாலுங்கே.

1973 முதல் இடம்பெயர்ந்த ஆதிவாசிகள் மற்றும் ஓபிசி கிராம மக்கள் நூற்றுக்கணக்கான நாட்களை போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை (மற்றும் கடிதங்கள் எழுதி) கழித்துள்ளனர். மேலும் இன்றைய தலைமுறை உயிர்வாழவே போராடி வருகிறது.

"பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் நகர்ப்புறத்தில் என்ன வேலை கிடைக்கும்? அவர்கள் நன்றாக சம்பாதிக்க முடியுமா?", என்று சச்சின் கேவாரி கேட்கிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Jyoti Shinoli is a Senior Reporter at the People’s Archive of Rural India; she has previously worked with news channels like ‘Mi Marathi’ and ‘Maharashtra1’.

Other stories by Jyoti Shinoli
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose