திரும்பிப் பார்க்கையில் உஜ்வாலா பேத்கர் கடினமான காலத்தை தான் எவ்வாறு கடந்து வந்தார் என்று ஆச்சரியப்படுகிறார்.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியலில் சேர்ந்து கொண்ட அவரது கணவர் பிரபாகர் இறந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்டது, 40 வயதிற்கு மேல் இருக்கும் விவசாய விதவையான இவர் தனது வாழ்க்கையையும் குடும்பத்தையும் மீண்டும் கட்டி எழுப்புகிறார்.

ஏதோ ஒன்று அவரை முன்னேறிச் செல்ல வைத்தது. "ஒருவேளை" என்கிறவர் பிறகு ஒரு இடைவெளி விட்டு "அது என் குழந்தைகள் தான்", என்று அவர்  கூறுகிறார்.

உஜ்வாலாவிற்கு வருத்தப்படுவதற்கு கூட நேரமில்லை, ஓய்வெடுக்கும் வசதி இல்லை, ஆதரவளிப்பதற்கும் யாருமில்லை. பிரபாகர் பூச்சிக்கொல்லியை உண்டு இறந்த போது இவருக்கு முப்பது வயது இருக்கும். இவர்மீது பொறுப்புகள் குவிந்தன: வயலுக்கு செல்வதிலிருந்து கடனை திருப்பிச் செலுத்துவது மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது வரை.

கடந்த தசாப்தத்தை எண்ணி வருத்தப்பட்ட உஜ்வாலா தனது கண்ணீரை மறைத்தபடி தனது பயிரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார். இது அவருடைய நிலம் - வார்தா நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் 2000 மக்களைக் கொண்ட கிராமமான குர்சாதியில் அவருக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம். மேலெழும்பி வரும் சூரியன் வசந்த காலத்தின் தொடக்கத்தை அறிவித்தது ஆனால் அது இவர் வயலில் வேலை செய்வதிலிருந்து தடுக்கவில்லை. "நான் வேலை செய்யவில்லை என்றால் எனது குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடையாது - அவர்களுக்காக நான் இன்னும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உழைப்பேன்", என்றார்.

தனிமையில் தனது நிழலுடன் உஜ்வாலா போராடினாலும் விதர்பா விவசாய விதவைகளின் உறுதியான முகம் அவருக்கு இருக்கிறது. அவர் ஒரு நீடித்த விவசாயியின் உருவம், நூற்றுக்கணக்கான விவசாய விதவைகளின் உருவம், குடும்பச் சுமையை தாங்கி களையமறுக்கும் விவசாய நெருக்கடியை எதிர்கொள்கிறார். 1995க்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடையில் 3 லட்சம் விவசாய தற்கொலைகளை இந்தியா பார்த்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. விதர்பாவில் பருத்தி பிரச்சனை வெளிப்பட்டு கொண்டிருந்தபோதே 2003 உஜ்வாலாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

'நான் மக்களின் உண்மையான முகத்தை எனது கணவரின் இறப்பிற்கு பிறகு பார்த்தேன்'

"விவசாயம் பெண்களுக்கு உகந்ததல்ல", என்கிறார்கள் உஜ்வாலா. "நான் வங்கிக்கு சென்றால் எழுத்தர்கள் என்னை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை; சந்தைக்குச் சென்றால் வெளியாட்கள் தங்களது இடத்திற்குள் புகுந்தது போல ஆண்கள் என்னை முறைத்துப் பார்க்கிறார்கள்", என்று அவர் கூறுகிறார். "விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் கூட, எனது வயலுக்கு எளிதில் வரமாட்டார்கள்", என்கிறார்.

'விவசாயத்தை பெண்மயமாக்கல்' என்கிற செயல்பாட்டில் அவரை காட்சிப்படுத்தி பாருங்கள்: நாள் முழுவதும், எல்லா பருவத்திலும் தனது நிலத்தில் உழைக்கிறார்: பருத்தி, சோயாபீன், சோளம், பயறு மற்றும் கோதுமை ஆகியவற்றை விளைவிக்கிறார். கடினமான சவால்கள் இருந்தபோதிலும், இந்த கோடையில் உங்கள் தட்டில் அவர் உணவு வைப்பார், அவருடைய கோதுமை பயிர் தயாரானதும் அதை அறுவடை செய்து சேகரித்து சந்தைக்கு கொண்டு செல்வார்.

"எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால் நான் இன்னும் எனது வயலில் வேலை செய்திருப்பேன், ஆனால் அதன் பொருளாதாரம் எனக்கு தெரியாமலேயே போயிருக்கும்", என்று நெத்தியில் தனது கைக்குட்டையை கட்டிக்கொண்டு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் கோதுமைபயிர்களை பார்த்தபடியே உஜ்வாலா கூறுகிறார்.

இல்லத்தரசியாக இருந்து விவசாயி மற்றும் குடும்ப தலைவியாக அவர் நகர்ந்தது எளிதானது அல்ல என்று உஜ்வாலா கூறுகிறார். "நான் மக்களின் உண்மையான முகத்தை எனது கணவரின் இறப்பிற்கு பிறகு பார்த்தேன்", என்கிறார். "யாரும் - உங்கள் நெருங்கிய உறவினர்கள் கூட ஆதரவு தரமாட்டார்கள் - இந்த உலகத்தில் நான் தனியாக சுயமாக இருக்கிறேன் என்பதை நான் கற்றுக்கொண்டேன்".

"உதவிக்கான சலுகைகள் மக்களின் பல அசிங்கமான எண்ணங்களை மறைக்கும் திரை", என்று சலிப்புடன் அவர் கூறுகிறார். உதவி வழங்குபவர்களிடம் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். "நான் யாரிடமிருந்து உதவி பெறுவதில்லை; எனது பிரச்சனைகளை நானே சந்தித்துக் கொள்கிறேன், எனது வயலில் நானே வேலை செய்து கொள்கிறேன் மற்றும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக எனது குழந்தைகளை வளர்க்கிறேன் அவ்வளவே..." உஜ்வாலா தனது மகளான வ்ருஷாலியைப் பற்றி எண்ணி பெருமை கொள்கிறார், அவரது தந்தை இறந்த போது அவருக்கு வயது பத்து மேலும் அவர் தற்போது தன்னம்பிக்கையுடன் வேலை செய்யும் ஒரு இளம் பெண்ணாக வளர்ந்து நிற்கிறார். உயர்நிலை படிப்பிற்கு பிறகு வ்ருஷாலி செவிலியராக பயிற்சி பெறுவதற்காக நாக்பூருக்குச் சென்றார் மேலும் அங்கேயே ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். 17 வயதாகும் மகன் ப்ரஷீல் பள்ளியில் இருந்து இடை நின்று விட்டு கூலியாக வேலை செய்து வருகிறார் சில சமயங்களில் தனது தாய்க்கும் உதவுவார்.

PHOTO • Jaideep Hardikar
PHOTO • Jaideep Hardikar

'எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தது': இன்று, புத்திசாலித்தனமாக விவசாயம் செய்கிறார், பயிர் சுழற்சி செய்கிறார், புதிய விஷயங்களை முயற்சி செய்கிறார், தனது நிதியை கையாள்கிறார், ஆனாலும் 'விவசாயம் கடினமானது', என்று கூறுகிறார்

உஜ்வாலா, தனது விவசாய பெற்றோரால் 19 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார், அடிப்படையிலிருந்து விவசாயத்தின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்: பயிர் தேர்வு, உள்ளீடுகள் வாங்குதல், வங்கிப் பரிவர்த்தனை மற்றும் உண்மையான விவசாயம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை. "எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தது". இன்று, புத்திசாலித்தனமாக விவசாயம் செய்கிறார், பயிர் சுழற்சி செய்கிறார், புதிய விஷயங்களை முயற்சி செய்கிறார், தனது நிதியை கையாள்கிறார், ஆனாலும் "விவசாயம் கடினமானது", என்று கூறுகிறார்.

வயல்களில் அவர் முயற்சித்த பல அணுகுமுறைகளில் இழப்புகளை குறைப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் பரந்துபட்ட விவசாயமே சிறந்த உத்தி என்பதை உணர்ந்தார். "எனது வயலில் கரும்பு பயிர் செய்யலாமா என்று முயற்சித்துப் பார்த்தேன், அறுவடை மோசமாக இருந்தது, அதனால் நான் அதை முன்னெடுத்துச் செல்லவில்லை", என்று அவர் கூறுகிறார்.

பிரபாகர் இறந்த பிறகு தனது மாமனார் மற்றும் மாமியார் தன்னை விட்டு விலகியதாக உஜ்வாலா கூறுகிறார். தனக்கு இருக்கும் ஒரே சொத்து இந்த நிலம்தான் என்று கூறுகிறார். "எனது கணவர் உயிருடன் இருந்தபோது நாலரை ஏக்கர் நிலத்தை நாங்கள் கடன் கொடுத்தவரிடம் இழந்துவிட்டோம்", என்று கூறுகிறார். "அந்த நிலத்தை என்னால் மீட்க முடியவில்லை - அது எனக்கும் அப்பாற்பட்டது", என்று கூறுகிறார்.

மதியம் ஆகிவிட்டது, பயறின் வைக்கோலை அவர் அடுக்கி வைக்க வேண்டும். வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இல்லை என்கிறார். "நான் மீண்டும் கடன் மற்றும் கஷ்டத்தில் இருக்கிறேன்", என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

நஷ்டமும் கடனும் அவரது கணவருக்கு உண்டானது. "அவர் இறந்து போன போது எங்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் கடன் இருந்தது", என்று கூறுகிறார். "கொஞ்சம் கொஞ்சமாக நான் கடனை திருப்பி செலுத்தி வருகிறேன்; இன்னமும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தனியார் கடன் கொடுப்பவர்கள் மற்றும் வங்கியில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கிறது", என்று கூறுகிறார். "அவர்களிடம் நான் நேரம் வாங்கி கொண்டிருக்கிறேன்", என்கிறார்.

மரணம் என்பது நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான வழி அல்ல, என்று அவர் தத்துவார்த்த ரீதியாக கூறுகிறார். "நாம் பிறப்பது ஒரு முறை தான், துயரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்; எனது கணவர் எங்களை பற்றி யோசிக்காமல் தற்கொலை செய்து கொண்டார்", என்று கூறுகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Jaideep Hardikar

Jaideep Hardikar is a Nagpur-based journalist and writer, and a PARI core team member.

Other stories by Jaideep Hardikar
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose