"எனது இரு கைகளிலும் ஒரு பானாவுடன் (ஸ்பேனருடன்) நான் இறப்பேன்", என்று சம்சுதீன் முல்லா கூறுகிறார். "மரணமே எனது ஓய்வாக இருக்கும்!"

இது சற்று நாடகத்தனமாக தோன்றலாம், ஆனால் சம்சுதீன் உண்மையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பேனர் மற்றும் பிற கருவிகளை பயன்படுத்தி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்துவிட்டார். இக்கருவிகளை பயன்படுத்தி எல்லா வகையான இயந்திரங்களையும் - தண்ணீர் பம்பு, போர்வெல் பம்பு, சிறிய அகழ்வாயும் கருவி, டீசல் இயந்திரம் மற்றும் பலவற்றை பழுது நீக்குகிறார்.

இதுபோல, பழுதான அல்லது ஓரங்கட்டப்பட்ட விவசாயக் கருவிகளை மீண்டும் உயிர்பித்துக் கொண்டு வருவதில் அவருக்கு உள்ள நிபுணத்துவத்துக்கு கர்நாடகாவின் பெல்காம் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் அதிக தேவை உள்ளது. "மக்கள் என்னைத் தான் அழைப்பார்கள்", என்று அவர் ஒருவித பெருமிதத்துடன் கூறுகிறார்.

விவசாயிகளும் மற்றும் பிற வாடிக்கையாளர்களும் இயந்திரத்தில் உள்ள பழுதைக் கண்டறிய அவர் பயன்படுத்தும் தனிப்பட்ட நுட்பத்தின் காரணமாக சம்சுதீனைத் தேடி வருகிறார்கள். "நான் ஆப்பரேட்டரை கைப்பிடியை மட்டுமே சுழற்ற சொல்வேன், அதிலிருந்து இயந்திரத்தில் என்ன பழுது இருக்கிறது என்பதை என்னால் கண்டறிய முடியும்," என்று அவர் விளக்குகிறார்.

அதன் பின்னரே உண்மையான வேலை துவங்குகிறது. ஒரு பழுதான இயந்திரத்தை சரி செய்ய அவருக்கு எட்டு மணி நேரம் ஆகிறது. "இதில் இயந்திரத்தை திறந்து அதை மறுசீரமைப்பதற்கான நேரத்தையும் அது உள்ளடக்கியுள்ளது" என்று சம்சுதீன் கூறுகிறார். "இன்று, (இயந்திர) உபகரணங்கள் அனைத்தும் அதை சரி செய்வதற்கான ஆயத்த கருவிகளுடனே வருகின்றன, எனவே அவற்றை சரி செய்வது மிக எளிதாகிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அவரது எண்ணற்ற மணிநேரப் பயிற்சியே அவரது இந்த எட்டு மணி நேர சராசரியை அடைய அவருக்கு உதவியுள்ளது. தற்போது 83 வயதாகும் சம்சுதீன், தான் கடந்த 73 வருடங்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இயந்திரங்களை பழுது நீக்கம் செய்திருப்பேன் என்று தோராயமாக மதிப்பிடுகிறார்- ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் இயந்திரம், கடலை மற்றும் எண்ணெய் விதைகளில் இருந்து  எண்ணெயை பிரித்தெடுக்கும் இயந்திரம், கட்டுமான இடங்கள் மற்றும் கிணறுகளில் கற்களை நகர்த்த பயன்படுத்தும் இயந்திரம் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் அவர் பழுது நீக்கம் செய்துள்ளார்.

PHOTO • Sanket Jain

83 வயதான சம்சுதீன் முல்லா தனது தனித்துவமான நுட்பங்களுக்காக பெல்காம் மற்றும் கோலாப்பூர் மாவட்ட கிராமங்களில் அறியப்படுகிறார். நாங்கள் அவரை சந்தித்தபோது வெயிலை பொருட்படுத்தாமல் வேலை செய்துகொண்டிருந்தார், கோலாப்பூர் நகரத்திலுள்ள வன்பொருள் கடைக்காரர்களிடம் இருந்து அவருக்கு பல அழைப்புகள் வந்து கொண்டிருந்தது, மேலும் "கடைக்காரர் என்னிடம் என்னை வந்து சந்தித்த வாடிக்கையாளரின் பெயரை கூறிவிட்டு, என்ன பாகம் வேண்டும் என்று கேட்டால் போதும்" என்று கூறுகிறார்.

பல விவசாயிகளுக்கு திறமையான மெக்கானிக்குகளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது, ஏனெனில் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட மெக்கானிக்குகள் பொதுவாக அவர்களின் கிராமங்களுக்குச் செல்வதில்லை. மேலும் "நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களை அழைத்தால் செலவும் அதிகமாகும்" என்று அவர் கூறுகிறார். "தொலைதூர கிராமங்களுக்குச் சென்றடைய அவர்களுக்கு அதிக நேரம் எடுக்கும்." ஆனால், சம்சுதீனால் மிக வேகமாக பழுதான இயந்திரத்தை சென்றடைய முடியும். இளைய தொழில்நுட்ப வல்லுனர்களால் இயந்திரக் கோளாறை கண்டறியவோ அல்லது சரி செய்யவோ முடியாதபோது விவசாயிகள் இவரிடம் ஆலோசனை பெறுகின்றனர்.

பெல்காம் மாவட்டத்தின் சிக்கோடி தாலுகாவில் உள்ள பார்வாட் என்ற தனது கிராமத்தில் சம்சுதீனை ஷாமா மிஸ்திரி- ஒரு தலைசிறந்த மெக்கானிக் என்று அழைப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்த கிராமத்தில் தான் மக்கள் தங்கள் சிறிய பழுதான இயந்திரங்களைக் கொண்டுவந்து உயிர்ப்பித்துக் கொள்கிறார்கள் அல்லது சம்சுதீன் இங்கிருந்து வயல்களுக்கும் மற்றும் பட்டறைகளுக்கும் பயணம் செய்கிறார், அங்கு பழுதான இயந்திரங்கள் இவரது நிபுணத்துவத் தொடுதலுக்காக காத்திருக்கின்றன.

இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் சம்சுதீனின் திறன்களை மதிக்கின்றன. கிர்லோஸ்கர், யன்மார் மற்றும் ஸ்கோடா போன்ற பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளையும், பல உள்ளூர் நிறுவனங்கள் தயாரிக்கும் இயந்திரங்களையும் இவரால் பழுது நீக்கம் செய்ய முடியும். "இயந்திரங்களை மேம்படுத்துவதற்கு அவர்கள் என்னிடம் கலந்தாலோசிக்கின்றனர், மேலும் நான் எப்போதும் அவர்களுக்கு எனது கருத்தை தெரிவிக்கின்றேன்" என்று அவர் கூறினார்.

எடுத்துக்காட்டாக, முன்னர் இயந்திரங்களின் கைப்பிடிகள் உறுதியானதாகவும் மற்றும் கச்சிதமாகவும் இல்லை. " மக்கள் கைப்பிடியை (கிராங்க்ஷாப்ட்டை) பலமுறை சுழற்ற வேண்டியிருந்தது, மேலும் அது அவர்களுக்கு கடினமானதாகவும், காயம் ஏற்படுத்துவதாகவும் இருந்தது. கைப்பிடிகளை மேம்படுத்தச் சொல்லி சில நிறுவனங்களை நான் அறிவுறுத்தினேன். இப்போது அவற்றில் பல, இரண்டு கியர்களுக்குப் பதிலாக  மூன்று கியர்களை வழங்குகின்றன" என்று அவர் கூறுகிறார். இது கைப்பிடியின் சமநிலை, நேரம், மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. கோலாப்பூர் மாவட்டத்தில் தங்கள் நிறுவனங்களின் கிளைகளைக் கொண்ட சில நிறுவனங்கள் சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் நிறுவனத்தின் ஆண்டு விழா போன்ற சந்தர்ப்பங்களில் அவரை தங்கள் கொண்டாட்டங்களுக்கு அழைக்கின்றனர்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சம்சுதீன் மிகவும் பரபரப்பாக இருக்கிறார், அந்த மாதங்களில் மாதத்திற்கு சுமார் 10 இயந்திரங்களைப் பழுது பார்க்கிறார் பழுதின் சிக்கலைப் பொருத்து ஒவ்வொரு பழுது பார்க்கும் வேலைக்கும் ரூபாய் 500 முதல் ரூபாய் 2000 வரை கட்டணம் பெறுகிறார். "மழை பெய்யத் துவங்குவதற்கு முன்பு பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள கிணறுகளை தோண்டுகிறார்கள், எனெனில், அப்பொழுது தான் பல இயந்திரங்களை சரி செய்ய வேண்டியிருக்கும்" என்று அவர் விளக்குகிறார். ஆண்டின் மீதி நாட்களிலும் அவரது பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும், ஆனால் அழைப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

PHOTO • Sanket Jain

மேல் வரிசை: இளைய தலைமுறையினர் பலர் கரி ஒட்டும் இயந்திரங்களில் தங்களது கைகளை நுழைக்கத் தயாராக இல்லை என்று சம்சுதீன் கூறுகிறார். "நான் ஒருபோதும் கையுறைகளை பயன்படுத்தியதில்லை, இப்பொழுது மட்டும் அவற்றைப் பயன்படுத்தி நான் என்ன செய்யப் போகிறேன்? என்று அவர் கேட்கிறார்.

கீழ் வரிசை: ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சம்சுதீன் வாங்கிய பிரிக்கப்பட்ட இயந்திரத்தின் உட்பாகங்கள் (இடது) மற்றும் சில கருவிகள் (வலது). அவர் சரியான வகை உபகரணங்களைப் பெறுவதில் மிகவும் குறியாக இருக்கிறார், மேலும் எந்த ஒரு பழுதுபார்ப்பு வேலைக்கும் தனது சொந்தக் கருவிகளை எடுத்துச் செல்லவே அவர் விரும்புகிறார்.

சம்சுதீனுக்கு இயந்திரங்களைப் பழுது பார்க்கும் வேலை இல்லாத நேரங்களில், தனது 2 ஏக்கர் பண்ணையை கவனித்துக் கொள்கிறார், மேலும் அதில் கரும்பும் பயிரிட்டிருக்கிறார். கோலாப்பூரின் ஹட்கானங்கள் தாலுகாவில் உள்ள பட்டன் கோடோலியில் இருந்து விவசாயிகளான அவரது தந்தை அப்பாலாலும் அவரது தாயார் ஜன்னத்தும் பார்வாட்டுக்கு புலம் பெயர்ந்த போது அவருக்கு சுமார் 7 அல்லது 8 வயது இருந்திருக்கும். தனது குடும்பத்தின் வருவாய்க்கு உதவ 1946 ஆம் ஆண்டில் தனது பத்தாம் வயதில் சம்சுதீன் பார்வாட்டில் ஒரு மெக்கானிக்கிற்கு  உதவத் தொடங்கினார். 10 மணி நேர வேலைக்கு ஒவ்வொரு நாளும் அவருக்கு ஒரு ரூபாயை சன்மானமாக பெற்றுத்தந்தது. குடும்பத்தின் வறுமை அவரை ஒன்றாம் வகுப்புக்கு மேல் படிப்பதை தடுத்து நிறுத்தியது. "நான் மட்டும் எனது கல்வியை தொடர்ந்திருந்தால் இன்று நான் ஒரு விமானத்தை பறக்க விட்டுக் கொண்டிருந்திருப்பேன்" என்று அவர் சிரிப்போடு கூறுகிறார்.

1950 களின் நடுப்பகுதியில் இயந்திரங்களுக்கு டீசல் வாங்குவதற்காக- தனது கிராமத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சரக்கு ரயில் நிறுத்தப்படும் ஹட்கானங்கள் கிராமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மாட்டுவண்டியில் சென்று வந்ததை சம்சுதீன் நினைவு கூர்ந்தார். "அப்பொழுதெல்லாம் டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் செலவாகும், ஒவ்வொரு முறையும் நான் 3 பீப்பாய்கள் (சுமார் 600 லிட்டர்) வாங்குவேன்." அந்த நாட்களில் சம்சுதீன் 'ஷாமா டிரைவர்' என்று அழைக்கப்பட்டார் -அவரின் வேலை இயந்திரங்களை பராமரிப்பதே.

1958 ஆம் ஆண்டில் கோலாப்பூர் நகரத்தைச் சேர்ந்த ஒரு சில மெக்கானிக்குகள் பார்வாட்டுக்கு அருகிலுள்ள தூத்கங்கா ஆற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக 18 குதிரைத்திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவ வந்தனர். அப்பொழுது சம்சுதீனுக்கு வயது 22, ஒரு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள சம்சுதீன் அவர்கள் செய்யும் வேலையை கவனமாக கவனித்தார். "அது செயல்படுவதற்கு ஒவ்வொரு நாளும் இரண்டு ரூபாய் மதிப்புள்ள கச்சா எண்ணெய் தேவைப்பட்டது" என்று அவர் நினைவு கூர்ந்தார். உயர்ந்து வந்த நதி நீரில் மூழ்கி அடுத்த வருடம் அந்த இயந்திரம் செயலிழந்தது. தொழில்நுட்ப வல்லுனர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர். சம்சுதீனும் தனது சொந்த திறமைகளை மேம்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். 1960 ஆம் ஆண்டில் இயந்திரம் மீண்டும் தண்ணீரில் மூழ்கியபோது (அது கடைசியில் வேறொரு புதிய தரம் உயர்த்தப்பட்ட இயந்திரத்தால் மாற்றப்பட்டது) அந்த இயந்திரத்தை சொந்தமாக அவரே சரி செய்தார். "அன்றிலிருந்து இன்று வரை எனது பெயர் 'ஷாமா டிரைவர்' என்பதிலிருந்து 'ஷாமா மிஸ்திரி' என்று மாற்றப்பட்டது என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.

1962 இல் நடந்த ஒரு சம்பவம், சம்சுதீனை இயந்திரங்களின் உலகத்தை அவர் மேலும் ஆராய இதுவே சரியான தருணம் என்று  உணர வைத்தது. பார்வாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயலுக்கு ஒரு இயந்திரம்  வாங்கித் தருவதற்கு இவரை கோரியிருந்தார். "நான் ஹட்கானங்கள் தாலுகாவிலுள்ள (சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள) குனாகி கிராமத்திற்கு நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கிற்கு சென்று ரூபாய் 5000 க்கு இயந்திரம் ஒன்றை வாங்கி வந்தேன்," என்று அவர் கூறுகிறார். அதை சரியாக பொருத்துவதற்கு அவருக்கு மூன்று நாட்களில்  இருபது மணி  நேரம் பிடித்தது. "நிறுவனத்தின் மெக்கானிக் ஒருவர் பின்னர் அதை ஆய்வு செய்தார், அது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

PHOTO • Sanket Jain

பார்வாட் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டில்: சம்சுதீனும் அவரது மனைவி குல்ஷானும், மேலும் அவரது மனைவி "என்னை பொறுத்தவரையில் இயந்திரங்களை சரி செய்வதைவிட  விவசாயமே சிறந்தது" என்று கூறுகிறார்.

காலத்தின் போக்கில், ஒரு திறமையான மெக்கானிக் என்ற முறையில் சம்சுதீனின் நற்பெயர் வளர்ந்து கொண்டே வந்தது. அதற்குள் அவர் மற்றொரு மெக்கானிக்கிடம் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் சம்பளத்தில் 5 ஆண்டுகள் வேலை செய்தார். அவர் சொந்தமாக இயந்திரங்களை சரி செய்ய துவங்கியபோது அவரது வருமானம் ஒரு நாளைக்கு 5 ரூபாய் வரை உயர்ந்தது. அவர் தனது சைக்கிளில் பெல்காமில் (தற்போதுள்ள பெலகாவியில்) உள்ள சிக்கோடி தாலுகாவைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்வார். இன்று, அவரது வாடிக்கையாளர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் வாகனங்களில் வந்து அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால், இயந்திரங்களை சரி செய்யும் இந்த கைத்தொழிலிலும் அதற்கான அபாயங்கள் உள்ளது. "ஒருமுறை (1950 களில்) நான் வேலை செய்து கொண்டிருந்த போது எனக்கு காயம் ஏற்பட்டது. என்னுடைய முதுகில் இருக்கும் அந்தக் காயத்தை இன்றும் நீங்கள் காணலாம். அவை ஒருபோதும் குணம் அடைவதில்லை," என்கிறார் சம்சுதீன். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கோலாப்பூர் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்தனர். "மருத்துவர்கள் அவரை ஆறு மாதங்கள் வரை ஓய்வெடுக்கச் சொன்னார்கள், ஆனால் இயந்திரங்களை சரி செய்ய வேறு யாருமில்லை," என்கிறார் அவரது மனைவி குல்ஷான். "இரண்டு மாதங்களில் மக்கள் வந்து தங்கள் இயந்திரங்களை சரி செய்து தரச் சொல்லி அவரை தொந்தரவு செய்யத் தொடங்கிவிட்டனர்" என்கிறார்.

70 களின் நடுப்பகுதியில் இருக்கும் குல்ஷான், அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட உதவுகிறார், மேலும் அந்தக் கரும்புகளை அவர்கள் சந்தையில் விற்கின்றனர். " பழுது பார்ப்பது எப்படி என்பதை நான் கற்றுக் கொள்ளும்படி கூறுவார், சில சமயங்களில் அதை கற்றும் கொடுப்பார், ஆனால் எனக்கு அதில் ஆர்வம் அதிகம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இயந்திரங்களை சரி செய்வதைவிட விவசாயமே சிறந்தது" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

அவர்களின் மகன்களும் சம்சுதீனின் இந்த கைத்தொழிலை எடுத்துச் செய்யவில்லை (அவருக்கும் குல்ஷானுக்கும் மகள்கள் கிடையாது). அவரது மூத்த மகன் மௌலாவிக்கு 58 வயதாகிறது, அவர் பார்வாட்டில் சொந்தமாக மின்சார மோட்டார் கடை வைத்திருக்கிறார்.  தனது 50 களின் மத்தியில் இருக்கும் ஈசாக்கு பண்ணையை கவனித்துக் கொள்ள உதவுகிறார். அவர்களது இளைய மகன் சிக்கந்தர் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

"நான் வெளியே சென்றேன், மக்களை கவனித்தேன், இந்தக் கலையை கற்றுக் கொண்டேன்" என்று சோகமான தொணியில் சம்சுதீன் கூறுகிறார். "இன்று எங்கள் வீட்டிலேயே அதற்கான அறிவும் மற்றும் வளங்களும் இருக்கிறது, ஆனால் யாரும் ஒரு இயந்திரத்தை கூட தொட விரும்பவில்லை", என்று கூறுகிறார்.

PHOTO • Sanket Jain
PHOTO • Sanket Jain

பெரிய மற்றும் கனமான இயந்திரங்களை சரி செய்வதற்கு சம்சுதீன் நேரடியாக அதன் களத்திற்கே பயணம் செய்வார். இப்போது அவர் பெல்காம் மாவட்டத்தில் உள்ள கஜபார்வாடி கிராமத்தில் கிணறு தோண்டும்போது கற்களை மேலே தூக்க பயன்படுத்தப்படும் டீசல் இயந்திரத்தை பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரது வீட்டிற்கு வெளியேயும் இதேபோல ஒரு நிலைமை உள்ளது. "இயந்திரத்தின் எண்ணெயால்(கருப்பான, அழுக்காக) யாரும் தங்கள் கைகளை அழுக்காக்கி கொள்ள விரும்புவது இல்லை. இளைய தலைமுறையினர் இந்த வேலையை 'அழுக்கு வேலை' என்று அழைக்கின்றனர். எண்ணெயைத் தொட விரும்பாத ஒருவரால் இயந்திரத்தை எவ்வாறு சரி செய்ய முடியும்?" என்று அவர் சிரிப்போடு கேட்கிறார். தவிர இப்போது மக்களிடம் நிறைய பணம் இருக்கிறது, ஒரு இயந்திரம் வேலை செய்யவில்லை என்றால், அவர்கள் புதியதை வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

மேலும், பல ஆண்டுகளாக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 10 முதல் 12 மெக்கானிக்குகளுக்கு சம்சுதீன் பயிற்சி அளித்துள்ளார். அவரைப்போல திறமையானவர்கள் யாரும் இல்லை என்றாலும், அவர்களாலும் இப்போது இயந்திரங்களை எளிதில் சரிசெய்ய முடியும் என்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார், மேலும் சில நேரங்களில் பழுது என்ன என்பதை கண்டறிவதற்கு இவரின் உதவியை அவர்கள் நாடுகின்றனர்.

இளைய தலைமுறையினருக்கு என்ன ஆலோசனை வழங்க விரும்புகிறார் என்று கேட்டபோது, சம்சுதீன் புன்னகைத்துக் கொண்டே, "நீங்கள் எதிலாவது ஆர்வமுடன் இருக்க வேண்டும். நீங்கள் செய்வதை நேசிக்க வேண்டும். நான் இயந்திரங்களை விரும்புகிறேன், அதிலேயே எனது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டேன். என் குழந்தைப் பருவத்தில் இருந்தே, இயந்திரங்களை ஆராய்ந்து சரி செய்ய விரும்பினேன், அந்தக் கனவை நான் அடைந்து விட்டேன் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

"நான் என் இரு கைகளிலும் பானாவைப் பிடித்துக் கொண்டே (ஸ்பேனர்)  இறப்பேன்"- என்று அறிவிக்கிறார். ஆனால் இந்த வார்த்தைகள் நான் இளைஞனாக இருந்தபோது சந்தித்த எனக்கு வழிகாட்டிய மெக்கானிக் ஒருவரிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார், இயந்திரங்களை பழுது பார்ப்பதற்கு அவர் கொண்ட ஆர்வத்தை இன்னும் நினைவு கூறுகிறார் சம்சுதீன். "இந்த வேலைக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வேன்," என்று கூறுகிறார். ஒருமுறை தனக்கு வழிகாட்டியவர் (அவரின் முழுமையான பெயரை அவரால் நினைவு படுத்த முடியவில்லை) தனது கைகளில் ஸ்பேனருடன் இருப்பது பற்றி அவரிடம் கூறி இருந்தார். அது என்னை ஈர்த்து உத்வேகம் கொள்ளச் செய்தது, அதனால் தான் நான் 83 வயதில் கூட வேலை செய்கிறேன். "மரணமே எனது ஓய்வு," என்று ஷாமா மிஸ்திரி மீண்டும் வலியுறுத்துகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose