“ஊரடங்கிலும் எங்களுக்கு பெரிய நெருக்கடி தான். கோவிட்-19 கணக்கெடுப்புடன், ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில் 27 குழந்தைப் பேறுகளை கையாண்டுள்ளேன். தாயின் பரிசோதனை முதல் ஆரம்ப சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக அழைத்துச் செல்வது வரை, அனைத்தையும் நான் செய்துள்ளேன்,” என்கிறார் ஒஸ்மானாபாத் மாவட்டம் நிலிகான் கிராமத்தின் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளரான ஆஷா பணியாளர் தனுஜா வகோலி.

மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவித்த பிறகு, தனுஜா வீட்டு வேலைகளை முடித்து, தனது கணவன், இரண்டு மகன்களுக்கு சமையல் செய்து முடித்து, அன்றாட பணியைச் செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு (முன்பெல்லாம் 7.30 மணிக்கு எழுவார்) எழுந்து விடுகிறார். “7.30 மணிக்கு பணியை தொடங்காவிட்டால், யாரையும் சந்திக்க முடியாது. எங்களது அறிவுரைகளை தவிர்ப்பதற்காகவே சிலர் காலையில் சீக்கிரமே வீட்டைவிட்டுச் சென்று விடுகின்றனர்,” என்கிறார் அவர்.

ஆஷாவில் மாதத்தில் 15-20 நாட்கள் வேலை நாட்களில் 3-4 மணி நேரங்கள் தான் வேலை இருக்கும். 2010ஆம் ஆண்டு முதல் ஆஷாவில் பணியாற்றும் 40 வயதாகும் தனுஜா, அன்றாடம் ஆறு மணி நேரம் இப்போது வேலை செய்கிறார்.

துல்ஜாபூர் தாலுக்காவின் நிலேகான் கிராமத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி கோவிட்-19 கணக்கெடுப்பு பணி தொடங்கியது. ஆஷா பணியாளர்களான தனுஜா மற்றும் அல்கா முலே ஆகிய இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள 30-35 வீடுகளுக்கு தினமும் செல்கின்றனர். “காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் கரோனா அறிகுறி உள்ளதா என வீடு வீடாக சென்று அறிய வேண்டும்,” என்கிறார் அவர். யாருக்காவது காய்ச்சல் இருந்தால் பாராசிடமால் மாத்திரைகளை கொடுப்போம். கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தூர் கிராம ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவல் கொடுப்போம். (ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து யாரேனும் அக்கிராமத்திற்கு வந்து கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பார்கள்; பரிசோதனையில் நோயிருப்பது உறுதியானால், துல்ஜாபூரில் உள்ள கிராமப்புற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பார்கள்.)

கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் சென்று திரும்ப ஆஷா பணியாளர்களுக்கு முன்னிரவு ஆகிவிடுகிறது - பிறகு மீண்டும் அடுத்தநாள் வேலையை தொடங்க வேண்டும். நிலேகானின் சுற்றுவட்டாரத்தில் இரண்டு டான்டாக்கள் உள்ளன - முன்பு இப்பகுதி பழங்குடி நாடோடி சமூகமான லாமனின் பகுதியாக இருந்தது. டான்டாக்கள் மற்றும் கிராமத்தின் மத்தியில் சுமார் 3000 மக்கள்தொகை இருக்கக்கூடும் என்கிறார் தனுஜா. (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் நிலேகானில் 452 வீடுகள் இருப்பதாக தெரிகிறது.)

Anita Kadam (in red saree): 'ASHAs do their tasks without complaining.' Right: Tanuja Waghole (third from right) has been out on Covid surveys every day
PHOTO • Satish Kadam
In Maharashtra’s Osmanabad district, ASHA workers have been working overtime to monitor the spread of Covid-19 despite poor safety gear and delayed payments – along with their usual load as frontline health workers
PHOTO • Omkar Waghole

அனிதா கடம் (சிவப்புநிற புடவையில்): ' புகார்களின்றி ஆஷா பணியாளர்கள் தங்கள் பணிகளை செய்கின்றனர்.' வலது: தனுஜா வகோல் (வலமிருந்து மூன்றாவது) தினமும் கோவிட் கணக்கெடுப்பிற்கு வெளியே செல்கிறார்

அன்றாட பணிகளுடன், கருவுற்ற பெண்களின் உடல்நலனை கண்காணிப்பது, குழந்தைப் பேறுக்கு உதவுவது, பிறந்த குழந்தைகளின் எடை, வெப்பநிலையை முறையாகக் கண்டறிவது போன்ற பணிகளையும் தனுஜாவும் அவருடன் பணிபுரிபவரும் செய்கின்றனர். மூத்த குடிமக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும், என்கிறார் தனுஜா. “இதற்காக அரசின் சார்பில் துணி முகக்கவசம், சுத்திகரிப்பான் புட்டி, ரூ.1000 கொடுத்தனர்,” என்கிறார் அவர். கணக்கெடுப்பு தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ஏப்ரல் 6ஆம் தேதி தான் முகக்கவசம் வந்தடைந்தது. கணக்கெடுப்பிற்கான ஊக்கத்தொகை, ஊதியம் ஆகியவை ஒருமுறை தான் கொடுக்கப்பட்டது (ஏப்ரலில்).

நகர மருத்துவமனையின் முன்களப் பணியாளர்களுக்கு தரப்படுவதைப் போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இந்த ஆஷாவின் - சமூக சுகாதார தன்னார்வலர்களுக்கு - அளிக்கப்படுவதில்லை. கூடுதலாக ஒரு முகக்கவசம் கூட கொடுப்பதில்லை, என்கிறார் தனுஜா. “ரூ.400 கொடுத்து நான் சில முகக்கவசங்களை வாங்கினேன்.”  உஸ்மானாபாத் ஆஷா பணியாளர்களுக்கு 2014ஆம் ஆண்டு முதல் ரூ.1500 மாத வெகுமானமாக வழங்கப்படுகிறது. மேலும் அவர் பல்வேறு தேசிய சுகாதார திட்டங்களின் கீழ் “ செயல்திறன் சார்ந்த சலுகைகள் ” அடிப்படையில் கூடுதலாக மாதம் ரூ.1500 பெறுகிறார். 2014ஆம் ஆண்டு முதலே இதே தொகை தான் அளிக்கப்படுகிறது.

மகளிர், குழந்தைகள், பாதிக்கக்கூடிய சமூக உறுப்பினர்கள் என கிராமப்புற மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதில் ஆஷா பணியாளர்களின் பங்கு முக்கியமானது. சுகாதாரம், ஊட்டச்சத்து, தடுப்பூசிகள், அரசின் சுகாதார திட்டங்கள் குறித்தும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவிட்-19 கணக்கெடுப்பு பணிக்காக பல இடங்களுக்குச் சென்று நெருக்கமாக உரையாடுவதால் அதிக ஆபத்தும் உள்ளது. “நான் தினமும் ஏராளமான மனிதர்களை சந்திக்கிறேன். அவர்களுக்கு தொற்று உள்ளதா, இல்லையா என்று யாருக்குத் தெரியும்? ஒரு துணி முகக்கவசம் போதுமா?” என கேட்கிறார் துல்ஜாபூர் தாலுக்காவின் தஹிடானா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதாகும் ஆஷா பணியாளர் நாகினி சுர்வசி. அவரது தாலுக்காவைச் சேர்ந்த ஆஷா பணியாளர்களுக்கு ஜூலை மத்தியில் தான் இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் கன் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மார்ச் 24ஆம் தேதி அரசு ஊரடங்கை அறிவித்த பிறகு, உஸ்மானாபாத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை கண்காணிக்கும் பணியும் ஆஷா பணியாளர்களைச் சேர்ந்துவிட்டது. ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடையே கிட்டதட்ட 300 புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கள் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். ஜூன் இறுதியில் தான் இந்த எண்ணிக்கை குறைந்தது,” என்கிறார் தனுஜா. பெரும்பாலானோர் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 280, 410 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனே, மும்பை நகரத்திலிருந்து வந்துள்ளனர். “14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பலமுறை அறிவுறுத்தினாலும் பலரும் வெளியே செல்கின்றனர்.”

'I come in contact with many people everyday... Is a mere cloth mask sufficient?' asks Nagini Survase (in a white saree in both photos)
PHOTO • Ira Deulgaonkar
'I come in contact with many people everyday... Is a mere cloth mask sufficient?' asks Nagini Survase (in a white saree in both photos)
PHOTO • Courtesy: Archive of HALO Medical Foundation

'நான் அன்றாடம் ஏராளமான மக்களை சந்திக்கிறேன்… துணி முகக்கவசம் போதுமானதா?' என கேட்கிறார் நாகினி சுர்வசி (இரு புகைப்படங்களிலும் வெள்ளை நிற புடவையில் உள்ளவர்)

நிலேகானிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துல்ஜாபூர் தாலுக்கா ஃபுல்வாடி கிராம பஞ்சாயத்தில் மார்ச் மத்தியிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதி வரை முதல் கட்ட கோவிட் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. “அச்சமயத்தில் ஃபுல்வாடிக்கு 182 புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியிருந்தனர். பலரும் மும்பை, புனே நகரங்களில் இருந்து நடந்தே வந்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் வரவேண்டும் என பலரும் நள்ளிரவில் வருகின்றனர்,” என்கிறார் ஆஷா பணியாளரான 42 வயதாகும் ஷகுந்தலா லங்கடே. இந்த பஞ்சாயத்தில் 315 குடும்பங்களும், 1500 பேரும் உள்ளனர், என்கிறார் அவர். “ஏப்ரல் 6ஆம் தேதிக்கு முன்பே கணக்கெடுப்பு தொடங்கிவிட்டது. எனக்கு முகக்கவசங்கள், கையுறைகள் என எதுவும் பாதுகாப்பிற்காக கொடுக்கப்படவில்லை,” என்கிறார் ஷகுந்தலா.

கிராமத்திற்குள் வரும் அனைவரையும் கண்டறிவது, சுயதனிமைப்படுத்தல் நடக்கிறதா என்பதை அறிவதெல்லாம் ஆஷா பணியாளர்களுக்கு கடினமான பணி என்கிறார் உஸ்மானாபாத் மாவட்டம் லோஹரா தாலுக்காவில் உள்ள கனேகான் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் ஆஷா ஆள்சேர்ப்பாளர் அனிதா கடம். “இருந்தும் எந்த புகாரும் தெரிவிக்காமல் ஆஷாவினர் பணிகளை செய்கின்றனர்,” என்கிறார் அவர். 32 ஆஷா பணியாளர்களின் செயல்பாடுகளையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவிக்க வேண்டியது கண்காணிப்பாளரான 40 வயதாகும் அனிதாவின் பணி. இதற்காக அவருக்கு மாதம் ரூ. 8,225 (அனைத்து சலுகைகள் உட்பட) ஊதியம் வழங்கப்படுகிறது.

மார்ச் இறுதியில், உஸ்மானாபாத் மாவட்டத்தின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ‘கரோனா சஹாய்யதா கக்ஷ்‘ (உதவி மையம்) அமைக்கப்பட்டது. கிராம சேவகர்கள், பஞ்சாயத்து அலுவலர்கள், உள்ளூர் அரசுப் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. “கரோனா சஹாய்யதா கக்ஷிற்கு நம் ஆஷா குழுவினர் பெருமளவு ஆதரவளிக்கின்றனர். கிராமங்களுக்குள் நுழைபவர்கள் குறித்து தினமும் செய்திகளை அவர்கள் அளிக்கின்றனர்,” என்கிறார் துல்ஜாபூர் வட்டார வளர்ச்சி அலுவலரான பிரஷாந்த்சிங் மரோட்.

தொற்றுச்சூழலை எதிர்கொள்வதற்காக அதிகாரப்பூர்வ பயிற்சிகள் எதுவும் உஸ்மானாபாத் ஆஷா பணியாளர்கள் 1,161 பேருக்கும் (2014ஆம் ஆண்டு வரை என்கிறது தேசிய சுகாதார இயக்கத்திற்கான மகாராஷ்டிரா இணையதளம்; தற்போது இந்த அமைப்பில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 1207) முதலில் அளிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொகுத்த கையேடு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி, வீட்டு தனிமைப்படுத்தலுக்கான நெறிமுறைகள் போன்றவை மட்டுமே அதில் இடம்பெற்றிருந்தன. நகரங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்கள், தொற்றுகளை கையாளுதல் போன்றவற்றிற்கு தயார் செய்வதற்கான ஒரு மணி நேர இணையவழி கருத்தரங்கு மே 11ஆம் தேதி ஆஷா பணியாளர்களுக்கு நடத்தப்பட்டது.

'Before April 6...I didn’t receive any no masks, gloves...' says Shakuntala Devi (standing third from left, and sitting with the green mask)
PHOTO • Satish Kadam
'Before April 6...I didn’t receive any no masks, gloves...' says Shakuntala Devi (standing third from left, and sitting with the green mask)
PHOTO • Sanjeevani Langade

ஏப்ரல் 6க்கு முன்பு வரை எனக்கு முகக்கவசம், கையுறைகள் எதுவும் கிடைக்கவில்லை… என்கிறார் ஷகுந்தலா தேவி (இடது பக்கத்திலிருந்து மூன்றாவதாக, பச்சை முகக்கவசத்தில் அமர்ந்திருப்பவர்)

ஆஷா கண்காணிப்பாளர்களால் இது நடத்தப்பட்டது. இதில் கோவிட்-19 அறிகுறிகள், வீட்டு தனிமைப்படுத்தலுக்கான வழிமுறைகள் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. தங்கள் கிராமத்திற்குள் நுழைபவர்கள் குறித்த பதிவேட்டை பாதுகாக்குமாறும், பிரச்சனை வந்தால் காவல்துறையினரை அணுகுமாறும் ஆஷா பணியாளர்களுக்கு சொல்லப்பட்டது. “கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்து வர வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தினர்,” என்கிறார் தனுஜா. கோவிட்-19 காலத்தில் கர்ப்பிணிகளை எப்படிக் கையாளுவது, குழந்தைகள், மூத்த குடிமக்களை எப்படி பராமரிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

ஆனால் ஆஷா பணியாளர்கள் அச்சமயத்தில் அவர்களின் மிகப்பெரும் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பினர். “எங்கள் கண்காணிப்பாளர்கள் ஆரம்ப சுகாதார மையத்தில் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில், எங்களுக்கு சிறந்த மருத்துவ கருவிகள் வேண்டுமென கேட்டோம்,” என்கிறார் தனுஜா. மற்றொரு முதன்மை பிரச்சனையையும் அவர்கள் எழுப்பினர்: நோயாளிகளை அழைத்துச் செல்ல போதிய வாகனங்கள் இல்லாமை. “ஆரம்ப சுகாதார மையங்களுக்கு [அன்டுர் மற்றும் நல்டுர்க்] அருகில் எவ்வித அவசர போக்குவரத்து வசதியும் கிடையாது. அங்கு நோயாளிகளை அழைத்துச் செல்வதும் சிரமம்,” என்கிறார் தனுஜா.

தஹிடானா கிராமத்தில் புனேவிலிருந்து கணவனுடன் திரும்பிய ஏழு மாத கர்ப்பிணிப் பெண் குறித்து நம்மிடம் சொல்கிறார் நாகினி. அப்பெண்ணின் கணவர் ஊரடங்கால் கட்டுமானப் பணியை இழந்துவிட்டார். “மே முதல் வாரம். வீட்டு தனிமைப்படுத்தலுக்காக அவளது வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அவளது கண்கள் சொருகியிருந்தன. உடல் பலவீனமாக, வெளிர்ந்து இருந்தது. அவளால் நிற்க கூட முடியவில்லை.“நாகினி அப்பெண்ணை உடனடியாக ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். “ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சை அழைத்தபோது, அது கிடைக்கவில்லை. நான்கு தாலுக்காக்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திற்கும் இரண்டே வாகனங்கள் தான். இதனால் அப்பெண்ணை ரிக்ஷாவில் ஏற்றி அனுப்பினேன்.”

நல்டர்க் ஆரம்ப சுகாதார மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவளது ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பது தெரிந்தது. இங்குள்ள பெண்களுக்கு இரத்தசோகை என்பது பொதுவானது என்கிறார் நாகினி. ஆனால் கர்ப்ப காலத்தில் தீவிர இரத்தசோகை இருந்தது. “தஹிடானாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துல்ஜாபூர் கிராமப்புற மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு இரத்தம் ஏற்றுவதற்காக மற்றொரு ரிக்ஷா பிடித்தோம். மொத்தமாக ஆட்டோ ரிக்ஷாவிற்கு மட்டுமே ரூ. 1500 செலவானது. அவளது பொருளாதார நிலையும் மோசமாக இருந்தது. எனவே கரோனா சஹாய்யதா கக்ஷ் உறுப்பினர்களிடமிருந்து நாங்கள் நிதி திரட்டினோம். போதிய அவசர ஊர்திகளை ஏற்பாடு செய்ய வேண்டியது அரசின் முதன்மை கடமை இல்லையா?”

சில சமயங்களில் ஆஷா பணியாளர்கள் தங்களின் சொந்த பணத்தை கூட – அவர்களால் இயலாதபோதும் - இதற்காக செலவிடுகின்றனர். நாகினி தான் அவர் குடும்பத்தில் ஒரே வருவாய் ஆதாரம். அவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் குன்றி உயிரிழந்தார்; அவரது மகனும், மாமியாரும் இந்த வருவாயை தான் சார்ந்துள்ளனர்.

Like other ASHAs, Shakuntala has been monitoring the health of pregnant women and newborns during the lockdown
PHOTO • Sanjeevani Langade
Like other ASHAs, Shakuntala has been monitoring the health of pregnant women and newborns during the lockdown
PHOTO • Sanjeevani Langade

பிற ஆஷாக்களை போல இந்த ஊரடங்கின்  போது கருப்பமுற்றிருக்கும் பெண்கள் மற்றும் புதிதாக பிறந்திருக்கும் குழந்தைகளின் உடல்நலனை கண்காணிக்கும் பணியை செய்கிறார் ஷகுந்தலா

ஃபுல்வாடியில் ஊரடங்கு காரணமாக ஷகுந்தலா கூடுதலாக வருவாய் ஈட்ட (ஜூன், ஜூலைக்கான ஊதியம் வரவில்லை) வேண்டிய நிலை வந்துவிட்டது. “என் கணவர் குருதேவ் லங்கடே ஒரு விவசாய தொழிலாளி. அவர் தினமும் ரூ. 250 கூலி பெற்று வந்தார். அவருக்கு இந்த கோடையில் எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் தான் அவருக்கு அதிகளவில் வேலை கிடைக்கும்,” என்கிறார் அவர். இவர்களுக்கு 17 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். குருதேவின் பெற்றோரும் அவர்களுடன் தான் வசிக்கின்றனர்.

அன்டுரைச் சேர்ந்த ஹலோ மருத்துவ அறக்கட்டளை தனது கிராமத்தில் மே முதல் ஜூலை வரை நடத்திய திட்டத்தில் சமையல் செய்து ஷகுந்தலா சிறிது கூடுதலாக வருவாய் ஈட்டினார். லாப நோக்கமற்ற அந்த அமைப்பு அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களை கட்டணத்துடன் உணவு சமைக்க அணுகியது. மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. “லோஹரா, துல்ஜாபூர் தாலுக்காக்களில் ஆதரவற்ற 300 பேரை நாங்கள் கண்டறிந்தோம். மே15 முதல் ஜூலை 31 வரை அவர்களுக்கு நாங்கள் உணவளித்தோம்,” என்கிறார் ஹலோ உறுப்பினர் பஸ்வராஜ் நரே.

போதிய வருவாயின்றி தவித்த என்னைப் போன்ற ஆஷா பணியாளர்களுக்கு அது உதவியது. ஒரு நாளுக்கு ஒரு கோப்பை தேநீர், இரண்டு வேளை உணவைச் சமைப்பதற்கு [ஒருவருக்கு] நான் ரூ.60 பெற்றேன். ஒரு நாளுக்கு ஆறு பேருக்கு சமைத்து ரூ.360 ஈட்டினேன்,” என்கிறார் ஷகுந்தலா. 2019ஆம் ஆண்டு தனது 20 வயதாகும் மகள் சங்கீதாவின் திருமணத்திற்காக தனியார் வட்டிக்கடைக்காரரிடம் அவர் 3 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். அவற்றில் ரூ.80,000 திரும்பி செலுத்திவிட்டார், ஊரடங்கிலும் தவணையை தவறாமல் செலுத்துகிறார்.

“தொற்று காலத்தில் வேலை செய்வதால் எனது மாமியார் கவலைப்பட்டார். ‘இந்த நோயை நீ வீட்டிற்கு கொண்டு வந்துவிடுவாய்,’ என்றார். இப்பணிக்காக நான் கிராமத்திற்குச் செல்லாவிட்டால் என் குடும்பமே பட்டினியால் வாடும் என்பது அவருக்கு தெரியாது,” என்கிறார் ஷகுந்தலா.

இதே நிகழ்ச்சியில் சமையல் செய்து தனுஜாவும் ஒரு நாளுக்கு ரூ. 360 பெற்றார். ஆஷா கடமைகளை முடித்தபிறகு வீட்டிற்கு வந்து உணவு சமைத்து ஆறு பேருக்கு சிற்றுண்டியாக தினமும் அளித்துள்ளார். “மாலை 4 மணியளவில் தேநீர் கொடுத்த பிறகு, கரோனா உதவி மையத்தில் நடைபெறும் தினசரி கூட்டத்தில் பங்கேற்கச் செல்வேன்,” என்கிறார் அவர்.

ASHAs – like Suvarna Bhoj (left) and Tanuja Waghole (holding the tiffin) – are the 'first repsonders' in a heath crisis in rural areas
PHOTO • Courtesy: Archive of HALO Medical Foundation
ASHAs – like Suvarna Bhoj (left) and Tanuja Waghole (holding the tiffin) – are the 'first repsonders' in a heath crisis in rural areas
PHOTO • Omkar Waghole

ஆஷாவினர் - சுவர்ண போஜ் (இடது), தனுஜா வகோல் (உணவு வைத்திருப்பவர்) ஆகியோர் தான் கிராமப்புறங்களில் சுகாதார நெருக்கடி ஏற்படும்போது முதல் செயலாற்றுவோர்

ஆகஸ்ட் 13ஆம் தேதி துல்ஜாபூர் தாலுக்காவில் 447 பேருக்கும் லோஹராவில் 65 பேருக்கும், தஹிடானாவில் 4 பேருக்கும் கோவிட் தொற்று இருப்பது தெரியவந்தது. நிலேகான், ஃபுல்வாடியில் இதுவரை யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்கின்றனர் ஆஷா பணியாளர்கள்.

ஆஷா பணியாளர்களுக்கான மாத வெகுமானம் ரூ. 2000 எனவும், ஆஷா கண்காளிப்பாளருக்கு ரூ. 3000 எனவும் ஜூலை முதல் வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு ஜூன் 25ஆம் தேதி அறிவித்தது. கோவிட்-19 கணக்கெடுப்பில் 65,000க்கும் அதிகமான ஆஷா பணியாளர்களின் பணியை “நம் சுகாதார உள்கட்டமைப்பின் வலுவான தூண்,” என்று மாநில சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோபி பாராட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆஷா பணியாளர்களிடம் நாம் பேசும்போது, ஜூலைக்கான உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகையோ, வெகுமானமோ இதுவரை கிடைக்கவில்லை என்றனர்.

இருப்பினும் அவர்கள் வேலையைத் தொடர்கின்றனர். “எங்கள் மக்களுக்காக நாங்கள் சோர்வின்றி உழைக்கிறோம்,” என்கிறார் தனுஜா. “அது தீவிர வறட்சி, கனமழை, புயல் அல்லது கரோனா வைரஸ் என எந்த சூழலிலும் மக்களின் ஆரோக்கியத்தை நாங்கள் தான் முதலில் அணுகுகிறோம். 1897ஆம் ஆண்டு பிளேக் தொற்று ஏற்பட்ட போது தன்னலமின்றி தன்னையே அர்ப்பணித்து உதவிய சாவித்ரிபாய் பூலேவை நாங்கள் உதாரணமாகக் கொள்கிறோம்.”

பின்னிணைப்பு: தொழிற்சங்கம் சார்பில் ஆகஸ்ட் 7-8 தேதிகளில் நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆஷா பணியாளர்களும், கண்காணிப்பாளர்களும் பங்கேற்றனர். ஆஷா பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றுவது, (உரிய நேரத்தில்) நியாயமான வருவாய், ஊக்கத்தொகையை அதிகரித்தல், போக்குவரத்து வசதிகள் போன்ற நீண்ட கால கோரிக்கைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள், கோவிட்-19 பணிக்கான சிறப்பு பயிற்சி, முன்களப் பணியாளர்களுக்கான முறையான பரிசோதனை, தொற்று காலத்தில் காப்பீடு போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழில்: சவிதா

Ira Deulgaonkar

Ira Deulgaonkar is a 2020 PARI intern. She is a Bachelor of Economics student at Symbiosis School of Economics, Pune.

Other stories by Ira Deulgaonkar
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha