“கேமரா துளையோடு கூடிய ஒரு உலோகக் கட்டி. படம் உங்களின் இதயத்தில் இருக்கிறது. நோக்கம்தான் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது.”
பி. சாய்நாத்

வளைதல், சமநிலை கொள்ளுதல், கட்டுதல், தூக்குதல், கூட்டுதல், சமைத்தல், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுதல், விலங்குகளை மேய்த்தல், வாசித்தல், எழுதுதல், இசை உருவாக்குதல், ஆடுதல், பாடுதல், கொண்டாடுதல் என கிராமப்புற மக்களின் வாழ்க்கைகளையும் வேலைகளையும் இன்னும் நுட்பமாக புரிந்து கொள்ள புகைப்படங்களுடன் இயைந்த எழுத்துகள் உதவுகின்றன.

கூட்டு நனவின் காட்சி பெட்டகமாக இருக்க பாரி புகைப்படங்கள் உழைக்கிறது. நாம் வாழும் காலத்தை பற்றிய அசிரத்தையான பதிவுகள் அல்ல அவை. நம்முடனும் நம்மை சுற்றி உலகுடனும் நம்மை இணைக்கும் ஒரு நுழைவாயிலாக அவை செயல்படுகின்றன. வெகுஜன ஊடகத்தில் இடம்பெறாத இடங்கள், நிலம், வாழ்வாதாரம் மற்றும் உழைப்பு ஆகியவற்றையும் விளிம்புநிலை மக்களையும் கதைகளையும் நமது விரிவான புகைப்படப் பெட்டகம் பேசுகிறது.

புகைப்படங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, அழகு, சந்தோஷம், சோகம், துயரம் மற்றும் கொடும் உண்மைகள் ஆகியவற்றின் வழியாக மனிதர்களின் எளிதில் பாதிக்கப்படும் தன்மையும் பலவீனங்களும் வெளிப்படுகின்றன. கட்டுரையில் இருக்கும் நபர், வெறும் புகைப்பட மாந்தர் இல்லை. புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயரை தெரிந்து கொள்வது பரிவை தருகிறது. ஒற்றை வாழ்க்கைக் கதை பல பெரும் உண்மைகளை பேசும்.

ஆனால் இவை யாவும் புகைப்படக் கலைஞருக்கும் புகைப்படத்தில் இடம்பெறுபவருக்கும் இடையே இயைபு இருந்தால்தான் சாத்தியம். கதை மாந்தர்கள் ஆழமான இழப்பையும் விளக்கமுடியா துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை படம்பிடிப்பதற்கான ஒப்புதல் நமக்கு இருகிறதா? மிகவும் விளிம்பு நிலையில் வாழும் மக்களை எப்படி மதிப்புடன் நாம் புகைப்படம் எடுப்பது? நபரோ மக்களோ புகைப்படம் எடுக்கப்படும் பின்னணி என்ன? அன்றாட மக்களின் அன்றாட வாழ்க்கைக் கதைகளை சொல்ல புகைப்படத் தொடரை உருவாக்குவதற்கான நோக்கம் என்ன?

களத்தில் சென்று நம் புகைப்படக் கலைஞர்கள் உறுதியாக பிடித்துக் கொள்ளும் முக்கியமான கேள்விகள் இவை. சில நாட்களோ சில வருடங்களிலோ எழுதப்படும் கட்டுரைக்கு எடுக்கப்பட்டாலும் அற்புதமான நடிகர்களையும் பழங்குடி விழாக்களையும் போராட்டத்தில் விவசாயிகளையும் எடுத்தாலும் இக்கேள்விகளே பிரதானம்.

உலக புகைப்பட நாளன்று, பாரியின் கட்டுரைகளுக்காக நம் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்பட தொகுப்பை உங்களுக்கு அளிக்கிறோம். புகைப்படம் எடுத்த விதம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் புகைப்படக் கலைஞர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். அவை பெயர்களின் வரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ஆகாங்ஷா

PHOTO • Aakanksha

இந்த புகைப்படம் மும்பை ரயில்களில் ஊசலாடுபவர்கள் கட்டுரையில் இடம்பெற்றிருக்கிறது. மும்பை உள்ளூர் ரயில்களில் சாரங்கி இசைக்கும் கிஷன் ஜோகி பற்றி நான் எழுதிய கட்டுரை இது. அவரின் ஆறு வயது மகள் பாரதியும் உடன் இருக்கிறார்.

என் பால்ய பருவத்திலிருந்து நான் கடந்து வந்த பல இசைஞர்களின் கதைகளை ஒத்ததாகவே அவர்களின் வாழ்க்கையும் இருந்தது. அவர்களை நான் பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால் கலைஞர்களாக அங்கீகரித்ததில்லை. எனவேதான் இக்கட்டுரையை எழுதுவது எனக்கு முக்கியமானதாக இருந்தது.

ஒரு ரயில் பெட்டியிலிருந்து இன்னொரு ரயில் பெட்டிக்கு மாறி மாறி செல்லும் அவர்களின் தீவிரமான வாழ்க்கை ராகத்தினூடாக இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.

அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினேன். என்னை எங்கே இருத்திக் கொள்வதென போராடினேன். ஆனால் கிஷன் அண்ணா எளிதாக தன்னுடைய இசைவெளிக்குள் நுழைந்து கொண்டார். வெவ்வேறு பெட்டிகளுக்கு மாறியபோதும் கூட அவரின் இசை மாறவில்லை.

கேமரா வழியாக முதலில் பார்க்கும்போது, கேமரா இருக்கும் தன்னுணர்வில் அவர் சற்று தயங்குவார் என எதிர்பார்த்தேன். இல்லை. நான் நினைத்தது தவறு. அந்த கலைஞர் முழுமையாக அவரது கலைக்குள் சென்றுவிட்டார்.

சுற்றி பயணிகளின் சோர்வையும் தாண்டி அவரது கலையின் ஆற்றல் பரவக் கூடியதாக இருந்தது. அந்த இரட்டைத்தன்மையை இப்புகைப்படத்தில் கொண்டு வர முயன்றிருக்கிறேன்.

*****

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கை சேர்ந்த பினாய்ஃபர் பருச்சா.

PHOTO • Binaifer Bharucha

இப்புகைப்படத்தை சுரங்கத்தில் கேனரி பறவை கட்டுரைக்காக எடுத்தேன்.

ஐதி தபாவை (புகைப்படத்தில் இருப்பவர்) தாண்டி, பாம்பை போல் நெளிந்து பசிய பாதைகளில், வழுக்கும் மண்ணில், அட்டைகள் என் மீது ஏறிவிடாதென்கிற நம்பிக்கையில் எடுத்த படம். பறவை சத்தங்கள் இன்றி அமைதியாக இருந்தது. காலநிலை மாற்றம் குறித்த கட்டுரைக்காக அருணாச்சலப் பிரதேத்தின் ஈகுள்நெஸ்ட் சரணாலயத்தில் இருந்தோம்.

2021ம் ஆண்டிலிருந்து ஐதி, பறவையினங்களை ஆய்வு செய்யும் குழுவின் உறுப்பினராக இங்கு இருக்கிறார். பறவைகளுக்காக காட்டில் கட்டப்படும் வலைகளில் பறவைகள் சிக்குகின்றன. மெதுவாக அவற்றை அதிலிருந்து பிரித்து எடுப்பது சவாலான வேலை. ஆனால் அவர் அதை வேகமாகவும் எச்சரிக்கையுடன் செய்கிறார்.

செந்தலை சிலம்பன் பறவையை மென்மையாக ஐதி பார்க்கும் இந்த நுண்மையான படத்தை எடுக்க முடிந்ததும் என் மனதால் நம்ப முடியவில்லை. மனிதனுக்கும் பறவைகளுக்கும், இயற்கைச் சூழலில் நேரும் தொடர்பு மற்றும் நம்பிக்கைக்கான இத்தகைய தருணம் அற்புதமானது. பெரும்பான்மையாக ஆண்கள் இருக்கும் குழுவிலுள்ள இரு உள்ளூர் பெண்களில் அவர் ஒருவர்.

பாலினத்துக்கான தடைகளை அமைதியாக உடைத்து வலிமையாக ஐதி நிற்கும் இப்படத்தை, இக்கட்டுரையின் குறிப்பிடத்தகுந்த படமாக சொல்லலாம்.

*****

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் தீப்தி அஸ்தானா

PHOTO • Deepti Asthana

தமிழ்நாட்டின் புனிதத் தலமான ராமேஸ்வரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தனுஷ்கோடி இருக்கிறது. வங்காள விரிகுடாவை ஒரு பக்கத்திலும் இந்தியப் பெருங்கடலை மறுபக்கத்திலும் கொண்ட ஒரு சிறுதுண்டு நிலம் அது. அற்புதமான காட்சியை தரக்கூடியது! கோடைகாலத்தின் ஆறு மாதங்களுக்கு வங்காள விரிகுடாவில் மக்கள் மீன் பிடிப்பார்கள். காற்று மாறியதும், அவர்கள் இந்தியப் பெருங்கடலுக்கு மாறுவார்கள்.

உடைந்த வில்: தனுஷ்கோடியின் மறந்து போன மக்கள் கட்டுரை எழுத அப்பகுதிக்கு சென்றடைந்ததுமே கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.

இரு பக்கங்களிலும் கடல்களால் சூழப்பட்ட இடத்தில் நன்னீர் கிடைப்பது ஒரு சவால். கைகளால் பூமியில் தோண்டி துளைகள் போட்டு தங்களின் பாத்திரங்களில் பெண்கள் நீர் நிரப்பிக் கொள்வார்கள்.

நீரில் சீக்கிரம் உப்புத்தன்மை வந்துவிடும் என்பதால் இதுதான் தொடர் நிகழ்வு அங்கு.

இந்த புகைப்படம் விரிந்த ஒரு நிலப்பரப்பில் ஒரு பெண்கள் குழுவை காட்சிப்படுத்துவது ஆர்வத்தை தருவதாக இருக்கிறது. அதே சமயத்தில், அடிப்படை மனித உரிமையாக வாழ்க்கைக்கு தேவைப்படும் விஷயம் கிடைக்காமல் இருக்கும் நிலையையும் வெளிப்படுத்துகிறது.

*****

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கில் இந்திரஜித் காம்பே

PHOTO • Indrajit Khambe

கடந்த 35 வருடங்களாக தஷாவதார் நாடகக் குழுவில் பெண் பாத்திரத்தில் ஓம்பிரகாஷ் சவான் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 8.000 நாடகங்கள் நடித்திருக்கும் அவர், அக்கலையின் பிரபலமான நடிகராக திகழ்கிறார். தஷாவதார் மீதான பரவசத்தை அவர் பார்வையாளர்களிடம் உயிர்ப்புடன் வைத்திருப்பதை என் தசாவதாரத்தில் மேம்பாடுகள் நிறைந்த சிறந்த இரவு கட்டுரையில் பார்க்கலாம்.

அவரை பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் ஆவணப்படுத்தி வருகிறேன். ஒரு முத்திரை பதிக்கும் படத்தை கொண்டு அவரின் கதையை சொல்ல விரும்பினேன். அந்த வாய்ப்பு, சில வருடங்களுக்கு முன் அவர் சதார்தா நடித்துக் கொண்டிருக்கும்போது கிடைத்தது. இங்கு (மேலே) நாடகத்தின் பெண் பாத்திரத்துக்கு அவர் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இப்புகைப்படத்தில், அவரை இரு அவதாரங்களிலும் பார்க்க முடியும். ஆணாக இருந்து பெண்ணாக நடிக்கும் அவரின் பாரம்பரியத்தை இந்த ஒற்றை படம் பேசும்.

*****

சட்டீஸ்கரின் ராய்கரில் ஜாய்திப் மித்ரா

PHOTO • Joydip Mitra

ராம்தாஸ் லம்ப் எழுதிய Rapt in the Name புத்தகத்தை, இந்துத்துவ சக்திகள் கட்டியெழுப்பிய ராமன் பற்றிய நேரெதிரான அர்த்தங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த சூழலில் நான் படித்தேன்

இந்த பெரும்பான்மைவாத சிந்தனைக்கு மாற்றான விஷயத்தை தேடி நான் சென்றபோது கிடைத்ததுதான் ராம்நமிகள். அதற்குப் பிறகு பல ஆண்டுகளாக அவர்களுடன் பழகி தெரிந்து கொண்டு அவர்களில் ஒருவனாக மாற முயற்சித்தேன்.

ராமனின் பெயரால் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் இப்புகைப்படம், அதிகாரமளிக்கப்பட்டிருந்தால் இன்று இந்தியா சரிந்திருக்கும் நிலை உருவாகாமல் காத்திருக்கக் கூடிய அடித்தள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

*****

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் முசாமில் பட்

PHOTO • Muzamil Bhat

ஜிகெர் டெடின் முகத்தைக் கொண்டிருக்கும் இப்புகைப்படம் ஜிகர் டெட்டின் சோகங்கள் என்ற என் கட்டுரைக்கு முக்கியம். ஏனெனில் இவரின் வாழ்க்கையை பற்றிதான் கட்டுரை பேசுகிறது.

கோவிட் தொற்றின்போது ஜிகெர் டெட் எதிர்கொண்ட போராட்டத்தை பற்றி உள்ளூர் செய்தித்தாளின் வழியாக தெரிந்து கொண்டேன். அவரை சந்தித்து, அவரின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருந்தேன்.

தல் நதியிலிருக்கும் அவரது ஹவுஸ்போட்டுக்கு சென்றபோது, அவர் மூலையில் ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தார். அடுத்த 8-10 நாட்களுக்கு தொடர்ந்து சென்று அவரை நான் சந்தித்துக் கொண்டிருந்தேன். கடந்த 30 வருடங்களாக தனியாக வாழ்வதில் சந்தித்த பிரச்சினைகளை அவர் என்னிடம் சொன்னார்.

அவருக்கு மறதி நோய் இருந்ததால், தொடர்ந்து நான் விஷயங்களை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருந்ததுதான் இக்கட்டுரை எழுதியபோது நான் சந்தித்த பெரும் சவால். அவருக்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்வது சிரமம். சில நேரங்களில் என்னையும் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்.

அவரது முகச்சுருக்கங்களை படம் பிடித்திருக்கும் இதுதான் எனக்கு பிடித்த படம். ஏனெனில் என்னை பொறுத்தவரை ஒவ்வொரு சுருக்கமும் ஒரு கதையை சொல்லும்.

*****

தமிழ்நாட்டின் திருவள்ளூரில் பழனி குமார்

PHOTO • M. Palani Kumar

கோவிந்தம்மாவை பற்றி கட்டுரை எழுதுவது நீண்ட காலப் பணி. ஊரடங்குக்கு முன்னும் பின்னுமாக அவருடன் நான் 2-3 வருடங்களாக பேசினேன். கோவிந்தம்மா, அவரின் தாய், அவரின் மகன் மற்றும் பேத்தி என குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நான் படம் பிடித்தேன்.

என்னுடைய கட்டுரை ‘வாழ்க்கை முழுக்க நீரில்தான் இருந்திருக்கிறேன்’ பிரசுரமானபோது, வடசென்னையின் சூழலியல் பிரச்சினைகளை அது பேசுவதால், பலரும் பரவலாக அக்கட்டுரையை பகிர்ந்தனர்.

திருவள்ளூர் ஆட்சியர் பட்டாக்களை கொடுத்தார். மக்களுக்கு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டது. புதிய வீடுகளும் அவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டன. எனவே இந்த கட்டுரையின் இப்புகைப்படம் எனக்கு முக்கியமானது. பிரச்சினைகளை தீர்வுகள் நோக்கி நகர இது உதவியது.

என்னுடைய வாழ்க்கையை மாற்றிய புகைப்படம் எனவும் இதை சொல்லலாம்.

*****

ஒடிசாவின் ராயகடாவில் புருசோத்தம் தாகூர்

PHOTO • Purusottam Thakur

A wedding in Niyamgiri கட்டுரைக்கு தகவல் சேகரிக்க சென்றபோது டினா என்கிற சிறுமியை நான் சந்தித்தேன். ஒரு திருமண நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். இப்புகைப்படத்தை நான் எடுத்தபோது ஒரு மண் வீட்டின் வராண்டாவில் தந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

புகையிலை மற்றும் வெல்லம் கலந்து செய்யப்பட்ட பற்பசை கொண்டு சிறுமி பல் துலக்கிக் கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்கும்போது அவர் எந்த தயக்கமுமின்றி நின்றது எனக்கு பிடித்தது.

பழங்குடியினரின் தத்துவத்தையும் இப்புகைப்படம் எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர்களின் நிலம் மற்றும் நியாம்கிரி மலையை காப்பதற்கான அவர்களின் போராட்டம் மட்டுமின்றி, சமூகக் கலாசாரப் பொருளாதார வாழ்க்கைக்காக அவர்கள் சார்ந்திருக்கும் உயிர்பன்மையச் சூழலை காக்கவும் போராடுவதை இது அடையாளப்படுத்துகிறது.

அது மனித நாகரிகத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை சொல்வதாக இப்புகைப்படம் அமைந்திருக்கிறது.

*****

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ராகுல் எம்

PHOTO • Rahul M.

இப்புகைப்படத்தை 2019ம் ஆண்டில் வெளியான அந்த வீடா! இப்போது அங்கு கடல் இருக்கிறது! என்ற என் கட்டுரைக்காக எடுத்தேன். உப்படாவின் மீனவ கிராமம் ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பதை நினைவுபடுத்த நான் விரும்பினேன்.

காலநிலை மாற்றத்துக்கான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, கிராமங்களை பாதிக்கும் கடல் மட்ட உயர்வு பற்றி பல கட்டுரைகள் வந்திருப்பதை தெரிந்து கொண்டேன். புகைப்படத்தின் இடது பக்கம் இருக்கும் இடிந்துபோன கட்டடம் என்னை ஈர்த்தது. மெல்ல புகைப்படங்கள் மற்றும் கட்டுரையின் கருப்பொருளாக அது மாறியது.

ஒருகாலத்தில் அது பிரம்மாண்டமான சத்தம் மிகுந்த கட்டடமாக இருந்தது. 50 வருடங்களுக்கு முன் அந்தக் கட்டடத்தில் குடியேறிய குடும்பம் இப்போது பக்கத்து தெருவில் சிதறிக் கிடக்கிறது. உப்படாவில் பழமையாக இருந்த விஷயங்கள் எல்லாவற்றையும் கடல் கொண்டு சென்றுவிட்டது.

அநேகமாக அடுத்து அந்தக் கட்டடம்தான் என நினைத்தேன். பலரும் அப்படித்தான் சொன்னார்கள். எனவே அந்தக் கட்டடத்தை மீண்டும் மீண்டும் சென்று பார்த்தேன். பல முறை புகைப்படங்கள் எடுத்தேன். மக்களிடம் அதைப் பற்றி நேர்காணல்கள் எடுத்தேன். இறுதியில் கடல் அந்த கட்டடத்துக்காக 2020ம் ஆண்டில் வந்தது. நான் யோசித்திருந்ததை விட வேகமாக.

*****

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் ரிதாயன் முகெர்ஜி .

PHOTO • Ritayan Mukherjee

நித்யானந்தா சர்காரின் திறன், என்னுடைய சுந்தரபன் காடுகளில் புலியின் நிழலில் திருமணம் கட்டுரையின் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. என்னுடைய புகைப்படங்கள் அதை காட்ட விரும்பினேன்.

ராஜத் ஜூபிலி கிராமத்தில் 2019ம் ஆண்டு புலி தாக்கியதில் அர்ஜுன் மொண்டல் இறந்து போன பிறகு, துயரத்தில் உழன்ற குடும்பம் அந்த நினைவுகளினூடாக திருமணத்தை நடத்துகிறது.

விவசாயியும் கலைஞருமான நித்யானந்தா, ஜுமுர் பாடல்கள், மா போன்பீவி நாடகங்கள் மற்றும் பல கானம் போன்ற நாட்டுப்புற கலைகளை நடத்துகிறார். 53 வயது விவசாயியான அவர், மூத்த பல கான கலைஞர் ஆவார். அக்கலையை 25 வருடங்களாக அவர் நிகழ்த்தி வருகிறார். பல காட்சிகளுக்காக அவர் ஒரு குழுவை தாண்டி பல குழுக்களுடன் பணிபுரிகிறார்.


*****

மகாராஷ்டிராவின் மும்பையில் ரியா பெல்

PHOTO • Riya Behl

24 ஜனவரி 2021 அன்று, ஆயிரக்கணக்கான மகாராஷ்டிர விவசாயிகள் தெற்கு மும்பையின் ஆசாத் மைதானில், சம்யுக்தா ஷெத்காரி கம்கர் மோர்ச்சா ஒருங்கிணைத்திருந்த இரண்டு நாட்கள் போராட்டத்துக்காக கூடியிருந்தனர். மும்பை விவசாய உள்ளிருப்பு: 'இருண்ட சட்டங்களை திரும்பப் பெறுங்கள்' என்ற என் கட்டுரையில் அதைப் பற்றி  எழுதியிருந்தேன்.

அப்பகுதிக்கு காலையிலேயே சென்றுவிட்டேன். விவசாயிகளின் குழு ஏற்கனவே வரத் தொடங்கிவிட்டன. மாலை வரவிருந்த பெரிய குழு வந்ததும் சிறந்த புகைப்படங்கள் கிடைக்குமென காத்துக் கொண்டிருந்தோம். சாலை பிரிவுகள், வாகனங்கள் உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் பயன்படுத்தும் லென்ஸுக்கேற்ப புகைப்படக் கலைஞர்கள் தயாராக, விவசாயிகளின் பெருங்கடல் குறுகிய சாலையில் பெருக்கெடுத்து மைதானத்துக்குள் நுழைய காத்திருந்தனர்.

பாரிக்காக நான் பணியெடுத்திருந்தது அப்போதுதான் முதல்முறை. பிரசுரிக்கப்பட்ட கட்டுரைக்கான புகைப்படம் எடுக்க ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகதான் நேரம் இருக்கும் என்பதை புரிந்திருந்தேன். சரியான இடத்தில் இருக்க வேண்டியது எனக்கு முக்கியமாக இருந்தது. நகரம் எங்களுக்கு உதவியது. ஏனெனில் எதிரே இருந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிற விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதுதான் என் புகைப்படத்துக்கு பின்னணி என தெரிந்தது.

திடுமென தெரு நிறைந்து, விவசாயிகள் மிடுக்காக சிவப்பு AIKS தொப்பிகளுடன் அணிவகுத்து என்னைக் கடந்து சென்றனர். இது எனக்கு பிடித்த புகைப்படம். ஏனெனில் அநேகமாக நகரத்துக்கு முதன்முறையாக வந்திருந்த இரு இளம்பெண்கள் நடப்பவற்றை கிரகித்துக் கொள்ள முயன்ற தருணம் அது. ரயில்களில் கனமான பைகளும் உணவும் நாள் முழுக்க சுமந்தவர்கள் வேகம் குறைக்கும் நேரத்தில், நீண்ட பயணத்தில் களைத்துப் போயிருந்த பெருங்குழுவும் மைதானத்தில் ஓய்வெடுக்கவென வேகத்தை குறைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அப்பெண்கள் தங்களுக்கான கணத்தை அங்கு பதிய வைத்தனர். அதை பதிவு செய்யும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்தது.

*****

ஒடிசாவின் ராயகடாவில் பி.சாய்நாத்

PHOTO • P. Sainath

இந்திய புகைப்படம்.

புகைப்படம் எடுக்கப்படுவதில் நிலவுரிமையாளர் பெருமை கொண்டார். நிமிர்ந்து அவர் நின்று கொண்டிருக்க, ஒன்பது பெண்கள் குனிந்து அவரின் வயலில் நடவு செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாளுக்கென கொடுக்கப்பட வேண்டிய கூலியில் 60 சதிவிகிதம் குறைத்துதான் அவர்களுக்கு அவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு அப்போதுதான் வெளியாகியிருந்தது. முதன்முறையாக இந்திய மக்கள்தொகை ஒன்பது இலக்கத்தை தாண்டியிருந்தது. இந்தியாவின் பலதரப்பட்ட யதார்த்தங்களை ஒருங்கே நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஆண் நிலவுரிமையாளர் பெருமையுடன் நிமிர்ந்து நின்று கொண்டிருந்தார். பெண்கள் குனிந்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இருக்கும் அனைவரிலும் பத்து சதவிகித பேர் நிமிர்ந்து நம்பிக்கையுடன் நிற்கின்றனர். மிச்ச 90 சதவிகித பேர் தலை வணங்கி நிற்கின்றனர்.

லென்ஸின் வழியாக ‘1’-ஐ பின்பற்றிய 9 பூஜ்யங்களாக அவர்கள் தெரிந்தனர். இந்தியாவின் 100 கோடி பேரின் கதை.

*****

மகாராஷ்டிராவின் கொலாப்பூரில் சங்கெத் ஜெயின்

PHOTO • Sanket Jain

கோலாப்பூர் மல்யுத்த வீரர்களின் உணவுமுறையும், எடை பிரச்னையும் என்ற என் கட்டுரையின் புகைப்படம் இது.

எந்தவொரு பயிற்சியின்போதும் மல்யுத்த வீரர்கள் அதிக கவனத்துடன் இருப்பார்கள். எதிர் விளையாட்டு வீரரின் நகர்வுகளை அவதானித்து, ஒரு கணத்துக்குள்ளாக எப்படி அவரை வீழ்த்துவது என திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் இந்த புகைப்படத்தில் மல்யுத்த வீரரான சச்சின் சலுங்கே  குழப்பமும் நெருக்கடியும் கொண்டவராக காணப்படுகிறார். தொடர் வெள்ளங்கள் மற்றும் கோவிட் தொற்று ஆகியவை, கிராமப்புற மல்யுத்த வீரர்களின் வாழ்க்கைகளை அழித்து, கிடைத்த வேலை அல்லது விவசாயக் கூலி வேலை போன்றவற்றை செய்ய வைத்திருந்தது. அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்ததால், மல்யுத்தத்துக்கு திரும்பியும் கூட சச்சினால் கவனம் செலுத்த முடியவில்லை.

இப்படித்தான் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது. அதிகரித்து வரும் காலநிலை பேரிடர்களால் மல்யுத்த வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அதிகரித்து வரும் கவலை இதில் வெளிப்படுகிறது.

*****

கர்நாடகாவின் ஹவேரியில் எஸ்.செந்தளிர்

PHOTO • S. Senthalir

ஹவேரி மாவட்டத்தின் கொனந்தலே கிராமத்தின் ரத்னவா வீட்டுக்கு முதன்முறையாக நான் அறுவடை காலத்தில் சென்றேன். ரத்னவா தக்காளி அறுவடை செய்து கொண்டிருந்தார்.விதைகள் நீக்கப்பட அவை நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. விதைகள் காய வைக்கப்பட்டு, மாவட்ட தலைநகரத்தில் இருந்த விதை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன.

கையால் மகரந்தம் சேர்க்கும்பணி தொடங்க மூன்று மாதங்கள் நான் காத்திருக்க வேண்டும். பூக்களில் மகரந்தம் சேர்க்கும் பணியை பெண்கள்  அதிகாலையிலேயே தொடங்கி விடுவார்கள்.

தோட்டங்களுக்கு அவரை பின்தொடர்ந்து சென்றேன். பல மணி நேரங்கள் செடிகளின் வரிசைகளுக்கு இடையே நடந்து அவர்களின் பணியை நம்பிக்கைகளும் விதைகளும் நிரம்பிய ரத்னவா வாழ்க்கை என்ற இக்கட்டுரையில் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

இந்தக் கட்டுரைக்கான நம்பிக்கையை பெற நான் ரத்னவாவின் வீட்டுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எல்லா நாட்களும் சென்று கொண்டிருந்தேன்.

இது எனக்கு பிடித்த புகைப்படங்களில் ஒன்று. ஏனெனில் பணியில் அவரின் தோற்றத்தை இது படம்பிடித்திருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகள் உருவாக்க தேவைப்படும் கடினமான பணியையும் பெண்கள் எப்படி இந்த கடினமான வேலைகளை பார்க்கின்றனர் என்பதையும் இந்த தோற்றம் விளக்குகிறது. அவர் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு மணி நேரங்கள் தொடர்ந்து வேலை பார்க்கிறார். விதை தயாரிப்பின் முக்கியமான பகுதியான கையால் மகரந்தம் சேர்க்கும் பணியை குனிந்து கொண்டு செய்கிறார்.

*****

மகாராஷ்டிராவின் மும்பையில் ஷிராங் ஸ்வர்கே

PHOTO • Shrirang Swarge

Long March: Blistered feet, unbroken spirit கட்டுரையின் இப்புகைப்படம், விவசாயிகள் பேரணி பற்றிய என் கட்டுரையில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம். இது கட்டுரை மற்றும் பேரணியின் உணர்வை சரியாக பிரதிபலிக்கிறது.

தலைவர்கள் விவசாயிகளின் மத்தியில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்ரக்கின் மீது அமர்ந்து கொடியை அசைத்துக் கொண்டிருந்த இந்த விவசாயியை நான் பார்த்தேன். பின்னால் கடல் போல அமர்ந்திருக்கும் விவசாயிகளை என் புகைப்படத்தில் கொண்டு வர நினைத்து, உடனே நான் ட்ரக்கை கடந்து, பிரதான சாலைக்கு சென்று புகைப்படம் எடுத்தேன். ஏனெனில், சற்று நேரம் காத்திருந்தால் கூட அந்த புகைப்படம் கிடைக்காமல் போய்விடும் என எனக்கு தெரியும்.

பேரணியின் உணர்வை புகைப்படம் பிடித்திருக்கிறது. பார்த் எழுதிய கட்டுரையை மிகச் சரியாக அது பிரதிநிதித்துவப்படுத்தியது. போராடும் விவசாயிகளின் உடையாத உறுதியை வெளிப்படுத்தியது. பேரணியின் பிரபலமான புகைப்படமாக இது மாறி, பரவலாக பகிரவும் பிரசுரிக்கவும் பட்டது.

*****

ஜம்மு காஷ்மிரின் கார்கிலில் ஷுப்ரா தீட்சித்

PHOTO • Shubhra Dixit

பர்கியின் தைசுருவில் பேசப்படும் மொழி, பள்ளியின் கற்பித்தல் மொழி கிடையாது. பள்ளியில் ஆங்கிலமும் உருதுவும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இரு மொழிகளும் தூரமானவை. குழந்தைகளுக்குக் கடினமானவை. மொழி மட்டுமின்றி, கதைகளும் அன்றாட உதாரணங்களும் கூட, அப்பகுதி மக்களின் வாழ்வனுபவங்களிலிருந்து அகற்றப்பட்டிருந்தன.

என் சுரு பள்ளத்தாக்கில் முகர்ரம் அனுசரிப்பு கட்டுரையில், பாடப்புத்தகங்களில் அதிக ஈடுபாடில்லாத ஹஜிரா மற்றும் பதுல் ஆகியோர், சூரிய அமைப்பு பற்றியும் கோள்கள், நிலா, சூரியன் ஆகியவற்றை பற்றியும் அவர்களே சுய ஆர்வத்தில் புத்தகங்களை படித்து தெரிந்து கொள்கின்றனர்.

இது  முகரம் மாதத்தில் எடுக்கப்பட்டதால், பெண்கள் கறுப்பு ஆடை அணிந்திருக்கின்றனர். படித்து முடித்த பிறகு ஒன்றாக அவர்கள் இமாம்பராவுக்கு செல்வார்கள்.

*****

தமிழ்நாட்டின் திருவள்ளூரில் ஸ்மிதா துமுலுரு

PHOTO • Smitha Tumuluru

சாறு  நிறைந்த பழத்தை கடித்து, வாய் விரிய சிரிக்கிறார் கிருஷ்ணன். அவரின் வாய் வெளிர்சிவப்பு நிறத்தை கொண்டிருக்கிறது. அவரைப் பார்த்ததும் எல்லா குழந்தைகளும் உற்சாகமாகி, பழத்தை தேடத் தொடங்குகின்றனர். சந்தைகளில் அதிகம் கிடைக்காத நாதெள்ளி பழத்தை கை நிறைய அவர்கள் சேகரிக்கின்றனர். அதை அவர்கள் “லிப்ஸ்டிக் பழம்” என அழைக்கின்றனர். நாங்கள் அனைவரும் அதை சாப்பிட்டு, வெளிர்சிவப்பு உதடுகளுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.

இப்புகைப்படம் பங்களாமேட்டின் புதையல்கள் என்ற என் கட்டுரையை சேர்ந்தது. சில இருளர் ஆண்களும் குழந்தைகளும் அப்பழத்தை தேடி புதர்க்காட்டில் சென்றபோது நேர்ந்த ஒரு சுவையான தருணத்தை இக்கட்டுரை கொண்டிருக்கிறது.

என்னை பொறுத்தவரை, பின்னணியில் கற்றாழை மற்றும் புற்களுக்கு நடுவே பழத்தை தேடும் குழந்தையின்றி இப்புகைப்படம் முழுமை அடையாது. இருளர் சமூகக் குழந்தைகள் இளம்பருவத்திலிருந்தே சுற்றியுள்ள காடுகளை பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்கின்றன. இக்கட்டுரையும் அதைப் பற்றிதான்.

இருளர்கள் பற்றிய என் கள அனுபவத்தில் “லிப்ஸ்டிக் பழ” தருணம் நினைவுகூரத்தக்கதாக இருக்கும்.

*****

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் ஸ்வேதா தகா

PHOTO • Sweta Daga

அச்சமயத்தில் நான் நல்ல புகைப்படங்களை எடுக்கும் பயிற்சியில்தான் இருந்தேன். எனவே விதைகளின் காவலர்கள் என்ற இக்கட்டுரைக்காக பல புகைப்படங்களை நான் எடுத்தேன்.

திரும்பிப் பார்க்கையில், பல விஷங்களை சற்று மாற்றி செய்திருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால் இப்பயணத்தை தவறுகள் செய்யாமல் உங்களால் மேம்படுத்தியிருக்க முடியாது.

சம்னி மீனாவின் புன்னகை படம் கண்கவரத்தக்கது. அந்த புன்னகையுடன் அந்த புகைப்படத்தை எடுத்தது என் அதிர்ஷ்டம் என நான் கருதுகிறேன்.

*****

குஜராத்தின் தஹெஜில் உமேஷ் சொலாங்கி

PHOTO • Umesh Solanki

அது ஏப்ரல் 2023-ன் தொடக்கம். குஜராத்தின் தகோத் மாவட்ட கராசனா கிராமத்தில் இருந்தேன். ஒரு வாரத்துக்கும் சற்று முன்தான் அந்த மாவட்டத்தில் சாக்கடைக் குழியை சுத்தம் செய்ய இறங்கிய ஐந்து இளம் பழங்குடி சிறுவர்களில் மூவர் இறந்து போயிருந்தனர். குஜராத்தின் தாகேஜ்ஜில் விஷவாயுக் கொலை என்கிற கட்டுரைக்காக அச்சம்பவத்தில் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நான் சந்தித்தேன்.

பாவேஷின் குடும்பத்துடன் நான் தங்கினேன். உயிர் பிழைத்த 20 வயதுக்காரர்களில் அவரும் ஒருவர். ஆனால் 24 வயது அண்ணன் பாரேஷ் உள்ளிட்ட மூவர் கண் முன்னே இறந்ததை பார்த்தவர். குடும்பத்தின் ஆண்களிடம் பேசிவிட்டு, வீட்டை நோக்கி நான் நடந்தபோது, வீட்டுக்கு வெளியே படுத்துக் கிடந்த பாரேஷ் கதாராவின் தாய் சப்னா பென்னை பார்த்தேன். என்னை பார்த்ததும் அவர் எழுந்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். புகைப்படம் எடுத்துக் கொள்ளவா எனக் கேட்டேன். மெதுவாக தலையசைத்தார்.

கடும் துயரம், பாதிக்கப்படக்கூடிய தன்மை மற்றும் கோபம் ஆகியவை மின்ன அவர் கேமராவை நேராக பார்த்தார். அவரை சுற்றியிருந்த மஞ்சள் நிறம் அவரின் மனநிலையின் பலவீனத்தை எடுத்துக் காட்டும் வகையில் இருந்தது. ஆழமாக பதியும் வகையில் நான் எடுத்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று. நான்கு குடும்பங்களின் மொத்தக் கதையையும் இந்த ஒற்றை புகைப்படம் தனக்குள் கொண்டிருந்தது.

*****

மகாராஷ்டிராவின் நந்துர்பரை சேர்ந்த சிஷான் ஏ. லத்தீஃப்

PHOTO • Zishaan A Latif

பல்லவி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) சிகிச்சையளிக்கப்படாமல் சரிந்து வரும் கருப்பையால் கடுமையான பாதிப்பை கொண்டிருந்தார். ஆண்களால் புரிந்து கொள்ள முடியாத கடும்வலியை அவர் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மலைச்சரிவில் இருந்த இரு குடிசை வீடுகளின் ஒரு சிறுகுடிசைக்குள் நான் புகைப்படம் எடுத்தபோது அவரின் தீவிரமான எதிர்த்து போராடும் தன்மை வெளிப்பட்டது. அவரின் அசவுகரியத்துக்கு சிகிச்சை பெற, அருகாமை அரசு மையத்துக்கு செல்ல இரண்டு மணி நேரங்கள் அவருக்கு பிடிக்கும். அதுவும் தற்காலிக தீர்வுதான், நிரந்தரம் அல்ல. 'என்னுடைய கருப்பை வெளியே வருகிறது' என்ற என் கட்டுரைக்கான இப்புகைப்படத்தில், அவர் நேராக, பழங்குடி பில் பெண்ணின் அடையாளமான பலவீனத்திலும் நிமிர்ந்து நின்று ஆரோக்கிய குறைபாட்டிலும் குடும்பத்தையும் சமூகத்தையும் பார்த்துக் கொள்ளும் தன்மையை நான் படம் பிடித்திருக்கிறேன்.

முகப்பு வடிவம் சன்விதி ஐயர்

தமிழில்: ராஜசங்கீதன்

Binaifer Bharucha

মুম্বই নিবাসী বিনাইফার ভারুচা স্বাধীনভাবে কর্মরত আলোকচিত্রী এবং পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার চিত্র সম্পাদক।

Other stories by বিনাইফার ভারুচা
Editor : PARI Team
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan