நான் செல்லும் இடம் நெருங்கியதை கூகுள் மேப்ஸ் என்னிடம் சொல்கிறது. ஆனால் அப்பகுதி எனது நினைவில் இருந்தது போன்றல்லாமல் சிறிது மாறியிருந்தது. கடந்த முறை உப்படா வந்தபோது கடலில் அரிக்கப்பட்டிருந்த  பழைய வீடு ஒன்று இருந்ததற்கான அடையாளமே இப்போது இல்லை. “ஓ அந்த வீடா? இப்போது அது கடலுக்குள் இருக்கிறது!” என்கிறார் வங்கக் கடலின் அலைகளை சாதாரணமாக காட்டியபடி டி. மாரம்மா.

2020 மார்ச் தேசிய பொதுமுடக்கத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் மாரம்மா மற்றும் அவரது குடும்பத்தினரை அந்த பழைய கட்டடத்தின், துயரமான பின்னணியில் நான் புகைப்படம் எடுத்தது நன்றாக என் நினைவில் இருக்கிறது. இந்த  நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகள் வரை மாரம்மாவின் கூட்டுக் குடும்பம் வாழ்ந்து வந்த பெரிய வீட்டின் மிச்சப் பகுதி மட்டும் ஒரு குறுகிய கடற்கரையில் ஆபத்தாக நின்றது.

“எட்டு அறைகள், மூன்று கொட்டகைகளுடன் [விலங்குகளுக்கானது] அது கட்டப்பட்டது. இங்கு சுமார் நூறு பேர் வரை வசித்து வந்தனர்,” என்கிறார் வயது 50களில் உள்ள, கொஞ்ச காலம் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்த, முன்னாள் மீன் வியாபாரியான மாரம்மா. 2004ஆம் ஆண்டுன் சுனாமிக்கு முன் ஏற்பட்ட புயலில் கட்டடத்தின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டதால் கூட்டுக் குடும்பம் வெவ்வேறு வீடுகளுக்குச் செல்ல நேரிட்டது. அருகில் உள்ள வீட்டிற்கு குடிபெயரும் முன் சில ஆண்டுகள் மாரம்மா அந்த பழைய கட்டடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

மாரம்மாவின் குடும்பம் மட்டுமல்ல உப்படாவில் உள்ள கிட்டதட்ட ஒவ்வொரு குடும்பமும் கடல் அரிப்பு காரணமாக ஒருமுறையாவது வீட்டை மாற்றியுள்ளனர். வாழ்ந்த அனுபவங்கள், கடல் பற்றிய உள்ளூர் சமூகத்தின் உள்ளுணர்வின் அடிப்படையில் வீட்டை விட்டு எப்போது வெளியேறுவது என அவர்கள் கணக்கிடுகின்றனர். “அலைகள் முன்நோக்கி வரும்போதே நாங்கள் வீடு கடலுக்குள் சென்றுவிடும் என்பதை கண்டறிந்துவிடுவோம். பிறகு எங்கள் பாத்திரங்கள் போன்றவற்றை ஒரு பக்கம் கொண்டு செல்வோம் [தற்காலிக வீட்டை வாடகைக்கு தேடத் தொடங்குவோம்]. ஒரு மாதத்திற்குள் பழைய வீடு பொதுவாக [கடலுக்குள்] சென்றுவிடும்,” என விளக்குகிறார் ஓ. சிவா. அவர் 14 வயதிலேயே கடலிடமிருந்து தப்பிக்க ஒரு வீட்டில் இருந்து வெளியேறியவர்.

T. Maramma and the remains of her large home in Uppada, in January 2020. Her joint family lived there until the early years of this century
PHOTO • Rahul M.

ஜனவரி 2020இல் உப்படாவில் டி மாரம்மாவும் அவரது பெரிய வீட்டின் எஞ்சிய பகுதிகளும். இந்த நூற்றாண்டின் தொடக்க வருடங்கள் வரை அவரது கூட்டுக் குடும்பம் இங்குதான் வாழ்ந்து வந்தது

*****

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 975 கிலோமீட்டர் கடலோரத்தில் அமைந்துள்ள உப்படாவில் குடியிருப்பவர்கள் கடைசி வரைக்கும் மறக்க முடியாத அளவிலான கடலின் கொடுந்தாக்குதல் ஒன்றைக் கண்டுள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் மாரம்மாவின் குடும்பம் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தபோது அது கடற்கரையைவிட மிக தொலைவில் இருந்தது. “வீட்டிலிருந்து கடற்கரைக்கு வருவதற்குள் எங்கள் கால்கள் பயங்கரமாக வலிக்கும்,” என நினைவுகூர்கிறார் சிவாவின் தாத்தாவும், மாரம்மாவின் சித்தப்பாவுமான ஓ. சின்னாபாய். வயது 70 அல்லது 80களில் உள்ள ஆழ்கடல் மீனவரான அவர், வீட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையில் வீடுகள், கடைகள், சில அரசு கட்டடங்கள் இருந்ததை நினைவுகூர்கிறார். “அது முன்பு கடற்கரையாக இருந்தது,” என்று மாலை வானில் சில கப்பல்கள் மறையும் தொலைவில் உள்ள தொடுவானத்தைக் காட்டிச் சொல்கிறார் சின்னாபாய்.

“எங்கள் புதிய வீட்டிற்கும் கடலுக்கும் இடையே நிறைய மணல் கூட இருந்தது,”என்று மாரம்மா நினைவுகூர்கிறார். “நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, மணல் மேடுகளில் சறுக்கி விளையாடுவோம்.”

உப்படாவின் பல நினைவுகள் இப்போது கடலுக்குள் மூழ்கியுள்ளன. 1989 முதல் 2018ஆம் ஆண்டிற்குள், உப்படாவின் கடலோரப் பகுதி ஆண்டுதோறும் 1.23 மீட்டர் சராசரியாக அரிக்கப்பட்டுள்ளதாகவும், 2017-18 காலகட்டத்தில் இந்த அரிப்பு அதிக அளவாக 26.3 மீட்டர் இருந்தது என்கிறது விஜயவாடாவில் உள்ள ஆந்திர பிரதேச விண்வெளி செயல்பாட்டு மைய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வு .  மற்றொரு ஆய்வின் படி, கடந்த நாற்பது ஆண்டுகளில் உப்படாவுடன், காக்கிநாடா புறநகர் பகுதிகளில் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை கடல் அரித்துள்ளது. காக் கிநாடாவின் வருவாய் பிரிவான கொத்தபல்லி மண்டலம மட்டும் நான்கில் ஒரு பங்கு இழந்துள்ளது என்கிறது அவ்வாய்வு. 2014ஆம் ஆண்டின் ஆய்வில் , கடந்த 25ஆண்டுகளில் காக்கிநாடாவின் கடற்கரை பல நூறு மீட்டர் சுருங்கிவிட்டதாக வடகடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள்  கூறியுள்ளனர்.

Maramma’s old family home by the sea in 2019. It was washed away in 2021, in the aftermath of Cyclone Gulab.
PHOTO • Rahul M.
Off the Uppada-Kakinada road, fishermen pulling nets out of the sea in December 2021. The large stones laid along the shore were meant to protect the land from the encroaching sea
PHOTO • Rahul M.

இடது: 2019ல் மாரம்மாவின் பழைய வீடு. குலாப் புயலுக்கு பிறகு 2021ல் அது அடித்துச் செல்லப்பட்டது. வலது: டிசம்பர் 2021ல் உப்படா-காக்கிநாடா சாலையின் பக்கம் மீனவர்கள் கடலிலிருந்து

“வட காக்கிநாடா நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள உப்படாவில் கடலரிப்பு ஏற்படுவதற்கு ஹோப் தீவின் வளர்ச்சியே காரணம். இந்த 21 கிலோமீட்டர் நீள மணல் பரப்பை அறிவியல்பூர்வமாக ‘உமிழ்வு’ என்கின்றனர். கோதாவரி ஆற்றின் கிளையான நிலரேவு வாய் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி இயற்கையாக அந்த உமிழ்வு வளர்கிறது,” என்கிறார் விசாகப்பட்டணத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக ஜியோ-பொறியியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியரான டாக்டர் ககானி நாகேஸ்வர ராவ். “உமிழ்வினால் திசைமாறும் அலைகள் உப்படா கடற்கரையில் ஊடுருவி, அதன் அரிப்புக்கு வழிவகுக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முன்பே இது தொடங்கியிருக்க வேண்டும். இந்த மணல் உமிழ்வு 1950களிலேயே தற்போதையை நிலையை கிட்டதட்ட எட்டியிருந்திருக்கலாம்,” என பல தசாப்தங்களாக ஆந்திர கடலோரத்தின் மாற்றங்களை உன்னிப்பாக ஆராய்ந்து வரும் பேராசிரியர் விளக்குகிறார்.

1900களின் முந்தைய ஆவணப் பதிவுகளும் உப்படா நிகழ்வு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டதை உறுதிபடுத்துகின்றன. 1907ஆம் ஆண்டு கோதாவரி மாவட்ட கெஸட் அதிகாரியின் குறிப்பு - உதாரணத்திற்கு, 1900ஆம் ஆண்டு முதல் உப்படாவில் 50 கெஜத்துக்கும் அதிகமான நிலப்பரப்பை கடல் அரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார் - இதை வேறுவிதமாகக் கூறினால், அந்த ஏழு ஆண்டுகளில் கிராமம் ஒவ்வொரு ஆண்டும் ஏழு மீட்டர் நிலத்தை இழந்துள்ளது.

“பொதுவாகவே கடலோரப் பகுதிகள் பன்முகத் தன்மைகளைக் கொண்டவையாகவும், சிக்கலான உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் விளைவுகளைக் கொண்டவையாகவும் இருக்கின்றன,” என்கிறார் டாக்டர் ராவ். “உப்படாவில் நிகழும் கடலரிப்பிற்குப் பலவகை காரணங்கள் உள்ளன.” புவி வெப்பமடைதல், துருவ பனிபடலங்கள் உருகுதல், கடல் மட்டம் அதிகரித்தல், வங்கக் கடலில் அடிக்கடி புயல்கள் ஏற்படுதல் போன்றவை அவற்றில் சில. கோதாவரிப் படுகையில் வளர்ந்து வரும் அணைகளால் ஆற்றின் முகத்துவாரங்களில் வண்டல் மண் படிமங்கள் பெருமளவில் குறைவது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

*****

கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கடலுக்குள் சென்றுகொண்டிருப்பதால், மக்களின் நினைவுகளில் தான் உப்படா மீண்டும் வந்துபோகிறது.

தங்களின் நினைவுகளில், கதைகளில் வாழும் கிராமத்தின் காட்சிகளைக் காண கிராமத்தினரில் ஒருவர் என்னிடம் தெலுங்கு படம் நாக்கு ஸ்வதந்திரம் வச்சின்டியை பார்க்கச் சொன்னார். 1975ஆம் ஆண்டு வெளிவந்த அத்திரைப்படத்தில் நான் வேறு உப்படாவைப் பார்த்தேன். கிராமமும், கடலும் ஒன்றுக்கு ஒன்று சவுகரியமான தொலைவில் உள்ளன. அழகான மணல் நிறைந்த கடற்கரை அவற்றை பிரிக்கிறது. கடல், மணல் ஒற்றை காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. திரைப்படத்தின் பின்னணி முதல் முக்கிய தொடர் காட்சிகள் வரை பல்வேறு கோணங்களில் ஒளிப்பதிவு செய்வதற்கு கடற்கரையில் போதிய இடமும் இருந்துள்ளது.

Pastor S. Kruparao and his wife, S. Satyavati, outside their church in Uppada, in September 2019.
PHOTO • Rahul M.
D. Prasad  grew up in the coastal village, where he remembers collecting shells on the beach to sell for pocket money. With the sand and beach disappearing, the shells and buyers also vanished, he says
PHOTO • Rahul M.

இடது: செப்டம்பர் 2019ல் உப்படாவில் இருந்த அவர்களுடைய சர்ச்சுக்கு முன்னால் பாஸ்டர் எஸ்.கிருபா ராவ் மற்றும் அவருடைய மனைவி எஸ். சத்தியவதி. வலது: டி. பிரசாத் இந்த கடலோர கிராமத்தில்தான் வளர்ந்தார். கைப்பணத்திற்காக

“நான் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை பார்த்தேன். அப்போது வந்த நடிகர்களில் சிலர் இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினர்,” என்கிறார் உப்படா தேவலாயத்தில் பாஸ்டராக உள்ள 68 வயது எஸ். கிருபாராவ். “இப்போது எல்லாம் கடலுக்குள் போய்விட்டது. அந்த விருந்தினர் மாளிகைகூட.”

1961ஆம் ஆண்டு வெளியான கிழக்கு கோதாவரி மாவட்ட கணக்கெடுப்பு கையேட்டில் விருந்தினர் மாளிகை இருந்துள்ளதை குறிப்பிட்டுள்ளது. “கடற்கரையிலிருந்து மிக அருகில் இரண்டு தொகுப்புகள் கொண்ட பயணியர் மாளிகை அறைகள் மிகவும் வசதியானவை. ஏற்கனவே கட்டப்பட்ட பயணியர் மாளிகை கடலுக்குள் சென்றுவிட்டதால் இது கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.” அலைகளுக்குள் மறைந்த அந்த இரண்டாவது விருந்தினர் மாளிகையில்தான் 1975ஆண்டு நாக்கு.. திரைப்பட குழுவினர் தங்கியிருந்திருக்க வேண்டும்.

கடலில் எடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் காப்பகப் பதிவுகளிலும், தலைமுறைகளாகக் கடத்தப்படும் கதைகளிலும் அடிக்கடி வெளிவருகின்றன. பழைய கிராமவாசிகள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி, ஒரு பெரிய கல், பல ஆண்டுகளாக கடலில் மூழ்கி கிடப்பதைப் பற்றி பேசுவதை நினைவுகூர்கிறார்கள். 1907ல் இருந்த கெஸட் அதிகாரி இதைப் போன்ற ஒன்றை விவரிக்கிறார்: “கடலில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ள ஒரு இடிபாடு இன்னும் மீனவர்களின் வலைகளைப் பிடிக்கிறது, மேலும் கடலில் மூழ்கிய நகரத்திலிருந்து எப்போதோ அடித்துச் செல்லப்பட்ட  நாணயங்களை குழந்தைகள் கடற்கரையில் தேடுகிறார்கள்.”

1961ஆம் ஆண்டு கையேட்டில் சேதங்கள் பற்றிய குறிப்பும் உள்ளது: “கடற்கரையிலிருந்து பல மைல் தொலைவில் படகில் அல்லது கட்டுமரங்களில் செல்லும்போது அவர்களின் வலைகள் கட்டடங்களின் உச்சியில் அல்லது மரங்களின் கிளைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்வதாக பழைய மீனவர்கள் சொல்கின்றனர். அவர்களின் சொந்த அறிவின்படி கிராமத்தை கடல் ஆக்கிரமித்து வருகிறது.”

அதிலிருந்து கோரப் பசி கொண்ட அந்த கடல் கிராமத்தை மேலும் விழுங்கி வருகிறது: கடற்கரையின் பெரும்பகுதி, எண்ணற்ற வீடுகள், ஒரு கோயில், ஒரு மசூதி. 2010ஆம் ஆண்டு ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் உப்படாவை காக்க கட்டப்பட்ட 1,463 மீட்டர் நீள ‘ஜியோடியூப்’ கடந்த பத்தாண்டுகளில், அலைகளால் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தை மீட்பதற்கும், கடல் எல்லைகளை பாதுகாக்கவும் மணல் மற்றும் நீர் நிரப்பி டியூப் வடிவில் வைக்கப்படும் பெரும் கொள்கலனை ஜியோடியூப்கள் என்கிறோம். “15 ஆண்டுகளில் அலைகளின் உராய்வு காரணமாக சுமார் இரண்டு சதுர அடி பெரிய பாறைகள் ஆறு அங்குல கூழாங்கற்களாக உருகுவதை நான் பார்த்திருக்கிறேன் என்கிறார்,” அருகமை பகுதியில் வளர்ந்த பகுதி நேர மீனவரான 24 வயது டி. பிரசாத்.

Remnants of an Uppada house that was destroyed by Cyclone Gulab.
PHOTO • Rahul M.
O. Chinnabbai, Maramma's uncle, close to where their house once stood
PHOTO • Rahul M.

இடது: குலாப் புயல் தாக்கிய போது அழிந்து போன வீட்டின் எஞ்சிய பகுதிகள். வலது: அவர்களது வீடு இருந்த இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார் மாரம்மாவின் சித்தப்பா ஓ.சின்னாபாய்

2021ஆம் ஆண்டு வெளிவந்த உப்பென்னா திரைப்படம், கடலில் இருந்து கிராமத்தை பாதுகாக்கும் முயற்சியில் கடற்கரையாக இருந்த பாறைகள் மற்றும் கற்களை, உப்படாவின் பெரிய மாற்றங்களை படம் பிடித்துள்ளது. 1975 திரைப்படத்தைப் போலல்லாமல், கிராமத்தையும் கடலையும் ஒரே பிரேமில் படம்பிடித்துக் காட்டுவதற்கு, பறவையின் பார்வைக் காட்சிகள் அல்லது மூலைவிட்ட காட்சிகளையே நாட வேண்டியிருந்தது. ஏனெனில் கேமராவை வைக்க கடற்கரை என எதுவும் இல்லை.

அண்மையில் 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் இறுதியில் தாக்கிய குலாப் புயல் உப்படா கடற்கரையில் கோரத் தாண்டவம் ஆடியது. குறைந்தபட்சம் 30 வீடுகளை விழுங்கியதுடன், புதிதாக கட்டமைக்கப்பட்ட உப்படா – காக்கிநாடா சாலையையும் மோசமாக அப்புயல் சேதப்படுத்தியது.  அவை அபயன்பாட்டிற்கு பாதுகாப்பற்றதாக மாறின.

அக்டோபர் தொடக்கத்தில் குலாப் புயலுக்கு பிறகு கொந்தளிப்பாக இருந்த கடல், மாரம்மாவின் பழைய வீட்டு மிச்சங்களையும் எடுத்துச் சென்றது. அவரும், அவரது கணவரும் வாழ்ந்த வீட்டையும் அது துடைத்துச் சென்றுவிட்டது.

*****

“கடைசியாக வந்த குலாப் புயலுக்குப் பிறகு எங்களில் பலரும் பிறரது வீட்டுத் திண்ணைகளில் படுத்துறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்,” என 2021ல் ஏற்பட்ட பேரழிவை கனத்த குரலில் நினைவுகூர்கிறார் மாரம்மா.

2004ஆம் ஆண்டு தாக்கிய புயல் மாரம்மா மற்றும் அவரது கணவரான ஆழ்கடல் மீனவர் டி. பாபாய் வாழ்ந்த முன்னோர்களின் வீட்டைவிட்டு வெளியேறச் செய்ததும் முதலில் வாடகை வீட்டிலும், பிறகு சொந்தமாக கட்டிய வீட்டிலும் இருவரும் குடியேறினர். கடந்தாண்டு தாக்கிய குலாப் புயல் அந்த வீட்டையும் புரட்டிப்போட்டது. இன்று இத்தம்பதி அருகில் உள்ள உறவினர் வீட்டின் திறந்த திண்ணையில் வசிக்கின்றனர்.

“ஒரு காலத்தில் நாங்கள் செல்வந்தர்களாக இருந்தோம் [கடனுக்கு தகுதியான மற்றும் ஒப்பீட்டளவில் நன்றாக இருப்பது],” என்கிறார் மாரம்மா. மறுகுடிபெயர்தல், மறுகட்டமைத்தல், நான்கு மகள்களின் திருமணச் செலவுகள் ஆகியவை இக்குடும்பத்தின் சேமிப்பை குறிப்பிடத்தக்க வகையில் சுருக்கிவிட்டது.

M. Poleshwari outside her third house; the first two were lost to the sea. “We take debts again and the house gets submerged again”
PHOTO • Rahul M.
M. Poleshwari outside her third house; the first two were lost to the sea. “We take debts again and the house gets submerged again”
PHOTO • Rahul M.

இடது : மாரம்மாவின் பழைய வீடு, எட்டு அறைகள் கொண்ட கட்டடம். 'சுமார் நூறு பேர் இங்கு வாழ்ந்து வந்தார்கள்' என்கிறார் அவர். வலது: தனது மூன்றாவது வீட்டுக்கு முன்பு எம். போலேஷ்வரி. முதலிரண்டு வீடுகளை கடல் அழித்துவிட்டது. 'நாங்கள் மீண்டும் கடன் வாங்குகிறோம், மீண்டும் வீடு மூழ்குகிறது' என்கிறார் அவர்

“நாங்கள் கடன் வாங்கி வீடு கட்டினோம், அதுவும் மூழ்கிவிட்டது,” என்கிறார் மாரம்மாவின் துயரத்தை எதிரொலிக்கும் இங்குள்ள மீனவ குடும்பத்தைச் சேர்ந்த எம். போலேஷ்வரி. “நாங்கள் மீண்டும் கடன் வாங்கினோம், மீண்டும் வீடு மூழ்கிவிட்டது.” இதுவரை இரண்டு வீடுகளை போலேஷ்வரி இழந்துள்ளார். இப்போது மூன்றாவது வீட்டில் வசிக்கும் அவர் தனது குடும்ப நிதிநிலை, ஆழ்கடல் மீனவரான கணவரின் பாதுகாப்பு குறித்து கவலைகொள்கிறார். “புயல் வரும்போது அவர் சென்றால் இறந்துவிடுவார். எங்களால் என்ன செய்ய முடியும்? கடல்தான் எங்களின் ஒரே வாழ்வாதாரம்.”

பிற வருவாய் ஆதாரங்களும் வற்றிவிட்டன. நண்பர்களுடன் சேர்ந்து கிளிஞ்சல்கள் அல்லது நண்டுகள் சேகரிக்க கடற்கரையில் தேடி திரிந்ததையும், அவற்றை விற்று கைச்செலவிற்கு வைத்துக் கொண்டதையும் பிரசாத் நினைத்துப் பார்க்கிறார். மணலும், கடற்கரையும் வேகமாக மறைந்துவரும் நேரத்தில் கிளிஞ்சல்களும் மறைந்தன, வாங்குபவர்களும் இல்லாமல் போய்விட்டனர்.

“நாங்கள் சோழிகளை சேகரித்து கடைகளில் விற்போம்,” என்று தனது வீட்டிற்கு வெளியே காய வைத்துள்ள பழைய கிளிஞ்சல்களை பார்த்தபடி சொல்கிறார் போலேஷ்வரி. “மக்கள் இங்கு கிளிஞ்சல்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், ‘நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்’ என்றபடி வருவார்கள், இப்போதும் அதுவும் அரிதாகிவிட்டது.”

செப்டம்பர் 2021ஆம் ஆண்டு புயலுக்குப் பிறகு தங்கள் கிராமத்திற்கு பெருகிவரும் ஆபத்துகள், துயரங்கள் குறித்து கவனத்தைத் திருப்ப மாரம்மா உள்ளிட்ட சமார் 290 மீனவ குடியிருப்புவாசிகள் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டிக்கு கடிதம் எழுதினர். “கடலோர கிராமமான உப்படாவின் கடற்கரையில் முன்பு பெரிய கற்களை திரு. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அவர்கள் [முன்னாள் முதலமைச்சர்] அமைத்துக் கொடுத்தார். அக்கற்கள் எங்களை புயல்கள், சுனாமிகளில் இருந்து பாதுகாத்து வந்தன,” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டது.

The stretch from the fishing colony to the beach, in January 2020. Much of it is underwater now.
PHOTO • Rahul M.
The Uppada-Kakinada road became unsafe after it was damaged by Cyclone Jawad in December 2021. A smaller road next to it is being used now
PHOTO • Rahul M.

இடது : ஜனவரி 2020ல் கடலிலிருந்து மீனவர் குடியிருப்பு வரை நீளும் பாதை. இதில் பெரும்பாலானவை இப்போது மூழ்கிவிட்டது. வலது: டிசம்பர் 2021ல் ஜாவத் புயலில் பாதிக்கப்பட்ட பிறகு உப்படா-காக்கிநாடா சாலை ஆபத்தானதாக மாறிவிட்டது. அதனருகில் கட்டப்பட்ட சிறிய சாலைதான் இப்போது பயன்படுத்தப்படுகிறது

“இப்போது புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் கடலோரங்களில் போடப்படும் பெரிய கற்கள் இடம்பெயர்ந்துவிடுகின்றன. கரைகளும் அழிகின்றன. கற்களை கட்டும் கயிறுகளும் அறுந்துவிட்டன. இதனால் கடலோர வீடுகள், குடிசைகள் உள்ளே சென்றுவிட்டன. கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்,” என்றும் பாறைகளுக்குப் பதிலாக பெரிய கற்களைப் போடுமாறும் கோரியுள்ளனர்.

இருப்பினும், டாக்டர். ராவின் கூற்றுப்படி, கற்பாறைகள் கடுமையான கடலுக்கு எதிராக நிரந்தரமான பாதுகாப்பை வழங்க முடியும் என்பதற்கு சிறிய சான்றுகள் உள்ளன. கடல் தொடர்ந்து ஆக்கிரமிப்பதால் அவை ஒரு தற்காலிக நிவாரணம் ஆகும். “உடைமைகளை பாதுகாக்க முயற்சிக்காதீர். கடற்கரையை பாதுகாத்திடுங்கள். கடற்கரை உங்கள் உடைமைகளை பாதுகாக்கும்,” என்கிறார் அவர். “கடலில் கடல் தடுப்புகள் அமைப்பதால் ஜப்பானின் கைக்கே கடற்கரையின் அலைகளை பெரிய கற்களின் கட்டமைப்பு உடைத்தது போன்று – உப்படாவின் கடல் அரிப்பையும் தடுக்க உதவும்.”

*****

கடலரிப்பு ஒருபுறம் என்றால் சமூக மாற்றங்களையும் கிராமத்தில் காண முடிகிறது. கைத்தறி பட்டுப் புடவைகளுக்கு உப்படாவிற்கு புகழ்சேர்த்த 1980கள், 90களில், வாழ்ந்த நெசவாளர் சமூகம் கிராமத்தின் விளிம்பிலிருந்து ஊருக்குள் அரசு ஒதுக்கிய நிலத்திற்குச் சென்றுவிட்டன. மெல்ல உயர் சாதியைச் சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களும் கடலில் இருந்து வெளியே செல்ல தொடங்கிவிட்டனர். ஆனால் மீனவ சமூகம், அவர்களின் வாழ்வாதாரம் கடலுடன் தவிர்க்க முடியாமல் பிணைக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிப்பதை தவிர வேறு வழியில்லை.

உயர்சாதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் சென்றதும், சாதி அமைப்புடன் தொடர்புடைய சடங்கு சம்பிரதாயங்களும் பலவீனமடையத் தொடங்கின. உதாரணத்திற்கு, மீனவ சமூகத்தினர் தங்களது மீன்களை உயர் சாதியினரின் பண்டிகைகளுக்கு இலவசமாக அளிக்கும் நிர்பந்தம் மறைந்து போனது. “பலரும் தங்களின் சுதந்திரத்திற்காக மதத்தில் சேர்ந்துவிட்டனர்,” என்கிறார் பாஸ்டர் கிருபாராவ். இங்கு வசிப்பவர்கள் பரம ஏழைகள். பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவத்தை தழுவும் முன் பல்வேறு சாதி பாகுபாட்டு சம்பவங்களை அனுபவித்ததை கிருபாராவ் நினைவுகூர்கிறார்.

Poleru and K. Krishna outside their home, in 2019. The structure was washed away in 2021 after Cyclone Gulab struck the coast.
PHOTO • Rahul M.
The cyclone also wrecked the fishing colony's church, so prayers are offered in the open now
PHOTO • Rahul M.

இடது: 2019ல் அவர்களது வீட்டுக்கு வெளியே கே. போலேறு மற்றும் கே. கிருஷ்ணா. கடந்த வருட குலாப் புயலில் வீடு அழிந்துவிட்டது. வலது: மீனவ குடியிருப்பில் இருந்த சர்ச் புயலில் பாதிக்கப்பட்டதால் வெட்ட வெளியில் பிரார்த்தனை செய்கிறார்கள்

“20-30 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான கிராமத்தினர் இந்துக்கள். உள்ளூர் பெண் தெய்வங்களுக்காக கிராமத்தில் முறையாக திருவிழாக்கள் நடைபெறும்,” என்கிறார் சின்னாபாயின் மகன் ஓ. துர்கய்யா. “இப்போது கிராமத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.” 1990கள் வரை அண்டை பகுதிகளில் வியாழக்கிழமைகள் தோறும் [அம்மனை வழிபடுவதற்கு] ஓய்வு எடுப்பார்கள். இப்போது ஞாயிறுகளில் ஓய்வெடுத்து தேவாலயத்திற்குச் செல்கின்றனர். சில பத்தாண்டுகளுக்கு முன் சிறிதளவு இஸ்லாமியர்கள் உப்படாவில் இருந்தனர். ஆனால் உள்ளூர் மசூதி மூழ்கியதும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டனர்.

ஆக்கிரமிக்கும் கடலிடமிருந்து வாழ்வதற்கான பாடங்களையும், அடையாளங்களையும் கிராமத்தில் தங்கியவர்கள் பெற்றுள்ளனர். “[ஆபத்தை] கண்டறிந்து விடுகிறோம். கற்களில் திடீரென கொல்லு கொல்லு என சத்தம் கேட்க தொடங்கும். முன்பெல்லாம் நட்சத்திரத்தை பார்ப்போம், “[அலைகளின் மாதிரியை கணிக்க], அவை வேறு மாதிரி ஒளிரும். இப்போது அதை கைப்பேசிகள் சொல்கின்றன,” என்று 2019ஆம் ஆண்டு நான் முதன்முறை இங்கு வந்தபோது சந்தித்த மீனவர் கே. கிருஷ்ணா தெரிவித்தார். “சில சமயங்களில் கிழக்கு காற்று நிலத்தில்  இருந்து வரும். அப்போது மீனவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காது [அதாவது கடலில் மீன்கள் கிடைக்காது],” என்றார் மீனவ குடியிருப்பின் விளிம்பில் உள்ள தங்களது குடிசைக்கு அலைகள் வருவதை மூவருமாக நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது பேசிய அவரது மனைவி கே. பொலேரு. 2021 குலாப் புயல் அவர்களின் குடிசையை சேதப்படுத்தியதால் இப்போது புதிய குடிசையில் இருக்கின்றனர்.

மாரம்மா உறவினர் வீட்டு திண்ணையில் இரவு பகலை கழிக்கத் தொடங்கியுள்ளார். அவரது குரலில் நடுக்கம், வருத்தம் ஆகியவற்றுடன் இழப்பின் உணர்வுடன் அவர் சொல்கிறார், “நாங்கள் கட்டிய இரு வீடுகளையும் கடல் விழுங்கிவிட்டது. எங்களால் இன்னொன்றைக் கட்ட முடியுமா எனத் தெரியவில்லை.”

தமிழில்: சவிதா

Rahul M.

Rahul M. is an independent journalist based in Andhra Pradesh, and a 2017 PARI Fellow.

Other stories by Rahul M.
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha