ஜிகர் டெடுக்கு தனிமை பழகிவிட்டது. அவர் ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள படித்துறை மற்றும் தனது படகு இல்லத்திற்கு அருகே ஒரு மரகுடிசையில் தனியாக வசித்து வருகிறார். அவரது கணவரையும் பின்னர் தன் மகனையும் இழந்து 30 ஆண்டுகளாகிறது. பல துன்பங்களை நீண்ட காலம் தனியாக சந்தித்து வருகிறார்.

ஆனாலும், ‘இந்த வாழ்க்கையில், நான் 30 ஆண்டுகளாக தனியாக வசிக்கிறேன். ஊரடங்குக்குப்பின்னர், கடந்த ஆண்டைப்போன்றதொரு துன்பத்தை நான் பார்க்கவில்லை. சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியபோது, கொரோனாவும், அதனை தொடர்ந்து ஊரடங்கும் வந்தது. அது நம் அனைவரையும் கூண்டுக்குள் அடைத்துவிட்டது“ என்று அவர் கூறுகிறார்.

2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்யப்பட்ட ஊரடங்கு பரவலான இழப்பை ஏற்படுத்தியது. “அது முதல் நான் ஒரே ஒரு வாடிக்கையாளரைக் கூட பார்க்கவில்லை“ என்று ஜிகர் கூறுகிறார். அந்த நேரத்தில் அரசிடம் இருந்து, உள்ளூர்வாசிகள் அல்லாதோர் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பு, பள்ளத்தாக்கைவிட்டு சுற்றுலா பயணிகளும் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அது எங்களை முற்றிலும் செயலிழக்கவைத்தது. அது எங்களின் வணிகத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பேரிழப்பை சந்தித்த எனக்கு அது பேரிடரைக்கொண்டு வந்தது“ என்று அவர் மேலும் கூறினார்.

அவரின் பேரிழப்பை அவர் நினைவு கூறுகிறார். அவரது தனிமை குறித்து நம்மிடம் தெளிவாக விளக்கிக் கூறுகிறார்: “அது எனது சகோதரியின் நிச்சயதார்த்த விழா, எங்கள் குடும்பம் மொத்தமும் ஒன்றாக இணைந்து பாடல் பாடி, நடனமாடி மகிழ்ந்திருந்தனர்“ என்று ஜிகர் கூறுகிறார். 80 வயதுகளில் உள்ளபோதும் அவர் இவற்றை தெளிவாக கூறுகிறார். “ எனது கணவர் அலி முகமது துல்லா என்னிடம் வந்து, தனது நெஞ்சு வலி குறித்து கூறினார். அப்போது நான் அவரை எனது மடியில் படுக்க வைத்திருந்தபோது, அவரது உடல் குளிர்ச்சி நிலை அடைவதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் வானே இடிந்து என்மேல் விழுந்ததுபோல் உணர்ந்தேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

அலி முகமது, தனது 50 வயதுகளில் ஜிகர் மற்றும் அவர்களின் ஒரே மகன் மன்சூரை தனியே தவிக்கவிட்டு சென்றுவிட்டார். ஜிகர், அப்போது அவரது மகனுக்கு 17 வயது. அவர் தனது மகனை மன்னா என்றே அழைக்கிறார். அவர்களுக்கு சொந்தமான படகு இல்லம் இருந்தது. அதை சார்ந்தே அவர்களின் வாழ்வாதாரம் இருந்தது. 4 அறைகளைக் கொண்ட படகு இல்லம், அவர்களின் குடிசையிலிருந்து பாலத்தின் வழியே செல்லும் வகையில் அதன் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“எப்போது எனது மகன் சுற்றுலா பயணிகளை படகுஇல்லத்திற்கு அழைத்து வரச்செல்லும்போதும், எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டுச்செல்வான். ஏனெனில், நான் அவனது தந்தையை எண்ணி அழுவேன் என்பது அவனுக்கு தெரியும்“ என்று ஜிகர் கூறுகிறார். ஒரு அறைகொண்ட அவர்களின் குடிசையில் உள்ள மெத்தையில் அமர்ந்து கதவுக்கு வெளியே பார்க்கிறார். அங்குள்ள மரச்சுவரில் அவரது கணவன் மற்றும் மகனின் புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளது.

அவரது கணவர் அலி மற்றும் அவர் இறந்து ஏழு மாதங்களுக்கு பின்னர் மறைந்த மகன் மன்சூர், இருவரின் இழப்பு ஏற்படுத்திய துயரம் இப்போதும் அவரை வாட்டிக்கொண்டிருக்கிறது. ஜிகர் அந்த நாள் மற்றும் காரணத்தை நினைவு கூறுவில்லை. ஆனால், தந்தையின் இழப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியே வாலிப வயதில் தனது மகனையும் மரணிக்க செய்துவிட்டதாக நம்புகிறார்.

“என் கண் முன்னே எனது முழு உலகமும் தலைகீழாக மாறிவிட்டது“ என்று அவர் கூறுகிறார். “எனது வாழ்வின் இரண்டு கதாநாயகர்களும், அவர்களின் நினைவுகள் நிறைந்த இந்த படகு இல்லத்துடன் என்னை, தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்“ இவை என் மனதில் நீங்காமல் நினைவில் இருக்கிறது. வயோதிகம் மற்றும் வியாதியால் எனது பல நினைவுகளை நான் இழந்தபோதும், அந்த நினைவுகள் தினந்தோறும் என் நினைவில் புதிதுபோலவே இருக்கும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

PHOTO • Muzamil Bhat

ஜிகர் டெட், தனது மகனின் புகைப்படத்துடன் இருக்கிறார். (வலது புறத்தில் இருப்பவர் அவரது மகன், இடது புறத்தில் இருப்பவர் சுற்றுலா பயணி) ‘எனது மன்சூர் ஒரு கதாநாயகன். இரண்டு நாட்கள் தொடர்ந்து ஒரே உடையை உடுத்த மாட்டார்‘

நாம் பேசும்போது இதுபோன்ற சில நிகழ்வுகளை நினைவு கூறுகிறார். “என்னுடைய மன்னா இந்த படுக்கையில்தான் படுத்து உறங்குவார்“. என்று அவர் கூறுகிறார். “அவன் ஒரு குறும்புக்கார பையன். ஒரே பையன் என்பதால் பெற்றோர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை நாங்கள் அவனுக்கு தெரியாமல் புதிய சோபா வாங்கினோம். அவனுக்கு தெரியவந்தபோது, கோபித்துக்கொண்டு, அதற்காக, நாங்கள் அவனிடம் மன்னிப்பு கோரும் வரை உண்ணாமல் இருந்தான். ஓ கடவுளே, என் குழந்தையின்றி தவிக்கிறேனே“ என்று அவர் வருந்துகிறார்.

அப்போது முதல், ஜிகர் தால் ஏரியின் தண்ணீருடன் முற்றிலும் தனியாகவே வசிக்க முயற்சி செய்கிறார். அவரது கணவர் விட்டுச்சென்ற படகு இல்லத்திலிருந்து வரும் வருமானத்தில் வாழ்கிறார். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான மாதங்களில் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வருமானம் பெறுகிறார்.

ஆனால், கடந்தாண்டின் ஊரடங்கு மற்றும் வருவாய் இழப்பால், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, நீண்ட நாட்களாக அவரது படகு இல்லத்தை பராமரித்தவர் மற்றும் உதவியாளர் விட்டுச்சென்றபின்னர், அவர் மற்றுமொரு பேரிடியை சந்தித்தார். “எனக்கு ஒரு வேலையாள் இருந்தார். அவரது பெயர் குலாம் ரசூல், அவரே சுற்றுலாப்பயணிகளை கவனித்துக்கொள்வார். அவர் எனக்கு மகனைப்போன்றவர், என்னையும் பார்த்துக்கொள்வார். எனக்கு வெளியிலிருந்து உணவு மற்றும் தேவையான பொருட்களை வாங்கித்தருவார்“ என்று ஜிகர் கூறுகிறார்.

அவரின் மாத ஊதியமான ரூ.4,500 முதல் ரூ.5 ஆயிரத்தை ஜிகரால் கொடுக்க முடியாதபோது (சுற்றுலா பயணிகளிடம் இருந்தும் கிடைக்கப்பெறும் வருமானமும் இல்லாதபோது) குலாம் ரசூல் சென்றுவிட்டார். “என்னால் அவரை செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருக்கும் குடும்பம் உள்ளது“ என்று ஜிகர் கூறுகிறார்.

வயோதிகத்தால் அவர், தனது படகுஇல்லத்தை தாண்டி, வேலைக்கோ அல்லது மளிகை மற்றும் தேவையான பொருட்கள் வாங்கவோ வெளியே செல்ல முடியாது. அவருக்கு சந்தையிலிருந்து தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு உதவியாள் தேவைப்படுகிறது. வழக்கமாக பழைய நண்பர் ஒருவர் அவருக்கு பொருட்களை வாங்கித்தருவார். ஆனால், அதற்காக சில நேரங்களில் படகுஇல்லத்திற்கு வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். “நான் யாரையும், அவர்கள் வேலையை விட்டுவிட்டு எனக்கு வந்து உதவுமாறு வற்புறுத்த முடியாது. எனக்கு உதவி கிடைக்கும் வரை நான் காத்திருப்பது மட்டுமே என்னால் செய்ய முடியும்“ என்று அவர் கூறுகிறார்.

“முன்பு என்னிடம் பணம் இருந்தபோது எனக்கு உதவி எளிதாக கிடைத்துவிடும். ஆனால், இப்போது தேவையான பொருட்களை பெறுவதற்காக நான் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. என்னிடம் பணம் இல்லை, நான் அவர்களுக்கு பணம் தரமாட்டேன் என்று எண்ணுகிறார்கள்“ என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து போடப்பட்ட இரண்டு ஊரடங்குகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒருவரும் அவரது படகு இல்லத்தை வாடகைக்கு எடுக்காததால், கடந்த 30 ஆண்டுகளில், தற்போது முதல் முறையாக ஜிகர் டெட்டின் சேமிப்புகள் அனைத்தும் கிட்டத்தட்ட செலவாகிவிட்டது. அதனால், இருவேளைக்கு பதிலாக ஒருவேளை மட்டுமே அவர் சாப்பிடுகிறார். வழக்கமாக சாதமும், பருப்பும் இரவு உணவிற்கும், உள்ளூர் தேநீர் மற்றும் உப்பு தேநீர் மதியவேளைக்கும் உட்கொள்கிறார். சில நேரங்களில், தால் ஏரியில் அருகில் வசிப்பவர்கள் உணவுப்பொட்டலங்களை அவரது குடிசையிலோ அல்லது படகுஇல்லத்திலோ கொடுத்துவிட்டுச்செல்வார்கள்.

“நான் மற்றவர்களிடம் எவ்வித சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. நான் பட்டினியால் இறப்பது கூட சிறந்ததே. மற்றவர்களிடம் உதவிக்கு நிற்பது என் மன்னாவுக்கும், அலிக்கும் அவப்பெயரையே ஏற்படுத்தும்“ என்று அவர் கூறுகிறார். நான் ஒருவரையும் குறை கூறவில்லை. ஏனெனில், தற்போது  அனைவருக்கும் அதே நிலைதான். இந்த ஊரடங்குகளால், எங்கள் தொழில் முடங்கிவிட்டது மற்றும் எங்களிடம் பணமும் இல்லை. எனக்கு மட்டுமல்ல இங்குள்ள மற்ற படகு இல்ல முதலாளிகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரே ஒரு வாடிக்கையாளர்கூட கிடைக்கவில்லை. இதுவே எங்களுக்கு விதிக்கப்பட்டது.

பனிக்காலம் நெருங்கி வரும் வேளையில் ஜிகர் டெட், பனிக்கு படகு தாங்குமா என்று கவலைகொள்கிறார். ஏனெனில், படகு பராமரிப்பு மற்றும் மராமத்து பணிகளுக்குக்கூட அவரிடம் பணமில்லை. எப்போது வானிலை மாறினாலும், அவரால் தூங்க முடியவில்லை என்று கூறுகிறார். “மழை பொழிந்தால் நான் என்ன செய்வேன் என்று அச்சமாக உள்ளது. இந்த பனிக்கு தாக்கு பிடிக்க படகில் நிறைய மராமத்து பணிகள் செய்யவேண்டியுள்ளது. என்னுடனே, எனது படகும் மூழ்கிவிடுமோ என்று அச்சமாக உள்ளது. பனி தீவிரமடைவதற்கு முன் சுற்றுலா பயணிகள் வந்து, எனக்கு பணம் கிடைக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அப்போதுதான், எனது ஒரே வாழ்வாதாரத்தையும், அலியின் பரிசையும் நான் இழந்துவிடமாட்டேன்“ என்று அவர் கூறுகிறார்.

PHOTO • Muzamil Bhat

நினைவுகள் நிறைந்த படகுஇல்லத்தில், 30 ஆண்டுகளாக ஜிகர் டெட், தால் ஏரியின் தண்ணீருடன் முற்றும் தனியாக வாழ முயற்சித்து வருகிறார். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்தபோது போடப்பட்ட ஊரடங்குக்கு முன்னர் வரை அவரது கணவர் விட்டுச்சென்ற படகு இல்லத்தில் இருந்து வருமானம் கிடைத்து வந்தது. ‘கடந்தாண்டைப் போன்றதொரு கடினமான காலகட்டத்தை நான் பார்த்ததில்லை. ஊரடங்கிற்கு பின்னர் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியபோது, கொரோனாவும், தேசிய ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு அவதியுற்றுவருகிறோம்“ என்று அவர் கூறுகிறார்

PHOTO • Muzamil Bhat

வயோதிகம் காரணமாக ஜிகரால், தால் ஏரிக்கு வெளியில் உள்ள சந்தைகளுக்கு செல்ல முடிவதில்லை. தேவையான பொருட்களை வாங்குவதற்கு, அவரது கணவரின் நண்பரான மற்றொரு படகு இல்ல முதலாளியை அழைப்பதை தவிர அவருக்கு வேறு வழியில்லை

PHOTO • Muzamil Bhat

அவரது உலகம் அவரின் குடிசை, படகு இல்லம் மற்றும் இவ்விரண்டையும் இணைக்கும் சிறிய மரப்பாலத்தை சுற்றியே சுழல்கிறது. “நான் அவர்கள் வேலையை விட்டுவிட்டு எனது வேலையைச் செய்யும்படி யாரையும் வற்புறுத்த முடியாது. உதவிக்கு யாராவது வரும் வரை காத்திருக்க மட்டுமே என்னால் முடியும்“

PHOTO • Muzamil Bhat

சந்தையில் இருந்து மளிகைப்பொருட்கள் வாங்கி வர அவரது கணவரின் நண்பரின் வருகைக்காக காத்திருக்கிறார். ‘என்னிடம் உள்ள உணவுப்பொருட்கள் தீர்ந்துகொண்டு வருகிறது. எனவே, காலையில் இருந்து மூன்று முறை அவரை அழைத்துவிட்டேன். வருகிறேன் என்று கூறியவர் வரவில்லை. தற்போது மணி 11. எனக்கான தேநீரை தயாரிப்பதற்கு வசதியாக அவர் விரைந்து வரவேண்டும் என்று எண்ணுகிறேன்

PHOTO • Muzamil Bhat

30 ஆண்டுகளில், இரண்டு தொடர் ஊரடங்குகளால், முதல் முறையாக ஜிகர் டெடின் சேமிப்பு கிட்டத்தட்ட குறைந்துவிட்டது. அதனால், நாளொன்றுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்கிறார். ‘நான் சமைப்பதற்கு  நிறைய பாத்திரங்கள் உபயோகிப்பதில்லை. அது எனக்கு சுத்தம் செய்யும்போது சுமையாகாது. பனிக்காலமும் வருவதால், எனது கைகள் குளிர்ந்த நீரை தாங்காது‘ என்று அவர் கூறுகிறார்

PHOTO • Muzamil Bhat

‘எனது கணவர் இறந்த உடன், நான் எனது மகன் மன்னாவை அணைத்துக்கொண்டுதான் உறங்குவேன். அது எனது தனிமை உணர்வை போக்கும். ஆனால், சோகமான நினைவுகளை மட்டுமே சுமக்கவிட்டு எனது மன்னாவும் வேறு உலகிற்கு சென்ற பின்னர் எல்லாமே மாறிவிட்டது‘

PHOTO • Muzamil Bhat

அவரின் நீண்ட தனிமை காலத்திற்கு முன்னர், அவரின் குடும்ப புகைப்படம், அவரது மகன் மன்சூர்(மேலிருந்து இடது), அவரது கணவர் அலி முகமது துல்லா(வலது) மற்றும் முன்னாள் பணியாளர் அசாதுல்லாவுடனான குழு படம், மன்சூர், அலி முகமது, ஒரு சுற்றுலா பயணி மற்றும் ஜிகர் டெட்

PHOTO • Muzamil Bhat

எப்போது வானிலை மாறினாலும், என்னால் உறங்க முடியாது என்று ஜிகர் கூறுகிறார். ‘மழை வந்தால் நான் என்ன செய்வேன் என்று அச்சமாக உள்ளது. பனிக்காலத்தை சமாளிக்க அதற்கு அதிகமான மராமத்து வேலைகள் தேவைப்படுகிறது. என்னுடன் எனது படகும் போய்விடுமோ என்று பயமாக உள்ளது

தமிழில்: பிரியதர்சினி. R.

Muzamil Bhat

Muzamil Bhat is a Srinagar-based freelance photojournalist and filmmaker, and was a PARI Fellow in 2022.

Other stories by Muzamil Bhat
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

Other stories by Priyadarshini R.