சாம்னி மீனாவால் அவரது வயது குறித்து நினைவு கூற இயலவில்லை. ஆனால், அவரது இளம் பிராயத்தில் சுவைத்த உணவுகளின் சுவை குறித்து நினைவு கூர்ந்தார்: “அந்த சுவை தற்போது மாறிவிட்டது. அந்த மாதிரியான சுவையை நீங்கள் இப்போது எங்கும் சுவைக்கவே முடியாது.  தற்போது நாட்டு(பாரம்பரிய) விதைகள் எங்கும் இல்லை.விதைகளின் வகைகளைக் கண்டறிவதும் மிகவும் கடினம்” என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள காதி கிராமத்தில் சாம்னிபாய் வசித்து வருகிறார். அவருக்கு வயது  80 இருக்கக்கூடும். அவரது சிறுவயதில் இருந்து விதைகளை சேமித்து வருகிறார். அவரும் அவரது கணவரும் எவ்வாறு வீடு கட்டினார்கள் மற்றும் விவசாயம் செய்தார்கள் என்பது குறித்தும், உயிர் பிழைத்தலுக்காக மட்டுமே எந்த அளவு அவர்கள் உழைத்தார்கள் என்பது குறித்தும் நினைவு கூர்ந்தார். அதுமட்டுமல்லாது, தற்போதைய நிலையை விட அவரது இளமைக் காலத்தில் வாழ்வும், உணவு முறையும் எவ்வாறு மேம்பட்டிருந்தது என்பது குறித்தும் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக சாம்னிபாயும் அவரது குடும்பமும் டஜன் கணக்கான பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது, அவரது மரபு அறிவினை அவரது மருமகள்களுக்கும் கடத்தி வருகிறார். “பெண்கள் சிறப்பான  வகையில் விதைகளை பாதுகாக்கக் கூடியவர்கள்.  அவர்கள் அதன் மீது அக்கறை செலுத்துகின்றனர். மறுபடியும் பூர்த்திச் செய்வதையும் நினைவில் கொள்கின்றனர். விதை சேகரிக்கும் இந்த மொத்த செயல்முறையும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டது” என்று சாம்னிபாய் கூறினார்.

இதுகுறித்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர்,“எங்கள் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்களை நான் நினைத்து பார்க்கிறேன்.  அது 1973 ஆம் ஆண்டு நடந்தது. எங்கள் கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளும் தண்ணீரில் மூழ்கின.  எங்கள் பொருட்கள் எல்லாம் பாழாகின, ஆனால் நான் விதைகளைக் குறித்தே பெரிதும் அக்கறைக் கொண்டிருந்தேன்.  அதற்கே  நான் முன்னுரிமை அளித்தேன். அந்த விதைகள் தான் தற்போது என்னிடம் இருக்கின்றன. அவை விவசாயிகளுடைய வாழ்வில் மிகமுக்கியப் பங்கு வகிக்கின்றன” என்று கூறினார்.

PHOTO • Sweta Daga

பாரம்பரிய கடுகு விதைகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர், சாம்னிபாயின் குடும்பம் விதைகளைச் சேகரிக்கத் தொடங்கி, இந்த மாற்றத்திற்கான அடியை  முன்னெடுத்துள்ளது. இதன் மூலமாக அழிவு நிலையில் இருந்த விதைகளின் வகைகளை உள்ளூர் விவசாயிகளோடு பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு பெற்ற  கடனை ஒன்றரை மடங்கு விதைகளாக விவசாயிகள் திரும்பிச் செலுத்தியுள்ளனர்.

தற்போதைய சந்தைப் போக்குகளின் அழுத்தங்கள் அதிகரித்து வரும் அதேவேளையில் , சாம்னிபாயின் குடும்பம் சொந்த குடும்பத்தேவைகளுக்காக  தற்போது வரை இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “அரசு தரும் உரங்களையும்,இலவச விதைகளையும்  நாங்கள் ஏன்  பெறவில்லை என இந்த கிராமத்தில் உள்ள பிற விவசாயிகள் எங்களிடம் கேட்கின்றனர். அவர்கள் என்னை முட்டாள் என்று கூறுகின்றனர்.  ஆனால், அவர்கள் விளைவிப்பவையும் நாங்கள் விளைவிப்பவையும்  ஒன்றல்ல. நாங்கள் அவற்றை எங்கள்  வீட்டில் சாப்பிடுவதில்லை”.என்று அவரது மகன் கேசரம் மீனா கூறினார்.

சாம்னிபாயின் குடும்பம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பல பயிர் வகைகளை விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் தற்போதும் கூட, ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் பயிரினை சுழற்சி முறையில் மாற்றி விதைத்து வருகின்றனர். எவ்வாறாயினும், சந்தை சார்ந்த சார்பு என்பது அந்தக் கிராமத்தில் எதிர் விளைவுகளை  உண்டாக்கியுள்ளது. அந்தக் கிராமத்து மக்கள் தங்கள் சொந்த தேவைகளுக்குக் கூட உணவு உற்பத்தி செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உணவுத் தேவைகளுக்காக சந்தையையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.  இதுகுறித்து கூறிய சாம்னிபாய், தனது சிறு வயதில் அனைத்தும் தங்கள் வயலிலேயே விளைந்ததாகவும், உப்பு வாங்குவதற்கு மட்டுமே சந்தைக்கு சென்ற நிலை நிலவியதாகவும் தெரிவித்தார்.

PHOTO • Sweta Daga

விவசாயிகளுக்கு விதைகள் எவ்வளவு முக்கியமானவை என்று சாம்னிபாய் விளக்குகிறார்

PHOTO • Sweta Daga

இயற்கை  முறையில் விளைந்த கொள்ளு விதைகள்

PHOTO • Sweta Daga

சாம்னிபாய் அவரது இரண்டு மருமகள்களுடன் அமர்ந்திருக்கிறார். அவரது மருமகளான சாம்பாபாய் மற்றும் டோலிபாய் ஆகிய இருவரும் திருமணம் ஆகி வந்த போது எவ்வாறு விதைகளை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது என  அறிந்திருக்கவில்லை. எனினும், காலப்போக்கில் அவரது மாமியார் செய்வதைப் பார்த்து அதற்கான திறன்களையும், மரபார்ந்த அறிவையும் பெற்றுள்ளனர்.  பத்து ஆண்டுகளுக்குப் பிறகான அவர்களின் அனுபவத்திற்குப் பிறகு, தற்போது அவர்கள் கற்றதை என்னிடம் செய்து காட்ட ஆர்வத்தோடு இருந்தனர்

PHOTO • Sweta Daga

அந்தக் குடும்பம் சேறு மற்றும் களிமண்ணால் ஆன பெரிய கலன்களைச் சேமிப்புக்காக பயன்படுத்துகின்றனர். இந்த கலன்கள் விதைகளை  குளுமையாக வைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது அப்பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கையான பொருட்களால் செய்யப்பட்டது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்தக் களிமண் கலன்கள் விதைகளின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் , விதைகளை உலர் நிலையில் வைப்பதற்காக  இந்த கலன்களில் உள்ள பெரிய  துளைகளில் சோளக் கதிரின் உமி வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்தக் கலன்களில் பூச்சிகள் அண்டாது இருக்க மண்ணெண்ணெய், வேம்பு மற்றும் சாம்பல் கலந்தக் கலவை கலன்களுக்கு வெளிப்புறம் பூசப்படுகிறது

PHOTO • Sweta Daga

உலர் சோளக்கதிரின் உமியானது பாதுகாப்பிற்கு உதவுகிறது

PHOTO • Sweta Daga

சாம்னிபாயின் குடும்பம் அடுத்து வரும்  பருவத்திற்கான விதைகளை பெரிய ஆரோக்கியமான சுரைக்குடுவையிலும் கூட சேகரித்து வைக்கின்றனர்.  சிலசமயம், விதைகளைச் சேமிப்பதற்கு தனித்துவமாகச் செய்யப்பட்ட சுவர் கோதி என்ற  அமைப்பின் சுவர்களுக்குள்ளும் விதைகளைச் சேமித்து வைக்கின்றனர். இதன் வழியாக மீதமுள்ள விதைகள் சேமிக்கப்படுகிறது

PHOTO • Sweta Daga

அப்பகுதியைச் சார்ந்த  சமுக செயல்பாட்டாளர் பண்ணாலால்; குடும்பத்தின் விதை சேமிப்பு வழிமுறையை பார்வையிடுகிறார்

PHOTO • Sweta Daga

நாட்டு பச்சைப் பயிறு

PHOTO • Sweta Daga

சாம்னிபாயின் மகனான கேசரம் , அவரது சிறியப் பண்ணைக் குறித்து பேசுகிறார்

PHOTO • Sweta Daga

சோளத்தினை சேர்த்து வைத்துள்ளனர். அவரது கணவர்  உயிரோடு இருந்த வரை  நிலைமை வேறு மாதிரியாக இருந்ததாக கூறிய சாம்னிபாய்,  ‘அப்போது நல்ல மழை பெய்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.  ஆனால், தற்போது அது ஒரு போராட்டம்.  மழைகுறைந்து நிலைமை மோசமாகும் அளவுக்கு இப்பகுதி  வெப்பமடைந்துள்ளது '

PHOTO • Sweta Daga

இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பெண்களே. அவர்கள் நாள் முழுவதும் விவசாய வேலைகளுக்காக செலவிடக் கூடியவர்களாக உள்ளனர்.  ஆனாலும், அவர்களது வேலைக்கு போதிய அங்கீகாரம்  கிடைக்கவில்லை.  இந்தியாவின் சில பகுதிகளில்  சிலசமயம் விதைகள் “ஆண்” அல்லது “பெண்” என வணிக மதிப்பை வைத்து வகைப்படுத்தப்படும். பருத்தி , புகையிலை மற்றும் காபி போன்ற பொருளாதார ரீதியிலான பணப்பயிர்களுக்களுக்கான விதைகள்  ஆண் விதைகள் எனவும், குடும்பங்களின்  ஆரோக்கியத்திற்கு உதவும்   காய்கறிகள் மற்றும் சில பருப்பு வகைகள் பெண் விதைகளாகவும் கருதப்படுகின்றன

PHOTO • Sweta Daga

விவசாயியும், சமுக செயல்பட்டாளாருமான பண்ணாலால் படேல் மீனாவின் குடும்பத்துடன் விதை சேகரிப்புக் குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.  இவர் மேவார் பகுதியில் பெண் விவசாயிகளுடன் விதைகள் சேகரிப்பு மற்றும் விதைப்பு முறைகள் குறித்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தைக் காப்பாற்றுவது எவ்வளவு சிரமமானது என்பது குறித்து விளக்கிக் கூறிய அவர்,  “நாங்கள் மேவார் பகுதியில் உள்ள பெண் விவசாயிகள்  தங்கள் பயிரில் இருந்து விளைந்தவற்றை மதிப்பு கூட்டுப் பொருட்களாகச் சந்தையில் விற்பதை ஊக்கப்படுத்துகிறோம். ஆனால், அதன் உற்பத்தியைப் பராமரிப்பது கடினமாக உள்ளது. பணப்புழக்கம் மற்றும் பயிர்களில் நாங்கள் சவால்களை எதிர்கொள்கிறோம்.  மேலும், பெண்களுக்கு வீட்டிலிருந்து  ஆதரவு இல்லாததாலும் அவர்கள்  வியாபாரத்தில்  ஈடுபடுவது  கடினமாக உள்ளது.  குடும்பம், வியாபாரத்திற்கான நிதி ஆகிய இரண்டையும் அவர்கள் ஒன்றாக நிர்வகிக்க வேண்டியுள்ளது. உள்ளூர் பாரம்பரிய விதைகள் அழிந்து வருகிறது”  என்று  கூறினார்

PHOTO • Sweta Daga

சாம்னிபாயின் குடும்பத்திற்கு சொந்தமான நிலங்களில், வீட்டுப் பயன்பாட்டிற்காக இயற்கை விவசாய முறையில் விளையும்  பயிர்களையும், விற்பனைச்  செய்வதற்காக வணிகப் பயிர்களையும் விதைத்து வருகின்றனர்.  அதிர்ஷ்டவசமாக சாம்னிபாயின் பேரக்குழந்தைகளும்  இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் அவர்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தினைத் இவ்வாறே  தொடர வேண்டுமெனவே  விரும்புகின்றனர். அவர்கள் பாட்டியின்  உழைப்புக்கும் அறிவுக்கும் அவர்கள் பெரும் மதிப்பளிக்கின்றனர். ஆனால்,  அதில் வெற்றி பெறுவது கடினமாகி வருகிறது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதற்கிடையில் , ராஜஸ்தானில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்துவதற்கான  முயற்சியினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் பல ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள்  மத்தியில் தங்கள் சொந்த வயல்களில் என்ன நடக்கிறது என்பதை தீர்மானிக்கும் விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தையும்  அதிகரிக்கக்கூடும்.  மேலும், அவர்களையும் அவர்கள்  குடும்பங்களையும் தன்னிறைவாக வைத்துக்கொள்ள  உதவும் திறனை அழிக்கக்கூடிய  இந்த   புதிய கொள்கைகளுக்கு ஏற்ப அவர்கள் பொருந்தி செல்ல அது கட்டாயப்படுத்தக் கூடும்


தமிழில்: பிரதீப் இளங்கோவன்.

Sweta Daga

Sweta Daga is a Bengaluru-based writer and photographer, and a 2015 PARI fellow. She works across multimedia platforms and writes on climate change, gender and social inequality.

Other stories by Sweta Daga
Translator : Pradeep Elangovan

Pradeep Elangovan is a translator who holds a postgraduate degree in Geology. He is interested in independent cinema and currently works as a translator for a news portal.

Other stories by Pradeep Elangovan