ஷைலேந்திரா பஜ்ரே தனது வயல்கள் குறித்து கவலை கொள்கிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தில் எந்த விவசாயமும் அவர் செய்யவில்லை. “இங்கு ஒரு குப்பை கிடங்கு உள்ளது- அதில் உள்ள நச்சு கழிவுகள் அனைத்தும் நிலத்தடி நீரில் கலக்கின்றன. ஆழ்துளை கிணற்று நீரும் மாசடைந்துள்ளன. அவை நிலத்தையும், பயிர்களையும் சேதப்படுத்துவிடும் என்பதால் நாங்கள் அந்த நீரை பயன்படுத்துவதில்லை,” என்கிறார்.
அவர் குறிப்பிடும் அந்த குப்பை கிடங்கு புனேவிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உருலி தேவாச்சி எனும் கிராமத்தில் உள்ளது. குப்பை குவியல்களை தொலைவிலிருந்து காணும் போது அழகான இயற்கை மலை குன்றுகள் போல் காட்சியளிக்கின்றன. உண்மையில் அவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள், பள்ளிகள், கடைகளுக்கு அருகே குவிந்துள்ள குப்பைகள்.
புனே நகர கழிவுகளை கொட்டுவதற்காக 1981ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு உருலி தேவாச்சி கிராமத்தில் 43 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. நாளும் பெருகி வரும் கழிவுகளை மேலும் அகற்ற 2003 ஆம் ஆண்டு கூடுதலாக புர்சுங்கி கிராமத்திலும் 120 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இரு இடங்களிலும் 2014 மார்ச் மாதம் வரை புனே நகராட்சி சுமார் 1100 டன் கழிவுகளை கொட்டியுள்ளது. கிராம மக்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக 2015ஆம் ஆண்டு 500 டன் என குறைக்கப்பட்டது.
குப்பைகளின் அளவு குறைக்கப்பட்டாலும் காற்று, நீரின் மாசை கட்டுப்படுத்த முடியவில்லை. 2014ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்(NGT) மேற்கு மண்டல அமர்வு முன் வழக்கறிஞர் அசிம் சரோட் கிராம மக்கள் சார்பில் மனு தாக்கல் செய்தார். இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, NGTல் ஆகஸ்ட் 17ஆம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குப்பைகள் சுத்திகரிக்கப்படாததால், கழிவுகள் நிலத்தடியில் கசிந்து, விவசாயத்தை பாதித்தது. புர்சுங்கி கிராம ஊராட்சி உறுப்பினரான ரஞ்சித் ரஸ்கர், கழிவுகளின் தாக்கம் குறித்து பேசுகிறார்: "எனது வயல்களில் விளையும் காய்களில் ஈயம் அதிகளவில் காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது, உடல் நலத்தை கெடுக்கும். ”
இந்த மிகப்பெரும் சுகாதார சீர்கேடு குறித்து விரிவாக எழுதியுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் புனே செய்தியாளர் பார்தா பிஸ்வாஸ், கடந்த சில ஆண்டுகளில் சில நிலங்கள் தரிசாகிவிட்டவதாக சொல்கிறார். “அதிகளவு பாதரசம், மாசுபாட்டால் இக்கிராமத்தில் பயிரிடப்பட்டு வந்த மக்காச்சோளம் அழிந்துவிட்டன” என்கிறார்.
மகாராஷ்டிரா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 2005ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் NGT முன் 2016ஆம் ஆண்டு ஜூலையில் மனுதாரர்களின் சார்பில் திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. துணை மண்டல அதிகாரி நடத்திய ஆய்வில், குப்பைகளை அறிவியல் பூர்வமாக பதப்படுத்தவில்லை, இதனால் ஏராளமான கழிவுகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த குவியல்களில் இருந்து வெளியேறும் நச்சு நீர் கத்ராஜ்-சஸ்வத் பைபாஸ் சாலையின் குறுக்கே பாய்ந்து, மஞ்சரி கிராமத்திற்கு அருகிலுள்ள முலா-முத்தா நதிகளை சந்திக்கும் இரண்டு நீரோடைகளான காலா ஓதா, பார்சிச்சா ஓதா ஆகியவற்றை மாசுபடுத்தியுள்ளன. இந்த நச்சுக் கழிவுகள் நான்கு கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்: உருலி தேவாச்சி, புர்சுங்கி, ஷெவால்வாடி மற்றும் மஞ்சரி, ஆகிய நான்கு கிராமங்களிலும் சுமார் 400,000 மக்கள் வசிக்கின்றனர்.
சீர்கேட்டால், பஜ்ரே போன்ற விவசாயிகளுக்கு தேவைப்படும் சுத்தமான பாசன நீர் கிடைக்கவில்லை. சிறிய கட்டுமான தொழிலில் தான் பஜ்ரேவிற்கு இப்போது வருமானம் வருகிறது. பலரும் வருமானத்திற்கு மாற்று ஏற்பாடு தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிளம்பர், பாதுகாவலர் போன்ற வேலைகளுக்கு சிலர் சென்றுவிட்டனர்.
“மாசுபட்ட நீரை பயன்படுத்தினால் நிலமும், உற்பத்தியும் பாதிக்கும்,”என்கிறார் பஜ்ரே. “கிணற்று நீரும் மாசடைந்துவிட்டன. அவை அடர்ந்த, எண்ணெய் மிதக்கும் நீராக மாறிவிட்டன. அவற்றை இனிமேல் பயன்படுத்த முடியாது. இங்கு பெரும்பாலான விவசாயிகள் மழைநீரையே நம்பியுள்ளனர். குடிநீர் தேவைகளுக்கு மட்டுமே PMC டாங்கர்களில் தண்ணீர் வழங்குகிறது.”
உருலி தேவாச்சியின் ஊராட்சி துணைத் தலைவர் மகேந்திரா ஷிவாலி தனது எட்டு ஏக்கர் நிலத்தில் காய்கறி, சோளம், கம்பு போன்ற தானியங்களை விளைவிக்கிறார். நிலத்திற்கு கிணற்றிலிருந்து அவர் நீர்ப்பாசனம் செய்கிறார். உற்பத்தி குறைந்துவிட்டதாகவும் அவர் புலம்புகிறார். “பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆண்டுக்கு 20 குவிண்டால் கோதுமை அறுவடை செய்வேன், ஆனால் இப்போது ஆண்டிற்கு 10-12 குவிண்டால் மட்டுமே கிடைக்கிறது. காய்கறிகளின் தரமும் குறைந்துவிட்டது,” என்கிறார்.
புனே நகராட்சியால் கட்டுப்பாடின்றி குப்பைகள் கொட்டப்படுவதால் கிராம மக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக NGTயிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருலி தேவாச்சி கிராமத்தில் மழைக்காலத்தில் எழும் துர்நாற்றத்தை சொல்வதிற்கில்லை. ஈரமான குப்பையிலிருந்து வெளிப்படும் புகையும், துர்நாற்றமும் கிராமம் முழுவதும் பரவி நோய்களை விளைவிக்கின்றன. தொடர் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களில் பஜ்ரேவும் ஒருவர். டெங்கு பாதித்தவர்களும் உள்ளனர்.
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் கிராமமக்களுக்கு சுகாதார வசதிகளும் கிடைக்கவில்லை. “ஆரம்ப சுகாதார மையத்தை புனே நகராட்சி அமைத்து இலவசமாக மருந்துகளை அளிக்கிறது,” எனும் பஜ்ரே, “ஆனால் மருத்துவர்கள் வாரத்திற்கு இருமுறை மட்டுமே வருவதாக கூறுகிறார்.” உருலி தேவாச்சியில் பிளம்பராக வேலை செய்யும் பாலாசாஹேப் பாப்கார் மாநில அரசு மருத்துவமனைகளின் அவல நிலை குறித்து கவலை தெரிவிக்கிறார். “என் மனைவிக்கு டெங்கு பாதித்தபோது ரூ.75,000 செலவிட்டேன். அவளை நான் தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களோ, வசதிகளோ இல்லை. புனே நகராட்சி எங்கள் கிராமத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்ந்தால், எங்கள் மருத்துவ செலவுகளை ஏற்க வேண்டும்.”
குப்பை கிடங்கு உடல்நலத்தை கெடுப்பதோடு யாரும் எதிர்பாராத சமூக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஷிவாலி கூறுகிறார். “இக்கிராம பெண்களை திருமணம் செய்வதற்கு பலரும் முன்வருவதில்லை. வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட தண்ணீர் குடிக்க தயங்குகின்றனர்.”
கிராமமக்கள் தொடர் போராட்டங்கள், எண்ணற்ற புகார்களை எழுப்பிய போதும், நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடத்தை தேடுவதில் சுணக்கம் காட்டுகிறது. “போலி வாக்குறுதிகளுடன் தலைவர்கள் வந்து செல்கின்றனர்,” எனும் பஜ்ரே, “இங்கு வசிக்கும் நாங்கள் தான் பாதிக்கிறோம்,” என்றார். இதனால் பலரும் உருலி தேவாச்சி, புர்சுங்கி கிராமங்களை விட்டு வெளியேறி புனேவில் குடியேறுகின்றனர். இரண்டு கிராமங்களிலும் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு இப்போது அதிக விலைக்கு விற்கப்படுவது விநோதம். புனே நகருக்குள் வீடு வாங்க முடியாதவர்கள் இக்கிராமங்களை மாற்றாக இப்போது பார்க்கின்றனர். புனே நகருக்கு அருகில் இக்கிராமங்கள் இருப்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கிறது. “இதனால் விவசாய நிலங்களும் காணாமல் போகிறது,” என்கிறார் பிஸ்வாஸ்.
குப்பை கிடங்கை முழுவதுமாக மூட வேண்டும் என கிராமமக்கள் கோருகின்றனர். குப்பை கிடங்குகளை நிரந்தரமாக மூட வேண்டும் என NGT உத்தரவு பிறப்பிக்கும் என அவர்கள் நம்புகின்றனர். “புனே நகராட்சி குப்பை லாரிகள் கிராமத்திற்கு நுழையாமல் 2014 ஆகஸ்டில் நாங்கள் தடுத்தபோது புனே நகரமே முற்றிலும் பாதிக்கப்பட்டது,” என்கிறார் ஷிவாலி. “ஆனால் நகரின் பாதிப்பு சில நாட்கள் மட்டும் நீடித்தது. உங்கள் வீட்டிற்கு யாரேனும் தினமும் வந்து குப்பைகளை கொட்டினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?”
இக்கட்டுரை 2015 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பாரி மேற்கொண்ட பயிற்சியின் ஒரு பகுதியாக கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டது.
தமிழில்: சவிதா