ருபேல் ஷேக்கும் அனில் கானும் வாகனம் ஓட்டுகிறார்கள். ஆனால் இருவரும் தரையில் இல்லை. கிட்டத்தட்ட 20 அடி உயரத்தில் 80 டிகிரி செங்குத்தான கோணத்தில் இருந்தனர். அகர்தாலாவின் விழாவில் கூடியிருந்த பெரும் கூட்டம் அவர்களை கொண்டாடிக் கொண்டிருந்தது. ருபேல் மற்றும் அனில், கார் கண்ணாடிகளிலிருந்து எட்டிப் பார்த்து கையசைக்கின்றனர்.
மரணக் கிணறு வித்தையை அவர்கள் காட்டிக் கொண்டிருந்தனர். கார் மற்றும் பைக் போன்றவற்றை சுவரில் செங்குத்தாக ஓட்டி பல ஸ்டண்டுகள் காட்டுவதுதான் மரணக் கிணறு வித்தை.
நிகழ்ச்சி, 10 நிமிட நிகழ்ச்சிகளாக பிரிக்கப்பட்டிருக்கும். பல மணி நேரங்களுக்கு நடக்கும். நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் கிணறு போல வடிவமைக்கப்பட்டிருக்கும். அதை உருவாக்க பல நாட்கள் பிடிக்கும். மரணக் கிணற்றில் வாகனம் ஓட்டுபவர்களே அதை உருவாக்குவதிலும் ஈடுபடுவார்கள். ஏனெனில் அந்த கிணறு அமைக்கப்படும் விதமும் அவர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம்.
’மரணக்கிணறு’ எனப் பெயர் சூட்டப்பட்ட இந்த நிகழ்வு, திரிபுராவின் அகர்தாலாவில் அக்டோபர் 2023-ல் நடந்த துர்கா பூஜை விழாவில் ஈர்ப்புக்குரிய முக்கியமான அம்சமாக இடம்பெற்றது. ராட்டினம், பொம்மை ரயில்களும் விழாவில் இடம்பெற்றன.
“சுவரின் மேல் எந்தக் காரையும் எங்களால் ஓட்ட முடியும். ஆனால் மாருதி 800-க்குதான் முன்னுரிமை கொடுப்போம். ஏனெனில் கண்ணாடிகள் பெரிதாக இருக்கும். எளிதாக (நிகழ்வின்போது) வெளியே வர முடியும்,” என்கிறார் ருபெல். நான்கு யமஹா RX-135 பைக்குகளை பயன்படுத்துவதாகவும் அவர் சொல்கிறார். “பழைய பைக்குகள்தான் பயன்படுத்துவோம். நன்றாக அவற்றை பராமரித்து வைப்போம்.”
மேற்கு வங்க மால்தாவிலிருந்து அவர் குழுவுக்கு தலைமை தாங்குகிறார். சொந்தமாக வாகனங்களை வைத்திருக்கிறார். இதே மோட்டார் சைக்கிள்களை 10 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருவதாக சொல்லும் ருபெல், “அவை சரியாக சர்வீஸ் செய்யப்பட்டு விடுகின்றன்,” என்கிறார்.
கிராமப்புறங்களிலிருந்து இளைஞர்களை இந்த நிகழ்ச்சிகள் ஈர்க்கின்றன. நிகழ்ச்சிக்குள் எப்படி வந்தாரென விவரிக்கும் ஜார்கண்டின் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜக்கா அன்சாரி, “சிறுவயதில் இத்தகைய கண்காட்சிகள் எங்களுடைய ஊரில் நடக்கும்போது நான் ரசித்திருக்கிறேன்.” எனவே இளம்வயதில் அவரொரு சர்க்கஸில் இணைந்து, சிறு உதவிகள் செய்திருக்கிறார். “மெல்ல, வாகனம் எப்படி ஓட்டுவது என நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் 29 வயதான அவர். “இந்தப் பணியால் பல இடங்களுக்கு செல்வது எனக்கு பிடித்திருக்கிறது,” என்கிறார்.
பிகாரின் நவாடா மாவட்டத்திலுள்ள வாரிசாலிகஞ்ச் கிராமத்தை சேர்ந்த பங்கஜ் குமாரும் இளம் வயதில்தான் தொடங்கியிருக்கிறார். “10ம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வாகனமோட்ட கற்றுக் கொண்டேன்.”
அன்சாரி மற்றும் பங்கஜ் போல மேடையையும் விளையாட்டுப் பகுதியையும் கட்டும் பிற பங்கேற்பாளர்களும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். வெவ்வேறு விழாக்களுக்கு குழுக்களோடு செல்பவர்கள். அவர்கள் கண்காட்சிகளுக்கு அருகே கூடாரங்கள் அமைத்து வசிப்பார்கள். ருபெல் மற்றும் அன்சாரி போன்ற சிலர் குடும்பங்களுடன் பயணிக்கிறார்கள். பங்கஜ் மட்டும் வேலையில்லா சமயங்களில் வீட்டுக்கு சென்று விடுகிறார்.
மரணக் கிணறுக்கான பணி, கிணறு போன்ற கட்டமைப்பை உருவாக்குவதிலிருந்து தொடங்குகிறது. ”அதைக் கட்ட 3-6 நாட்கள் ஆகும். ஆனால் இம்முறை எங்களுக்கு அதிக நேரம் இல்லை. மூன்று நாட்களில் முடிக்க வேண்டும்,” என்கிறார் ருபெல், நேரமிருந்தால் இன்னும் தாமதமாக அவர் செய்வார்கள் என குறிப்பிட்டு.
காட்சி தொடங்கும் நேரம் வந்துவிட்டது. இரவு 7 மணிக்கு அகர்தாலாவில் டிக்கெட்டுகள் வாங்க கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது. டிக்கெட்டின் விலை ரூ.70. குழந்தைகளுக்கு இலவசம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடங்கள் நடக்கும். குறைந்தபட்சம் நான்கு பேர், இரண்டு கார்களிலும் இரண்டு பைக்குகளிலும் ஸ்டண்ட்கள் செய்வார்கள். ஒரு இரவில் 15-20 நிமிட இடைவேளையுடன் அவர்கள் குறைந்தபட்சம் 30 முறையாவது நிகழ்ச்சி நடத்துவார்கள்.
அகர்தாலாவில் இந்த நிகழ்ச்சி பிரபலமானதால், ஐந்து நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியை ஏழு நாட்களுக்கு நீட்டித்துள்ளனர்.
”எங்களின் தினசரி வருமானம் ரூ.600-700. நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் தரும் பணம்தான் எங்களுக்கு பிரதான வருமானம்,” என்கிறார் அன்சாரி. நிறைய நிகழ்ச்சிகள் இருக்கும் ஒரு நல்ல மாதத்தில், அவர்கள் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
வருடம் முழுக்க நிகழ்ச்சி நடக்காது என சுட்டிக் காட்டுகிறார் ருபெல்: “மழைக்காலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்துவது சிரமம்.” நிகழ்ச்சி இல்லாதபோது, ருபெல் கிராமத்துக்கும் விவசாய நிலங்களுக்கும் திரும்பி செல்வார்.
இந்த நிகழ்ச்சியின்போது நேரக் கூடிய ஆபத்துகளை பங்கஜ் புறம் தள்ளுகிறார். “ஆபத்துகளை பற்றி எனக்கு பயமில்லை. நீங்கள் பயப்படவில்லை எனில், நீங்கள் பயப்பட ஏதுமில்லை.” பணி செய்த காலத்தில் உயிர் பறிக்கும் சம்பவம் எதுவும் நேர்ந்ததில்லை என குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
“நாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது மக்கள் கொள்கிற சந்தோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் ருபெல்.
தமிழில் : ராஜசங்கீதன்