“பதோஹி மாவட்டம் என்றாலே கம்பளங்கள்தான். அதைத்தவிர இங்கு வேறு வேலை இல்லை,” என்கிறார் 40 வயதாகும் நெசவாளரான அக்தர் அலி. “நான் சிறுவயதில் இங்கு நெசவு கற்றுக் கொண்டே தான் வளர்ந்தேன்.” ஆனால், கம்பளத் தயாரிப்பில் வருமானம் குறைவதால் அலி தற்போது தையல் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மண்டலத்தில் உள்ள பதோஹி மாவட்டம் நாட்டிலேயே மிகப் பெரிய கம்பள நெசவுத் தொழிலின் தலைமையகமாகச் செயல்படுகிறது. மிர்சாபூர், வாரணாசி, காஸிபூர், சோன்பத்ரா, கெளஷம்பி, அலகாபத், ஜான்பூர், சந்தவ்லி ஆகியற்றை உள்ளடக்கியது இந்த நெசவுத் தொழில் மையம். பெருமளவில் பெண்களை உள்ளடக்கிய, கிட்டத்தட்ட இருபது லட்சம் கிராமப்புறக் கலைஞர்களுக்கு இந்தத் துறை வேலைவாய்ப்பை வழங்குகிறது.

ஒரு சதுர அங்குலத்திற்கு 30 முதல் 300 முடிச்சுகள் வரை கைகளாலேயே போடப்பட்டு, நேர் வரிசையில் செய்யப்படும் நெசவு முறையே இப்பகுதி கம்பளத் தொழிலை வேறுபடுத்திக் காட்டுகிறது. கம்பளி, பருத்தி, பட்டு நூல் ஆகிய மூலப் பொருட்களும், இவற்றைக் கொண்டு நெசவு செய்யும் முறையும் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக மாறவே இல்லை. நெசவுக் கலைஞர்கள் இந்த கை நெசவுத் தொழில்நுட்பத்தை தங்களின் குழந்தைகளுக்கும் கடத்துகிறார்கள்.

தனித்துவம் வாய்ந்த நெசவு முறையை அங்கீகரிக்கும் விதத்தில், 2010-ம் ஆண்டில் பதோஹி கம்பளங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம், இந்த தொழிற்சாலை மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

உதாரணமாக, முபாரக் அலியும் அவரது மகன்களும் 1935-ம் ஆண்டில் தொழிலைத் தொடங்கியது முதல் 2016-ம் ஆண்டில் ஆர்டர்கள் குறையும் வரைக்கும், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். 67 வயதாகும் முபாரக்கின் பேரன் காலித் கான் தான் ஏற்றுமதி மையத்தின் முன்னாள் உரிமையாளர் ஆவார். “என் தாத்தாவும், தந்தையும் இந்தத் தொழிலை மட்டுமே செய்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொழிலைத் தொடங்கியதால், ‘மேட் இன் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற குறிப்புடன் கார்ப்பெட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.”

காணொளியைக் காண: வெளிரும் பதோஹி வண்ணங்கள்

இந்தியாவின் கம்பள நெசவு வரலாறு நூற்றாண்டுகளுக்கு முந்தையது. வரலாற்று ஆவணங்களின்படி பார்த்தால், இக்கைவினைக் கலை முகலாயர்களின் காலத்தில், குறிப்பாக 16-ம் நூற்றாண்டில் அக்பரின் ஆட்சிக் காலத்தில் மலர்ந்தது எனலாம். ஆனால், 19-ம் நூற்றாண்டில்தான் பதோஹி பகுதியில் கைநெசவு கம்பளங்கள் பெரியளவில் தயாரிக்கப்பட்டது.

இப்போது இங்கு தயாரிக்கப்படும் கம்பளங்கள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் கம்பளங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் – அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் - ஏற்றுமதி செய்யப்படுவதாகச் சொல்கிறது கம்பள ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம். 2021-22ம் வருடத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கம்பளத்தின் மதிப்பு 2.23 பில்லியன் டாலர் (ரூ.16,640 கோடி). இதில், கைநெசவு கம்பளத்தின் மதிப்பு 1.51 பில்லியன் டாலர் (ரூ.11,231 கோடி) ஆகும்.

ஆனால், சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் விலை மலிவான விசைத்தறி கம்பளங்களால் பதோஹியின் நெசவுத்தொழில் கடுமையான போட்டியைச் சந்திக்கிறது. “சந்தையில் இப்போது போலி கம்பளங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. வியாபாரிகள் அல்லது பணம் செலவு செய்ய விரும்பாதவர்கள், இதைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்று சீனாவைப் பற்றிப் பேசும்போது அலி சொல்கிறார்.

மற்றொரு பதோஹிவாசியான, 45 வயது ஊர்மிளா பிரஜாபதி இந்த கம்பள நெசவுப் பரம்பரையைச் சேர்ந்தவர். ஆனால், குறைந்த வருவாயும் உடல்நலப் பிரச்சனைகளும் இத்தொழிலைக் கைவிடும் சூழலுக்கு அவரைத் தள்ளியுள்ளன. “வீட்டில் கம்பளங்களை நெசவு செய்யும் கலையை என் தந்தை எனக்கு கற்றுத் தந்தார். நாங்கள் வேலை செய்யவும், சுதந்திரமாக பணம் சம்பாதிக்கவும் அவர் விரும்பினார். என் கண்கள் அடிக்கடி கலங்கியபடி இருக்கும். நான் நெசவு செய்வதை நிறுத்தினால், என் கண்கள் சரியாகும் என பலரும் சொன்னதால் நான் நிறுத்திவிட்டேன்.”

ஊர்மிளா இப்போது கண்ணாடி அணிந்துகொண்டு, நெசவைத் தொடரத் திட்டமிட்டுள்ளார். பதோஹியைச் சேர்ந்த பலரைப் போலவே, அவரும் இந்த கைவினைக் கலையின் பெருமை மிகுந்த வாரிசு. ஆனால், இந்தக் காணொளிக் காட்சிகள் சொல்வதைப் போல, ஏற்றுமதி குறைந்ததாலும், நிச்சயமற்ற சந்தையாலும், மரபுசார்ந்த தொழிலில் இருந்து தொழிலாளர்கள் வெளியேறுவதாலும், முக்கியமான கம்பள நெசவு மாவட்டம் என்கிற நூற்றாண்டு கால நம்பிக்கையை பதோஹி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழில்: சவிதா

Mohammad Asif Khan

محمد آصف خان، نئی دہلی میں مقیم ایک صحافی ہیں۔ وہ اقلیتوں کے مسائل اور تنازعات سے متعلق موضوعات پر رپورٹنگ کرنے میں دلچسپی رکھتے ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Mohammad Asif Khan
Sanjana Chawla

سنجنا چاولہ، نئی دہلی میں مقیم ایک صحافی ہیں۔ ان کی تحریر میں ہندوستانی معاشرہ، ثقافت، صنف اور حقوق انسانی سے متعلق امور پر گہرا تجزیہ دیکھنے کو ملتا ہے۔

کے ذریعہ دیگر اسٹوریز Sanjana Chawla
Text Editor : Sreya Urs

شریہ عرس، بنگلورو کی ایک آزاد صحافی اور ایڈیٹر ہیں۔ وہ گزشتہ ۳۰ سالوں سے بھی زیادہ عرصے سے پرنٹ اور ٹیلی ویژن میڈیا سے وابستہ ہیں۔

کے ذریعہ دیگر اسٹوریز Sreya Urs
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

کے ذریعہ دیگر اسٹوریز Savitha